‘தேசமாய் திரள்வோம்…’ என்ற குரல்கள் மீண்டும் பலமாகக் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகளைத் தாண்டி தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பெற்றிருக்கின்ற அமோக ‘வெற்றி’ தந்திருக்கின்ற எரிச்சல் ஏமாற்றத்துக்கான உடனடி வலி நிவாரணி, ‘தேசமாய் திரள்தல்’ என்பது தமிழ்த் தேசியக் கட்சிகளினதும், தரப்புக்களினதும் எண்ணம். ஆனால், உண்மையில் தேசமாய் திரள்தல் என்பது, ஆடி ஓய்ந்தவர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்கும் அதிகாரப் பதவிகளுக்கும் அனுப்புதலை நோக்கமாகக் கொண்ட கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஓரணி நாடகமாக இருக்க வேண்டுமா? அல்லது தெளிவான செயற்திட்டங்களோடு, வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலை மங்காது பாதுகாத்து முன்நகர்வதில் தங்கியிருக்கிறதா? என்ற கேள்விகள் சார்ந்தது.
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி, தனக்கு அடுத்த நிலையில் இருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியைவிட கிட்டத்தட்ட ஒன்றரை மடக்கு வாக்குகளை அதிகமாகப் பெற்றிருப்பதாக கொள்ள முடியும். இந்த வாக்குகள் எந்தெந்த தொகுதிகளுக்குள் இருந்து அதிகமாக கிடைக்கப் பெற்றிருக்கின்றன என்கிற விடயங்களை சற்று ஆராய்ந்தாலே, தேசிய மக்கள் சக்தியை நோக்கிய வாக்குத் திரட்சியின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் மானிப்பாய் தேர்தல் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்ற கணிசமான வாக்குகள், தமிழ் மக்களிடையே காணப்படும் சாதிய, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அப்பட்டமாக வெளிக் காட்டுகின்றன. தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளாக, குழுக்களாக தங்களை முன்னிறுத்தும் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்று தொடங்கி சுயேட்சைக்குழுக்கள் வரையில் பலரையும், கணிசமான மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அந்தப் புறக்கணிப்பின் பின்னால், ஆக்கபூர்வமற்ற போலியான தேசிய உரையாடல்களும், சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை முறையாக சரிசெய்ய முடியாமை என்கிற பேதமையும் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரும்பாலும், யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கானதே, தேர்தல்கள் என்ற தோரணையிலேயே, தொடர்ந்தும் இயங்கி வருகின்றன. சரியான அளவில், சமூகங்களுக்கு இடையிலான அதிகார பகிர்வினைச் செய்வதற்கு தயங்கி அல்லது அவ்வாறான தேவையொன்று தொடர்பில் ஒருபோதும் கண்டுகொள்ளாமல், நடந்துவிட்டு, வாக்குகளைக் கோருவது என்பது அபத்தமானது. தமிழ்த் தேசியக் கட்சிகள் நடந்து முடிந்த தேர்தலுக்கான வேட்பாளர்களாக மேலாதிக்க சமூகம் தவிர்ந்து எத்தனை வெற்றி வேட்பாளர்களை அடக்கப்பட்ட சமூகங்களுக்குள் இருந்து முன்னிறுத்தியது என்ற கேள்வியை தவிர்த்துவிட்டு தமிழ்த் தேசியம் சார் உரையாடல்களை யார் திறந்தாலும், அது பொய்களின் மீது போலியான நம்பிக்கைகளைக் கட்டுவதாகும். எந்தவொரு தமிழ்க் கட்சியும் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகங்களின் இருந்து வேட்பாளர்களை நிறுத்தியமை என்பது ஒப்புக்கானது. அவர்களினால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று தெரிந்தே, அவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தினார்கள். அப்படியான நிலை கடந்த பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து வரும் போது, அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்கள், தமிழ்த் தேசியம் பேசி வரும் போலியாளர்களை புறக்கணிப்பது என்பது இலகுவாக நடைபெறும். அது, 2020 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கிழப்பிலும் அங்கஜனின் வாக்குத் திரட்சியிலும் பலமாக வெளிப்பட்டது. இன்று அந்தச் சூழலை, தேசிய மக்கள் சக்தி மிக இலகுவாக அறுவடை செய்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகள், குறிப்பாக தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் யாழ் மையவாத நிலைப்பாட்டுக்குள் நின்று உளலும் கட்சிகள். இவற்றுக்கு யாழ் நல்லூர் மேலாதிக்க சிந்தனைக்கு அப்பாலான சமூகக் கண்ணோட்டம் என்பது பெரும்பாலும் இல்லை. தமிழ்த் தேசியம் என்பது, வெளிப்படையாக உடைத்துப் பேசினால் ‘வெள்ளாள தேசியம்’ அல்ல. ஆனால், தமிழரசுக் கட்சியும், காங்கிரஸும் அந்த நிலைப்பாட்டில்தான் இன்றுவரை நிற்கின்றன. அந்த நிலைப்பாட்டினை மாற்றாது, போலி ஒருங்கிணைப்புக் கோரிக்கைகளின் வழியாக தோல்விகளைக் கடக்கலாம் என்பது ஒரு சில தேர்தல்களுக்கு வெற்றிகளை தக்க வைக்க உதவலாம். ஆனால், மறுபுறத்தில் நாடு முழுவதும் ஓரணியாக திரண்டு நல்லிணக்க முகமூடியோடு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்திக்கு முன்னால் நிலைத்து நீடித்திருக்க முடியுமா என்கிற கேள்வி பிரதானமானது. மாத்தறையில் சரோஜா போல்ராஜும், திருகோணமலையில் அருண் ஹேமச்சந்திராவும் பெரும்பான்மை சிங்கள வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள். இவர்களை உதாரணமாகக் காட்டிக் கொண்டு வடக்குக் கிழக்கில் தங்களை இனங்களையும் இனவாதத்தையும் கடந்தவர்கள் என்ற பரப்புரையை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னெடுக்கும். அதுபோல, மட்டக்களப்பில் அந்தக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் சமூகப் பின்னணியை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்ற சமூகங்களுக்குள் இருந்து, மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய முடியும் என்கிற செய்தியைச் சொல்லுவதற்கான அடையாளமாக அங்கு பெறப்பட்ட வாக்குகள் தமிழர் தேசமெங்கும் செய்தியாகக் கொண்டுசெல்லப்படும். ஏனெனில், அது புறக்கணிக்கப்படும் சமூகங்களின் கனதியான வாக்கு வங்கியை ஒன்றாக திரட்டுவதற்கும் உதவும். இவ்வாறான நிலை மலையக தமிழ் மக்களிடத்திலும் பெருமளவில் வெற்றிக்கான கருவியாக, இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் பயன்படுத்தப்பட்டது. அது, எதிர்பார்த்த அளவினைத் தாண்டிய வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. பரம்பரை பண்ணையார்த்தன அரசியலைச் செய்து வந்திருக்கின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிராக தொண்ணூறுகளில் புதிய புரட்சியாளர்களாக வந்த சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியும் அதன் பின்னராக வந்த ஏனைய கட்சிகளும் ஒரு கட்டத்தில், பழைய பண்ணையார் கட்சிகளின் தொடர்ச்சிதான் தாங்களும் என்ற தோரணையைக் காட்ட ஆரம்பித்தன. அவ்வாறான தருணத்தில், தேசிய மக்கள் சக்தி, லயன்களுக்குள் இருந்து மலைய ஆளுமைகளை, குறிப்பாக இளம் பெண்களை முன்னிறுத்தி கனதியான வெற்றியை மலையக மக்களுக்கு இடையில் பெற்றிருக்கின்றது. பதுளையில் அம்பிகா சாமுவேலின் வெற்றி, அப்படியான ஒன்றுதான்.
முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் என்பது ‘ராஜபக்ஷக்கள் எதிர்ப்பு’ என்ற ஒற்றைப் புள்ளிக்குள் சுருங்கிவிட்டது. அதனை இந்தப் பத்தியாளர் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறார். அப்படியான சூழலில், அரங்கில் இருந்து ராஜபக்ஷக்கள் அகற்றப்பட்ட பின்னணியில், யாரை அரசியல் எதிரி என்று கட்டமைப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தொடர்ச்சியான சிக்கல் இருந்தது. “...ராஜக்ஷக்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம், மின்சாரக் கதிரையில் இருத்துவோம்...” என்பதுதான் தமிழரசு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரச்சாரக் கோசமாக இருந்திருக்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புக்கள், வழிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருபோதும் செயற்பாட்டு அளவின் முன்னின்று ஆக்கபூர்வமான அடைவுகளை காட்டியது இல்லை. தென் இலங்கை மக்களே, ராஜக்ஷக்களை புறந்தள்ளியிருக்கின்ற சூழலில், ராஜபக்ஷக்களை மையப்படுத்திய எதிர்ப்புப் பிரச்சாரம், தமிழர் தேசத்தில் எடுபடும் என்று கொள்ள வேண்டியதில்லை. அது, நடந்து முடிந்த தேர்தலில் எடுபடவும் இல்லை. தமிழரசுக் கட்சியும் காங்கிரஸும் யாழ்ப்பாணத்துக்குள் ஒருவரை ஒருவர் தரம்தாழ்த்தி பேசிக் கொண்டிருக்க, மற்றப் பக்கத்தினால் தேசிய மக்கள் சக்தி, உள்ளூர ஊடுருவி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றது. கடந்த 2020 பொதுத் தேர்தலில் எண்ணூற்றுச் சில்லறை வாக்குகளைப் பெற்றவர்கள், இந்தப் பொதுத் தேர்தலில் எண்பதாயிரம் வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற்றிருக்கின்றமை என்பது, ‘அநுர’ என்கிற ஓர் அலையினால் நிகழ்ந்தது மாத்திரமல்ல. அது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் மீதான பெரும் அதிருப்தியினாலும் உருவானது.அத்தோடு, தேசிய மக்கள் சக்தியை நோக்கிய தமிழ் மக்களின் திரட்சியின் பின்னால் உணர்த்தப்படும் இன்னொரு செய்தி, தங்களுக்கு ‘முகவர்கள்’ தேவையில்லை என்பதாகும். ராஜபக்ஷக்கள், ரணில்களைக் கையாளத்தான் வடக்குக் கிழக்கில் டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான் போன்ற அரச முகவர்கள் தேவை. ஆனால், ராஜபக்ஷக்களும் ரணிலும் அகற்றப்பட்ட பின்னர், அவர்களின் முகவர்களையும் புறக்கணிக்கும் முடிவுக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள். இன்றைக்கு அவர்கள், முகவர்கள் இல்லாமல், நேரடிப் பிரதிநிதிகளை வடக்குக் கிழக்குப் பூராவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நேரடி தமிழ்ப் பிரதிநிதிகள் வென்றிருக்கிறார்கள். அவர்களை நேரடியாக அணுகமுடியும் என்ற சூழலை அந்தக் கட்சி வைத்துக் கொண்டிருக்கின்றது. அதனால், ஆட்சியிலும் அதிகாரத்திலும் முகவர்களுக்கு இடமில்லை என்றாகிவிட்டது. அந்தச் சூழலும் சேர்ந்து, இன்னமும் தமிழ்த் தேசியக் கட்சிகளில் இரட்டை மனநிலையோடு தொங்கிக் கொண்டிருக்கும் இன்னொரு கனதியான கூட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் பக்கத்துக்கு கொண்டு சேர்ந்துவிடும். அடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் வரவிருக்கின்றன. அப்படியான சூழலில் அரசியல் அதிகாரக் கனவோடு இருக்கும் இளைஞர்களை, தேசிய மக்கள் சக்தி ஈர்த்துக் கொள்வது என்பது இன்னும் இலகுவானது. ஏனெனில், இன்றைக்கு வடக்குக் கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வெற்றி பெற்றிருக்கின்றவர்களினால் , தமிழ்த் தேசியக் கட்சிகளில் போட்டியிட்டிருந்தால், ஒருபோதும் வெற்றிபெற்றிருக்க முடியாது. அவர்கள், அந்தக் கட்சிகளின் உதிரி வேட்பாளர்களாக மாத்திரமே கணிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிபெற்ற வேட்பாளர்கள். அதுபோல, தேர்லொன்றை எதிர்கொள்வதற்கான செலவு என்பது மலையளவு போன்றது. அவ்வாறான நெருக்கடியுள்ள சூழலில்,தமிழ்த் தேசியக் கட்சிகளில் நிலைத்திருப்பதைக் காட்டிலும் தேசிய மக்கள் சக்தி போன்ற நிறுவனக் கட்டமைப்பு உறுதியான இடத்தில் சேர்ந்தால், அவர்களே தங்களை வெற்றிபெற வைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும், அவர்களை நோக்கிய இளைஞர்களின் திரட்சிக்கு வழி வகுக்கும். அவசரமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், வடக்குக் கிழக்கில், தேசிய மக்கள் சக்தி இலகுவாக ஆட்சி அமைக்கும் சூழலுள்ளது.
தமிழ்த் தேசிய அரசியலை பேசும் சில தரப்புக்கள், ‘சோறா சுதந்திரமா...?’ என்ற தமிழ் மக்களை நோக்கிய ஏளனமான கேள்வியை பெரிய தார்மீகக் கோட்பாட்டுக் கேள்வி மாதிரி தொடர்ச்சியாக எழுப்பி வந்திருக்கின்றன. டக்ளஸுக்கும் பிள்ளையானுக்கும் கடந்த காலங்களில் வாக்களித்து வந்திருக்கின்ற மக்களை நோக்கி, இந்த ஏளனமான வாதத்தை முன்வைத்து கேவலப்படுத்தி வந்திருக்கின்றன. ஆனால், தொடர்ச்சியாக மூன்று தசாப்த கால போருக்குள் சிக்கி பொருளாதார பின்னடைவுகளை சந்தித்திருக்கின்ற சமூகத்துக்குள் சோற்றுப் பிரச்சினை என்பது, பிரதான பிரச்சினை. பசியை அடக்காமல் எல்லோரையும் தியாகி திலீபன் மாதிரி சுதந்திர தாகத்தோடு இருக்கக் கோருவது அரசியல் அல்ல; அறமல்ல. அது, அதிகார, பணத் திமிரின் போக்கில் வருவது. உயிரின நிலைத்திருப்பு என்பது பசியை அடிப்படையாகக் கொண்டது. வயிற்றுப் பசி, உடல்பசி, அதிகாரப் பசி என்று அது விரிந்து செல்லும். முதலில் அடங்க வேண்டியது வயிற்றுப் பசி. அதனைச் செய்வதற்கான எந்தத் திட்டங்களையும் தமிழ்த் தேசியக் கட்சிகள் கடந்த 15 ஆண்டுகளில் செய்யவில்லை. அனைத்தையும் யாழ் மேலாதிக்கவாதிகளும், அதன் வால்கள்போல இயங்கும் புலம்பெயர் தரப்புக்களும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற ஒற்றை வார்தைக்குள் நின்று புறக்கணித்திருக்கின்றன. இன்றைக்கு, அதனையே கேள்விக்குள்ளாக்கும் வண்ணம், வடக்கில் தேசிய மக்கள் சக்தி வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளைக் காட்டி, தமிழ் மக்களுக்கு இருப்பது அரசியல் அதிகாரப் பிரச்சினை அல்ல, பொருளாதாரப் பிரச்சினை என்று தென் இலங்கை பேசத் தொடங்கிவிட்டது. தேசிய மக்கள் சக்தியின் மூளையான ரில்வின் சில்வா போன்றவர்கள், அதனை தொடர்ச்சியாக தேர்தல் மேடைகளில் பேசியும் வந்திருக்கிறார்கள். அப்படியான சூழலில், அதன் பிரதிபலிப்பை தமிழ் மக்கள் காட்டிவிட்டார்கள் என்பது உணரப்படும். தமிழ்த் தேசியம் என்பது, விடுதலைக் கோசம் மாத்திரமல்ல. நிலத்தையும், பொருளாதாரத்தையும், அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பு அடக்குமுறைச் சக்திகளிடம் இருந்து காப்பது. அதனை முழுமையாக உணர்ந்து செயலாற்றாமல், சோறா சுதந்திரமாக என்று கேட்பதெல்லாம், திரும்பத் திரும்ப பொய்களின் மீது நம்பிக்கையைக் கட்டுவதாகவும்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாமும் ஒன்றாக திரண்டால் போதும், வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலை மீண்டும் நிலைநிறுத்திவிடலாம் என்பது தொடர்வாதம். ஆனால், அந்த ஒருங்கிணைவு 2020 பொதுத் தேர்தலில் பெரிய வெற்றிகளை வழங்கவில்லை. இன்றைக்கு தமிழரசுக் கட்சி வடக்குக் கிழக்கில் வெற்றிருக்கின்ற வெற்றிக்கும், கூட்டமைப்பாக கடந்த முறை பெற்ற வெற்றிருக்கும் இடையில் பெரிய வித்தியாசமில்லை. அது மக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆக்கபூர்வமான செயற்பாட்டுத் திட்டங்கள் இன்றி, ஒருங்கிணைவுக் கோசமோ, திரட்சிக் கோசமோ எழுப்பவது, ஒரு கட்டத்தில் மருத்துவர் அர்ச்சுனா போன்றவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் அளவுக்கான நம்பிக்கைச் சிதறல்களைச் செய்யும். பொதுச் சமூக ஒழுங்கில் கலகக்காரனாக, தூசணங்களின் வழி குழப்படிக்காரனாக ஓர் ஒழுங்கு முறைக்குள் என்றைக்கும் வராத மருத்துவர் அர்ச்சுனா, தன்னை தமிழ்த் தேசியவாதியாக முன்னிறுத்துகிறார். அதிலும், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற கஜேந்திரகுமாரையும், தோல்வியுற்ற சுமந்திரனையும்விட தன்னை மக்கள் அமோக விருப்பு வாக்குகள் வழங்கி அங்கீகரித்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பை விடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு, போலித் திரட்சி; ஒருங்கிணைவுக் கோசத்தை எழுப்புவர்களின் முகத்தில் வீசப்பட்ட அம்பு. அதனை தமிழரசு, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் முதலில் பிடுங்கி எடுத்து சரியான மருந்திட்டு காயத்தை ஆற்றிவிட்டு, தேசத் திரட்சி பற்றி பேசுவது நல்லது. இல்லையென்றால், இன்னும் இன்னும் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.
-காலைமுரசு பத்திரிகையில் நவம்பர் 18, 2024 அன்று வெளியான பத்தி.
Add a comment