எங்கட ஊர் இறால் பொரியல்(வறுவல்): அம்மாவின் கைப்பக்குவம்!
Posted On Sunday, July 31, 2011 at at 4:08 PM by மருதமூரான்.எனக்கு ஏலெவல் எடுக்கு மட்டும் ரீயே போடத்தெரியாது. குசினிப்பக்கம் சாப்பிடுறதுக்கு ஒதுங்கிறத தவிர, அங்கால தலையே வைக்கிறதில்ல. அதுவும், எங்கட வீட்டில என்னையும்- அப்பாவையும் தவிர அம்மா, தம்பி, தங்காச்சி எல்லாம் அதிக நாட்கள் சைவப் பட்சிகள். அதனால, அசைவ உணவுக்கு என்று குசினிக்குள்ள ஒரு பக்கத்தை அம்மா ஒதுக்கி வைத்துவிட்டா.
இப்பிடி போய்க்கொண்டிருந்த என்ர வாழ்க்கையிலையும் கொழும்புக்கு வெளிக்கிட்ட காலப்பகுதியிலிருந்து சமையல்- சாப்பாடு எண்டும் மாறிப்போச்சு. ஆனாலும், அது வருசத்தில ஒரு மாசம் மட்டுந்தான் நீடிக்கும். ஏனென்டால் நான் இருக்கிறது எங்கட உறவினர் வீட்டில. அங்கயும் யாழ்ப்பாணத்துச் சமையல் தான். அவை, இந்தியாவுக்கு வருசத்துக்கு ஒருக்கால் போவினம். அப்பதான் நான் குசினிக்குள்ள என்ர ஆராய்ச்சியெல்லாம் செய்து பாக்கிறது.
முதல் தரம் நான் ஆட்டுக்கறி சமைக்க வெளிக்கிட்டன். அதுவும், தெரிஞ்ச அண்ணைக்கு போன் போட்டு அவரின் ஆலோசனைகளுடன் சமைச்சன். கறியை அடுப்பிலயிருந்து இறக்கி ஒரு துண்டு சாப்பிட்டு பாத்திட்டு குப்பை கூடைக்குள்ள கொட்டிவிட்டன். அப்படி என்ர முதல் சமையல் அனுவம்.
ஆனாலும், அப்புறமா சமையலில் இருந்த ஆர்வத்தினால கொஞ்சம் கொஞ்சமா சமைக்க பழகிவாரன். அதுவும், அசைவம் மட்டுந்தான் சமைக்கிறதெண்டும் சபதம் போட்டிருக்கிறன். இதை, எந்தக்காரணம் கொண்டும் மீறுவதும் இல்லை எண்டும் சத்தியம் செஞ்சிருக்கிறன்.
சரி, ஒரு சமையல் குறிப்பை இண்டைக்கு பாப்பம்.
எங்கட ஊர்ப்பக்கம் காரசாரமான சாப்பாடுகள் அதிகம். அதுவும், யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் எண்டாலே புது ருசிதான்.
சிறிசுகளிலிருந்து பெரிசுகள் வரை விரும்பிச் சாப்பிடுற இறால் பொரியல் செய்யிறது எப்பிடியெண்டு இண்டைக்கு பார்ப்பம். நான் சாப்பிடுறதுக்கு பின்னிக்கிறது இல்ல. அதுவும் ருசியுள்ள சாப்பாடு எண்டால் சொல்ல வேண்டுமோ…! சரி வாங்கோ இறாலை பொரிப்பம்.
முதலில், அரைக்கிலோ பெரிய இறால் வேண்டிக்கொள்ளுங்கோ. இப்பத்தான் யாழ்ப்பாணத்திலையும், முல்லைத்தீவிலையும் அதிகமாக இறால் பிடிபடுற காலமென்டு நினைக்கிறன். மலிவாவும் இருக்கும்.
தேங்காயெண்ணை இல்லாட்டி நல்லெண்ணையும் வாங்கிக்கொள்ளுங்கோ. தேங்காயெண்ணையில கொழும்பு அதிகம். அதையும் கவனத்தில கொள்ள வேணும்.
முக்கியமாக யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள். மிளகாய், மல்லி சரிக்கு சரியா போட்டு சீரகம், வெந்தயம் எல்லாம் போட்டு நல்ல வறுத்து அரைச்சு வைச்சிருப்பீங்கள் தானே.
மற்றது எங்கட ஊர் சின்ன வெங்காயம் கொஞ்சம். பச்சை மிளகாய். கருவேப்பிலை. உப்பு.
செய்முறை
வேண்டி வச்சிருக்கிற இறாலை நல்ல வடிவா தோலை கழட்டி கழுவிக்கொள்ளுங்கோ. அதுவும், இறாலின்ர முதுகுப்பக்கத்தில கறுப்பு கலரில இருக்கிற பகுதியை அகற்றி விடுங்கோ. இல்லாட்டி தேவையில்லாத நோய் எல்லாம் வந்து சேரும். குறிப்பா வாந்திபேதி.
கழுவி வச்சிருக்கிற இறாலை கொஞ்சம் மிளகாய்த்தூள், உப்பு தேசிப்புளி விட்டு பிரட்டிக் கொள்ளுங்கோ. வேணுமெண்டால் அரைச்ச உள்ளியும் (பூண்டு) சேர்த்துக்கொள்ளலாம்.
எரியிற அடுப்பில தாச்சியை வைச்சு எண்ணையை உத்திங்கொள்ளுங்கோ. எண்ணை சூடானதும் அதில மிளகாய்த்தூளுடன் பிரட்டி வச்சிருக்கிற இறாலை போட்டு அரைப் பதம் வேகுற வரைக்கும் பொரியுங்கோ.
அதுக்கு பிறகு வெட்டி வச்சிருக்கிற வெங்காயம், பாதி பிளந்த இரண்டு பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை எல்லாத்தையும் பொரிஞ்சுகொண்டிருக்கிற இறாலோட சேர்த்துக் கொள்ளுங்கோ. நல்ல பதமா பொரிஞ்சு வந்தாபிறகு இறக்கிகொள்ளுங்கோ.
நாட்டரிசி சோத்தோட கத்தரிக்காய் குழம்பும், இறால் பொரியலும் சேர்த்து சாப்பிட்ட என்ன ருசியெண்டு தெரியுமே…..! இப்ப புறோன்ஸ் பிறை, சிக்கின் பிறை எண்டு கொழும்பில கணக்க காசு குடுத்து ஏசிக்குள்ள இருந்து வாங்கிச் சாப்பிட்டாலும், எங்கட ஊரில அம்மாவின்ர கையால சமைச்ச இறால் பொரியல் சாப்பிட்ட ருசி வரமாட்டன் என்கிறது.
ஜனவரியில எழுதின சமையல் குறிப்புத்தான். இண்டைக்கு சிங்கள பொடியளின்ர வீட்டில மத்தியானம் சாப்பிட்டனான். அவங்கட சமையலும் வித்தியாசமா ருசியாத்தான் இருக்கும். அதுவும், பெரிலிக்காய் (நான் நினைக்கிறன் தமிழில காட்டுமாங்காய் எண்டு) கறியெண்டா எனக்கு நல்ல விருப்பம். இண்டைக்கும் சாப்பிட்டனான்.
அந்த ரூசியோட நம்மட ஊர் சமையலைப்பற்றி பதிவு போடவேணும் எண்டு தோண்றிச்சிது. அதுதான், முந்திப்போட்ட பதிவுடன் பல விசயங்களையும் சேர்த்து பதிவா போட்டிருக்கிறன். வாசித்திட்டு உங்க கருத்தையும் சொல்லுக்கோ. அதுபோல, ஓட்டையும் போட்டிடுங்கோ. ஏனெண்டா ஜனநாயக கடமை ரொம்ப முக்கியம்!!
சிங்களப் பெண்களின் கெமிஸ்ட்ரி: நிலைமாறும் இலங்கை தொலைக்காட்சி வரலாறு!
Posted On Saturday, July 30, 2011 at at 3:47 PM by மருதமூரான்.தெற்காசியாவில் தொலைக்காட்சியை 1970களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய பெருமை இலங்கைக்கு உண்டு. அதுபோல, 1995கள் வரை மிகவும் தேர்ந்த தொழிநுட்ப அறிவுடன் சமூக- அறிவியல் நிகழ்ச்சிகளையும் வழங்கிய பெருமையும் இலங்கை தொலைக்காட்சிகளுக்கு உண்டு. நான் நினைக்கிறேன், தெற்காசியாவிலேயே கிரிக்கட் போட்டிகளை நேரடியாக ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பும் உரிமையை முதலாவதாக பெற்ற நிறுவனம் ரூபவாஹினி என்று.
இப்படியெல்லாம் பெருமைகளைக் கொண்டிருக்கிற இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் 2000க்குப் பின்னர் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை அவ்வளவு மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. கலாசார- வாழ்வியலை யதார்த்த மீறல்கள் இன்றி நாடகங்களாக காட்டி வந்த சிங்கள தொலைக்காட்சிகள், 1990களின் இறுதியில் வட இந்தியாவின் ஹிந்தி நாடகங்களை மொழி மாற்றி ஒளிபரப்பத் தொடங்கின.
அதுவும், வட இந்தியர்களின் வாழ்வியலை (குறிப்பாக மேல்தட்டு மக்களின்) சொன்ன நாடகங்களில் காணப்பட்ட அளவுக்கு அதிகமான சினிமாத்தனத்துக்கு சிங்கள மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகிப் போனார்கள். விளைவு, நல்ல கதைகளை இயல்பாகச் சொல்லி வந்த சிங்கள தொலைக்காட்சி நாடகத்துறை, இந்திய நாடகங்களை அப்பட்டமாகக் தழுவி தயாரிக்கப்பட்டன. அதுவே, அதிகளவில் தொடர்கின்றன.
‘ஜோடி நம்பர் வன்’, ‘மானாட மயிலாட’ போன்ற நடன நிகழ்ச்சிகள் இந்தியாவின் அனைத்து மொழி தொலைக்காட்சிகளிலும் வருகின்றன. அதனைப் பார்த்து இலங்கையின் தனியார் தொலைக்காட்சிகளும் நடன நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கின. விளைவு, குத்தாட்டத்திலிருந்து- பலே- கண்டியன் என்று அனைத்து வகை நடனங்களும் அரைகுறையாக ஆடப்படுகின்றன. இதனால், சில நடிகர்களுக்கும்- நடிகைகளுக்கும் ஓரளவு வருமானம் அதிகரித்திருக்கிறது.
அதுதவிரவும், இலங்கையின் அமைச்சர்கள்- பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த நடன நிகழ்ச்சிகளில் நடுவர்களாக அலங்கரிக்கின்றனர். ஒவ்வொரு நடனத்துக்குப் பிறகும் அவர்கள் கூறும் விமர்சனம் படுபயங்கரமாக இருக்கின்றன. இந்தியத் தொலைக்காட்சிகளில் கோலொச்சும் ‘கெமிஸ்ட்ரி’ என்கிற வார்த்தையெல்லாம் இங்கும் இயல்பாக பேசப்படுகின்றன. அதுதவிரவும், மிகவும் அப்பட்டமான ஆபாச வசனங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றன.
அண்மையில் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சியொன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். நடன நடிகையொருத்தி ஹிந்திப்பாட்டுக்கு பயங்கரமான குத்தாட்டம் போட்டார். அவர் நடனம் ஆட ஆரம்பித்த கணத்தில், அவரது மார்பகத்திலிருந்து க்ளோசப் ஷொட்டுடன் கமரா கோணம் விலகிச் சென்றது. நான் நினைக்கிறேன், இந்தியத் தொலைக்காட்சிகளில் ஆடப்படும் குத்தாட்ட நடனங்களைவிட இரண்டு மூன்று மடங்கு ஆபாசத்துடன் இலங்கை நடிகைகள் நடனம் ஆடுகிறார்கள். (நிகழ்ச்சி தயாரிப்பார்களினால் அவ்வாறு கவர்ச்சியாக ஆடுமாறு கோரப்படுகிறார்கள் என்பதே உண்மையாக இருக்கும்.)
உயரமான மனிதர்கள் எல்லோரும் நடிகர் ஹித்ரிக்ரோசன் மாதிரி நடனமாட முடியுமென்று நினைத்து நடனமாடத் தொடங்கினால் எவ்வளவு நகைச்சுவைக் காட்சிகள் அரங்கேறும். அப்படியும், சில வேளைகளில் இலங்கையிலிருக்கிற சில்லி என்கிற பெயரைக்கொண்ட பாடகர்(?) நினைத்து நடனமாடுகிறார்;. சத்தியமாக கர்ண கொடூரமாக இருக்கிறது. ஆனாலும், சிலவேளைகளில் நல்ல பியூசன் வடிவ நடனங்களைக் காண முடிகிறது.
தொழில் முறையில் போட்டி போட்டு மக்களிடம் தங்களை முதன்மையானவர்களாக காட்டிக்கொள்ள வேண்டிய தேவை தொலைக்காட்சிகளுக்கு இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனாலும், அதில் ஓரளவு கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான கவர்ச்சி- அளவுக்குமீறிய இரட்டை அர்த்த வசனங்கள் என்று அரங்கேறும் நடன நிகழ்ச்சிகளை ஓரளவு தணிக்கையுடன் ஒளிபரப்புவது அனைவருக்கும் நல்லது. ஏனெனில், இலங்கையின் தொலைக்காட்சி- சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த படைப்புக்கள் வந்திருக்கின்றன.
இந்தப்பதிவை வாசிக்கும் பலருக்கு இலங்கையிலிருக்கிற தமிழ் தொலைக்காட்சிகள் தொடர்பில் ஒன்றுமே கூறப்படவில்லையே என்கிற எண்ணம் வரலாம். அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனாலும், இந்தியத் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை கடன்பெற்று ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சிகளைப்பற்றி ஒன்றும் கூற இல்லை. தமிழ் தொலைக்காட்சிகள் சுயமாக ஏதாவது செய்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்!!
காஞ்சனமாலா: விஜய் வாங்கித் தரப்போகும் ஈழம்: 404 காதல்கள்!
Posted On Friday, July 29, 2011 at at 3:39 PM by மருதமூரான்.
விஜய்யும், எஸ்.ஏ.சியும் வாங்கித் தரப்போகும் தமிழீழத்தில் சத்தியமாக நான் வாழ விரும்பவில்லை! இதனை சீரியஸான கருத்தாக எடுத்துக்கொள்ளுங்கள்!!தமிழீழம் உருவாவதற்காகவும், ஈழத்தமிழ் மக்களுக்காகவும் நடிகர் விஜய் தொடர்ந்து போராடுவார் என்று அவரின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தி இணையத்தளம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார். இந்தச் செய்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நடத்தும் கையெழுத்துப் போராட்டத்தில் விஜய் கையெழுத்திடவில்லை என்பதன் நீட்சியே!
சத்தியமாக இந்த இரு செய்திகளையும் நான் அவ்வளவு அக்கறையுடன் நோக்கவில்லை. ஏனெனில், இரு செய்திகளிலும் ஈழத்தமிழ் மக்களின் மீதான அக்கறையைக் காட்டிலும், இருதரப்பினரின் பிரச்சார உத்தியே அதிகம் தெரிகிறது. இந்தச் செய்திகள் ஏற்படுத்திய எரிச்சலையடுத்து நான் பேஸ்புக்கில் எழுதியதே மேலுள்ளது. அப்படி அண்மைய நாட்களில் நடந்த அரசியல் மாற்றங்கள் மற்றும் என்னுடைய மன மாற்றங்களின் வெளிப்பாடுகளே இந்தப் பதிவிலுள்ள பேஸ்புக் ஸ்ரேற்றஸ்கள்.
என்னை நோக்கிய அரசியலுக்கு சுய புத்தியுடனும்- மனத்திடத்துடனும் பதில் அரசியல் செய்ய எனக்குத் தெரியும்! அதுதொடர்பில் பஞ்சோந்திகள் கவலைப்படத் தேவையில்லை!!
காஞ்சனமாலா காஞ்சனமாலா கொல்லாமல் கொல்லும் கண்ணென்ன வேலா.....!: கவிதாயினி தாமரை 'வந்தான் வென்றானிலும்' அசத்துகிறார்.
தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்த இரு நாட்களில் மின்மடல்கள்-அழைப்புக்கள்- குறுந்தகவல்கள் மூலம் என்னை தேடிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி! இன்று காலை முதல் தொடர்பு எல்லைக்குள்தான் இருக்கிறேன்!!
அரைவேக்காட்டுத்தனமான அரசியலையும் பல வேளைகளில் இராஜதந்திரம் என்கிறார்கள் சில கோமாளிகள்!!
வட மாகாண முதலமைச்சர் கனவு சிலருக்கு புதிதாக பூத்திருக்கிறது. அதுபோல, சிலருக்கு கலைந்திருக்கிறது! தேர்தல்களின் முடிவுகள் எப்போதுமே ஆயிரம் செய்திகளைச் சொல்லியே செல்கின்றன!!
பெண்ணொருத்தி ஏற்படுத்தி விட்ட காயத்துக்கு மருந்திடவும் அநேக தருணங்களில் இன்னொரு பெண்ணே தேவைப்படுகிறாள்! முரண்களிலும் உண்மையிருக்கிறது!!
வீட்டை கட்டுவது முக்கியமானதுதான். ஆனாலும், அதைவிட முக்கியமானது வீட்டை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லாதிருப்பது. வடக்கு- கிழக்கில் வாடகைக்கு விடப்பட்ட வீடுகளே பயங்கரமாக இருக்கின்றன, ஆட்கள் இல்லாத வீடுகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை!!
படுபயங்கர காயத்தை ஏற்படுத்தி விட்டு, மேலோட்டமாக களிம்பு பூசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று காட்ட முனைந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். களிம்பு பூசி ஆற்றக்கூடிய நிலையில் அந்தக் காயங்கள் இல்லை!!
404 கடிதங்கள், சுமார் 120000 வார்த்தைகள்; எப்படி இவ்வளவு கடிதங்களை எழுத முடிகிறது காதலர்களால். அதுதான் காதல்களை காவியம் என்கிறார்களோ?!
இருட்டை விரட்ட ஒரு சூரியன் அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம். நினைத்த கனவு கை கூடலாம். கூடலாம்!: நா.முத்துக்குமார் 'தெய்வத்திருமகளு'க்காக எழுதியது! இதில் எந்த தேர்தல் பிரசாரமும் இல்லை!!
தேர்தல்கள் தெற்காசிய நாடுகளில் மிகச்சிறந்த நடிகர்களை உருவாக்கி விடுகின்றன!
மழை நாளில் பூக்கள் கொட்டிய வீதியில் கை பிடித்து கதை பேசி நடக்கவும் காதலி வடிவில் தேவைப்படுவது இன்னொரு தேவதையே! பெண்கள்தான் தேவதைகள்!!
ஏமாற்றியவனு(ளு)க்கு முன்னால் வாழ்ந்து காட்டுவதுதான் சிறந்த பழிவாங்கல்! போகிற போக்கில் நண்பன் சொல்விட்டுப் போனது!!
வர்ணத்தையும்- வாசனையையும் பூசிவரும் செய்தித்தளங்கள்!
Posted On Thursday, July 28, 2011 at at 4:01 PM by மருதமூரான்.
தமிழ் செய்தி இணையத்தளங்கள் சிலவற்றின் மீது எனக்கு அடிக்கடி கோபம் வருவது இயற்கை. அதுவும், அந்த இணையத்தளங்களினால் சில நேரங்களில் வெளியிடப்படும் செய்திகளுக்கு ஆதியும்- அந்தமும் இருப்பதில்லை. குத்துமதிப்பாக செய்திகளை வெளியிட்டுவிடுகின்றன. அதனை, இலங்கை- இந்தியா- புலம் என்று உலகம் பூராவும் இருக்கிற தமிழர்களில் குறிப்பிட்டளவானோர் பார்வையிடுகின்றனர். இதனால், ஏற்படும் விளைவுகளும் பாராதூரமாக அமைந்துவிடுவதும் உண்டு!
ஒருநாள் நடுராத்திரியில் உறவினரொருவர் கனடாவிலிருந்து தொலைபேசியினூடு பரபரப்புடன் அழைக்கிறார். நித்திரையிலிருந்து எழும்பி அவரிடம் விடயம் என்ன என்று கேட்டால், கொழும்பின் வெள்ளவத்தை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்கள காடையர்களினால் மக்கள் வெட்டிக்கொல்லப்படுவதாகவும், எங்களை பாதுகாப்புடன் இருக்குமாறும் கோரினார்.
செய்தியைக் கேட்டு எரிச்சலின் உச்சத்துக்குச் சென்ற நான், யார் இந்தத்தகவலை உங்களுக்கு சொன்னது என்று கேட்டால், ஏதோவொரு தமிழ்செய்தி இணையத்தளத்தின் பெயரைச் சொன்னார். அப்படியொரு அசம்பாவிதமும் இங்கிங்கில்லை என்று சொல்லிவிட்டு, தொலைபேசி அழைப்பை துண்டித்தேன். நான் அன்று இரவு 11 மணிக்குப் பின்னர்தான் கல்கிசையிலுள்ள வீட்டுக்கு பம்பலப்பிட்டியிலுள்ள அலுவலகத்திலிருந்து வாடகை வண்டியில் வந்தேன்.
இப்படி கொழும்பு- யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பலருக்கு அடிக்கடி வெளிநாடுகளிலிருந்து அழைப்புக்கள் வருவது இயல்பு. புலத்திலிருக்கும் தமிழர்களில் அநேகருக்கு இந்த செய்தி இணையத்தளங்களை பார்ப்பது அன்றாட கடமையாகிப் போனது. இதனால், அவர்களில் அநேகருக்கு இந்த இணையத்தளங்கள் சொல்லுபவையே செய்திகள்- அவர்கள் கற்பிப்பதே அரசியல்- அவர்களின் கட்டுரையாசிரியர்கள் எழுதுவதே இராஜதந்திரம்.
ஊடக தர்மம்- ஒழுக்கம்- கடமை தொடர்பில் இந்த செய்தி இணையத்தளங்கள் பல நேரங்களில் கருத்தில் கொள்வதில்லை. எந்த பந்தை வீசினால் மக்களைக் கவர முடியும்- பின்தொடர வைக்க முடியும் என்று இவர்களுக்குத் தெரியும். அந்த விடயங்களுக்கு வேறு வேறு வர்ணங்கள்- வாசணைகள் பூசி மக்களை நோக்கி எறிகின்றனர். மக்களும் அந்த வர்ணத்துக்கும்- வாசனைக்கும் அதிக தருணங்களில் மயங்கி விடுகின்றனர்.
நவீன ஊடகத்துறை துரித வளர்ச்சி பெற்றுள்ள இந்தக்காலத்தில் தகவல்- செய்தி பரிமாற்றங்களை கண நொடியில் செய்துவிட முடியும். அதுபோல, வதந்திகளையும் இலகுவில் பரப்பிவிடவும் முடியும். பொறுப்புணர்வு என்பது செய்தியை வழங்குபவனுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அதுவும், சில செய்திகள் பலரின் வாழ்க்கையையே பாரதூரமாக மாற்றிவிட வல்லவை. அப்படிப்பட்ட தருணத்தில் செய்தியை எழுதுபவரும், அதனை சரி பார்ப்பவரும் அக்கறையுடனும்- மிகப்பெரும் பொறுப்புணர்வுடனும் நடக்க வேண்டும்.
ஆனால், பல தமிழ் செய்தி இணையத்தளங்களில் அவ்வாறு நடப்பதில்லை. செய்திகளை துரிதமாக வெளியிட வேண்டும் என்ற நோக்கில் பல தருணங்களில் பொய்யான செய்திகளும் வெளியிடப்பட்டு விடுகின்றன. இவற்றை அந்த செய்தி தளங்களிடம் வினாவினாலும் சரியான பதில் வருவதும் குறைவு. தற்போதை ஊடக சூழலில் யாரும் செய்தி சொல்லியாகவும்- வழங்குனராகவும் மாறலாம்- இயங்கலாம். அதுமிகவும் இலகுவானதும் கூட.
ஆனால், நாம் சொல்லப்போகின்ற செய்திகளை எத்தனை ஆயிரம் மக்கள் படிக்கப் போகின்றார்கள். அவர்களுக்கு சொல்லுகின்ற செய்திகளின் நம்பகத்தன்மை தொடர்பில் நாம் அக்கறையுடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் அதிக வதந்திகளையும்- பொய்யுரைகளையுமே காணும் நிலை அதிகரிக்கும். எனவே, தமிழ் செய்தி இணையத்தள நிர்வாகிகளே உங்களது செய்திப் பிரிவை சரியாக கையாழுங்கள். பொறுப்புணர்வுடன்- துரிதமாக செயற்படுத்துக்கள் அதுவே அனைவருக்கும் நல்லது!!
ஆரிரோ ஆராரிரோ ஜீ.வி.பிரகாஷின் தாலாட்டு!
Posted On Saturday, July 23, 2011 at at 3:25 PM by மருதமூரான்.‘தெய்வத்திருமகள்’ பாடல் தந்தை மகளை நோக்கி பாடுவதாகவும், ‘தென்மேற்குப் பருவக்காற்று’ப் பாடல் மகன் தாயை நோக்கி பாடுவதாகவும் அமைந்திருக்கும். மிகவும் உணர்ச்சிகரமான உறவுகளின் வெளிப்பாடும், அன்பும் இரு பாடல்களிலும் அதிகம் வெளிப்படும். ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ பாடலை வைரமுத்து மிகவும் உணர்ந்து எழுதியிருப்பார். அவருக்கு ஆறாவது தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த பாடலும் கூட.
அண்மைக்காலத்தில் தொடர்ந்தும் தன்னை நிரூபித்து வரும் இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷ்குமாரை சொல்ல முடியும். ‘தெய்வத்திருமகள்’ பாடல்கள் முதலில் அவ்வளவு ஈர்ப்பினைத் தரவில்லை. இரண்டு மூன்று தடவைகள் கேட்ட பின்னர் பிடித்திருந்தது. ஆனால், படத்தில் பார்க்கும் போது பாடல்களின் முக்கியம் விளங்கியது. அத்துடன் அதிகமாகப் பிடித்தும் விட்டது.
‘வெயில்’ என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளைஞன் ஜீ.வி.பிரகாஷின் ரசிகன் நான். ஜீ.வி.பிரகாஷின் வளர்ச்சி சில தருணங்களில் அபரிமிதமானது. அதுபோல, சில தருணங்களில் எரிச்சலும் ஊட்டுபவை. ‘குசேலன்’ எரிச்சலூட்டியதற்கு நல்ல உதாரணம். ‘வெயில்’, ‘கிரீடம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மதராசப்பட்டிணம்’ வியக்க வைத்தவை. அந்த வரிசையில் ‘தெய்வத்திருமகள்’ பாடல்களையும் சொல்ல முடியும்.
ஏனோ தெரியவில்லை அண்மைக்காலத்தில் தமிழ் திரைப்பாடல்களில் அதிகமானவற்றை கேட்க முடிவதில்லை. அவ்வளவு இரைச்சல் அல்லது புரிவதில்லை. ஆனால், அவ்வப்போது பல இரசணை மிக்க பாடல்களைத் தாங்கியும் படங்கள் வெளிவருகின்றன. அதில், ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘தென்மேற்குப்பருவக்காற்று’ முக்கியமானவை.
கிரீடம், மதராசபட்டிணம் படங்களில் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய இயக்குனர் விஜய்- இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கூட்டணியின் வெற்றிகரமான பயணம் தெய்வத்திருமகளிலும் தொடர்கிறது. படத்தின் பாடல்களைத் தாண்டி படம் பூராவும் பின்னணி இசையினூடு ரசிகனை ஒன்றிக்க வைத்ததில் ஜீ.வி.பிரகாஷின் பங்கு முக்கியமானது. அதுவும், படத்தின் மைய இசை (அதுதான் தீம் மியூசிக்) அற்புதமானது.
வானொலிகளில், “புலி உறுமுது … நான் அடிச்ச தாங்க மாட்டாய்.” “அடி உதை குத்து” பாடல்களே அதிகம் ஒலிக்கிறது. மெல்லிய இசை- அழகிய வரிகளைக் கொண்ட பாடல்களைக் அவ்வளவாகக் கேட்க முடிவதில்லை. ரசிகர்களுக்கு மாறுபட்ட இரசனையை ஒப்பேற்ற ஒலிபரப்பாளர்கள் முயல்வாதும் கூட காரணமாகலாம். நான், வானொலி கேட்பது குறைவுதான். அந்தத் தருணங்களில் ‘தெய்வத்திருமகள்’ பாடல்கள் எப்போதாவதுதான் ஒலிக்கிறது.
நான் எந்தத் தருணத்திலும், யாருக்கும் இந்தப் பாடலைக் கேள் என்று பரிந்துரைத்தது கிடையாது. ஏனெனில், அது பலருக்கு பிடிக்காமல் போய்விடும். அல்லது அந்த நபர் ‘மன்மதராசா…..’ , ‘அப்படிப்போடு’ வகையறா பாடல்களை அதிகம் விருப்புபவராக இருப்பார். எனினும், தெய்வத்திருமகளின் பாடல்கள் தனிமையில் அமைதியாக இருந்து கேட்கிறபோது மனதில் முழுமையைக் கொடுக்கிறது. விரும்பியவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.
நல்ல இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் இணைந்து பணியாற்றும் போது நல்ல இசை கிடைக்கிறது. அதற்கு இளையராஜா- பாலுமகேந்திரா, இளையராஜா- பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்- மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்- ஷங்கர் நல்ல உதாரணங்கள். கீரிடத்திலும், மதராசப்பட்டிணத்தில் தங்களை நிரூபித்த ஜீ.வி.பிரகாஷ்- விஜய் கூட்டணி, ‘தெய்வத்திருமகளி’லும் அதனைத் தொடர்ந்திருக்கிறது!!
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு. பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு……! வாழ்த்துக்கள் ஜீ.வி.பிரகாஷ்!!
திறமையான நடிகர்களை உருவாக்கும் அரசியல்!
Posted On Friday, July 22, 2011 at at 4:48 PM by மருதமூரான்.ஆனால், எங்கும்- எப்போதும் மிகச் சிறந்த நடிகர்களை உருவாக்கி வருவதும், வளர்ப்பதுவும், தனக்குள்ளே வைத்துக்கொள்வதும் அரசியல்தான். இதனை அநேகர் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அதுவும் தேர்தல்கள் என்று வந்துவிட்டால் ஊர்- உலகத்தில் இல்லாத மக்கள் பாசம் அரசியல்வாதிகளுக்கு வந்துவிடுகிறது, அவர்களின் காலில் விழுந்து வணக்கும் அளவுக்கு!
அண்மைக்காலத்தில் மிகச்சிறந்த அரசியல் நடிகராக இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி விளங்குகிறார். இவரின், உத்தரப் பிரதேச- மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கான நடை பயணங்களும்- சாமானிய மக்களின் வீடுகளில் உணவருந்தியதும் அவற்றின் முக்கிய நிகழ்வுகள். இவரை, பின்பற்றி ஆயிரக்கணக்கான இந்திய- இலங்கை அரசியல்வாதிகள் சாதாரண மக்களின் வீடுகளுக்கு தேர்தல் காலங்களில் முடங்கிப் போயிருக்கிறார்கள்.
தேர்தல்கள்! ஜனநாயகத்தை பெயரளவிலாவது நிலைநிறுத்த உதவுவது. அதுவும், தெற்காசிய நாடுகளில் ஓரளவேனும் மக்களின் அதிகாரத்தை காண்பிப்பதற்கு இந்தத் தேர்தல்களே உதவுகின்றன. மேற்கு நாடுகளில் தேர்தல்களைத் தாண்டியும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஏற்பாடுகள் இன்னும் செயற்பாட்டில் உள்ளன.
தேர்தல்களைத் தாண்டி மக்களின் ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுக்கும் சட்டங்களும்- நிறுவனங்களும் இலங்கையிலும் இருக்கின்றன. ஆனால், அவையின் செயற்பாட்டுத்திறன் அல்லது அதிகார வரம்பு எப்போதுமே கேள்விக்குள்ளாகி வந்திருக்கிறது. அதுவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குப் பின்னர் நீதிமன்ற அதிகாரமே அவ்வப்போது ஆட்டங்கண்டு வந்திருக்கிறது.
அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் வரை சுயமரியாதையை விட்டு சொல்ல முடியாத அளவுக்கு கீழிறங்கி வந்துவிடுவார்கள் இந்த அரசியல் நடிகர்கள். அதுவும், தேர்தல் காலங்களில் இவர்களின் மக்கள் அன்னியோன்னியம் இருக்கிறதே கூழ்- கஞ்சி குடிக்குமளவுக்கு இறங்கி வருவார்கள். அப்போதுதான், மக்களின் பிரச்சினைகள் எல்லாம் இவர்கள் கண்ணுக்கு பெரிது பெரிதாகத் தெரியும். குழந்தைகளைத் தூக்கி வைத்தபடி, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றபடி, மாணவர்களுடன் உரையாடியபடி என்று போஸ்டர்களில் அரசியல் நடிகர்கள் தங்களது அக்கறையைக் காட்டுவார்கள்.
அதுவே, தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்தபின்னர் பல அரசியல்வாதிகளைச் சந்திக்கவே முடியாது. அப்படி சந்திக்க வேண்டுமென்றால் பல நாட்கள் காத்திருந்து- பல பாதுகாப்புச் சோதனைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். அதுதவிரவும், அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டுப் பயணங்கள்- விஜபி திருமணங்கள்- வர்த்தக முன்னெடுப்புக்கள்- சாமியார்களிடம் ஆசீர்வாதம் என்று நாள் பூராவுமான வேலைகள் இருப்பதென்னவே உண்மைதான். நேரம் இல்லாத பட்சத்தில் அவர்களும் என்ன செய்ய முடியும்?!
ஒவ்வொரு தேர்தலின் தன்மையைப் பொறுத்தும் அரசியல் கட்சிகளின் கொள்கைகளும்- கோட்பாடுகளும் மாறும். அதற்கேற்றாற் போல அந்தக் கட்சிகளின் நடிகர்களும் அற்புதமாக நடிப்பார்கள். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் எல்லாம் இவர்களிடம் நடிக்க பழக வேண்டும். அப்படி அற்புதமான நடிப்பினை வழங்குவார்கள். அதுவும், சிறுபான்மை மக்களின் வாக்குகள் அதிகாரத்தினை தீர்மானிக்கக் கூடியது என்று தெரிந்தால் போதும், பொத்தி வைத்திருந்த சிறுபான்மை மக்களின் மீதான அக்கறையும்- அன்பும் கொப்பளிக்கும்.
யாழ்ப்பாணமும்- கிளிநொச்சியும் உள்ளூராட்சி தேர்தலினால் களைகட்டியிருக்கிறது. இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் எல்லாம் அந்தப் பகுதிகளிலேயே என்றைக்கும் இல்லாதளவுக்கு வலம் வருகிறார்கள். மக்கள் வாழ்ந்த குடிசைகளுக்குள் தேநீர் அருந்துகிறார்கள். பனம் பணியாரம் உண்கிறார்கள். பருத்தித்துறை வடை சாப்பிடுகிறார்கள். அதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாட்டுப் பயணங்களை ஒத்திவைத்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்கிறார்கள். ஊடகங்களில் பேசுகிறார்கள். இதுவெல்லாம் தேர்தல் முடிவுகளுடன், மீண்டுமொரு தேர்தல் வரும்வரை காணாமல் போய்விடுவதுதான் வாடிக்கை.
மக்கள் எப்போதுமே மிகச்சிறந்த நடிகர்களை சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் ஆதரித்து வந்திருக்கிறார்கள். ஆனாலும், அவ்வப்போது அரசியல் நடிகர்களுக்கு ஆப்புக்களையும் வழங்கி விடுகிறார்கள். என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் மிகச்சிறந்த நடிகர்களை உருவாக்குவது தெற்காசிய நாடுகளில் நடைபெறும் தேர்தல்களே!!
கிலாரியின் தமிழ் வணக்கம்: அசலை முந்தும் போலி: தேவதைகள்!
Posted On Thursday, July 21, 2011 at at 3:37 PM by மருதமூரான்.இது, நேற்றும்- இன்றும் சில தமிழ் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட செய்திகளின் தாக்கத்தினால் பேஸ்புக்கில் நான் எழுதியது. சமூகத்தின் மீதான தார்மீக கோபத்தினையெல்லாம் பேஸ்புக்- வலைத்தளங்களில் இலகுவாக எழுதிவிட்டுச் செல்ல முடிகிறது. அப்படி, பேஸ்புக்கில் நான் அண்மைய நாட்களில் எழுதிய சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறேன். சமூகத்தின் மீதான கோபம்- என் மீதான விமர்சனம்- காதல்- ஆசை என்று பல விடயங்களையும் பேசியிருக்கிறேன். ஆகவே, இந்தக் கருத்துக்கள் கலவையான உணர்வுகளைத் தரலாம்.
மறுபிறவி என்று ஏதாவது இருந்தால் நிச்சயமாக “அழகிய பெண் குழந்தை“யாகப் பிறக்கவே விரும்புகின்றேன். தேவதைகளாக வாழ்வது அவ்வளவு அற்புதமானது!
பல நேரங்களில் அசலை விட போலிகள் தான் மக்களை கவர்கின்றன: வைரமுத்து.
அவதூறுகளை, அவதூறுகள் ஆட்கொள்ளும் போதுதான் அவதூறானவருக்கும் அவதூறின் வலி உறைக்கிறது!
என்னுடைய உறவுகள் கடந்த இருபது வருடங்களாக ஓலைக் கொட்டில்களில் (குடிசைகளில்) வாழப் பழக்கப்பட்டுவிட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் தலைதூக்குகிற தருணம் பார்த்து இயற்கையோ, இன மோதல்களோ அவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடித்து விடுகிறது!
நீண்டகாலத்தின் பின்னர் வாழையிலையில் மதிய உணவு. சாப்பாட்டின் மீதான ஈர்ப்பும், இனம்புரியாத சுவையும் தானாக ஒட்டிக்கொண்டது!!
சகோதரியாக- காதலியாக- நண்பியாக நல்ல பெண்கள் எம்மை சுத்தியிருப்பது அவ்வளவு அழகானது. எனக்கு அது வாய்த்திருக்கிறது. என்னைச் சுற்றி தேவதைகள் எப்போதும் இருக்கிறார்கள்!
நாட்டில் மட்டுமல்ல, சின்ன மனங்களிலும் கூட தேவையற்ற அசாதாரண சூழ்நிலையொன்று மீண்டும் கட்டமைக்கப்படுவதாகத் தோன்றுகிறது!
நிலா...! கள்ளம் கபடமற்ற அன்பும்- அரவணைப்பும். நிச்சயமாக பெண்குழந்தைகள் ஒவ்வொரு வீட்டினதும் தேவதைகள்தான்!
திருடப்பட்டதுதான் தெய்வத்திருமகள். ஆனாலும், மனதை திருடிவிட்டது!
ஊடக தர்மம், ஒழுக்கம் மற்றும் விழுமியங்களுக்குட்பட்டு செயற்படுகின்ற ஊடகவியலாளனாக இருப்பதில் நான் எப்பொழுதும் பெருமைப்பட்டே வந்திருக்கிறேன். வருவேன். ஆனால், பணத்துக்காகவும் பரபரப்புக்காகவும் சிலரின் அருவருக்கத்தக்க- பொறுப்புணர்வற்ற ஊடக செயற்பாடுகள் எங்களை மக்கள் முன்னால் தலைகுனிய வைத்து விடுகின்றன!
பழைய கடிதங்களைப் படிக்கிற போது பல தருணங்களில் அதன் இலக்கிய தரத்தை சிலாகிக்க முடிகிறது. அதிலும், காதல் கடிதங்கள் என்றால் கவித்துவமும் ஒட்டிக்கொள்கிறது:-)
குள்ளநரியை நோக்கி எய்யப்பட்ட அம்பில் எங்கிருந்தோ குறுக்கே பாய்ந்த மான் மாட்டிக்கொண்டுவிட்டது. விளைவு, மான் வலியால் துடிப்பது மட்டுமன்றி எய்தவனையும் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டது!
அடபோங்கடா....! முரளிதரனுக்கும் அரசியலென்று தெரியாமலேயே நிறைய அரசியல் பேசத்தெரிகிறது!
நிலவினை நம்பி இரவுகள் இல்லை. விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை. ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்...! நலம் வாழ என் நாளும் என் வாழ்த்துக்கள்.....!! 'மறுபடியும்' பாடல் அவ்வளவு அழகு:-)
இலங்கை அரசின் இராஜதந்திர வெற்றிகள் லக்ஷமன் கதிர்காமரின் காலத்திலேயே பெறப்பட்டது. அதேபோன்ற, இராஜதந்திர வெற்றிகளை கிரிக்கட் வீரர் குமார் சங்க்காரவினாலும் பெற்றுக்கொடுக்க முடியும்! லோட்ஸ் எம்.சி.சி சொற்பொழிவை 2வது தடவை கேட்கும்போது அப்படித்தான் தோன்றியது!!
ஏமாற்றியவனு(ளு)க்கு முன்னால் வாழ்ந்து காட்டுவதுதான் சிறந்த பழிவாங்கல்! போகிற போக்கில் நண்பன் சொல்விட்டுப் போனது!!
பலாலி- தொண்டமனாறு வீதி, மருதங்கேணி- பருத்தித்துறை வீதி, கொடிகாமம்- பருத்தித்துறை வீதி இப்படி பல ஆண்டுகளாக மூடியிருந்த வீதிகள் தேர்தலை முன்னிட்டு திறக்கப்படுகின்றன. பரவாயில்லை, தேர்தல்கள் சில நன்மைகளையாவது செய்கின்றன!!
கொழும்பிலும் பொண்ணுங்க பூவைச்சு- புடவை கட்டி போறது அழகாயிருக்கு!
‘ரொம்ப நல்லவன்’ என்று என்னை நோக்கி சொல்லப்படும் சில தருணங்களில் நான் ‘ஏமாளி’ என்று சுட்டிக்காட்டப்படுவதாக உணர்கிறேன்!
சிதைந்த தேசத்திலும் தேர்தல்!
Posted On Wednesday, July 20, 2011 at at 4:33 PM by மருதமூரான்.ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கும்- சிலிர்ப்புக்கு பின்னாலுள்ள இழப்புக்கள் பயங்கரமானது என்பதை ஒருகணம் உணர்ந்த போது எல்லாமே வெறுமையாகிப் போனது. யாழ்ப்பாணத்தின் மிகவும் மணல் படர்ந்த கரையோரப் பகுதி வடமராட்சிக் கிழக்கு. வடமராட்சிக் கிழக்கின் நிர்வாக தலைமையிடமாக இருக்கின்ற மருதங்கேணியே என்னுடைய சொந்தவூர்.
ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களைக் கொண்டிருந்த வடமராட்சிக் கிழக்கின் கடற்கரைகள் இப்போது, வெட்ட வெளிகளாக வெம்மையையும், அனல் காற்றையும் வழங்கிக்கொண்டிருக்கின்றன. அந்தப் பகுதியிலிருந்த மக்களில் அனேகரும், தென்னைமரங்கங்களும், பனை மரங்களும் கூட கொடிய மோதல்களுக்குள் பலிவாங்கப்பட்டு விட்டன.
சொந்த ஊரில் பள்ளிக்காலங்களில் என்னுடன் படித்த பலர் இன்று உயிருடன் இல்லை. அதுபோல, பலர் அவயங்களை இழந்துள்ளனர். மோதல்களின் வடுங்களை உடலில் வாங்கியிருக்கிறார்கள். இதுதவிரவும், குறிப்பிட்டளவானோர் சிறுவயதிலேயே திருமணம் என்கிற பந்தத்துக்குள் பல வந்தமாகவும், வேறு வழியின்றியும் புகுந்திருக்கிறார்கள். (இது தவிர்க்க முடியாமல் நிகழ்ந்திருப்பதுதான் வேதனையானது)
இராணுவத்தினரின் வெற்றிலைக்கேணி தரையிறக்கத்துடன் 1990 ஆம் ஆண்டில் ஆரம்பித்த வடமராட்சிக் கிழக்கு மக்களின் அவதிப்பட்ட அகதி வாழ்வு இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. அதுதவிரவும், 2004ஆம் ஆண்டு சுனாமியும் தன்னுடைய பங்குக்கு வடமராட்சிக் கிழக்கின் 90 வீதமான பகுதிகளை சுருட்டிச் சென்றது.
உயிரிழப்புக்களும், சொத்திழப்பும் எம் மக்களுக்கு புதிதல்ல. அதிலிருந்து விரைவாக வெளி வந்து மீண்டும் தங்களை நிலை நிறுத்துகிற தகுதியையும் உழைப்பையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமூக அபிவிருத்தி, வளப்பரம்பல், உள்கட்டுமானம் போன்ற அடிப்படையான விடயங்களில் 20 வருடங்களுக்கு முன் இருந்த நிலையில் இன்றும் இருக்க அவர்கள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த இருபது வருடங்களாக ஓலைக் கொட்டில்களில் (குடிசைகளில்) வாழப் பழக்கப்பட்டுவிட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் தலைதூக்குகிற தருணம் பார்த்து இயற்கையோ, இன மோதல்களோ அவர்களை தோற்கடித்து விடுகிறது. எதிர்காலத்தில் இந்த இரண்டு வில்லன்களும் தலைதூக்கக் கூடாது என்று அனைவரது மனங்களும் வேண்டுகின்றன.
வடமராட்சிக் கிழக்கின் கடற்கரை வீதிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட காணிகள் அனைத்தும் இராணுவத்தினரின் அதிகாரத்தின் கீழேயே தற்போது இருக்கிறது. இந்த நிலப்பகுதிகள் சுனாமி தாக்கத்துக்குப் பின்னர் பாதுகாப்பற்ற வலயம் என்று கூறப்பட்டு மக்கள் அகற்றப்பட்டிருந்தனர். ஆனால், அந்த இடங்களிலேயே தென்னை மரங்களை அதிகளவில் கொண்டிருந்த காணிகள் ஏக்கர் கணக்கில் இருக்கின்றன. இருந்தன.
தொடர்ந்து வந்த 20 வருட இடப்பெயர்வுகளுக்குப் பின்னர் கடந்த வருடம் 10.10.2010 அன்று வடமராட்சிக் கிழக்கு மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். பல பகுதிகளில் இன்னும் குடியமர்த்தப்பட வேண்டியுள்ளது. இதனிடையே, யாழ்ப்பாணத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு வடமராட்சிக் கிழக்கும் தயாராகி விட்டது.
அரசாங்க ஆதரவு கட்சிகளிலிருந்து முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தல் பிரசாரத்துக்கான முண்டியடித்துச் செல்கின்றனர். ஆனால், கடந்த வருடம் மக்கள் குடியமர்த்தப்பட்ட போது வழங்கப்பட்ட இறப்பர் கூரைகளுக்குள்ளேயே அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அதிகாரத்திலுள்ளவர்கள் அந்த மக்களின் முதுகிலேறி பயணிக்க மீண்டும் தயாராகி விட்டார்கள்.
பாவப்பட்ட மக்களுக்கு தேர்தல்கள் வருவதால் மட்டும் விடிவு வந்துவிடுவதில்லையே!
(கடந்த வருடம் எழுதிய கட்டுரையொன்றின் பகுதிகளுடன், சில இன்றைய எண்ணங்களுடன் பகிரப்படுகிறது.)
திருடிய தெய்வத்திருமகள்: மன்னரின் யாழ் விஜயம்: ஒஸ்தி!
Posted On Tuesday, July 19, 2011 at at 3:54 PM by மருதமூரான்.தெய்வத்திருமகள் தமிழ் சினிமாவின் அண்மைக்கால வெற்றிப்படம். அப்படி சொல்வதில் தவறு இருக்கும் என்று நினைக்கவில்லை. அதுவும், தெய்வத்திருமகள் நிலா என்னை அதிகம் பாதித்துவிட்டாள். தந்தைக்கும்- மகளுக்குமான அன்பு- அக்கறை என்பதின் அர்த்தம் தெய்வத்திருமகளிலும் அழகாக வெளிப்பட்டது.
நான் தமிழ் சினிமா வரலாற்றில் எந்தவித மிகைப்படுத்தலுமில்லாத குழந்தை நட்சத்திரமாக நிலாவாக நடித்த சாராவை சொல்லுவேன். குழந்தையின் முகத்தில் எந்தவித வற்புறுத்தலுமின்றி தந்தைக்கான ஏக்கமும்- தவிப்பும் இயல்பாக வருகிறது. மிகவும் தேர்ந்த நடிகை போல அந்தச் சாரா நடித்திருப்பதன் மூலம், தெய்வத்திருமகளின் வருகையை ஓரளவுக்கு கொண்டாடலாம்.
எனினும், ஒருவன் மண்டையைப் போட்டு குழப்பி யோசித்து, இரவு பகலாக உழைத்து ஒரு கலைப் படைப்பை உருவாக்குகிறான். ஆனால், சிலர் அதனை அப்படியே எந்தவித வெட்கமோ- குற்றவுணர்வோ இன்றி தங்களது கலைப்படைப்பாக மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். பல தடவைகளில் வெற்றியும் பெறுகிறார்கள்.
இயக்குனர் விஜய்யின் தெய்வத்திருமகள் என்னை கவர்ந்திருக்கிறது. ஆனால், அந்த வெற்றியை முற்றுமுழுதாக விஜய்யிடம் கொடுத்துவிட முடியாது. வேண்டுமானால் 35 வீதத்தினை அவருடைய திறமைக்கு கொடுக்கலாம். திருடப்பட்டதுதான் தெய்வத்திருமகள். ஆனாலும் என்னுடைய மனதை திருடிவிட்டது என்பதுவும் மறுக்க முடியாத உண்மை!
“மறுபிறவி என்று ஏதாவது இருந்தால் அழகிய பெண் குழந்தையாகப் பிறக்கவே விரும்புகிறேன். தேவதைகளாக வாழ்வது அவ்வளவு அற்புதமானது” இது நான் பேஸ்புக்கில் எழுதியது. தெய்வத்திருமகளை பார்த்த போது அந்த எண்ணம் இன்னும் அதிகமானது!!
மஹிந்தரின் யாழ் பயணம்!
தேர்தல்கள் வருவதனால் அரச பணம் அதிகளவில் செலவாவது உண்மைதான். ஆனாலும், அப்போதுதானே மக்களுக்கு ஏதாவது சின்ன சின்ன உதவிகளையாவது ஆட்சியாளர்கள் செய்ய முன்வருகிறார்கள். இது, ஆண்டிப்பட்டியிலிருந்து அமெரிக்காவரை தொடர்கிறது. இப்போது இந்த நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் ஏகப்பட்ட அபிவிருத்திப்(?) பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது. அதுவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முன்னின்று செய்கின்றார்.
30 வருடங்களுக்கும் அதிகமான காலம் மூடப்பட்டிருந்த பாலாலி- தொண்டமனாறு வீதி, 12 வருடங்களாக மூடப்பட்டிருந்த பருத்தித்துறை- மருதங்கேணி வீதி, கொடிகாமம்- பருத்தித்துறை வீதி எல்லாம் அவசர அவசரமாக மக்களின் பாவனைக்காக திறந்து விடப்படுகின்றன. அதுதவிரவும், ‘சொல்வதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன்’ என்று ரஜினி படத்தின் வசனங்கள் போல ஜனாதிபதி தமிழில் உரையாற்றுகின்றார்.
சர்வதேச ரீதியில் இலங்கையின் பெயருக்கு ஏற்பட்டிருக்கிற களங்கத்தை ஓரளவுக்கு துடைப்பதற்கு யாழ்ப்பாணத் தேர்தல்களில் அரசாங்கம் வென்றாக வேண்டியிருக்கிறது. அப்படி வெற்றி பெறுவதன் மூலம், ‘தமிழ் மக்களின் மனங்களை வென்றவர்கள்’ என்ற கோசத்தை முன்வைக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
‘ஒஸ்தி’யாக தமிழாகும் ‘தபாங்க்’
ஹிந்தி சினிமாவின் அதிக வசூல் படம் தபாங்க். கடந்த வருடம் சல்மான்கானின் அலட்டலான நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டது. இப்போது தரணி இயக்கத்தில் வருங்கால எம்.ஜி.ஆர் அதாவது சிம்பு கதாநாயகனாக நடிக்க தமிழில் தயாராகி வருகிறது. தபாங்கின் வெற்றியில் பாடல்களுக்கும் அதிக பங்குண்டு. அப்படி அழகாக படமாக்கப்பட்ட பாடலையே இணைத்திருக்கிறேன். தமிழில் இந்தக் பாடல் காட்சிக்குப் பதிலாக ஏதாவது குத்து பாட்டு போட்டு சாகடிக்காமல் இருக்க வேண்டும்.
ஊடக விபச்சாரமும், போலி ஆன்மீகமும்!
Posted On Monday, July 18, 2011 at at 4:04 PM by மருதமூரான்.தலைக்கு முன்னால் துப்பாக்கிகள் குறிவைக்கப்பட்டிருக்கும் தருணத்திலும் இயலுமானவரை ஊடக தர்மத்தை கடைப்பிடிப்பதில் அக்கறையுடன் செயற்பட நினைப்பவன். அல்லது, சுய தேவைகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் மக்களை தவறாக வழிநடத்த கூடாது என்பதில் தீர்க்கமாகவுள்ள ஊடகவியலாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதை கடைப்பிடிக்க முயலுபவன்.
(இந்தக் கட்டுரை மார்ச் 5, 2010இல் எழுதப்பட்டது. நித்தியானந்தா- ரஞ்சிதா- சன்- நக்கீரன் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் இதனை மீள்பதிவாக இடுகிறேன். இது, சில நினைவுகளைத் தோற்றுவிக்க உதவலாம்)
இவ்வாறான நோக்கங்களை கொண்ட எனக்கு நேற்று முன்தினம் காலை பெரும் தலையிடியை தோற்று வித்த விடயம் ‘சன் தொலைக்காட்சி’யும், ‘நக்கீரன் இணையமும்’ வெளியிட்டிருந்த சுவாமி என்கிற போர்வையில் வலம் வந்த நித்தியானந்தர் தொடர்பான படுக்கையறைக் காட்சிகள். எனக்கு நித்தியானந்தர் செய்தது சரியா? பிழையா? என்ற கேள்விகளே முதலில் எழவில்லை. மாறாக பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய இந்த ஊடகங்கள் ஏன் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டன என்ற வருத்தமே மேலோங்கியது.
சன் தொலைக்காட்சியை கோடிக்கணக்காக மக்கள் பார்க்கின்றனர். அதில், தாயும்- மகளும், தந்தையும்- மகனும், ஏன்? பாட்டனும்- பேரனும் கூட இருக்கிறார்கள். இவ்வாறு குடும்பங்களினால் வரவேற்பறையில் பார்க்கப்படும் ‘சன் தொலைக்காட்சி’ போதிய மட்டுறுத்தல்கள் இன்றி, நித்தியானந்தர் தொடர்பான படுக்கையறைக் காட்சிகளை எவ்வாறு ஒளிபரப்ப முடியும்? அதுவும், போதிய அறிவுறுத்தல்கள் இன்றி.
குறித்த வீடியோவை செய்தியாக மக்களிடம் சமர்பிக்க முன்னர் குழந்தைகள்- சிறுவர்கள் தொடர்பிலாவது கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்களை சன் தொலைக்காட்சி வழங்கியிருக்க வேண்டுமே? ஏன் அந்த ஊடக ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவில்லை. சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனோ, சன் செய்திப்பிரிவின் தலைவரோ குறித்த வீடியோ காட்சிகளை குடும்பத்துடன் இருந்து பார்க்கத் தயாரா? இவ்வாறு எவ்வளவு விடயங்களை அவர்கள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். வெறும் பரபரப்புக்காகவும், பணத்துக்காகவும் மட்டுமே அந்த செய்தியை வெளியிட்டதாகவே கருதவேண்டிய நிலைக்கு தள்ளியது யாரின் தவறு?
‘நக்கீரன்’ கோபல் மீது எனக்கு நிறைய மரியாதை சில காலத்துக்கு முன்னர் வரை இருந்தது. ஆனால், அவரின் பொறுப்பற்ற சில நடவடிக்கைகளினால் அவர் அதனை தவிடுபொடியாக்கினார். இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் நக்கீரன் கிராபிக்ஸ் உதவிகளுடன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக செய்தி வெளியிட்டு காசு பார்த்தது. இலங்கை தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களே அவர்கள் எல்லோரும் பிரபாகரன் மரணத்தில் கவலை கொண்டிருந்தனர் (பிரபாகரனை எதிர்த்தவர்களும் கூட). தமிழ் மக்களின் உணர்ச்சிகளில் கல்லை வீசி காசு பார்த்த நக்கீரனை எவ்வாறு ஊடக ஓழுக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் என்று கருத முடியும்.
நித்தியானந்தர் தொடர்பான வீடியோ காட்சிகளை ஒரு நீலப்படத்துக்கு நிகரான தொகுப்புக்களுடன் வெளியிட்ட ‘நக்கீரன் இணையத்தளம்’ முழுமையான காட்சிகளை காண பணத்தை செலுத்துமாறு கோரியது. இந்த செயல், நீலப்படங்களை இணையத்தில் விற்கும் ஆயிரமாயிரம் இணையத்தளங்களுக்கு ஒப்பானதே. இதை என்னவென்று சொல்வது.
தவறினை மக்களுக்கு சுட்டிக்காட்டுவதோ, போலிகளை வெளிக்காட்டுவதோ தவறில்லை. ஆனால், அதே தவறினை இவர்களும் செய்தால் எவ்வாறு சகித்துக்கொள்ள முடியும். திரைப்படங்களுக்கு யு, ஏ என்று சான்றிதள் வழங்குகிறார்கள். இந்த வீடியோ காட்சிகளுக்கு மட்டுறுத்தல் வழங்குவது யார்? இதில் என்ன நியாயம் இருகிறது என்று தெரியவில்லை.
எனக்கும், உங்களுக்கும் என்று அந்தரங்கமென்ற ஒன்று இருக்கிறது. அதற்குள் மற்றவன் தலையிடுவதை எங்களினால் அனுமதிக்க முடியுமா? அது சாமியாராக இருந்தாலென்னா, மந்திரியாக இருந்தாலென்ன? சாமானியனாக இருந்தாலென்ன? அவரவர்க்கான அந்தரங்கம் தனிப்பட்டதே. பெண்களோ, ஆண்களோ பணத்துக்காக தன்னுடைய உடலை விற்கும் போது விபச்சாரமென்கிறோம். அதையோ, படம்பிடித்து பொறுப்புணர்வற்று விற்பதை எவ்வாறு சொல்வது? அது ஊடக விபச்சாரம் தானே!.
பரமஹம்ச நித்தியானந்தர் என்கிற பெயரில் 32 வயதுடைய வாலிபனின் வாய் ஜாலங்களையும், போலி ஆன்மீகத்தையும், சொற்பொழிவுகளையும் கேட்டு அவர் ஒரு ஞானி, கடவுள் என்று மக்கள் பின்தொடர்வது சரியா?. ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரி உணர்வுகள் இருக்கவே செய்கின்றன. அந்த உணர்வுகளை துறந்த ஞானியாக நித்தியானந்தரை நம்பியது யாருடைய தவறு?
எங்களுக்கு இருக்கின்ற பாலியல் தேவைகள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்களே மற்றைய மனிதனுக்கும் இருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல், அவர் கடவுள், முற்றும் துறந்த ஞானி, வழிகாட்டும் சுவாமி என்று முட்டாள் தனமாக செயற்படுவதும், அவரின் தவறுகள் வெளிவந்தவுடன் மனதுடைந்து போவதும் இந்திய மக்களுக்கு புதிதல்லவே.
தங்களை பின்நவீனத்து கர்த்தாக்களாகவும், கல்விமான்களாகவும், நட்சத்திரங்களாகவும் காட்டிக்கொள்கிறவர்களும், சமூகத்தில் உயர்ந்த நிலையிலிருக்கிறவர்களுமே இந்த போலிகளிடம் சிக்கிக்கொள்ளும் போது, சாமானிய மக்கள் இந்த ஏமாற்று வித்தைகளுக்குள் இழுக்கப்படுவதை தவிர்க்க முடியாது. நேற்று பிரேமானந்தா. இன்று நித்தியானந்தா. நாளை எந்த ஆனந்தாவோ கட்டாயம் வருவார். அவரை தொழவும் கூட்டம் கூடும்! நெஞ்சு பொறுக்குதில்லையே!!
ஆடிப்பிறப்பு: மறக்கப்படும் ஈழத்தமிழ் பண்டிகை!
Posted On Sunday, July 17, 2011 at at 3:54 PM by மருதமூரான்.ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. (ஆடிப்பெருக்கு தென் இந்தியாவில் பிரபலமானது.) தமிழ் வருடத்தின் மத்திய மாதங்களில் ஒன்றான ஆடி முதலாம் நாள் இந்த ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. அதுவும், கோடை காலம் நிறைவடைந்து மாரி காலத்துக்குள் மக்கள் செல்வதைக் குறிப்பதாக ஆடிப்பிறப்பை தமிழ் மூத்தோர் கூறுகின்றனர். இதற்குப் பின்னாலுள்ள சமய- சாஸ்திரிய வரலாறு எனக்குத் தெரியாது. அது எனக்கு தேவையும் இல்லை.
பனங்கட்டி, கருப்பணி மற்றும் தேங்காய் என்று வடக்கு- கிழக்கில் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கும் உணவு வகைகள் ஆதிக்கம் செலுத்தும் தனித்துவமான பண்டிகை.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
இப்படி ஈழத்துகவி நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடியிருக்கிறார்.
எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. காலையில் என்னையும், தம்பியையும் அப்பா முழுகவாத்து (தலைநீராட வைத்து) வேட்டி கட்டி எம்மூர் பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். (தங்கச்சி அப்போது மிகவும் சிறியவள். அதனால், அம்மாவுடனேயே இருப்பாள்) எங்களுக்கு சாமி கும்பிடச்சொல்வி வெற்றுடம்பில் திருநீறு பூசி, காதில் பூ வைத்து (இது சாமிக்கு வைத்த பூ) அழைத்து வருவார்.
எங்கள் வயதுப் பெடியங்கள் எல்லாம் காற்சட்டையுடன் கோவிலுக்கு வர நானும் தம்பியும் வேட்டி (சால்வையே எங்களுக்கு அப்போது வேட்டியாக மாற்றம் பெறும்) கட்டி செல்வது அவ்வளவு மிதப்பாக இருக்கும். கோவிலிருந்து வந்ததும் சாமியறையில் அம்மா பூசை செய்து முடித்த பின்னர் எங்களுக்கு கூழும், கொடுக்கட்டையும் இன்னபிற பழவகைகளும் பரிமாறுவார். அவை அவ்வளவு ருசியாக இருக்கும். அதுவெல்லாம் ஒரு காலம்.
(அப்பா கடவுள் நம்பிக்கை கொண்டவர். மதங்களின் மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்ததில்லை. ஆனாலும், தன்னுடைய பிள்ளைகளுக்கு தம் சமூகத்தின் பாரம்பரியத்தை கற்பித்துவிட வேண்டும் என்பதில் அவ்வளவு அக்கறை. அதனால், தை பொங்கல், சித்திரைப்பிறப்பு, ஆடிப்பிறப்பு என்று எல்லா தமிழ் பண்டிகைகளையும் அதன் பாரம்பரிய முறைகளுக்கு அமைய குடும்பத்துடன் கொண்டாடுவார்.)
ஈழத்துக்கேயுரிய ‘ஆடிப்பிறப்பு’ தன்னுடைய கடைசிக்காலங்களில் இருக்கின்றது. தொலைக்காட்சிகளின் வருகையுடன் அளவுக்கு மீறியளவில் ஈழத்தமிழர்களிடையே (வட இந்தியர்களின்) தீபாவளி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. ஆனால், ஈழத்தமிழர்களுக்கேயுரிய தனித்துவமான பண்டிகையான ஆடிப்பிறப்பு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. நான் நினைக்கிறேன், ஓரிரு வருடங்களாவது ஆடிப்பிறப்பை கொண்டாடிய கடைசி தலைமுறையினர் நாம்தான் என்று!
இன்று ஆடிப்பிறப்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று தமிழ் பகுதிகளில் கோவில்களின் பூசைகளுடனும், ஓரிரு வீடுகளின் காய்ச்சப்படும் கூழுடனும் முடிந்து போகிறது. கொழும்பில் பலருக்கு இன்று ஆடிப்பிறப்பு என்றே தெரியாது.
இதுவெல்லாம் எம்முடைய தனித்துவ பாரம்பரியத்தை நாம் இலகுவில் எந்தவித குற்றவுணர்வுமின்றி மறக்கின்றோம் என்பதற்கு நல்லதொரு சான்று. இதையெல்லாம் நினைக்கும் போது ஏதோவொரு வெறுமை மனதில் ஒட்டிக்கொள்கிறது. ஆனாலும், நாளை வேறு பிரச்சினைகள் வரும், அப்போது இதுவும் கடந்து போகும்…..!!
கமலும், அமீரும் விஜய்யின் முன்னோடிகள்: விரல்களைத் தண்டித்த பற்கள்!
Posted On Saturday, July 16, 2011 at at 3:29 PM by மருதமூரான்.தெய்வத்திருமகள்(ன்) வெளிவந்து ‘நல்ல படம்’ என்கிற பேச்சுக்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம், அனுஷ்கா என்ற பிம்பங்களைத் தாண்டி இயக்குனர் விஜய் அதிகமான கவனிக்கப்படுகின்ற தருணமிது. ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் விஜய், ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அழகியலை மட்டுமல்ல, அறிவியலையும் சரியாக கையாழும் இளைய இயக்குனர்களில் முக்கியமானவர்.
ஆனால், ‘கனவான்’ தன்மையுள்ள படைப்பாளியாக நிலை நிறுத்துவதற்கு முன்வராதவர்களில் விஜய்யும் சேர்ந்து கொண்டுள்ளார். I am Sam படத்தினை தழுவி தெய்வத்திருமகளை எடுத்திருக்கிறார். அதுவும், 60 வீதம் அதன் தாக்கமே. ஆனால், எந்தவித குற்றவுணர்வுமின்றி கதை- திரைக்கதை- இயக்கம் என்று தன்னுடைய பெயரை போட்டுக்கொண்டுள்ளார். ஒரு சம்பிரதாயத்துக்காவது நன்றி அல்லது I am Sam படத்தின் தாக்கத்தில் உருவானது என்றாவது போட்டிருக்கலாம். அதனை விஜய் செய்யவில்லை.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெற்று வந்திருக்கின்றன. ‘மை ரீச்சர்’ படத்தை தழுவி ‘நம்மவர்’ எடுத்த கமலும், ‘சோட்ஷி’யை அப்பழுக்கற்று பிரதி செய்து ‘யோகி’ எடுத்த அமீரும், சுப்ரமணியம் சிவாவும், ‘கிகியூரோ’வை தன்னுடைய சகோதரனின் கதையென கதைவிட்டு ‘நந்தலாலா’வாக இயக்கிய மிஸ்கினும் முன்னுதாரணங்கள். அதனையே, இயக்குனர் விஜய்யும் பின்பற்றியிருக்கிறார். மற்றவனின் படைப்பை தன்னுடைய ஆளுமையாக காட்டிக்கொள்வதைவிட சும்மாயிருப்பது மேல்!. இல்லாவிட்டால் மூலத்துக்கு நன்றி சொல்லியிருந்தால் கௌரவமாகவும் இருந்திருக்கும்!!
விரல்கள் பற்களின் பிடிக்குள்!
ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அஸ்டவதானி, தசாவதானி என்று பெயர்கள் எல்லாம் தமிழில் பிரபலம். ஆனால், சாப்பிடும் போது வேறு வேலைகளை செய்வது அவ்வளவு நல்லதல்ல. ஏனெனில், சாப்பாட்டின் ருசியை உள்வாங்க முடியாது. அத்துடன், சாப்பாட்டை சரியாக சப்பி சாப்பிடாமல் விட்டுவிடுவோம். விளைவு, சரியாக ஜீரணமாகாமல் வயிற்றில் குடைச்சலைக் கொடுத்துவிடும்.
சாப்பிடும் நேரம் வழமையாக ஏதாவது படித்துக் கொண்டிருப்பது என்னுடைய பழக்கம். இந்த கெட்ட பழக்கத்தை யார் சொல்லியும் விட்டதில்லை. ஆனால், அண்மையில் எனக்கொரு அனுபவம். காலை உணவாக ‘சாண்ட்விச்’சை எடுத்துக்கொண்டிருந்தேன். புத்தகத்தை ஆழ்ந்து படித்துக்கொண்டு ‘சாண்ட்விச்’சுடன் சேர்த்து வலது கை சுட்டுவிரலையும் பற்கள் பதம் பார்த்துவிட்டன. இரண்டு- மூன்று நாட்கள் தட்டச்சக்கூட முடியவில்லை. அந்த வீக்கம் இன்னும் இருக்கின்றது.
அந்தக் கணத்திலிருந்து சாப்பிடும் போது ரீவி கூட பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். என்ன வலி! இப்ப நினைத்தாலும் ஜிவ் என்கிறது. ஆகவே, சாப்பிடும் போது மற்ற வேலைகளைப் பார்க்காமல் சாப்பாட்டு தட்டை பார்த்து சாப்பிடுங்கள். அது, உங்களுக்கும்- உங்களின் விரல்களுக்கும் ரொம்பவும் நல்லது!!
மயக்கும் இசை!
பலர் கொண்டாடுவதுபோல் இளையராஜாவை நான் அவ்வளவு பெரிதாக கொண்டாடியதில்லை. ஏனெனில், நான் வளர்ந்து வந்த தருணத்தில், அதாவது 1995களுக்கு பின்னர் ரஹ்மான் என்கிற புதிய இசை வலுப்பெறத் தொடங்கிய காலம். அதற்குமுன்னர் உச்சம்பெற்றிருந்த இசைஞானி இளையராஜாவின் பாடல்களைத் தாண்டி புதியவர்கள் பலரின் பாடல்கள் வானொலி, தொலைக்காட்சி என்று ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்தது.
எனினும், இளையராஜாவின் இசையின் மீது எனக்கு விருப்பமிருக்கின்றது. ‘மாலையில் யாரோ மனதோடு பேச….’ என்று சொர்ணலதா பாடிய பாடலுக்கு நான் பரமரசிகன். அதுபோல, அண்மைக்காலத்தில் நான் அடிக்கடி கேட்கும் பாடலாக பாலுமகேந்திரா இயக்கத்தில் 1993இல் வெளிவந்த ‘மறுபடியும்’ படத்தில் எஸ்.பி.பி பாடிய ‘நலம் வாழ என் நாழும் என் வாழ்த்துக்கள்..’ பாடலும் என்னை அதிகம் ரசிக்க வைத்தது. இளையராஜாவின் அற்புதமான இசைக்கு இந்தப்பாடலும் ஒரு சான்று!
‘கமல்ஹாசன்’ என்கிற சினிமா ஆளுமை!
Posted On Thursday, July 14, 2011 at at 6:13 PM by மருதமூரான்.இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது நடிகர், நடன இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், தயாரிப்பாளர் என்று சினிமாவின் பல தளங்களின் பயனிக்கின்ற ஒரு படைப்பாளி குறித்து பேசவேண்டிய பயமும், அவசியமும் ஏற்படுகிறது. ஆனாலும், அத்தனையையும் இந்த கட்டுரைக்குள் பேசிவிட முடியாது என்பதே உண்மை.
“அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே…” என்ற பாடலுக்கு 1960, ஒகஸ்ட் 12ஆம் திகதி வெளியாகிய ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தில் 5 வயது நிரம்பிய சிறுவன் அழகாக நடித்து, இந்திய மத்திய அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெற்றுக்கொள்கிறது. அந்தக் குழந்தை எதிர்கால இந்தியச் சினிமாவில் பல தனிமுயற்சிகளை மேற்கொள்ளக் போகின்றது என்று யாரும் நினைத்திருக்கவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் ஆறு மொழிப்படங்களில் நடித்துள்ள கமல் இதுவரை 240க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அதேவேளை அவர் நடித்த பல படங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டுமுள்ளன. கடந்த வருடம் வெளியாகிய ‘தசாவதாரம்’ என்ற பெரிய தொழிநுட்ப முயற்சிகள் கொண்ட படத்திற்கு பின்னர் ‘உன்னைப்போல் ஒருவன்’ கமல் நடித்து இறுதியாகி வெளியாகியுள்ளது.
நாயகன், தேவர்மகன், இந்தியன், அவ்வை சண்முகி, அன்பே சிவம் ஆகிய திரைப்படங்களை பார்த்த பின்னரே கமல்ஹாசன் என்ற நடிகரின் ஆளுமையை அறிந்து கொள்ளும் நிலை எனக்கு ஏற்பட்டது. அதற்கு என்னுடைய வயதும் காரணமாக இருந்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட படங்களில் இயக்குனர்களின் திறனும் அதிகளவில் வெளிப்பட்டது என்பது உண்மையே.
ஆனால், அதையும் தாண்டி கமல்ஹாசன் என்ற கலைஞனை காணமுடிந்தது. இந்த படங்களின் வரிசையில், தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். தசாவதாரம் திரைப்படத்திலும் அதன் தொடர்ச்சி தெரிந்தது.
கமலின் ஆளுமை எல்லை மீறிய படங்களாக குணா, விருமாண்டி, ஆளவந்தான், குருதிப்புனல், ஹேராம், தெனாலி ஆகியவற்றை குறிப்பிடலாம். (இந்தக் கூற்றுடன் பலர் முரண்பட்டுக்கொள்ளலாம்) தொடர்ந்தும் புதிய பாத்திரங்களையும், கதைக்களங்களையும் தேடிக்கொண்டிருக்கின்ற கலைஞன் சில தருணங்களில் அதிகளவில் அக்கறை கொள்வதால் ஏற்படும் விளைவுகளாக இவற்றை கருதாலம். அல்லது இரசிகர்களின் மனநிலையின் மீது அதீத நம்பிக்கை வைப்பதும் காரணமாகலாம்.
தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ள சந்தர்ப்பங்கள் இன்னும் கிடைக்க வேண்டும் என்பதுடன், ரசிகர்களின் ரசிப்புத் தன்மையில் வளர்ச்சி வேண்டும் என்று செயற்படுகின்ற கலைஞன் கமல்ஹாசன். அந்த நோக்கங்களுடனேயே, ஹேராமும், அன்பே சிவமும், விருமாண்டியும் கொடுக்கப்பட்டது.
நம்மவர், விருமாண்டி உள்ளிட்ட சில படங்கள் வெளிநாட்டு மொழி படங்களின் தழுவல்கள் என்ற குற்றச்சாட்டும் கமல் மீது உண்டு. (‘மைரீச்சர்’ என்ற படத்தின் தழுவலே நம்மவர்). அல்லது வெளிநாட்டு படங்களில் காணப்படும் கதை சொல்லும் உத்திகளை தன்னுடைய படங்களில் அதிகளவில் கமல் உள்வாங்கிக்கொள்வதாலும் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு காரணமாயிருக்கலாம். ஆனால், கமலின் படங்களில் புதிய முயற்சிகளை காணலாம்.
திரைக்கதையாசிரியர் என்ற மிகப்பெரிய வேலையை கமல் திறமையாக வெளிப்படுத்திய படங்கள் தசாவதாரம், அன்பே சிவம் உள்ளிட்டவை. அதேபோல, திரைக்கதை அமைப்பில் சொதப்பிய படங்களாக ஹேராமையும், விருமாண்டியையும் குறிப்பிடலாம். இந்தப் படங்களில் பல பாத்திரங்களினூடு கதையை நகர்த்தி செல்லுதல் என்ற யுத்தியினை கமல் பயன்படுத்தியிருந்தார். இந்த யுத்திக்கு சொந்தக்காரர் திரைத்துறை மேதை அகிரா குரோசோவா. “கடவுள் இல்லையெண்ணு எங்கங்க சொன்னேன்… கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என்னு தானோ சொன்னேன்..” என்ற வசனங்களில் வசனகர்த்தா கமல் ஜொலிப்பதை காணலாம்.
இயக்குராக கமல்ஹாசன் தன்னை நிரூபித்த படங்கள் இல்லை என்றே சொல்லலாம். அவர், இதுவரை சாச்சி 420, ஹேராம், விருமாண்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ‘சாச்சி 420’ அவ்வை சண்முகியின் ஹிந்தி மொழித் தயாரிப்பு. அவர், இதுவரை 15க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளார். இவற்றில், தேவர்மகன், மகளீர் மட்டும், அபூர்வ சகோதரர்கள் ஆகியன குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள். தான் நடிக்கும் படங்களில் பாடல்களைப் பாடும் கமல், தான் பங்குபற்றாத படங்களான உல்லாசம், புதுப்பேட்டை ஆகிய படங்களிலும் பாடியுள்ளார்.
4 தேசிய விருதுகள் (நாயகன், இந்தியன், மூன்றாம்பிறை, களத்தூர் கண்ணம்மா), 18 பிலிம்பேர் விருதுகள் என்று இந்திய அளவில் அதிக விருதுகளை வென்றுள்ள கமல்ஹாசன், ஆங்கில திரைப்படத்துறையிரால் வழங்கப்படும் அக்கடமி விருதுகள் (ஒஸ்கார்) பரிந்துரைக்கும் சென்றுள்ளார். உலக நாயகன், சகலகலா வல்லவன், சூப்பர் அக்டர் என்று பல பட்டங்கள் கொண்டும் கமலஹாசன் ரிகர்களினாலும், திரைத்துறையிராலும் அழைக்கப்படுகின்றார்.
அதிகளவில் விமர்சனங்களை சந்தித்து வரும் கமல்ஹாசன், அந்த விமர்சனங்களை புறந்தள்ளி விடாமல் உண்மையான மனதுடன் தன்னுள் வாங்கிக்கொள்வதே அவரின் வெற்றிக்கு முழுக்காரணம் என்று சொல்லலாம். கமல்ஹாசன் என்ற படைப்பாளி, நடிகர், கலைஞர் இந்திய திரைத்துறையில் என்றும் மறக்கப்படாத முடியாத ஆளுமை!
(கமலின் 50வருட திரைதுறை பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை சஞ்சிகையொன்றுக்காக 2009 செப்டம்பர் 18ஆம் திகதி எழுதியது.)
சாரு என்கிற ரொம்ப நல்லவர்: கற்பும் காமமும் கமலும்!
Posted On at at 1:26 PM by மருதமூரான்.‘ஒழுக்கம்- கற்பு’ இந்த இரண்டுக்கான வரவிலக்கணங்களும் தருணத்துக்கு ஏற்ப மிக இலகுவாக மாற்றிக்கொள்ளப்படுகின்றன!!
மனிதன் எப்போதுமே கலவையான- ரகளையான உணர்வுகளுடனேயே வாழுகிறான். அதற்கு, அவன் எழுதுகிற தினக்குறிப்புக்கள் நல்ல உதாரணம். கோபங்கள்- குதூகலிப்புக்கள்- குற்றங்கள்- ஏக்கங்கள்- எரிச்சல்கள்- காதல்- காமம் என்று மாறிமாறி ஏதொவொரு உணர்வு அதிக தாக்கம் செலுத்தி வருகிறது. அப்படி, என்னுள் எழுந்த உணர்வுகளின் பதிவுகள் பேஸ்புக்கில் இப்படியிருக்கின்றன. திரும்பி பார்க்கிற போது ரொம்ப நல்லாயிருக்கு.
‘ரொம்ப நல்லவன்’ என்று என்னை நோக்கி சொல்லப்படும் சில தருணங்களில் நான் ‘ஏமாளி’ என்று சுட்டிக்காட்டப்படுவதாக உணர்கிறேன்!
அமைதியும், தனிமையும் அழகுதான். என்னை நானே அதிகம் புரிந்து கொள்ள முடிகிறது.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!: மாவீரன் பாரதி.
வெற்றிகளை கொண்டாடுகிற நாம், ஏன் தோல்விகளை அவ்வளவாக தாங்கிக்கொள்வதில்லை?!
உண்மைதான்...! ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் பெண்கள் இருக்கின்றார்கள்!
கடவுளும், கற்பும் இல்லையென்று சொல்லவில்லை, இருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான் சொல்கிறேன்: நடிகர் கமல்ஹாசன் (படம் மற்றும் பதில்களிலிருந்து தொகுத்தது)
இன்பமும்- துன்பமும் சேர்ந்து வருகின்ற போதுதான் ‘காதலை’ முழுமையாக ரசிக்க முடிகிறது!
உண்மைதான், வன்முறை நோக்கம் கொண்ட எவையும் நல்லதற்கல்ல!
வாழ்வின் அழகிய பக்கங்களை காட்டி சென்ற ஜீவனுக்கு நன்றிகள்.
மக்கள் விரோத ஆட்சியாளர்கள் எங்கிருந்தாலும் அகற்றப்படவேண்டும். (சாமானியனின் எதிர்பார்ப்பு)
மற்றவர்களின் அந்தரங்கங்களை எட்டிப்பார்ப்பதில் எவ்வளவு அலாதி! சமூகத்தளங்களில் அண்மைய நாட்களில் அடிக்கப்படும் கூத்துக்களை சகிக்கமுடியவில்லை!!
‘காதல்’: இன்பம்- துன்பம் இரண்டையும் நெருக்கத்தில் காட்டும் உணர்வு!
எந்த மனிதனும் தன்மீது அதிகாரம் செலுத்தப்படுவதை விரும்புவதில்லை. ஆனால், அடிப்படையில் மற்றவர் மீது ஏதோவொரு வகையில் அதிகாரம் செலுத்த விரும்புகின்றான். இது, வீடுகளிலிருந்து ஆரம்பித்து சமூகம், நாடு, உலகம் என்று விரிந்து செல்கின்றது!!
நான் வருவேன்! மீண்டும் வருவேன்!! உன்னை நான் தொடர்வேன்!!!
‘நடுநிலமை’, ‘உத்தமர்’ என்கிற சொற்பிரயோகங்களுக்கு என்னுடைய அகராதியிலிருந்து சில நாட்களுக்கு விடுமுறை!!
நண்பர்களில் முந்நாள்- இந்நாள் என்பதெல்லாம் இல்லை. தொடர்பில் இருப்பவர்கள்- இல்லாதவர்கள் என்பதே சரியென நினைக்கிறேன்.
ஐயய்யோ நெஞ்சு அலையுதடி.. ஆகாயம் இப்போ வளையுதடி... என் வீட்டில் மின்னல் ஒளிருதடி... எம்மேல நிலா பொழியுதடி...!
“உண்மை சொன்னால் நேசிப்பாயா, மஞ்சந்தின் மேல் மன்னிப்பாயா! காதல் கொஞ்சம் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல்!!”: சில்லுனு இருக்கிற வானிலைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!!
யாரும் முற்றுமுழுதாக உத்தமர்களாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. கெட்டவனாக வாழ்வது கெட்டதுதான். ஆனால், நல்லவனாக நடிப்பது அதை விடக் கெட்டது: ‘ரொம்ப நல்ல மனிதர்’ சாரு சொன்னது!!
‘விக்கிலீக்ஸ்’ யூலியன் அசன்கே ரகளையான ரசனைக்காரர். அவரின் காதல் கடிதங்களில் ரொமான்ஸ் வழிந்தோடுகிறது.
ஈழத்திலும், ஈழத்தமிழர்களிலும் அக்கறை கொண்டவர்கள் அதிகமானோர் ‘பேஸ்புக்’கிலேயே இருக்கிறார்கள்?!
கடந்து செல்கின்ற பாதை நெடுகிலும் ஆயிரமாயிரம் குன்றுகளும் குழிகளும். ஆனாலும், இலக்கு மட்டும் சிதறவேயில்லை!!
விழித்தபடி பார்த்தது இந்தக் கனவு... என்ன விந்தை என்று புரியவில்லை எனக்கு…!
பெண் குழந்தைகளின் வடிவிலேயே தேவதைகளைக் காண்கிறேன்!
உன் தியாகம் பெரிது, அர்ப்பணிப்பு மிகப்பெரிது. உன் வரலாறு எழுதப்படும் போது சில கரும்புள்ளிகளும் சேர்க்கப்படும். ஆயினும், உன் தியாகத்தின் முன் அவை அடிபட்டு போகும்!!
சுகத்தை விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்கு…!: உண்மைதான் (‘ஈசன்’ படப்பாடல் வரி)
பெரும் ஆர்ப்பரிப்புக்களுடன் ஆரம்பிக்கும் எல்லாம்; அதே ஆர்ப்பரிப்புக்களுடன் நிறைவடைவதில்லை!!
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே….!
வேரறுக்க உதவும் விபச்சாரம்: பசிக்கு முன்னால் எதுவும் புனிதமல்ல!
Posted On Wednesday, July 13, 2011 at at 11:19 AM by மருதமூரான்.‘இந்தக் கட்டுரைக்கும், மேலுள்ள பகுதிக்கும் ஏதாவது சம்பந்தமிருந்தால் நான் பொறுப்பல்ல’ என்ற முன்வைப்புடனேயே இதனை (யூலை 19, 2010) இரவு 11.18க்கு எழுத ஆரம்பிக்கிறேன்.
ஒரு சமூகத்தின் மீதான கோபம் அந்த சமூகத்தை வேரறுக்கும் வரை அநேக தருணங்களில் தொடர்கிறது. செவ்விந்தியர்கள் மீதான வன்மம் அல்லது அடக்குமுறை, செவ்விந்தியர்களை முற்றாக அழிக்கும் வரை ஐரோப்பாவிலிருந்து வந்தேறுகுடிகளான அமெரிக்கர்களுக்கு அடங்கவில்லை.
அதுபோல, ஐக்கிய இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட கைதிகளினால் அவுஸ்திரேலியாவிலிருந்த ஆதிவாசிகள் கிட்டத்தட்ட 90 வீதம் அழிக்கப்பட்டதற்கும் மற்றவனின் சொத்தின் மீதான அசையும், அதனை அடைவதற்கான வன்மமுமே காரணமாக அமைந்தன. மற்றவனை அடக்கி ஆளவேண்டும் என்பதற்காக எந்த எல்லை வரைக்கும் செல்ல நாம் (மனிதர்கள்) தயார்.
ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக கூறிக்கொண்டு தன்னுடைய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா சதிமுயற்சிகளைச் செய்து தன்னுடைய ஆதரவு நாடுகளைத் திரட்டிக்கொண்டு ஈராக் மீது போர் தொடுத்தது. ஈராக்கை வீழ்த்தியது. அணு ஆயுதம் கிடைக்கவில்லை. ஆனாலும், சதாம் உசைனை தூக்கில் போட்டது அமெரிக்கா(வின் பொம்மை நீதிமன்றம்).
தற்போது ஈராக்கின் எண்ணை வளத்தினை தங்களுக்கிடையில் அற்புதமாகப் பங்குபோட்டுக்கொண்டு இருக்கின்றன அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும். ஆனால், ஈராக்கில் தொடுக்கப்பட்ட போரினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். அங்கவீனமுற்றனர். விதைவைகளாயினர். அனாதைகளாயினர். இன்னும், இன்னும் அதன் நீட்சிகள் இன்றும் நீழ்கின்றன.
ஈராக்கிலுள்ள எண்ணை வளத்தினை அமெரிக்க வன்முறையாளர்கள் திருடிக்கொண்டிருக்க, பக்தாத் வீதிகளில் பிள்ளைகளின் ஒருநேர உணவுக்காக ஈராக் விதைவைகள் பலர் விபச்சாரத்துக்கு தயாராக இருக்கின்றனர். சதாமின் ஆட்சிக்காலத்தில் கூட ஈராக்கில் மக்கள் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பார்களோ தெரியாது.
சமூக- மத- மார்க்க ஒழுக்கம் என்ற கட்டுக்கோப்புடன் வாழ்ந்த சமூகமொன்று மிக இலகுவாக ஜனநாயகவாதிகளாக தம்மை அறிவித்துக்கொள்ளும் வன்முறையாளர்களினால் வேரறுக்கப்படுகிறது. இதே நிலைமையே ஆப்கானிஸ்தானினும் தொடர்கிறது. பிள்ளைகளின் வயிற்றுப்பசி மற்றும் கல்வி என்கிற அடிப்படை தேவைகளுக்காக விபச்சாரத்துக்கு தயாராகிற கணவனை இழந்த தாய்மார் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
வாழ்வாதாரத்தை முடக்கி, அவர்களின் வயிற்றினில் அடிப்பதன் மூலம் விபச்சாரத்தை விதைத்து ஒரு சமூகத்தின் வேரை அறுக்க முடியும் என்பதற்கு அண்மைக்கால சாட்சிகள் ஈராக்கும், ஆப்கானும். ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் பின்னால் காரண காரியங்கள் இன்றி எதனையும் ஆட்சியாளர்களும், வன்முறையாளர்களும் முன்னெடுப்பதில்லை. ஏன் சாமானியன் கூட முன்னெடுப்பதில்லை.
அண்மைக்காலமாக நான் கேள்விப்படுகிற, நேரில் பார்க்கிற சில நிகழ்வுகள் என்னுடைய மனதில் ஆழமாக பதிந்து பல கேள்விகளை கேட்டுச் செல்கிறது. எப்படி எப்படியோ இருந்திருக்கவேண்டிய சமூகங்கள் தவறான வழிநடத்தல்களினால் அல்லது தங்களுக்கிடையில் கருத்துக்களை சீர்தூக்கி பார்க்காமல் விட்டதன் விளைவை அனுபவித்து வருகிறன. இதன் தொடர்ச்சி இன்னும் இன்னும் படுபயங்கரமாக இருக்கும்.
ஒரு சமூகத்தினை சீர் குலைப்பதற்கு அந்தச் சமூகத்தின் கல்வியை சூறையாடுவதே முதற்படி. ஆனால், அதற்கும் முன்னாலுள்ள படியே வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வழிகளை முடக்குவது. அதாவது, தொழில்களை முடக்குவது. தொழில் இல்லையென்றால் உணவில்லை. உணவில்லையென்றால் பசி.
பசி வந்தால், சமூகம்- சம்பிரதாயம்- மனித ஒழுக்கம் எல்லாம் என்ன விலை என்று ஒவ்வொருவனுடைய வயிறும் கேட்கும். அந்த வயிற்றுக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்ள எந்தவழிக்கும் செல்ல பலர் தூண்டப்படுகிறார்கள். அவ்வாறு தூண்டப்படுபவர்கள் தங்களின் பசியைப் போக்க விபச்சாரத்துக்கு தயாராகிறார்கள். விளைவு, மெல்ல மெல்ல ஒரு சமூகத்தின் வேர் அறுபட ஆரம்பிக்கிறது!.
மனதில் சில நாட்களாக அழுத்திக்கொண்டிருந்த துக்கங்களை ஓரளவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன் என்கிற நிம்மதியுடன் இந்த கட்டுரையை நள்ளிரவு 11.57க்கு எழுதி முடிக்கிறேன்!!
(என்னுடைய உறவுகளின் இருப்பு கேள்விக்குறியாவதை கண்டு மனம் வெதும்பிய நிலையில் இந்தக் கட்டுரையை மீள்பதிவாக இடுவதைத் தவிர என்னால் என்ன செய்துவிட முடியும்?!)














