இசையும், காதலும் பின்னே நானும்!
Posted On Monday, September 20, 2010 at at 8:38 PM by மருதமூரான்.(ஒருவனுக்கு தன்னுடைய வாழ்வில் பட்டுத் தெரிகிற அனுபவங்களும், பார்த்துத் தெரிந்து கொள்கிற அனுபவங்களும் பல பாடங்களைச் சொல்கின்றன. எல்லா அனுபவங்களையும் பட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் உறவுகளே..!)
நான் எப்போதாவது சலிப்பாக அல்லது வெறுமையாக உணரும் போது நல்ல பாடல்களை கேட்க விரும்புகிறேன். குறிப்பாக, மறைந்த சொர்ணலதா பாடிய “மாலையில் யாரோ…”, வாணி ஜெயராம் பாடிய “மேகமே மேகமே….” போன்ற பாடல்களை நான் அதிக தடவைகள் கேட்டிருக்கிறேன். இதுபோன்ற மிக அருமையான பாடல்கள் என்னுடைய கணணியில் சேமிப்பில் இருக்கிறது.
எவ்வளவு பெரிய சோகத்தினையும் கூட மறக்க வைக்கின்ற குணம் இசைக்கு இருக்கிறது. எனக்கு இசையின் சூத்திரங்களும் பிரமாணங்களும் தெரியாது. ஆனால், மிகச்சிறந்த ரசிகனாக இருக்கிறேன். ஸ்ருதி, லயம் என்றெல்லாம் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளில் பேசிக்கொள்கிறார்கள். அதில் கூட எனக்குத் தெளிவில்லை. ஆனால், என்னுடைய மனதிற்கு நல்ல இசை என்று படுகின்ற வடிவங்களில் நான் கரைந்து போகிறேன்.
என்னால் பாட முடியும். பலரும் சொல்லிக்கொள்வது போல குளியலறையில், அல்லது தனித்திருக்கும் போது என்னை மறந்து நானும் பாடுகிறேன். எனக்கு எப்போதுமே தோன்றுவது இசையை எந்தவித உள்ளறிவும் இல்லாமலும் ரசிக்க முடிவது கூட மனிதனை அதற்குள் சிக்க வைத்துவிடுகிறது என்று. எங்களின் வாழ்வின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எதோவொரு வகையில் இசை ஆட்கொள்கிறது. அப்படிப்பட்ட இசையின் தாக்கத்தினை உணராத மனிதர்கள் இருப்பார்களா? சாத்தியமே இல்லை.
அதுபோலவே, காதலும்!. “ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலிருக்கிற ஈர்ப்புக்கும், தேவைக்கும் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்கின்றோம்.” இதுவே, காதல் தொடர்பில் என்னுடைய கருத்து. இந்த கருத்தியலின் அடிப்படையில் இதுவரை மாற்றமிருந்ததில்லை. எனினும், அந்த நிலைப்பாட்டில் ஆங்காங்கே சில பூச்சு வேலைகள் பார்க்க வேண்டியிருக்கிறது என்று தோன்றுவது உண்டு. ஆனாலும், அதனை என்னால் உடனடியாகச் செய்ய முடிவதில்லை.
‘காதல்’ ஒருவனை எப்படியெல்லாமோ மாற்றி விடுவதாக படித்திருக்கிறேன். ஏன், பார்த்தும் இருக்கிறேன். காதலுக்காக வாழ்க்கையை தொலைத்தவர்களையும், காதலினால் உயர்ந்தவர்களையும் இந்த சமூகத்தில் காணலாம். காதல் ஒரு நல்ல அனுபவம். இசைபோல, எந்த வயதிலும் தேவைப்படும் ஒன்று. வாழ்க்கையின் அர்த்ததினை காதல் வழங்கிவிடுவதாக சொல்லக் கேட்டிருக்கிறேன்.
என்னுடைய வாழ்க்கையிலும் காதலுக்கு இடம் இருக்கிறது. அந்த இடம் பூரணமானதா, இல்லையா என்பது எனக்கே தெளிவில்லாத ஒன்று. ஆனால், எனக்கும் அந்த அனுபவம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோவொரு தேடல் இருக்கும். அவ்வாறு இல்லையென்றால் அந்த மனிதன் அர்த்தமற்றவனாகி விடுகிறான். அதுபோலவே, காதல் இல்லாத மனிதனும்.
காதல் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்லவே. அதற்குள், (விஜய?). டி. ராஜேந்தர் படங்களில் வருவது போல ஒருவர் மட்டும் உருவாக்கிக் கொள்கிற ஒருதலைக் காதல்களும் அடங்குகின்றன. ஏதோவொரு கணத்தில் ஒவ்வொரு மனிதனும் காதல் என்கின்ற அனுபவத்தைப் பெற்றுக்கொள்கின்றான். அந்த அனுபவம் அவனுக்கு சரியாதனை கொடுத்தால் வாழ்க்கை அற்புதமாகிறது. இல்லையென்றால். அது நரகமாகி விடுகிறது. வைரமுத்து சொன்னது போல “சொர்க்கமும், நரகமும் இங்கேயே சாத்தியம் காதலித்துப் பார்.”
இசையையும், காதலையும் நான் என்றுமே கொண்டாடுகிறேன். அவை, இரண்டுக்கும் என்னுடைய வாழ்க்கையில் பெரிய இடத்தினைக் கொடுத்திருக்கிறேன். அவற்றினால் நான் பெற்ற அனுபவங்கள் என்னை மேலும் மேலும் புதியவனாக்கியே வந்திருக்கின்றது. ஆக, இசையை எப்படி என்னால் இரசிக்க மட்டும் முடிகிறதோ, அதுபோல காதலையும் என்னால் கொண்டாட முடிகிறது. ஆக, இசையும், காதலும் இல்லாமல் நானும் முழுமை பெறமாட்டேன். மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம்.
(இது, நண்பர் ஒருவரின் பதிவு கொடுத்த உந்துதலினால் எழுதப்பட்டது.)
எம்.எச்.எம். அஷ்ரப்: கைவிடப்பட்ட சமூகத்தை முன்னிறுத்திய தலைவன்.
Posted On Thursday, September 16, 2010 at at 12:12 PM by மருதமூரான்.எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற மோதல்களுக்குள் சிக்கி நாங்கள் வடமராட்சிக் கிழக்கின் மருதங்கேணியிலிருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறையில் குடியேறியிருந்தோம். அப்போது பொழுதுபோக்குவதற்கு வானொலியைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு இருக்கவில்லை.
2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி நாங்கள் வானொலி கேட்டுக்கொண்டிருந்த பொழுது முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் வானூர்தி விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி சொல்லப்பட்டது. அப்போது, நான் பத்தாம் தரத்தில் கற்றுக்கொண்டிருந்தேன். அந்ததருணத்தில், அஷ்ரப்பைப் பற்றி அவ்வளவு தெரியாது.
ஆனால், அஷ்ரப் அவர்களின் மரணம் ஏற்படுத்திய அலையை நான் உணர்ந்து கொண்டிருந்தேன். அதிலிருந்து, அவரைப் பற்றி அறியும் ஆவல் அதிகரித்திருந்தது. எனினும், சிறிது நாட்களிலேயே அது மறந்து போனது. ஏனெனில், வடக்கின் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளின் வெற்றிச் செய்திகள் எல்லாம் பரவி தமிழ் மக்களிடம் ஓரளவு கொண்டாட்ட மனநிலை தோற்றுவித்திருந்தது. அதனால், உலகின் எல்லா விடயங்களும் மறைந்து போயின. அல்லது மறைக்கப்பட்டன.
இந்த நிலையில், என்னுடைய உயர்தரப் பரீட்சையை முடித்துக்கொண்டு கொழும்பு நோக்கிய பயணத்தின் பின்னரே அஷ்ரப் பற்றிய தேடல்கள் என்னிடம் அதிகரித்தது. அதற்கு நான் தேர்தெடுத்துக் கொண்ட ஊடகத்துறையும் காரணமாக இருக்கலாம்.
தோற்றுப்போன அல்லது கைவிடப்பட்ட ஒரு சமூகத்தினை எப்படி சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேறுகின்ற சமூகமாக மாற்ற முடியும் என்பதற்கு இலங்கையில் அஷ்ரப்பைத் தவிர கடந்த ஐம்பது வருடங்களில் யாரையும் நல்ல உதாரணமாகச் சொல்ல முடியாது. ஏனெனில், அப்படி சாதித்த ஒருவரும் இல்லை என்பது என்னுடைய வாதம். வேறு யாரும் இருந்தால் சொல்லுங்கள் உறவுகளே.
சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் இலங்கையின் அரசியல் மற்றும் ஆட்சியதிகார பீடங்களில் முஸ்லிம் சமூகம் அதிகளவில் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. அந்தப் புறக்கணிப்பு பல முஸ்லிம் தலைவர்களினாலேயே பல தசாப்தங்களாக உணர்ந்து கொள்ளப்படாமல் இருந்தது. எனினும், அஷ்ரப்பின் அரசியல் வருகைக்கு பின்னர் அந்த நிலைமை பெருமளவில் மாற்றமடைந்திருந்தது.
புறக்கணிக்கப்பட்ட சமூகத்தை அரசியல் ரீதியாக அதிகாரம் மிக்கவர்களாக மாற்ற என்ன செய்யலாம் என்பதை அஷ்ரப்பின் அரசியலின் மூலம் அறிந்து கொள்ள முடியும். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எப்படி நிலைத்த தன்மையுடன் இயங்குவது என்பதற்கும், அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும் தம்முடைய சமூகத்திற்கு எதிரான திட்டங்களை எப்படி கையாள்வது என்பதற்கும் அவர் நல்ல உதாரணம்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரதுங்க அரசாங்கத்தின் சிம்மசொப்பனமான அமைச்சராக, ஒரு சிறுபான்மைக் கட்சியின் தலைவராக அஷ்ரப் மாத்திரமே இருந்தார். அவர் அங்கம் வகித்த அரசாங்கத்தில் இன்னும் பல சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பிட்டளவு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்தார்கள். அவர்கள் தங்களின் சமூகத்துக்கு என்னென்ன செய்தார்கள் என்று தேடிப்பாருங்கள் ஏதாவது ‘கோவில் மண்டபம்’ கட்டியதுடன் எல்லாமே முடிந்து போயிருக்கும்.
முஸ்லிம் மக்களின் நாயகனாக இன்றைக்கும் அஷ்ரப் அவர்களே இருக்கின்றார். அவர் மறைந்து பத்து வருடங்கள் கடந்து விட்டது. இன்றைக்கும் முஸ்லிம் மக்கள் இலங்கையின் அரசியலில் (ஓரளவு) ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தியே வருகிறார்கள். அந்த தாக்கம் அஷ்ரப் அவர்களின் வீட்டுக்கு வீடு சென்று வளர்த்தெடுத்த அரசியல் ஆரம்பத்திலிருந்து கிடைத்தது மாத்திரமே.
‘சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ என்ற அரசியல் கட்சியின் வெற்றி அஷ்ரப்பின் அரசியல் பிரவேசத்திலிருந்து ஆரம்பித்து அவரின் மறைவுடன் தோல்வி நிலைக்கு செல்ல ஆரம்பித்தது. அந்தத் தோல்வி நிலை இன்றும் பகுதி பகுதியாக நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் தொடரும் சாத்தியமே இருக்கிறது. ஏனெனில், எல்லாத் தலைவர்களும் அஷ்ரப் மாதிரி இல்லையே.
‘அஷ்ரப்’ போன்ற தலைவர்களிடம் எப்போதுமே ஒரு குறைபாடு இருந்திருக்கிறது. நேரம்-காலம் பார்க்காலம் உழைத்து வளர்த்தெடுத்த கட்சியை அல்லது நிறுவனத்தை தனக்கு பின்னால் கட்டிக்காப்பதற்கு நல்ல (தைரியமான) தலைவர்களை உருவாக்காமல் விடுவது. இதற்கு பலர் உதாரணமாக இருக்கிறார்கள். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோல்வியும் இங்கிருந்தே ஆரம்பித்தது.
ரவுப் ஹக்கீம், அதாவுல்லா, ரிஷாட் பதியுதீன்…. இன்னும் இன்னும் பலர் அவரின் கீழ் வளர்க்கப்பட்டிருந்தாலும் திடமான மக்களின் மனங்களை உண்மையாக அறிந்து கொண்ட தலைவர்களை அஷ்ரப் வளர்தெடுக்கவில்லை. அதுவே, அவரின் போராட்டமும், உழைப்பும் வீணாகிக்கொண்டிருப்பதற்கு முக்கியகாரணம்.
முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமல்ல இலங்கையில் இருக்கிற அத்தனை சிறுபான்மைச் சமூகத்துக்கும் அஷ்ரப் போன்ற தலைவர்கள் கிடைக்கவேண்டியதே இப்போதைய தேவை. அது சாத்தியப்படுமா என்று நான் தற்போது நினைத்துப் பார்க்கவே முயல்வதில்லை. எனெனில், ‘அவதார புருஷர்கள்’ எப்போதாவதுதான் பிறக்கிறார்களாம். எங்கோ படித்த ஞாபகம். மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம் உறவுகளே….!



