பாராளுமன்றத் தேர்தல் 2010: திருகோணமலையில் சிறுபான்மையினரின் எதிர்காலம்?!.


வரலாற்றை தாண்டிச் செல்லும் இராவணன் காலத்து இலங்கையின் தலைநகரம். இலங்கையின் (பௌத்த) வரலாற்றை சொல்லும் மகா வம்வம், தீப வம்சங்களின் தோற்றத்துக்கு முன்னைய புனிதப் பிரதேசம். தெற்காசியாவின் எழில்மிகு இயற்கைத் துறைமுகம் கொண்ட நகரம். வடக்கு- கிழக்கின் தலைநகரமாக 1980களின் பின்னர் சித்தரிக்கப்பட்ட பிரதேசம். இவ்வாறு தன்னகத்தே அழிக்கவும், மறுக்கவும் முடியாத பெருமைகளைக் கொண்டிருக்கிறது திருகோணமலை மாவட்டம்.

இவ்வாறு பெருமைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிற திருகோணமலை, பல சோகங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 1950களின் பின்னர் திட்டமிட்ட பெரும்பான்மை சமூகத்தின் வலிந்த குடியேற்றத்திற்கு உள்ளானமை. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஆளும் பெரும்பான்மை சமூகத்தினரால் பறித்தெடுக்கப்பட்டமை. அது, தற்போதும் தொடர்கின்றமை. எதிர்காலத்திலும் தொடரப்போகின்றமை. கந்தளாயும், கந்தளாய் குளமும் பறிபோய்க்கொண்டிருக்கிறமை. சேருவில தோற்றம் பெற்றுவிட்டமை. இவ்வாறு ஆயிரம் ஆயிரம் சோகங்களை திருகோணமலை தன்னகத்தே தாங்கியிருக்கிறது.

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்கும் மையத்தில் இருக்கின்ற காரணத்தினாலும், இயற்கைத் துறைமுகத்தின் பயன்பாட்டை பற்றிக்கொள்ளும் பொருட்டுமே இந்த சோகங்களை ஆட்சியாளர்கள் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை திருகோணமலை மாவட்டம் எவ்வாறு எதிர்கொள்கிறது மற்றும் கட்சிகளினதும், மக்களினதும் நிலைப்பாடு குறித்தும் இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் தொகை குறைந்த சிறிய மாவட்டம் திருகோணமலை. 2007ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 3 இலட்சம்மு 34 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் சுமார் 46 வீதமானவர்கள் முஸ்லிம்கள் (இஸ்லாமியத் தமிழர்), 28 வீதமானவர்கள் தமிழர்கள், 25 வீதமானவர்கள் சிங்களவர்கள். திருகோணமலை, மூதூர் மற்றும் சேருவில தொகுதிகளை உள்ளடக்கிய திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிறார்கள்.

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 24 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அதில், ஒரு இலட்சத்து 92 ஆயிரம் பேர் வாக்களித்தனர். அளிக்கப்பட்ட வாக்குகளில் 69 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) 2 உறுப்பினர்களையும், 65 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு உறுப்பினரையும், 31 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஒரு உறுப்பினரையும் பெற்றனர்.

குறித்த தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு வழங்கியிருந்தனர். தமிழ் மக்கள் அதிகளவு வாக்களித்த தேர்தல்களில் ஒன்றாக இது பதிவானது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 22 உறுப்பினர்கள் அங்கம் வகித்த கடந்த பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்திலிருந்தே தேர்வானார்.

திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் களம் இம்முறை பலத்த போட்டி நிறைந்ததாகவே இருக்கின்றது. சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் பிரிந்து செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதனால். பெரும்பான்மை சமூகத்தின் வேட்பாளர்கள் ஆதிக்கம் பெறும் சாத்தியம் கூடியுள்ளது. இந்த இழுபறிகள் தொடருமானால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஒவ்வொரு பெரும்பான்மை சமூகத்தினர் தேர்வாகும் வாய்ப்புக்களும் உள்ளது.

திருகோணமலையிலிருந்து இம்முறை இரா.சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி தலைமை வகிக்கும்) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன ஒவ்வொரு ஆசனத்தைப் பகிர்ந்து கொள்ளும். எஞ்சியுள்ள ஒரு ஆசனத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இடையில் போட்டி நிலவுகிறது. இதில், ஐக்கிய தேசிய முன்னணிக்கே வாய்ப்புக்கள் அதிகம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் சுமார் 69 ஆயிரம் வாக்குகளைப் பெற்று 2 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, இம்முறை சுமார் 40 ஆயிரம் வாக்குகளையே பெறும் வாய்ப்புக்கள் உண்டு. இதனால், அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனமே கிடைக்கும். திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழ்ப் பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும் நிலைமைக்கு இதனை ஒரு ஆரம்பமாகவும் கருத வேண்டியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான) குறிப்பிட்டளவு வாக்குகளைப் பெறும் சாத்தியம் உண்டு. ஆனால், ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குரிய சுமார் 35 வாக்குகளைப் பெறுவதென்பது அந்தக் கட்சிக்கு தற்போதைய அரசியல் நிலைமையில் சாத்தியமில்லாத ஒன்றே.

அது, தவிரவும் தமிழ் மக்களின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை வகிக்கிற அகில இலங்கைக் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பல சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. இவர்களுக்கு, குறிப்பிட்டளவு வாக்குகளைப் பிரிக்கிற பலமே இருக்கின்றது. ஆனால், இவர்களினால் பாராளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்குரிய சாத்தியங்கள் இல்லை.

திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மையினர் அதிகமாகவுள்ள சேருவில தேர்தல் தொகுதியிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பலத்துடன் இருக்கின்றது. இதனால், அமைச்சர் சுசிந்த புஞ்சிநிலமே இம்முறையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலையிலிருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாவார் என்று கருதலாம். அதுவே, சாத்தியமும் கூட.

ஐக்கிய தேசிய முன்னணியே இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெறும் சாத்தியம் உண்டு. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மூதூர் தொகுதியில் அதிக வாக்குகள் விழும். அது தவிரவும், திருகோணமலை தேர்தல் தொகுதியிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு குறிப்பிட்டளவு வாக்குகள் விழும் வாய்ப்புக்கள் உண்டு. அதனால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் உறுப்பினர் ஒருவர் திருகோணமலையில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாவார்.

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில உள்ளிட்ட பெரும்பான்மையினர் வசிக்கின்ற பகுதிகளின் அபிவிருத்தி மோதல் காலங்களிலும் தொடர்ந்த வண்ணமே இருந்தன. ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் அதிகமாக வாழும் திருகோணமலை மற்றும் மூதூர் பகுதிகளில் அபிவிருத்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. பெயருக்காக சில திட்டங்கள் அண்மைக்காலத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால், திருகோணமலை என்கிற எம்முடைய தாயக நிலமும், இயற்கைத் துறைமுகமும் அயல்நாடுகளுக்கு கூறு போட்டு விற்கப்படுகின்றன. இது எதிர்காலத்திலும் திட்டமிட்டு விற்கப்படும். அப்போதும், எம்முடைய தலைவர்கள் வாய் மூடி மௌனிகளாவார்கள். இலக்கற்ற நம்பிக்கை என்றாலும் நாங்கள் எங்களின் (சிறுபான்மைத்) தலைவர்களிடம் எங்களின் தாயக பகுதிகள் பறிபோவதை தடுக்கும் படி வேண்டுவதைத் தவிர வேறு என்னத்தை கேட்டுவிட முடியும்!.

பாராளுமன்றத் தேர்தல் 2010: சிதறடிக்கப்படும் மட்டக்களப்பு வாக்குகள்.


பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன. எதிரணி வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் தாக்கப்படுவது மட்டுமல்லாமல் தம் கட்சிக்குள்ளேயே விருப்பு வாக்குகளுக்காக அடித்துக்கொள்ளும் சம்பவங்கள் பரவலாக இடம்பெறுகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள மாவட்டங்களாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை (திகாமடுல்ல) ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்ல முடியும். இதில், மட்டக்களப்பு அதிகளவு தமிழர்களையும், அம்பாறை அதிகளவு முஸ்லிம்களையும் (இஸ்லாமிய தமிழர்கள்) கொண்ட மாவட்டங்கள். இந்த நிலையில், இந்த கட்டுரை மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து ஆராய விளைகிறது.

வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்களில் அதிகளவு வளப்பரம்பல்களை தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டம் மட்டக்களப்பு. நெற்செய்கை, மீன்பிடி, மாடு வளர்ப்பு, சிறு தோட்டங்கள், சிறுகைத்தொழில் மற்றும் மரமுந்திரிகைச் செய்கை உள்ளிட்ட தொழில் முயற்சிகள் மட்டக்களப்பு மக்களின் பிரதான வாழ்வதாரங்கள்.

சுமார் 4 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சுமார் 3 இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டமே, வடக்கு- கிழக்கில் அதிகளவு வாக்குப்பதிவை மேற்கொள்கின்ற இரண்டாவது தேர்தல் மாவட்டமாகும்.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 66.7 வீதமாக வாக்குகளை இலங்கை தமிழரசுக் கட்சியும், 17 வீதமான வாக்குகளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், 11 வீதமான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பெற்றன. இதனடிப்படையில், இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) 4 உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஒரு உறுப்பினரும் தேர்வாகினர்.

மட்டக்களப்பு தேர்தல் களத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (கருணா அம்மான் என்கிற விநாயமூர்த்தி முரளிதரன் உப தலைவராக பதவி வகிக்கிற சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமை வகிக்கிறது), ஐக்கிய தேசிய முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை வகிக்கிற), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான) ஆகிய கட்சிகளே பிரதான போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள்.

இது தவிரவும், தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் சிலவும், ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி (சுயேட்சை குழு 16) உள்ளிட்ட 29 சுயேட்சைக்குழுக்களும் தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றன. அதிக சுயேட்சைக்குழுக்கள் களத்தில் இருக்கின்ற மாவட்டங்களில் இரண்டாமிடம் மட்டக்களப்பிற்கே. முதலிடத்தில் அம்பாறை. இந்த சுயேட்சைக்குழுக்களில் இரண்டு, மூன்று குழுக்களைத் தவிர மற்றைய அனைத்தும் ஆளும், எதிர்க் கட்சிகளின் பினாமிகளாக வாக்குகளைப் பிரிப்பதற்காக களத்தில் இறக்கப்பட்டவை.

மட்டக்களப்பிலுள்ள தேர்தல் கள நிலவரங்களைப் பார்க்கும் போது இந்த முறை இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து ஒரு உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து ஒரு உறுப்பினரும் தேர்வாவார்கள் என்று தெரிகிறது. எஞ்சியுள்ள ஒரு உறுப்பினர் வெற்றிடத்துக்கு இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு இடையில் பலத்த போட்டி நிலவும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை இம்முறை பெறுவது இயலாத காரியம். அவர்களினால் இம்முறை அதிக பட்சமாக ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளையே பெற முடியும். ஆகவே, கடந்த முறை பெற்ற 4 உறுப்பினர்களிலிருந்து குறைந்தது ஒரு உறுப்பினர் இழப்பு கட்டாயம் நிகழும். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்போகும் வாக்குகள் மாற்று தெரிவற்றதனாலேயே விழவிருக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை, அமைச்சர் அமீர் அலி, முன்னாள் பிரதி அமைச்சர்கள் கணேசமூர்த்தி, ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கேஸ்வரி, மௌலானா உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் அதிக வாக்குகளை அமீர் அலியே பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் விநாயமூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகாரமிக்கவராக இருக்கின்ற போதிலும் அவரினால், அவர் சார்பு உறுப்பினர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. இதற்கு பிள்ளையான் தலைமை வகிக்கிற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் பிரசாங்களும் காரணமாக இருக்கும்.

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து, முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம் அதிகமுள்ளது. ஆனாலும், இதிலும் சறுக்கல்கள் அல்லது வேறு நபர் சாத்தியங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

எஞ்சியுள்ள ஒரு ஆசனத்துக்கான போட்டியில் இலங்கை தமிழரசுக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கிடையிலேயே அதிக போட்டி காணப்படுகிறது. ஏனெனில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தெரிவில் மட்டக்களப்பு கிறிஸ்தவ தமிழ் மக்கள் அதிர்ப்தி அடைந்துள்ளனர். அதனால், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு விழவேண்டிய குறிப்பிடத்தக்களவு வாக்குக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் ஜனநாயக கட்சி (சுயேட்சைக்குழு 16) விழும் என்று நம்பலம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஐக்கிய மக்கள் ஜனநாயக கட்சி (சுயேட்சைக்குழு 16) ஆகியவற்றுக்கு உறுப்பினர் ஒருவரை இந்த பாராளுமன்ற தேர்தலில் பெறமுடியாமல் போனாலும் குறிப்பிட்டளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம். அதற்கான சாத்தியங்களை மட்டக்களப்பு நகரம் மற்றும் பின்தங்கிய கிராமப் பகுதிகளில் காண முடிகிறது.

அதிக வன்முறைகளின் வடுக்களை தன்னகத்தே கொண்டிருக்கிற மட்டக்களப்பு மாவட்டமே வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அதிகம் பின்தங்கிய மாவட்டம் என்று கூற முடியும். கல்வி, அப்படை வசதிகள், தொழில் வாய்ப்புக்கள் என்பவற்றில் அதிக சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள மட்டக்களப்பு, வன்முறைகளில் தங்களது கணவர்களைப் பறிகொடுத்த மனைவிமார் அதிகமுள்ள மாவட்டமாக முன்னாலுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து எதிர்வரும் பாராளுமன்றத்துக்கு தேர்வாகும் உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைக் குறைகள் குறித்து சிந்தித்து தங்களது செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதுவும், கல்வி முன்னேற்றத்தை அதிக சிரத்தையுடன் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான சமூதாயம் சாத்தியப்படும்!.

பாராளுமன்ற தேர்தல் 2010: சூடுபிடித்துள்ள யாழ் தேர்தல் களமும், சில யோசனைகளும்.


இலங்கையில் சிறுபான்மையினர் அதிகம் வாழுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து அதிக உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்ற மாவட்டம் யாழ்ப்பாணம். கிளிநொச்சி தொகுதி உள்ளிட்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலிருந்து ஒன்பது உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகிறார்கள். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் உள்ளிட்ட பல தமிழ்-முஸ்லிம் தலைவர்களை யாழ்ப்பாணம் வழங்கியிருக்கிறது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபத் தலைவர் மறைந்த அஷ்ரப் தவிர 1990களுக்கு பின்னர் வடக்கு, கிழக்கிலிருந்து தூரநோக்குள்ள அரசியல் தலைவர்கள் யாரும் உருவாகவில்லை என்பது என்னுடைய கருத்து. அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து அதற்கான அறிகுறிகள் எதுவும் எழவேயில்லை. இன்னும் அந்த அரசியல் தலைமைத்துவத்திற்கான வெற்றிடம் தொடர்கிறது.

இந்த நிலையில், இலங்கையின் புதிய பாராளுமன்றத்தை தேர்வு செய்யும் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. மக்கள் பட்டினியால் வாடினாலும், மாணவர்கள் தங்களுடைய கல்வி முயற்சிகளை சரியாக தொடர முடியாத நிலை நீடித்தாலும், தாய்மார் பிள்ளைகளை வளர்க்க முடியாமல் ஆறுகளில் வீசினாலும் தேர்தல் களம் என்னவோ சூடுபிடித்துத்தான் இருக்கிறது. அதுவும், யாழ்ப்பாணத்தில் ஒருவரையொருவர் பின்னுக்குத் தள்ளி தேர்தலில் வெற்றிபெற காய்நகர்தல்களை மேற்கொள்ளுகின்றனர். இந்த நிலையில் யாழ் தேர்தல் கள நிலைகள் தொடர்பாக இந்த கட்டுரை ஆராய்கிறது.

வடக்கு-கிழக்கில் புதிதாக சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் வரை பாராளுமன்றத்துக்கான பிரதிநிதித்துவம் (பல்கலைக்கழகங்களுக்காக மாணவர் சேர்க்கை அளவுக்கும் அது பொருந்தும்) யாழ்ப்பாணத்திலிருந்து அதிகரித்தே காணப்படும். யாழ்ப்பாணத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இறுதியாக சனத்தொகை கணக்கெடுக்கப்பட்ட போது 13 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள் என்ற முடிவு கிடைத்தது. அந்த ரீதியிலேயே 9 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிறார்கள்.

விகிதாசார பிரிதிநிதித்துவத்திலுள்ள நன்மைகளை தற்போது நாங்கள் ஓரளவுக்கு அனுபவிக்கிறோம் என்பதற்கான சான்று இது. இதைத்தான் முடிவுக்கு கொண்டுவர ஆளும் வர்க்கம் முயல்கிறது. அதன் முயற்சியாக இந்த வருடம் அல்லது எதிர்வரும் வருடம் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக சனத்தொகை கணக்கெடுப்பை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அப்படி நடத்தப்பட்டால் அதிகம் பாதிக்கப்படுவது யாழ் மாவட்டமே. யாழ்ப்பாணத்தில் தற்போது சுமார் 4-5 இலட்சம் (இதுகூட அதிகமாக இருக்கலாம்) மக்களே வசிக்கின்றனர்.

சரி இனி, யாழ் தேர்தல் கள நிலைமைகள். 2004இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆறு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆயினும், மூன்று இலட்சத்து ஐயாயிரம் வாக்குகளே பதிவாகியிருந்தது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றும், அவர்களின் பாராளுமன்ற பிரிதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற இலங்கை தமிழரசுக் கட்சி என்றும் கோசங்கள் முன்வைக்கப்பட்டதாலே இவ்வளவு வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது வெளிப்படை.

அதன் பலனாகவே யாழ்ப்பாணத்திலுள்ள 9 உறுப்பினர்களில் இலங்கை தமிழரசுக் கட்சி 8 உறுப்பினர்களை வெற்றி கொண்டது. மற்றைய ஒரு உறுப்பினர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து தெரிவானார். முப்பது வருட கால மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அதுவும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள தருணத்திலேயே இந்த பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலைமைகள் தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும்.

யாழ்ப்பாண தேர்தல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சிவாஜிலிங்கம்-சிறிகாந்தா முன்னிற்கின்ற தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்கிற சுயேட்சைக்குழு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன மக்களிடம் வாக்குகளை கேட்கின்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இதுதவிரவும், ஆளும்-எதிர்க் கட்சிகளின் ஆதரவு பெற்ற சுயேட்சைக் குழுக்கள் சிலவும், தனித்து இயங்குகின்ற இடதுசாரி கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

ஈழமக்கள் ஜனநாயக் கட்சி, புளோட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கிய போதிலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணத்தில் 20 வீதத்துக்கும் குறைவான ஆதரவே கிடைத்தது. ஆனால், மஹிந்தவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பென்சேகா 70 வீதத்துக்கும் அதினமான வாக்குகளைப் பெற்றார். இந்த தேர்தல் முடிவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பென்சேகாவிற்கு ஆதரவு வழங்கியது குறிப்பிட்டளவு காரணமாக இருக்கலாம். ஆனாலும், அதைத் தவிர்ந்த மக்களின் மன வெளிப்பாடே அதிகமிருந்தது.

இந்த நிலையில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) 4 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து (ஈழமக்கள் ஜனநாயக் கட்சி அடங்கிய) 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து (ஐக்கிய தேசியக் கட்சி) ஒரு உறுப்பினரும் தெரிவாவார்கள் என்று தெரிகிறது.

எஞ்சியுள்ள 2 உறுப்பினருக்கான போட்டியில் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன முன்னணியிலுள்ளன.

கடந்த முறை 8 உறுப்பினர்களைப் பெற்றிருந்த இலங்கை தமிழரசுக் கட்சி, இம்முறை 25- 30 வீதமான வாக்கு இழப்பை சந்திக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆனாலும், வேறு தெரிவு அற்ற நிலையிலேயே இவர்களுக்கான வாக்குகள் விழும் என்கிறார் யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியர் ஒருவர். அதுவே, மக்களின் மனங்களின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. எப்படியிருந்தாலும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு யாழ் மாவட்டத்திலிருந்து குறைந்தது 3 உறுப்பினர்களின் இழப்பு இருப்பது வெளிப்படை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை வகிக்கின்ற ஈழமக்கள் ஜனநாயக் கட்சிக்கு (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கூட்டு) இந்த தேர்தலில் ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி. மற்றைய ஒரு ஆசனத்தை பெற்று கொடுப்பதில் காங்கேசன்துறை, கோப்பாய் மற்றும் ஊர்காவல்துறைத் தேர்தல் தொகுதிகள் பாரிய தாக்கம் செலுத்தும் என்று நம்பலாம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அங்கஜன் இராமநானுக்கும் குறிப்பிட்டளவு வாக்குகள் விழலாம்.

ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை வகிக்கின்ற ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவாகுவார். அது, விஜயகலா மகேஸ்வரனா? தியாகராஜா துவாரகேஸ்வரனா? அல்லது வீரசேகரியின் முன்னாள் செய்தி ஆசிரியர் சிறிகஜனா? என்பதே கேள்வி. இவர்களுக்கான வாக்குகள் கரைநகர், யாழ் நகரப்பகுதி, கரவெட்டி மற்றும் பருத்தித்துறைப் பகுதிகளில் விழலாம். இந்த வாக்குகளில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் பங்கும் இருக்கிறது. அதற்கான சாத்தியக் கூறுகள் தெரிகின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் போட்டியிடும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசுக்கு 10000-15000 வாக்குகள் கிடைக்கலாம். அவ்வாறு கிடைத்தால் கட்டாயம் ஒரு உறுப்பினரைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான சாத்தியக் கூறுகள் வரமராட்சி மற்றும் தென்மராட்சி வாக்காளர்களின் கைகளிலேயே உள்ளது.

சிறிகாந்தா-சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு மற்றும் ஆனந்த சங்கரி தலைமையiலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கான வரவேற்று மக்களிடம் அதிகளவில் இருப்பதாக தெரியவில்லை. சுயேட்சையாக போட்டியிடும் குழுக்களுக்கும்-இடதுசாரிகளுக்கும் யாழ்ப்பாணத்தில் இம்முறை வாக்குகள் விழுவது மிகவும் குறைவாகவே இருக்கும்.

யாழ்ப்பாணத்தில் இம்முறை சுமார் 2 இலட்சம் வாக்காளர்களே வாக்களிப்பார்கள். இதுவே, அதிகமா இருக்கும். யாழ் மக்களிடம் இலங்கை பாராளுமன்றத்திலும், தேர்தல்களிலும் பெரிய நம்பிக்கை எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அதுவே, இன்றுவரை தொடர்கிறது. என்னவானாலும், மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கிற பொறுப்பு மக்களிடமே விடப்படுகிறது. அதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை. அந்த அடிப்படையை மக்கள் ஓரளவுக்கு நிறைவேற்றுவார்கள். ஆனால், மக்கள் பிரிதிநிதிகள் தங்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவார்களா? என்ன வேள்விக்குறிதானே விடையாக கிடைக்கிறது!.

ஊடக விபச்சாரமும், போலி (கழிசடை) ஆன்மீகமும்.


ஊடக தர்மம், ஒழுக்கம் மற்றும் விழுமியங்களுக்குட்பட்டு செயற்படுகின்ற ஊடகவியலாளனாக இருப்பதில் நான் எப்பொழுதும் பெருமைப்பட்டே வந்திருக்கிறேன். வருவேன். ஆனால், பணத்துக்காகவும் பரபரப்புக்காகவும் சிலரின் அருவருக்கத்தக்க- பொறுப்புணர்வற்ற ஊடக செயற்பாடுகள் எங்களை மக்கள் முன்னால் தலைகுனிய வைத்து விடுகின்றன.

தலைக்கு முன்னால் துப்பாக்கிகள் குறிவைக்கப்பட்டிருக்கும் தருணத்திலும் இயலுமானவரை ஊடக தர்மத்தை கடைப்பிடிப்பதில் அக்கறையுடன் செயற்பட நினைப்பவன். அல்லது, சுய தேவைகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் மக்களை தவறாக வழிநடத்த கூடாது என்பதில் தீர்க்கமாகவுள்ள ஊடகவியலாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதை கடைப்பிடிக்க முயலுபவன்.

இவ்வாறான நோக்கங்களை கொண்ட எனக்கு நேற்று முன்தினம் காலை பெரும் தலையிடியை தோற்று வித்த விடயம் ‘சன் தொலைக்காட்சி’யும், ‘நக்கீரன் இணையமும்’ வெளியிட்டிருந்த சுவாமி என்கிற போர்வையில் வலம் வந்த நித்தியானந்தர் தொடர்பான படுக்கையறைக் காட்சிகள். எனக்கு நித்தியானந்தர் செய்தது சரியா? பிழையா? என்ற கேள்விகளே முதலில் எழவில்லை. மாறாக பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய இந்த ஊடகங்கள் ஏன் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டன என்ற வருத்தமே மேலோங்கியது.

சன் தொலைக்காட்சியை கோடிக்கணக்காக மக்கள் பார்க்கின்றனர். அதில், தாயும்- மகளும், தந்தையும்- மகனும், ஏன்? பாட்டனும்- பேரனும் கூட இருக்கிறார்கள். இவ்வாறு குடும்பங்களினால் வரவேற்பறையில் பார்க்கப்படும் ‘சன் தொலைக்காட்சி’ போதிய மட்டுறுத்தல்கள் இன்றி, நித்தியானந்தர் தொடர்பான படுக்கையறைக் காட்சிகளை எவ்வாறு ஒளிபரப்ப முடியும்? அதுவும், போதிய அறிவுறுத்தல்கள் இன்றி.

குறித்த வீடியோவை செய்தியாக மக்களிடம் சமர்பிக்க முன்னர் குழந்தைகள்- சிறுவர்கள் தொடர்பிலாவது கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்களை சன் தொலைக்காட்சி வழங்கியிருக்க வேண்டுமே? ஏன் அந்த ஊடக ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவில்லை. சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனோ, சன் செய்திப்பிரிவின் தலைவரோ குறித்த வீடியோ காட்சிகளை குடும்பத்துடன் இருந்து பார்க்க தயாரா? இவ்வாறு எவ்வளவு விடயங்களை அவர்கள் கருத்தில் கொண்டிருக் வேண்டும். வெறும் பரபரப்புக்காகவும், பணத்துக்காகவும் மட்டுமே அந்த செய்தியை வெளியிட்டதாகவே கருதவேண்டிய நிலைக்கு தள்ளியது யாரின் தவறு?

‘நக்கீரன்’ கோபல் மீது எனக்கு நிறைய மரியாதை சில காலத்துக்கு முன்னர் வரை இருந்தது. ஆனால், அவரின் பொறுப்பற்ற சில நடவடிக்கைகளினால் அவர் அதனை தவிடுபொடியாக்கினார். இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் நக்கீரன் கிராபிக்ஸ் உதவிகளுடன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக செய்தி வெளியிட்டு காசு பார்த்தது. இலங்கை தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களே அவர்கள் எல்லோரும் பிரபாகரன் மரணத்தில் கவலை கொண்டிருந்தனர் (பிரபாகரனை எதிர்த்தவர்களும் கூட). தமிழ் மக்களின் உணர்ச்சிகளில் கல்லை வீசி காசு பார்த்த நக்கீரனை எவ்வாறு ஊடக ஓழுக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் என்று கருத முடியும்.

நித்தியானந்தர் தொடர்பான வீடியோ காட்சிகளை ஒரு நீலப்படத்துக்கு நிகரான தொகுப்புக்களுடன் வெளியிட்ட ‘நக்கீரன் இணையத்தளம்’ முழுமையான காட்சிகளை காண பணத்தை செலுத்துமாறு கோரியது. இந்த செயல், நீலப்படங்களை இணையத்தில் விற்கும் ஆயிரமாயிரம் இணையத்தளங்களுக்கு ஒப்பானதே. இதை என்னவென்று சொல்வது.

தவறினை மக்களுக்கு சுட்டிக்காட்டுவதோ, போலிகளை வெளிக்காட்டுவதோ தவறில்லை. ஆனால், அதே தவறினை இவர்களும் செய்தால் எவ்வாறு சகித்துக்கொள்ள முடியும். திரைப்படங்களுக்கு யு, ஏ என்று சான்றிதள் வழங்குகிறார்கள். இந்த வீடியோ காட்சிகளுக்கு மட்டுறுத்தல் வழங்குவது யார்? இதில் என்ன நியாயம் இருகிறது என்று தெரியவில்லை.

எனக்கும், உங்களுக்கும் என்று அந்தரங்கமென்ற ஒன்று இருக்கிறது. அதற்குள் மற்றவன் தலையிடுவதை எங்களினால் அனுமதிக்க முடியுமா? அது சாமியாராக இருந்தாலென்னா, மந்திரியாக இருந்தாலென்ன? சாமானியனாக இருந்தாலென்ன? அவரவர்க்கான அந்தரங்கம் தனிப்பட்டதே. பெண்களோ, ஆண்களோ பணத்துக்காக தன்னுடைய உடலை விற்கும் போது விபச்சாரமென்கிறோம். அதையோ, படம்பிடித்து பொறுப்புணர்வற்று விற்பதை எவ்வாறு சொல்வது? அது ஊடக விபச்சாரம் தானே!.

பரமஹம்ச நித்தியானந்தர் என்கிற பெயரில் 32 வயதுடைய வாலிபனின் வாய் ஜாலங்களையும், போலி ஆன்மீகத்தையும், சொற்பொழிவுகளையும் கேட்டு அவர் ஒரு ஞானி, கடவுள் என்று மக்கள் பின்தொடர்வது சரியா?. ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரி உணர்வுகள் இருக்கவே செய்கின்றன. அந்த உணர்வுகளை துறந்த ஞானியாக நித்தியானந்தரை நம்பியது யாருடைய தவறு?

எங்களுக்கு இருக்கின்ற பாலியல் தேவைகள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்களே மற்றைய மனிதனுக்கும் இருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல், அவர் கடவுள், முற்றும் துறந்த ஞானி, வழிகாட்டும் சுவாமி என்று முட்டாள் தனமாக செயற்படுவதும், அவரின் தவறுகள் வெளிவந்தவுடன் மனதுடைந்து போவதும் இந்திய மக்களுக்கு புதிதல்லவே.

தங்களை பின்நவீனத்து கர்த்தாக்களாகவும், கல்விமான்களாகவும், நட்சத்திரங்களாகவும் காட்டிக்கொள்கிறவர்களும், சமூகத்தில் உயர்ந்த நிலையிலிருக்கிறவர்களுமே இந்த போலிகளிடம் சிக்கிக்கொள்ளும் போது, சாமானிய மக்கள் இந்த ஏமாற்று வித்தைகளுக்குள் இழுக்கப்படுவதை தவிர்க்க முடியாது. நேற்று பிரேமானந்தா. இன்று நித்தியானந்தா. நாளை எந்த ஆனந்தாவோ கட்டாயம் வருவார். அவரை தொழவும் கூட்டம் கூடும்! நெஞ்சு பொறுக்குதில்லையே!!.