இடம்பெயர்வது மட்டுமல்ல, சிதைந்த தேசத்தில் மீண்டும் கால் வைப்பதும் வேதனையானது.


பல காலமாக பிரிந்திருந்த தாய் மண்ணுக்கு செல்வது எனக்கு சிலிர்ப்பாகத்தான் இருந்தது. ஆனால், அந்த சிலிர்ப்புக்கு பின்னாலுள்ள இழப்புக்கள் பயங்கரமானது என்பதை நினைத்த போது எல்லாமே வெறுமையாகப் பட்டது. இதனை, இலங்கையின் வடக்கு- கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்களில் அனேகர் உணர்ந்திருப்பீர்கள்.

பத்து வருடங்களின் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது 10.10.2010 அன்று மருதங்கேணி கடலில் நீந்தினேன் (குளித்தேன்). அது மனதுக்கு மகிழ்வைத் தந்தது உண்மை. ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களைக் கொண்டிருந்த வடமராட்சிக் கிழக்கின் கடற்கரைகள் வெட்ட வெளிகளாக வெம்மையையும், அனல் காற்றையும் அதிகமாக வாழங்கிக்கொண்டிருக்கிறன இப்போது. அதிக தென்னைமரங்கங்களும், பனை மரங்களும் பலிவாங்கப்பட்டு விட்டன.

சொந்த ஊரில் பள்ளிக்காலங்களில் என்னுடன் படித்த பலர் இன்று உயிருடன் இல்லை. அதுபோல, பலர் அவயங்களை இழந்துள்ளனர். அல்லது மோதல்களின் வடுங்களை உடலில் வாங்கியிருக்கிறார்கள். இதுதவிரவும், குறிப்பிடத்தக்களவானோர் சிறுவயதிலேயே திருமணம் என்கிற பந்தத்துக்குள் பல வந்தமாகவும், வேறு வழியின்றியும் புகுந்திருக்கிறார்கள். (இது தவிர்க்க முடியாமல் நிகழ்ந்திருப்பதுதான் வேதனையானது)

இராணுவத்தினரின் வெற்றிலைக்கேணி தரையிறக்கத்துடன் 1990 ஆம் ஆண்டில் ஆரம்பித்த யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மக்களின் அவதிப்பட்ட அகதி வாழ்வு இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. அதுதவிரவும், 2004ஆம் ஆண்டு சுனாமியும் தன்னுடைய பங்குக்கு வடமராட்சிக் கிழக்கின் 90 வீதமான பகுதிகளை சுருட்டிச் சென்றது.

உயிரிழப்புக்களும், சொத்திழப்பும் எம் மக்களுக்கு புதிதல்ல. அதிலிருந்து விரைவாக வெளி வந்து மீண்டும் தங்களை நிலை நிறுத்துகிற தகுதியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமூக அபிவிருத்தி, வளப்பரம்பல், உள்கட்டுமானம் போன்ற அடிப்படையான விடயங்களில் 20 வருடங்களுக்கு முன் இருந்த நிலையில் இன்றும் இருக்க அவர்கள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த இருபது வருடங்களாக ஓலைக் கொட்டில்களில் (குடிசைகளில்) வாழப் பழக்கப்பட்டுவிட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் தலைதூக்குகிற தருணம் பார்த்து இயற்கையோ, இனமோதல்களோ அவர்களை தோற்கடித்து விடுகிறது. எதிர்காலத்தில் இந்த இரண்டு வில்லன்களும் தலைதூக்கக் கூடாது என்று அனைவரது மனங்களும் வேண்டுகின்றன.

வடமராட்சிக் கிழக்கின் கடற்கரை வீதிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட காணிகள் அனைத்தும் இராணுவத்தினரின் அதிகாரத்தின் கீழேயே தற்போது இருக்கிறது. இந்த நிலப்பகுதிகள் சுனாமி தாக்கத்துக்குப் பின்னர் பாதுகாப்பற்ற வலயம் என்று கூறப்பட்டு மக்கள் அகற்றப்பட்டிருந்தனர். ஆனால், அந்த இடங்களிலேயே தென்னை மரங்களை அதிகளவில் கொண்டிருந்த காணிகள் ஏக்கர்கணக்கில் இருக்கின்றன. இருந்தன.

தொடர்ந்து வந்த 20 வருட இடப்பெயர்வுகளுக்குப் பின்னர் கடந்த மாதம் வடமராட்சிக் கிழக்கின் மக்களில் குறிப்பிட்டளவானோர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மீளக்குடியமர்வாவது நிரந்தரமானதாக இருக்க வேண்டும். அவர்களின் எதிர்கால மீள் எழுகையாவது அவர்களின் அனைத்துவித அபிவிருத்தியையும் நோக்கியதாக இருக்கட்டும். நாங்கள் எங்கு சிதறியிருந்தாலும் தாய் மண்ணின் பாசமும், வாசமும் ஏனோ மறந்து போவதில்லை.

எந்திரன்: நான் எதிர்பார்த்ததை விட மேல்!


விரும்பியோ விரும்பாமலோ சில விடயங்களை நாங்கள் எல்லோரும் பேச வேண்டியிருக்கிறது. அதற்கு தற்போதைய உதாரணம் எந்திரன்!. சில காலத்துக்கு முன்னைய உதாரணம் பராக் ஒபாமா. நாங்கள் விரும்பாவிட்டாலும் மற்றவர்களுடனான பேச்சுக்களின் போது எந்திரன் தலைதூக்குகிறான். ஆனாலும், எந்திரன் தொடர்பிலான பேச்சுக்களில் நானும் விரும்பத்துடனேயே ஈடுபடுகிறேன்.

இந்தியாவின் மிகப்பெரிய நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், முதலீடு என்று பல ‘மிகப்பெரிய’ சக்திகளின் கூட்டு முயற்சியினால் உருவாகிய எந்திரன்: தி ரோபோட் படத்தினை வெளியாகி ஒருவாரத்தின் பின்னரே எனக்கு பார்க்க கிடைத்தது.

ரஜினி- ஷங்கர் கூட்டணியில் உருவாகிய சிவாஜி படத்தினை பலத்த எதிர்பார்ப்புக்களுடன் பார்க்க திரையரங்குக்குச் சென்று சிறிய ஏமாற்றத்துடன் திரும்பியது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பின்னர் எந்தப் படங்கள் மீதும் எதிர்பார்ப்பொன்றையும் வைப்பதில்லை. அதுகூட நன்மைக்குத்தான் என்று பல படங்கள் எனக்கு உணர்த்தியிருக்கின்றன.

எந்திரன் பார்க்கச் செல்லும் போது மனதில் வேறு எண்ணங்களுடனேயே சென்றேன். ஆனாலும், படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் போது, படம் புதுசாக, நல்லாயிருக்கே என்கிற மனநிலையிலேயே வந்தேன். ஆனாலும், அற்புதமான படம் என்று என்னால் கொண்டாட முடியவில்லை. அதனால், ரஜினி- ஷங்கர் ரசிகர்களே மன்னித்துக்கொள்ளுங்கள். அண்மைக்காலத்தில் நான் கொண்டாடிய படங்களில் ‘3 இடியட்ஸ்’ முக்கியமான படம்.

ரஜினி நடித்த படங்களில் முள்ளும் மலரும், தில்லு முல்லு ஆகிய இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை. இரு படங்களிலும் இயல்பான நடிப்பை அவர் வழங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு. அதுதவிர, நடிகர் ரஜினியை மற்றொரு நிலைக்குக் கொண்டு சென்ற பாட்ஷா திரைப்படத்தினை அதிக தடவைகள் பார்த்திருக்கிறேன். இன்றும் சலிக்கவில்லை.

அதுபோல, இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் இந்தியன் படமே முதன்மையானது என்கின்ற எண்ணம் என்னிடத்தில் உண்டு. அந்த எண்ணம் எந்திரன் பார்த்த பின்னும் மாறவில்லை.

எந்திரன் படத்தின் திரைக்கதை பத்து வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்று ஷங்கரினால் கூறப்பட்டது. ஆனால், படம் பார்த்த பின்னர் தோன்றியது என்னவென்றால் பத்து வருடங்களுக்கு முன்னர் எந்திரன் எடுக்கப்பட்டிருந்தால் அதிக தொழில்நுட்ப-வரைகலை தொங்கல்களில் படம் மாட்டியிருக்கும் என்று. அதனால், தற்போது அது எடுக்கப்பட்டதே பொருத்தமானது.

எந்திரன் படத்தின் அனேக விடயங்கள் என்னை கவர்ந்திருந்தது. அதில், சிட்டி ரஜினியின் வில்லனாக உருமாற்றமும் நடிப்பும் முதன்மையானது. ரஜினி என்கிற நடிகன் தன்னுடைய நடிப்புலக ஆளுமையை விட்டுக்கொடுத்து பல வருடங்கள் ஆகின்றன என்பதை அந்தப் பாத்திரம் நினைவூட்டியது. எவ்வளவு கொடூரங்களை வில்லன் ரோபோ ரஜினி செய்தாலும் அதன் மேல் ஏனோ கோபம் வரவில்லை. மாறாக, அந்தப் பத்திரத்தில் வெளிப்பட்ட ரஜினியை மனது கொண்டாடியது.

எல்லோரும் எந்திரனில் பிடித்த பல விடயங்களைப் பற்றி பேசிவிட்டார்கள். அதனால், நானும் அதனைத் திரும்பப் பேசி ஏன் கோபத்தைக் கிளப்புவான். ஆனால், எந்திரனை அதிநவீன இராமநாரயணனின் படம் என்று கருத்துக்கூறிய வலையுலக விமர்சனப்புலிகளின் (?) கால்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்களையும், சாரு நிவேதிதாவையும் ஒருமனநிலையில் உள்ளவர்கள் என்றே எனக்கு எண்ணத்தோன்றுகிறது. புரிந்துகொண்டால் சரி.

எந்திரன் தமிழ் திரையுலகின் தரத்தினை (இதற்குள் எம்முடைய வாழ்வியல், கதைசொல்லும் பாங்கு உள்ளிட்டவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்) உலகுக்கு சொல்லும் என்கிற எண்ணம் என்னிடத்தில் இல்லை. ஆனால், தமிழ் சினிமாவுக்கான சர்வதேச சந்தையை இன்னும் இன்னும் அதிகரித்துக் கொடுத்திருக்கிறது. அதற்கு, கலாநிதிமாறன்களும், ரஜினிக்களும், ஷங்கர்களும், ஏஆர்.ரஹ்மான்களும் தேவைப்படுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

பசங்க, ஆட்டோகிராப், முள்ளும் மலரும், அன்பே சிவம், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களின் வருகை தமிழ் திரையுலகுக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல எந்திரன், இந்தியன் போன்ற படங்களின் வருகையும் மிகவும் அவசியமானது. ஏனெனில், ரசிகர்களுக்கு அனைத்துவிதமான படங்களும் தேவைப்படுகிறது. எந்திரனின் வருகையை நான் ஏற்றுக்கொள்கிறேன். வரவேற்கிறேன். அது, தமிழ் திரையுலகுக்கு தேவையாகவும் இருக்கிறது.