புன்னகையுடன் கைகுலுக்கிய நடிகையின் கதை! தேவதை டயானா!!


தேவதைஎன்கிற வார்த்தை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று என்னுடைய நண்பியொருத்தி தொடர்ந்தும் சண்டையிடுவாள். நான் அதிக தடவைகள் சிரித்துவிட்டு சென்றுவிடுகிறேன். அவளின் கூற்றில் குறிப்பிட்டளவு உண்மையிருக்கிறது. ‘அழகிய- பதுமையான- ஆணுக்கு அடக்கமான- குடும்பத்தை மீறாத- இன்பங்களை மட்டும் வழங்கும் ஜீவனாகஇப்படி தேவதை என்கிற வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்களை வைத்திருக்கிறது இந்த சமூகம்.

இது அடிப்படையில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். ‘தேவதைஎன்கிற சொல்லினை முதலில் எழுதியவனின் மனதிலும் சிலவேளை ஆணாதிக்கம் இருந்திருக்கலாம். இல்லாவிடில் காலப்போக்கில் மருவியிருக்கலாம். ஆனால், தேவதை என்கிற சொல்லுக்குள் அடக்கமும்- அழகும் மட்டுமில்லை, ஆக்ரோசமும்- பாசமும்- திடமும்- தீர்க்கமும் கலந்திருப்பதாகவே நான் என்றைக்கும் உணர்ந்து வந்திருக்கிறேன்.

வெளித்தோற்றத்தில் எங்களுடைய சமூகக் கட்டமைப்பு ஆண்களினால் வடிவமைக்கப்படுவதாக சொன்னாலும், அடிப்படையில் அதன் ஆணி வேராக ;தாய்- மனைவி- சகோதரிஎன்ற நிலைகளில் பெண்களே இருக்கிறார்கள். ஆக, அடிப்படையில் தேவதை என்கிற சொல்லினை நான் ஆணாதிக்கத்துடன் பாவிக்க விரும்புவதில்லை. ஏனெனில், ‘என்னுடைய தங்கையையோ- எதிர்காலத்தில் மகளையோஇந்தச் சமூகம் அடக்கியாள்வதை நான் என்றைக்கும் விரும்பமாட்டேன். அவள்களின் தனி அடையாளமும்- தீரமும் எப்போதுமே இருக்கவேண்டும்.

சரி விடயத்துக்கு வருவோம். இந்தப்பதிவிலும் என்னை அதிகளவில் ஆட்கொண்ட மற்றுமொரு தேவதை பற்றிய சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நிச்சயமாக இந்த உலகம் சந்தித்த மிகமுக்கியமான பெண் அவள். ‘பெண்கள்தான் தேவதைகள்என்ற கூற்றுக்கு மிகவும் பொருத்தமானவள் அவள். தன்னுடைய வாழ்க்கையின் அதிக காலத்தை இடர்களுடன் கழித்தாலும்- வெளியுலகுடன் மிகவும் அன்னியோன்னியமாக பழகியவள் அந்த தேவதை. அவள்தான் டயானா!

சில பெண்களைப் பார்த்தால் நண்பியாக்கிக்கொள்ளவும், யாராவது சில பெண்களைப் பார்த்தால் காதலியாக்கிக் கொள்ளவும் மனது சொல்லும். ஆனால், வெகு சில பெண்களைப் பார்த்தால் தான் எனக்கு இப்படியொரு பெண் குழந்தை வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட ஆசையை எனக்குள் தோற்றுவித்தவர்களில் அம்மாவும், தங்கையும் முக்கியமானவர்கள். ஆனால், பிரபலங்களில்டயானாவும், ஸ்ரேயா கோஷலுமேஎன்னை அதிகம் பெண் குழந்தையின் மீதான ஆர்வத்தை தூண்டியவர்கள்.

பூமியொரு நாடக மேடை நாங்களெல்லாம் நடிகர்கள்என்கிற கூற்று மிகவும் யதார்த்த பூர்வமானது. ஆனால், வாழ்க்கையின் பெரும்பகுதியை சோகம் என்கிற உணர்வு ஆட்கொண்டிருக்க வெளியுலகுடன் நட்புணர்வுடனும்- சகோதரத்துவத்துடனும் பழகி வந்த டயானா அதற்கு மிகவும் பொருத்தமான உதாரணம். வேல்ஸ் இளவரசியாக அவர் வேண்டாவெறுப்பாக இறுதிவரை நடிக்க வேண்டியிருந்தது. ஆனாலும், அவர் உலக மக்களின் இளவரசியாகவே இறுதிக்காலங்களில் வாழ்ந்தார்.

டயானா 1997இல் அகால மரணமடைந்த பின்னரே ஊடகங்களின் வழி அவர் எனக்கு அறிமுகமாகிறார். அதே காலப்பகுதியில் எனக்கு அறிமுகமான மற்றுமொரு பெண் ஆளுமை அன்னை தெரேசா. ஆனாலும், அன்னை தெரேசா என்கிறஏழைகளின் தாய்என்னுள் செலுத்திய தாக்கத்தினைவிட இளவரசி டயானா செலுத்திய தாக்கம் பெரியது. ‘இளவரசி கேத்தரின் மில்டனைஇன்று உலகம் தன்னுள் உள்வாங்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனாலும், டயானா என்கிற ஆளுமை மீதானஅபிமானமும்- ஈர்ப்பும்எனக்கு இன்னும் குறையவில்லை.

தான் வாழும் காலம் பூராவும் இந்த சுயநல உலகத்துடன் புன்னகையுடன் கைகுலுக்கினார் டயானா. ஆனால், அவரின் கண்களில் மென்சோகம் வெளிப்பட்டது. அந்த சோகத்தில்இயலாமையும்- கஸ்ரமும்அடங்கியிருந்தது. கோபுரத்தில் இருந்தாலும் பெண்களை இந்த ஆணாதிக்க சமூகம் அளவுக்கதிகமாக அடக்கியாளவே நினைத்திருந்தது. அந்த அடக்குமுறைக்குள் இருந்து வெளிவரத் துடித்து, அதிகம் வெளிவர முடியாமல் அந்த அடக்கு முறைக்குள்ளேயே அடங்கிப்போனாள் அந்த தேவதை!

மறைவாக்கு போடுவது உரிமை! பதிவை முடக்குவது வன்முறை!!


இணையமும், வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களும் உலகம் பூராவும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிற காலமிது. அரசியல், வர்த்தகம், சமூக அபிவிருத்தி, தொழிநுட்பம் மற்றும் கலாசார வளர்ச்சி அல்லது அத்துமீறல்கள் என்று அனைத்து விடயங்களிலும் இவை குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.

வலைப்பூக்கள் அல்லது பதிவுலகு அனைத்து மட்ட மக்களையும் நோக்கி தன்னுடைய கரங்களை வீரியத்துடன் நீட்டிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய கருத்துக்களை, விமர்சனங்களை, அனுபவங்களை, சந்தோசங்களை, துக்கங்களை என்று அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வலைப்பூக்கள் வழியேற்படுத்தி கொடுக்கிறது.

தெற்காசிய இணையப்பரப்பில் தமிழ் வலைப்பூக்களின் வருகை முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 600 முதல் 700 பதிவுகளாவது தமிழில் பதிவிடப்படுகிறது என்று எங்கோ வாசித்திருக்கிறேன். இந்தப் விபரம் ஓரளவு சரியாகவும் இருக்கலாம்.

நாளுக்கு நாள் தமிழ் பதிவுலகில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இது கருத்துப்பகிர்தல்கள், ஆளுமை பங்கீடுகள், மாற்றுக்கருத்துக்களின் வருகையை ஊக்குவிக்கிறது. இதனால், பதிவுலகம் ஆரோக்கியமாக இருப்பதாக நம்பலாம். பதிவுலகு நல்ல திசையில் பயணிக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறி.

ஆனால், நல்ல அறிகுறிகள் எங்கெல்லாம் தென்படுகிறதோ அங்கெல்லாம் அத்துமீறல்களும், வன்முறைகளும், ஜனநாயக மறுப்புக்களும் தலைதூக்கவும் ஆரம்பிக்கின்றன. இது, எல்லா விடயங்களுக்கும் பொருந்துகிறது. அதுபோலவே, தமிழ் பதிவுலகம் பலதரப்பட்ட குறைபாடுகளை அல்லது வன்முறைகளையும் தன்னுள்ளே வாரி அணைத்துக் கொண்டு செல்கிறது.

சில விடயங்களை எழுதுவது சிலருக்கு வருத்தங்களை தரலாம். ஆனால், உண்மைகளை எழுதியே ஆகவேண்டும். வலைப்பூக்களை திரட்டுகின்ற திரட்டிகள் பதிவர்களையும், வாசகர்களையும் ஊக்கப்படுத்தும் பொருட்டு வாக்களிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஒரு பதிவு பிடித்திருந்தால் நேர் வாக்கும். பிடிக்கவில்லை எனில் மறை வாக்கும் போடலாம். இதன்மூலம், பதிவர்கள் தங்களுடைய பதிவுகளின் உண்மை நிலையை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இதனை எதிர்பார்த்தே திரட்டிகள் வாக்களிக்கும் முறையினை அறிமுகம் செய்கின்றன. அதில், குறிப்பிடத்தக்களவு வெற்றியும் பெறுகின்றன. (திரட்டிகளின் வாக்களிக்கும் முறைகளில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்)

ஆனால், எங்கும் குதர்க்க சிந்தனையாளர்களும், குற்றவாளிகளும் இருக்கவே செய்கின்றனர். தங்களுக்கு ஒரு பதிவரை பிடிக்கவில்லை என்றால் அவருடைய பதிவினை வாசிக்காமலே மறை வாக்கு போட்டுவிட்டு செல்கிறார்கள். இது அளவு கடந்து இன்றும் தொடர்கிறது. அண்மையில் தொடர்ச்சியாக சில பதிவர்களின் பதிவுகளுக்கு மறைவாக்குகள் போடப்பட்டது.

இவற்றில் எத்தனை வாக்குகள் பதிவுகளை வாசித்து விட்டு அளிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மறை வாக்கு போடுவது உரிமை. ஆனால், தங்களுடைய குரோதங்களை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறு செய்வதை என்னவென்று சொல்வது. இவ்வாறான செயற்பாடுகள் புதிதாக அந்த வலைப்பூக்களுக்கு வருபவர்களைத் தடுக்கலாம். அதுபோல சில பதிவர்கள் பதிவுலகைவிட்டு ஒதுங்குவதற்கும் இது காரணமாகிறது.

தொழிநுட்ப வளர்ச்சிகள் வன்முறைகளுக்கும், அத்துமீறல்களுக்கும் பயன்படுகிறது என்பதற்கு வலைப்பூக்களை முடக்குவது அல்லது அழிப்பதுவும் நல்ல உதாரணம். ஒருவனின் கருத்து பிடிக்கவில்லை என்றால் மாற்றுக்கருத்தை முன்வைப்பதுவே ஜனநாயமுறைமை. (எங்களுடைய சமூகத்தில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடம் வழங்கப்படுவது குறைவு)

ஆனால், அவ்வாறு கருத்துக்களை முன்வைக்காமல் குறிப்பிட்ட கருத்தாளரின் தளங்கள் அல்லது பதிவுகள் சட்டவிரோதமாக முடக்கப்படுகின்றன. திறந்த மனதுடன் கருத்து மோதல்களுக்கு தயாரில்லாதவர்களே மற்றவர்களின் பதிவுகளையும், வலைப்பூக்களையும் அழிப்பதிலும், முடக்குவதிலும் முன்நிற்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளும் வன்முறையே.

இவ்வாறு முறையற்ற விதத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தமிழ் பதிவுலகத்துக்கு நல்லதல்ல. தொடர்ந்தும் பதிவுகளை அக்கறையுடன் வாசித்து வருபவன். அவ்வப்போது பதிவுகளையும் எழுதுபவன். இவ்வாறு பதிவுலகத்துடன் தொடர்புகளை பேணுகிறவன் என்கிற முறையிலேயே இந்தக் கருத்துக்களை முன்வைத்துச் செல்கிறேன். ம்ம்! நவீன கண்டுபிடிப்புக்களை முறையற்றுப் பாவிப்பதென்பது மனித மூளைக்கு இயல்பாகிப்போன விடயமாகிவிட்டது!

(2010 யூன் 8ஆம் திகதி எழுதியது. அண்மைக்கால நிகழ்வுகள் சிலவற்றைப் பார்த்த போது மீள்பதிவாக இட நேர்ந்தது)

துப்பாக்கிகளின் முனைகளில் வியாபிக்கும் ஜனநாயகம்!


சகோதரி ஹிருணிகா பிரேமச்சந்திர!

உன்னுடைய தந்தையின் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர) அகால மரணத்துக்கான என்னுடைய வருத்தத்தையும்- ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து இந்த கடிதத்தை எழுத ஆரம்பிக்கிறேன்.

உன்னை, உன்னுடைய தந்தையின் மரணம் நிகழும் வரை ஒரு மொடல் அழகியாகவே எனக்கும் தெரியும். மரணத்துக்குப் பின்னரே கொழும்பின் முக்கிய அரசியல்வாதியொருவரின் மகள் என்பது தெரிந்தது. மரணங்களின் வலி எம()க்கு புதிதில்லை என்கிற போதிலும், உனக்கு அது சடுதியானதாகவும்- தவிர்க்க முடியாததுமாகிப் போயிருக்கிறது. அந்த துக்கங்களிலிருந்து மீண்டுவர வேண்டுகிறேன்.

துப்பாக்கிகளின் முனைகளில் வியாபிக்கும் ஜனநாயகத்துக்கு (?) இரையான மற்றுமொரு உயிர் உன்னுடைய தந்தையினுடையது. இலங்கையில் இது சர்வசாதாரணமாக நடைபெற்றுவந்த ஒன்றுதான். 1980களுக்குப் பின்னரான அரசியல் அரங்கில் துப்பாக்கிகள் செலுத்திய தாக்கமும்- அதன் ஆளுகையும் மிகப்பெரியது. சில தருணங்களில் மக்கள் பிரநிதிகளைவிட அதிகாரத்துடன் துப்பாகிகளே வலம் வந்திருக்கின்றன.

நடுவீதியில் இரு குழுக்களுக்கிடையிலான துப்பாக்கி மோதலில் உன்னுடைய தந்தை கொல்லப்பட்டார்என்கிற செய்திக்குப் பின்னால் ஆயிரம் வினாக்களும்- செய்திகளும் இருக்கின்றன. அதில்அரசியலும்- வல்லாதிக்கமும்- பிரதேச ஆளுகையும்- விருப்பு வாக்கு ஆசையும்அதிகளவில் இருக்கின்றன. ஆக, ‘ஜனநாயகத்தின் அடிப்படைகளிலிருந்தே இன்னுமொரு சர்வாதிகாரத்துக்கான கொலையாகஉன்னுடைய தந்தையின் மரணத்தையும் கொள்ள முடியும். இதில், உன்னுடைய தந்தைக்கும் பொறுப்பிருக்கிறது. இதனைத் தவிர்த்துவிடவும் முடியாது.

உன்னுடைய தந்தையின் மரணத்துக்கு நீதி வேண்டி அரசியல் போராட்டத்தில் நுழையப்போவதாக நீ உணர்ச்சி பொங்க தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் பரபரப்புடன் பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும்- முறையற்ற செயலுக்கும் நீதி கிடைத்துவிட்டாலேஜனநாயம்என்பது பூரணமாக அமைந்துவிடும். அது, சாத்தியப்படுமா என்பதுதான் கேள்விக்குறி!

அதுபோக, வடக்கு- கிழக்கு உள்ளிட்ட இலங்கையில் அரசியல் கொலைகளுக்காகவோ- அநீதிக்காகவோபழிதீர்க்கும் அரசியல்என்ற ஒன்று தோற்றம் பெற்றால்மீண்டும் முள்ளிவாய்க்கால்களும்- களனி கங்கை பிணங்களும்வந்துசேரும். பயங்கரவாதம் தலைதூக்கியிருந்த நாட்டில் (அப்படித்தானே சொல்லப்படுகின்றது) ஆயுதங்களின் பாவனை அதிகளவில் இருப்பது இயல்பானது. ஆனால், அந்தப் பயங்கரவாதத்தை அழித்துவிட்ட பின்னரும், சட்ட விரோத ஆயுதங்களின் பாவனையை எப்படி எடுத்துக் கொள்வது.

நகங்களின் கூர்மை கண்களைக் குத்தும் வரை யாருக்கும் தெரிவதில்லை. அதுபோலத்தான், யாராக இருந்தாலும் துப்பாக்கிகளின் வன்மம் அவர்களை தாக்கும் வரை தெரிவதேயில்லை. யார் கையில் துப்பாக்கியிருந்தாலும் அது குண்டுகளை மட்டுந்தான் பாய்ச்சுகின்றன. மாறாக பூக்களை அல்ல. துப்பாக்கிகள் இல்லாத அரசியல் எப்போது சாத்தியப்படுமோ- அப்போது உன்னுடைய போராட்டத்துக்கான நீதி கிடைக்கலாம். இதுவே, உலகம் பூராகவும் சாத்தியமானது.

முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், அரசியல் தலைவர் விஜய குமரணதுங்க, முன்னாள் ஜனாதிபதி பிரமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் என்று காலம் காலமாக குண்டுகளினாலும், துப்பாக்கிகளினாலும் அரசியல் தீர்மானிக்கப்பட்ட நீண்ட வரலாற்றை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட நாட்டில் ஜனநாயம் என்பது பல நேரங்களில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்ட நாட்டில் (?), ஏன் இன்னும் குண்டர்களின் ராச்சியத்தை ஒழிக்க முடியவில்லைஎன்று அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களே கேள்வி எழுப்புகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் துப்பாக்கிகளின் பாவனை தொடர்ந்தும் இருக்கத்தானே செய்கிறது. இலங்கையின் பாதுகாப்புதுறை சட்ட விரோத ஆயுதங்களை கழைய நடவடிக்கை எடுப்பதாக நேற்று அறிவித்திருக்கிறது. நல்ல விடயம். ஆனால், எனக்கு ஒன்று புரியாத விடயம். சட்டபூர்வ- சட்டபூர்வமற்ற ஆயுதங்களை எவ்வாறு வரையறுப்பீர்கள்?

இப்படி ஆயிரம் கேள்விகளும்- விடயங்களும் தொக்கி நிற்கும் நிலையில் இந்த கடிதத்தை எழுதி முடிக்கிறேன் சகோதரி! திறந்த மனதுடன் இயங்கும் அரசியல் சூழலே ஜனநாயகத்துக்கான உண்மையான ஆரம்பமாக இருக்கும். அந்த ஆரம்பம் எப்போது தோற்றம் பெறுமென்று தெரியாது. அப்படிப்பட்ட ஆரம்பமே அவசியமற்ற கொலைகளையும்- அக்கிரமங்களையும் தடுக்கும். மற்றப்படி, துப்பாக்கிகளின் முனைகளில் வியாபிக்கும் ஜனநாயகம் எந்த நன்மையையும் தந்துவிடாது.

குறிப்பு: இந்த வருடத்தில் நான் எழுதும் இரண்டாவது கடிதம் இது. முதலாவது மறைந்த சகோதரி செங்கொடிக்கு எழுதியது. செங்கொடிக்கு எழுதிய கடிதம் அவளை சேர்ந்திருக்காது என்பது தெரியும். அதுபோல, தமிழில் எழுதுகின்ற இந்த கடிதம் சகோதரி ஹிருணிகா உனக்கு புரியாது. யாராவது மொழி மாற்றி படித்துக் காட்டவும் வாய்ப்புக்கள் குறைவு. ஆனாலும், மனதின் ஆதங்கங்களையும்- கோபத்தையும்- அன்பையும்- ஆதரவையும் கடிதங்களினூடு பகிர்வது ஏதோவொரு நிம்மதியை தருகிறது. (இரண்டு வரிகளில் உனக்காக அனுதாபத்தினை பேஸ்புக்கினூடு ஆங்கிலத்தில் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.)

ஹிருணிகா! நான் நினைக்கிறேன் நீ குறிப்பிட்டதுபழிதீர்க்கும் அரசியல்இல்லை என்று. அது, ‘நியாயத்துக்கான அரசியல்’. அந்த அரசியல் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

இப்படிக்கு,
மருதமூரான்என்கிற புருஜோத்தமன் தங்கமயில்.
மருதங்கேணி- யாழ்ப்பாணம்- கொழும்பு
ஒக்டோபர் 14, 2011. காலை 09.55.

ரஜினியின் அரசியல்! தோற்றுப்போன கனவு!!


ரா-1’ இந்தியச் சினிமாவில் ரஜினியின் பெயருக்கு ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் இருக்கிற ஈர்ப்புக்கும்- போதைக்கும் அண்மைக்கால உதாரணம். ரஜினியின்சிவாஜியும், எந்திரனும்வருவதற்கு முன்னரான சில காலம் இந்தியாவின்சூப்பர் ஸ்டாராகவடக்கு ஊடகங்கள் கொண்டாடிய நடிகர் ஷாருக்கான். ரஜினிக்குப் பிறகு ஒப்பிட்டளவில் அதிக ஒப்பினிங் வசூலை கொண்ட இந்திய நடிகர்.

இப்படியிருக்கிற ஷாருக்கானுக்கே ரஜினி தேவைப்படுகிறார். ஷாருக்கான் நடித்தரா-1’க்கும், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் தோன்றியரா-1’க்குமான வித்தியாசங்கள் நிறைய உண்டு. தென்னிந்திய அளவில் மட்டுமல்ல, ரஜினிரா-1’ இல் நடித்திருக்கிறார் என்பது வட இந்திய அளவிலேயே அதிக எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகின்றது. இதனை, யாரும் மறுத்துவிட முடியாது. இதுதான் ரஜினி என்கிற நடிகருக்கு இந்தியா பூராவும் இருக்கின்ற மாஸ்!

இந்தியளவில் யாருக்குமில்லாத அளவு ரசிகர்களிடம் வரவேற்பும்- ஈர்ப்பும் இருக்கிறரஜினியின் அரசியல் மீதான ஆர்வம்- அது தோற்றுப் போனமைதொடர்பிலேயே இந்தப்பதிவு சின்னதான பேச விளைகிறது. ஆகவே, ரஜினியின் அதிபயங்கர தொண்டரடிகள் சிலவேளை இதனைத் தவிர்ப்பது நல்லது. ரஜினி என்கிற நடிகர் மீது எனக்கு என்றைக்கும் அபிமானமும்- ஈர்ப்பும் உண்டு. ஆனால், இந்தப்பதிவுஅபிமானம்- ஈர்ப்புஎன்ற விடயங்களை தூக்கி வைத்துவிட்டு எழுதப்படுகிறது.

பல தருணங்களில் எங்களைச் சுற்றியிருப்பவர்கள் எங்களைப்பற்றிய நேர்மையான விமர்சனங்களை முன்வைப்பதில்லை. இது, ‘நண்பரின் மனதை புண்படுத்தும். அவரை நோகடித்துவிடும்என்கிற நல்ல அடிப்படையிலும் இருக்கலாம். ஆனால், இந்த நல்ல அடிப்படை பலபேரை தவறாக வழிநடத்தி விடுகின்றது. அதுபோல, சில தருணங்களின் அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து எங்களைபற்றிய அநாவசியமற்ற தோற்றப்பட்டை வடிவமைத்து விடுகின்றனர். இதுவும், எங்களை எங்காவது சிக்கலுக்குள் மாட்டிவிட்டுகிறது.

இந்த விடயங்களே ரஜினியைச் சுற்றி 1990களின் ஆரம்பத்தில் பின்னப்படுகின்றன. அதுவும், ‘அண்ணாமலைபடம் பஞ்ச் வசனங்களுடன் வந்து மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதுடன், ‘ரஜினியின் அரசியல்என்கிற பெரிய பிம்மம் இயல்பாக ஊடகங்களினாலும்- கூட இருந்தவர்களினாலும் பெருப்பிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டு விடுகிறது. அந்தஅரசியல் கனவேஎந்திரனுக்குப் பின்னரும் நொண்டியடித்துக் கொண்டு வருகிறது.

நான் நினைக்கிறேன், அந்தஅரசியல் கனவைரஜினி ஆரம்பத்தில் விரும்பியிருந்தாலும், யதார்த்தங்களை உணர்ந்து 2000க்குப் பின்னர் அதனை மனப்பூர்வமாக கைவிட்டுவிட்டார். ஆனாலும், அவருடன் கூட இருப்பவர்களும்- ரஜினி என்கிற பெயருக்கு இருக்கிற ஈர்ப்பை வியாபாரம் செய்துவிட வேண்டும் என்று நினைப்பவர்களும் ரஜினி மீது தொடர்ந்தும் அந்த அரசியல் கனவை பொருத்திக் கொண்டு செல்கின்றார். அதனால், ‘பந்தயத்தில் ஓடும் குதிரையாகவிருப்பமின்றி அந்த அரசியல் கனவை சுமக்கின்றார் அவர்.

நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆரும், என்.ரி.ராமராவும் அரசியலுக்கு வந்து முதலமைச்சர்களான காலம் வேறுவிதமான ஊடகச்சூழலைக் கொண்டிருந்தது. பத்திரிகைகள்- சஞ்சிகைகள்- அரச வானொலிகள்- அரச தொலைக்காட்சிகள் என்கிற அளவிலேயே ஊடகங்கள் தாக்கம் செலுத்தின. அந்த ஊடகங்களின் தாக்கங்களைவிட பல தருணங்களில் எம்.ஜி.ஆர்- என்.ரி.ராமராவ் படங்கள் மக்களிடம் தாக்கம் செலுத்தின.

அதாவது, ‘ஏழைப்பங்காளானாக- கள்ளம் கபடமற்றவனாக- தவறுகளை தட்டிக் கேட்கும் தனையனாக- அழகாக காதல் செய்யும் காதலனாக- என்றைக்கும் நல்லவனாகசினிமாக்களின் வலம் வந்த எம்.ஜி.ஆரும்- என்.ரி.ராமராவும் மக்களின் மனங்களில் கதாநாயகர்களாகவே பதிந்து போனார்கள். அந்த பிம்பத்தினை உடைக்கவோ- விமர்சிக்கவோ அந்தக் காலத்து ஊடகங்கள் தயாராக இல்லை. அதனால், சினிமாவின் நல்ல நாயகனாகவே அவர்கள் பதிந்து போனார்கள். இதுவே, அவர்களின் அரசியல் ஆசையையும் சடுதியாக வெல்ல வைத்தது.

இவ்வாறான ஊடகச் சூழல் 1990களில் தனியார் தொலைக்காட்சி- வானொலிகளின் வரவுக்குப் பின்னால் மெல்ல மெல்ல மாற ஆரம்பிக்கிறது. சரியோ- பிழையோ ஒவ்வொரு ஊடகமும் தங்களுக்கென்ற அரசியலை வைத்து இயங்க ஆரம்பிக்கின்றன. அந்த தருணத்தில் தங்களுக்கு பொருந்தாத நபர்கள் குறித்த விமர்சனங்களை மக்களிடம் முன்வைக்கும் செயற்பாட்டில் இறங்குகின்றன. இதுவே, எம்.ஜி.ஆர்- என்.ரி.ராமராவுக்கு அடுத்த தலைமுறைக்கு ஆப்பாக அமைகின்றது. இந்த ஆப்புக்குள் ரஜினியும் சிக்கிக்கொள்கிறார்.

1994 ஆம் வருடமே ரஜினியின் அதியுச்ச அரசியல் கனவின் காலமென்று நினைக்கிறேன். ரஜினியின் ஒரு வார்த்தையில் ஆட்சி மாறியது என்றெல்லாம் ஊடகங்களும்- ரசிகர்களும் பேசிக்கொண்டர். ஆனால், அதில் உண்மையின் அளவு எவ்வளவு? பின்னராக காலத்தில் ரஜினியின் அரசியல் கனவு சடுதியாக குறைந்து போனது. இப்போது, அந்தக் கனவு அறவே இல்லை. ஆனால், இருப்பது மாதிரியான தோற்றப்பாடு சிலரினால் கட்டமைக்கப்பட்டு தொடர்கிறது.

இதனிடையே, இணையத்தின் வருகையுடன் 2000க்குப் பின்னராக ஊடகச்சூழல் யாரையும்- எப்படியும் விமர்சிக்கலாம் என்கிற நிலையைத் தோற்றுவித்தது. இதுவே, ரஜினி தொடக்கம் இன்றைய விஜய் வரை தொடர்கிறது. ரஜினிபோல அளவுக்கதினமான அரசியல் கனவு கட்டமைக்கப்பட்டு, அதற்குள் சென்று கலைந்து போனவர் ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. பிரம்ம ராஜ்ஜியம் கட்சியை ஆரம்பித்து சில வருடங்களுக்குள்ளேயே காங்கிரஸ் கட்சிக்குள் கலைந்து போனார்.

இங்கு நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவர் கறுப்பு எம்.ஜி.ஆர். அதுதான் தற்போதைய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். நடிகர் என்கிற பிம்பத்துடன் அரசியலுக்கு வந்து முதலாவது தேர்தலில் ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றியை பெற்றும் தொடர்ந்தும் களத்தில் நின்றமை. அதுபோக, சரியான நேரத்தில் கூட்டணியமைத்து எதிர்க்கட்சித் தலைவர் ஆகுமளவுக்கு செயற்பட்டமை. இதனையே அவரின் உச்ச வெற்றியாக கொள்ள முடியும். ஏனெனில், எதிர்காலத்தில் அவரின் அரசியல் வெற்றி இவ்வளவுக்கு சாத்தியப்படுமா தெரியாது. ஆனாலும், விஜயகாந்தை பாராட்டலாம். தன்னுடைய அரசியல் கனவை களத்தில் இறங்கி பரீட்சித்துப் பார்த்ததற்கு. அதுபோல, அந்தக் கனவின் நிஜத்துக்காகவே இறுதிவரை தொடர்வார் என்று நம்பலாம்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தப்பேயில்லை. தப்பென்று சொல்வது கூட ஜனநாயகத்துக்கு முரணானது. ஆனால், ரசிகர்களிடம் இருக்கிறநாயகன்- நாயகிபிம்பத்தினை வைத்து வெற்றிபெற்றுவிடலாம் என்பது மூடத்தனம். ‘ரஜினி- விஜய்- ஷாருக்கான்- மகேஷ்பாபு- மோகன்லால்- வடிவேலு- ஷகீலா- ஹன்சிகாயாராக இருந்தாலும் அரசியல் களத்தில் இறங்கி படிப்படியாக முன்னேறி வரவேண்டும். அதனைவிட்டு, ஒரேயிரவில் முதல்வராவது என்பது சாத்தியமேயில்லாதது. வேண்டுமானால் கனவில் சாத்தியப்படலாம்! நிஜயத்தில் அறவே இல்லை!!

குறிப்பு: இந்தப்பதிவில் உள்ளடக்கபட்ட விடயங்களை நண்பர்கள் பாலவாசன்- ஜீ – ஜனா உள்ளிட்ட சிலருடன் தொலைபேசி மற்றும் நேரில் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்!

சினிமாவில் தெறிக்கும் நிஜங்கள்! இங்கிருந்தே எடுக்கப்பட்டது!!


மௌனராகம்இயக்குனர் மணிரத்தினத்தை அடையாளம் காட்டிய படங்களில் முக்கியமானது. 25 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்திருந்தாலும் மௌனராகத்தின் மீதான ஈரப்பும்- நெருக்கமும் பலருக்கு இன்னும் குறையவில்லை. புதிய தலைமுறைக்குக் கூடமௌனராகம்பிடித்தேயிருக்கிறது. மணிரத்தினம் என்கிற பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் இந்திய அளவில் ரோஜாவும், பம்பாய்யும் நினைவில் வரும். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு மௌனராகமும், நாயகனும் முதலில் நினைவில் நிற்கும்.

இந்தியச் சினிமாவில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்தும் வெற்றிகரமான ரொமான்ஸ் படங்களை வழங்கியது என்றால் அதுயாஸ்ராஜ் பிலிம்ஸ்சாகத்தான் இருக்கும். இயக்குனர் யாஸ் சோப்ரா, அவரது மகன் ஆதித்யா சோப்ரா என்று இவர்களின் இயக்கங்களில் வரும் படங்களில் 90 வீதமானவை காதல் படங்கள். அவற்றில் சில வருடக்கணக்கில் ஓடிய படங்கள். இப்போதும், இயக்குனர் யாஸ் சோப்ராவைரொமான்ஸ் கிங்என்றே அழைக்கிறார்கள் பொலிவூட்டில்.

ஆதித்யா சோப்ராவின் இயக்கத்தில் ஷாருக்கான்- அனுஷ்கா சர்மா நடித்து 2008 டிசம்பரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம்ரப்னே பனா டீ ஜோடி’. இந்தரப்னே பனா டி ஜோடிக்கும், 1986ல் வெளிவந்தமௌனராகமும்அடிப்படையில் ஒரே மாதிரியான கதையைக் கொண்டவை. ‘மணப்பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு காதல்- காதலன் இறந்துவிடுகிறான்- விருப்பமின்றி வேறொருவனுடன் திருமணம்- மனைவி மீது காதலும் பாசமும் வைத்திருக்கின்ற கணவன்இதுதான் அந்த அடிப்படை.

திரைக்கதை அமைப்பில் இரண்டு படங்களுக்கும் வித்தியாசங்கள் அதிகம். ‘மௌனராகம்ஒரளவு மென்சோகம் கலந்தே இறுதிவரை பயணிக்கும். ‘ரப்னே பனா டீ ஜோடிஷாருக்கானுக்கு மிகவும் பொருந்துகின்ற நகைச்சுவை கலந்த ரொமான்சுடன் பயணிக்கும். அதிலும், மென்சோகம் இழையோடும். ஆனால், அடிப்படையில் இரண்டும் ஒரே கதையை கொண்டவை. படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனவை. இரண்டும் வெற்றிப்படங்கள்.

இந்த இரண்டு படங்களின் அடிநாதமும் பலரின் வாழ்க்கையில் நடந்திருக்கக்கூடியன. ‘காதல் கைகூடாமையும்- விரும்பமின்றிய திருமணமும்- கிடைத்த வாழ்க்கையில் இறுதியில் சந்தோசமும்- காதல் கணவனும்பலருடைய வாழ்க்கையில் நடந்திருக்கக்கூடியன. இதனை, நாங்கள் தவிர்த்துவிட முடியாது.

ரசிகர்களுக்கு எவ்வளவு அறிந்த கதையாக இருந்தாலும், அதுவும் காதல் கதைகள் என்றால் மிகவும் நேர்த்தியாக- ரசிக்கக்கூடிய விதத்தில் திரைக்கதை அமைத்தால் அந்தப் படங்களை வெற்றிபெற வைத்துவிடுவார்கள். கௌதம் மேனனில்விண்ணைத்தாண்டி வருவாயாவினை ஏன் ரசிகர்கள் இவ்வளவு கொண்டாடினார்கள். பலர் தங்களது வாழ்க்கையில் நடந்தது என்றார்கள். அந்தக் கதையையும் நாம் கடந்து வந்திருப்போம். அல்லது, மற்றவரின் வாழ்க்கையில் பார்த்திருப்போம். அப்படி நாம் கண்ட கதையை ரசிக்கும்படி சொல்கிற போது அதனை நாங்கள் கொண்டாடுகின்றோம். மற்றப்படி, ‘விண்ணைத்தாண்டி வருவாயாஒன்றும் புதிதாக கௌதம் மேனனின் மூளைக்குள் மட்டும் தோன்றிவிடவில்லை. ஆங்காங்கே அனுபவித்தது- மற்றவனுக்கு நடந்தது என்று பகவத்கீதையின் வடிவில் சொன்னால்இங்கிருந்தே எடுக்கப்பட்டது’.

ஆனால், சில இயக்குனர்களும்- படைப்பாளிகளும்(?) மற்றவன் எடுத்ததையே 70, 80 வீதங்கள் மாற்றமின்றி எடுத்துவிட்டு தங்களின் சொந்தச் சரக்கு மாதிரி பயங்கரமாக படமோட்டுவார்கள். அவர்களை பெரிதாக நாங்கள் அலட்டிக்கொள்ளக் கூடாது. (அதற்கான எனக்குத் தெரிந்த அண்மைக்கால உதாரணங்கள் விஜய்யின்தெய்வத்திருமகள் ஆம் சாம்மின் உருவல். கமல்ஹாசனின்அவ்வை சண்முகிமிஸ்சிஸ் டவுட்பயரின் திருடல். இப்படி அடுத்தவன் எடுத்ததை அவனுக்குத் தெரியாமலே எடுத்தவர்களின் பட்டியலும் நீளம்.) நான் இந்த வகையறாக்களைப் பற்றிப் பேச வரவில்லை.

நாங்கள் பார்க்கிற- ரசிக்கிற ஒவ்வொரு சினிமாவும்இந்த உலகத்திலே நடந்த- நடக்கிறவிடயங்களை அடிநாதமாகக் கொண்டே பின்னப்படுகின்றன. ஆனால், அவற்றின் திரைக்கதை அமைப்பில் சில தருணங்களில் நாங்கள் எதிர்பார்க்காத விடயங்களை சேர்த்துவிடுகின்ற போது எங்களுக்கு பிரமிப்பாக இருக்கின்றது. உலகமே கொண்டாடிய ஜேம்ஸ் கமரூனின்அவதார்தொடக்கம், தமிழன் கொண்டாடிய ஷங்கரின்எந்திரன்வரை அடிப்படைகள் இங்கிருந்தே எடுக்கப்பட்டது. (எந்திரன் கதை எங்கிருந்து- அல்லது யாரிடமிருந்து எடுக்கப்பட்டது என்ற விவாதத்தை விரும்பினால் யாராவது தொடரலாம்!)

ஒரு அரசாங்கம். அந்த அரசாங்கத்தின் இரு முக்கிய நபர்கள். ஒருவர் மக்கள் பிரதிநிதி என்ற போர்வையில் வலம் வந்தாலும் போதைப்பொருள் வர்த்தகம், பாதாள உலக நடவடிக்கைகள்(ரவுடியிசம்) என்று அடிப்படையில் இயங்குபவர். மற்றவர் முன்னாள் மக்கள் பிரதிநிதி, இப்போதும் தனக்கென கூட்டமொன்றை வைத்துக்கொண்டு- குறிப்பிட்ட அந்தப் பிரதேசத்தில் அதிகாரத்துடன் வலம் வருபவர். ஆனால், இருவரும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு நெருக்கமானவர்கள்.

இவர்கள் இருவரும் நடு வீதியில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு, இறுதியில் ஒருவரை ஒருவர் துப்பாக்கிகளினால் சுட்டுக்கொண்டனர். விளைவு சில உயிர்கள் பறிக்கப்படுகின்றன. ஒரு குழுவின் முக்கியத்தரும் மாண்டுவிடுகிறார். (இது யாருக்காவது ஏதாவது உண்மையான சம்பவங்களை நினைவுபடுத்தினால் நான் பொறுப்பல்ல) இந்த சம்பவத்தை நாங்கள் பல படங்களில் அதுவும், ‘காங்கெஸ்டர்படங்களில் பார்த்திருக்கலாம்.

படங்களில் இவ்வாறான ரவுடி- தாதாக்களின் வாழ்க்கையைப் பார்க்கிற போது பல தருணங்களில் அவற்றை நாங்கள் நிராகரித்து விடுகிறோம். ஆனால், அவற்றின் அடிப்படை கதைகளும் இங்கிருந்தே எடுக்கப்படுகிறது. ஏனெனில், எம்மைச்சுற்றி ஆயிரமாயிரம் கதைகள் இருக்கின்றன. அவற்றுக்கு கொஞ்சம் திரை மூலாம் பூசி படமாக எடுத்தால் அந்தக் கதைகள் புதிதாகத் தோன்றும். அவ்வளவுதான். மற்றப்படி அந்தக் கதைகள் புதிதாக எந்த மூளைக்குள்ளும் இறக்கி வைக்கப்படுவதில்லை.

யதார்த்த சினிமா- பன்டஷி சினிமாஎன்கிற சொற் பிரயோகங்கள் எல்லாம் திரைக்கதை அமைப்பின் அடிப்படையிலேயே மாறுபடுகின்றன. மற்றப்படி 99 வீதமான சினிமாக்களின் அடிப்படைகள் நிஜங்களிலிருந்தே தோற்றம் பெறுகின்றன!!

வாலியின் வாலிப முறுக்கு: அவ்வளவு பாதிக்காத ஸ்டீவ் ஜொப்ஸ் மரணம்!


என்னதான் மின்விசிறிகளை வேகமாக சுற்ற விட்டு தூங்கினாலும், தூக்கம் விட்டெழும் போது முதுகில் வியர்வைத் துளிகளை தவிர்க்க முடிவதில்லை! அதுபோலத்தான், எப்படியாவது தவிர்க்க நினைத்தாலும் இந்தக் காதலும் ஒட்டிக்கொண்டு விடுகிறது!!”

இயலுமானவரை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எழுதுவதைத் தவிர்க்கத்தான் நினைக்கிறேன். ஆனாலும், பொல்லாதமனம் அதற்கு இடம்கொடுக்க மறுக்கிறது. பேஸ்புக்கில் ஏதாவது எழுதிவிட சில தருணங்களில் அது யாரையாவது கொஞ்சமாக காயப்படுத்திவிடுகிறது. எனக்கு விமர்சனங்களையும், கருத்துக்களையும் எதிர்கொள்ள எப்போதும் தைரியமிருக்கிறது.

ஆனால், சில அரைவேக்காடுகள்அவதூறுகளை பரம்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்குகிறார்கள். அவர்களைப் பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கிறது. இந்த ஸ்ரேற்றஸ் பதிவில்தேர்தல்சிறப்பு பகுதிகள் இடம்பெற்றிருக்கிறன. அத்துடன் இசை, காதல், வாழ்வியல் என்று பலவிடயங்களையும் கலந்தே பதிவு வருகிறது.

குரல் தேடல்- நடனத் தேடல்என்று தொலைக்காட்சிகள் பல கடுப்படித்தாலும், எப்போதாவது சில அதியுச்ச திறமைகளையும் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்கள்! ‘அல்கா அஜித்தவிர்க்க முடியாத குரல் ஆளுமை!!

சில நேரங்களில் எங்களை ஆட்கொள்கிற மௌனமும் அழகுதான்!!

பாவம் பந்து வீச்சாளர்கள்! இருபதுக்கு20 கிரிக்கட் வந்தாலும் வந்திச்சு கைல், வோர்னர் மட்டுமில்ல எல்லாரும் 'சிக்ஸ்' அடிச்சு கடுப்படிங்கிறாங்கள்!! கிரிக்கட் இப்போதெல்லாம் வெறுக்குது!!!

நவராத்திரி- விஜயதசமிஎன்று தொடரும் பத்து நாள் சமயக் கிரிகைகளின் மீது நம்பிக்கையோ- ஆர்வமோ இல்லாவிட்டாலும், வீடுகளில் ஒரு மங்களகரமும்- மணக்க மணக்க அவல், சுண்டல் பலகாரங்கள் என்று சாப்பிடவும் முடிகிறது!!

நவராத்திரி கால பள்ளி நினைவுகளில் அவல்- கடலையைத் தாண்டி நாவற்பழத்துக்கு என்றைக்குமே இடமுண்டு! நாவற்பழத்துடனான நெருக்கத்தை சொல்ல என்னுடைய பள்ளிக்கால வெள்ளைச் சட்டைகள் போதும்!!

பிரபா கணேசனின் அரசியல் ஞானத்துக்கு என்ன நடந்தது? கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஆளும் தரப்பில் 3 தமிழ் உறுப்பினர்களை வெற்றிபெற வைக்கும் நோக்கில், அவர் நிறுத்திய வேட்பாளர்களில் ஒருவரைக் கூடவெற்றி பெற்றவர்கள்பட்டியலில் காணமுடியவில்லையே?!

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை! கடந்த முறையிலிருந்து 2 உறுப்பினர்களை அதிகமாக வென்று 6 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு, ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு பிரிந்து வந்தமை உள்ளிட்டவை இன்னும் அதிகமாக வாக்குக்களைப் பெற்றுத்தரும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனாலும், 2 ஆசனங்கள் அளவில் குறைவாகத் தான் பெற்றிருக்கிறார்கள்!!

தோட்டங்களில் வாழும் தமிழ்- முஸ்லிம் சிறுபான்மையினரால் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிகொழும்பு மாநகர சபையை கைபற்றியிருக்கிறது! தொடர் தோல்விகளிலிருந்து சிறு ஆறுதல் அளிக்கவும் சிறுபான்மை மக்களே .தே..வுக்கு தேவைப்பட்டிருக்கிறார்கள்! தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் கோத்தபாய ராஜபக்ஷ தொலைக்காட்சியில் தோன்றி 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் மக்களுக்கான வாக்குறுதிகளையும்- நகர அபிவிருத்தி திட்டங்களையும் (?) முன்வைத்திருந்தார். ஆனாலும், மக்கள் அவற்றை நிராகரித்துவிட்டதாகத் தான் தோன்றுகிறது!!

வாக்குச் சாவடியில் விரலில் கறுப்பு(நீல) மை தடவப்படும் போதே வாக்குரிமையுள்ள குடிமகன் என்கிற இறுமாப்பும்- திமிரும் மெல்லமாக குறைந்து போகின்றது!!

அட மீண்டும் நாளை ஜனநாயக கடமையை நிறைவேற்றியாக வேண்டும்! “தபால், தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, துண்டு, நேரில், மின்னஞ்சல், பேஸ்புக், செய்திஇப்படி இன்னும் இன்னும் பல வழிகளில் வந்து வாக்களிக்குமாறு கோரினார்கள் அரசியல்வாதிகள். இவர்களுக்காக இல்லாவிட்டாலும் என்னுடைய அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதற்காகவேனும் வாக்களிக்கவேண்டும்!!

அப்பிள்ஸ்டீவ் ஜொப்ஸின் மரணம் இந்த உலகத்தை பாதித்த அளவுக்கு என்னைப் பாதிக்கவில்லை. ஆனாலும், மரணங்களை என்னால் கொண்டாட முடியாது!!

உச்சந்தலையில் என்னை எண்ணிக் கொண்டு, உள்ளங்கால் வரை பின்னி பின்னிக்கொண்டு, முத்தம் தருகையில் மோகமான கிளி உதட்டை கடிச்சு விட்டதே": எப்போதுமேகவிஞர் வாலிக்கென்று தனித்துவமான வாலிப முறுக்கும்- கவித்துவமும் இருக்கத்தான் செய்கிறது!

உண்மைதான், எப்போதாவது எவரையாவது காரணமின்றி விரும்பவும்- வெறுக்கவும் மனதுக்குத் தெரிகிறது!

காந்தி….! எனக்கு சிறு ஆச்சரியக்குறியாக மட்டும் தான் இருக்கிறார். மற்றப்படி, அவர் போதித்தவை மீதும் - அவற்றின் உண்மைத்தன்மை மீதும் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை!!

இல்லை- வேண்டாம் என்று தவிர்க்க நினைத்தாலும் அந்த மயக்கும் குரலுக்கு மீண்டும் மீண்டும் அடிமையாகிப் போகிறேன்- நான்! ‘தேனில் குழைந்த வார்த்தைகள்என்று சொல்கிறோம் உண்மைதான் ஸ்ரேயா கோஷலின் குரலின் வழி வருகிற வார்த்தைகளில் தேன் வடிகிறது!!

இன்னொரு பெற்றோராகவும்- ஏற்றிவிடும் ஏணிகளாகவும்- தேவைப்படும் போது நண்பனாகவும் இருக்கும்ஆசிரியர்கள்பற்றி சில வரிகளுக்குள் எழுதிவிட நீண்ட நேரமாக முயற்சித்தும் முடியவில்லை! ஏனெனில், அவர்களைப் பற்றி எழுதவும்- சிலாகிக்கவும் ஏராளம் விடயங்கள் வரிசையில் நிற்கின்றன!!

சரியான ஆதாரங்களை முன்வைக்க திரணியற்று, போகிற போக்கில் மற்றவர்களின் மீதுஅவதூறுஎன்கிற சேற்றை வாரியிறைக்கும் சிலரின் மீது இப்போதெல்லாம் எனக்கு கோபம் வருவதில்லை. மாறாக அனுதாபம்தான் வந்து தொலைக்கிறது. ஏனெனில், அவர்களின்மன இறுக்கங்களைபல தருணங்களில் மற்றவர்களின் மீதான அவதூறுகளின் மூலம் தணித்துக்கொள்ள முனைகிறார்கள் என்பதால்!!

பட உதவி: நண்பி காயத்திரி

ஸ்ரேயா கோஷல்: இனிமையும் மயக்கமும் கிறக்கமும்!


சண்டியரே சண்டியரே ஆசை வச்சேன் உங்க மேல…’ என்று கமல்ஹாசனை நோக்கி அபிராமிவிருமாண்டிபடத்தில் பாடுவார். விருமாண்டியை என்னுடைய உயர்தர பரீட்சைக்கு தயாராகிய அந்தக் காலத்தில் திருட்டு வீடியோவில் பார்த்ததிலிருந்துசண்டியரே சண்டியரேஎன்று பாடிய உண்மையான குரலுக்கு ரசிகனாகிப் போனேன்.

ஆமா…! ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு ரசிகனாகிப் போனேன். பெண்களை பிடித்துப் போவது இயல்பு. அதுவும், அழகிய பெண்களை கொஞ்சம் அதிகம் பிடித்துவிடுகிறது. ஸ்ரேயா கோஷலைப் பிடிப்பதற்கு அழகு மட்டும் காரணமாகவில்லை. மயக்கம் தரும் குரலும், அந்தக் குரலின் வழி வருகிற தமிழும் அடிப்படையில் காரணமாகிப் போனது.

எனக்குத் தெரிந்து இப்போதெல்லாம் தமிழை தாய்மொழியாகக் கொண்ட பாடகிகள் கூட இவ்வளவு சரியாக- அழகாக உச்சரிப்பதில்லை. வங்காளத்தை தாய்மொழியாகக் கொண்ட ஸ்ரேயாவினால் தமிழை இவ்வளவு இயல்பாக உச்சரிக்க முடிகின்றது. ஸ்ரேயாவின், ஆரம்ப காலங்களில் சிறுசிறு வழுக்கள் இருந்தாலும் இப்போது வருகின்ற பாடல்களில் தமிழ் கொலைகளைக் காண முடியாது.

மேகமே மேகமேஎன்று பாலைவனச்சோலைக்காகப் பாடிய வாணி ஜெயராமின் குரலும், ‘மாலையில் யாரோ மனதோடு பேசஎன்று சத்திரியனுக்காகப் பாடிய ஸ்வர்ணலாதாவின் குரலுமே அதிகம் என்னை ஆட்கொண்டிருந்தது. ஆனால், அந்தக் குரல்களை மிக இலகுவாக முறியடித்து, இப்போது என்னை அதிகம் ஆட்கொண்ட குரலாக ஸ்ரோயாவின் மயக்கும் குரல் மாறிவிட்டது.

மொழியறிந்து கேட்கின்ற தமிழ் பாடல்களை விட ஸ்ரேயாவின் குரலில் சில ஹிந்திப்பாடல்கள் இன்னும் இன்னும் என்னை ரசிக்க வைத்தவை. ஷாருக்கானின்ரப்னே பனா டீ ஜோடி (கடவுளினால் ஆசிர்வதிக்கப்பட்ட ஜோடி)’யில் ஸ்ரேயாவின் குரலில் ஒலிக்கும் இறுதிப்பாடல் என்னைத் தொடர்ந்தும் நெகிழ வைப்பது. “நீ தான் என் சூரியன், என் நிழல். நான் உன்னில் கடவுளைக் காண்கிறேன்என்கிற பொருள் தரும் வரிகள் வரும். (இறுதியில் இந்தப்பாடலின் இணைப்பு)

லவ் யூ மிஸ்டர் கலாக்கார்என்கிற துஷார் கபூர் ஹீரோவாக நடித்திருக்கின்ற படத்தில் வரும்புரோ புரோ பாதல்….” என்கிற பாடலில் ஸ்ரேயாவின் குரல் மிக இயல்பாக ஒலிக்கும். அதிக இசைகோர்வைகள்- அதியுச்ச மெட்டமைப்பு இல்லை. எளிமையான பாடலில் அற்புதமான ரொமான்ஸ் வழிந்தோடும்படி பாடியிருப்பார். அதுபோல, குறிப்பிட்டுச் சொல்லும்படியான மற்றுமொரு பாடல் கேற் லவ் ஸ்ரோறியில் வரும்பஹாரா பஹாராஎன்கிற பாடல். துள்ளல் நிறைந்த உதவி இயக்குனர் இம்ரான்கானுக்கும்- அழகிய கலை இயக்குனர் சோனம்கபூருக்கும் இடையிலான காதலை போகிற போக்கில் இந்தப் பாடல் சொல்லும்.

தமிழில்; ஸ்ரேயாவின் குரலில் ஏஆர்.ரஹ்மானின் இசையில்சில்லுனு ஒரு காதல்படத்தில் ஒலிக்கும்முன்பே வா என் அன்பே வாவும், இசைஞானியின் இசையில்விருமாண்டியில் வரும்உன்விட இந்த உலகத்தில் ஒசந்தது ஏதுமில்லஎன்று கமலும்- அபிராமியும் குலாவும் பாடலும் மிகவும் பிடிக்கும். இப்போது, கலைஞரின்பொன்னர்- சங்கரில்இளையராஜாவின் இசையில் ஒலிக்கும்மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே தோழிஎன்று ஸ்ரேயா கிறங்கடிக்கிறார்.

தெற்காசியாவிலேயே அண்மையில் அதிகளவானவர்களை ஆட்கொண்ட பெண் குரல் என்றால் அது ஸ்ரேயா கோஷலினுடையதாகக் தான் இருக்கும். ஸ்ரேயாவின் விருதுகள்- வெற்றிகள் பற்றியெல்லாம் பேசுவது இந்த பதிவின் நோக்கமல்ல.

ஆனால், ஒரு குரலின் ஆளுமை ஒருவனை மயக்கவும்- கிறங்கவும் வைக்கும் ஆற்றலுள்ளது என்பதற்கு அண்மைக்காலத்தில் மிகச்சிறந்த உதாரணம் ஸ்ரேயா கோஷல். பெண்களை பிடிப்பது இயல்பு. அழகான பெண்களைப் பிடிப்பது மிக இயல்பு. அதுவும், இனிய குரலும் கொண்ட பெண்ணைப் பிடிப்பது மிக மிக இயல்பு! லவ் யூ ஸ்வீற் வொய்ஸ் ஸ்ரேயா!!