திட்டமிட்டு சிதறடிக்கப்ப(ட்ட)டும் சிறுபான்மை கட்சிகளின் பலம்.
Posted On Wednesday, February 24, 2010 at at 7:16 PM by மருதமூரான்.ஒற்றுமையுடன் இருந்த ஐந்து மாடுகளுக்கும் அவற்றை வேட்டையாட துடித்த சிங்கத்துக்குமிடையில் நிகழ்ந்த கதையை ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற தலைப்பில் எம்முடைய பாடசாலை நாட்களில் யாவரும் படித்திருப்போம். அந்த கதையில் ஒற்றுமையுடன் இருந்த மாடுகளின் பலத்தை அவற்றுக்குள் ஒற்றுமையின்மையை தோற்றுவித்து சிங்கம் ஒவ்வொன்றாக வேட்டையாடும்.
இதே நிலைமையே இலங்கை, இந்தியா உள்ளிட்ட அரசியலை பொறுப்புணர்வு குறைவுகளுடன் மேற்கொள்ளும் நாடுகளிலும், பிராந்தியங்களிலும் காணமுடிகிறது. இந்த கட்டுரை இலங்கையில் சிறுபான்மை கட்சிகளின் தீர்மானிக்கும் சக்தியும், பலமும் எவ்வாறு திட்டமிட்டு குலைக்கப்ப(பட்டது)டுகின்றது என்பது குறித்தும் அவற்றுக்கு பலியாகும் நிலை குறித்தும் கூற விளைகிறது.
இலங்கை ஜனநாயக சோஷலிக குடியரசின் பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்காக 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தனர். இலங்கை தமிழரசுக் கட்சி (அதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு), சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இது தவிரவும் பல சிறுபான்மைக் கட்சிகள் சில ஆசனங்களை பெற்றுக்கொண்டிருந்தன.
225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 45க்கும் அதிகமான சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர் (பெரும்பான்மை கட்சிகளிலும் சில சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் இருந்தனர்). இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 26 வீதமுள்ள சிறுபான்மையினருக்கான பாராளுமன்ற அங்கத்துவம் ஓரளவு நிரம்பியிருந்தது. இதனால், ஆட்சிகளர்களுக்கு சில தருணங்களில் அரசாங்க நடவடிக்கைகளை தடைகளின்றி முன்னெடுப்பதில் சிக்கல்களும் ஏற்பட்டன.
இலங்கையின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக 1989களுக்கு பின்னர் சிறுபான்மை கட்சிகளே அதிகளவில் இருந்து வந்துள்ளன. இவ்வாறு தங்களின் ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதற்கு சிறுபான்மை கட்சிகளிடம் தங்கி நிற்பது எந்தவொரு பெரும்பான்மை கட்சிகளுக்கும் பிடிக்கவில்iலை. இதனால், சிறுபான்மை கட்சிகளுக்குள் அதிகார போட்டி என்ற குண்டை வீசி பல்வேறு துண்டுகளாக உடைக்க ஆரம்பித்தன.
இந்த குண்டுகளுக்குள் சிக்கிய கட்சிகளாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசையும், இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் குறிப்பிட்டு சொல்ல முடியும். அதுவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்கூம் அஷ்ரப் வானூர்தி விபத்தில் உயிரிழக்கும் வரை அந்தக் கட்சியின் வளர்ச்சி இலங்கையின் அரசியல் வரலாற்றில் குறிப்பிட்டு சொல்லக்கூடியளவில் இருந்தது. ஆனால், அஷ்ரப்பின் உயிரிழப்பிற்கு பின்னர் சிறிய காலத்துக்குள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்று நான்கு துண்டுகளாக உடைந்தது. இந்த உடைவுக்கு பின்னால் பெரும்பான்மை சமூகங்களின் அரசியல் தலைவர்களே இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.
அதாவுல்லா, பேரியல் அஷ்ரப், ரிஷாட் பதியுதீன் என்று முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சிகளை உருவாக்கினர். அரசாங்கங்களிலும் அங்கம் வகித்தனர். அண்மையில் தன்னுடைய கட்சியை பேரியல் அஷ்ரப், சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைத்துவிட்டு அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றார். தனித்துவத்துடன் செயற்பட்டு வந்த அஷ்ரப் ஸ்தாபித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை மக்கள் தேடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 40 வீதமாக வாழும் இஸ்லாமிய தமிழர்கள் தங்களுக்காக அரசியல் சக்தியை தீர்மானிப்பதில் சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய தமிழர்களின் பாராளுமன்ற அங்கத்துவம் குறைவதற்குரிய வாய்ப்புக்களே அதிகம். அந்த நிலைமைக்கு அரசியல் தலைமைகளுக்குள் இருக்கின்ற பொறாமைகளும், அதிகார வெறியுமே காரணமாக இருக்கின்றது.
இலங்கை பொருளாதாரத்தில் முதுகெலுப்பாக கணிக்கப்படுகின்ற மலையக தமிழர்களின் பாராளுமன்ற அங்கத்துவமும் எதிர்வரும் தேர்தலில் 2 உறுப்பினர்களினால் குறையும் வாய்ப்புக்கள் அதிகம். மலையக தமிழர்களின் பிரதான கட்சிகளாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பனவும் உடைந்து பல கட்சித்தாவல்களுக்குள் இருக்கின்றது. யார் எந்தக் கட்சியில் இன்று இருக்கிறார். நாளை அவர் எந்தக் கட்சியில் இருப்பார் என்ற நிலையே மலையக தலைமைகளிடம் தொடர்கிறது.
ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையை எற்று சிறிய காலத்துக்குள்ளேயே கட்சி உறுப்பினர்களின் கட்சி தாவல்களினால் பலவீனப்பட்டு போனது. சந்திரிக்காவின் அரசாங்கத்தை 1994ஆம் ஆண்டு காப்பாற்றிய பெரியசாமி சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியும் எதிர்பார்த்த அளவுக்கு தன்னுடைய வளர்ச்சியை பெறவில்லை. தற்பொழுது, சந்;திரசேகரனின் இழப்பிற்கு பின்னர் அது இன்னும் மோசமாகியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசிலிருந்து அண்மையில் மூன்று முக்கிய உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர். இவர்களும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள். பல்வேறு பிரிவுகளுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் தங்களுடைய அரசியல் தலைமைகளை தேடும் நிலைக்கே மலையக தமிழர்களும் முகங்கொழுத்துள்ளனர்.
மலையக தமிழர்களினதும், இஸ்லாமிய தமிழர்களினதும் அரசியல் இருப்பை சிதறடிக்க பெரும்பான்மை சமூகங்களின் ஆதரவுடன் சிலர் செயற்பட்டனர். இன்றும் செயற்படுகின்றனர். அவர்களுக்கும் இருக்கின்ற சிறிய கருத்து வேறுபாடுகளை பெரிய விடயமாக்கி மிக இலகுவாக அவர்களை பிரித்தாளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு தெரிந்தோ தெரியாமலோ ஊடகங்களும் அற்புதமாக தூபம் போடுகின்றன.
இந்த நிலைமைக்குள் வடக்கு-கிழக்கு தமிழர்களின் அரசியல் தலைமைகளும் சிக்கிவிட்டன என்பது அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பிரித்தாளும் சதியும், அதிகார வெறியுமே இங்கும் வென்றிருக்கிறது. இந்தக் கட்டுரையை வாசிக்கும் சிலருக்கு சிறுபான்மை தலைமைகள் ஒன்றாக இருந்து என்ன சாதித்தார்கள் என்ற கேள்வி வரலாம் அது தவிர்க்க முடியாதது. ஆனாலும், சிறுபான்மை சமூகத்துக்கு ஒரு போலி நம்பிக்கையை வழங்கவாவது சிறுபான்மை கட்சிகளிடம் ஒற்றுமை அவசியம்.
(இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் குறிப்பாக வடக்கு-கிழக்கில் கடந்த மூன்று தசாப்த காலமாக தொடர்கிறது. எனவே, அது தொடர்பில் தெளிவான, தீர்க்கமான சிந்தனைக்கும் முடிவுக்கும் மக்கள் செல்ல வேண்டும்.)
ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற ‘மந்திர இசை’
Posted On Thursday, February 11, 2010 at at 10:36 AM by மருதமூரான்.‘ஜெய்கோ மந்திரம் மீண்டும் வென்றிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு கிராம்மி விருதுகள்’ என்ற செய்தித் தலைப்பு கடந்த முதலாம் திகதி (பெப்ரவரி 1) பல ஊடகங்களில் முதலிடம் பெற்றன. இசையுலகின் அதி உயரிய விருதாக கருதப்படும் கிராம்மி விருதுகளையும் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுவிட்டார்.
‘கிராம்மி விருதினை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கியதன் மூலம் கிராம்மி விருதுக்கே பெருமை’ என்றான் என்னுடைய நெருங்கிய நண்பன். அது அவனது ரஹ்மானின் மீதான அதீத ஈர்ப்பினால் வெளிப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம். கிராம்மி விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தகுதியானவர். அதுவும் பத்து வருடங்களுக்கு முன்னரே தகுதியானவர் என்பது என்னுடைய கருத்து.
‘ஸ்லம்டோக் மில்லியனர்ஸ்’ திரைப்படத்துக்கு ரஹ்மான் இசையமைத்ததின் மூலம் இரண்டு அகடமி விருதுகள் (ஒஸ்கார்), இரண்டு கிராம்மி விருதுகள், கோல்டன் குளோப் விருது, பெப்ரா விருது என்று சர்வதேச ரீதியில் முக்கியமான 6 விருதுகளை வென்றுவிட்டார். இந்த விருதுகளை வென்றுள்ள அவருக்கு இந்திய மத்திய அரசும் ‘பத்மபூஷன்’ விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இந்த நிலையில் ரஹ்மான் குறித்த என்னுடைய சில கருத்துக்கள் அல்லது வாதங்கள்.
‘ஸ்லம்டோக் மில்லியனர்ஸ்’ திரைப்படத்தின் பின்னணி இசையே ரஹ்மானினால் வழங்கப்பட்ட அதியுச்சம் என்று அவர் அகடமி விருதுகளை பெற்றபோது இலங்கை, இந்திய ஊடகங்களில் சில விமர்சகர்களால் சிலாகித்து பேசப்பட்டது. அதுவும், இயக்குனர் டானி பொயிலின் காட்சியமைப்புக்களுக்கு ரஹ்மானின் இசையே உயிரூட்டியதாகவும் கூறப்பட்டது. இந்தக் கூற்றுக்கள் மேற்கத்தைய உலகத்தினால் ஏ.ஆர்.ரஹ்மான் கௌரவிக்கப்பட்டதன் விளைவாகவும் எழுந்திருக்கலாம்.
ஆனால், ரஹ்மானின் இசை வரலாற்றில் அவருடைய திறமையை ‘ஸ்லம்டோக் மில்லியனர்ஸ்’ படத்தினை விட மணிரத்தினத்தின் பம்பாய், சுபாஸ்ஹையின் ரால் (தாளம்), ஹங்கரின் இந்தியன் போன்ற படங்;கள் நிரூபித்தவை. அதுவும், பம்பாய், இந்தியன், ரங்கீலா, லகான் போன்ற படங்களின் பின்னணி இசை மிகவும் ஆச்சரியத்தை தருவனவாக அமைந்தவை.
‘பம்பாய்’ படத்தில் மனிஷா கொய்ராலாவிற்கும், அரவிந்தசாமிக்கும் இடையிலான காதல் காட்சிகளின் ஆரம்பத்திலும், (அதுவும் அந்த மழைபெய்யும் பேரூந்துக் காட்சி மறக்க முடியுமா?) படத்தின் இறுதிக் காட்சிகளிலும் பின்னணி இசையே ஆதிக்கம் செலுத்தியிருக்கும். அந்தக் காட்சிகளுக்கு வேறு ஒருவரால் இவ்வாறு ஒருங்கிணைந்த இசைக்கோர்ப்பு செய்ய முடியுமா என்று தெரியவில்லை.
அவருடைய பின்னணி இசையின் ஆளுமையை அண்மைக்காலத்தில் வெளிக்காட்டிய படங்களில் ‘ஜோதா அக்பர்’ தவிர்க்க முடியாதது. 7 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வரலாற்றை மக்களுக்கு கூறும் போது, அந்த காலத்தில் என்னென்ன இசை வடிவங்கள் இருந்திருக்குமோ அவற்றையே பாவிக்க வேண்டும் என்ற தேடல் அதில் தெரிந்தது.
ஜோதாவும், அக்பரும் படம் முழுவதிலும் தூர நின்றே பேசிக்கொள்வார்கள். ஆனால், அவர்களுக்கிடையில் இருக்கின்ற காதலை இரசிகர்களுக்கு இசை புரிய வைத்திருக்கும். அதுபோல ‘ஜோதா அக்பர்’ படத்தின் காதல் காட்சிகளுக்கு பின்னர் வேறொரு போர் அல்லது மோதல் காட்சி வரும். அந்த காட்சி மாற்றங்களில் வரும் பின்னணி இசை படத்தின் தொடர்ச்சியை காட்டுவனவாக இருக்கும். அதனையும், சரியாகவே செய்திருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான்.
‘மனமோகினி மோறோ மனபாகே…’ என்கிற விஜய் பிரகாஷ் பாடிய பாடல் சுபாஸ்ஹை இயக்கத்தில் வெளியான ‘யுவராஜ்’ என்கிற ஹிந்தி படத்தில் வருகிறது. கடந்த வருடம் நான் அதிக தடவைகள் இணையத்தில் கேட்ட, பார்த்த பாடல். அது, இந்துஸ்தானி இசை வடிவம் என்று நினைக்கிறேன். (சாஸ்திரிய இசை வடிவங்களில் எனக்கு பிரித்தறியும் ஆற்றல் குறைவு) இசைக்கும் மொழிக்கும் சம்பந்தமே இல்லை என்பதை முற்றுமுழுதாக உணர்த்திய பாடல் அது.
ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்ட சில இயக்குனர்களுடன் மட்டுமே பணியாற்ற விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அவரின் இசை ஆளுமையை வளர்த்துக்கொள்ள உதவும் படங்களையே விரும்புகிறார். தவிர்க்க முடியாமல் பெரிய முதலீட்டு படங்களிலும் பணியாற்றுகிறார்.
ரஹ்மான் மீதான குற்றச்சாட்டுக்களில் தவிர்க்க முடியாதது. மொழி தெரியாத பாடகர்களை பாட வைத்து மொழியின் ஆளுமையை குறைக்கிறார் என்பது. அதுவும் தமிழ் பாடல்களை அட்னன் சாமி, உதித் நாரணயன், மதுசிறி இன்னும் பலர்… பாடும் போது வார்தைகள் வேறு அர்த்தம் கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை. இவ்வாறான விடயங்களை அவர் எதிர்காலத்தில் திருத்திக்கொள்ள வேண்டும்.
விமர்சனங்களை முழுமனதுடன் ஏற்று தன்னுடைய இசை வடிவங்களின் மூலம் பதிலளிப்பதன் மூலம் ரஹ்மான் தொடர்ந்தும் வெற்றி பெறுகிறார். ரோஜா, ஜென்டில்மென் படங்களின் வெற்றியை தொடர்ந்து ரஹ்மானின் மீது விழுந்த மேற்கத்தைய பாணி இசை என்கிற முத்திரையை கருத்தம்மா, கிழக்கு சீமையிலே படங்களின் இசையின் மூலம் துடைத்துக்கொண்டார்.
என்னுடைய அனுபவத்தில் நான் அதிகம் ரசிக்கின்ற பாடல்களையும், படங்களுக்கான பின்னணி இசையையும் வழங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மானே. அதற்கு என்னுடைய இளைய வயதும் காரணமாக இருக்கலாம். சினிமா பின்னயின்றி பார்த்தாலும், ‘வந்தே மாதரம்’ இசையும், யுனிசெப்புக்கான ‘பிறே மி போ பிரதர்’ பாடலும் என்னுடைய தொடர் விருப்பங்கள்.
இந்திய இசையின் ஆளுமையை வெளியுலகத்துக்கு நிரூபித்தவர்களில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, லதா மங்கேஸ்கர், ஜாஹிர் உசைன் வரிசையில் தற்போது முன்னணியில் இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இசை ஆளுமை தவிர்ந்து அவருடைய ஓழுக்கமும், ஆணவமும் அற்ற இயல்பே அவரை இன்னும் உச்சத்தில் வைத்திருப்பதாக உணர்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மானுடன் என்னால் தொடர்ந்தும் ஒப்பிட்டு பார்க்;கப்படுகிற இன்னுமொரு ஆளுமை நட்சத்திர துடுப்பாட்டக்கார் சச்சின் டெண்டுல்கர். இவர்களுக்கிடையில் துறை சாரா ஆனால், குணம் இயல்பு ஆளுமை ஆகியவற்றில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஒருவர் ‘மந்திர இசை’க்கும் மற்றவர் ‘மந்திர துடுப்பு’க்கும் சொந்தக்காரர்.



