அதிகாரத்தினை பெறும்வரையே அதிகாரம் கசக்கிறது
Posted On Tuesday, February 8, 2011 at at 2:43 PM by மருதமூரான்.“உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் மாயாவதி, தன்னுடைய பாதணியை மெய்பாதுகாப்பு வீரரைக்கொண்டு துடைத்தார்.” இந்திய ஊடகங்களில் இன்று கண்ட செய்தி இது. அதிகாரத்தினை பெற்றுவிட்டால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது என்பதற்கு சின்ன எடுத்துக்காட்டு. அதுவும், தலித் (?) தலைவர் ஒருவர் இப்படிச் செய்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டு சில இந்திய ஊடகங்கள் அடிக்கும் கூத்துக்கள் சொல்லிமாளாது.
எந்த மனிதனும் தன்மீது அதிகாரம் செலுத்தப்படுவதை விரும்புவதில்லை. ஆனால், அடிப்படையில் மற்றவர் மீது ஏதோவொரு வகையில் அதிகாரம் செலுத்த விரும்புகின்றான். இது, வீடுகளிலிருந்து ஆரம்பித்து சமூகம், நாடு, உலகம் என்று விரிந்து செல்கின்றது.
“அரசாங்கம் தோல்வியடைந்தால் மூன்று மாதங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களை கலைக்க முடியும். இதனை மற்றவர்கள் நினைவில் கொள்ளவும்.” இவ்வாறு இலங்கையின் பிரதி அமைச்சர்களில் ஒருவரான எச்.ஆர். மித்ரபால அண்மையில் மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
‘தேர்தல் நியமங்களுக்கு அமைய விண்ணப்பங்களை தயார் செய்ய முடியாமல் போனமை’ என்கின்ற ஆளும் கட்சியின் தவறினையும், ‘மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்துவிடுவார்கள்’ என்கிற அச்சத்தையும் அதிகாரத்தினைக் கொண்டு மிக இலகுவாக புறந்தள்ளிவிட அந்த பிரதி அமைச்சருக்கு முடிந்திருக்கிறது.
இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தன்னுடைய பதவிக்காலத்தின் போது ஜனநாயகத்துக்கு முரணாக தெரிவித்த கருத்துக்களை அனேகர் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால், அவரின் கைகளிலிருந்து அந்த அதிகாரம் மற்றவர் கைக்கு மாறி, அதிகாரமற்றவர் என்ற நிலைக்கு வந்தவுடன் ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றி அவரால் அதிகம் பேசமுடிகிறது.
ஜெயலலிதா ஜெயராம் தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது தடவை பதவி வகித்த காலத்தில் ஒருநாள் இரவு தமிழகத்தின் இந்நாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அதுவும், பொலிஸார் கருணாநிதியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றதை தொலைக்காட்சிகள் காட்டின. அப்போது, ஜனநாயகம் குறித்து பேசிய கருணாநிதியால், இன்று தன்னுடைய ஆட்சிக்கு எதிராக பேசிவிடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முடிகிறது. அரசியலில் மாத்திரமல்ல, இப்படித்தான் எல்லா இடங்களிலும் அதிகாரம் வேலை செய்கிறது.
“அதிகாரம் யார் கையில் இருந்தாலும் அதிகாரமே” அண்மையில் யாரோ ஒருவருடைய பேஸ்புக் பக்கத்தில் படித்தது. மிகவும் சுருக்கமாக அதிகாரத்தின் போக்கினை இந்த வாக்கியத்தின் மூலம் சொல்ல முடிந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் அதிகாரத்தினை பெறுவதற்கு போராடுகின்றோம். சிலர் அதில் வென்றுவிடுகிறார்கள். அதில் சிலர் அதிகாரத்தின் கோரத்தினை எளியவர்கள் மீது காட்டுகின்றனர்.
அதிகாரத்தைப் பெற்றதால் ஹிட்லரும், முசோலினியும், இடி அமீனும், இப்போது கொஸ்னி முபாரக்கும் சர்வாதிகாரிகள். ஆனால், அதிகாரத்தை பெறமுடியாதவர்களுக்குள் எத்தனை ஹிட்லர்களும், கொஸ்னி முபாரக்குக்களும் இருக்கிறார்களோ?!
தன்னுடைய அரசியல் ஆரம்ப காலங்களில் மனித உரிமைகளுக்காக போராட முடிகின்ற ஒருவரால், அவருடைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய அனுமதிக்க முடிவதில்லை. இதுதான் அதிகாரத்தின் பலம்!!.
வறிய மீனவர்களின் உயிர்கள் மலிவானவையா?!
Posted On Tuesday, February 1, 2011 at at 9:33 AM by மருதமூரான்.திருகோணமலை துறைமுகத்தில் தரித்துநின்ற கடற்படையினரின் இரு மோதல் படகுகளை விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பிரிவு 1995 ஏப்பிரல் மாதத்தில் தாக்கியழித்தது. குறித்த தாக்குதலுடன் 3ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது. எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கின்றது. அன்று இரவு யாழ்ப்பாணத்தின் வடமராட்சிக் கிழக்கு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நான்கு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நான்கு குடும்பங்கள் தங்களுடைய குடும்பத்தலைவர்களை இழந்தன. அந்தக் குடும்பங்களின் சில பிள்ளைகள் கல்வி முன்னெடுப்பை விட்டு, தொழில் செய்ய வேண்டி ஏற்பட்டது.
1990களின் ஆரம்பத்திலிருந்து 2009 மே மாதம் வரையில் வடக்கு- கிழக்கு கடற்பகுதிகளில் தங்களுடைய வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்து வந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு, விடுதலைப் புலிகள் என்ற காரணமும் கூறப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், வடக்கு- கிழக்கு கரையோரங்களில் வாழும் மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களில் கணவன்மரை, பிள்ளைகளை தொழிலிலுக்கு அனுப்பி பறிகொடுத்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். இலங்கை மோதல்களுக்குள் தங்களுடைய கணவன்மாரை பறிகொடுத்தவர்களில் அதிகமானோர் மீன்பிடி சமூகத்துக்குள்ளேயே இருக்கின்றார்கள்.
கடலில் போராடி தங்களுடைய வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளும் மீனவ சமூகம் இறுதிவரை அதற்க்காக போராட வேண்டியிருக்கிறது. கடல் கொந்தளிப்பு, மழை, சூறாவளி, அதிகாரங்களின் துப்பாக்கிகள் என்று எதனையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மீண்டும் மீண்டும் கடலலைகளுக்கு மத்தியில் போராடி வேண்டியிருக்கிறது.
இதே பரிதவிப்பை தமிழ்நாட்டு மீனவர்களும் 1984களில இருந்து சந்தித்து வருகிறார்கள் என்பது மிகவும் கவலைக்கிடமானது. என்ன இலங்கை மீனவர்கள் சந்தித்த உயிர் இழப்புடன் ஒப்பிடுகையில் இது குறைவு அவ்வளவே. எனினும், இதுவரை சுமார் 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இறைமைதங்கிய(?) துப்பாக்கிகளினால் பலிவாங்கப்பட்டிருக்கிறார்கள்;. மனித உரிமைகள், விழுமியங்கள் பற்றியெல்லாம் இவர்கள் எப்படி வாய் கூசாமல் பேசுகின்றார்கள் என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. ஆனாலும், வெளியில் பேசிவிடவா முடியும்.
தமிழக சட்ட மன்ற தேர்தல்கள் அண்மித்துள்ள நிலையில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுகின்றமை அரசியற் தலைவர்களினால் மிகப்பெரிய அளவில் நோக்கப்படுகின்றது. தேர்தல் காலங்கள் வந்தால் தான் எல்லாப் பிரச்சினைகளும் மேடைக்கு வருகின்றன. இல்லாவிட்டால் சில தந்திகள், அறிக்கைகளுடன் அவை கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. இது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும்.
ஆனாலும், தங்களின் வாழ்வாதாரத்தை பெற்றுத் தருபவர்களை இழந்து விட்டு வறிய தமிழக மீனவக் குடும்பங்கள் அல்லற்படுவது தொடர்ந்து வருவதை அனுமதிக்க முடியாது. நலிந்த வடக்கு- கிழக்கு மீனவ சமூகம் சந்தித்து நிற்கின்ற பிரச்சினைகளையே தமிழக மீனவ சமூகமும் சந்தித்து நிற்கின்றது. பெரியண்ணனால், தன்னுடைய தம்பியை கட்டுப்படுத்த முடியவில்லையா? அல்லது அதற்கு முயற்சிக்கவில்லையா?? என்று விளங்கவில்லை.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் (இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவர்) நிருபமா ராவ் இலங்கை வந்திருக்கிறார். பேசியிருக்கிறார். அறிக்கைவிடுவார். போய்விடுவார். ஆனால், தமிழக மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதை தடுப்பதற்கான முழு உத்தரவாதத்தை அவரால் வழங்கமுடியுமா??? பதில் அனைவருக்கும் தெரியும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் என்று.
இந்திய பாரிய ரோலர் படகுகளின் அத்துமீறல்.
இலங்கை- இந்திய பாக்கு நீரிணைக் கடற்பகுதியில் தொடர்ந்தும் பிரச்சினை நிலவி வந்திருக்கிறது. ‘கச்சதீவு’ கையளிப்புக்கு முன்னர் இருந்து. அடிப்படையில் 1990களுக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பாரிய படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் இந்திய ரோலர் படகுகள் எந்தவித இடையூறும் இன்றி இலங்கை கடற்பகுதிகளுக்கு வந்து மீன்களை அள்ளிச் சென்றிருக்கின்றன. அதனையே, இப்போதும் செய்ய முனைகின்றன.
யாழ்ப்பாணத்திலுள்ள கடற்தொழில் சங்கங்கள் இணைந்து பாரிய ரோலர் இழுவைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதற்கு தடை விதித்தன. எனினும், வல்வெட்டித்துறையில் 17 பாரிய இழுவைப் படகுகள் தொடர்ந்தும் தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து, பாரிய இழுவைப் படகுகளைக் கொண்டு மீன் பிடிப்பதற்கு தடைவிதிக்குமாறு யாழ்ப்பாண கடற்றொழில் சங்கங்கள் இணைந்து இலங்கை அரசாங்கத்தை கோரின. இதனைக் கருத்திற்கொண்டு பாரிய இழுவைப் படகுகளில் மீனிபிடிப்பதற்கு அரசு தடை விதித்தது.
இது, மீனவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில், ஆழம் குறைந்த பாக்கு நீரினைப் பகுதியில் பாரிய ரோலர் இழுவைப் படகுகளின் மூலம் மீன்கள் பிடிக்கப்படும் போது அந்தப் பகுதியிலுள்ள பவளப்பாறைகள் சிதைக்கப்படுகின்றன. இதனால், மீன்களுக்கு தேவையான பிளாந்தன்கள் உற்பத்தி தடைப்படுகின்றன. இதனால், அந்தப் பகுதியில் மீன்வளம் குறைவடைகின்றன. இதுவே, அதற்கான அடிப்படைக் காரணமாகும்.
எனினும், இந்திய பாரிய ரோலர் இழுவைப் படகுகள் தொடர்ந்தும் இலங்கை மீனவர்களின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்து வருகின்றனர். அத்துடன், இலங்கை மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை தடுப்பதற்கு யாழ்ப்பாண மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழக மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் பேச்சுக்கள் அவ்வப் போது நடந்து வருகின்றன. ஆனாலும், அத்துமீறல் தொடர்கின்றன.
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இந்திய ரோலர்களின் அத்துமீறலும் வேறுவேறானவை. இரு விடயங்களும் தனித்தனியாக பேசித்தீர்க்கப்பட வேண்டும். அதனைவிடுத்து, இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எளியவர்களின் உயிர்கள் என்னவோ மலிவானவை என்று துப்பாக்கிகள் மட்டுமல்ல, பலரின் புத்திகளும் சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!