உத்தமர்கள் யார்? என்னையும் நோக்கி கேட்கிறேன்!
Posted On Wednesday, June 23, 2010 at at 8:42 PM by மருதமூரான்.அவ்வாறே நானும் பலருக்கு எதிரியாக இருப்பேன். இருக்கிறேன். சிலர் என்னை எதிரியாக நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கு தெரியாமலும் நான் பலருக்கு எதிரியாக இருக்கலாம். இது, நடைமுறை உலகில் சாத்தியம்.
சில தருணங்களில் எங்களையே எங்களுக்கு பிடிப்பதில்லை. இதனை அனைவரும் உணர்ந்திருக்கலாம். நாங்கள் செய்கின்ற செயல்கள் பிழை என்று தெரிந்து கொண்டே அதை மீண்டும் மீண்டும் செய்வோம். அதனால், நாங்கள் மட்டுமல்ல பலரும் பாதிக்கப்படுவார்கள். இது பரவலாக நடக்கின்றது. எதிர்காலத்திலும் நடக்கும்.
எங்களை நிலை நிறுத்துவதற்காக நாங்கள் எவ்வளவு முரண்பாடான காரியங்களையெல்லாம் செய்கிறோம். அதனை எங்களை நோக்கி இன்னொருவன் செய்கிற போது எங்களால் தாங்கிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. இது மனித இயல்பு. இது தனி மனிதன் தொடங்கி சமூகம், இனம், பிராந்தியம், மதம் என்று தொடர்கிறது.
அதுபோலவே மத, கொள்கை, சிந்தனைத் திணிப்புக்களை மற்றவர்களிடம் முறையற்று சேர்ப்பிக்கின்ற நிகழ்வுகளும் பொறுப்பற்ற செயலே. அதனை யார் செய்தாலும் தவறானது. அனேக தருணங்களில் அவர்கள் முன்னெடுத்து செல்கிற கொள்களைகள், மதம்- மார்க்கங்கள், சிந்தனைகளில் அவர்களுக்கே நம்பிக்கை இருப்பதில்லை.
மற்றுமொரு முக்கிய விடயம் அந்தரங்கத்தை விமர்சிக்கிற விடயம். தனி மனிதனின் அந்தரங்கத்தை விமர்சிக்கிற உரிமை யாருக்கும் இல்லை. ஏனெனில், மற்றவனின் அந்தரங்கத்தை அறிந்துகொள்ள நாங்கள் காட்டும் ஆர்வம் பல தருணங்களில் முறையற்றது. மற்ற மனிதன் செய்கிற அதே தவறினை பல தடவைகளில் நாங்களும் செய்வோம். ஆனால், அது தொடர்பில் நாங்கள் வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவதில்லை.
சின்னதாக ஒரு உதாரணம், நடிகர் ஒருவர் எந்தெந்த நடிகையுடன் அந்தரங்க தொடர்புகளை பேணிவந்தார் என்பது தொடர்பில் நாங்கள் ஆர்வத்துடன் நோக்குவோம். ஆனால், அதேவிதமாக செயற்பாடுகளில் நாங்களும் பல நேரங்களில் ஈடுபட்டு வருவோம். அது தொடர்பில் நாங்கள் மௌனிகளாக இருப்போம். ஏனெனில், நாங்கள் எங்களை எப்பொழுதும் நல்லவர்களாக காட்டிக்கொள்ள முனைவதாகும்.
யாரும் முற்றுமுழுதாக உத்தமர்களாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. உலகத்தில் பெரும்பான்மையினரால் மகாத்மாவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காந்திஜீ கூட மில்லியன் கணக்கானவர்களுக்கு எதிரியே. எங்களுக்கு வேண்டுகிற சுதந்திரமும், விடுதலையும் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எத்தனைபேர் உண்மையாக அக்கறைகொள்கிறார்கள்.
பணம், பொருள், புகழ், அதிகாரம் போன்றவை பெற்றுக்கொள்ள அனைவரும் விரும்புகின்றோம். அதனை அடைவதற்காக சிறிய தொகையினரே நேர்மையாக உழைக்கின்றனர். மற்றவர்கள் முறையற்று அதனை அடைவதற்கு முயற்சிக்கின்றோம். இது பரவலாக எங்கும் நடக்கின்றது.
நாங்கள் எங்களின் நேர்மைத் தன்மை குறித்து மற்றவர்களிடம் அபிமானம் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவோம். ஆனால், எங்களிடம் இருக்கிற குறைகள் தொடர்பில் சுயபரிசோதனை செய்துகொள்ள முனைவதில்லை. இதுவே, பல குற்றங்களுக்கும், முறையற்ற செயல்களுக்கும் முக்கிய காரணமாகிறது.
எங்களுடைய பிழைகளுக்கு அல்லது தவறுகளுக்கு காரணங்களை முன்வைத்து செயற்படும் நாம், மற்றவன் பிழை அல்லது தவறு செய்யும் போது அவனது காரணங்களை அறிந்து கொள்ள விரும்புவதில்லை. இதுவும், மற்றவர்களுக்கும், எங்களுக்கும் உண்மையற்று இருக்கிற சந்தர்ப்பங்களே.
அதுபோல, ஒரு மனிதனிடம் சிந்தனை மற்றும் கருத்தியல் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அந்த மாற்றங்களை மற்றவர்களும் சடுதியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறானது. இவ்வாறான செயற்பாடுகள் மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது உள்வாங்காத நிலைகளைத் தோற்றுவித்து விடும். இது பலருக்கு சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது.
யாரும் முற்றுமுழுதாக உத்தமர்களாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. அப்படி இருக்க குழந்தையாக அல்லது பிணமாக இருக்கவேண்டும். நான் குழந்தையும் இல்லை. பிணமும் இல்லை. ஆக, நானும் உத்தமன் இல்லை!.
என்னுடைய நாட்குறிப்பு: யாரும் படிக்கலாம்.
Posted On Tuesday, June 22, 2010 at at 9:50 AM by மருதமூரான்.அது, பலவழிகளில் உதவுகிறது. சில தருணங்களில் நீதி மன்றங்களுக்கே சாட்சியாகிறது. நானும் என்னுடைய தொழில் முறையில் அறிக்கையிடல்களை பதிவு செய்கிறேன்.
ஆனால், என்னுடைய சொந்த வாழ்க்கையின் சுவாரஸ்யங்களும், அனுபவங்களையும் பதிவதில்லை. ஏதாவது மனதில் ஓரத்தில் எழுதப்பட்டிருந்தால் அன்றி, இன்று வரை இதை எழுதும் வரை நாட்குறிப்புக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது.
ஆக, இன்று இந்தக் கணத்திலிருந்து என்னுடைய நாட்குறிப்பை வாரம் ஒருதடவை எழுதவிருக்கிறேன். வாரம் ஒருதடவை எழுதுவதற்கு எப்படி நாட்குறிப்பு என்று தலைப்பிடுவது என்று யோசித்தேன். ஆனாலும், வாரக்குறிப்பு என்று அழைப்பதைவிட நாட்குறிப்பே இயல்பாக இருக்கிறது. அதனால் தான் தலைப்பில் சிறு பொருட்குற்றம்.
புதிய வேலை
எனக்கு விருப்பமான- நான் படித்த இலத்திரணியல் ஊடகத்துறையில் மீண்டும் குறிப்பிட்ட கால ஒப்பந்தந்தின் அடிப்படையில் 14ஆம் திகதி முதல் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளேன். பழைய, புதிய நண்பர்கள் என்று வேலைத்தளம் சுமூகமாகச் செல்கிறது.
அரசியல் தலைவர்கள், மோதல் வடுக்களைத் தாங்கி நிற்கிற மக்கள், அடிப்படைத் தேவைகளை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள், அரசுக்கும் மக்களுக்குமிடையில் அல்லாடும் அதிகாரிகள், பாதுகாப்புதுறையினர் மற்றும் இத்தியாதிகள் என்று பல்வேறு துறையினருடன் உரையாடுகின்ற சந்தர்ப்பத்தை மீண்டும் அதிகரிக்க புதிய வேலை காரணமாகிறது. ஆனால், கடுப்பை கிளப்பும் விடயம் வேலைத்தளத்துக்கு செல்வதற்கு அதிக நேரம் எடுப்பது.
இராவணன்: மணிரத்தினம்: ‘பிக்’பீ
மணிரத்தினத்தின் ‘இராவணன்’ படத்தின் முதற்காட்சிக்கான ரிக்கட் இலவசமாக கிடைத்தபோதும் படம் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கிருந்த வேறு முக்கிய வேலைகள் காரணமாக அமையவில்லை. படம் பார்க்கவில்லையே என்ற சிறிய வருத்தம் இருந்த போதிலும், பதிவுலகம் இராவணனை வைத்து முன்வைக்கும் பின்னணி அரசியல், இசம், புண்ணாக்கு என்ற கோட்பாடுகளும்- சூத்திரங்களும் சில காலத்துக்கு பின்னர் இராவணனை பார்க்கலாம் என்ற எண்ணத்தை தந்துள்ளது.
உலக மயமாக்கலின் அனைத்து வழிகளையும் பாவித்து மணிரத்தினமும், அவரது மற்றைய தயாரிப்பாளரும் ‘இராவணனை’ நல்ல விலைக்கு விற்றுவிட்டனர். அதன், எஞ்சியுள்ள சரக்கையும் மக்களிடம் சேர்ப்பிக்கும் நோக்கில் ‘பிக்’பீ அதாவது அமிதாப்பச்சனும் தன்னுடைய ஒத்துழைப்பை ருவிற்றர் மூலம் வழங்கிவிட்டார்.
செம்மொழி மாநாடும், சூன் 23ஆம் திகதியும்.
தமிழ்நாடு மாநில அரசின் ஏற்பாட்டில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் எதிர்வரும் 23ஆம் திகதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. தமிழ் மொழிக்கு போராடி? செம்மொழி அந்தஸ்த்து வாங்கிக்கொடுத்த தமிழினத் தலைவர்? முத்துவேல் கருணாநிதிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் மற்றுமொரு கூட்டமாக அமையும் வாய்ப்புக்களே அதிகம்.
ஆனாலும், அதையும் தாண்டி எம்முடைய மொழியின் வீச்சம் குறித்து ஏதாவது நல்ல முயற்சிகள் சிலவாவது முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. அத்துடன், செம்மொழி மாநாடு தொடர்பான விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்களில் ஜூன் 23 தொடக்கம் ஜூன் 27 என்று எழுதப்படாமல் ‘ஜூன்’ மாதத்தை கலைஞரும், அவரது தமிழ் அறிஞர்களும் ‘சூன்’ என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள்?.
ஆனி 9ஆம் திகதி முதல் ஆனி 13ஆம் திகதி வரை என்றுதானே தமிழில் குறிப்பிடப்பட வேண்டும். ( வேண்டுமானால், அடைப்புக்குள் ஜூன் 23 தொடக்கம் ஜூன் 27 என்று எழுதப்பட்டிருந்தால் குழப்பங்கள் எதுவும் இல்லையே) இந்த விடயம் தொடர்பில் நண்பர் பாலவாசன் நேற்று அதிக சிரத்தையுடன் கலந்துரையாடினார்.
மாம் அட் சிச்டீன் : பதின்ம வயதில் தாய்மை (தரும் சங்கடங்கள்).
நான் அதிகத் தடவைகள் பார்த்த ஆங்கிலப் (தொலைக்காட்சிப்) படம் மாம் அட் சிச்டீன் . கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாலை 4 மணிக்கு மீண்டும் ஒருதடவை பார்தேன். பதின்ம வயதில் தாயாகும் பெண்ணுக்கும், குழந்தைக்கும், அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்துக்கும் இடையிலான புரிதல்களும், முரண்பாடுகளுமே படம்.
இந்தியத் திரைப்படங்களுக்குரிய பாதி அம்சங்களை தன்னகத்தே மாம் அட் சிச்டீன் கொண்டிருந்தாலும், அதனையும் தாண்டி சில புதிய விடயங்களையும், அனுபவங்களையும் எமக்குச் சொல்லித்தருகிறது. ஹங்கொக், 2012 படங்களில் அதிக ஆர்வம் காட்டும் யாரும் இந்தப் படத்தினைப் பார்க்க வேண்டாம். அதையும், தாண்டி மாம் அட் சிச்டீன் பார்த்து விட்டு என்னை தேட வேண்டாம். நான் யாரிடமும் அகப்படமாட்டேன்.
அப்பாடா! என்னுடைய முதலாவது நாட்குறிப்பில் முதல் வாரத்தில் இவ்வளவு விடயங்களையும் அடக்கிவிட்டேன். ஆனாலும், இவற்றைத்தாண்டியும் என்னுடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் முக்கிய விடயங்கள் நடந்தன. அவை, இங்கு தேவையற்றது.
இனி ஒவ்வொரு வாரமும் ‘நாட்குறிப்பு’ ஊடாகவும், எப்போதாவது ஏதாவது பதிவினூடாகவும் சங்கடங்களை அன்பு உறவுகளுக்கு வழங்க தீர்மானித்திருக்கிறேன். கொஞ்சம் தாங்கிக்கொள்ளுங்கள் அல்லது திட்டிவிடுங்கள். மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்!.
பேரூந்தில் SEX: எங்கே இந்த கலாசார காவலர்கள்?
Posted On Friday, June 11, 2010 at at 3:49 PM by மருதமூரான்.காதல், கடவுள், காமம் இந்த மூன்றும் உணர்வுகள், நம்பிக்கை மற்றும் தேவையின் அடிப்படையில் அணுகப்படுபவை. இவற்றை தனிப்பட்ட ரீதியில் நான் நம்பிக்கை மற்றும் தேவையின் போக்கில் அணுகுகிறேன். மனிதனின் பரிமாண வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியில் இவை மூன்றும் விரும்பியோ விரும்பாமலோ தாக்கம் செலுத்துகின்றன.
ஆனால், இவை மூன்றும் பலரினால் முறையற்ற விதத்தில் கையாளப்படுகின்றன. பணம் சேர்க்க, ஏமாற்ற, உணர்சிகளைத் தூண்ட, சிந்திப்பதைத் தடுக்க…. என்று ஏராளம் வழிகளில் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. நல்ல விடயங்களில் முறையற்ற விதங்களில் பாவிப்பது மனித குலத்துக்கு புதிதல்லவே. அது போன்ற நிகழ்வு தொடர்பிலே இந்தப் பதிவு பேசுகிறது.
பொதுசேவைப் பேரூந்தொன்றில் அண்மையில் வீடு செல்வதற்காக ஏறினேன். சுமார் 50- 60 பேர் பேரூந்துக்குள் இருந்திருப்பார்கள். கடைசி இருக்கையில் நடுத்தர வயதுள்ள ஆணும்- பெண்ணும் மிகவும் நெருக்கமாக உட்காந்திருந்தார்கள். கொழும்பு பேரூந்துகளில் பயணப்படுபவர்கள் இவ்வாறு நெருக்கத்துடன் இருப்பவர்களை அடிக்கடி காணலாம்.
ஆனால், கடைசி இருக்கையில் இருந்த அந்த நடுத்தர வயதுடைய ஆணும்- பெண்ணும் ஒருவரை ஒருவர் முகர்ந்து கொண்டும், சொறிந்து கொண்டும், மர்ம உறுப்புக்களை தடவியபடியும் இருந்தார்கள். பல்வேறு மட்ட வயதுகளையுடைவர்கள் பயணப்பட்டுக்கொண்டிருக்கிற பேரூந்துக்குள் எந்தவித கூச்சம், வெட்கம் எதுவுமின்றி தங்களுடைய சில்மிஷங்களை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
பேரூந்துக்குள் ஏறும் எவரும் அந்த இரண்டு மனித ஜந்துக்களையும் பார்க்க வேண்டி வரும். இவ்வளவு பேர் பேரூந்துக்குள் இருக்கிறார்கள் என்று அந்த ஜந்துக்கள் நினைக்கவும் இல்லை. தங்களுடைய பாலியல் சொறிதல்களை நிறுத்தவும் இல்லை. மாறாக தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
பேரூந்துக்குள் ஏறியதும் அதுகளை பார்த்தவுடன் அவ்வளவு ஆத்திரம். என்னால் இந்த மனித ஜந்துக்களை என்ன செய்துவிட முடியும் என்ற இயலாமையில் அடுத்த தரிப்பில் இறங்கிவிட்டேன். இவ்வாறான நிகழ்வுகள் கொழும்பை ஒட்டிய நகரப் பேரூந்துகளில் மிக இயல்பாக நடைபெறுகின்றன. இவர்களைப் போன்றவர்களில் காதலர்கள் பெரிதாக அடங்குவதில்லை. மாறாக முறையற்ற தொடர்புகளைப் பேணுகிற ஆணும்- பெண்ணுமே அதிகம் அடங்குகிறார்கள்.
ஒரு ஆணும்- பெண்ணும் விரும்பி தங்களுக்கிடையில் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதை நான் எந்த தருணத்திலும் எதிர்க்க மாட்டேன். ஆனால், அதனை நான்கு சுவர்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மாறாக மாணவர்களும், பெற்றோரும், பெரியோரும்; பயணப்படுகிற பொது வாகனமொன்றுக்குள் இவ்வாறு தங்களுடைய பாலியல் தேவைகளை நிவர்த்திக்க முயல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
இதுவும் ஒருவகை பாலியல் ரீதியான உணர்ச்சிகளைத் தூண்டுகிற வேலைதானே. நீலப்படங்களும், மஞ்சள் பத்திரிகைகளும் செய்கிற வேலையையே இவ்வாறானவர்களும் செய்கிறார்கள். பேரூந்துக்குள் பல்வேறு வகையான பாலியல் சுரண்டல்களை இவ்வாறானவர்கள் செய்கிறார்கள். இதில், வயது வேறுபாடுகள் குறைவு. அனைத்து தரப்பிலும் இருக்கிறார்கள்.
காமம் என்பது அற்புதமான விடயம். எம் சந்ததி விருத்தியின் மூலம். ஆனால், இதுபோன்ற தரங்கெட்ட காமக் குற்றவாளிகளை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. நான் நினைக்கின்றேன் பேரூந்துகளிலும், பொது இடங்களிலும் இவ்வாறு பாலியல் தேவைகளை நிவர்த்திக்க முயல்பவர்களும் ஒருவகையில் போதைக்கு அடிமையானவர்களைப் போன்றவர்களே. இவர்களுக்கும் சிகிச்கை அவசியம்.
அதுபோக, பேரூந்துகளில் பிச்சையெடுப்பதை இலங்கை அரசாங்கம் அண்மையில் தடைசெய்துள்ளது. இதுவொரு வகையில் பயணிகளுக்கு நன்மையே. அவசரத்தில் பயணப்படுபவர்களுக்கு பிச்சையெடுப்பவர்கள் வழங்கும் தொல்லைகளிலிருந்து ஒரு நிம்மதி.
ஆனால், பொதுச் சேவைப் பேரூந்துகளை தங்களுடைய படுக்கையறையாக்க முயலும் மனித ஜந்துக்களை ஏன் இன்னும் இலங்கை அரசாங்கமும், கலாசார காவலர்களும் கண்டுகொள்ளவில்லை. புத்தனின் போதனைகளை ஏற்றுக்கொண்டு கலாசார விழுமியங்களை பேணுகின்றோம் என்று சொல்பவர்கள் ஏன் இது தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை.
இவ்வாறு பல கேள்விகளும், ஆதங்கமும் மனதுக்குள் எழுகிறது. ஆனாலும், என்னால் என்ன செய்துவிட முடியும். இந்தப் பதிவை எழுதுவதைத் தவிர!. மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.
மறைவாக்கு போடுவது உரிமை! பதிவை முடக்குவது வன்முறை!!
Posted On Tuesday, June 8, 2010 at at 8:34 PM by மருதமூரான்.இணையமும், வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களும் உலகம் பூராவும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிற காலமிது. அரசியல், வர்த்தகம், சமூக அபிவிருத்தி, தொழிநுட்பம் மற்றும் கலாசார வளர்ச்சி அல்லது அத்துமீறல்கள் என்று அனைத்து விடயங்களிலும் இவை குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
வலைப்பூக்கள் அல்லது பதிவுலகு அனைத்து மட்ட மக்களையும் நோக்கி தன்னுடைய கரங்களை வீரியத்துடன் நீட்டிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய கருத்துக்களை, விமர்சனங்களை, அனுபவங்களை, சந்தோசங்களை, துக்கங்களை என்று அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வலைப்பூக்கள் வழியேற்படுத்தி கொடுக்கிறது.
தெற்காசிய இணையப்பரப்பில் தமிழ் வலைப்பூக்களின் வருகை முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 600 முதல் 700 பதிவுகளாவது தமிழில் பதிவிடப்படுகிறது என்று எங்கோ வாசித்திருக்கிறேன். இந்தப் விபரம் ஓரளவு சரியாகவும் இருக்கலாம்.
நாளுக்கு நாள் தமிழ் பதிவுலகில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இது கருத்துப்பகிர்தல்கள், ஆளுமை பங்கீடுகள், மாற்றுக்கருத்துக்களின் வருகையை ஊக்குவிக்கிறது. இதனால், பதிவுலகம் ஆரோக்கியமாக இருப்பதாக நம்பலாம். பதிவுலகு நல்ல திசையில் பயணிக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறி.
ஆனால், நல்ல அறிகுறிகள் எங்கெல்லாம் தென்படுகிறதோ அங்கெல்லாம் அத்துமீறல்களும், வன்முறைகளும், ஜனநாயக மறுப்புக்களும் தலைதூக்கவும் ஆரம்பிக்கின்றன. இது, எல்லா விடயங்களுக்கும் பொருந்துகிறது. அதுபோலவே, தமிழ் பதிவுலகம் பலதரப்பட்ட குறைபாடுகளை அல்லது வன்முறைகளையும் தன்னுள்ளே வாரி அணைத்துக் கொண்டு செல்கிறது.
சில விடயங்களை எழுதுவது சிலருக்கு வருத்தங்களை தரலாம். ஆனால், உண்மைகளை எழுதியே ஆகவேண்டும். வலைப்பூக்களை திரட்டுகின்ற திரட்டிகள் பதிவர்களையும், வாசகர்களையும் ஊக்கப்படுத்தும் பொருட்டு வாக்களிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஒரு பதிவு பிடித்திருந்தால் நேர் வாக்கும். பிடிக்கவில்லை எனில் மறை வாக்கும் போடலாம். இதன்மூலம், பதிவர்கள் தங்களுடைய பதிவுகளின் உண்மை நிலையை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இதனை எதிர்பார்த்தே திரட்டிகள் வாக்களிக்கும் முறையினை அறிமுகம் செய்கின்றன. அதில், குறிப்பிடத்தக்களவு வெற்றியும் பெறுகின்றன. (திரட்டிகளின் வாக்களிக்கும் முறைகளில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்)
ஆனால், எங்கும் குதர்க்க சிந்தனையாளர்களும், குற்றவாளிகளும் இருக்கவே செய்கின்றனர். தங்களுக்கு ஒரு பதிவரை பிடிக்கவில்லை என்றால் அவருடைய பதிவினை வாசிக்காமலே மறை வாக்கு போட்டுவிட்டு செல்கிறார்கள். இது அளவு கடந்து இன்றும் தொடர்கிறது. அண்மையில் தொடர்ச்சியாக சில பதிவர்களின் பதிவுகளுக்கு மறைவாக்குகள் போடப்பட்டது.
இவற்றில் எத்தனை வாக்குகள் பதிவுகளை வாசித்து விட்டு அளிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மறை வாக்கு போடுவது உரிமை. ஆனால், தங்களுடைய குரோதங்களை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறு செய்வதை என்னவென்று சொல்வது. இவ்வாறான செயற்பாடுகள் புதிதாக அந்த வலைப்பூக்களுக்கு வருபவர்களைத் தடுக்கலாம். அதுபோல சில பதிவர்கள் பதிவுலகைவிட்டு ஒதுங்குவதற்கும் இது காரணமாகிறது.
தொழிநுட்ப வளர்ச்சிகள் வன்முறைகளுக்கும், அத்துமீறல்களுக்கும் பயன்படுகிறது என்பதற்கு வலைப்பூக்களை முடக்குவது அல்லது அழிப்பதுவும் நல்ல உதாரணம். ஒருவனின் கருத்து பிடிக்கவில்லை என்றால் மாற்றுக்கருத்தை முன்வைப்பதுவே ஜனநாயமுறைமை. (எங்களுடைய சமூகத்தில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடம் வழங்கப்படுவது குறைவு)
ஆனால், அவ்வாறு கருத்துக்களை முன்வைக்காமல் குறிப்பிட்ட கருத்தாளரின் தளங்கள் அல்லது பதிவுகள் சட்டவிரோதமாக முடக்கப்படுகின்றன. திறந்த மனதுடன் கருத்து மோதல்களுக்கு தயாரில்லாதவர்களே மற்றவர்களின் பதிவுகளையும், வலைப்பூக்களையும் அழிப்பதிலும், முடக்குவதிலும் முன்நிற்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளும் வன்முறையே.
இவ்வாறு முறையற்ற விதத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தமிழ் பதிவுலகத்துக்கு நல்லதல்ல. தொடர்ந்தும் பதிவுகளை அக்கறையுடன் வாசித்து வருபவன். அவ்வப்போது பதிவுகளையும் எழுதுபவன். இவ்வாறு பதிவுலகத்துடன் தொடர்புகளை பேணுகிறவன் என்கிற முறையிலேயே இந்தக் கருத்துக்களை முன்வைத்துச் செல்கிறேன். மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம்.





