எதிரிகளும், துரோகிகளும் வேறுவேறானவர்கள்: முரண்கள் பற்றி.


எப்போதுமே எமக்கிடையிலிருக்கிற முரண்கள் மற்றும் குறைகள் பற்றிப்பேச யாரும் அதிகம் விரும்புவதில்லை. அது எங்களுடைய இருப்பு பற்றி வெளியில் இருக்கின்ற (மாயத்)தோற்றத்தை சிதைத்துவிடும் என்ற கருத்தியலின் அடிப்படையில் உருவாகியிருக்கலாம். ஆனால், எங்களுடைய வீடுகளுக்குள்ளேயே முரண்கள் தோற்றம் பெறுகின்றன. அது, கிராமம், பிரதேசம், பிராந்தியம், நாடு என்று விரிந்து செல்கிறது.

எனவே, முரண்களைப் பற்றிப் பேசுவதால் எதுவும் தப்பாக அமைந்துவிடாது என்ற நம்பிக்கையிலேயே இந்தப் பதிவினை எழுதுகிறேன். முரண்கள் பற்றி நீண்ட நாட்களான எழுதவேண்டும் என்று தோன்றியபோதும் நேரமும், சூழ்நிலைiயும் சரியாகப் பொருந்திப்போகாததால் இதனைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். ஆனால், அதற்கான நேரம் இன்று வாய்த்திருக்கிறது.

எதிரிகளை, நாங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கின்றோமே. அதேயளவுக்கு மறைமுகமாக நேசிக்கின்றோம். அவர்களைக் குறித்து நாங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றோம். அதனால், எங்களின் செயற்பாடுகள் வேகமும், நிதானமும் பெறுகின்றன. எனவே, எங்களுடைய வெற்றியிலும், தோல்வியிலும் எதிரிகளின் பங்கு முக்கியமானது. அதுபோல, அவர்களை மன்னித்துவிடவும் தயாராக இருக்கின்றோம். சமரசத்தை ஏற்படுத்தி சமாதானத்தைக் கடைப்பிடிப்பதில் அதிக சிரமம் இருக்காது.

ஆனால், துரோகிகளை வாழ்வின் இறுதிக் காலம் வரை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றோம். எங்களின் வாழ்க்கையில் பங்கெடுத்து விட்டு விலகிப் போவது தப்பில்லை. ஆனால், விலகி எதிரியுடன் சேர்ந்து கொண்டு எங்களுக்கு எதிராகச் செயற்படுவதை எந்த மனிதனாலும் ஒப்புக்கொண்டுவிட முடியாது. அதனால், துரோகிகளை நாங்கள் இழிநிலையிலேயே வைத்துக்கொள்கின்றோம். இதற்கு பல உதாரணங்களை நம்மத்தியிலேயே காணலாம். (சமூகத்தினால் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் பலரிடம் நேர்மையான பல காரணங்கள் இரு(க்கலாம்)ந்த போதிலும், அதனை நாங்கள் எந்தத் தருணத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை)

என்னுடைய நண்பர்கள் வட்டம் பெரியது. இனம், மதம், பிரதேசம் என்று எந்த எல்லையையும் நான் வகுத்து நண்பர்களைப் பெற்றுக்n;காள்வதில்லை. ஆனால், சில அனுபவங்கள் வேறு மாதிரி எனக்கு கிடைத்திருக்கின்றன. நான் என்னுடைய தொழில்முறைக் கல்வியைப் பயின்ற காலத்தில், என்னுடைய சூழலில் அநேகர் பெரும்பான்மையின நண்பர்கள். குறைந்தளவே, முஸ்லிம்- தமிழ் சகோதரர்கள்.

கற்கைக்காலத்தில் ஆரம்பத்தில் முஸ்லிம் சகோதரர்களுடன் பேசிப் பழகி விடுகிறோம். ஆனால், அந்த பழக்கம் ஒருவர் மீது ஒருவர் சிறு சந்தேகத்துடன் அணுகுகின்ற அளவிலேயே இருந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன் (என்னுடைய கற்கை காலத்திலிருந்து நெருங்கிய நண்பராக இருக்கின்ற பளீல் முஸ்லிம் சகோதரரே).

சிங்கள நண்பர்களுடன் பேசுவதற்கும் நெருக்கமாகப் பழகுவதற்கும் குறிப்பிட்ட காலம் எடுத்தது. மொழிப் பிரச்சினை இருந்தது உண்மை. ஆனால், அந்த பழக்கம் மெல்ல மெல்ல இறுகிய நட்பு நிலைக்கு சென்றது. உண்மையாக விவாதிக்க முடிந்தது. நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளின் போதும் அவர்கள் எம்முடன் அதே நட்புடன் பழகியிருக்கிறார்கள். இன்றும் தொடர்கிறது.

இந்த மனநிலைக்கு என்ன காரணம் என்று அடிக்கடி தோன்றுவதுண்டு. ஊடகங்களும், அரசியல்வாதிகளும், கல்விமான்களும், சமூகத்தின் முக்கியமானவர்கள் என்று கருதிக் கொள்பவர்களும் முரண்களை உண்மையான மனநிலையுடன் அணுகாமல் விட்டதன் விளைவு அல்லது அந்த முரண்களின் அடிப்படையை ஆராயாமல் விட்டதன் விளைவு இது.

இலங்கையில் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் அடிப்படையில் என்ன பிரச்சினை என்று இதுவரை எனக்குத் தெளிவில்லை. ஆனால், சில அரசியல்வாதிகளும், அதனைப்பின்பற்றி வந்த போராட்டக்குழுக்களும் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாகக் காட்டிக்கொண்டன. அதுபோல, ஊடகங்களும் சின்னச் சின்ன முரண்களை பாரிய பிரச்சினையாகக் காட்டின. அதன் விளைவுகள் படுபயங்கரமாக இருந்தன.

ஓரு மனிதனின் இடது கரம் வலது கரத்தினையும், வரது கரம் இடது கரத்தினையும் துரோகியாகப் பார்க்கின்ற நிலைமையையே எமக்கிடையில் (தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில்) பொறுப்பற்ற அரசியல்வாதிகளும், ஊடகங்களும், கல்விமான்களும் உருவாக்கிச் சென்றுவிட்டார்கள். அதனாலேயே, இன்றும் நம்முடைய முஸ்லிம் சகோதரனை சந்தேகத்துடன் அணுகும் நிலை தோன்றிருக்கிறது. அதுபோலவே, முஸ்லிம் சகோதரன் ஒருவன் தமிழ் சகோதரனை சந்தேகத்துடன் அணுகவேண்டி இருக்கிறது.

இவற்றுக்கொல்லாம் அடிப்படையில் அதிகார ஆசையும், மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசையுமே முன்நிற்கின்றன. சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற சாதாரண மக்களுக்கு அன்றைய தொழில், பசி, வயிறு, உணவு என்றே கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அவர்களை உணர்ச்சியூட்டுவதன் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முனைபவர்களும், மேலாதிக்கக்காரர்களும் வெற்றிபெறுகிறார்கள்.

இந்தக் காரணங்களினால் எமக்கிடையில் இருக்கிற முரண்களை முடிவுக்குக் கொண்டுவர எந்த ஆக்கபூர்வமான முயற்சிகளையும் அரசியல் தலைவர்களும், அதிகார ஆசையுள்ளவர்களும் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். எனவே, எமக்கிடையில் இருக்கின்ற முரண்கள் தொடர்பில் அதிகமாக அலட்டிக்கொள்ளாமல் இருப்பதுடன், அந்த முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதே இப்போது நம்முன் இருக்கின்ற நல்ல முடிவு.

நான் இருக்கின்ற இடமும், காலமும் என்னுடைய கருத்துக்களின் உருவாக்கத்தில் அதிக தாக்கத்தினைச் செலுத்துகின்றன. அதுபோல, நாளை இந்தக் கருத்தியலில் இருந்து சில தருணங்களில் மாறவும் கூடும். அதுபோல, ஒவ்வொருவருக்கும் வேறு வேறான கருத்துக்கள் இருக்கும். அவையின் உருவாக்கத்திலும் இடமும், காலமும் அதிக தாக்கம் செலுத்தும் என்று நம்புகிறேன். மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன் உறவுகளே...!

வடக்கின் பொருளாதார மீளுகைக்கு உட்கட்டுமான அபிவிருத்தி வேண்டும்: கலாநிதி முத்துகிருஷ்னா சர்வானந்தன்.


வடக்கு- கிழக்கில் மூன்று தசாப்தங்களைத் தாண்டி இடம்பெற்று வந்த மோதல்கள் கடந்த வருடம் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி மோதல்களுடன் முடிவுக்கு வந்ததாக அரசாங்கம் அறிவித்தது. இதனையடுத்து, வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் வடக்கின் அபிவிருத்தியில் பாரம்பரியத் தொழில்துறையை விட சேவைத்துறையே அதிக தாக்கத்தினைச் செலுத்தும் என்று அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் நிறுவுனரும், சர்வதேச ரீதில் அறியப்பட்ட பொருளியலாளருமான கலாநிதி முத்துகிருஷ்னா சர்வானந்தன் தெரிவிக்கின்றார்.

வடக்கில் பல வருடங்களாக தொடர்ந்து வந்த மோதல்களினால் புதிய தலைமுறை பாரம்பரியத் தொழில்களில் இருந்து விலகி கல்வி உள்ளிட்ட சேவைத்துறையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும், இதன் மூலம் வடக்கின் துரித அபிவிருத்தியில் கணிசமான பங்கினை வகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி: இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கின் தொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தியில் என்ன வகையான அடிப்படை முன்னெடுப்புக்கள் செய்யப்பட வேண்டும்?

முத்துகிருஷ்னா சர்வானந்தன்: வடக்கு மாகாணத்தின் அனைத்து வகை அபிவிருத்திக்கும் உடனடியாகத் தேவைப்படுவது உள்கட்டுமானப்பணிகளை துரிதமான முன்னெடுப்பது. அதாவது, வீதி அபிவிருத்தி, மின்சக்தி வழங்கல், கட்டட கட்டுமானங்கள் மற்றும் சந்தை தொகுதிகள் துரிதமாக மீள்கட்டுமானம் செய்யப்பட வேண்டும். அவை, தற்போது வடக்கின் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றது. அதிலும், வீதி அபிவிருத்தியும் மின்சாரம் வழங்கலும் தொடர்ந்தும் துரிதமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதைக் காணலாம். இதில், இருக்கிற முக்கிய விடயம் வீதி மற்றும் மி;னசக்தி பரம்பல் தேசிய ரீதியில் முன்னெடுக்கபடுவதாகும். அத்துடன், தொலைத்தொடர்பாடல் வசதிகளை விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கான செயற்பாடுகளும் சிறிலங்கா ரெலிக்கொம் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அடிப்படைக் கட்டுமானங்கள் அனைத்து வகை அபிவிருத்திக்கும் அவசியம்.

கேள்வி: வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற மூல வளங்களைப் பயன்படுத்தி என்ன வகையான கைத்தொழில் முயற்சிகளை முன்னெடுக்க முடியும்?

முத்துகிருஷ்னா சர்வானந்தன்: வடமாகாணம் நாட்டின் எனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது இயற்கை வளப்பரம்பலில் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. இருந்த போதிலும், சுண்ணாம்பு மற்றும் கனிம மணல்களின் பரம்பல் அதிகமாகக் காணப்படுகின்றது. சுண்ணாம்பினைப் பயன்படுத்தி பலாலியில் சீமெந்து தொழிற்சாலையை ஏற்கனவே செயற்படுத்தி வந்தோம். அதுபோல ஒட்டுசுட்டானில் சிறியளவிலான ஓட்டுத்தொழிற்சாலையும் செயற்பட்டு வந்தது. ஆனாபோதிலும், சுண்ணாம்புக்கற்களை தொடர்ந்தும் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தியதன் விளைவாக வடக்கு பகுதியின் சுற்றாடல் பாதிக்கப்பட்டது. அத்துடன், வடக்கு பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து சென்றது. வடக்கிலே ஆறுகள் இல்லை. சில குளங்களே உள்ளன. இதனால், அந்தப்பிரதேசத்தின் நீர்த்தேவைகளை நிலத்தடி நீரே பூர்த்தி செய்து வந்தது. அது பாதிக்கப்படும் நிலைக்கு சென்றது. அதுபோல, பரந்தனில் முன்னர் இயங்கி வந்த இராசாயனத் தொழிற்சாலையினாலும் அது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும் முன்னோக்கிச் செல்கின்ற நவீன யுகத்தில் போட்டி போட்டு செயற்பட முடியாது என்று நினைக்கிறேன். பரந்தன் தொழிற்சாலையின் மீள் இயக்கம் புவியியலாளர்களினாலும் பெரிதாக விரும்பப்படவில்லை. சிமெந்து தொழில்துறை முன்னெடுக்கப்பட்டால் ஓரளவு இலாபத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், பரந்தன் தொழிற்சாலையினால் இலாபகரமாக இயங்க முடியுமா என்பது சந்தேகமே.

கேள்வி: வடக்கின் மூல வளங்களின் பாவனை தவிர்க்கப்பட வேண்டுமாயின் வேறு எவ்வகையான தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்?

முத்துகிருஷ்னா சர்வானந்தன்: வடக்கின் சிறு மற்றும் நடுத்தரக் கைத்தொழில் முயற்சிகள் காலம் காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. புகையிலையைக் கொண்டு சுருட்டுத் தயாரித்தல், உள்ளாடைகள் உற்பத்தி மற்றும் பழங்கள் பதநிடுதல் என்று பல்வேறு தொழில் முயற்சிகள் வடக்கில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனை மீள ஆரம்பிப்பதன் மூலம் குறிப்பிட்டளவானோருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், இவற்றுக்கு வெளிநாடுகளில் விற்பனை வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும். இந்த தொழில் முயற்சிகளுக்கு சரியாக வாய்ப்புக்களும் இருக்கின்றன. அத்துடன், யாழ்ப்பாணத்தின் வடமராட்சிக்கிழக்கில் கனிம மண் வளம் இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி சிறிய கண்ணாடித் தொழிற்சாலையொன்றை இயக்க முடியும். இந்த முன்னெடு;ப்புக்கள் இயற்கைக்கும் பாதிப்பு இன்றி இருக்கும். ஆனாலும், அறிவியல் சார்ந்த அபிவிருத்தியைத் தான் வடக்கில் அதிகளில் முன்னெடுக்க கூடியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: வடக்கின் அபிவிருத்தியில் வேலைவாய்ப்பற்று இருக்கும் இளைஞர்- யுவதிகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும்?

முத்துகிருஷ்னா சர்வானந்தன்: வடக்கில் நிலைமைகள் சிரடைந்துள்ள நிலையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டு தங்களுடைய தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளன. ஆனால், இன்னும் அவை ஆரம்பிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் உடனடியாக வடக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்- யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வடக்கின் யாழ்ப்பாணம் நோக்கி உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு இடங்கள் குறைவு அதனை ஏற்படுத்திக்கொடுக்கும் போது பலர் வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். இதுதவிர வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருகை வடக்கை நோக்கி அதிகரித்துள்ளன. இந்த நிறுவனங்களின் ஓரளவுக்கு ஆங்கிலமும், கணனி அறிவும் தெரிந்தவர்கள் வேலை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தத்துறையும் எதிர்காலத்தில் அதிகமானோரை உள்வாங்கும் என்று நம்பலாம். அதுபோல, எதிர்காலத்தில் கைத்தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் பட்சத்திலும் அதிகளவானோர் வேலை வாய்ப்பினைப் பெறுவர்கள். ஆனாலும் அதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும்.

கேள்வி: வடக்கு மாகாணத்தின் மீள் கட்டுமானத்தில் வெளிநாட்டு மற்றும் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு எவ்வாறானதாக அமைய வேண்டும்?

முத்துகிருஷ்னா சர்வானந்தன்: அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களையும், புலம்பெயர் சமூகத்தையும் வடக்கு அபிவிருத்தியில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ள தருணம் இது. ஆனாலும், புலம்பெயர் சமூகத்தின் மீது சில பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்கின்றன. ஆதனை விரைவில் அரசாங்கம் நீக்கினால் புலம்பெயர் சமூகத்தின் முதலீடுகள் அதிகரிக்கும். அதனைப் பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற் பேட்டைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க முடியும். இதன் மூலம், தொழில் வாய்ப்புக்களை வழங்குவதுடன், நல்ல இலாபத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும். புலம்பெயர் சமூகம் கல்வி மற்றும் சேவைத்துறைகளில் ஓரளவு முன்னிற்கிறது. அந்த துறைகளின் ஊக்குவிப்பும் வடக்கின் அபிவிருத்திக்கு அவசியமானது. அரசாங்கத்தினதும், மக்களினதும் ஆதரவுடன் வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களுடைய தொழிற் நிறுவனங்களை எதிர்காலத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றன. இதுவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.

கேள்வி: வடக்கின் அபிவிருத்தியில் பாரம்பரியத் தொழில்களின் பங்களிப்பு எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்?

முத்துகிருஷ்னா சர்வானந்தன்: விவசாயம், மீன்பிடித்தொழில்களை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் நிக்கப்பட்டு சுமூகமான சூழ்நிலை தற்போது நிலவுகிறது. விவசாயிகளுக்கு தேவையான உரவகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதுபோல, நவீன உபகரணங்களை துரிதமான பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வன்னியின் பெருநிலப்பரப்பில் நெற்செய்கை, யாழ்ப்பாணத்தில் புகையிலை, வெங்காயச் செய்கை என்பன வருமானத்தை ஈட்டித்தரக்கூடியன. அதுபோல, வடக்கின் அதிக வருமானங்களைத் தருகிற மீன்பிடியும் அதிகளவில் முன்னேற்றமடையலாம். வடக்கின் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகளவிலான மீன்கள் பிடிக்கப்படுகிறது. இதனை, தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்ல அதிக நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதனால், வடக்கின் மீன்டித்தொழிலில் ஈடுபடுபவர்களும் வருமானங்களை அதிகளவில் பெற முடிகிறது. ஆனால், குறிப்பிட்ட காலம் வரையில் பாரம்பரியத் தொழிலில் ஆர்வமற்று இருந்த இளைய சமுதாயம் கல்வி மற்றும் சேவைத்துறைகளிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறது. ஏனவே, பாரம்பரியத் தொழில்களின் போக்கு வேறுதிசையை நோக்கி செல்வதாக நான் உணர்கிறேன். இதனால், வடக்கின் எதிர்கால அபிவிருத்தியில் பாரம்பரியத் தொழிற்துறையை விட சேவைத்துறையே அதிக தாக்கம் செலுத்தும். ஏனவே, அதற்கு அடிப்படையான கல்வி, தொழில்துட்ப மற்றும் தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளுவதன் மூலம் பெரும் பயனை அடையமுடியும்.

(இந்த நேர்காணல் ‘மீண்டும் வாழ்வோம்’ வானொலி நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 2ஆம் திகதி ஒலிபரப்பானது. அத்துடன், ‘ஞாயிறு தினக்குரலில்’ ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியாகியது)