மதராசபட்டிணம்: ஜீ.வி.பிரகாஷின் இசைத் திருவிழா.
Posted On Thursday, April 22, 2010 at at 10:50 AM by மருதமூரான்.“பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்தது யாருமில்லையே” ஜீ.வி.பிரகாஷின் இசையில் கசல் பாடகர் ரூப் குமார் ரதோட், ஹரிணி மற்றும் ஆண்ரியா பாடிய பாடல். நா.முத்துக்குமார் எழுதியுள்ள இந்தப் பாடல் ‘மதராசபட்டிணம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா… படத்தில் இடம்பெற்ற “ஹோசணப் பெண்ணே” பாடலுக்கு பின்னர் என்னை அதிகம் கவர்ந்த பாடல் இது.
‘வெயில்’ என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளைஞன் ஜீ.வி.பிரகாஷின் ரசிகன் நான். ஜீ.வி.பிரகாஷின் வளர்ச்சி சில தருணங்களில் அபரிமிதமானது. அதுபோல, சில தருணங்களில் எரிச்சலும் ஊட்டுபவை. ‘குசேலன்’ எரிச்சலூட்டியதற்கு ஒரு உதாரணம். ‘வெயில்’, ‘கிரீடம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வியக்க வைத்தவை.
ஏனோ தெரியவில்லை அண்மைக்காலத்தில் தமிழ் திரைப்பாடல்களில் அதிகமானவற்றை கேட்க முடிவதில்லை. அவ்வளவு இரைச்சல் அல்லது புரிவதில்லை. ஆனால், அவ்வப்போது பல இரசணை மிக்க பாடல்களைத் தாங்கியும் படங்கள் வெளிவருகின்றன. அதில், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா முக்கியமானவை. இப்பொழுது மதராசப்பட்டிணம்.
இந்தியாவின் சுதந்திரத்துக்கு அண்மைய (1940கள்) சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் மதராசபட்டிணம் என்று இணைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களில் காணக்கிடைத்தது. என்ன வித்தியாசம் படத்தில் இருக்கிறது என்பதை படம் வந்த பின்னர் பார்க்கலாம் என்று நினைத்துவிட்டு. பாடல்களை கேட்டேன்.
“பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்தது யாருமில்லையே” என்ற முதல் பாடலை கேட்ட தருணத்திலேயே பிடித்து விட்டது. தொடர்ச்சியாக அந்த இசைத்தொகுப்பில் இருக்கிற ஆறு பாடல்களையும் கேட்டேன். ஒவ்வொரு பாடலும் வேறு வேறு வடிவங்களில் அற்புதமாக இருந்தது.
அதிலும், “வாம்மா துரை அம்மா… இது வங்கக் கரையம்மா” என்ற பாடலில் 1940களின் சென்னையை அப்படியே கண்முன் நிறுத்த முனைகிறார்கள். உதித் நாராயன், எமி ஜக்ஷன் இணைந்து பாடியுள்ள இந்தப்பாடலில் இடையிலேயே (மறைந்த) நடிகர் ஹனீபா தமிழை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது அவ்வளவு இரசனைக்குரியது.
“பாவைக்கூத்துக்கள், பொம்மலாட்டங்கள், கோவில் சிலைகளில் கலை வளர்த்தோம்…. கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும்….. வீட்டில் திண்ணைகள் கட்டி வைப்போம்… வழிப்போக்கன் வந்து தங்கிப்போவான்…” என்ற வரிகளில் நா.முத்துக்குமார் தமிழர் பாராம்பரியங்களை எளிமையாக சொல்லியிருக்கிறார்.
தமிழ் திரைத்துறையில் வெற்றிகரமான பாடகராக தன்னை நிரூபிக்க ஆரம்பித்திருக்கும் நடிகர் விக்ரம், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் நடிகர் நாஸார் இணைந்து பாடியிருக்கும் “மேகமே ஓ மேகா உன் மழையைக் கொஞ்சம் தூவதே….” பாடலும் இரசிப்புக்குரியது. சலவைத் தொழிலாளிகள் தங்களுடைய வேலைகளைச் செய்து கொண்டு பாடும் பாடலாக அமைந்துள்ளது.
மதராசபட்டிணத்தில் காதலின் ரசம் சொட்டும் பாடலாக சோனுநிகம், சைந்தவி பாடியிருக்கும் “ஆருயிரே ஆருயிரே……” பாடலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். என்ன, சோனு நிகத்தின் தமிழ் உச்சரிப்பு சில அழகிய வார்தைகளை பலிவாங்கி விடுகிறது. சைந்தவி தமிழ் இசைத்துறைக்கு நல்ல வரவு. அதை இந்தப்பாடலும் சொல்லிச் செல்கிறது.
“ஆயிரமாயிரம் ஆயிரம் ஆயுதம் எதுவரும் போதும்…….” என்று ஆரம்பிக்கும் பாடல் படத்தின் இறுதிப் பாடலாக இருக்கலாம். ஹரிகரன் பாடியிருக்கிறார். ஆக்ரோஷமாக ஆரம்பிக்கும் பாடல்…… இறுதியில் ஓரளவு சோகத்தையும் காதுகளுக்கு தந்து செல்கிறது.
“வாம்மா துரை அம்மா… இது வங்கக் கரையம்மா” பாடலைக் கேட்கும் போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்த ‘ஸ்வதேஷ்’ படத்தில் இடம்பெற்ற “யூனி சாலா சல்லாகி யூனி சாலா…(உன்னைக் கேளாய்… நீயாரு)” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. அதுமாதிரியே, “பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்தது யாருமில்லையே” பாடல், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கடந்த ஆண்டு வெளியான ‘யுவ்ராஜ்’ படத்தின் பாடலொன்றை நினைவு படுத்துகிறது.
‘கிரீடம்’ படத்தில் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய இயக்குனர் விஜய்- இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கூட்டணியின் இரண்டாது இசை வெற்றி மதராசபட்டிணம். (‘மதராசப்பட்டிணம்’ என்றுதானே எழுதப்பட வேண்டும். ஆனால், படத்தின் விளம்பரங்களில் ‘மதராசபட்டிணம்’ என்றே இருக்கிறது.)
இலங்கை வானொலிகளில், “புலி உறுமுது … நான் அடிச்ச தாங்க மாட்டாய். பாடல்களே அதிகம் ஒலிக்கிறது. ஏனோ, மதராசபட்டிணம் பாடல்களைக் கேட்க முடியவில்லை. ரசிகர்களுக்கு மாறுபட்ட இரசனையை வழங்க நினைக்கும் ஒலிபரப்பாளர்கள் மதராசபட்டிணம் பாடல்களை கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும். அது மக்களுக்கும் பிடிக்கலாம். (நான், வானொலி கேட்பது குறைவுதான்.. அந்தத் தருணங்களில் மதராசபட்டிணம் சிலவேளை ஒலித்திருக்கலாம்)
நான் எந்தத் தருணத்திலும், யாருக்கும் இந்தப் பாடலைக் கேள் என்று பரிந்துரைத்தது கிடையாது. ஏனெனில், அது பலருக்கு பிடிக்காமல் போய் விடும். அல்லது அந்த நபர் ‘மன்மதராசா…..’ , ‘அப்படிப்போடு’ வகையறா பாடல்களை அதிகம் விருப்புபவராக இருப்பார். முதன் தடவையாக மதராசபட்டிணத்தின் பாடல்களை பரிந்துரைக்கிறேன். கேட்டுப்பாருங்கள்…. நல்லவற்றை பகிர்வதில் தவறில்லைத் தானே.
நல்ல இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் இணைந்து பணியாற்றும் போது நல்ல இசை கிடைக்கிறது. அதற்கு இளையராஜா- பாலுமகேந்திரா, இளையராஜா- பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்- மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்- ஷங்கர் நல்ல உதாரணங்கள். கீரிடம், படத்திற்கு பின்னர் மதராசப்பட்டிணத்தில் தங்களை நிரூபித்திருக்கும் ஜீ.வி.பிரகாஷ்- விஜய் கூட்டணியும் எதிர்காலத்தில் இந்த வரிசையில் சேரலாம்.
‘இன நல்லிணக்கம்’ சிந்திக்க ஆரம்பித்திருக்கும் தமிழ்- முஸ்லிம் தலைமைகள்.
Posted On Tuesday, April 20, 2010 at at 8:50 AM by மருதமூரான்.‘தமிழர்கள்’ என்ற பொது அடையாளத்துக்குள் ஒரு இனமாக இருக்க வேண்டிய நாம், பெரும்பான்மை சமூகம் செய்த சதியினாலும், எம்முன்னோர் விட்ட தவறுகளினாலும் தமிழ்- முஸ்லிம் என்று பிரிந்து இரண்டு இனக் குழுமங்களாக பிரிந்து நிற்கிறோம். இந்த வரலாற்றுத் தவறை திருத்திக் கொள்ள தற்போது சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது. அல்லது சந்தர்ப்பத்தை உருவாக்கும் சூழ்நிலை இருக்கிறது.
மொழியினால், கலாசாரத்தினால், பாரம்பரியத்தினால், தொழில் முயற்சிகளினால் மற்றும் வாழ்வியலின் அடிப்படைகளினால் தமிழ்- முஸ்லிம் மக்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இருப்பார்கள். இலங்கையின் சுதந்திரத்துக்கு (முன்னரான) அண்மித்த காலத்திலேயே தமிழ்- முஸ்லிம் என்ற பிரிவினை தோற்றுவிக்கப்பட்டு சிறுபான்மைச் சமூகம் சிதறடிக்கப்பட்டது.
இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் வடக்கு- கிழக்கில் 95 சதவீதமாக இருந்த தமிழ் இனத்தினை, மதத்தின் அடையாளத்தை முதன்மைப்படுத்தி தமிழர்கள்- முஸ்லிம்கள் என்று பிரித்து ஆண்டனர். அதற்கு எம்முடைய முன்னோர்களும் தூரநோக்கற்று துணை போய்விட்டனர்.
இஸ்லாமிய மதத்தை பின்பற்றியவர்களை ‘முஸ்லிம்’ என்ற இனமாக சித்தரித்த வரலாற்றை இலங்கையே கொண்டிருக்கிறது. மத அடையாளத்தை இன அடையாளாமாக கருதி அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள ஒரே நாடும் இலங்கை என்றே நினைக்கிறேன். இதிலுள்ள சதித்திட்டங்களை நாங்கள் 60 ஆண்டுகள் கழித்தும் உணராமல் இருக்கின்றமையே வேதனை தருகிறது.
இலங்கையின் 7வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் தென்னிலங்கையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்னிலை வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரு வெற்றி பெற்றது. அதுபோலவே, வடக்கு- கிழக்கில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்கிற இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது.
அத்துடன், முஸ்லிம் (தமிழர்களின் ஒருபகுதியே இவர்கள். ஆனாலும், ஊடகங்களிலும், அரசியல் சாசனத்திலும் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் என்று இந்த கட்டுரை முழுவதும் தொடருகிறேன்) சமூகத்துக்குள் மக்களின் அதிக ஆணையைப் பெற்ற கட்சியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் இணைந்து செயற்படுவது தொடர்பில் அண்மைக்காலத்தில் அதிக ஆர்வம் கட்டி வருகின்றன. இது, இலங்கையின் சிறுபான்மை சமூகங்களின் அதிகாரங்களையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் உந்து சக்தியாக இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரசை பேச்சுக்களிற்கு அழைத்துள்ளார். அதேநேரம், முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகுதாத், தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அண்மையில் வலியுறுத்தியிருக்கிறார். அத்துடன், எதிர்வரும் வாரமளவில் கொழும்பில் இரு கட்சிகளும் பேசுவதற்கு இணங்கியிருக்கின்றன.
பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள (144 அல்லது 145 உறுப்பினர்கள்) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் காலத்தில் அரசியல் சாசனத்தில் பாரிய திருத்தங்களைக் கொண்டு வரப்போகிறது. இந்தத் திருத்தங்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்கவேண்டி நிலைக்கு சிறுபான்மைச் சமூகங்களும் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான அல்லது பாதகமான சட்ட மூலங்களை (அல்லது திருத்தங்களை) அரசாங்கத்துடன் பேசி இடை நிறுத்துவதற்கும், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் இரு கட்சிகளின் இணக்கமும் தேவைப்படுகிறது. வடக்கு- கிழக்கில் மக்களின் அதிக ஆணையைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- முஸ்லிம் காங்கிரசும் இணைவதற்கு முதலாவதான காரணமாக இதனைக் கொள்ளலாம்.
இது தவிர, வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையிலுள்ள முரண்பாடுகளை களைவதற்கும், தேவையற்ற சந்தேகங்களை நீக்குவதற்கும் இரு சமூகங்களிடையேயும் இணக்கம் அவசியம். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை என்று கிழக்கின் அனைத்து பகுதிகளிலும் இரண்டு சமூகங்களுமே அதிகளவில் வாழ்கின்றன. ஆகவே, முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.
இலங்கையில் தொடர்ந்த மோதல்களினால் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளான பகுதி வடக்கு- கிழக்கு. அபிவிருத்தி என்ற வாடையை கடந்த முப்பது ஆண்டுகளில் காணாத பகுதி. இவற்றை கருத்தில் கொண்டும் தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் ஒன்றினைந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இணைந்து செயலாற்றுவதன் மூலமே வடக்கு- கிழக்கின் அபிவிருத்தி சாத்தியப்படும்.
வடக்கு- கிழக்கு, இலங்கையின் அரசியல் சாசனத்தின் படி வேறு வேறு மாகாணங்கள் என்கிற போதிலும், அப்பிரதேசத்திலுள்ள பெரும்பான்மை மக்கள் அதனை மனதளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக இன்னும் தங்களை வடக்கு- கிழக்கு என்ற ஒரே அதிகார அலகாகவே கருதுகிறார்கள். ஆகவே, இரண்டு மாகாணங்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி இணைந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.
இவற்றுக்கொல்லாம் தமிழ்- முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்படுவது அவசியமாகிறது. அரசாங்கத்தை ஆதரித்துள்ள தமிழ்- முஸ்லிம் தலைமைகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியிலுள்ள தமிழ்- முஸ்லிம் தலைமைகளாக இருந்தாலும் சரி இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டிய தருணத்தில் இருக்கின்றன.
நாங்கள் ஆளும் கட்சிக்குள் இருக்கிறோம் அல்லது எதிர்த் தரப்பில் இருக்கிறோம் என்ற காரணங்களைக் காட்டி பிரிந்து நின்று செயற்படுவது தமிழ்- முஸ்லிம் சமூகங்களின் எதிர்கால நலன்களுக்கு உதவாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரஸ் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது காலத்தில் தேவை.
இதனை, ஆளும் தரப்பிலுள்ள தமிழ்- முஸ்லிம் தலைமைகள் விமர்சிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவ்வாறு விமர்சிப்பதனால் தேவையற்ற முரண்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அதுபோலவே, ஆளும் தரப்பிலுள்ள தமிழ்- முஸ்லிம் தலைமைகளும் எதிர்காலத்தில் ஆக்கபூர்வ முயற்சிகளில் இணைந்து செயற்படுவதை அனைவரும் அனுமதிக்க வேண்டும்.
வடக்கு- கிழக்குக்கு வெளியிலுள்ள சிறுபான்மையினரின் வளர்ச்சியிலும் தமிழ்- முஸ்லிம் தலைமைகளின் இணக்கப்பாடு பங்கு வகிக்கும். இலங்கையில் அனைத்து இனங்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும். அதனை அடைவதற்கு சிறுபான்மை சமூகங்களிடையே புரிந்துணர்வு அவசியம். அதுவே, எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள வசதியாக அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் எதிர்காலத்தில் தங்களுக்கிடையில் நிகழ்த்தவிருக்கும் பேச்சுக்களில் ஆக்கபூர்வமான விடயங்களை ஆராய்ந்து, தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்ல இணக்கப்பாட்டை கொண்டுவர வேண்டும். இந்த இணக்கப்பாடு, காலம் காலமாக தமிழ்- முஸ்லிம் என்று பிரித்து ஆளப்படும் எம்மை ஒன்றாக இணைக்க உதவவேண்டும்!.
மனிதாபிமானம் என்ன விலை? கேட்கிறது காந்தி தேசம்!.
Posted On Sunday, April 18, 2010 at at 9:13 AM by மருதமூரான்.இந்தியா! அஹிம்சை நாயகன் மகாத்மா காந்தியை தேசபிதாவாக கொண்ட நாடு. அஹிம்சை வழிப் போராட்டங்களின் மூலம் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு. மனிதாபிமானத்தை தன்னுடைய வாழ்வாக கொண்டிருந்த அன்னை தெரேஸா வாழ்ந்த நாடு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.
இவ்வாறு, ஜனநாயகத்தின் அடிப்படைகளையும், மனிதாபிமானத்தின் மாண்புகளையும் தன்னுள்ளே வைத்திருப்பதாக வெளியுலகத்துக்கு சொல்லிக் கொள்கிற காந்தி தேசத்தில், 80 வயதை அண்மித்த இலங்கை தமிழ் மூதாட்டிக்கு வைத்திய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.
பக்கவாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள் வேலுப்பிள்ளை என்கிற இலங்கையைச் சேர்ந்த மூதாட்டிக்கு சென்னை விமான நிலையத்தில் வைத்து நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டு மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய தாயாரே பார்வதி அம்மாள்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட மோதல்களுக்குள் சிக்கிய, திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், அவரது மனைவி பார்வதி அம்மாளும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் குறிப்பிட்ட காலம் இருந்தனர். தடுப்புக்காவலில் இருந்த நிலையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை உயிரிழந்தார்.
இதனையடுத்து, பார்வதி அம்மாள் உறவினர்கள் மற்றும் அவரது நலன் விரும்பிகளின் முயற்சியினால் மலேசியாவுக்கு சிகிச்சைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையிலேயே மேலதிக சிகிச்கைகளுக்காக தமிழ்நாடு செல்வதற்கு இந்தியாவிடம் விசா அனுமதி கோரி, அது கிடைத்த பின்னர் தமிழ்நாடு நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை விமானத்தில் பயணித்துள்ளார்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பார்வதி அம்மாளின் விசா அனுமதிப்பத்திரங்களை பரிசோதித்த இந்திய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் பார்வதி அம்மாளை தங்களுடைய நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனையடுத்து, அவர் உடனடியாக மலேசியாவிற்கு திரும்பி அனுப்பப்பட்டார். மலேசியாவில் அவருக்கு மேலதிகமான ஒருமாத விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களிடம் அக்கறையும், அபிமானமும் கொண்டுள்ளதாகக் காட்டிக் கொள்ளும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உத்தரவுகளை அடுத்தே பார்வதி அம்மாளுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறைமைக்கும், தேசப் பாதுகாப்புக்கும் 80 வயதை அண்மித்த பார்வதி அம்மாளால் எவ்வாறு குந்தகம் விளைவிக்க முடியும். இவ்வாறு பொருத்தமற்ற மனிதாபிமானமற்ற முடிவுகளை இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா அவ்வப்போது எடுத்து வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு இந்தியாவினால் தேடப்படுபவர். பார்வதி அம்மாவினுடைய மகன் பிரபாகரன் என்ற விடயத்தை முதன்மைப்படுத்தியே அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனை, மனிதாபிமானமுள்ள ஜனநாயகத்தின் அடிப்படைகளில் அக்கறையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தன்னை தமிழினத் தலைவராக காட்டிக் கொள்கிற தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தன்னுடைய அக்கறையை அறிக்கைகள் மற்றும் தந்திகள் வாயிலாக வெளிக்காட்டியவர். அவர் இது தொடர்பில் என்ன பதிலை முன்வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
இந்திய பாராளுமன்ற தேர்தல் காலங்களில் இலங்கைத் தமிழர்களின் சோகங்களைக் காட்டி வாக்குகளைப் பெற்றவர். அதற்காக, மனைவி மற்றும் துணைவி சகிதமாக உண்ணாவிரதம் இருந்தவர். இவற்றைத் தாண்டி கருணாநிதி என்கிற மனிதானால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் உதவ முடியவில்லை. அல்லது அவருக்கு உதவ விரும்பமில்லை.
தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்கள் அகதி முகாமில் அண்மையில் தமிழ்நாட்டு பொலிஸாரின் அத்துமீறல்களினால் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அது, தொடர்பில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. மாறாக இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு மேலதிக கட்டுப்பாடுகளையும் விதித்தது.
தொப்புள் கொடி உறவுகள் ஆபத்தான தருணத்தில் உதவுவார்கள் என்று நம்பிச் சென்ற இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது இவ்வாறான காரியங்களையே பரிசாக வழங்குகின்றது.
மும்பைக் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய திவிரவாதி காசாப்பிற்கு வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகளை வழங்க முன்வருகிற இந்தியா, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றவனுக்கு சட்ட உதவியை வழங்கிய இந்தியா, மலேஷியாவிலிருந்து சென்ற 80 வயது இலங்கை மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்கை வழங்க அனுமதி மறுத்தது ஏன்?.
இலங்கையிலுள்ள தமிழர்கள் தங்களுடைய அதிகாரங்களையும், உரிமைகளையும் பெற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்று போலி வேடம் போடுகிற இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் எமக்கு எதிராக மேற்கொள்கின்ற சதிதிட்டங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமக்கான உரிமைகளை நியாயமான வழிகளில் நாங்களே பெற்றுக்கொள்ள வேண்டும். மாறாக இந்தியாவும், தமிழ்நாடும் எங்களுக்கு உதவும் என்று கருதுவது வெற்றுக் கனவாகவே முடியும்.
இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்திய தமிழர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள். ஆனால், அரசியல் மற்றும் அதிகாரத்திலுள்ள அநேகர் இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளை தங்களுடைய அரசியல் ஆதாயங்களுக்காகவே பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கு, கருணாநிதியும், ஜெயலலிதாவும் இன்னும் பலரும் விதிவிலக்கல்ல.
இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் காட்டும் பாராபட்சத்துக்கு, பார்வதி அம்மாள் திரும்பி அனுப்பப்பட்டதை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். இவ்வாறு பல உதாரணங்கள் எங்களின் முன்னால் உள்ளது.
எதிர்காலத்திலாவது இந்தியா மற்றும் தமிழ்நாட்டை கண்ணை மூடிக்கொண்டு நம்பாதிருப்போம். அதுவே நாம் எங்களுக்காக மரியாதைகளையும், உரிமைகளையும், அதிகாரங்களையும் உரிய முறையில் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று. மனிதாபிமானம் என்ன விலை? கேட்கிறது காந்தி தேசம்!.
வடக்கு- கிழக்கு மக்களின் செய்திக்கு தென்னிலங்கை செவி சாய்க்க வேண்டும்?!.
Posted On Monday, April 12, 2010 at at 8:32 AM by மருதமூரான்.இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத் தேர்தல்கள் இரண்டு முக்கிய முடிவுகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. முதலாவது, கடந்த வருடம் ஏற்பட்ட வன்னி மற்றும் உறவுகளின் இழப்புக்கு பின்னர் தோல்வியுற்ற மனநிலையில் இருக்கிற வடக்கு- கிழக்கு மக்கள் மீண்டும் தங்களுடைய அரசியல் தலைமையாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை குறிப்பிடத்தக்களவுக்கு முன்மொழிந்துள்ளமை.
மற்றையது, முப்பது வருடங்களாக நீடித்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மன்னராக ஏற்றுள்ள தென்னிலங்கை மக்களின் வெற்றிபெற்ற மனநிலை. இந்த இரண்டு மனநிலைகளுமே இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளன.
வடக்கு- கிழக்கில் மக்களிடம் சொல்லுப்படியான ஆதரவைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) 13 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்த முடிவே கிடைக்கும் என, ‘பாராளுமன்ற தேர்தல் 2010: மஹிந்தவின் மூன்றில் இரண்டு கனவு கலைகிறது’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அது சாத்தியப்பட்டிக்கிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தேசியப் பட்டியல் மூலமும் இன்னும் ஒரு ஆசனம் கிடைக்கும்.
இலங்கையில் இம்முறை நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களிலேயே குறைந்தளவிலான வாக்குகள் பதிவானது. விரும்பியோ விரும்பாமலோ சில முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. அதில், முக்கியமானது இந்தத் தேர்தலில் வட மாகாண மக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டாமை. அதன் விளைவாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்க வேண்டிய சில ஆசனங்கள் வேறு கட்சிகளுக்கு கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் எதிர்பார்க்கப்பட்ட மாதிரியான தேர்தல் முடிவுகளே கிடைத்துள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி) 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனங்தையும் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டுள்ளன.
கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டமை அந்தக் கட்சிக்கு ஆசனமொன்றைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அத்துடன், அந்தக் கட்சிக்கு குறிப்பிட்டளவில் வாக்குகள் பிரிந்ததினால் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்க வேண்டிய மேலதிக ஆசனமொன்று இல்லாமல் போயுள்ளது.
வன்னி மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன. கடந்த முறை 5 ஆசனங்களைப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை 2 ஆசனங்களை இழந்துள்ளது. இதற்கு வன்னி மக்கள் தேர்தலில் குறிப்பிட்டளவு வாக்களிக்காமை விட்டமை காரணம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தல ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன. கடந்த முறை 4 உறுப்பினர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை ஒரு ஆசனம் குறைவாகப் பெற்றுள்ளது.
இதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சில தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டமையும், 16000 வாக்குகள் அளவில் தனித்து போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்றமையையும் குறிப்பிட்டு சொல்ல முடியும். ஆனாலும், மட்டக்களப்பு மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தமையால் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 3 ஆசனங்களை எந்தவித இடர்பாடுகளும் இன்றி பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோகும் நிலையை எதிர்நோக்கியிருந்த திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தல ஒவ்வொரு ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுள்ளது. இது, பாரிய வெற்றியாக கொள்ளப்பட வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் அச்சுறுத்தல்களைத் தாண்டி ஒரு உறுப்பினரை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுள்ளது.
அத்துடன், 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 2 ஆசனங்களை திருகோணமலை மாவட்டத்தில் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி பலத்த போராட்டங்களுக்கு பின்னர் இம்முறை ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் எதிர்காலத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது பெரிய போராட்டமே.
வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த தெரிவாக விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் 22 உறுப்பினர்களைப் பெற்று 2004ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, இம்முறை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது. 13 ஆசனங்களை நேரடி தேர்தல் மூலமும், ஒரு ஆசனத்தை தேசியப் பட்டியல் மூலமும் பெற்றுள்ள (பெறுவுள்ள) இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்காலத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டும்.
வடக்கு- கிழக்கில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து குறிப்பிட்ட செய்தியை தென்னிலங்கைச் சமூகத்துக்கு சொல்லியுள்ள தருணத்தில், தென்னிலங்கை சிங்களப் பெரும்பான்மை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பெருவெற்றி பெறவைத்து வேறு ஒரு செய்தியைச் சொல்லியுள்ளனர். இந்த இரு வெற்றிச் செய்திகளும் இலங்கையின் எதிர்கால இன நல்லிணக்கத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும் என்று நம்பலாம்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை எதிர்பார்க்காத அளவுக்கு தென்னிலங்கை மக்கள் வெற்றிபெற வைத்துள்ளனர். இறுதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு குறைந்தது 144 ஆசனங்களைப் பெறும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெறுவதற்கு 6 ஆசனங்களையே மேலதிகமாக வெறவேண்டிய ஏற்படலாம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிலைநாட்டினால், அரசியல் திருத்தம் விரைவில் சாத்தியமாகலாம். இந்த அரசியல் சீர்திருத்தம் சிறுபான்மைச் சமூகத்துக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பாதகங்களையும் வழங்கும். குறிப்பாக தேர்தல் முறைமை மாற்றப்படும் போது, வடக்கு- கிழக்குக்கு வெளியேயுள்ள சிறுபான்மையினரின் வாக்குகள் பலமற்றுப் போகும் சூழ்நிலை உண்டு.
பாரம்பரியமும், வரலாறும் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை தென்னிலங்கை மக்கள் புறக்கணித்துள்ளமையும், சிங்கள தேசியவாதத்தை அதிகளவில் பேசிய (பேசும்) மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி) மக்கள் மறந்து விட்டமையையும் இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி சிறுபான்மை சமூகங்கள் செறிந்து வாழும் இடங்களிலேயே சொல்லிச் கொள்ளுமளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜே.வி.பி.யின் அரசியல் எதிர்காலம் ஜெனரல் சரத் சந்திரலால் பொன்சேகா மற்றும் இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் தலைவர் அர்ஜூண ரணதுங்க உள்ளிட்டவர்களிடம் தங்கி நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தென்னிலங்கையில் 1990களின் பின்னர் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக வளர்ந்து வந்த ஜே.வி.பி.யை இந்தத் தேர்தலில் மக்கள் புறக்கணித்துள்ளனர்.
வெற்றி பெற்ற மனநிலையில் இருக்கிற தென்னிலங்கைக்கு, வடக்கு- கிழக்கு மக்கள் சில தோல்விகளின் வடுக்களை தாங்கி நின்றாலும் குறிப்பிடத்தக்களவில் ஒன்றிணைந்து செய்தியொன்றை சொல்லியுள்ளனர். அதுதான், தனிநாடு என்ற கோரிக்கையை மறந்து விட்டு வந்துள்ள தங்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கத்தினையாவது அரசு தரவேண்டும் என்று. இந்த செய்திக்கு தென்னிலங்கைச் சமூகம் செவி சாய்க்க வேண்டும்.
இல்லாவிட்டால், இலங்கையில் இன நல்லிணக்கம் எதிர்காலத்திலும் சாத்தியப்படாது. சிங்களவர்களை- தமிழர்களும், தமிழர்களைச்- சிங்களவர்களும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கும் நிலை தொடரும். இது, மோதல்களினால் சிதைந்துபோயுள்ள இலங்கைக்கு எந்தக்காலத்திலும் பயன் தராது. ஜனநாயகத்தின் செய்திகளுக்கு செவி சாய்ப்பதே அதிகாரத்திலுள்ளவர்களின் கடமை. பொறுத்திருந்து பார்க்கலாம். கடமை நிறைவேறுகிறதா என்று?!.
பாராளுமன்றத் தேர்தல் 2010: மஹிந்தவின் மூன்றில் இரண்டு கனவு கலைகிறது?!
Posted On Tuesday, April 6, 2010 at at 11:14 AM by மருதமூரான்.இலங்கையின் தேர்தல்கள் சில, முடிவுகளை ஏற்கனவே கோடிட்டு காட்டிவிடுகின்றன. அவ்வாறனதொரு தேர்தலே எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. இலங்கையின் பாராளுமன்றத்துக்கு நேரடி தேர்தல் மூலம் 196 உறுப்பினர்களும், தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் வீகிதாசாரத்தின் அடிப்படையில் 29 உறுப்பினர்களும் (தேசியப் பட்டியல்) தேர்வாகவுள்ளனர். மொத்தமாக 225 உறுப்பினர்களை இலங்கைப் பாராளுமன்றம் கொண்டிருக்கிறது.
இலங்கையிலிருக்கின்ற மக்களில் பெரும்பான்மையானோர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்கிற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்போகிறார்கள். அதுபோல, ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கிற ஐக்கிய தேசிய முன்னணி பிரதான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் செயற்படப்போகிறது. அதுபோல, இலங்கைத் தமிழரசுக் கட்சியும் குறிப்பிட்டளவு ஆசனங்களைப் பெற்று எதிர்த்தரப்பில் அமரப்போகிறது. இது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இரா.சம்பந்தனுக்கும் கூட தெரிந்த உண்மையே.
ஆனால், இந்தப் பாராளுமன்றத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படியாவது பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், அதனை எப்பிடியாவது தடுத்து நிறுத்தி விடவேண்டும் என்பதில் ஐக்கிய தேசிய முன்னணியியும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றன. இந்த தேர்தலில் மேற்குறிப்பிட்ட விடயமே ஆதிக்கம் செலுத்துகிறது. மாறாக ஆட்சியை யார் பிடிப்பது என்பதல்ல.
இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இந்த தேர்தலே விகிதாசார முறையில் உறுப்பினர்கள் தேர்வாகும் இறுதித் தேர்தல் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெறுவதை அனுமதிக்க மாட்டோம் என்று ஐக்கிய தேசிய முன்னணியும் மக்களிடம் தெரிவித்து வருகின்றன. இதிலிருந்து இந்தத் தேர்தலில் தங்களினால், ஆட்சியமைக்க முடியாது என்பதை ஐக்கிய தேசிய முன்னணி உணர்ந்து கொண்டுள்ளதை புரிந்து கொள்ள முடியும்.
எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று அரசியலமைப்பு சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து விடவேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் விமல் வீரவங்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன செயற்படுகின்றன.
225 பேர் அங்கம் வகிக்கிற இலங்கைப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவேண்டுமானால் 150 உறுப்பினர்களை ஆளும் கட்சி பெறவேண்டும். இது, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியமற்றது. மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்று சிங்கள பெரும்பான்மையின மக்கள் கருதினாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுமளவுக்கு வாக்குகளை வழங்கமாட்டார்கள்.
சுமார் 14 மில்லியன் (ஒரு கோடியே 40 இலட்சம்) மக்கள் வாக்களிக்கப் போகும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 120 இலிருந்து 127 ஆசனங்களையே பெறும் என்று கருதுகிறேன். ஆகவே, அறிதிப்பொரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பதில் சிக்கல்கள் இல்லை. ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெறுவதற்கு குறைந்தது 23 உறுப்பினர்கள் மேலதிகமாகத் தேவைப்படுவார்கள்.
ஐக்கிய தேசிய முன்னணியால் இம்முறை 68 இலிருந்து 75க்குள்ளேயே உறுப்பினர்களைப் பெறமுடியும். அதுபோல, இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) கூடியது 13 ஆசனங்களையும், ஐனநாயக தேசியக் கூட்டமைப்பினால் (சரத் பென்சேகா- ஜே.வி.பி கூட்டணி) கூடியது 12 ஆசனங்களையும் பெறக்கூடிய சூழ்நிலையே இந்தத் தேர்தலில் உள்ளது. இந்தத் தேர்தலில் அதிகம் தோற்றுப்போன கட்சியாக ஜே.வி.பி கருதப்படும் வாய்ப்புக்கள் அதிகம். அதுபோல, போதிய திட்டமிடல்கள் இன்றி அரசியலில் களம்புகுந்து அவஸ்தைப்பட்டவராக சரத் பொன்சேகா கருதப்படுவார்.
ஆக, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டுமானால், ஐக்கிய தேசிய முன்னணியில் (ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி கூட்டணி) அங்கம் வகிக்கிற உறுப்பினர்களுக்கு வலைவீசவேண்டிய சூழ்நிலையே மஹிந்தவுக்கு ஏற்படும். அதுபோல, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை கவருவதற்கும் பாரிய பிரயத்தனங்களை மஹிந்த மேற்கொள்ள வேண்டி ஏற்படலாம்.
குருணாகல், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, ஆனுராதபுரம், அம்பாந்தோட்டை, காலி உள்ளிட்ட தேர்தல் மாவட்டங்களில் குறிப்பிட்டளவு உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெறும் வாய்ப்புக்கள் உண்டு. இதனடிப்படையில் 100இலிருந்து 110 உறுப்பினர்களை நேரடியாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும், 15 தேசியப் பட்டியல் உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு உண்டு.
கொழுப்பு, கம்பஹா, அம்பாறை, நுவரெலியா, கண்டி தேர்தல் மாவட்டங்களில் ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு உண்டு. இதனடிப்படையில் நேரடியாக 60இலிருந்து 65 உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் அதேவேளை, சுமார் 10 தேசியப் பட்டியல் உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஐக்கிய தேசிய முண்ணனி;க்கு உண்டு.
யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு உள்ளிட்ட தேர்தல் மாவட்டங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்) ஆதிக்கமே அதிகம் காணப்படுகிறது. இதனால், நேரடியாக 11 அல்லது 12 உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அத்துடன் ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினரைப் பெற்றுக்கொள்ளுமளவுக்கு வாக்குகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக்கொள்ளும்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சரத் பொன்சேகா மற்றும் ஜே.வி.பி. தலைமை வகிக்கிற ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுச் செல்லுமளவுக்கு இந்தத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவது இயலாத காரியம். இந்தக் கூட்டமைப்பினால் நேரடித்தேர்தல்கள் மூலம் குறைந்தது 7 உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், 2 உறுப்பினர்களை தேசியப் பட்டியல் மூலம் பெறும் வாய்ப்புக்களும் அமையலாம்.
எதிர்வரும் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே அங்கத்துவம் வகிப்பார்கள். அது தவிரவும், தனித்து போட்டியிடும் சில சிறுகட்சிகள் ஒரு ஆசனங்களைப் பெறும் வாய்ப்பு யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியாவில் உண்டு.
இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் திருத்தப்பட்டால் சிறுபான்மைச் சமூகம் பல இழப்புக்களைச் சந்திக்க நேரிடலாம். அதுவும், வடக்கு- கிழக்குக்கு வெளியே வசிக்கிற தமிழ், முஸ்லிம் மக்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும் சூழ்நிலைகள் உண்டு. அத்துடன், சிறுபான்மையினரின் எதிர்கால அரசியல் நலன்களும் பாதிக்கப்படும்.
ஜனநாயக நாட்டில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமே தவிர ஒரே குழுமத்திடம் சேருவது நலன்களைத் தராது. மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதிலிருந்து தற்போதைய அரசியல் சூழலில் தவறுவதே சிறுபான்மையினரின் எதிர்கால நலன்களுக்கு நல்லது. பொறுத்திருந்து பார்க்கலாம் மஹிந்தவின் கனவு நிலைக்கிறதா என்று?!.
மணிரத்தினத்தின் காதலுக்கு பின் கௌதம் மேனனின் ‘ஜெசி’.
Posted On Thursday, April 1, 2010 at at 8:18 PM by மருதமூரான்.ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் இருக்கிற ஈர்ப்புக்கும், தேவைக்கும் ‘காதல்’ என்று அழகாக வர்ணம் பூசி பயணிக்கிறது இந்த உலகு. பலர் புனிதமாகவும், சிலர் வெறுப்பாகவும் சித்தரிக்கிற ‘காதல்’ தொடர்பில் என்னுடைய நிலைப்பாடு இதுதான். என்ன இவன் ‘மணிரத்தினத்தின் காதலுக்கு பின் கௌதம் மேனனின் ‘ஜெசி” என்ற தலைப்பிட்டுவிட்டு ஏதோவெல்லாம் பிதற்றுகிறேன் என்று எண்ணுவது புரிகிறது. இதோ, விடயத்துக்குள் வந்துவிடுகிறேன்.
சில பெண்களைப் பார்த்ததும் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதாக (தமிழ்ச் சினிமாவின் தாக்கம் தான் இந்த வார்த்தைப் பிரயோகமும்) உணர்ந்திருக்கிறேன். நீங்களும் உணர்திருப்பீர்கள். உலகத்திலுள்ள 99 வீதமான ஆண்கள் இதற்கு உட்பட்டிருப்பார்கள். அவ்வாறு இல்லையென்றால், தயங்காமல் வைத்தியரை நாடவும். பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் பட்டாம்பூச்சி எனக்குள்ளும் அவ்வப்போது பறந்திருக்கிறது. இப்போதும் பறக்கிறது சில வரைமுறைகளுடன். இனம்புரியாத மகிழ்வை அந்த தருணங்கள் தந்திருக்கின்றன.
அவ்வாறான மகிழ்வை, மணிரத்தினம் படங்களில் வருகின்ற காதல் காட்சிகள் தந்திருக்கின்றன. இப்போது கௌதம் வாசுதேவ் மேனனின் படங்களில் வருகின்ற காதல் காட்சிகளும் தருகின்றன. காதல் என்ற உணர்ச்சியை சினிமா இரசிகனின் மனதுக்குள் அவ்வளவு அழகாக தங்கிவிடச் செய்கின்ற வித்தையை மணிரத்தினமும், கௌதம் மேனனும் பெற்றிருக்கிறார்கள் என்பது என்னுடைய வாதம்.
மணிரத்தினத்தின் படங்கள் மீதான ஈடுபாடு அல்லது ஆர்வம் ‘பம்பாய்’ படம் தொலைக்காட்சியொன்றில் பார்த்த காலத்திலிருந்து தொற்றிக்கொண்டது. குஜராத் மதக்கலவரங்களின் கோரத்தை அல்லது பாதிப்பை பம்பாய் படத்தில் மணிரத்தினம் கையாண்டிருந்தாலும் என்னை அதிகம் பாதித்தது அர்விந்த்சாமிக்கும், மனி~h கொய்ரலாவுக்குமிடையிலான காதல் காட்சிகளே. இவ்வாறான பாதிப்பை பலரும் உணர்திருப்பீர்கள்.
‘மௌன ராகம்’ கார்த்திக்- ரேவதி, ‘நாயகன்’ கமல்- சரண்யா, ‘தளபதி’ ரஜினி- சோபனா, ‘ரோஜா’ அர்விந்த்சாமி- மதுபாலா, ‘பம்பாய்’ அர்விந்த்சாமி- மனி~h கொய்ராலா, ‘உயிரே’ ~hருக்கான்- மனி~h கொய்ராலா மற்றும் ‘அலைபாயுதே’ மாதவன்- ~hலினி என்று மணிரத்தினத்தின் படங்களின் மீதான காதல் காட்சிகளை நான் அதிகம் இரசிக்கிறேன்.
அதுவும், பம்பாய் படத்தில் ஆரம்ப காதல் காட்சிகளை டி.வி.டி தேயும் அளவுக்கு பார்த்திருக்கிறேன். ஏனோ அந்தக் காட்சிகள் மீதான என்னுடைய இரசிப்புத்தன்மை குறையவேயில்லை. மணிரத்தினத்தின் அனேக படங்களில் பிரதான கதைக்களம் வேறானதாக இருக்கின்றபோதிலும், காதல் காட்சிகள் அவ்வளவு அழகுணர்ச்சி பொருந்தியதாக இருக்கின்றன.
கிட்டத்தட்ட மணிரத்தினத்தின் படங்களில் வருகின்ற காதல் காட்சிகள் தருகின்ற மகிழ்வை கௌதம் மேனனின் படங்களின் காதல் காட்சிகளும் தருகின்றன. கௌதம் மேனனின் படங்களை நான் காதல் காட்சிகளுக்காகவே பார்க்க ஆர்வம் காட்டுவதுண்டு. ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ படங்களில் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அதீத வன்முறைக் காட்சிகள் வந்து போகும்.
ஆனால், அந்தப் படங்களில் வருகின்ற காதல் காட்சிகள் அவ்வளவு அழகானதாய் இருக்கும். வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்- கமலினி முஹர்ஜி சந்திக்கின்ற தருணத்திலேயே கமல் காதலைச் சொல்லுவார். அந்தக் காட்சியில் போலியான பாவங்கள் இன்றி அவ்வளவு இயல்பாகவும் இரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். அதுபோலவே, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவுக்கும் சிம்ரனுக்கும் இடையிலான காதல் காட்சிகளும்.
‘மின்னலே’ மாதவன்- ரிமா, ‘காக்க காக்க’ சூர்யா- ஜோதிகா, ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா- சமீரா தற்போது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்பு- திரி~h என்று குறித்த படங்களில் வருகின்ற காதல் காட்சிகள் மனதுக்குள் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கின்றன. வசனங்களில் அதிக ஆங்கில வாடை அடித்தாலும் எங்களில் வாழ்வியலை விட்டு கொஞ்சம் விலகியிருந்தாலும் எம்மை காதல் காட்சிகளில் ஒன்றிக்க வைப்பதில் கௌதம் மேனனும் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு சாட்சி அவரின் படங்களுக்காக இளைஞர்- இளைஞிகளின் கூட்டமே.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தினை அண்மையில் கொழும்பிலுள்ள திரையரங்கொண்றில் நெருங்கிய நண்பனுடன் சென்று பார்த்தேன். வழக்கமாக தன்னுடைய படங்களில் விரல்களை ஆட்டி எரிச்சலூட்டும் சிம்புவை படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எனக்கு பிடித்து விட்டது. நண்பன் சொன்னான், “இவன் (சிம்பு) மச்சான் இவ்வளவு காலமும் வித்தைதான் காட்டினவன். இப்பதான் இவனுக்கு நடிக்க வருமென்டு தெரியுது” என்றான். அந்தக் கருத்துடன் நானும் உடன்பட்டுத்தான் போனேன்.
படம் முழுவதிலும் சிம்பு என்ற நடிகரைத் தேட வேண்டியிருந்தது. ‘கார்த்திக்’ என்ற பாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக பொருந்திப்போயிருந்தார் நடிகர் சிம்பு. அதுபோலவே திரி~hவும் அளவுக்கு மிறிய அலட்டல்கள் இல்லாமல் ‘ஜெசி’ என்ற பாத்திரத்தில் பக்கத்து வீட்டுப்பெண் (பக்கத்து வீட்டுப் பெண் கனடாவுக்;கு போய் பல மாதம்) போல இயல்பாக இருந்தார்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இடைவேளைக்கு பின்னராக காட்சிகள் திரும்பத்திருப்ப வருவது அலுப்பூட்டத்தான் செய்கின்றன. அதனையும் கௌதம் மேனன் சரியாக கையாண்டிருந்தால், தமிழ்ச் சினிமாவில் வந்த நல்ல இரசிக்கக்கூடிய காதல் படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயாவும் முன்னணியில் இருந்திருக்கும்.
விண்ணைத்தாண்டி வருவாயா பார்த்து விட்டு வெள்ளவத்தையிலுள்ள சாப்பாட்டுக்கடையை நோக்கி இருவரும் நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது நண்பன் சொன்னன், “மச்சான் கௌதம் நல்ல அனுபவிச்சு படம் எடுக்கிறான். அதுமட்டுவில்ல, அமெரிக்காவை உயர்ச்சியின் குறியீடாக கௌதம் ந்pனைக்கிறான்” என்று. உண்மைதான் கௌதமின் படங்களில் நாயகர்கள் தெரிவதில்லை. மாறாக காதல் காட்சிகளில் கௌதமே தெரிகிறார்.
அதுபோல, கௌதம் வாசுதேவ் மேனனுக்கு அமெரிக்கா குறித்த பிரமிப்பு தொடர்ந்தும் இருக்கின்றது என்பதை வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அமெரிக்காவை உயர்ச்சியின் குறியிடாகவோ, அந்தஸ்தின் உயர்வாகவே அவர் கருதுவதாக படுகிறது.
சிலர் கருதலாம், கௌதம் மேனனின் படங்களில் வருகின்ற காதல் காட்சிகளை விட அருமையான காதல் காட்சிகள் பல படங்களில் வருகின்றது என்று. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், காதலை அவ்வளவு அழகாக, ஒளிப்பதிவின் தரத்துடன் அண்மைக்காலத்தில் தொடர்ந்தும் தருவது கௌதம் வாசுதேவ் மேனன் என்பது என்னுடைய கருத்து.
நானும் காதலித்திருக்கலாம் என்று உணர்த்திய தருணங்களை மணிரத்தினம் மற்றும் கௌதம் மேனனின் படங்களில் வருகின்ற காதல் காட்சிகள் தந்திருக்கின்றன. இது யாருக்கும் சொல்லாத உண்மை. இதோ, மணிரத்தினத்தின் இராவணனுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். விக்ரம்- ஐஸ்வர்யாவுக்கிடையிலான காதல் காட்சிகளை இரசிப்பதற்காக!. மீண்டும் சந்திக்கலாம் உறவுகளே வேறு ஒரு பதிவினூடு.....!







