மீண்டும் ‘மங்காத்தா’ மோகம்! தமிழனின் மனநிலை!!
Posted On Wednesday, August 31, 2011 at at 10:19 AM by மருதமூரான்.அஜித்தின் 50வது படம், வெங்கட் பிரபுவின் வித்தியாசமான திரைக்கதை, தயாநிதி அழகிரியின் தயாரிப்பு என்று ‘மங்காத்தா’ ஆரம்பம் முதலே ஊடகங்களினாலும், ரசிகர்களினாலும் அதிகமாக பேசப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது. சில தடைகள்- தாமதங்களுக்குப் பிறகு நேற்று வெளிநாடுகளிலும், இன்று இந்தியாவிலும் வெளியாகியிருக்கிறது.
எப்போதுமே தமிழனின் மனநிலையை புரிந்து கொள்வது சிக்கலானது. சமூகத்தில் எவ்வளவு தீவிரமான பிரச்சினைகள் இருந்தாலும், அதனைத் தாண்டி ரஜினியும், விஜய்யும், அஜித்தும் பல தருணங்களில் தாக்கம் செலுத்துவார்கள். இதுவே, தமிழர்களைச் சார்ந்திருக்கிற அநேக ஊடகங்களின் நிலையும். பல தருணங்களில் என்ன விடயத்துக்காக ஆதாரிக்கின்றோம்- எதிர்க்கின்றோம் என்று தெரியாமலேயே ஒரு கூட்டம் போராட்டம் நடத்தும். அதுபோல, ஆர்ப்பரிக்கும்.
சாந்தன்- முருகன்- பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக கடந்த இரண்டு வாரமாக அநேக மக்கள் உண்மையான மனவுணர்வுடன் தங்களினால் முடிந்தளவுக்கு போராடினார்கள். இதற்காகவே, செங்கொடி என்கிற சகோதரி தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். (செங்கொடியின் முடிவை நான் என்றைக்கும் ஆதரிக்க மாட்டேன்.) இப்படி, பலரும் உணர்ச்சி வசப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், விஜய்யின் ‘வேலாயுதம்’ பாடல்கள் வெளியீடும், அஜித்தின் ‘மங்காத்தா’ பட வெளியீடும் கூட ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தியிருந்தன.
மூவரின் உயிரின் மதிப்பையும்- மங்காத்தாவின் வெளியீட்டையும் ஒரே மாதிரியாக நோக்கிய சிலரின் மனநிலையின் மீதுதான் எனக்கு கோபம். சராசரி சினிமா ரசிகனாக நான் என்றைக்கும் நல்ல படங்களை வரவேற்பேன். அது உண்மை. ஆனால், சமூகத்தின் மிகத்தீவிரமான விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற விடயத்தினையும்- ஒரு சினிமாவினையும் என்னால் என்றைக்கும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கவும் முடியாது. அதுபோல, அனுமதிக்கவும் முடியாது.
போராட்டத்தின் தன்மை- போக்கு- தீவிரம் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் போகிற போக்கில் தங்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்த முயல்பவர்களின் மீதுதான் தார்மீக கோபம் வந்து தொலைக்கிறது. அதுவும், அவர்கள் சிலவேளை வெளியிட்டுச் செல்லும் கருத்துக்கள் மிகவும் சிறுபிள்ளைத்தனமாகவும்- போலியாகவும் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் என்ன கருத்தாகினும் கூறலாம் என்கிற ஜனநாயக மரபை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அந்தக் கூற்றுக்கு மதிப்பளிக்கின்ற மாதிரியான கருத்துக்களை வெளியிடுவதுதானே உண்மையானது.
இதனிடையே, சில சமூக- இன அக்கறையாளர்களின் போராட்டம் வேறுமாதிரியானது. அஜித் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் என்கிற தேவையற்ற தகவலின் அடிப்படையில் ‘ஏகன்’ படம் வெளியான தருணம் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சிலரினால் முன்வைக்கப்பட்டது. அதுபோல, ‘வேட்டைக்காரன்’ வெளியான தருணத்தில் அந்தப்படத்தின் இசையமைப்பு பணியில் இலங்கையின் ஈராஜ் வீரரத்ன ஈடுபட்டிருந்தார் என்கிற காரணத்துக்கான புறக்கணிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், ஏகனுக்கும்- வேட்டைக்காரனுக்கும் எதிராக பேஸ்புக் மற்றும் வலைத்தளங்களில் தங்களின் எதிர்ப்புக்களை வெளியிட்டவர்களில் குறிப்பிட்டளவானோர் குறித்த படங்களை முதல் காட்சியில் பார்த்த வரலாறுகள் இருக்கின்றன. வேட்டைக்காரனையும்- ஏகனையும் எதிர்ப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் சந்தித்துள்ள பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது. இதனை பலரும் உணர்வதில்லை. (தங்களின் மேன்மையான இனவுணர்வை பொதுவெளியில் காட்டிவிட வேண்டும். ஆனால், நாங்கள் டீவிடீயில் படத்தினைப் பார்ப்போம்? என்பது வேறுகதை.)
சத்தியமாக என்னிடம் சொல்லிக்கொள்ள இருப்பதெல்லாம் ஒன்றுதான், சினிமாவை கொண்டாடுங்கள். அது தப்பில்லை. ஆனால், அதனையும் சமூகத்திலிருக்கிற தீவிரமான பிரச்சினைகளையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்காதீர்கள். இரண்டும் வேறுவேறானவை. சமூக அக்கறையாக இருக்கவேண்டும் என்று யாரையும் வற்புறுத்த முடியாது. அதுபோல, அனைத்து பொறுக்கித்தனங்களையும் பொறுத்துக் கொண்டிருக்கவும் முடியாது.
எப்போதுமே தமிழனின் மனநிலையப் புரிந்து கொள்வது மிகவும் சிரமமானது! என்னால் இன்று வரை அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை!!
சகோதரி செங்கொடி; நீ தவறான முன்னுதாரணம்!
Posted On Monday, August 29, 2011 at at 10:13 AM by மருதமூரான்.
செங்கொடி….!
சகோதரி உன்னுடைய பெயருக்கும், போர்க்குணத்துக்கும் இடையே நிறையத் தொடர்பிருக்கிறது. அதனை நிரூபிப்பதற்காக நீ கையாண்ட முறையே, இந்த கடிதத்தை எழுதத்தூண்டியது. இலங்கையின் ஏதோவொரு மூலையில் இருக்கிற எனக்கு, தமிழகத்தின் ஏதோவொரு தெருவில் வசித்த உன்னை நேற்று இரவு வரை யாரென்றே தெரியாது. ஆனாலும், உன்னைப் போல கோடிக்கணக்கான சகோதரிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்குண்டு.
ஏன் இப்படியொரு முடிவெடுத்தாய்? நானோ- மற்றவர்களோ இதனை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. உன்னுடைய முடிவு எனக்கு நிறைய கண்ணீரை வரவைக்கிறது என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ, அதனைத்தாண்டி உன் மீது அதிக கோபம் இருப்பதும் உண்மையே. உன்னுடைய தற்கொலை முடிவின் மூலம், மூன்று உயிர்கள் காப்பாற்றப்படும் என்று நம்பியிருக்கிறாய். அது நடக்கவேண்டும். அப்படி நடந்தாலும் கூட, அந்த மூவரினால் கூட உன்னுடைய இழப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும், அவர்களை இறுதிவரை குற்றவுணர்வுக்குள் தள்ளும்.
இப்போதெல்லாம் தவறான முன்னுதாரணங்களை பின்பற்றுவது வழமையாகிவிட்டது. முள்ளிவாய்க்கால் இறுதி காலங்களில் இழக்கப்பட்டுக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முத்துக்குமார் என்கிற சகோதரனும் இப்படியொரு தவறான முடிவெடுத்தார்.
முத்துக்குமாரின் அந்த முடிவு தமிழக அளவில் இந்திய- இலங்கை அரசுகளுக்கு எதிரான ஒரு அலையை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மை. ஆனாலும், அதனால் எந்தப்பயனும் விளைந்துவிடவில்லை என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. ஏழைப் பெற்றோர்களை தனிமையில் வாட விட்டு முத்துக்குமார் சென்றுவிட்டார். இன்னும் அந்தப்பெற்றோர் மகனின் இழப்பையும் சேர்த்து, ஏழைகளாகவே இருக்கின்றனர். அவர்கள் குறித்து யார் சிந்திக்கிறார்கள்?
‘ஒரு இனத்தின் மீதான உண்மையான அக்கறைக்கு முன்னால் பெற்றோர்- குடும்பத்தார் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது’ என்ற வாதம் சிலரினால் முன்வைக்கப்படலாம். ஆனால், அதனை எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ள முடியும்? ஒவ்வொருவரும் தாயையும் காப்பாற்றி- தன் இனத்தையும் காப்பாற்றுவதுதானே உண்மையான அக்கறையாக இருக்க முடியும். முத்துக்குமாரின், போர்க்குணமும்- தியாகமும் மிகப்பெரியதுதான். ஆனாலும், அவரின் அவசரமான தற்கொலை முடிவும் தவறான முன்னுதாரணமே.
சகோதரி செங்கொடி…! முத்துக்குமாரின் தவறான வழிகாட்டலை நீ ஏற்றுக்கொண்டதும் மிகப்பெரிய தவறு. ‘கொலைக்கு கொலை தீர்வே அல்ல’ என்று அநேகர் வாதாடிக்கொண்டிருக்கிற நிலையில், அந்த கொலைகளை நிறுத்த நீ தற்கொலை செய்து கொண்டதையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அஹிம்சை வழியிலான போராட்டங்களில் இப்படியான வன்முறை வழிகளை அனுமதிக்க முடியாதே. உன்னுடைய உயிர் உனக்கு பெரிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், உன்னுடைய பெற்றோருக்கும்- உறவினருக்கும்- நண்பர்களுக்கும்- ஏன் தூரத்திலிருக்கிற எனக்கும் கூட மிகவும் முக்கியமானது.
முருகன், சாந்தன்- பேரறிவாளன் ஆகியோரின் உயிர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ- அதேயளவுக்கு சகோதரி உன்னுடைய உயிரும் முக்கியமானது. நீ ஏன் இதனைப் புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டாய்? எங்களுக்கு நிறையவே வலிக்கிறது. ஆயிரக்கணக்கான உறவுகளின் இழப்புக்களைச் சந்தித்து இரண்டு வருடங்கள் கடந்து விடவில்லை. அதற்குள் உன்னைப்போன்றவர்களின் இழப்பையும் ஏற்றுக்கொள்ளச் செய்வது நியாயமா?
சத்தியமாக நீ சமூகத்துக்கான மிகமுக்கியமான போராளி. உன்னுடைய போர்க்குணத்தையும்- தியாகத்தையும் என்றைக்குமே மதிப்பேன். அதுபோல, நீயும் முத்துக்குமார் போன்று தவறான முன்னுதாரணம் என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இனியும் இப்படியான இழப்புக்கள் நிச்சயம் வேண்டாம். அது, யாருக்கும் நல்லதல்ல.
கண்ணீருடனும்- ஆதங்கத்துடனும்,
சகோதரன்,
புருஜோத்தமன் தங்கமயில்.
மரண தண்டனை: கமலுக்கு சல்யூட், காந்திதேசத்துக்கு குட்டு!
Posted On Saturday, August 27, 2011 at at 10:54 AM by மருதமூரான்.
மரண தண்டனைக்கு எதிரான தன்னுடைய கருத்தை நடிகர் கமல்ஹாசன் பலமாக சொல்ல முயன்ற படம் ‘விருமாண்டி’. ஆனாலும், அவரின் சீரற்ற திரைக்கதையால் ரசிகர்களிடம் அதிகளவில் சென்று சேரவில்லை. புதிய திரைக்கதையுத்தியை கையாள நினைப்பதுவும், அது சீரற்று போவதும் ஹேராம், விருமாண்டி என்று கமல் படங்களில் தொடர்கிறது. ‘விருமாண்டி’ கமலின் மனிதாபிமான சிந்தனைக்காக மட்டும் எப்போதும் பிடிக்கும்.
கமல் சொன்ன ‘கொலைக்கு- கொலை என்றைக்குமே தீர்வாக அமையாது. மன்னிப்பதே மிகப்பெரிய தண்டனை’ என்கிற விடயமே தற்போது மூன்று உயிர்களை காப்பாற்றுவதற்கு உடனடியாக தேவைப்படுகிறது.
சத்தியமாக சில விடயங்களை பேசுகின்ற போது அதில் வலியின் அளவு அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட மரண தண்டனை தொடர்பிலேயே எனக்கிருக்கிற எண்ணங்களை இந்தக் கட்டுரை பேசவிருக்கிறது. கொலை என்பது இயலாமையினால் கூட நிகழ்ந்துவிடக்கூடியது. ஆனால், மரண தண்டனை என்பது சரி- பிழைகளைத் தாண்டி திட்டமிட்டு நிகழ்த்தப்படுவது.
இன அழிப்பை அல்லது மனித இனத்துக்கு எதிரான எந்தப் பாரிய குற்றங்களைச் செய்தவனாகக் கூட இருக்கலாம். அவனை கொலை செய்து தண்டிப்பதை நான் என்றைக்குமே ஆதரிக்க மாட்டேன். அது (சில வேளை) என்னைக் கொலை செய்தவனாக இருந்தாலும் அவனை தூக்கிலிட்டு கொல்வதையோ- அவனுக்கு எதிராக மரணத்தை விதைப்பதையோ எதிர்க்கிறேன். இது நான் அடிப்படை மனிதன் என்பதற்காக ஆதாரம்.
குற்றங்களுக்கான தண்டனை குற்றவாளிகளை திருந்த வழிவகுக்க வேண்டுமே அன்றி மீண்டும் அதே குற்றங்களை செய்ய மற்றவர்களைத் தூண்டுவதாகவோ - அல்லது அதற்கு ஈடான வன்மங்களை மனதில் விதைப்பதாகவோ இருக்கக்கூடாது. இது பலரும் சொன்னதுதான். ஆனால், இதில் எவ்வளவு உண்மையிருக்கிறது. ஜனநாயக சமூகத்தின் உச்சம் ‘நீதித்துறை’ என்றாலும், அந்த நீதித்துறையும், சட்டமும் எப்போதுமே எல்லோருக்கும் சமமாக இருப்பதில்லை. (அல்லது இருக்க பலரினால் அனுமதிக்கப்படுவதில்லை) அதுவே, எளியவர்களுக்கு எதிராக பல தடவைகளில் நிகழ்த்தப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான நாளாக எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி மீண்டும் குறிக்கப்பட்டு விட்டது. அவர்கள் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சிறையில் ‘பல தடைவ மரண பயத்தை சந்தித்து’ அதிக பட்ச தண்டனையை அனுபவித்து விட்டபோதிலும் அவர்களை தூக்கிலிட இந்திய குடியரசு தலைவரும் அனுமதித்துவிட்டார்.
ஈழத்தமிழருக்கு எதிராக பெரிய கொடூரங்களை செய்ய ராஜிவ் காந்தி காரணமாக இருந்தார் என்கிற போதிலும் அவர் கொல்லப்பட்டதை என்றைக்கும் நான் நியாயப்படுத்தமாட்டேன். அதுபோல, ராஜிவின் கொலைக்கு காரணமானவர்கள் கொல்லப்படுவதையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான மரண தண்டனை தீர்ப்பு 15 வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்ட போதிலும், அவர்களின் கருணை மனு அதே 15 வருடங்களாக ஏன் ஜனாதிபதி மாளிகையில் கிடப்பில் போட்டப்பட்டது?! இடையிலே நான்கு ஜனாதிபதிகள் வந்து போனார்கள். காந்தி தேசத்தின் தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மரண தண்டனையை உறுதிப்படுத்தியிருக்கிறார். இதற்குப் பின்னால் நிறையவே வன்மமும்- பழிவாங்கலின் தீவிரமும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
பேரறிவாளன் குறிப்பிடுவது போல, குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளும்படி காவல்துறையினர் அவரை துன்புறுத்தியே கையெழுத்து வாங்கியிருந்தால் ‘ஒரு அப்பாவியின் உயிர் இலகுவாக பறிக்கப்படுவதற்கு’ அந்த காவல்துறை அதிகாரிகளும் காரணமாக இருப்பார்கள். எப்போதுமே, ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள பலரும் முயல்வார்கள். இந்த ‘ராஜ விசுவாசம்’ அப்பாவிகளை சாகடித்து வந்த வரலாறு நீண்டு செல்கிறது. அந்த வரலாற்றின் நீட்டியாக சிலவேளை பேரறிவாளனின் மரணமும் இருந்துவிடக்கூடாது.
நான் வளர்கிற காலத்தில் ‘காந்தி’ மிகப்பெரிய அஹிம்சாவாதியாகவும்- இந்தியா அதற்கு உதாணமாகவும் எனக்கு சொல்லப்பட்டு வந்தது. ஆனாலும், நான் சுயமாக சிந்திக்க ஆரம்பித்த காலத்தில் ‘காந்திதேசம்’ அஹிம்சையையோ- காந்தியத்தையோ போதிப்பதற்கு தகுதியாக நடந்துகொள்ளவில்லை. அதற்காக, மக்களை குறைகூறவுமில்லை. ஆட்சியாளர்கள் அப்போதுமே ஆட்சியாளர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரமே அடிநாதமாக இருக்கிறது. ஆக, காந்தி தேசமும் அதிகாரத்துக்குப் பின்னாலேயே நிற்கிறது.
விலங்குகளிலிருந்து தனக்கிருக்கின்ற ஆறாம் அறிவைக் கொண்டு வேறுபட்டு நாகரீகமடைந்த மனிதன் சமூக கட்டமைப்பையும்- சட்டத்தையும் வடிவமைத்தான். ஆனாலும், அவன் தன்னையும் விலங்கினம் என்பதை அடையாளப்படுத்துவதற்காக மரண தண்டனையையும்- பழிவாங்கும் உணர்ச்சியையும் வைத்துக்கொண்டான். மனிதாபிமானம்- மனித உரிமைகள் எல்லாம் எளியவர்களுக்கு இலகுவில் கிடைத்து விடுவதில்லை.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைச் சாகடித்து விடுவதன் மூலம் ராஜிவ் காந்தியின் கொலைக்கு தீர்வு எட்டப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தால், அது மிகப்பெரிய தவறு. வேணுமென்றால் பழிவாங்கிய திருப்தியை அது அவர்களுக்கு வழங்கலாம். ஆனால், மறுபக்கத்தில் பலரது மனங்களில் அதே வன்மத்தையும்- பழிவாங்கும் உணர்ச்சியையும் விதைத்துவிட்டே செல்லும். எந்தக் காலத்திலும் மரணம் சம்பந்தப்பட்டவரை திருத்தியதாக வரலாறுகள் இல்லை!!
Coffee Shop தேவதைகள்! திருடப்படும் தங்கம்!!
Posted On Friday, August 26, 2011 at at 10:54 AM by மருதமூரான்.நாள் பூராவும் சாப்பாட்டை மறந்திருக்க என்னால் முடிகிறது. ஆனால், காலையில் ஆரம்பித்து நான் தூங்கச் செல்கிற வரை Tea - Coffee குறைந்தது இரண்டு- மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருமுறையாவது கட்டாயம் வேண்டும். ‘பீர் தண்ணியினால் எங்களுக்கு தொப்பைதான் போடும். Coffeeயோட குடும்பம் நடத்துற உனக்கு 35 வயதுக்குள்ள சக்கரை வியாதி வரும் பார்” இப்படி என்னுடைய நண்பர்கள் என்னை சீண்டிக்கொண்டேயிருப்பார்கள். ஆனாலும், Tea- Coffee இல்லாவிட்டால் என்னால் வாழ்க்கை ஓட்டுவது ரொம்பவும் சிரமம்.
ஓரளவுக்கு தமிழ்ப்படுத்தினால் ‘கோப்பிக்கொட்டை கோப்பி கடை’ என்று பொருள்படும், கொழும்பிலே பெரிய வர்த்தக மற்றும் அரசியல் புள்ளிகள் வசிக்கிற பகுதியொன்றிலிருக்கிற அந்த Coffee Shopக்கும் எனக்குமான நெருக்கம் 2007இல் இருந்து ஒட்டிக்கொண்டது. அதிக நெருக்கடியில்லாத- இரைச்சலில்லாத பகுதி. நெடிய மரங்கள் கொண்ட கொழும்பின் அழகான பகுதியும் கூட.
எப்போதுமே செம ஸ்டைலான பெண்கள்- வெளிநாட்டுக்காரர்கள்-இலங்கையின் நடிக- நடிகையர்- அரசியல்வாதிகள் என்று பணம் அதிகமுள்ளவர்களை அந்த Coffee Shopல் காண முடியும். இருக்கைகளுக்கு இடையில் இருக்கிற தூரம்- மற்றவர்களுக்கு இடைஞ்சலில்லாத மணித்தியாலக்கணக்கான உரையாடல்களுக்கு மிகவும் உகந்த இடம். (அவளுடனான முதல் சந்திப்பும்- இறுதிச் சந்திப்பும் கூட அங்கேயே இடம்பெற்றது.) அதனால், குறித்த Coffee Shopன் மீது தவிர்க்க முடியாத பந்தமொன்று இருக்கிறது.
இரண்டு கப்பச்சீனோவும்- இரண்டு சொக்கிளேட் கேக் துண்டுகளும் 1500 ரூபாய். பண விடயத்தில் குறித்த கடை கையை அதிகமாகக் கடிப்பது உண்மைதான். ஆனாலும், சந்திப்புக்களுக்கு மிகவும் உகந்த இடம். இலண்டனிலிருந்து வருகை தந்த பால்ய கால நண்பனை சில நாட்களுக்கு முன்னர் அங்கு சந்தித்தேன். நிறையப் பேசினோம். அழகான- பணக்காரப் பெண்கள் பலரும் வந்து போனார்கள் தங்களுடைய நண்பர்களுடன் அல்லது உறவுக்காரருடன்.
ஆனாலும், அன்று காலை தனியார் வங்கியொன்றுக்கு கொடுக்கல்- வாங்கல்களைச் செய்யச் சென்றிருந்தேன். அங்கு நண்பியொருத்தி ‘கடன்- அடகு’ப் பிரிவில் வேலை செய்கிறாள். பெண்களின் கூட்டமே அந்தப் பிரிவிலும் அதிகம் இருந்தது. நண்பியிடம் கேட்டேன், ‘உங்கட வங்கியில இவ்வளவு பேருக்கு கடன் கொடுக்கிறார்களா என்று?’ அவள் ‘இல்லை இல்லை’ என்று உடனடியாக மறுத்து, ‘இவர்களில் அநேகர் அடகு வைக்க வந்தவர்கள்’ என்று கூறினாள்.
நானும் அதனை அவ்வளவு சாட்டை செய்யவில்லை. வட்டிக்கடையிலும், Coffee Shopலும் அதிகளவில் பெண்கள் கூடியிருக்கிறார்கள். நாட்டின் வாழ்க்கைத்தரம்- பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் படுபயங்கரமாக மாறி வருகின்றன. பணவீக்கம்- பொருட்களின் அபரிமிதமான விலையுயர்வு என்று மத்தியதர மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டே வருகின்றனர். எனினும், குறிப்பிட்டளவான மேல்தட்டு மக்களுக்கு பொருளாதார சுமைகளே வருவதில்லை. அவர்களின் அத்தியாவசிய பொருட்களான கார்கள் உள்ளிட்ட அதிநவீன பொருட்களின் விலை குறைவடையும், பாணின் விரை அதிகரிப்பு அவர்களை என்றைக்கும் பாதிப்பதேயில்லை.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தும் 6- 7 வீதமாக அதிகரித்து வருவதாக மத்திய வங்கி அறிக்கையிடுகிறது. இந்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் குறிப்பிடுவது எதனை? 1994ஆம் ஆண்டு 5 ரூபாய்க்கு பாண் வாங்கி சாப்பிட்டவர்கள், 2011இல் 60 ரூபாய்க்கு பாண் வாங்குகின்றனர் என்பதாலா? அல்லது, தொலைபேசிகள்- அலைபேசிகள் பாவனை அதிகரித்துள்ளதை வைத்தா?
இலங்கையின் 80 வீதமான மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. 2000ல் மூன்று துண்டு பாண் சாப்பிட்டவர், 2010இல் இரண்டு துண்டு பாணுக்கு மாறிவிட்டார். ஆனால், மற்றைய 20 வீதத்தினரின் வாழ்க்கைத்தரம் மேலும் மேலும் அதிகரித்தே செல்கிறது. குறித்த 20 வீதத்தினாரின் வாழ்க்கை தர அபிவிருத்தியை வைத்து நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் எப்படி அறிக்கையிடுவது?!
இலங்கையில் 25 சதம் முதல் 5000 ரூபாய் வரை நாணயங்கள் தொடர்ந்தும் அச்சிடப்படுகின்றன. புதிததாக அச்சிடப்படும் பணத்துக்கு சமமான தங்கத்தையோ- சொத்தையோ திறைசேரி கையிருப்பில் வைப்பதில்லை. மாறாக தொடர்;ந்தும் பணத்தாள்களை அச்சிட்டு நாட்டின் பணவீக்கத்தை பாரியளவில் அதிகரித்து விடுகின்றனர். விளைவு, பொருட்களின் விலை வானளவில் அதிகரிக்கின்றது. சாதாரண மக்களினால் வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடிவதில்லை.
குருவி சேர்ப்பது போல சேர்த்து வாங்கிய நகைகளை வட்டிக் கடைகளிலும்- வங்களிலும் சாதாரண மக்கள் அடகு வைக்கின்றனர். அவற்றில் 40 வீதமானவை மீள எடுக்கப்படுவதே இல்லை. இப்படிப்பட்ட இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்றைக்கும் எனக்கு மெய்சிலிர்பையே தருகிறது!!
கலைஞர் வழியில் விஜய்?!
Posted On Thursday, August 25, 2011 at at 2:03 PM by மருதமூரான்.
மீண்டும் நடிகர் விஜய் பற்றி பேசுகிறேன். விஜய்யை எனக்கு ‘கில்லி’ படத்தில் பிடித்திருந்தது. மாஸ் ஹீரோவாக அவரை நிலைநிறுத்திய படமும் அதுதான். கில்லியின் வருகையினால்தான் சுறா, வேட்டைக்காரன், வில்லு வகையறாக்களையும் தமிழ் ரசிகர்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. மீண்டும் காவலன் மூலம் ஏதோ நம்பிக்கை தந்தார். ஆனாலும், அவரின் போராட்டங்கள் பயத்தையும் தருகின்றன.
புரட்சி, போராட்டம், உண்ணாவிரதம் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே அண்மைக்காலமாக ஒருவித எரிச்சலே மேலிடுகிறது. எப்போதுமே மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும், உரிமைகளையும் முன்வைத்தே போராட்டங்களும், புரட்சிகளும் தோற்றம் பெறும். ஆனால், இப்போதெல்லாம் உண்மையான போராட்டங்களையும், புரட்சிகளையும் காணுவது மிகவும் அரிதாகிப் போய்விட்டது.
உண்ணாவிரத போராட்டமென்றால் காந்தியும், திலீபனுமே எனக்கு ஞாபகத்துக்கு வருவார்கள். வெள்ளையரின் ஆட்சிக்கெதிராக அஹிம்சை வழியில் போராடிய காந்தி ஞாபகத்து வருவது இயல்புதான். ஆனாலும், அவரைத் தாண்டி உண்ணாவிரதமென்றால் திலீபனே எனக்கு அதிகம் நினைவில் வருவார். ஏனெனில், அஹிம்சை போதித்த காந்தி தேசத்திடமே, அஹிம்சை வழியில் போராடி உயிர் நீத்தவர் திலீபன்.
(திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பின்னால் நிறைய அரசியல் இருக்கின்றது. ஆனாலும், ‘அந்தப் போராட்டத்தில் மிகப்பெரிய அர்ப்பணிப்பும், அடங்கமறுக்கின்ற போராட்ட குணமும் இருந்தது’ என்பதை என்னால் என்றைக்கும் மறுக்கவோ- விட்டுக்கொடுக்கவோ முடியாது.)
உண்ணாவிரதப் போராட்டமென்றால் என்ன? அதற்கான அடிப்படை தகுதிநிலை என்ன? அதனை கடைப்பிடிப்பவர் கொண்டிருக்க வேண்டிய மனவுறுதி? இவையெல்லாவற்றையும் காந்தி, திலீபன்; மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டங்களிலிருந்து கற்றுக்கொண்டதைக் காட்டிலும், கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் உண்ணாவிரதமே எனக்கு கற்பித்தது. ஆகவே, கலைஞருக்கு நன்றி!
ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் இறுதிக்காலங்களில், மனைவி தயாளு அம்மாள் தலைமாட்டிலும், துணைவி இராஜாத்தியம்மாள் கால்மாட்டிலும் அமர்த்திருக்க கலைஞர் மூன்று மணித்தியாலங்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினை என்றைக்கும் வரலாறு மறக்காது. மறக்க விடவும் கூடாது. சரி விடயத்துக்கு வருவோம்.
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யும் ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று மாலை அன்னா ஹசாரேயை சந்தித்து, உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கிறார் என்கிற செய்தி தமிழக நாளேடுகள், இணையத்தளங்களில் பரவலாக காண முடிந்தது. அர்ப்பணிப்பான போராட்ட குணத்தை நான் என்றைக்குமே வரவேற்பேன். அதுவே, தேவையானதும் கூட.
எனினும், மக்களை ஏமாற்றுகின்ற- போலி ஜனநாயக அக்கறை யாருக்கும் நல்லதல்ல. ஊழலுக்கு எதிராக விஜய் போராடுவதை நான் எதிர்க்கவில்லை. அது அவரின் உரிமை. ஆனால், அது கலைஞரின் உண்ணாவிரதம் மாதிரி இல்லாமல் இருந்தால் சரி. அதுதவிரவும், மக்களை மாங்காய் மடையர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அவர்கள் உங்கள் பக்கம் ஆப்பை திருப்புகின்ற நாளும் தொலைவில் இல்லை. ஆகவே, உண்மையாக போராடுங்கள். அதுவே போராட்டத்துக்கும்- உங்களுக்கும் நல்லது விஜய்.
அரசியல் எல்லோருக்கும் பொதுவானது. விஜய் அரசியலுக்கு வருவதையோ, நாளை கட்சி ஆரம்பிப்பதையோ எதிர்க்கவில்லை. ஆனால், அது கேலிக்கூத்தாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நிறைய கற்றுக்கொள்ளுங்கள். எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. ஏனெனில், எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலம் வேறு, விஜய் வாழும் காலம் வேறு.
விஜய் அவர்களே….! உங்களின் ஈழத்தமிழர்கள் மீதான அக்கறையும்(?), தமிழக மீனவர்கள் மீதான அக்கறையும்(?) எனக்கும்- உலகத்துக்கும் நிறைய செய்திகளைச் சொல்லியிருக்கின்றது. பார்க்கலாம் நீங்கள் ஹீரோவா- சீரோவா என்று!!
கௌதம் மேனனின் ‘ஜெசி’: கொஞ்சம் காதல் பற்றி!
Posted On Wednesday, August 24, 2011 at at 1:03 PM by மருதமூரான்.ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் இருக்கிற ஈர்ப்புக்கும், தேவைக்கும் ‘காதல்’ என்று அழகாக வர்ணம் பூசி பயணிக்கிறது உலகு. பலர் புனிதமாகவும், சிலர் வெறுப்பாகவும் சித்தரிக்கிற ‘காதல்’ தொடர்பில் என்னுடைய நிலைப்பாடு இதுதான். அதுபோல, காதல் என்றைக்குமே புதிதாகவும், பூரணமாக விளங்க முடியாததாகவும் இருக்கிறது.
சில பெண்களைப் பார்த்ததும் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதாக உணர்ந்திருக்கிறேன். (தமிழ்ச் சினிமாவின் தாக்கம் தான் இந்த வார்த்தைப் பிரயோகமும்) நீங்களும் உணர்திருப்பீர்கள். உலகத்திலுள்ள 99 வீதமான ஆண்கள் இதற்கு உட்பட்டிருப்பார்கள். அவ்வாறு இல்லையென்றால், தயங்காமல் வைத்தியரை நாடவும். பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் பட்டாம்பூச்சி எனக்குள்ளும் அவ்வப்போது பறந்திருக்கிறது. இப்போதும் பறக்கிறது சில வரைமுறைகளுடன். இனம்புரியாத மகிழ்வை அந்த தருணங்கள் தந்திருக்கின்றன. தருகின்றன.
அவ்வாறான மகிழ்வை, மணிரத்தினம் படங்களில் வருகின்ற காதல் காட்சிகள் அடிக்கடி தந்திருக்கின்றன. இப்போது கௌதம் வாசுதேவ் மேனனின் படங்களில் வருகின்ற காதல் காட்சிகளும் தருகின்றன. காதல் என்ற உணர்ச்சியை சினிமா ரசிகனின் மனதுக்குள் அவ்வளவு அழகாக தங்கிவிடச் செய்கின்ற வித்தையை மணிரத்தினமும், கௌதம் மேனனும் பெற்றிருக்கிறார்கள் என்பது என்னுடைய வாதம். (அவர்களின் அரசியல் மற்றும் சமூகவியல் பார்வைகளில் எனக்கு நிறையவே மாற்றுக்கருத்துக்கள் உண்டு. ஆக, அவை தொடர்பில் பேசவில்லை.)
மணிரத்தினத்தின் படங்கள் மீதான ஈடுபாடு அல்லது ஆர்வம் ‘பம்பாய்’ படம் தொலைக்காட்சியொன்றில் பார்த்த காலத்திலிருந்து தொற்றிக்கொண்டது. குஜராத் மதக்கலவரங்களின் கோரத்தை அல்லது பாதிப்பை பம்பாய் படத்தில் மணிரத்தினம் கையாண்டிருந்தாலும், என்னை அதிகம் பாதித்தது அரவிந்த்சாமிக்கும், மனிசா கொய்ரலாவுக்குமிடையிலான காதல் காட்சிகளே. இவ்வாறான பாதிப்பை பலரும் உணர்திருப்பீர்கள். என்னுடைய பதின்ம வயதின் ஆரம்ப காலங்களில் பம்பாய் படத்தில் வருகிற மனிசா மாதிரியான பெண்களின் மீது ஆரம்பித்த ஈர்ப்பு- இப்போதும் தொடர்கிறது.
‘மௌன ராகம்’ கார்த்திக்- ரேவதி, ‘நாயகன்’ கமல்- சரண்யா, ‘தளபதி’ ரஜினி- சோபனா, ‘ரோஜா’ அரவிந்த்சாமி- மதுபாலா, ‘பம்பாய்’ அரவிந்த்சாமி- மனிசா கொய்ராலா, ‘உயிரே’ ஷாருக்கான்- மனிசா கொய்ராலா மற்றும் ‘அலைபாயுதே’ மாதவன்- ஷாலினி என்று மணிரத்தினத்தின் படங்களின் மீதான காதல் காட்சிகளை நான் அதிகம் ரசிக்கிறேன்.
அதுவும், பம்பாய் படத்தில் ஆரம்ப காதல் காட்சிகளை டி.வி.டி தேயும் அளவுக்கு பார்த்திருக்கிறேன். ஏனோ அந்தக் காட்சிகள் மீதான என்னுடைய ரசிப்புத்தன்மை குறையவேயில்லை. மணிரத்தினத்தின் அனேக படங்களில் பிரதான கதைக்களம் வேறானதாக இருக்கின்றபோதிலும், காதல் காட்சிகள் அவ்வளவு அழகுணர்ச்சி பொருந்தியதாக இருக்கின்றன. அண்மைய ‘ராவணன்’ பயங்கர கடுப்பேத்திய படம்.
கிட்டத்தட்ட மணிரத்தினத்தின் படங்களில் வருகின்ற காதல் காட்சிகள் தருகின்ற மகிழ்வை கௌதம் மேனனின் படங்களின் காதல் காட்சிகளும் தருகின்றன. கௌதம் மேனனின் படங்களை நான் காதல் காட்சிகளுக்காகவே பார்க்க ஆர்வம் காட்டுவதுண்டு. ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ படங்களில் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அதீத வன்முறைக் காட்சிகள் வந்து போகும்.
ஆனால், அந்தப் படங்களில் வருகின்ற காதல் காட்சிகள் அவ்வளவு அழகானதாய் இருக்கும். வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்- கமலினி முஹர்ஜி சந்திக்கின்ற தருணத்திலேயே கமல் காதலைச் சொல்லுவார். அந்தக் காட்சியில் போலியான பாவங்கள் இன்றி அவ்வளவு இயல்பாகவும் இரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். அதுபோலவே, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவுக்கும்- சிம்ரனுக்கும் இடையிலான காதல் காட்சிகளும்.
‘மின்னலே’ மாதவன்- ரிமா, ‘காக்க காக்க’ சூர்யா- ஜோதிகா, ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா- சமீரா தற்போது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்பு- திரிஷா என்று குறித்த படங்களில் வருகின்ற காதல் காட்சிகள் மனதுக்குள் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கின்றன. வசனங்களில் அதிக ஆங்கில வாடை அடித்தாலும் எங்களில் வாழ்வியலை விட்டு கொஞ்சம் விலகியிருந்தாலும் எம்மை காதல் காட்சிகளில் ஒன்றிக்க வைப்பதில் கௌதம் மேனனும் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு சாட்சி அவரின் படங்களுக்காக இளைஞர்- இளைஞிகளின் கூட்டமே.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் ஏனோ அதிகம் என்னை பாதித்த- மனதுக்குள் மிகவும் ஆக்கிரமிப்பைச் செய்த படம். கொஞ்சம் என்னுடைய சொந்த அனுபவத்தையும் தொட்டுச் சென்றது. சிம்பு என்கிற நடிகர் மீது எனக்கு என்றைக்குமே அபிமானம் இருந்ததில்லை. ஆனாலும், சிம்புவுக்கும் நடிக்கத் தெரியும் என்று உணர்த்திய படம் அது.
படம் முழுவதிலும் சிம்பு என்ற நடிகரைத் தேட வேண்டியிருந்தது. ‘கார்த்திக்’ என்ற பாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக பொருந்திப்போயிருந்தார் நடிகர் சிம்பு. அதுபோலவே திரிஷாவும் அளவுக்கு மிறிய அலட்டல்கள் இல்லாமல் ‘ஜெசி’ என்ற பாத்திரத்தில் பக்கத்து வீட்டுப்பெண் (பக்கத்து வீட்டுப் பெண் கனடாவுக்;கு போய் பல மாதம்) போல இயல்பாக இருந்தார்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இடைவேளைக்கு பின்னராக காட்சிகள் திரும்பத்திருப்ப வருவது அலுப்பூட்டத்தான் செய்தன. அதனையும் கௌதம் மேனன் சரியாக கையாண்டிருந்தால், தமிழ்ச் சினிமாவில் வந்த நல்ல ரசிக்கக்கூடிய காதல் படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயாவும் முன்னணியில் இருந்திருக்கும்.
(இதனிடையே, கௌதம் வாசுதேவ் மேனனுக்கு அமெரிக்கா குறித்த பிரமிப்பு தொடர்ந்தும் இருக்கின்றது என்பதை வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அமெரிக்காவை உயர்ச்சியின் குறியீடாகவோ, அந்தஸ்தின் உயர்வாகவே அவர் கருதுவதாக படுகிறது.)
சிலர் கருதலாம், கௌதம் மேனனின் படங்களில் வருகின்ற காதல் காட்சிகளை விட அருமையான காதல் காட்சிகள் பல படங்களில் வருகின்றது என்று. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், காதலை அவ்வளவு அழகாக, ஒளிப்பதிவின் தரத்துடன் அண்மைக்காலத்தில் தொடர்ந்தும் தருவது கௌதம் வாசுதேவ் மேனன் என்பது என்னுடைய கருத்து.
நானும் காதலித்திருக்கலாம் என்று (அல்லது என்னுடைய காதல் காலங்களையும் மீண்டும்) உணர்த்திய தருணங்களை மணிரத்தினம் மற்றும் கௌதம் மேனனின் படங்களில் வருகின்ற காதல் காட்சிகள் தந்திருக்கின்றன. இது யாருக்கும் சொல்லாத உண்மை. காதல் என்றைக்குமே புதிதாகவும், பூரணமாக விளங்க முடியாததாகவும் இருக்கிறது!!
(2010 ஏப்பிரல் மாதத்தில் எழுதிய பதிவு- சில புதிய சேர்கைகளுடன் மீள்பதிவாக இங்கு. ஈரலிப்பான இன்றைய காலை காதல் பற்றிப் பேசத் தூண்டியது.)
கடாபி: இறுதி நாட்களில் முந்நாள் புரட்சிக்காரன்!
Posted On Tuesday, August 23, 2011 at at 10:13 AM by மருதமூரான்.புரட்சியும், சர்வாதிகாரமும் எதிரெதிர் துருவங்கள். ஆனாலும், சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடி, மக்களின் அபிமானம் பெற்ற புரட்சியாளர்களில் குறிப்பிட்டளவானோர் தங்களையும் மக்கள் விரோத ஆட்சியாளர்களாக வடிவமைத்து விடுகின்றனர். இதற்கு அண்மைக்காலத்தின் பொருத்தமான உதாரணம் லிபியாவின் மொம்மர் முஹமட் கடாபி.
கடாபி என்கிற 27 வயதேயான உயர்ந்து வளர்ந்த துடிப்பு மிக்க இராணுவ அதிகாரியின் பேச்சுக்களை 1969ன் லிபியாவின் பெரும்பான்மை மக்கள் வேதவாக்காக எடுதுக்கொண்டனர். வீதிகளில் இலட்சக்காணக்கான இளைஞர்களும்- யுவதிகளும் கடாபியின் பேச்சைக் கேட்க ‘மிகப்பெரிய இசைக்கலைஞனின் தீவிர விசிறிகள்’ போல கூடினர். கொண்டாடினர். எப்போதுமே புரட்சிக்கும் ஆக்ரோசத்துக்கும் இளைஞர்களே உதாரணங்கள். அதுவே, இன்றைக்கு 42 வருடங்களுக்கு முன்னர் லிபியாவிலும் நடந்தது.
ஆனால், மக்களினால் கொண்டாடப்பட்ட- தங்களின் உரிமைகாக்க வந்த தூதனான அறியப்பட்ட கடாபியினை 10 வருடங்களுக்குள்ளேயே வெறுக்கும் மனநிலைக்கு லிபியாவின் மக்கள் மெல்ல மெல்ல தள்ளப்பட்டனர். ஆனாலும், மேற்கு நாடுகளை மூர்க்கமாக எதிர்க்கின்ற கடாபியின் மனநிலை மக்களினை மறைமுகமாக கட்டி வைத்திருந்தது.
மக்களின் அமோக ஆதரவுடன் வருகின்ற ஆட்சியாளர்களே அதிக தருணங்களில் அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் விடுகிறார்கள். அதுதவிரவும், பல வருடங்களுக்கு மேலாக நீடிக்கின்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை இயல்பாகவே மக்களுக்கு வந்துவிடுறது. இது, அனைத்துப் பிராந்தியங்களிலும் சகஜமானது. மக்கள் விரும்பியோ- விரும்பாமலோ மாற்றத்தினை அடிக்கடி எதிர்பார்க்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் நான்கு தசாப்தங்களைக் கடந்த ஆட்சியாளருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவது ஒன்றும் புதியதல்ல. ஆனாலும், அந்தக் கிளர்ச்சிக்குப் பின்னால் பிராந்திய அரசியலும், மேற்கு நாடுகளில் ஏதேச்சியதிகாரமும் அளவு கடந்து தாக்கம் செலுத்துகின்றன. மத்திய கிழக்கு உள்ளிட்ட எண்ணை வள நாடுகளில் தங்களின் வல்லாதிக்கத்தை நிறுவ முயல்கிற நாடுகள் தங்களின் ஊடக பலத்தின் மூலம் அங்கு நடைபெறுகின்ற மக்கள் போராட்டங்களை அளவுக்கு அதினமாகவே பெருப்பித்தே காட்டுகின்றன.
அண்மைய புரட்சிக்குப் பின்னரான எகிப்தின் தற்போதைய நிலை என்ன? புதிய அரசாங்கம் அல்லது ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆட்சியை நோக்கியா பயணப்படுகிறார்கள்? அப்படியாயின், ஏன் மீண்டும் ஹைரோவில் புரட்சியாளர்கள் தொடர்ந்தும் தரித்திருந்து போராடுகிறார்கள்? தற்போது ஹைரோவில் நடைபெறும் போராட்டங்களை ஏன் மேற்கு ஊடகங்கள் காண்பிப்பதேயில்லை? கொஸ்னி முபாரக்கிற்கு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையிலேயே, அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஏன் துரிதப்படுத்தப்பட்டு நடைபெறுகின்றன? அவை, ஏன் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஓளிபரப்பப்படுகின்றன? இவற்றுக்கான கேள்விகளுக்கு விடைகளைத் தேடிச் செல்லுங்கள். இந்த போராட்டங்களுக்கு பின்னாலிருக்கிற மிகப்பெரிய சூழ்ச்சியும்- அரசியலும் புலம்படும். அதுவே, மத்திய கிழக்கு பிராந்தியம் பூராவும் வியாபித்து செல்கிறது.
எகிப்தின் முபாரக்கோ, லிபியாவின் கடாபியோ மக்களின் மனங்களை இறுதிக்காலங்களில் வென்ற தலைவர்கள் இல்லை. அவர்களின் ஆரம்பம் எவ்வளவு வரவேற்பைப் பெற்றிருந்ததோ, அதனைவிட பலமடங்கு எதிர்ப்பை இறுதிக்காலங்கள் பெற்றிருக்கின்றன. புரட்சிக்கும்- சர்வாதிகாரத்துக்கும் தன்னுடைய இறுதிக்கணங்களை எண்ணும் மொம்மர் கடாபியும், முபாரக்கும் அண்மைக்காலத்தின் சிறந்த உதாரணங்கள். மற்றுமொரு கடாபி லிபியாவுக்கோ, உலகத்துக்கோ தேவையில்லை.
இதனிடையே, சர்வாதிகாரத்துக்கு எதிராக தங்களின் உயிர்களைக் கொடுத்து போராடி வருகின்ற மக்களின் வியர்வையிலும்- உதிரத்திலும் தொடர்ச்சியாக பல புல்லுருவிகள் மேற்கு நாடுகளின் கைப்பிள்ளைகளாக மாறி விசத்தை தெளித்துவிடுகின்றனர். அப்படிப்பட்ட விசம் கலக்கப்படாத மக்களின் போராட்டத்தை நான் என்றைக்குமே வரவேற்கிறேன். அதுவே, எல்லோருக்கும் தேவையானதும் கூட!!
கே.பாலசந்தர்: பெருப்பிக்கப்பட்ட நீர்க்குமிழி!
Posted On Friday, August 19, 2011 at at 1:34 PM by மருதமூரான்.பாலசந்தர்! என்கிற பெயரைக் கேட்டலே, ‘ரஜினி எனும் வசூல் சக்கரவர்த்தியினை இந்தியச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்’ என்பதே முதலில் நினைவுக்கு வரும். அதுவும், ‘தில்லுமுல்லு’ படத்தில், பூந்தோட்டத்தில் தண்ணியடித்துக் கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனைப் பார்த்து, ரஜினி சொல்லும் ‘ஏய் தோட்டக்காரா’ என்கிற காட்சிக்கு என்றுமே பரமரசிகன். ரஜனி என்கிற நடிகனின் மற்றுமொரு பரிமானத்தைச் காட்டிய படம் அது.
சுமார் 50 வருடங்களாக தமிழ் சினிமாவிலிருக்கின்ற முக்கிய இயக்குனர், தயாரிப்பாளர் கே.பாலசந்தர். அதுவும், இந்தியாவின் முக்கிய இயக்குனர்கள் வரிசையில் இவருக்கும் இடமுண்டு. பாலசந்தர் இயக்கத்தில் நான் முதலில் பார்த்த படம் கல்கி. அதுவும், உயர்தரப் பரீட்சைகள் எழுதிவிட்டு இருந்த 2004 காலப்பகுதியில் கேபிள் தொலைக்காட்சியொன்றில் பார்த்தேன். கல்கி படம் பார்த்த கணத்திலிருந்து பாலசந்தர் மீது ஏதோவொரு ஈர்ப்பு.
பின்னரான காலத்தில் அவரின் மாஸ்டர்பீஸ் என்று சொல்லப்படுகின்ற சிந்துபைரவி உள்ளிட்ட தில்லுமுல்லு, பார்த்தாலே பரவசம், பொய், அவள் ஒரு தொடர்கதை, நீர்க்குமிழி, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி என்று பல படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனாலும், ‘தில்லு முல்லு’ என்கிற படத்தைத் தவிர மற்றப்படங்களின் மீது எனக்கு தொடர்ச்சியான ஈர்ப்பு இருந்ததில்லை. ‘கல்கி’ துணிந்து முக்கிய விடயத்தை பேசியது என்கிற அளவுடன் பின்னராக காலத்தில் நின்றுகொண்டது.
பாலசந்தரின் முதல் படம் நீர்க்குமிழி. நாகேஸ் என்கிற சிறந்த நடிகரை முக்கிய பாத்திரமாகக் கொண்டு இயக்கப்பட்டது. அதுவும், மனித உணர்வுகளுக்கிடையில் இருக்கின்ற சிக்கல்கள் பற்றி பேசிய படம். தமிழ் சினிமாவின் போக்கில் முக்கிய மாறுதல்களை ஏற்படுத்திய படம். அந்த படத்தில் ஆரம்பித்த மத்தியதர வர்க்க மக்களின் சிக்கல்களை (குறிப்பாக மனித உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைப்) பேசிய பாலசந்தர் தன்னுடைய இறுதிப்படம் வரை அதனையே அதிகமாகப் பேசினார்.
இருகோடுகள் சௌகார் ஜனாகி, அவள் ஒரு தொடர்கதை சுஜாதா தொடங்கி சிந்துபைரவி சுகாசினி ஊடாக சஹானா (சிந்து பைரவி- பகுதி 2) நெடுந்தொடர் சஹானா பாத்திரம் வரை அவருடைய அநேக படைப்புக்களில் அசட்டுத்துணிச்சலுள்ள அல்லது துருத்திக்கொண்டு தெரிகிற பெண்களே முக்கிய பாத்திரங்களாக இருந்திருக்கின்றனர். விதிவிலக்குகள் அவ்வப்போது உண்டு.
உடல்மொழி தொடக்கம் உரையாடல்கள் வரை அவருடைய முக்கிய பெண் பாத்திரங்களை சமூகத்தில் அவ்வளவாகக் காணமுடியாது. அப்படிக் காணவேண்டுமாயினும் 1000த்தில், அல்லது 10000த்தில் ஒருவராகவே இருப்பார்கள். ஹீரோக்களையே பிரதானமாகக் கொண்ட சினிமாவுலகில் பெண்களையும் பிரதானமாக்கி படமெடுத்தவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். ஆனால், அந்தப் பாத்திரங்கள் அதிக தடவைகளில் எம்மால் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவைகளாகவே இருந்தன. அவரின் அண்மைக்கால ‘கல்கி’ பாத்திரம் வரை. அதனை, அவரே ஏற்றுக்கொண்டிருந்தார்.
சிக்கலான மனித உறவுகளைப் பேசியதன் மூலமே பாலசந்தர் கொண்டாடப்பட்டார். இயக்குனர் சிறீதாருக்குப் பின்னர் சடுதியாக ரசிகர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நட்சத்திர அந்தஸ்த்து கொடுக்கப்பட்ட இயக்குனர் பாலசந்தர். ஆனாலும், அவரின் பாத்திரங்களின் வடிவமைப்பில் தெரிந்த அளவுக்கு அதிகமான அசட்டுத்தனம் அல்லது துணிச்சல் இப்போது இந்த தலைமுறையிலிருக்கிற என்னால்கூட ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
(அந்தப் பாத்திரங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதனால், பெண்களுக்கு எதிரானவன் என்கிற வாதத்தை முன்வைப்பீர்கள். ஆனால், அது என்னுடைய பிரச்சினை இல்லை. ஏனெனில், பெண்களின் உரிமைகளையும்- சுதந்திரத்தையும் அவரின் படங்கள் அவ்வளவு பேசியதாக எனக்கு ஞாபகமில்லை. ஏனெனில், அது தமிழ் ஹீரோயிசத்துக்கு மாற்றீடாக பெண் பாத்திரங்களைப் பேசியது என்பது மட்டுமே யதார்த்தம்.)
தற்போதைய தொலைக்காட்சி நாடகங்களின் முன்னோடி கே. பாலசந்தர். அதுவும், தற்போது தொலைக்காட்சிகளில் கோலொச்சும் பெண் பாத்திரங்களை 30, 35 வருடங்களுக்கு முன்னரே பெரிய திரையில் காட்டி மத்தியதர மக்களின் அபிமானம் பெற்றவர். அதுதவிரவும், அவரின் படங்களின் வருகின்ற 2ம் நிலைப் பாத்திரங்கள் அளவுக்கு அதிகமான கழிவிரக்கத்தை கோருவனவாகவே அமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாத்திரங்கள் மீது எப்படியாவது ரசிகர்களுக்கு ஒரு இரக்கம் வந்துவிட வேண்டும். இதுவும், அவரின் இறுதிப்படங்கள் வரை தொடர்ந்தது.
தமிழ் சினிமாவின் ஒரே மாதிரியான கலர் கதை சொல்லலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை சிறிதருக்கும் பின்னர் வந்த பாலசந்தருக்கும் உண்டு. அதன்பின்னரான காலங்களில் கிராமங்களைக் காட்டிய பாரதிராஜாவும், புரட்சி பேசிய எஸ்ஏ.சந்திரசேகரும், தேசியம் பேசிய மணிரத்தினமும், ஊழல் பேசிய சங்கரும் என்று அந்த தளம் விரிந்து சென்றது. உதிரிப்பூக்கள் மகேந்திரன், மூன்றாம்பிறை பாலுமகேந்திரா உள்ளிட்டோர் வேறுதளங்களில் அற்புதமான படைப்புக்களைத் தந்தவர்கள்.
கே.பாலசந்தர் ரஜினி, கமல், நாகேஸ், சுஜாதா, ரஹ்மான், பிரகாஸ்ராஜ் என்று துருவ நட்சத்திரங்களை உருவாக்க ஏதோவொரு விதத்தில் காரணமாக இருந்தார். ஆனாலும், அவரின் அநேக படைப்புக்கள் ஒரே வட்டத்துக்குள் சுற்றி வந்ததாகவே தெரிகிறது. அது, தலைமுறை இடைவெளியின் விளைவாகக் கூட இருக்கலாம். அவரின் பாத்திரங்கள் பேசிய அரசியலும்- சோசலிசமும், முதலாளித்துவமும் மிகவும் சிக்கலானது.
எனினும், புதிய இயக்குனர்களையும்- படைப்பாளிகளையும் கையை அகல விரித்து வரவேற்று பாராட்டுகின்ற மனப்பாங்கு கே. பாலசந்தரின் மீதான மதிப்பை அதிகரித்தே வந்திருக்கிறது. 2010ஆம் வருடத்துக்கான ‘தாதாசாகெப் பால்கே’ விருது அவருக்கு வழங்கப்பட்டதை நானும் வரவேற்கிறேன். ஏனெனில், அவரின் படைப்புக்கள் மீதான விமர்சனங்களைத் தாண்டி, சுமார் 50 வருடங்களாக ஒரேதுறையில் இயங்குகின்ற அவரின் அர்ப்பணிப்புக்காக!!
ஜெயலலிதா என்கிற ஆச்சரியக்குறி!
Posted On Wednesday, August 17, 2011 at at 1:42 PM by மருதமூரான்.ஜெயலலிதா என்ற பெயரைக் கேட்டவுடனேயே எனக்கு ஞாபகம் வருவது குங்குமம்- செம்மஞ்சம்- சிவப்பு போன்ற கண்ணைக்குத்துகின்ற நிறத்திலான ஆடைகளில் எம்.ஜி.ஆருடன் ஆடிப்பாடும் காதல் பாடல்கள். அதுவும், கேபிள் தொலைக்காட்சிகளின் வரவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா, சிவாஜி- சரோஜாதேவி பாடல்கள் இல்லாமல் இரவு நேரங்கள் அநேகருக்கு போவதேயில்லை. சில பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.
பெண்கள் என்றாலே நளினமானவர்கள்- மென்மையானவர்கள் என்கிற மேம்போக்கான பார்வையை ஆணாதிக்க சமூகம் வேணுமென்றே திணித்து வந்திருக்கிறது. அதுவும், அவர்களுக்கான உரிமையை எந்தக்காலத்திலும் வழங்குவதை தவிர்த்து வந்திருக்கிறது. ஆனால், உண்மையிலேயே பெண்களிடமிருக்கிற துணிச்சலும், வேகமும் பல தருணங்களில் ஆண்களிடமே இருப்பதில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்திரா காந்தி, மார்க்கிரட் தட்சர் என்கிற பெயர்களைக் கேட்டாலே பலருக்கு பிரமிப்பே மிஞ்சி நிற்கிறது. அதுவும், இவர்களின் அதிரடியான முடிவுகள் சில தருணங்களில் பயங்கரமானது. சிறிமாவின் ஆட்சிக்கால இலங்கையை சிறிமாவே பிற்காலத்தில் விரும்பியிருக்கமாட்டார். அதுபோல, தன்னை வளர்ந்து விட்டவர்களையே ‘மீசா’வில் தள்ளிய இந்திரா காந்தியின் அசட்டுத்துணிச்சலும், இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்குமளவுக்கு பெயரெடுத்த மார்க்கிரட் தட்சரும் மறக்கப்பட முடியாதவர்கள்.
அதுபோல, நடிகையாகவிருந்து தமிழக அரசியலில் மறக்கமுடியாதளவுக்கு வளர்ந்த ஜெயலலிதாவும் துணிச்சலான பெண்தான். ‘மறக்கமுடியாத’ என்ற சொல்லுக்குள் அவரின் ஆரம்ப கால திரைப்பட வாழ்க்கை, எம்.ஜி.ஆருடனான நெருக்கம், சவால்களை முறியடித்து முதல்வரானது, முதல்வராகி செய்த ஆடம்பரங்களும்-ஊழல்களும், சட்டசபைக்குள் அவர் தி.மு.க.வினால் அசிங்கப்படுத்தப்பட்டது, கலைஞரை நடுராத்தியில் குண்டுக்கட்டாக கைது செய்தது, விடுதலைப் புலிகளை கடைசி வரை எதிர்த்தது, ஒரேயிரவில் இலட்சக்கணக்கான ஏழைத்தொழிலாளர்களின் தொழிலைப் பறித்தது. ‘போரென்றால் மக்கள் கொல்லப்படுவார்கள்’ என்ற தத்துவவத்தை சொன்னது. இப்படி பலதும் இருக்கின்றன.
அண்மைய நாட்களில் ஜெயலலிதாவின் ஈழ அக்கறையை(?) ஆதரித்தும், எதிர்த்தும் பல பதிவுகள் வந்திருக்கின்றன. அது, பலரது எண்ணங்களைச் சொன்னது. ஜெயலலிதாவின் ஈழத்தமிழர்களின் மீதான அக்கறையை நான், 1994களில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரதுங்கவின் தமிழர்கள் மீதான அக்கறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இதுபலருக்கு பிழையாகக் கூட படலாம். ஆனாலும், அவர்களின் மனநிலையில் அப்படியொரு ஒற்றுமையிருப்பதாகவே எனக்குப்படுகிறது.
1990களின் ஆரம்பத்தில் இலங்கையின் சமாதான தேவதையாக வலம் வந்தவர் சந்திரிக்கா குமரதுங்க. சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன மக்கள் முன்னணியை ஆட்சியைப்பிடிக்க வைத்தவர். ஜனாதிபதியானவர். சிங்கள மக்களின் ஆதரவு மட்டுமல்ல தமிழ்- முஸ்லிம் மக்களின் குறிப்பிட்டளவான ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்தவர்.
ஆனாலும், அதற்குப் பின்னராக வரலாறுகள் தமிழர்களுக்கு பல படிப்பினைகளைக் கொடுத்தது. 1994களில் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தின் மீதான இராணுவ படையெடுப்பும், அதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்- யுவதிகளின் காணாமல் போனமையும் குறிப்பிடக்கூடியன. (தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவு முள்ளிவாய்க்காலுக்குள் எழுதப்படுவதற்கான முதலாவது அத்தியாயம் 1994ஆம் ஆண்டு சமதானப் பேச்சுக்களின் போது எழுதப்பட்டது.)
யாருக்கும் வளைந்து கொடுக்காத மனநிலையுடனேயே சந்திரிக்கா தன்னுடைய ஆட்சிக்காலம் முழுவதும் செயற்பட்டார். லஷ்மன் கதிர்காமரை இலண்டனிலிருந்து அழைத்துவந்து வெளிநாட்டு அமைச்சராக்கியதன் மூலம் சர்வதேச ரீதியிலும் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பெருமையை சந்திரிக்கா கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில் மக்கள் மீதான வன்முறையும்- தாக்குதல்களும்கூட குறைவின்றி நடைபெற்றன. ஆனாலும், அவரின் அண்மைக்கால மனநிலை மாற்றங்கள் சிந்திக்க வைப்பதற்குப் பதில் சிரிக்க வைக்கின்றன. அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், தமிழர்கள் மீதான பழைய பாசம் பற்றிக் கொண்டிருக்கிறது.
அதுபோலவே, ராஜிவ் காந்தியின் கொலையுடன் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக முடிவுகளை எந்தவித சமரசமுமின்றி எடுத்து வந்தவர் ஜெயலலிதா. ‘முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம் வரை’ ஈழத் தமிழர்களின் மீது அக்கறையின்றியிருந்த ஜெயலலிதாவுக்கு எப்படி, 2009 மே 19க்குப் பின்னர் அப்படியொரு பாசமும்- அக்கறையும் ஒட்டிக்கொண்டது. விடுதலைப் புலிகளை அவர் எதிர்த்தமை தொடர்பில் எனக்கு பெரிய கருத்துக்கள் எதுவுமில்லை. ஆனால், ஈழத்தமிழர்களை ஜெயலலிதா ஓரக்கண்ணால்கூட பார்க்கத் தயாராக இருக்கவில்லை. அது என்றைக்குமே உறுத்தலான விடயம்.
அப்படியிருந்த ஜெயலலிதாவின் மனநிலை மாற்றத்துக்கு யார் காரணம்?. அதன் பின்னணி என்ன? என்றெல்லாம் பல ஈழத்தமிழர்கள் அதுவும் புலம்பெயர் சமூகம் யோசிப்பதேயில்லை. ஏனெனில், அவர்களுக்கு தங்களை நட்டாற்றில் விட்டவர்களை ஏதாவது ரூபத்தில் சீண்டிப்பார்க்க வேண்டும். அதுவும், உடனடியாக நடந்துவிட வேண்டும். அதற்காக தங்களின் மீது அளவுகடந்த அக்கிரமங்களை செய்தவர்களைக்கூட மறந்து மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள். சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரித்தது முதல், அண்மைக்கால சந்திரிக்காவை கொண்டாடுவது வரை அது தொடர்கிறது.
அதுபோலத்தான், இறுதி மோதல்களின் போது தமிழக முதல்வர் கலைஞர் அதனை நிறுத்துவதற்கு ஒன்றுமே செய்யாமல் தங்களை தோற்கடித்துவிட்டார். எனவே, கலைஞரின் தோல்வியை கொண்டாடுவோம். அத்துடன், கலைஞர் மீதான கோபம் கலைந்து விட்டது. அதுபோல, கலைஞரைத் தோற்கடிக்க ஜெயலலிதாவால் முடிந்தது. அதனால், ஒருநாளில் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்கள் பலரும் கொண்டாடத் தயாரானார்கள்.
இந்த கொண்டாட்ட மனநிலையை உணர்ந்து கொண்ட ஜெயலலிதாவும் ஈழத்தமிழர்கள் மீதான திடீர் பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறார். மஹிந்த சகோதரர்களுக்கு எதிராக செயற்படுவதுபோல காட்டிக்கொள்கிறார். அறிக்கை விடுகிறார். பொருளாதாரத் தடையை விதிக்க கோருகிறார். இதன்மூலம், தமிழக மக்களின் ஆதரவை தக்க வைக்க முடியும் என்று நம்புகிறார். அதுவே, தொடர்கிறது.
ஈழத்தமிழர்களில் அநேகர் அற்ப சலுகைகளுக்காக துணைபோனவர்கள் இல்லைத்தான். ஆனாலும், போலி வார்த்தைகளை நம்பி மோசம் போனவர்கள் என்பதை மறுக்கவே முடியாது. ஏனெனில், அதற்கு நூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாறு எங்களிடத்தில் உண்டு. ஆகவே, மீண்டுமொரு முறை பாசாங்கு வார்த்தைகளை நம்பி நட்டாற்றில் நிற்க தயாராகிறார்கள்.
தனிப்பட்ட ரீதியில் ஜெயலலிதா ஜெயராமின் துணிச்சல் எனக்கு என்றைக்குமே பிடித்தமானது. ஆனால், ஈழத்தமிழர்களின் மீதான திடீர் பாசத்தை என்னால் நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஜெயலலிதா என்றைக்குமே எனக்கு ஆச்சரியக்குறியாகவே இருக்கிறார்!!
வன்புணர்ச்சி: சபிக்கப்பட்ட தேவதைகளின் வாக்குமூலம்!!
Posted On Monday, August 15, 2011 at at 9:53 AM by மருதமூரான்.“எங்கள் வகுப்பின் முதல் மூன்று மாணவிகளுக்குள் நானும் ஒருத்தி. நாளைக்கு கணிதப்பரீட்சை. எனக்கு அவ்வளவா விளங்காத தேற்றங்களையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டு 10 மணிக்கெல்லாம் படுத்துவிட்டேன். காலையில் சீக்கிரம் எழவேண்டும்” இப்படி நினைத்துக் கொண்டு தூங்கிப்போனேன். நான் காவேரி. வடக்கு- கிழக்கு இலங்கையில் பிறந்தவள்.
எல்லோருக்கும் விடிகிற காலை பல செய்திகளைச் சொல்லும். எனக்கும் எங்கள் ஊரவர்க்கும் அது பயங்கரமான விடியலாக இருந்தது. இன்று நான் எனக்கு அறிமுகமேயில்லாத மேற்கு நாடொன்றில் இருக்கிறேன். ஆனாலும், 1980களின் ஆரம்பத்தில் என்னுடைய 14 வயதில் நான் ‘ஒரு இனத்தின் மீதான வன்மத்தை தீர்க்க வக்கிரத்துடன் அலைபவர்களின் இச்சைக்கு ஆளாக்கப்பட்டேன்.’
இது, ஒரு இனத்தின்- சமூகத்தின் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகின்ற எந்தவொரு நாட்டிலும், பகுதியிலும் நடந்திருக்கலாம். இலங்கை, இந்தியா, தீமோர் தீவுக்கூட்டங்கள் என்று எல்லா இடங்களிலும் இதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு.
எல்லா மனிதனுள்ளும் அதிபயங்கர வன்மங்கள் அடங்கிக் கிடக்கிறது. வன்மத்தை அடக்கியாளுகின்ற ஆறறிவு(?) விலங்கையே மனிதன் என்று அடையாளப்படுத்துகின்றோம். ஆனாலும், சில மனித மனங்களில் புதைந்து கிடக்கிற வன்மங்கள் கிளர்ந்தெழும்போதே அடக்குமுறையும், அதிகாரமும் தோற்றம் பெறுகின்றன.
தன்னுடைய ஆளுகைக்குள் சகலமும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றவன் அதற்காக, தன்னை சார்ந்திருக்கிறவர்களின் உதவியுடன் அநேக தருணங்களில் மற்றவர்களை தோற்க்கடிக்க முயல்கிறான். அது, அதிக தருணங்களில் பாரிய மனித அழிவுகளையும், இனச்சிதைவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
யூதர்களின் மீதான வெறுப்பு ஹிட்லருக்கு அவர்களை முற்றுமுழுதாக அழித்தொழிக்க வேண்டும் என்ற நிலைக்கு இட்டுச் சென்றது. அதுபோல, ஒரு இனத்தின் மீதான வெறுப்பு சிலருக்கு அந்த இனத்தை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுவரை தொடர்கிறது. அதில், சில பயங்கர மூளைகள் தேர்ந்தெடுக்கின்ற வழியே வன்புணர்வு (‘கற்பழிப்பு’ இந்த வார்த்தைப் பிரயோகத்தில் எனக்கு உடன்பாடு இல்லை).
ஒருவன் மீதான பழிவாங்கலின் உச்சம் ‘கொலை’. ஆனால், கொலையை தாண்டிய உச்சமே ‘வன்புணர்வு’. கொலை சில நொடிகளில் நிகழ்ந்துவிடக்கூடியது. தொடர்ச்சியான சித்திரவதைகளுடனான கொலைகளை நினைத்தாலே நடுக்கம் வரும். ஒரு மனிதனுக்கு சித்திரவதை என்பது தொடர்ச்சியாக மரண பயத்தைக் காட்டுவதாகும். ஆனாலும், ‘வன்புணர்ச்சி’ என்பது அதனையும் தாண்டியது.
ஒரு இனத்தை தோற்கடித்து தங்களின் வெற்றியை நிலைநாட்ட உலகம் பூராவும் காலம் காலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறைதான் வன்புணர்ச்சி. இந்த வன்புணர்ச்சியில் எந்தவித பாலியல் உணர்ச்சிக்கும் இடமில்லை. மாறாக, எதிரியின் பிறப்புறுப்பில் தங்களுடைய வெற்றியை எழுதிய அகங்காரம். தாங்கள் எதைச் செய்தாலும் யாரும் கேட்க முடியாது என்கிற வெறி. ஒரு இனத்தின் தோற்றவாயை கேவலப்படுத்திய வீராப்பு. இவை மட்டுமே ஏஞ்சியிருக்கின்றன.
கொலைகளைக்கூட மனது இலகுவில் மறந்து விடும். ஆனால், வன்புணர்ச்சிக்கு ஆளாகி உயிருடன் இருக்கின்ற மனத்தில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அணைப்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. வாழ்க்கை பூராவும் தொடர்ந்து நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்கிற நினைப்பைத் தொடரச் செய்துவிடும்.
தன்னுடைய சகோதரி மீதான வன்புணர்ச்சியைக் கண்டு எந்த அண்ணனாலும் பொறுத்துப் போக முடியாது. இது இயல்பானது. ஆனாலும், உயிர் பயத்தினால் வாய் மூடி மௌனியாக இருப்பதுவும் பல இடங்களில் நடந்து விடுகின்றது. ஆனால், தன் சகோதரி வன்புணர்ச்சிக்கு ஆளாகியது தெரிந்தும் ‘அதனை மறுத்து, அப்படி ஒன்றுமே நடக்கவில்லை’ என்று எதிரிகளுடன் சேர்ந்து குரல் கொடுப்பவன் வன்புணர்வாளனை விடவும் கொடியவன். அவனை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
1800களில் அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த ஆபிரிக்க பெண்கள் வெள்ளையின தகப்பனாலும், மகனாலும் வன்புணர்ச்சிக்கு ஆளாகியது போல, 1960களுக்குப் பின்னர் வடமேற்கு மற்றும் காஸ்மிர் எல்லையோர இந்தியப் பெண்கள் இந்திய இராணுவத்தினால் வேற்று கிரகவாசிகள் போல நினைத்து வன்புணர்ச்சி செய்யப்பட்டதும், 1985க்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களை காக்க வந்தோம் என்று கூறிய இந்திய இராணுவத்தினரால் தாயும், மகளும் கணவனுக்கும்- மகனுக்கும் முன்னால் வண்புணர்ச்சிக்கு ஆளானதும் கொடிய வரலாறுகள். இந்த வரலாற்றின் நீட்சி இன்னும் தொடர்கிறது.
இவையெல்லாம் அதிக தருணங்களில் ஆட்சியாளர்களினால் மூடி மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. அதுதவிரவும், அந்த ஆட்சியாளர்களில் இறுமாப்புடனான பதில்களைக் காணும் போது, ஏனோ இரத்தம் கொதிக்கின்றது. ஆனாலும், என்ன செய்துவிட முடியும். இப்படியொரு பதிவை எழுதுவதைத் தவிர. எப்போதாவது, ஆப்படித்தவனுக்கே ஆப்பு விழுகின்றபோது மனது கொஞ்சம் ஆறுதலடைவது உண்மைதான். ஏனெனில், நானும் சாதாரண ஆசாபாசங்களுக்கு உட்பட்ட மனிதன்தான்!!
அஜித்தை காப்பாற்றுமா மங்காத்தா? :ஜோக்கர்களாக எதிர்க்கட்சிகள்?!
Posted On Thursday, August 11, 2011 at at 5:36 PM by மருதமூரான்.
மங்காத்தா மோகம்!
மீசை தாடி இல்லாமல் ரவுடி ஹீரோவைக்கூட மிகவும் ஸ்ரைலிஷாக ஏ.ஆர்.முருகதாஸ் காட்டிய படம் தீனா. எனக்கு நடிகர் அஜித்தின் படங்களில் மிகவும் பிடித்த படமும் இதுதான். சண்டைக்காட்சிகளில் அப்படியொரு அனலும், காதல் காட்சிகளில் வழிந்தோடும் ரொமான்ஸ்சும் இன்றைக்கும் தீனாவை விரும்ப காரணங்கள்.
அஜித் என்கிற நல்ல நடிகர் மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பு இருந்ததில்லை. ஆனாலும், தீனாவும், வரலாறும் அஜித்தின் நடிப்புக்கு நல்ல சான்றுகள். அதுவும், ‘வரலாறு’ படத்தில் தகப்பன் அஜித்- கனிகாவை கெடுத்துவிட்டு நடந்து வரும் காட்சியின் போது அந்த பெண்மை கலந்த நளினத்துக்குள்ளும் அப்படியொரு ஆக்ரோசம் தெறிக்கும். அஜித் என்னை ஆட்கொண்ட தருணங்களில் அது முதன்மையானது.
‘வரலாறு’ படத்திற்குப் பின்னர் அஜித்தின் படங்கள் என்னை அவ்வளவு ஈர்க்கவில்லை. அநேகர் பாராட்டிய ‘பில்லா’கூட அவ்வளவுக்கு என்னை கவரவில்லை. அது, ரஜினியின் பில்லா என்னுள் செலுத்திய தாக்கமாகவும் இருக்கலாம். மிகவும் ஸ்ரைலிஷான மேக்கிங் என்று விஷ்ணுவர்தன் அநேகராலும் பாராட்டப்பட்டார். இருந்தபோதிலும், அஜித்தை படம் முழுவதில் கோட்- சூட் போட்டபடி நடக்கவிட்டு கடுப்படித்துவிட்டார் என்கிற கோபம் விஷ்ணு மீது எனக்குண்டு.
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவர் நடித்த மிகவும் மொக்கைப் படமென்றால் அது ‘ஆஞ்சனேயா’வாகத்தான் இருக்கும். பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தில் நடிக்கவிருந்து ஏதோவொரு காரணத்தினால் அதில் நடிக்காமல் விட்டு, அந்த ஆத்திரத்தில் ஆஞ்சனேயா படம் நெடுகிலும் ‘நான் கடவுள்’ என்று வசனம் பேசியே தோற்றுப்போனார் அஜித்.
எனக்குத் தெரிந்து ஜேம்ஸ்பொன்ட் போன்ற பாத்திரங்களில் நடிப்பதற்கு தமிழ் சினிமாவில் இருக்கிற ஹீரோக்களில் அஜித்தே மிகவும் பொருத்தமானவர். ஆனாலும், அவர் நல்ல கதைகளைத் தெரிந்தெடுக்காமல் ஏகன், அசல் என்று தொடர்ந்தும் தோற்றுப் போய்க்கொண்டிக்கிறார். இதில், அசல் படம் பற்றி கூறியே ஆகவேண்டும்.
அசல் படம் வெளியாகி முதல் காட்சியைப் பார்த்த ஒரு பதிவர் விமர்சனம் என்கிற போர்வையில் ‘பில்லாவைப்போல் இரண்டு மடங்கு அதிரடியும், ஆர்ப்பாட்டமான மேக்கிங்கும்’ என்று அசலைப்பற்றி எழுதிதள்ளிவிட்டார். இதனை அப்படியே நம்பிய என்னுடைய நெருங்கிய நண்பரொருவர் தன்னுடைய நண்பர்களையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் அசல் பார்க்கச் சென்றிருக்கிறார்.
படம் ஆரம்பித்து 20 நிமிடங்களுக்குப் பின்னர் அவருக்கு சனி பிடித்திருக்கிறது. அது இன்றுவரை தொடர்கிறது. விமர்சனத்தை எழுதிய பதிவரை, என்னுடைய நண்பர் திட்டித்தீர்த்ததெல்லாம் மிகுதிக் கதை. அதிலிருந்து அந்த விமர்சனப் பதிவரின் தளத்துக்கு என்னுடைய நண்பர் சென்றாலும் பட விமர்சனங்களை வாசிப்பதேயில்லையாம்.
தீனாவும், அமர்களமும் அஜித்துக்கு தீவிர ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்த படங்கள். அப்படியொரு படத்தினையே தற்போது அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை மங்காத்தா நிறைவேற்றும் என்று நம்பலாம். ஏனெனில், வெங்கட் பிரவுவின் மேங்கிங்கின் மீது எனக்கும் ஓரளவு நம்பிக்கையுண்டு. பாவம் அஜித் ரசிகர்கள் எவ்வளவு நாளுக்குத்தான் கவலையுடன் இருப்பார்கள்.
எதிர்க்கட்சிகள்!
நாடொன்றின் ஆரோக்கியமான அபிவிருத்திக்கும்- அரசியலுக்கும் ஆளுங்கட்சி எவ்வளவுக்கு எவ்வளவு திறமையுடன் செயற்படுகின்றதோ, அதனைவிடவும் அதிக திறமையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. ஆனால், இந்தியா- இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அது சாத்தியப்படுவதில்லை.
அரசாங்கம் கொண்டு வருகின்ற எல்லாத் திட்டங்களையும் காரணமின்றி எதிர்க்க வேண்டும் என்கிற போக்கே தெற்காசிய நாடுகளின் அரசியல் சித்தாந்தமாகிப் போய்விட்டது. அதுபோல, ஆளுங்காட்சியாக இருக்கின்ற போது எதிர்க்கட்சிகள் செய்த அரசியலையே, எதிர்கட்சியாக மாறிய முன்னாள் ஆளுங்கட்சிகளும் செய்கின்றன. இவர்களின் தூரநோக்கற்ற அரசியலில் நொந்து நூலாகிப் போவதென்னவோ மக்கள் தான்.
இலங்கை அரசியல் வரலாற்றில் ரணில் விக்கிரமசிங்க போன்ற திறமையற்ற எதிர்க்கட்சித் தலைவரைக் காண்பது அரிது. இலங்கையின் மிகப்பெரிய கட்சியொன்றின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக பதவி வகிக்கிற ரணில் விக்கிரமசிங்க 2002- 2004 காலப்பகுதியில் ஆட்சியைப் பிடித்து பிரதமராக இருந்ததைத் தவிர சாதித்தது ஒன்றுமில்லை.
மாறாக, மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட பாராம்பரிய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை தொடர்ந்தும் தோல்விப் பாதையில் கொண்டு சென்ற பெருமை ரணிலுக்கு என்றைக்கும் இருக்கும். அதுபோல, கட்சியின் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைமைப்பதவியை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்லவும் மனமின்றி தொடர்ந்தும் கட்சியையும், தொண்டர்களையும் தோற்கடித்துக் கொண்டிருக்கிறார்.
எதிர்க்கட்சியொன்று மாற்று அரசாங்கம் போன்று செயற்பட வேண்டும். ஆளும் கட்சியின் குளறுபடிகளை ஆரோக்கியமான முறையில் சுட்டிக் காட்டி பாராளுமன்றத்துக்குள்ளும், மக்களின் முன்னும் திறம்படச் செயற்பட வேண்டும். ஆனால், ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதிலேயே காலத்தை கடத்தி விடுகிறார். அதுதவிரவும், கட்சிக்குள் புதிய இளம் தலைவர்கள் யாராவது வளர்ந்து வருகிறார் என்றால் அவரை எப்படியாவது ஓரங்கட்டுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறார். அப்படியிருக்கின்ற போது எப்படி திறமையான எதிர்க்கட்சியாகச் செயற்பட முடியும்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவியாக ஜெயலலிதா ஜெயராம் இருந்த காலத்தில் அவருக்கு கொடாநாடே தஞ்சமானது. தற்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் என்ன செய்கிறார் என்று யாருக்குமே தெரியாது. பதிவர் செங்கோவி அண்மையில் தன்னுடைய இரண்டு பதிவுகளாக விஜயகாந்தை தேடிக்கொண்டிருக்கிறார். யாராவது அவர் எங்கிருக்கிறார் என்று தேடிக்கொடுங்கள். இப்படியிருக்கிறது எதிர்க்கட்சிகளின் நிலைமை!!
எதிர்க்கட்சிகளை நினைத்தாலே கடுப்பாக இருக்கிறது. இவர்களைப் பற்றி எழுதுவதால் இந்த ஜோக்கர்கள் திருந்தவா போகிறார்கள். சரி மகாசனங்களே பதிவு பிடித்திருந்தால் அப்படியே வாக்கையும், கருத்தையும் பதிந்துவிட்டுச் செல்லுங்கள்.


