அதிகரிக்கும் ரீ.ராஜேந்தர்கள்! ரஹ்மான் என்கிற மந்திரம்!!
Posted On Friday, September 30, 2011 at at 9:43 AM by மருதமூரான்.
ராஜேந்தர் ஆகும் அரசியல்வாதிகள்!
இப்போது பலத்த நல்லல்- நையாண்டிக்கு இயக்குனர் ரீ.ராஜேந்தர் ஆளாகினாலும், தமிழ் சினிமாவில் அவரின் ஆதிக்கம் நிறைந்த காமலொன்று இருந்தது. அதுவும், தொடர்ச்சியாக வெள்ளி விழாப்படங்களை எடுத்தவர். பெண்களையும்- குடும்பங்களையும் திரையரங்குகளிற்குள் கட்டிப்போட்டவர்(?) என்ற வரலாற்று உண்மைகளை எல்லாம் மறுக்கவோ- மறக்கவோ முடியாது.
ஆனாலும், அவரின் வெள்ளிவிழா படங்களை இளைய தலைமுறையான நாங்கள் பார்க்கிற போது ‘கெக்கே பிக்கே’ என்று சிரிப்பு வருவதும் உண்மையே. அதுவும், அவரின் வசனங்களினாலேயே இப்போது அதிகம் நக்கலுக்கு உள்ளாகிறார். அப்படிப்பட்ட ரீ.ஆரின் அரசியல் பிரவேசமும் சிரிப்புக்களுடனும்- கோமாளிக் கோபங்களுடனும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சரி ஏன் இப்போது ரீ.ஆரைப்பற்றி நான் பேசவேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பற்றிக்கொண்டிருக்கிற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் போலவே, இலங்கையிலும் ஏற்கனவே பற்றிக்கொண்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் என்ற நெருப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதன் உச்சகட்டம் கொழும்பு, கல்கிசை- தெகிவளை மாநகர சபை உள்ளிட்ட இன்னும் சில உள்ளுராட்சி மன்றங்களின் நடைபெற இருக்கிறது.
இதில், கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மிலிந்த மொறகொட தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குழு, முஸம்மில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் குழு, மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் குழு என்ற மும்முனைப்போட்டி முளைத்திருக்கிறது. கொழும்பு மாநகரசபையில் எல்லைக்குள் வசிப்பவர்களில் 51 வீதமானவர்கள் தமிழ்மொழி பேசும் சிறுபான்மை மக்கள்.
ஆக, மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற சிறுபான்மை மக்களின் வாக்குக்களை பெற்றே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் மிலிந்த மொரகொட தலைமையிலான அரசாங்கத்தின் கூட்டணி சிறிய பெரும்பான்மையுடன் வெல்லும் வாய்ப்புக்கள் இருக்கிறது. ஆனாலும், தேர்தல்களுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும்- ஜனநாயக மக்கள் முன்னணியும் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் புதுசான விடயங்கள் ஏதாவது சாத்தியப்படலாம்.
இந்தநிலையில் நேற்று சில தேர்தல் சுவரொட்டிகளைப் பார்க்க நேர்ந்தது. அம்மாடி…! தமிழக அரசியல்வாதிகள் தோற்றப் போகும் அளவுக்கு புதிய சிந்தனைகளை (? ஹிஹிஹி) விதைத்து புதிய வாசகங்களை தேர்தல் சுவரொட்டிகளில் எழுதியிருக்கிறார்கள். ரீ.ஆர் எல்லாம் கிட்டவே நெருக்க முடியாத அளவுக்கு, எனக்கு இரவு கனவிலெல்லாம் அந்த வரிகள் வந்து பயமூட்ட ஆரம்பித்து விட்டன.
‘புதுயுகம், உதயமாகும் நாயகன், சமூகத் தொண்டன், எதற்கும் துணித்தவன், அஞ்சநெஞ்சன்’ என்ற சொற்களை அடங்கிய அந்த வரிகளைப் படிக்கும் போது அந்த வேட்பாளரின் மீது அபிமானம் வருவதற்குப் பதிலாக அனுதாபம் வருகிறது. அடப்பாவிகளா…! தேர்தல் சுவரொட்டிகளை வடிவமைத்த பின்னர் தொண்டரடிகள் அதனை வேட்பாளர்களிடம் காட்டுகிறார்களா இல்லையா? அதனை வாசிக்கிற பொழுது வேட்பாளர்களுக்கு சிரிப்பு வந்திருக்க வேண்டுமே?! என்ன துணிச்சலில் இதையெல்லாம் அனுமதித்திருக்கிறீர்கள்?!
ஜனநாயக சூழலில் யாருக்கம் தேர்தலில் நிற்கிற உரிமை இருக்கிறது. அதனை நான் எதிர்க்கவில்லை. ஆனால், கோமாளித்தனங்களை தேர்தல் சுவரொட்டிகளில் எழுதி உங்களின் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள் அரசியல்வாதிகளே!
ஏஆர்.ரஹ்மான் என்கிற மந்திர இசையின் ஆதீக்கம்!
“புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது. இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது. இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது. மனம் சூடான இடம் தேடி அலைகின்றது..” இது ‘ரோஜா’ படத்தில் காஸ்மிர் பனிகளுக்கிடையில் புதுமண (தேன்நிலவு கொண்டாடும் ஜோடிகள் என்றும் வைத்துக்கொள்ளலாம்) தம்பதிகளுக்கிடையிலான காதலையும்- காமத்தையும் சூழலுக்கேற்ப அந்த சில்லீட்டுடன் பாடல் முழுவதும் சொல்வியிருப்பார் வைரமுத்து.
“…இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது. மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…..” என்ற வரிகளில் தெறிக்கிற ஆணுக்கும்- பெண்ணுக்குடையிலான விரகதாபம் பாடல் முழுவதும் மிக நேர்த்தியான வரிகளில் தொடரும். ‘இரட்டை அர்த்தம்’ என்ற தொனியில் அந்த வரிகளை பார்க்கவே முடியாதளவுக்கு அழகியலும்- நேர்த்தியும்- காதலும் வழிந்தோடும்.
தமிழ் திரையிசையினை புதிய தளத்துக்கு கொண்டு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் வரவும் கூட ரோஜாவுடனேயே ஆரம்பிக்கின்றது. இசைக்கோர்ப்பு- அவ்வளவு பழக்கப்படாத பாடகர்- பாடகி என்று எல்லாவற்றிலும் புதுமை கலந்து இசை படைத்திருப்பார் ஏ.ஆர்.ஆர். விரும்பியோ- விரும்பாமலோ ரஹ்மான் என்கிற மந்திர இசையின் வருகையுடன் தமிழ் திரையிசை உலகளவில் வரவேற்புப்பெற ஆரம்பித்ததும் உண்மையே. பெரியளவு புதிய முயற்சிகள் இன்றி ஒரே வட்டத்துக்குள் இயங்கிய தமிழ்திரையிசையின் போக்கு சடுதியாக மாற்றம் பெற்றது ரஹ்மானின் வருகையின் பின்னரே!
இளையராஜா- வைரமுத்து கூட்டணிக்கு இருந்த வரவேற்பு அவர்களுக்கிடையிலான பிரிவின் பின்னர் யாருக்கும் வாய்க்கவில்லை. வைரமுத்து மொழிமாற்று படங்களுக்கே பாடல்கள் எழுதவேண்டிய கஸ்ரகாலமும் அதிகம் வாய்த்தது. ஆனாலும், ரோஜா மூலம் ரஹ்மானுடன் இணைந்து கொண்ட வைரமுத்து இலட்சங்களில் ஊதியம் பெற்று அணுகுவதற்கு சிரமாமாகவுள்ள முன்னணி பாடலாசிரியர் என்ற நிலையில் தொடர்கிறார். அப்படி தமிழ் திரையிசையில் புதிய வடிவங்களை புதுத்திய பாடல் இது. எனக்கு இந்தப் பாடல் மீது அளவு கடந்த காதல்!
மனித உழைப்பைக் களவாடும் ‘வலைப்பூக்கள்’ பற்றி!
Posted On Wednesday, September 28, 2011 at at 11:47 AM by மருதமூரான்.
20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற கணணியும், இணையமும் (Computer & Internet) தகவல் தொடர்பாடலில் புதிய வடிவங்களைப் புகுத்தியது. அதிலும், குறிப்பாக இணையத்தளங்களில் சமூக வலைத்தளங்கள், செய்தித்தளங்கள், வர்த்தகத் தளங்கள் என்று பலதரப்பட்ட வடிவங்களில் அவை வியாபித்து நிற்கின்றன.
செய்தி, தகவல், கருத்து, அனுபவம் என்று அனைத்து வகைப் பகிர்தல் முறைகளையும், அதற்கு கிடைக்கின்ற எதிர்வினைகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக எளிய வடிவத்தில் கொண்டு வந்தது வலைப்பூ (Blog). சுமார் பதின்நான்கு வருடங்களுக்குள்ளேயே, உலகளாவிய ரீதியில் வேகமாகவும், அதிக தாக்கத்துடனும் வளர்ந்து நிற்கிறது வலைப்பூ. கலை, கலாசாரம், அரசியல் என்று பலதரப்பட்ட தளங்களிலும் தகவல் பரிமாற்றியாகவும், கருத்துப்பகிர்தலுக்கான களமாகவும் வலைப்பூ வளர்ந்துள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்னர் வரை சமூக பொது விடயங்கள் தொடர்பில் கருத்துக் கூற வேண்டுமாயின் பிரதான ஊடகங்களை (அச்சு மற்றும் ஒளி- ஒலி) தங்கி நிற்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. சாதாரண ஒருவருக்கு அவற்றில் கருத்துக்களை வெளியிடுவது அல்லது மக்கள் முன் கொண்டு செல்வது மிகவும் சிரமமாக காரியமாகும். ஆனால், வலைப்பூக்களின் வருகை அதனை முற்றுமுழுதாக மாற்றி ஒவ்வொருவரும் குறித்த ஒரு விடயம் தொடர்பில் தனிப்பட்ட கருத்தினைத் தெரிவித்து மற்றவர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வடிவத்தை கொண்டு வந்தது.
ஒவ்வொருவரும் தனக்கென்று வலைப்பூக்களைப் பேணமுடியும். அதிலும், புதிய பதிவுகளை முதலில் இருக்குமாறும், கட்டுரைகள், கவிதைகள், அனுபவங்கள் என்று பல முறையில் வகைப்படுத்தல்களை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். அதுபோல, உங்களின் கற்பனை மற்றும் வடிவமைப்புத் திறனுக்கேற்ற வகையில் தளங்களின் (வலைப்பூ) வடிவங்களை அமைக்க முடியும். இவ்வாறு வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் அதிக சுதந்திரங்களை வலைப்பூக்கள் வழங்குகின்றன. இந்த மூலாதாரமே வலைப்பூக்களை உலகம் பூராகவும் துரிதமாக பிரபலப்படுத்தியது.
வலைப்பூவின் தோற்ற வடிவத்தின் ஆங்கிலப்பெயர் ப்ளொக் (Blog) என்பதாகும். ஆனாலும், ப்ளொக் என்ற சொல் வெப்ளொக் (Webblog) என்ற பதத்திலிருந்தே தோற்றம் பெற்றது. 1997 டிசம்பர் 17ஆம் திகதி ஜோர்ன் பெர்கெர் (John Barger) என்பவரே வலைப்பூவிற்கு ஆங்கிலத்தில் Webblog என்ற பெயரை சூட்டினார். அதனை, 1999 எப்ரல் மாதம் முதல் பீற்றர் மெர்ஹொல்ஸ் (Peter Merholz) முதன்முறையாக ப்ளொக் (Blog) என்று பயன்படுத்தத் தொடங்கினார். அதுவே, பின்னர் நிலைத்துவிட்டது.
அதுபோலவே, Blog எனும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் பெயர் ஒன்றைப் பெற விரும்பிய தமிழ் இணைய ஆர்வலர்களும், பாவனையாளர்களும் நீண்ட விவாதங்கள், கருத்து பரிமாற்றங்களுக்குப் பின்னர் ‘வலைப்பூ’ என்று பெயர் சூட்டினர். இதன்பின்னர் இன்றுவரையும் வலைப்பூ என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.
வலைப்பூ சேவையை ஸான்யா (Xanya) நிறுவனம் முதன்முதலாக 1996ஆம் ஆண்டில் வழங்கத் தொடங்கியது. 1997 காலப்பகுதியில் மேலும் சில நிறுவனங்கள் வலைப்பூவிற்கான இலவச இடவசதியை வழங்கின. இந்த நிறுவனங்களில் ஒன்று பிளாக்கர்ஸ்.கொம் (bloggers.com) எனும் பெயரில் வலைப்பூ அமைப்பதற்கான சேவையை இலவசமாக அளித்தது. பிளாக்கர்ஸ்.கொம் இணையப் பாவனையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதையடுத்து, கூகுள் (Google) நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் வலைப்பூ அமைப்பதற்கான சேவை கூகுள் பிளாக்கர்ஸ்.கொமினூடு வழங்கியது. இதன் பின்னரான காலப்பகுதியில் மற்றுமொரு இலவச வலைப்பூ வழங்குனராக வேர்ட்பிரஸ்.கொம் (wordpress) உருவெடுத்தது.
தற்போதைய நிலவரப்படி உலகம் பூராகவும் 133 மில்லியன் (13.3 கோடி) வலைப்பதிவர்கள் இருக்கின்றனர். இவர்களில் 48 வீதமானவர்கள் அமெரிக்கா (கனடா உள்ளிட்ட வட அமெரிக்க)விலிருந்து வலைப்பதிவுகளை மேற்கொள்கின்றனர். அடுத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து 26 வீதமானவர்களும், ஆசியாவிலிருந்து 10 வீதமானவர்களும், மற்றைய நாடுகளிலிருந்து 16 வீதமானவர்களும் வலைப்பதிகின்றனர். அதுபோல், வலைப்பதிவுகளை மேற்கொள்பவர்களில் மூன்றில் இரண்டு (2/3) வீதத்தினர் ஆண்கள். அத்துடன், உலகம் பூராகவுமுள்ள ஊடகவியலாளர்களில் 35 வீதத்தினர் தங்களுக்கென்று தனியான வலைப்பதிவுகளைப் பேணுகின்றனர்.
வலைப்பதிவுகளில் தனிப்பட்ட அனுபவங்களை எழுதுபவர்களே அதிகம். அடுத்த நிலையில், தொழிநுட்ப தகவல்களை பகிர்பவர்களும், செய்திகளைப் பகிர்பவர்களும் இருக்கின்றனர். இதற்கு அடுத்தடுத்த நிலையில், வர்த்தகம், இசை, சினிமா, விஞ்ஞானம், மதம், சூழலியல், விளையாட்டு, சுகாதாரம், போக்குவரத்து என்ற நிலையில் விடயங்கள் பகிரப்படுகின்றன.
அதுபோல, வலைப்பதிவுகளை மேற்கொள்பவர்களில் 20 வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பதிவுகளை இடுகின்றனர். 23 வீதமானவர்கள் வாரம் ஒருமுறையும், 27 வீதமானவர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறையும் பதிவுகளை மேற்கொள்கின்றனர்.
வலைப்பூக்களின் வருகை இணையப் பாவனையாளர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் செலுத்தும் தாக்கள் அதிகமானது. தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டு மற்றவர்களுடன் விவாதிக்க முடிவதால் ஆர்வத்துடன் வலைப்பதிவுகளை செய்கின்றனர். இதற்காக இணையப்பாவனையாளர்களில் அனேகர் குறிப்பிட்டளவு நேரத்தையும் நாளாந்தம் செலவிடுகின்றனர்.
சுருக்கமாகவும், துரிதமாகவும் எண்ணங்களை வெளியிட்டு எதிர்வினைகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளவதை பலரும் விரும்புகின்றனர். நின்று நிதானித்து அதிக சொற்களை உள்ளடக்கிய கட்டுரைகளையோ, தொகுப்புக்களையோ வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகின்ற நிறையில் வலைப்பூக்களின் வருகை மாற்றீடாக அமைகின்றது. அத்துடன், புதிய வடிவத்திலான எழுத்தியலை தோற்றுவித்துள்ளது.
இதனிடையே, யார் வேண்டுமானாலும் வலைப்பதிவுகளை மேற்கொள்பவராக இருக்க முடியும் என்பது சில தருணங்களில் முறையற்ற தகவல் பரிமாற்றத்துக்கும் வித்திட்டு விடுகின்றது. ஓவ்வொரு வலைப்பதிவாளரையும் கட்டுப்பாடுகளற்ற ஊடகவியலாளராகக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஊடகவியலாளரும் தங்களுடைய ஆசிரிய பீட மற்றும் ஊடகவியல் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டியிருக்கின்றது. ஆனால், வலைப்பதிவாளர்களுக்கு அந்த வரைமுறைகள் இல்லாது இருப்பதால்; முறையற்ற செயற்பாடுகளும் இடம்பெற்று விடுகின்றன.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஊடகவியலாளர்களில் பலர் வலைப்பதிவுகளில் எழுதியே வருமானத்தை ஈட்டுகின்றனர். இந்த நிலைமை ஆசிய நாடுகளிலும் தற்பொழுது சிறிது சிறிதாக அதிகரித்து வருகின்றது. வலைப்பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் மற்றவர்களுடன் கருத்துக்களை பகிர்வதுடன் மட்டுமின்றி வருமானத்தையும் ஈட்டிக்கொள்ள முடியும் என்ற நிலை அதிகரித்துள்ளதால் புதிதாக வலையுலகத்துக்குள் வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது!
(‘புதிய ஊடகம்’ என்ற தேடலின் பகுதியாகவே இந்தக் கட்டுரை என்னால் 2010இல் யாழ்தேவிக்காக தொகுக்கப்பட்டது. விக்கிபீடியா மற்றும் இன்ரக் தளங்களிலிருந்தும் தகவல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இதுவொரு மீள்பதிவு.)

