முரளி: கனவானைச் சுற்றியுள்ள அரசியலும், சில எண்ணங்களும்.


முத்தையா முரளிதரன்! இலங்கையிலுள்ள அநேகரினால் சகோதரனாகவும், உலக கிரிக்கட் இரசிகர்கள் அநேகரினால் கனவான் வீரராகவும் மதிக்கப்படுகின்றார். இந்த அநேகர் என்ற கணக்குக்குள் வராத சிலர் முரளியை தமிழ் பேசாத துரோகியாகவும், விதிக்கு உட்படாத வகையில் பந்தை எறிபவராகவும் குற்றஞ்சாட்டுபவர்கள். ஆகவே, அநேகரும், சிலரும் இல்லாமல் முரளியைப் பேசவே முடியாது.

எந்தவொரு சாதனையும், பெரிய வெற்றியும் உடனடியாகப் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதற்கான போராட்டம், நிலைத்து நிற்கிறதன்மை, விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிற மனநிலை, மற்றவர்களை மதிக்கிற தன்மை என்கிற நல்ல ஆரோக்கியமான தகமைகளுடன் இருக்கின்றவர்களே காலங்கள் தாண்டியும் நிலைத்து நிற்கிறனர்.

ஜனநாயகக் போராட்டத்தில் நெல்சன் மண்டேலா, மார்டீன் லூதர் கிங் யூனியர், மனிதநேயத்திற்கு அன்னை தெரசா, சுதந்திரப் போராட்டத்திற்கு சேகுவாரோ என்று நாங்கள் பேசிக்கொள்பவர்கள் அதிகம். அதுபோல, கிரிக்கட்டில் பிரட்மன், அதற்குப் பின் அந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமான வீரராக முரளி உருவாகியிருக்கிறார். இதனை சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். (சச்சினும் அந்தத் தகுதி இருக்கிறது. ஆனால், அவர் முரளி அளவுக்கு பிரச்சினைகளைச் சந்திக்கவில்லை)

அலுவலகத்திலிருந்து நேற்று மதியம் ஒரு மணிக்கே வேறு சில வேலைகள் காரணமாக வீட்டுக்கு சென்று விட்டேன். இலங்கை- இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியின் வெற்றித் தருணங்களை தொலைக்காட்சியில் பார்க்கக் கூடிய சூழ்நிலை எனக்கு வாய்த்தது. அதனைவிட டெஸ்ட் கிரிக்கட்டில் முரளியின் இறுதிக் கணங்களைப் பார்க்கவே மிகவும் விரும்பினேன். பலருக்கு ஆதார புருஷராக இருக்கிற முரளியை எனக்கும் பிடிக்கும். ஆனால், அதற்கும் சில வரைமுறை உண்டு.

முரளி என்கிற கிரிக்கட் வீரன், சுழற்பந்து வீச்சாளன் எந்தவொரு தருணத்திலும் தன்னை ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகக் காட்டிக்கொண்டதில்லை. அதுபோல, இலங்கை இரசிகர்களில் அனேகரும் அவரை அப்படி நோக்கியதில்லை. முரளியை இலங்கையின் முத்தாக கொண்டாடியவர்களே அதிகம். அதனை, முரளிக்கு மக்களும், ஊடகங்களும், இரசிகர்களும் கொடுக்கும் கௌரவத்திலிருந்து இலகுவாகத் தெரிந்து கொள்ளமுடியும்.

இலங்கைக் கிரிக்கட் அணி, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய தருணத்திற்குப் பின்னர் அதிகமாகக் கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படுகிற ஒரேயொரு வீரர் முரளி என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. இலங்கையின் தலைவரிலிருந்து பொதுமகன் வரை முரளி பெற்ற 800வது விக்கட்டைக் கொண்டாடினர். அதுபோல, அவருடைய ஓய்வை கனத்த இதயங்களுடன் ஏற்றுக்கொண்டு மரியாதை செலுத்தினர்.

முரளி, 1992ஆம் ஆண்டு ஆரம்பித்த சர்வதேசக் கிரிக்கட்டை வாழ்க்கையை பகுதியளவில் முடித்துக்கொண்டுள்ளார். ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகளில் இன்னும் சில மாதங்கள் அவரைக் காணலாம். சரியான தருணத்தில் சரியான முடிவுகளை எடுக்கிறவனே, எல்லாத்தருணத்திலும் கொண்டாடப்படுகிறான். அதற்கு முரளி மிகச்சரியான உதாரணம். சனத் ஜெயசூர்யா மிகப்பொருத்தமற்ற உதாரணம்.

கடந்த சில நாட்களாக வலைப்பூக்கள், செய்தி இணையத்தளங்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்கள், ஊடகங்கள் என்று அதிகம் பேசப்பட்டவர் முரளி. அதுபோல சிலரினால் விமர்சிக்கப்பட்டவரும் முரளி. ஒரு இனத்தின் வீழ்ச்சியையும், விளையாட்டு வீரனுக்கான மரியாதையையும் ஒப்பிட்டு கருத்துக்கள் கூறியவர்கள் ஏராளம். நேற்றும் பேஸ்புக்கில் ஒரு கருத்தொன்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். (அந்தக் கருத்தை வாசித்த பலருக்கு கோபமும், சிலருக்கு மகிழ்வும் ஏற்பட்டிருக்கும்)

“முரளி, வடக்கு- கிழக்கிலிருந்து உருவாகியிருந்தால் அவர் கிரிக்கட்டில் இவ்வளவு காலம் நிலைத்திருக்கமாட்டார். அதுபோல பெரிதாகக் கொண்டாடப்பட்டிருக்கமாட்டார்.” என்றார் என்னுடைய அலுவலக நண்பரொருவர். “முரளி மலையகத்தில் பிறந்தாலும் அந்த அடையாளங்களை தன்னுடன் அதிகம் கொண்டு செல்லவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தின் பிரதிநிதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதுவும் அவரின் இந்தச் சாதனைகளுக்கு உதவியது” என்று மலையகத்தைச் சேர்ந்த ஒரு உறவு கூறியது.

இந்த இரண்டு கருத்துக்களையும் முற்றுமுழுதாக மறுதலித்து விடவும் முடியாது. ஆனால், முரளி என்கிற கிரிக்கட் வீரர் சந்தித்த சோதனைகளும், பிரச்சினைகளும், குற்றச்சாட்டுக்களும் எந்தவொரு கிரிக்கட் வீரனும் சந்திக்காதது. அதுபோல, அவருடைய சாதனைகளையும் யாரும் இலகுவில் நெருங்கிவிட முடியாதவை. இலங்கை அரசியலில் முரளி முக்கிய இடத்துக்கு சிலரினால் நகர்த்தப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த அரசியல் கடந்தும் அவரை அநேகர் மதிப்பது பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களிலிருந்து கண்டுகொள்ள முடியும்.

முத்தையா முரளிதரன் சர்வதேசக் கிரிக்கட் அரங்கில் 'கனவான்' நிலையில் விளையாடி வந்த, வருகிற சிலரில் ஒருவர். ஏதிரணிகளினாலும் மதிக்கப்பட்டவர். அவருடைய சாதனையை மிகப்பெரும் மகிழ்வுடன் கொண்டாடுகிற நாம், அவருடைய ஓய்வையும் ஏற்றுக்கொள்கிறோம். முரளி! உங்களைச் சுற்றி அரசியல் இருப்பது உண்மை. ஆனால், அதனைத் தாண்டி நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள் என்பதே நிதர்சனம். உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஒரு சமூகத்தை வேரறுக்க விபச்சாரத்தை விதைத்தாலே போதும்!


சில விடயங்களைப் பேசவோ, எழுதவோ அநேகர் துணிவதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. அதுபோல, நாம் சார்ந்திருக்கிற சமூகத்துக்குள் இருக்கிற நழுவல்போக்கை அல்லது விருத்தியின்மையைச் சொல்ல நாங்கள் யாரும் முன்வருவதில்லை. இதற்கு எம்முடைய சமூகத்தை முழுதாக வெளிக்காட்டி விட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயமும் காரணமாக இருக்கலாம்.

‘இந்தக் கட்டுரைக்கும், மேலுள்ள பகுதிக்கும் ஏதாவது சம்பந்தமிருந்தால் நான் பொறுப்பல்ல’ என்ற முன்வைப்புடனேயே இதனை (யூலை 19) இரவு 11.18க்கு எழுத ஆரம்பிக்கிறேன்.

ஒரு சமூகத்தின் மீதான கோபம் அந்த சமூகத்தை வேரறுக்கும் வரை அநேக தருணங்களில் தொடர்கிறது. செவ்விந்தியர்கள் மீதான வன்மம் அல்லது அடக்குமுறை, செவ்விந்தியர்களை முற்றாக அழிக்கும் வரை ஐரோப்பாவிலிருந்து வந்தேறுகுடிகளான அமெரிக்கர்களுக்கு அடங்கவில்லை.

அதுபோல, ஐக்கிய இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட கைதிகளினால் அவுஸ்திரேலியாவிலிருந்த ஆதிவாசிகள் கிட்டத்தட்ட 90 வீதம் அழிக்கப்பட்டதற்கும் மற்றவனின் சொத்தின் மீதான அசையும், அதனை அடைவதற்கான வன்மமுமே காரணமாக அமைந்தன. மற்றவனை அடக்கி ஆளவேண்டும் என்பதற்காக எந்த எல்லை வரைக்கும் செல்ல நாம் (மனிதர்கள்) தயார்.

ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக கூறிக்கொண்டு தன்னுடைய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா சதிமுயற்சிகளைச் செய்து தன்னுடைய ஆதரவு நாடுகளைத் திரட்டிக்கொண்டு ஈராக் மீது போர் தொடுத்தது. ஈராக்கை வீழ்த்தியது. அணு ஆயுதம் கிடைக்கவில்லை. ஆனாலும், சதாம் உசைனை தூக்கில் போட்டது அமெரிக்கா(வின் பொம்மை நீதிமன்றம்).

தற்போது ஈராக்கின் எண்ணை வளத்தினை தங்களுக்கிடையில் அற்புதமாகப் பங்குபோட்டுக்கொண்டு இருக்கின்றன அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும். ஆனால், ஈராக்கில் தொடுக்கப்பட்ட போரினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். அங்கவீனமுற்றனர். விதைவைகளாயினர். அனாதைகளாயினர். இன்னும், இன்னும் அதன் நீட்சிகள் இன்றும் நீழ்கின்றன.

ஈராக்கிலுள்ள எண்ணை வளத்தினை அமெரிக்க வன்முறையாளர்கள் திருடிக்கொண்டிருக்க, பக்தாத் வீதிகளில் பிள்ளைகளின் ஒருநேர உணவுக்காக ஈராக் விதைவைகள் பலர் விபச்சாரத்துக்கு தயாராக இருக்கின்றனர். சதாமின் ஆட்சிக்காலத்தில் கூட ஈராக்கில் மக்கள் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பார்களோ தெரியாது.

சமூக- மத- மார்க்க ஒழுக்கம் என்ற கட்டுக்கோப்புடன் வாழ்ந்த சமூகமொன்று மிக இலகுவாக ஜனநாயகவாதிகளாக தம்மை அறிவித்துக்கொள்ளும் வன்முறையாளர்களினால் வேரறுக்கப்படுகிறது. இதே நிலைமையே ஆப்கானிஸ்தானினும் தொடர்கிறது. பிள்ளைகளின் வயிற்றுப்பசி மற்றும் கல்வி என்கிற அடிப்படை தேவைகளுக்காக விபச்சாரத்துக்கு தயாராகிற கணவனை இழந்த தாய்மார் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

வாழ்வாதாரத்தை முடக்கி, அவர்களின் வயிற்றினில் அடிப்பதன் மூலம் விபச்சாரத்தை விதைத்து ஒரு சமூகத்தின் வேரை அறுக்க முடியும் என்பதற்கு அண்மைக்கால சாட்சிகள் ஈராக்கும், ஆப்கானும். ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் பின்னால் காரண காரியங்கள் இன்றி எதனையும் ஆட்சியாளர்களும், வன்முறையாளர்களும் முன்னெடுப்பதில்லை. ஏன் சாமானியன் கூட முன்னெடுப்பதில்லை.

அண்மைக்காலமாக நான் கேள்விப்படுகிற, நேரில் பார்க்கிற சில நிகழ்வுகள் என்னுடைய மனதில் ஆழமாக பதிந்து பல கேள்விகளை கேட்டுச் செல்கிறது. எப்படி எப்படியோ இருந்திருக்கவேண்டிய சமூகங்கள் தவறான வழிநடத்தல்களினால் அல்லது தங்களுக்கிடையில் கருத்துக்களை சீர்தூக்கி பார்க்காமல் விட்டதன் விளைவை அனுபவித்து வருகிறன. இதன் தொடர்ச்சி இன்னும் இன்னும் படுபயங்கரமாக இருக்கும்.

ஒரு சமூகத்தினை சீர் குலைப்பதற்கு அந்தச் சமூகத்தின் கல்வியை சூறையாடுவதே முதற்படி. ஆனால், அதற்கும் முன்னாலுள்ள படியே வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வழிகளை முடக்குவது. அதாவது, தொழில்களை முடக்குவது. தொழில் இல்லையென்றால் உணவில்லை. உணவில்லையென்றால் பசி.

பசி வந்தால், சமூகம்- சம்பிரதாயம்- மனித ஒழுக்கம் எல்லாம் என்ன விலை என்று ஒவ்வொருவனுடைய வயிறும் கேட்கும். அந்த வயிற்றுக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்ள எந்தவழிக்கும் செல்ல பலர் தூண்டப்படுகிறார்கள். அவ்வாறு தூண்டப்படுபவர்கள் தங்களின் பசியைப் போக்க விபச்சாரத்துக்கு தயாராகிறார்கள். விளைவு, மெல்ல மெல்ல ஒரு சமூகத்தின் வேர் அறுபட ஆரம்பிக்கிறது!.

மனதில் சில நாட்களாக அழுத்திக்கொண்டிருந்த துக்கங்களை ஓரளவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன் என்கிற நிம்மதியுடன் இந்த கட்டுரையை நள்ளிரவு 11.57க்கு எழுதி முடிக்கிறேன். நன்றி மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம்.

என்னைப் பட்டை தீட்டுக்கிற நட்புக்கு சல்யூட்!


நட்பு, காதல், கடவுள் எல்லாமே நம்பிக்கை மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம். காதலும், கடவுளும் பெரும்பான்மையினரை ஆட்கொள்கிறது. ஆனாலும், அதிலிருந்து விலகியிருப்பதாக கூறும் குறிப்பிட்ட விகிதத்தினர் நம்மிடையே இருக்கின்றனர். அதில், உண்மை இருக்கின்றதோ இல்லையோ அவரவருக்கே வெளிச்சம். ‘நட்பு’ உலகத்திலுள்ள அனைவரும் பெற்றுக்கொள்வது. ஏதாவது ஒரு தருணத்திலாவது நண்பரையோ, நண்பியையோ கொண்டிராதவர்கள் எங்காவது உண்டா? இல்லை. அது சாத்தியமில்லை.

நல்லவன், கெட்டவன் என்று யாராக இருந்தாலும் அவனுக்கென்று நட்பு இருக்கும். நானும், அதிகளவில் நண்பர்களையும், நண்பிகளையும் கொண்டிருக்கிறேன். அதனால், சில தருணங்களில் சிக்கல்களில் மாட்டிக்கொண்டாலும், அனேக தருணங்களில் மகிழ்சியையே பெற்றிருக்கிறேன். இன்னும் பெற்றுக்கொண்டிருக்கிறேன். நட்புக்கு வயது, மதம், மொழி, இனம் என்று எந்த பாகுபாடும் கிடையாது என்றே நம்புகிறேன். ஏனென்றால், என்னுடைய நம்பு வட்டத்துக்குள் அனைத்து தரப்பிரனும் இருக்கின்றனர்.

சிலர் தங்களின் நட்பை சில வரையறைகளுடன் ஏற்படுத்திக் கொள்வதாகக் கூறுகிறார்கள். அதில், எவ்வளவு உண்மையிருக்கும் என்று தெரியவில்லை. எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வருவதுதானே நட்பும், காதலும். ஆனால், இந்த நடைமுறை உலகில் பலர் ஏதோவொன்றை எதிர்பார்த்தே நட்பையும், காதலையும் பாராட்டுகிறார்கள் என்று சில தருணங்களில் எண்ணத் தோன்றுகிறது. (இனி கட்டுரை முழுவதும் நண்பர்கள் என்றே பொதுவாக குறிப்பிடுவேன். அதற்குள் இருபாலாரும் அடங்குவார்கள்.)

என்னுடைய நட்பு வட்டத்துக்குள் பள்ளியில் படித்தவர்கள், தொழில்முறையில் தொடர்பிலிருக்கிறவர்கள், இணையவுலகில் கருத்துக்களை பரிமாறுபவர்கள், அரசியலிலில் இருக்கிறவர்கள், வீதியில் சந்திக்கிறவர்கள், ஒன்றாக மோதல் காலங்களில் இடம்பெயர்ந்தவர்கள், சுனாமி தாக்கத்தில் உறவுகளை இழந்து ஒன்றாக அழுதவர்கள், முட்டை அப்பம் சாப்பிடும் கடைக்காரர் என்று பலதரப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

நான் அதிகமாக நண்பர்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருப்பவன். நட்புக்குள் கருத்து மற்றும் அனுபவப் பகிர்தல்களைச் செய்யவேண்டும் என்று தொடர்ந்தும் இயங்குபவன். என்னுடன் பலர் பல விடயங்களில் முரண்பட்டுச் செல்(கொள்);கிறார்கள். ஆனாலும், என்னுடனான நட்பைத் துண்டித்துக்கொண்டவர்கள் மிகக் குறைவு. அப்படி நட்பைத் துண்டித்துக்கொள்ளவும் நான் விரும்புவதில்லை.

என்னுடைய நண்பர்களை அவர்களின் பலம், பலவீனங்களுடனேயே ஏற்றுக்கொள்கிறேன். அளவுக்கு மீறி அவர்களுடைய சுயத்தில் தலையிடுவதில்லை. ஏனென்றால், என்னுடைய சுயத்தில் முறையற்ற ரீதியில் தலையிட நான் யாரையும் அனுமதிப்பதில்லை. நண்பர்கள் சிலரின் நடவடிக்கைகள் சில தருணங்களில் எனக்கு பிடிப்பதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் அந்த இடங்களைத் தவிர்க்கிறேன். அதனாலேயே, நண்பர்களைத் தொடர்ந்து பேண முடிகிறது.

‘மச்சான், தலைவா, பொஸ், சிஸ், ராசா….’ இந்தச் சொற்பிரயோகங்களிலேயே நண்பர்களை நான் அதிகம் அழைக்கிறேன். என்னுடன் நேரிலோ, தொலைபேசியினூடோ பேசியவர்களுக்கு இது புரியும். நண்பர்களுக்கிடையில் அண்ணா, அக்கா, சேர் என்கிற வார்த்தைப் பிரயோகங்களை நான் அதிகம் தவிர்க்கிறேன். தொழில்முறையிலும் நான் இந்த சொற்பதங்களைப் பாவிப்பது குறைவு. அண்ணா, அக்கா என்பதெல்லாம் உறவு முறைகளுடன் சரி.

பாலர் பள்ளியில் என்னுடன் ஆரம்பித்த நட்பை நான் இன்றும் மதிக்கிறேன். சந்தர்ப்பங்கள் கிடைக்கிற போதில் அவர்களுடன் பேசியோ, மின்னஞ்சலினூடாகவே அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். இதில், பெரிய வருத்தம் என்னவென்றால் என்னுடன் பாலர் பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலை நாட்களில் நண்பர்களாக இருந்தவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. கொடிய மோதலும், இயற்கையும் அவர்களை எங்கோ அழைத்துச் சென்றுவிட்டன.

என்னை ‘தலைக்கனம்’ பிடித்தவன் என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அப்படி சொன்னவர்கள் என்னுடன் பழகிய பின்னர் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பலர் இதனை என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். என்னைத் ‘தலைக்கனம் பிடித்தவன்’ என்று மற்றவர்கள் சொல்வற்கும் காரணமும் உண்டு. ஏனெனில், யாருடனும் நான் முதலில் சென்று அறிமுகமாக விரும்புவதில்லை. ஆனால், அந்த அறிமுகம் நிகழ்ந்துவிட்டால் பல மணிநேர அரட்டைக்கும் நான் தயார்.

பள்ளி- தொழில்- இணையம் என்று பலதரப்பட்ட முறைகளில் நண்பர்களைக் கொண்டிருக்கிற நான், ஒவ்வொரு பிரிவினரையும் அவர்களின் விருப்பங்கள், தெரிவுகளின் அடிப்படையில் கையாள்கிறேன். என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர் ஒருவனுடன் பேசுவது போன்று தொழில்முறையில் நண்பராக இருப்பவருடன் பேச முடிவதில்லை. ஏனெனில், அவரவர் சூழலும், தேவையும், விரும்பமும் மாறுபடுகின்றன.

என்னுடைய ஆளுமை விருத்தியில் நண்பர்களுக்கு கணிசமான பங்கு உண்டு. அதற்கான சின்ன உதாரணங்கள் இரண்டினை சொல்லி விடுகிறேன். நேரிலே இன்னும் சந்திக்காத இருவர் இணையத்தின் மூலம் நண்பர்கள் ஆனார்கள். ஒருவர் என்னுடைய தொழில் துறையிலேயே இருப்பவர். மற்றவர், மருத்துவத் துறையில் இருக்கிறார்.

என்னுடைய வலைப்பதிவுகளையும், கட்டுரைகளையும் வாசித்து விட்டு தொடர்ந்தும் ஊக்குவிப்பு தந்தவர்கள் இந்த இரண்டு நண்பர்களும். ஒரு வருடத்திற்கு முன்னர் நான் எழுதிய ‘கமல் என்கிற திரைத்துறை ஆளுமை’ கட்டுரைக்கு காட்டமான விமர்சனமொன்றை முதலாமவர் முன்வைத்து எனக்கு மின்மடல் எழுதியிருந்தார். அதில், அவர் குறிப்பிட்டிருந்த விடயம், “தொடர்ந்தும் தேடல்களுடன் எழுதும் நீங்கள் கமல் தொடர்பான கட்டுரையை இப்படி பொறுப்புணர்வு அற்று எழுதி விட்டீர்களே” என்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

ஆனால், அந்த நண்பர் என்னுடைய வளர்ச்சியில் தொடர்ந்தும் அக்கறை காட்டி வருவார். என்னுடைய சிறிய தவறுகளைக் கூட மிகச் சரியா சுட்டிக்காட்டுவார். அதே, போல என்னைவிட என்னுடைய எழுத்துக்களில் இருக்கின்ற பார்வையை உன்னிப்பாக கவனித்து எனக்கு ஊக்கமளித்து வருகிறார். குறித்த நண்பர் என்னுடைய தொழில் முறை வளர்ச்சியில் அற்புதமாக தாக்கம் செலுத்துகிறார். எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்பாடுவார் என்று நம்புகிறேன்.

மற்றவர் அதாவது மருத்துவத்துறையைச் சேர்ந்த நண்பர் சிறிய காலத்துக்கு முன்னார் இணையத்தின் மூலம் நண்பரானவர். அந்த நண்பரிடமிருந்து எனக்கு மிகநீண்ட மின்மடலொன்று வந்திருந்தது. அதனை வாசிக்க வாசிக்க நல்ல நட்பொன்றை எனக்கு என்னுடைய எழுத்துக்கள் தந்திருக்கின்றன என்ற செருக்கு ஏற்பட்டது. அந்த புதிய நட்பு என்னுடைய ஆளுமை வளர்ச்சியில் அற்புதமாக தாக்கம் செலுத்துகிறது.

அதே நட்பிடமிருந்து ஒருநாள் என்னுடைய சிறுபிள்ளைத்தனத்தை (அப்படித்தான் நினைக்கிறேன்) சுட்டிக்காட்டி மின்மடலொன்று வந்தது. அந்த மின்மடலை அலுவலகத்திலிருந்து வாசிக்கும் போது என்னுடைய சிறுபிள்ளைத்தனம் எனக்கு பிடிபட்டது. ஆனால், அந்த நட்பு இன்றும் என்னை மதிக்கிறது. அதே அக்கறைத் தொடர்ந்தும் செலுத்துகிறது.

இதேபோல, பல உதாரணங்களை என்னுடைய வாழ்க்கையில் இருக்கின்றன. நல்ல நண்பர்களை கொண்டதை நான் அற்புதமான கொண்டாடுகிறேன். சில தருணங்களில் அதிக பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் போது, யாராவது ஒரு நண்பரை அலைபேசியில் அழைத்து பேச முடிகிறது. அவர்கள், தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரச்சினைகளிலிருந்து மிக இலகுவாக வெளியில் வர முடிகிறது. இதேபோல, என்னுடைய நண்பர்கள் பலரும் என்னுடம் பேசுகிறார்கள்.

என்னை வளப்படுத்துவதில், ஆளுமைமிக்கவனாக வடிவமைப்பதில், பண்புள்ளவனான மாற்றுவதில் நண்பர்கள் பலர் தாக்கம் செலுத்துகின்றனர். அதே, தாக்கத்தை ஒரு சில நண்பர்களிடமாவது நானும் செலுத்துகிறேன் என்று நினைக்கிறேன். அதுபோல, சிலருக்காவது நான் நல்ல நண்பனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். காதல் மாதிரி நட்பைப் பற்றியும் அதிகம் பேசலாம். ஆனால், இந்தப் பகுதியை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். மீண்டும், என்னைப் பட்டை தீட்டுக்கிற நட்புக்கு சல்யூட்!

இராவணனை மணிரத்தினம் இயக்கியிருக்கவே கூடாது!


உதவி இயக்குனராக இருக்கிற என்னுடைய புதிய (ஆனால், நெருங்கிய) நண்பரொருவர் அடிக்கடி என்னிடம் சொல்லுவர் நல்ல படம், கூடாத படம் என்று ஒன்றுமே இல்லை. மக்களுக்கு பிடித்த படமா? இல்லையா? என்பதே சினிமாவின் அளவு கோல் என்று.

முதலில் அந்த நண்பர் சொல்லும் போது எனக்கு அதில் பெரிய உடன்பாடே இல்லை. ஆனால், அதில் குறிப்பிடத்தக்களவு உண்மை இருப்பதை மணிரத்தினத்தின் ‘இராவணன்’ பார்த்த பின்னர் உணர்ந்து கொண்டேன். சத்தியமாக படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இயக்குனர் மணிரத்தினத்தின் மோசமான படமாக இராவணனை என்னுடைய மனது ஏற்றுக்கொண்டு விட்டது.

அச்சு- இலத்திரணியல் ஊடகங்களிலும், பதிவுலகிலும் மணிரத்தினத்தின் இராவணன் படம் குறித்து நேர் மற்றும் மறை விமர்சனங்கள் தொடர்ந்தும் வருகின்றன. அந்தப் படத்துக்குள் இருக்கிற அரசியல் குறித்தெல்லாம் புதிதிது புதிதாக கண்டுபிடித்துக் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் பதிவர்கள்.

இராவணன் பார்க்கும் போது சத்தியமாக எனக்கு எந்தப் புண்ணாக்கு அரசியலும் புலப்படவில்லை. மாறாக, என்னுடைய விரும்ப இயக்குனர்களில் முதல் நிலையிலிருந்த மணிரத்தினம் படுபாதாளத்துக்குள் விழுந்துவிட்டார் என்பது மட்டுமே விளங்கியது.

இராவணன் பார்த்து நான் இரசித்த விடயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டனின் ஒளிப்பதிவு. ஏஆர்.ரஹ்மானின் இசை (வீராவை தனித்து காட்டும் காட்சிகள் இரண்டில் வரும் பின்னணி இசை படத்துக்கு பொருந்தவில்லை.) விக்ரம், பிரித்விராஜ், ஐஸ்வர்யா மூன்று பேரின் நடிப்பு.

இராமயணத்தை படமாக எடுக்க விரும்பிய மணிரத்தினம் திரைக்கதைக்குள் (?) கொஞ்சம் சந்தணக்கடத்தல் வீரப்பன் வரலாறையும் கலந்து இயக்கியுள்ளார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி இருபது நிமிடங்களுக்கு முன்னர் வரையில் திரைக்கதை கோர்வையற்று குழப்பமாகவே இருக்கிறது.

மணிரத்தினத்தின் தளபதி, நாயகன், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், பம்பாய் படங்கள் என்னுடைய விருப்பத்தெரிவுகளாக என்றுமே இருக்கின்றன. அதிலும், தளபதி படம் நான் அதிகம் விரும்பி பார்க்கிற படம். துரியோதனன், கர்ணன் ஆகியோரின் பாத்திரங்களை பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டது தளபதி. அதில், நேர்த்தி அற்புதமாக இருந்தது.

‘இராவணன்’ இராமர், சீதை, இராவணன் காதாபாத்திரங்களை பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. படம் ஆரம்பித்த சில தருணங்களிலேயே அது அனைவருக்கும் புரிந்து விடுகிறது. ஆனால், காட்டு இலாகா அதிகாரியாக வரும் கார்த்திக்கை மரத்துக்கு மரம் தாவச் செய்து அவரே அனுமான் பாத்திரம் ஏற்கிறார் என்று மக்களுக்கு புரியவைத்திருக்கிறார்? மணிரத்தினம்.

அதைவிட, படத்தின் ஏராளமான காட்சிகளில் இராமாயணத்தின் பாத்திரங்களை முற்றுமுழுதாக கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார். பிரித்விராஜ், விக்ரமை மறைந்திருந்து சுடுவதில் இருந்து, விக்ரம் படம் முழுவதும் தான் கெட்டவன், ராட்சசன் என்று சொல்வது வரை ஏராளமான எரிச்சலூட்டல்கள்.

படத்தின் மிகப்பெரிய குறை சுஹாசினி மணிரத்தினம். படம் முழுவதிலும் ஏராளம் வசனங்கள். வர்க்கப்படுத்தல்கள் தொடர்பில் தெளிவற்ற அல்லது முற்று முழுதாக மேம்போக்கான சொல்லாடல்கள். அர்த்தபுஷ்டியான வசனங்கள் இடம்பெறும் மணிரத்தினம் படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு சுஹாசினி மணிரத்தினம் தந்திருப்பது மிகப்பெரிய சோதனை.

சத்தியமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இவ்வாறான கதைக்களம் சாத்தியமில்லை. அதுவும், காட்டுக்குள்ளேயே இவ்வளவு பிரமாண்டமான வாழ்விடங்களும், மனிதர்களின் எண்ணிக்கையும் நெருடல்களைத் தருகிறது.

‘வீரா’ பல குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறான் என்பதை காட்ட இயக்குனர் கையாண்ட காட்சிகள் தெளிவில்லை. அதனாலேயோ என்னவோ அதனை வசனங்களின் மூலம் சொல்லியிருக்கிறார் பல இடங்களில். அதுபோலவே, ‘தேவ்’ பாத்திரமும் முரண்பாடாக அமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இறுதிக் காட்சியும் (அதுவும், 'நான் மீண்டும் வருவேன், உன்னைத் தொடர்வேன்' பாடல்) மற்றும் சோபனா நடனம் அமைத்த ஐஸ்வர்யாவுக்கும், பிரித்விராஜ்யுக்குமிடையிலான 'கள்வரே…’ பாடலுமே என்னை அதிகம் ஈர்த்தவை. படத்தின் ஏராளமான விடயங்கள் என்னை மணிரத்தினத்தின் மீதான மரியாதையைக் குறைக்கவே செய்தது. சத்தியமாக இராவணனை மணிரத்தினம் இயக்கியிருக்கவே (எடுத்திருக்கவே) கூடாது!.