எதிர்கால முதற்குடிமகனுக்கு முன்னாலுள்ள முதற்கடமை.


சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் மோதல்கள் அற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. தோற்கடிக்க முடியாத தலைவர் என்ற பிம்பத்துடன் வலம்வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவருடைய முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் சந்திரலால் பொன்சேகாவும் மோதல் வெற்றிகளுக்கு மக்களிடம் அங்கீகாரம் கோரி நிற்கின்றனர்.

இவர்களின் ஒருவரே, இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படுவார். அதன் பின்னர் ஆறு வருடங்களுக்கு 20 மில்லியன் மக்களின் தலைவனாக, முதற்குடிமகனான மஹிந்த அல்லது பொன்சேகா இருக்கப்போகிறார். இந்த நிலையில், இவர்களின் முன்னாலுள்ள நாட்டுக்கான எதிர்கால கடமைகள் பல.

இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக தொடர்ந்து வந்த மோதல்களுக்கு முடிவு கண்டதில் அல்லது முடிவுக்கு கொண்டு வந்ததில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சரத் சந்திரலால் பொன்சேகாவுக்கும் பங்குண்டு. மோதல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் அழுத்தங்களை சந்தித்த மஹிந்த அதற்கு இசைந்து கொடுக்கவில்லை. அதனாலேயே, மோதல்களுக்கு முடிவுகாணப்பட்டதாக தென்னிலங்கையின் ஒரு தரப்பும், இராணுவத்தை முற்றுமுழுதாக மீள ஒருங்கமைத்து வெற்றி பெற்றது பொன்சேகா என்று மறுதரப்பும் தங்களுக்கும் வாதிட ஆரம்பித்து சில மாதங்களாகிவிட்டன.

மோதல்களுக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், நாட்டின் ஜனாதிபதியாக வரப்போகிறவருக்கு முன்னால், இரண்டு முக்கிய விடயங்களுக்கு தீர்வுகாணும் பொறுப்புக்கள் உள்ளன. முதலாவது ‘நாட்டின் இனமுறுகல்களுக்கான அரசியல் தீர்வு’ மற்றையது ‘நீண்டகால போரின் வடுக்களைத் தாங்கி நிற்கும் நாட்டின் அபிவிருத்தி’. இதில், முதலாவது விடயம் தொடர்பிலேயே இங்கு பேசப்படப்போகிறது.

நாட்டின் இனமுறுகல்களுக்கு அரசியல் தீர்வு காண்பதில் ஜனாதிபதியாக யார் வந்தாலும் பலத்த சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். அவற்றில் முக்கியமானதாக தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வெல்லுதல்.

பிரிந்து வேறுவேறு திசைகளில் பயணம் செய்யும் தமிழ்-இஸ்லாமிய தமிழ் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தல். அரசாங்கத்தில் கூட்டணி வகிக்கும் சில பெரும்பான்மையின கட்சிகளின் வற்புறுத்தல்களை சமாளித்தல். எதிர்க்கட்சியின் சவால்களுக்கு முகம்கொடுத்தல். மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மதத்தலைவர்களின் கருத்துக்களை உள்வாங்கிச் செயற்படுதல்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முறைப்படி நடத்தி முடித்தல். அடுத்து, முக்கியமாக நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்தல். இவற்றைச் சமாளித்து அரசியல் தீர்வு காண்பதென்பது மிகவும் சிரமமான காரியம்.

ஆயினும், இனமுறுகல்களுக்கு தீர்வுகாண வேண்டிய கட்டாயம் ஜனாதிபதியாக வருபவருக்கு இருக்கிறது. முன்னைய ஜனாதிபதிகளும், அரசாங்கங்களும் கூறிவந்த பயங்கரவாத்தை முற்றாக அழித்து மோதல்களுக்கு முதலில் தீர்வு என்ற வாதம் எதிர்காலத்தில் உதவாது. இதனால், இனமுறுகல்களுக்காக தீர்வு விடயம் முக்கியமான பங்கை வகிக்கும்.

“இலங்கையில் தமிழர்கள் உட்பட எந்தவொரு சிறுபான்மை இனத்தினரும் இல்லை. தற்போது இந்த நாட்டில் இரண்டு பிரிவினரே உள்ளனர். ஒன்று இந்த நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்கள். மற்றையவர்கள் நாட்டின் மீது பற்றற்ற சிறு தொகையினர்.” இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்து வருகிறார்.

அதுபோல, “இலங்கையில் சிறுபான்மையினருக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அநீதி இழைக்கப்பட இடமளிக்க மாட்டேன்” என்று அண்மைக்காலமாக கூறி வருகிறார் ஜெனரல் சரத் சந்திரலால் பொன்சேகா. (இவர், கனடா நஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு சிறுபான்மை சமூகம் தொடர்பில் தெரிவித்த கருத்து பாரிய விமர்சனத்துக்கு உள்ளனாது குறிபிடத்தக்கது)

இந்த விடயங்கள் சிறுபான்மையின மக்களிடம் ஓரளவு நம்பிக்கையை தங்கள் மீது வளர்க்கும் என்று இருவரும் நம்புகின்றனர். இந்த விடயங்கள் மாத்திரம் அவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விடாது. இதற்கான செயல் வடிவங்களே நம்பிக்கையை வளர்க்கும்.

மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு தொடர்ந்தும் உள்ளாகி வந்தனர். ஆனால், ஜனாதிபதி தேர்தல் கால நடவடிக்கைகளாக அவை தளர்த்தப்படுவதும், வீதிகள் திறக்கப்படுவதும் சிறுபான்மை மக்களிடம் நம்பிக்கையை வளர்க்க பெரியளவில் உதவாது.

மோதல்களின் வலிகளை வாங்கிக்கொண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்கள், அனைத்து அடிப்படை வசதிகளுடனும் அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். தேர்தல்காலத்தில், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத பகுதிகளில் மீள குடியேற்றப்படும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இவை, தவிர்க்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் காணப்படும் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள அல்லது அண்மித்துள்ள பாதுகாப்பு மற்றும் இராணுவ அரண்கள் அகற்றப்பட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சங்கடங்களின்றி வழியேற்பட வேண்டும். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய தமிழர்களின் மீள்குடியேற்றம் விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், அவர்களின் மத வழிபாட்டு நடைமுறைகளிலுள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும்.

சிங்கள மொழிக்கு உண்டான அங்கிகாரம் தமிழ் மொழிக்கும் அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் அது பூரணப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன. இவற்றுக்கும் உடனடியாகத் தீர்வு காணவேண்டும். இவற்றை ஜனாதிபதியாக வருபவர் முதலில் நடைமுறைப்படுத்தினால் மற்றைய பெரும்பான்மைத் தலைவர்கள் பெறத்தவறிய தமிழ் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை பெறமுடியும்.

தமிழ் உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகள் இனமுரண்பாடுகளுக்கு முன்வைக்கும் தீர்வு யோசனைகளை உள்வாங்கிச் செயற்படுவதும், எதிர்க்கட்சியின் அறிவுரைகளை எடுத்துக்கொண்டு செயற்படுவதும் தவிர்க்க முடியாதது. இந்த விடயங்களுக்கு ஜனாதிபதியாக வருபவர் மதிப்பளித்து செயற்படும் பொழுது ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளுவார்.

அதுபோலவே, எதிர்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில பெரும்பான்மைக் கட்சிகளின் அழுத்தங்களை சரியாக உள்வாங்கி அவர்களின் அழுத்தங்களிலிருந்து மீண்டு மனப்பூர்வமான அரசியல் தீர்வை முன்வைப்பதும் ஜனாதிபதியாக வருபவருக்கு முன்னாலுள்ள பாரிய பொறுப்பு.

அத்துடன், மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மதத்தலைவர்களின் கருத்துக்களை இலங்கையின் தலைவர்கள் எந்தக்காலத்திலும் மறுதலித்து வந்தது இல்லை. எனவே இந்த விடயத்தையும் அவர் சமயோசிதமாக கையாளவேண்டும்.

தமிழ்-இஸ்லாமிய தமிழ் மக்கள் வயிற்று பசியை விட சுய கௌரவத்தை மேலாக கருதுபவர்கள். எனவே அத்தகைய விடயங்களிலும் கூடுதல் அக்கறை காட்டுவது அவசிமாகிறது. குறிப்பாக தமது பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் என்பன மேம்படுத்தப்படும்போது அது குறித்து அவர்கள் மீது நல்லபிப்பிராயம் கொள்ளக்கூடும்.

ஆனாலும், கடந்த காலங்களில் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரிடம் இருந்து கூடுதலான பாடங்களை கற்றுள்ளனர். அவர் தமது உரிமைகளையும், அதிகாரங்களையும் அள்ளி வழங்குவார் என மக்கள் எதிர்பார்த்து ஏமாந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால், மக்களின் மனங்களை வெல்வது இலகுவானதல்ல.

‘இனமுறுகல்களுக்கான அரசியல் தீர்வு’ என்ற விடயம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டு வேறு அரசியல் நாடகங்கள் மேடையேற்றப்படும் சாத்தியங்கள் எதிர்காலத்திலும் சாத்தியம். இவ்வாறான நாடகங்கள் நாட்டை ஒருங்கிணைக்க உதவாது. எனவே, நாடகங்களை நம்பாமல், மக்களின் மனங்களை வென்று தீர்வு காணும் கடமை ஜனாதிபதியாக வருபவருக்கு இருக்கின்றது.

(ஏற்கனவே எழுதிய கட்டுரை சில மட்டுறுத்தல்களின் பின்பு இங்கே.)

‘யோகி’ படைத்த அமீரும், ‘3 IDIOTS (இடியட்ஸ்)’ நடித்த அமீரும்.


‘அமீர்’ என்ற பெயருக்கு இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலுள்ள சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் மதிப்பு உண்டு. புது முயற்சிகளையும், சினிமாவுக்கான புதிய களங்களையும் இந்த பெயருக்குரிய இருவர் கொண்டுள்ளனர்.

‘லகான்’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமா ஆர்வலர்களையும், வெளிநாட்டு ஐம்பவான்களையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். தொடர்ந்தும், தாரே ஷமின் பர், கஜினி, 3 இடியட்ஸ் என்று புதிய கதைக்களங்களில் பயணித்து வெற்றிபெற்ற அமீர்கான் முதலாமவர்.

‘மௌனம் பேசியதே’ என்ற படத்திலேயே வித்தியசமான காதல் கதையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். ‘ராம்’ படத்தின் மூலம் ஆசிய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர். பருத்திவீரனில் உச்சம் தொட்டவர் என்று அறிமுகங்களை கொண்ட அமீர் சுல்தான் அடுத்தவர்.

இந்த இரண்டு அமீர்கள் தொடர்பாகவுமே கடந்த சில வாரங்களாக இந்தியச் சினிமாவுலகமும், ஊடகங்களும் அத்துடன் இணைய எழுத்தாளர்களும் அதிகம் பேசியும், எழுதியும், விமர்சித்தும் வருகின்றனர். ஒரு ‘அமீர்’ மீது இருந்த மதிப்பு அதிகரிக்க, மற்றைய ‘அமீர்’ மீது வருத்தங்களும், கோபங்களும் ஏவப்படுகின்றன.

முதலில் நடிகர் அமீர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ பற்றி பேசுவது நல்லது என்று நினைக்கிறேன். ஒரு மாணவனின் சுயாதீன ஆர்வத்தை எவ்வாறு இந்த சமூகமும், எமக்கான கல்வி முறைகளும் தடுக்கிறது என்று சொல்லியிறுக்கிறது 3 இடியட்ஸ்.

‘முன்னாபாய்’ என்ற படத்தின் மூலம் தன்னுடைய வெற்றியை பதிந்து விட்ட ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கியிருக்கும் படம். சுயாதீன சிந்தனையுள்ள மாணவனாக அமீர்கான் பிரதான பாத்திரத்திலும், ஆர்.மாதவன், சர்மன் ஜோசி, பெமன் இரானி, கரீனா கபூர் ஆகியோர் துணைப் பாத்திரத்திலும் (இப்படி குறிப்பிடுவது சரியா?) நடித்திருக்கிறார்கள்.

‘மாணவர்கள் மீது எவ்வாறு சீரற்ற இந்த கல்வி முறை திணிக்கப்படுகின்றது’ என்ற முக்கியமான கருத்தினை யாருடைய மனதிலும் வலிந்து திணிக்காமல் நக்கல், நகைச்சுவை என்று சிரிக்க வைத்து பதித்திருக்கிறது ‘3 இடியட்ஸ்’.

ஆங்கில உப தலைப்புக்களுடனேயே படம் பார்த்திருந்தேன். ஒரு சில வார்த்தைகளைத் தவிர சத்தியமாக எனக்கு ஹிந்தி தெரியாது. ஆனாலும், படத்துடன் ஒன்றிப்போக வைப்பதில் 3 இடியட்ஸ் பின்நிற்கவில்லை. ஆனாலும், அமீர்கானின் ‘தாரே ஷமின் பர்’ அளவுக்கு என்னை கவரவில்லை.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயங்கள் மாதவனுக்கு அற்புதமான பாத்திரம். அவரும் அளவாக செய்திருக்கிறார். 3 இடியட்ஸ் படம் ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பஹத் எழுதிய FIVE POINT SOMEONE என்ற நாவலின் தழுவல் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. படம் பார்த்ததும், தமிழில் இந்தப் படத்தினை இளம் நடிகர்களை (சத்தியமாக கமல் நினைவுக்கு வரவில்லை) வைத்து எடுத்தால் நல்லது என்று பட்டது.

பார்க்காத படத்தினை பற்றி எந்த தருணத்திலும் நான் எழுதுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளவன். ஆனாலும், சில செயற்பாடுகள் அல்லது ஒருவர் மீதான மதிப்புக்களை அவரே குறைக்கிற சந்தர்ப்பங்களில் எழுத வேண்டியேற்படுகிறது. அப்படியே என்னை எழுத தூண்டியவர் இயக்குனர் அமீர் (சுல்தான்). தூண்டிய படம் ‘யோகி’. காரணம் ஷோட்சி (TSOTSI).

ராம், பருத்திவீரன் படங்களுக்கு பின்னர் இயக்குனர் அமீர் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். தமிழ் சினிமாவுக்கு நல்ல திரைக்கதையாசிரியர், இயக்குனர் கிடைத்துவிட்டார் என்று பலரும் வியந்து பாராட்டியிருந்தார்கள். எனக்கும் அமீர் மீது ‘மௌனம் பேசியதே’யிலிருந்தே பிடிப்பு அதிகம்.

ஆனால், அகடமி விருது (ஒஸ்கார்) வென்ற ‘ஷோட்சி’ என்கிற தென்னாபிரிக்க படம் குறித்து இயக்குனர் அமீருக்கு தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வியை ‘யோகி’ ஏற்படுத்தி சென்றுள்ளது. தமிழ் சினிமா குறித்து அதிகம் கவலை கொள்கிற அமீர் ஏன் இந்த தவறை செய்தார்.

யோகி படத்தின் விமர்சனம் இலங்கை தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. (என்ன கொடுமையென்றால், அந்த அறிவிப்பாளர் அவருக்கு வரமறுக்கிற இந்திய பாணியில் வலிந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்) சில காட்சிகளை பார்த்ததும் இது கொஞ்சம் வேறுமாதிரியா இருக்கே என்று மனதில்பட்டது.

அதற்கு பின்னால், ‘யோகி’ இறுதி காட்சிகளை தவிர அப்படியே ‘ஷோட்சி’யின் மறு தயாரிப்பு என்று அறியக்கிடைத்தது. சரி ஷோட்சியை பார்ப்போம் என்று தேடியதில் சில தினங்களுக்கு முன்னர் பார்க்க கிடைத்தது. நான் பார்த்த யோகியின் சில காட்சிகள் அப்படியே ஷோட்சியில் இருந்து திருடப்பட்டிருக்கின்றன.

ஏன் அமீரும், இயக்குனர் சுப்ரமணிய சிவாவும் இந்த நிலைக்கு சென்றார்கள் என்று அவர்கள் மீது ஆத்திரமும், கோபமுமே எஞ்சி நிற்கிறது. யோகியை வெளிநாட்டு திரைப்பட விழாவுக்கு பரிந்துரைத்த சுஹாசினி மணிரத்னம் மீதும் எரிச்சல் வருகிறது. தமிழ்சினிமாவை திறம்பட விமர்சிக்கிறவர்கள் பட்டியலில் சுஹாசினி மணிரத்னத்துக்கும் இடமுண்டு.

ஆனாலும், இவர்கள் எல்லாம் சேர்ந்து ஏன் இந்த தவறை விட்டார்கள் என்று கேட்க வைக்கிறது ‘யோகி’. சத்தியமாக இன்னொரு ‘யோகி’ தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்தியச் சினிமாவுக்கே வேண்டாம். திருட்டு எங்கு நடந்தாலும், அதை யார் செய்தாலும் தப்புத்தானே!.

இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை! முடியவும் இல்லை!!


(‘ஞாயிறு தினக்குரல்’ பத்திரிகையில் 2010 ஜனவரி 10ஆம் திகதி அரசியல் களரி பக்கத்தில் என்னுடைய இந்த கட்டுரை பிரசுரமாகியது.)

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் என்றும் மறக்க முடியாதவர்களில் பகத் சிங் முக்கியமானவர். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிப்போராட்டங்களில் சிறிது காலம் பயணப்பட்டு, நாட்டின் விடுதலைக்கு ஆயுத போராட்டமே சிறந்தது என்று தன்னுடைய 19 வயதில் தீர்மானித்து அதற்குள் தன்னை புகுத்திக்கொண்ட இளம் சிங்கம்.

பிரித்தானிய ஆட்சியாளர்களாலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அஹிம்சை வாதிகளினாலும் உற்றுநோக்கப்பட்டவர். தன்னுடைய 24 வயதுக்குள்ளேயே வாழ்க்கையை நாட்டுக்காக முடித்துக்கொண்டவர். அவரே, “இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை. முடியவும் இல்லை” என்று தன்னுடைய நண்பர்களிடம் கூறினார்.

பகத் சிங்கின் இந்த கூற்று ஆயுத போராட்டத்துக்கு மட்டுமல்ல, அஹிம்சை வழியிலான போராட்டங்களுக்கும் பொருந்தும். ஓவ்வொரு தனி மனிதனும், சமூகமும், இனமும் ஏன் முழு உலகமுமே போராடிக்கொண்டு தான் இருக்கிறன. என்ன அவரவரின் தேவைகளும், நோக்கங்களுமே வேறுபடுகின்றன.

இலங்கையில் சுமார் முப்பது வருடங்களாக நடைபெற்று வந்த ஆயுத வழியிலான போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. (அப்படித்தானே கூறப்படுகிறது) இந்த நிலையில், இலங்கை தமிழர்கள் என்னென்ன காரணங்களை முன்வைத்து போராட்டங்களை ஆரம்பித்தார்களே அந்த காரணங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியா என்ற பெரிய நாட்டை உருவாக்கிய பிரித்தானியாவே, இலங்கை என்ற நாட்டையும் உருவாக்கியது. தன்னுடைய காலணித்துவ ஆட்டிசிக்காலத்தில் நிர்வாக கட்டமைப்பை உறுதி செய்யவே பல்வேறு ஆட்சியாளர்களை கொண்டிருந்த இந்துஸ்தானத்தை இந்தியாவாக்கினார். அதுவே, இலங்கையிலும் நடந்தது.

அதுவரை பக்கத்து ஆட்சியாளர்களிடம் மோதிக்கொண்டிருந்த மன்னர்களுக்கும், குறுநில அரசர்களுக்கும், மேற்கு மெஹலாயர்களுக்கும், கிழக்கு வங்காளிகளுக்கும், வடக்கு ஆரியனுக்கும், தெற்கு திராவிடனுக்கும் ‘பிரித்தானிய ஆட்சியாளர்கள்’ பொது எதிரியாயினர்.

அதனால், தங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை மறந்து விட்டு போராட்டங்களுக்குள் தங்களை இந்தியனாக உருமாற்றி புகுந்து கொண்டனர். அதுவே, ஈழத்திலும் சாத்தியமானது.

கண்டி சிங்களவனும், கரையோர சிங்களவனும், வடக்கு தமிழனும், கிழக்கு இஸ்லாமிய தமிழனும், கொழும்பு தமிழனும் ஏன் மலே சகோதரனும் தங்களை ஒரு தாய் மக்களாக நினைத்து ஒன்றினைந்து பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போரிட்டனர். ஆனால். இந்தியாவிலும், இலங்கையிலும் இன்றைய நிலை என்ன?

இலங்கையில் தமிழர்களும் (இங்கு இஸ்லாமியர்களும் உள்ளடக்கப்படுகிறார்கள்), இந்தியாவில் அசாம், மேஹாலயா, அருணாச்சல் பிரதேசம், காஸ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களிலுள்ள மக்களும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது உரிமைகள் வேண்டி போராடுகின்றனர்.

இலங்கைத் தமிழர்கள் சந்தித்த கொடுமைகளையும், ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளையும் இந்திய எல்லையோர மாறில மக்கள் அதுவும், காஸ்மீர், அசாம், அருணாச்சல் பிரதேச மக்கள் தினம் தினம் அனுபவிக்கிறார்கள். ஆனால், இலங்கை தமிழர்களின் போராட்டங்கள் உலகளவில் உற்று நோக்கப்பட்ட அளவுக்கு அவை பார்க்கப்படவில்லை என்பதே உண்மை.

ஜனநாயக மறுப்புக்களும், மனித உரிமை மீறல்களும் இந்த பிரதேசங்களில் தொடர்கின்றன. ‘பயங்கரவாத தடைச் சட்டத்தினால்’ இலங்கை சிறுபான்மை மக்கள் எவ்வளவு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனரோ, அதைவிட இந்திய எல்லையோர மாநில மக்கள் பயங்கர இராணுவ சட்டங்களை தினம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இலங்கையில் இராணுவ குற்றங்கள் மக்கள் மீது எவ்வாறு நீண்டு சென்றுள்ளதோ, அதுபோலவே இந்திய சிறுபான்மை சமூகங்கள் மீதும் அவ்வப்போது பாய்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? நாட்டின் ஆட்சியாளர்களாக இருக்கின்ற பெரும்பான்மையினர், சிறுபான்மையினரின் உரிமைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளமையே.

இந்த புரிந்து கொள்ளாமை, நூறு வருடங்களல்ல ஆயிரம் வருடங்களானாலும் தொடரப்போகிறது. சின்ன உதாரணமொன்று வடக்கில் தங்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்களை அவர்களின் பாராம்பரிய நிலங்களிலிருந்து விரட்டவில்லையா? இதுவெல்லாம் மறக்கவும், மன்னிக்கவும் முடியாதவை.

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்கு தங்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு அவ்வப்போது வழிகள் பிறக்கின்றன. அதில், தேர்தல்கள் முக்கியமானவை. அவ்வாறானதொரு நிலையை எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பெறுகின்றனர்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது பெரும்பான்மையின வேட்பாளரே. ஆனால், அந்த வெற்றியை தீர்மானிக்க போவது என்னவோ சிறுபான்மையினரே. இவ்வாறானதொரு நிலைமை காணப்படுவதாலேயே ஜனாதிபதி வேட்பாளர்கள் சிறுபான்மை சமூகங்களை நோக்கி தங்களுடைய வாக்குறுதிகளை சரமாரியாக வீசி வருகின்றனர்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை சமூகம் தங்களுடைய உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகவேனும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியான முறையில் பயன்படுத்தினால் மறுக்கப்படுகின்ற உரிமைகளை பெறுவதற்கு வழிகள் உண்டு.

அதை விடுத்து ஒட்டுமொத்தமாக தங்களுக்கு அதிகாரத்தையும், உரிமைகளையும் பெரும்பான்மை சமூகம் வழங்குமென்று காத்திருப்பது வெற்றுக் கனவே. இந்த நிலை, எங்கெல்லாம் தங்களின் உரிமைகளுக்காக போராடுகின்றார்களோ அங்கெல்லாம் பொருத்தி பார்க்கலாம். அதுதான், ‘இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை! முடியவும் இல்லை!!’ புரிந்து கொண்டால் சரி.