எங்கேயும் கிரிக்கட்: பதிவர்கள் ஆடிய கிரிக்கட்.


கிரிக்கட், கிரிக்கட்......! இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. உலகக் கிண்ணம், ஐ.பி.எல் ரி20, இனி வரக் காத்திருக்கும் இங்கிலாந்து- இலங்கை சுற்றுத்தொடர், பின்னர் வரப்போகும் எஸ்.எல்.பி.எல் ரி20 இப்படி எல்லா இடங்களிலும் கிரிக்கட். பாவம் தாய்மார் பிள்ளைகளை தொலைக்காட்சிகளுக்கு முன்னிருந்து புத்தக மேசைக்கு நகர்த்துவதற்குள் அவர்களுக்கு உயிரே போய்விடுகிறது.

இப்படி எல்லா இடங்களிலும் கிரிக்கட் நிறைந்திருக்கும் நேரத்தில் பதிவர்கள் சும்மா இருக்கலாமா? இல்லை, என்ற முடிவான முடிவுக்கு அமைய இலங்கைப் பதிவர்களில் பலர் இணைந்து கடந்த 14ஆம் திகதி (அதுதான் கலைஞர் ஜீக்கு தமிழக மக்கள் ஆப்பு வழங்கியதற்கு மறுநாள்) வெள்ளவத்தை பொது (?) மைதானத்தில், கொழும்பில் இயங்கும் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமொன்றுடன் கிரிக்கட் போட்டியில் ஆடியிருந்தோம்.

முதலிலேயே போட்டியின் முடிவைச் சொல்லிவிட்டு நான் ரசித்த விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன். 20 ஓவர்கள் கொண்ட முதலாவது போட்டியிலும், 10 ஓவர்கள் கொண்ட இரண்டாவது போட்டியிலும் இலங்கை பதிவர்கள் அணி வெற்றி பெற்றிருந்தது. (இலங்கை பதிவர்கள் அணி என்ற சொல்லுடன் ஒத்து வராதவர்கள் கொழும்பில் இருக்கும் பதிவர்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள்)

பிடிக்காத “6“ பிடித்த “1“

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கட் போட்டிகள் அறிமுகமான பின்னர் பந்து வீச்சாளர்களுக்கு அவ்வளவு மரியாதை கிடைப்பதில்லை என்று எனக்கு தோன்றுகிறது. அதுவும், இந்த ரி20 போட்டிகளில் ஆரம்பத்திலிருந்தே துடுப்பாட்டக்காரர்கள் பந்து வீச்சாளர்கள் யார் என்று பார்க்காமலேயே அடித்து நொறுக்கி விடுகிறார்கள். இதற்குள் முரளி, வோர்ன் மட்டுமல்ல இப்போது விளையாடியிருந்தால் வசீம் அக்ரம், கபில்தேவ் எல்லாம் மாட்டியிருப்பார்கள்.

பல தருணங்களில் நல்ல பந்து வீச்சாளரின் சீரான பந்துக்கு திறமையற்ற துடுப்பாட்டக்காரினாலும் 6 ஓட்டங்களை பெற்றுவிட முடிகிறது. ஆனால், சீரான முறையில் ஆட்டங்களை காண முடிவதில்லை. ராவிட், மஹெல, சச்சின் போன்றோர் அடிக்கின்ற 6 ஓட்டங்களை விட 4 ஓட்டங்களையே நான் அதிகம் ரசிக்கிறேன். அதுபோல, துடுப்பாடும் போது திறமையான பந்து வீச்சுக்கு சீரான முறையில் துடுப்பாடி 1 ஓட்டத்தினைப் பெறுவதில் எனக்கு அதிக விரும்பு உண்டு. ஆனாலும், என்ன செய்வது 6 ஓட்டங்களையும் அடிக்கவேண்டியிருக்கிறதே. (பதிவர்கள் விளையாடியது மென்பந்து கிரிக்கட் என்பதை நினைவில் கொள்ளுங்கள்)

எஸ்.பி.கோபிநாத்-

வலதுகை வேகப்பந்து வீச்சாளர், அத்துடன் நல்ல துடுப்பாட்டக்காரர். ஏனெனில், நிதானமாக ஆனால், அடித்து ஆடக்கூடியவர். என்னைப் போல் அவசரப்படமாட்டார். இவருடன் இணைந்து கடந்த வருடம் இலங்கை பதிவர்களுக்கு இடையில் டிசம்பர் 17ல் நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் பந்து வீசியிருக்கிறேன். ஆனால், துடுப்பாடும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அது கடந்த சனிக்கிழமை நிறைவேறியது. இரண்டாவது போட்டியில் கோபியும் நானும் ஆரம்ப துடுப்பாட்டக் காரர்களாக ஆடி 63 என்ற இலங்கை 6 ஓவர்களுக்குள் அடைவதற்கான வழியை கண்டிருந்தோம். (நான் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து விட்டேன்). இவருடைய பந்து வீச்சுக்கு துடுப்பாட நிறையவே ஆசை இன்னும் நிறைவேற வில்லை.

நிரூபன், அஸ்வின்- ஆடாத பவன்

இவர்கள் மூவரும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள். அதுவும், நிரூபனும், பவனும் நீண்ட ஓட்ட தாரத்தை கொண்டு பந்து வீசுபவர்கள். ஒவரின் முதல் நான்கு பந்துகளையும் சிறப்பாக வீசிவிடுகிறார்கள். ஆனால், இறுதி இரண்டு பந்து வீசுவதற்குள் களைத்து போய்விடுகிறார்கள். ஓட்ட துரத்தை குறைத்து சீராக வேகத்துடன் பந்து வீசினால் ஓட்டங்களை கட்டுப்படுத்தி விக்கட்டுக்களை வீழ்தலாம். அதைவிட இவர்களைப் பார்த்தால் பாவம் (?) என்று கொல்லக்கூடிய உடல்வாகை கொண்டவர்கள். (பவன் கடந்த ஆட்டத்தில் பங்கு கொள்ளவில்லை)

அஸ்வின் சிறப்பாகவும் வேகமாகவும் வீசுகிறார். ஆனால் அவ்வப்போது உதிரிகளையும் வழங்கிவிடுகிறார் என்னைப் போல. இவர்கள் மூவரின் பந்து வீச்சுக்கும் துடுப்பாட நிறையவே ஆசை.

லோசன், அனுதினன்-

இவர்கள் இருவரும் அந்தக்கால மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படியிருப்பார்களே அப்படி இருப்பார்கள். (சத்தியமாக நிறதைக் குறிப்பிடவில்லை. இவர்கள் இருவரும் வெள்ளைக்கார்ர்கள் மாதிரி என்பது உங்களுக்கு தெரியும்.) ஆனால், இவர்கள் இருவரும் சுழல்பந்து வீச்சாளர்கள். போட்டியொன்றில் போது விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்ற தருணத்தில் தங்களுடைய மெதுவான பந்து வீச்சின் மூலம் விக்கட்டுக்களை வீழ்த்த வல்லவர்கள். (எங்கள் அணியின் தலைவராக இருக்கின்ற அனுதினம் விக்கட்டுக்களை மாத்திரமல்ல ஆறு ஓட்டங்களை எதிரணிக்கு விட்டுக்கொடுப்பதிலும் வல்லவர்.) அத்துடன், அணிக்கு தேவையான நேரத்தில் லோசன் அடித்து ஆடக்கூடியவர்.

கங்கொன், சுபாங்கன், வதீஸ், மைந்தன்-

சீரான துடுப்பாட்டத்தை கங்கொன் வெளிப்படுத்தக்கூடியவர் என்று அவரின் துடுப்பாட்ட பாணியைப் பார்த்தலே தெரிகிறது. ஆனால் என்ன செய்வது நான் அவருடன் ஆடிய போட்டிகளில் எல்லாம் சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து விட்டார். எனினும், அந்தப்பெரிய உருவத்தை வைத்துக்கொண்டு என்னமா களத்தடுப்பு செய்கிறார். இறுதி போட்டியில் அவரின் பிடியெடுப்பு ஒன்று அருமை.

சுபாங்கனும், வதீசும் எல்லைக் கருகில் நின்று அருமையாக களத்தடுப்பில் ஈடுபடக்கூடியவர்கள். இருவரும் மிகச் சிறந்த பிடிகளை எடுத்திருந்தார்கள். அத்துடன், பல ஓட்டங்களை கட்டுப்படுத்தியிருந்தார். எனக்குத் தெரிந்த வரை இவர்கள் தங்களின் பதின்ம வயதுகளின் பின்னரே கிரிக்கட் ஆட வந்திருக்கிறார்கள்.

மற்றவர் “அமலாபால்“ புகழ் மைந்தன். இல்லாவிடில் “மைனஸ் ஓட்டக்கள்“ வேண்டி திருந்திய மைந்தன் என்றும் சொல்லலாம். தேட்மான் மற்றும் பைன்லெக் திசைகளில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தார். நான் நினைக்கிறேன். இவர் அதிகம் கனவுகளை காண்கிறார் என்று. நல்ல மனிதர்- நண்பர்.

அர்ஜூண“ மாலவன் பா -

இவரின் துடுப்பாட்டம் சிறப்பானது. நிதானித்து ஆடக்கூடியவர். ஆனால், அதையெல்லாம் தாண்டி, இவர் முதலாவது சிலிப்பில் களத்தடுப்பில் ஈடுபடும்போது, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ரணதுங்க போல இருப்பார். அதுவும், கொஞ்சம் தொலைவில் இருந்து பார்த்தால் அச்சு அசலாக ரணதுங்க மாதிரியே இருக்கின்றார். இருவருடைய உடல்வாகும் மிகவும் ஒத்தது. என்னுடைய பந்து வீச்சில் அழகான பிடியொன்றை எடுத்திருந்தார். அது அவருக்கு என்றைக்கும் மறக்காது என்று நினைக்கிறேன்.

“கௌபோய்“ மது, “சித்தப்பா“ ஆதிரை-

எங்களுடைய துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சு நுணுகங்களை எதிரணிக்கு விற்றவர்கள். அதனாலேயே எதிரணியில் ஆடியவர்கள். (இவர்கள் பணிபுரிகின்ற மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்துடனேயே போட்டி நடைபெற்றது.) நிதானித்து துடுப்பாடிய மது, விக்கட்டுக்களுக்கிடையில் வேகமாக ஓடி ஓட்டம் சேத்தார். ஆதிரையில் துடுப்பாட்டித்தைவிட நடுவர் பணி அருமை. என்னுடைய பந்து வீச்சுக்கு ஒருதடவை ஆட்டமிழந்திருந்தார். இவர்கள் இருவரும்கூட பதின்ம வயதுகளின் பின்ன கிரிக்கட் ஆட வந்தவர்கள் என்று நினைக்கின்றேன்.

நான்-

எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. முதன்முதலாக 15வது வயதிலேயே கிரிக்கட் ஆட ஆரம்பித்தேன். மெதுமெதுவாக சுழல்பந்து வீசி பின்னர் வேகப்பந்து(?) வீச ஆரம்பித்தேன். துடுப்பாட்டத்திலும் அவ்வளவு நிதானம் என்றைக்கும் இருந்ததில்லை. ஆனால், அடித்து ஆடக்கூடியவன். அதனால்தான் என்னவோ, நிதானித்து ஆடுபவர்கள் மீது ஒரு மதிப்பு. கடந்த போட்டியின் போது ஒரு ஓவரில் தொடர்ந்து 2 அகலப்பந்துகளை வீசினேன். அடுத்து வீசிய பந்தும் சேட் பைண்ஸ்சராக போய்விட்டது. ஆனால், அந்தப் பந்துக்கு விக்கட்டும் கிடைத்தது. சத்தியமாக நான் வீசிய அந்தப்பந்து எனக்கே எரிச்சலாட்டியது.

கிரிக்கட்! நல்ல அணியுடன் மீண்டும் ஆட ஆசை. பதிவுலக நண்பர்கள் ஏற்பாடு செய்வார்கள் என்று நினைக்கிறேன். கங்கொன், லோசன், சுபாங்கன் கருத்தில் கொள்க!!