இரகசியங்களின் எதிரி WIKILEAKS யூலியன்.



அன்புக்குரியவளே…


உன்னுடனான நெருக்கமும், முத்தங்களும் மிகவும் இனிமையானவை. அவை எனக்கு இன்னுமின்னும் தேவைப்படுகின்றன. திங்கட்கிழமை இரவு உனக்கு வேலைகள் இருக்கிறதா?

யூலியன்.

இன்றைய நிலவரப்படி இந்த காதல் கடிதத்தை எழுதியவருக்கு நிகராக யாரும் ஊடகங்களினாலும், மக்களினாலும் பேசப்படுவதில்லை. அமெரிக்காவிலிருந்து நம்மூர் ஆவராங்கால் சந்தி தேனீர்கடை வரை பேசப்படுகிறார். சுமார் ஐந்து இலட்சம் இரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ள இந்த யூலியனின் ஆறு காதல் ரசம் சொட்டும் மின்னஞ்சல்களை அம்பலமாக்கியுள்ளது GAWKER என்கிற இணையத்தளம். சரி யார் இந்த யூலியன்?

உலகநாடுகளின் இரகசியங்களை எல்லாம் பரகசியமாக்கி குறுகிய காலத்துக்குள்ளேயே உலகத்தின் முழுக்கவனத்தையும் தன்பக்கம் விக்கிலீக்ஸ் என்கிற பெயரின் மூலம் ஈர்க்க வைத்தவர் யூலியன் பவுல் அசான்ஞ். உலகின் சாதனையாளர்கள், வீரர்கள், நட்சத்திரங்களின் அந்தரங்களை அறிவதில் (மற்றவர்களின்) அனேகருக்கு அலாதி பிரியம். அதுவும், நாடுகளின் அந்தரங்க விடயங்களை வெளியிடப்படும் போது அதனை அறிந்து கொள்வதில் எத்தனை பேர் ஆர்வமாக இருப்பார்கள். அதுபோல், ஊடகங்களுக்கும், மக்களுக்கும் நல்ல முகத்தைக்காட்டி நிற்கின்ற நாடுகளின், தலைவர்களின் மறுபக்கம் எப்படிப்பட்டது என்பதை வெளியிடுபவர் எவ்வளவு பிரபலமாக இருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்.

யூலியன் பவுல் அசான்ஞ்சின் பின்னணி என்ன? அவுஸ்திரேலியாவின் குயின்லான்ட் மாகாணத்தின் ரவுண்வில்லா (கிராமம்) பகுதியில் 1971ஆம் ஆண்டு பிறந்தவர். அடிப்படையில் கணிதத்தையும், பௌதிகவியலையும் கற்றவர். ஆனாலும், 13வது வயதில் தாயார் பரிசளித்த கணனியின் அறிமுகத்தால் அதன்மேல் கொண்ட மோகத்தினால் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் கணனி தொழிநுட்பத்துறையிலும் பயின்றார். அத்துடன், இலசவ மென்பொருள் வடிவமைப்பு, வலையமைப்புக்களை உடைப்பது (உள்வலைக்கட்டமைப்புக்களை உடைப்பது) என்பதில் தன்னுடைய ஆர்வத்தை வளர்த்து வல்லுனரானார். இவற்றின் தொடர்ச்சி பாரிய இரகசியங்கள் என்று பாதுகாக்கப்படுகின்ற விடயங்களை உலகம் பூராகவும் இணையத்தின் மூலம் பரவச்செய்து தொடர்கிறது. யூலியனின் இரகசியமுடைப்பில் கிடைத்த இரசனையுள்ள சில தகவல்களைப் பாருங்கள்.


சில இரசனையான இரகசியங்கள்:

பாகிஸ்தானின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி அஷிப் அலி சர்தாரிதான் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதித்துவிடும்என்று அமெரிக்காவிடம் கூறியுள்ளார் சவுதி அரேபியாவின் மன்னார்.

ரஸ்யாவின் பிரதமர் விளாடிமிர் புடின் அடங்காதநாய் (அல்பாடொக்)” என்று அமெரிக்க தூதரக தகவல் கோப்புக்களில் கூறப்பட்டுள்ளது.

லிபியாவின் அதிபர் முஹமட் கடாபி யாரையும் நம்பமாட்டார். பெண் பித்தர். உக்ரைன் நாட்டு மருத்துவமாதுடன் அந்தரங்க தொடர்புள்ளவர். மருத்துவமாதுக்காக .நா.வுக்கான தன்னுடைய பயணத்தையே காலம்தாழ்த்தி வைத்தவர்இதுவும் அமெரிக்காவின் தூதரக வார்தைகள்.

துருக்கி அதிபருக்கு வாசிப்பு பழக்கம் இல்லை. நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர்அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் பரிமாறியவை.

ஜேர்மனின் சான்சிலர் அஞ்சல மேர்கல் நேர்மையற்றவர், தன்னுடைய பொறுப்புக்களை அதிக தருணங்களில் தட்டிக்கழிப்பவர்.” அமெரிக்கா.

யூலியன் 2006ஆம் ஆண்டில் வருமான நோக்கமற்ற ‘விக்கிலீக்ஸ்’ புலனாய்வு செய்தி இணையத்தளத்தைத் தொடங்கினார். தனக்கு நம்பிக்கையானவர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு மிகவும் சாதுரியமாக செயற்பட்டு இந்த இரகசிய ஆவணங்களைப் திரட்டியுள்ளதுடன், பல நாடுகளின் தூதுவராலயங்களின் கணனிகளுக்கு நவீன உத்திகளின் மூலம் புகுந்து தகவல்களைத் திரட்டியுள்ளார். தன்னுடன் பணியாற்றுபவர்களின் பெயர் விபரங்களை வெளியிட மறுக்கும் யூலியன், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்கிற அச்சத்தினால் சுவீடன், பிரித்தானியா, துருக்கி மற்றும் தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பலநாடுகளில் வசித்து வந்துள்ளார். அத்துடன், தான் எப்போதுமே பயணித்தபடி இருப்பதாக ஊடகவியலாளர்களிடம் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் பொய்முறைப்பாடுகளை முன்வைத்து மோதல் முன்னெடுப்புக்களை ஆரம்பித்ததாக மனித உரிமை ஆர்வலர்களினதும், எதிர்ப்பு நாடுகளினதும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அமெரிக்காவுக்கு, விக்கிஸீக்ஸ் என்கிற பெயரில் பாரிய தலையிடியைக் கொடுத்தவர் யூலியன் பவுல் அசான்ஞ். உலகின் மிகவும் இரகசியமான- அதிகாரம் மிக்க பாதுகாப்பு அமைப்பாக கொள்ளப்படுகின்ற பெண்டகனுக்குள்ளேயே தன்னுடைய கைவரிசையைக் காட்டிய திறமையை அவருக்கு உண்டு.

“அமெரிக்க இராஜாங்க செயலாளர் கிலாரி கிளின்டன், வெளிநாடுகளிலுள்ள தூதுவராலயத்திலுள்ள அதிகாரிகளை உளவு பார்க்க பணித்தார்” என்ற விடயத்தை வெளியிட்டு அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளிடமே முகம் பார்த்து பேசுவதற்கு தயக்கத்தை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ்.

உள் விவகாரங்கள் வெளிவருவதை விரும்பாத பல நாடுகள் இணைய உலகின் பயங்கரவாதியாக யூலியனை சித்தரிக்கின்றன. அதேவேளை, அமெரிக்க எதிர்ப்பு நாடான ஈரான், விக்கிலீக்ஸ்சும்- யூலியனும் அமெரிக்காவின் ஏமாற்று ஏற்பாடு என்கிறது. ஆனால், உலகம் பூராகவும் இளைஞர்கள் நவீன ஊடகத்தின் அவதாரமாக விக்கிலீக்ஸ்சும்- யூலியனும் விளங்குவதாக கருதுகின்றனர். அதனாலேயே, அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

“அநீதிகளைத் தடுப்பதற்கான முதல்படி, அநீதிகள் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது தான்” என்று குறிப்பிட்டுள்ள யூலியனுக்கு, உலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடமிருந்து விருதுகளையும் பெற்றுள்ளார். 2006ஆம் ஆண்டு விக்கிஸீக்ஸ் இணையத்தளத்தை யூலியன் ஆரம்பித்திருந்தாலும் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட அத்துமீறிய போர் குற்றங்களுக்கான ஆதாரத்தை வெளியிட்டதன் பின்னரே அவர் அதிகம் கவனிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக உலக நாடுகளின் இரகசியங்களும் கசிய விடப்பட்டதை அடுத்து யூலியனை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்று பல நாடுகள் திட்டமிட்டன. அதன் விளைவாக, யூலியன் இருபெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம் சர்வதேச பிடியாணையை இன்ரப்போலினூடு வெளியிட்டது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த யூலியன் தான் சம்பந்தப்பட்ட பெண்களின் விருப்பத்துடனேயே பாலியல் உறவை வைத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளதுடன், விக்கிலீக்ஸினூடு இரகசியங்கள் வெளிவருவதை விரும்பாதவர்கள் இணைந்து தனக்கு எதிராக திட்டமிட்டு வடிவமைத்துள்ள குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், பிரித்தானிய பொலிஸாரிடம் கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதி சரணடைந்த யூலியன் 16ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் ஊடகங்களினால் அதிகம் கவனிக்கப்பட்ட தருணம்:

2009 ஆண்டின் இறுதிப்பகுதியில் அமெரிக்கா தொடர்பான பல்வேறு பாதுகாப்பு-இராணுவ இரகசியங்களை வெளியிட்டுள்ளதுடன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டமை தொடர்பாக பலநூறு ஆவணங்களை வெளிப்படுத்தியது.

அடுத்து, 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு உலகில் வெளியான முதலாவது மிகப்பெரிய இரகசிய ஆவணத்தொகுப்பு என்ற பெருமையுடன் விக்கிலீக்ஸ் கவனம் பெற்றது.

குறித்த ஆவணங்களில் முக்கியமாக, “ஈராக்கின் மீது அமெரிக்கா வேண்டுமென்றே பொய் முறைப்பாடுகளைச் சாட்டி போர் தொடுத்தது. அமெரிக்காவின் பிரதான நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே. அதற்கு தடையாக இருப்பவர்களை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும். இவ்வாறு பொய் குற்றச்சாட்டுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட போரில் 2004ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டுவரை 109,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பொதுமக்கள் மட்டும் 66,081 பேர். நாளொன்றுக்கு அண்ணளவாக 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், இவற்றையெல்லாம் அமெரிக்காவும், அதன் சார்பு ஊடகங்களும் வெளியிடவில்லை”

எனினும், தேசிய பாதுகாப்பு என்கிற விடயத்தைப் பயன்படுத்தி எப்படியாவது யூலியனைக் கையகப்படுத்தி விட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனாலும், பிரித்தானியாவில் பிணை வழங்கப்பட்டுள்ள யூலியனை உடனடியாக நாடு கடத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ள சட்ட வல்லுனர்கள், அவ்வாறு செய்வதற்கு சில காலம் தேவைப்படலாம் என்று கூறுகின்றனர். இதனிடையே, உலகம் பூராகவும் யூலியனுக்கான ஆரதவு அதிகரித்துள்ளதுடன், அவருக்கான சட்ட ஆலோசனைகளையும், நிதியுதவியையும் வழங்கும் பொறுப்பை பல நாடுகளிலுமுள்ள இளைஞர் குழுக்கள் ஏற்றுள்ளன. அமெரிக்கா என்கிற அதிகாரத்தினை அசைத்துப் பார்த்த யூலியனை அமெரிக்காவின் நட்பு நாடுகள் கூட மட்டுப்படுத்த பாரியளவில் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அத்துடன், அமெரிக்க மக்களிடையேயும் யூலியனுக்கான ஆதரவு அதிகரித்துச் செல்கின்றது.

உலக வரலாற்றில் 25 வருடங்களுக்கும் மேலாக தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியை (ஒவ்வொருநாளும்) தொடர்ச்சியாக நடத்திய பெருமை அமெரிக்க சீ.என்.என் தொலைக்காட்சியின் லாறி கிங்கிங்கு (Larry King) உண்டு. கடந்த நத்தார் தினத்துடன் குறித்த நேர்காணல் நிகழ்ச்சியிலிருந்து ஓய்வு பெற்றார். உலகின் முக்கிய தலைவர்கள் பலரை நேர்கண்டவர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டனை 29 தடவைகள் நேர்கண்டவர். அவரின் ஓய்வுபெறும் தருணத்தில் அவர் நேர்காணல் செய்யவேண்டிய பிரபலமாக யூலியன் பவுல் அசான்ஞ் இருந்தார் என்று லாறி கிங்கின் பிரியாவிடை நிகழ்வில் பங்குபற்றிய அமெரிக்காவின் பல சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் கூறியிருந்தார்கள்.

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை சுவீடன் அரசு தடைசெய்யதை அடுத்து சில மணிநேரத்துக்குள்ளேயே அதனுடைய 700க்கும் அதிகமான நிழல் தளங்கள் சுவிஸ் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இயங்கத் தொடங்கின. இந்த நிழல் விக்கி தளங்களை இளைஞர்களே அதிகமான பிரச்சாரப்படுத்தி விக்கிலீக்சுக்கு ஆதரவு அளித்தனர். அத்துடன், விக்கிலீக்ஸ்சுக்கு நன்கொடைகளை பெற்று வழங்க இணைக்கப்பட்டிருந்த கணக்கினை பேபால் (PAYPAL) நிறுவனம் இடைநிறுத்தியதை அடுத்து, அதிக இணைய நெரிசல்களை உண்டுபண்ணி பேபாலின் செயற்பாடுகளை இளைஞர்கள் முடக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, விக்கிலீக்ஸ்- யூலியனுடனும் இணைந்து இயங்கியவர்கள் சிலர் தற்பொழுது ஓப்பின்லீக்ஸ் என்கிற இணையத்தளைத்தை ஜேர்மனியில் ஆரம்பித்துள்ளனர். யூலியன் முறையற்ற விதத்தில் இரகசிய ஆவணங்களை பயன்படுத்தியிருந்தார். அத்துடன், அவர் தங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டுக்களையெல்லாம் ஓப்பின்லீக்ஸ் குழுவினர் முன்வைத்துள்ளார்.

விக்கிலீக்ஸினை பலர் நவீன ஊடகத்தின் புதிய வடிவமாகப் பார்க்கின்றவர். சிலர் அப்பட்டமான அத்துமீறலின் வடிவமாகப் பார்க்கின்றனர். அதுபோலவே, யூலியனை பலர் ஊடகக்காரராகவும், சிலர் இணைய திருடராகவும் பார்க்கின்றனர். எது எவ்வாறு இருந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட பலம்வாய்ந்த வல்லரசுகளின் வரவேற்பறையிலிருந்து அடுப்பங்கரை வரை சென்று ஆதரங்களைத் திரட்டும் வல்லமையை விக்கிலீக்ஸ்சும்- யூலியனும் பெற்றிருந்தார்கள் என்பது இன்னும் சில ஆண்டுகளுக்கு வியப்புடன் பார்க்கப்படும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கு யூலியனும் சாட்சி!.

விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் பவுல் அசான்ஞ் தன்னுடைய சுயசரிதையை எழதுவதற்காக இரண்டு புத்தக வெளியீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இலங்கை மதிப்பின் படி 18 கோடி ரூபாய்களுக்கு இந்த ஒப்பந்தத்தை யூலியன் மேற்கொண்டுள்ளார். சுவீடன் பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்துள்ளதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து வெளி வருவதற்கு சட்ட உதவிகளைக் பெறுவதற்கு அதிகமாக பணம் தேவைப்படுவதாகவும், அதனாலேயே தன்னுடைய சுயசரிதையை தான் எழுத முன்வந்துள்ளதாகவும் இலண்டனிலிருந்து வெளிவரும் “சன்டேரைம்ஸ்” பத்திரிகைக்கு யூலியன் குறிப்பிட்டுள்ளார்.

(ஜனவரி 2011இல் எழுதியது.)