எனக்கும், எம்மவர்க்கும் வலிகளை வடுக்களாக பதித்த டிசம்பர் மாதம்.
Posted On Wednesday, December 30, 2009 at at 9:55 AM by மருதமூரான்.என்னுடைய வாழ்விலும், எம்மவர்களின் வாழ்விலும் கடந்த பத்து வருடங்களின் இந்த டிசம்பர் மாதம் வலிகளை வடுக்களாக பதித்து சென்றிருக்கிறது. அதுவும், டிசம்பர் 25 மற்றும் பின்னரான 6 நாட்கள் என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவங்களை தந்திருக்கின்றன.
அதில், பல சம்பவங்கள் மனதை உலுக்குபவை உருக்குபவை, ஒரு சில சம்பவங்களை எம்மை பாதுகாத்தவை. அந்த நிகழ்வுகள் குறித்தே இந்த அனுபவ கட்டுரையை இரண்டு பகுதிகளாக எழுதுகிறேன். இதுவே இந்த வருடத்தின் இறுதி பதிவாகவும் அமைந்துவிடும். இதில், குறிப்பிட்டுள்ள விடயங்கள் அனைத்தும் என்னுடைய குறுகிய வாழ்க்கை பயணத்தில் நான் நேரடியாக அனுபவித்தவையே.
1999ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி: யாழ்ப்பாணத்தின் மருதங்கேணி, நல்ல மழைத்தூறலுள்ள நாள். நானும், என்னுடைய தம்பியும் அப்பாவுடன் எங்களுடைய வளவுக்கு (எம்முடைய வீடு 1996ஆம் ஆண்டு காலத்தில் இராணுவத்தினரால் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. அந்த வளவுக்கு) தென்னை மரங்களை வைப்பதற்காக சென்றோம்.
தம்பியும் நானும் தேங்கியிருந்த தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அப்போது இராணுவத்தினரின் ஆறு, ஏழு யுத்த டாங்கிகள் வீதி வழியே வெற்றிலைக்கேணியை நோக்கி விரைகின்றன. எங்களுக்கு அது புதிதாக தெரியவில்லை. வழமையாக இராணுவ வாகனங்கள் அவ்வழி செல்வது வழக்கமே.
ஆனாலும், சிறிது நேரத்துக்குள்ளேயே உடுத்துறை, வத்திராயன் கிராம மக்கள் மூட்டை முடிச்சுக்களுடன் எங்களுடைய கிராமத்தையும் தாண்டி விரைகின்றனர். அப்போதே ஏதோ விபரீதம் நிகழ்கிறது என்று எங்களுக்கு விளங்குகிறது.
வீதியால் சென்றவர் ஒருவர் அப்பாவிடம் சொல்கிறார் “வெற்றிலைக்கேணி ஆமிக்காம்பை பெடியள் அடிச்சிட்டு, ஆழியவளையை தாண்டி வந்திட்டாங்கள்…. வாற வேகத்தை பார்த்தால் இங்கயும் வந்திடுவாங்கள் போல கிடக்குது” என்று.
இந்த தகவலை அறிந்து கொண்ட நாங்கள் அம்மாவையும், தங்கையையும் கூட்டிக்கொண்டு சில சாமான்களுடன் எமக்கு விதிக்கப்பட்ட அகதி அந்தஸ்துக்குள் மீண்டும் நுழைகிறோம். அகதியாக சென்று எமது கிராமத்தை அடுத்த தாளையடியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் 150 குடும்பங்களுக்குள் நாங்களும் ஒரு குடும்பமாக தஞ்சம் புகுகிறோம்.
அகதிகளாகிய அடுத்த நாள் (அதாவது டிசம்பர் 28) இரவு 8.45 மணியிருக்கும் தேவாலயத்தை சுத்தி இராணுவத்தினரின் யுத்த டாங்கிகள் தரித்து நிற்கின்றன. கடல் வழியே வந்த விடுதலைப் புலிகளின் யுத்த படகுகள் யுத்த டாங்கிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றனர்.
இரு தரப்பும் சரமாரியாக வேட்டுக்களையும், எறிகணைகளையும் தீர்க்கின்றன. நாங்கள் படுத்திருந்த பகுதியை சுற்றிலும் வெடியோசைகளும், சன்னங்களின் ஒளிக்கீற்றுக்களுமே சுமார் இரண்டு மணி நேரத்துக்கு தொடர்கிறது.
மோதல்களுக்குமிடையில் சிக்கிய சுமார் 600 பேரும் உயிருடன் விடுபடுவோம் என்று அப்போது நினைக்க முடியவில்லை. எனக்கு அருகில் படுத்திருந்த தாத்தா ஒருவரின் தோள் பட்டையை எறிகணையின் சன்னமொன்று துளைத்து சென்றது. அவருக்கு அது தெரிந்திருக்கவில்லை. இரத்தம் வெளியேறிய சிறுது நேரத்தில் அருகிலிருந்தவர் கூறிய பின்னரே அவருக்கே காயமேற்பட்டது தெரியும்.
குறித்த மோதல்கள் இன்னும் சில மணிகள் தொடர்ந்திருந்தால் 600 பேரில் அதிகளவானோர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். (இவர்களின் சுமார் 150 பேருக்கும் அதிகமானோர் பின்னரான சுனாமி மற்றும் இறுதிக்கட்ட மோதல்களில் உயிரிழந்து விட்டனர்)
டிசம்பர் 29ஆம் திகதி காலை குறித்த தேவாலயத்தை விட்டு வெளியேறிய மக்கள் மருதங்கேணி வைத்தியசாலையில் தஞ்சம் புகுந்தனர். அங்கிருந்தும் மக்கள் வெளியேற விரும்பிய போதிலும் இராணுவத்தினர் அதற்கு அனுமதி மறுத்தனர். அந்த சமயத்தில் உடுத்துறையை தாண்டி விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணி வத்திராயன் பகுதிக்குள் நுழைந்து விட்டிருந்தது.
வெற்றிவைக்கேணியில் தாக்குதலை எதிர்பார்த்திராத இராணுவத்தினர் பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேர்திருந்தது. இதனால், மக்களை தொடர்ந்தும் தங்க வைப்பது சாத்தியமில்லை என்று கருதிய இராணுவம் இரண்டு நாட்களின் பின்னர் அதாவது டிசம்பர் 31ஆம் திகதி, செம்பியன்பற்றுக்கு செல்ல மக்களை அனுமதித்தது.
உலகமே மிலேனியம் நூற்றாண்டை கோலாகலங்களுடனும், ஆர்ப்பரிப்புக்களுடனும் எதிர்பார்த்திருக்க எம்மவர்கள் சைக்கிள்களில் சில மூட்டைகளுடன் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி தாய்மார் என்று வேறுபாடின்றி அகதிகளாக சென்றுகொண்டிருந்தோம்…! என்னுடைய 14 வயதில் சந்தித்த இந்த அனுபவத்தை என்னால் எப்படி மறக்க முடியும்?.
இந்த அகதி வாழ்க்கையே என்னையும், என் குடும்பத்தையும் சுனாமி தாக்கத்திலிருந்து காப்பாற்றியது. ஆனால், ஆயிரமாயிரம் உறவுகளை பலிவாங்கியது. அது தொடர்பிலான அனுபவ மற்றும் துயரப்பதிவு நாளை……!
பா (Paa) : ஏன் நல்ல சினிமாக்கள் அதிகம் வருவதில்லை.
Posted On Monday, December 21, 2009 at at 10:21 AM by மருதமூரான்.எப்போதாவதுதான் நல்ல புத்தகங்களை வாசிக்க கிடைக்கிறது. அதுபோல நல்ல சினிமாக்களையும் எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. பெர்லின் இரவுகள், ஸீரோ டிகிரி உள்ளிட்ட நல்ல (எனக்கு) புத்தகங்களை குறுகிய காலத்துக்குள் வாசித்திருக்கிறேன்.
சினிமாவின் மீது அதிக ஆர்வமுள்ள எனக்கு அதிகம் நல்ல படங்களை பார்க்க முடிவதில்லை. மொழி, பருத்திவீரன், தாரே ஷமின் பர், சக்தே இந்தியா, ஹப்பி டே, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் ஏப்போதாவது ஒருமுறைதான் இந்தியாவில் வெளிவருகின்றன. இது இந்திய சினிமாவின் சபாக்கேடு.
அமிதாப்பச்சன் மாறுபட்ட வேடத்தில் நடித்து வெளியாகியிருக்கும் ‘பா’ படத்தினை நண்பரொருவரின் பரிந்துரையினால் பார்த்தேன். இயக்குனர் ஆர்.பால்கி, பி.சி.சிறிராம், இளையராஜா என்று ஏற்கனவே ‘சினிகம்’மில் புதிய கதைக்களத்துடன் வெற்றிபெற்ற குழுவே ‘பா’விலும் இணைந்திருக்கிறது.
ஆரோ (அமிதாப்) மரபணு மாற்றங்களை அளவுக்கு அதிகமாக வெளிக்கொணர்கிற Progeria என்ற நோயின் தாக்கத்துக்கு உள்ளான 12 வயது சிறுவன். அவனுடைய அம்மா வித்யா (வித்யா பாலன்) மகப்பேற்று மருத்துவர். வித்யாவின் அம்மாவும் (அருந்ததி நாக்) இவர்களுடன் வசிக்கிறார்.
ஆரோ கல்வி கற்கும் பள்ளியின் பரிசளிப்பு விழாவுக்கு மக்களிடையே அதிகம் பிலபலமான இளம் பாராளுமன்ற உறுப்பினர் அமொல் அற்ரே (அபிஷேக்பச்சன்) சிறப்பு அதிதியாக வருகிறார். குறித்த விழாவில் முதல் பரிசுக்காக ஆரோவை மேடைக்கு அழைக்கும் அமொல் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். 12 வயதுச் சிறுவனான ஆரோ, 70 வயது முதியவருக்குரிய உடல் தோற்றத்தில் இருக்கிறான்.
இந்த விழாவை செய்தியாக்க வந்திருந்த ஊடகங்கள் ஆரோவை அன்றைய செய்தியின் முக்கிய அங்கமாக்குகின்றன. அடுத்த நாள் காலை பள்ளிக்கு செல்லும் ஆரோவைத் தேடி ஊடகங்கள் பள்ளி வாசலில் தவம் கிடக்கின்றன. இதனால், எரிச்சலுக்கு உள்ளாகும் ஆரோ, அரசியல் தலைவர் அமொலுக்கு ‘உங்களை எனக்கு பிடிக்கவில்லை’ என்று தெரிவித்து மின்னஞ்சல் அனுப்புகிறான்.
இந்த நிகழ்வுகளுக்கு பின்னராக காட்சிகளில் ஆரோ யார்? வித்யாவுக்கும், அமொலுக்கும் என்ன தொடர்பு? ஆரோவின் நிலை என்ன? என்று அழகான கவிதைiயாக ஆங்காங்கே நக்கலும், உணர்ச்சிகளும் சேர்த்து முடிவெழுதியிருக்கிறார் இயக்குனர் ‘ஆர்.பால்கி’ என்கிற பாலகிருஷ்ணன்.
படத்தில் முதல் ஆளுமை அபிதாப்பச்சன். 12 வயது சிறுவனுக்குரிய குணாதிசயங்களுடன் அச்சு அசலாக பொருந்துகிறார். படத்தின் போக்கில் எங்களை ‘ஆரோ’ என்கிற சிறுவனானவே ஒரு சில இடங்களைத் தவிர அமிதாப் ஒன்றிக்க வைக்கிறார். தன்னுடைய பள்ளி தோழர்களுடனான உள்ளாட்களிலும், தாய், பாட்டியுடனான பாசம், கோபம் என்கிற உணர்ச்சிகளின் போதும் மனதைக் கவர்கிறார். ஆனால், அவருடைய ‘மேக்அப்’பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று ‘குளோஸ் அப்’ காட்சிகள் உணர்த்துகின்றன.
அமிதாப்பின் அம்மாவாக படத்தில் வாழ்ந்திருக்கிறார் வித்யா பாலன். ரேவதி, சுஹாசினி போன்றோருடன் வித்யா பாலனை எந்தவித கேள்விகளுமின்றி ஒப்பிட்டு பேச ‘பா’ உதவும். ஒரு தாயுக்குரிய அரவணைப்பையும், மருத்துவருக்குரிய மனத்தினையும் படம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மாதவன் நடித்து சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரண்’ படத்தில் முதலில் வித்யா பாலனே நடிப்பதாக இருந்ததாம். ஆனாலும், அவரின் நடிப்பிலும், முகப்பொலிவிலும் திருப்தியுறாத இயக்குனர் லிங்குசாமி அவரை நீக்கியதாக தெரிகிறது. தமிழ் இயக்குனர்கள் நிராகரித்த ஹேமமாலினியும், வித்யா பாலனும் இந்தியச் சினிமாவின் மறுக்கமுடியாத நாயகிகள்.
இளம் அரசியல்வாதியாக வரும் அபிஷேக்பச்சன் தன்னுடைய மிடுக்கான நடிப்பினால் கவர்கிறார். சில இடங்களில் மணிரத்தினத்தில் ‘குரு’வில் நடித்த அபிஷேக் வெளிப்படுகிறார். இந்திய அரசியலில் முக்கிய பாத்திரமேற்றிருக்கும் முன்னணி அரசியல் தலைவரொருவரின் தழுவலாகவே அபிஷேக்கின் பாத்திரப்படைப்பு அமைந்திருக்கிறது. ‘பா’வில் அபிதாப், வித்யா பாலனுக்கு முன்னால் அபிஷேக்கினால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.
‘பா’வின் மற்றுமொரு ஆளுமை ஒளிப்பதிவாளர் பி.சி.சிறிராம். ஆறு அடி உயரமுள்ள அபிதாப்பை ஓரளவு உயரம் குறைந்தவராக காட்டியதிலும், ‘மேக் அப்’பின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து காட்டியதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு பாடலிலேயே வித்யாவுக்கும், அமொலுக்கும் என்ன தொடர்பு? என்பதை அழகாக சொல்ல தன்னுடைய ஒளிப்பதிவினூடு, இயக்குனருக்கு உதவியிருக்கிறார் பி.சி.சிறிராம்.
படம் பார்க்கும் போது இசையமைப்பாளர் இளையராஜா மீது தார்மீக கோபம் வருவதை தடுக்க முடியவில்லை. சினிகம், பா என்று ஹிந்தி படங்களிலேயே இளையராஜா தன்னுடைய இசை ஆளுமையை தொடர்கிறார். ஏன் அண்மைக்காலத்தில் தமிழ் படங்களில் அவருடைய இசை பெரிய அளவில் பேசப்படவில்லை என்று கேள்வியை கேட்க வைக்கிறார்.
பின்னணி இசையிலும், பாடல்களின் இசைக்கோர்ப்பிலும் (ஏற்கனவே தமிழ் படங்களில் வந்த மெட்டுக்களையே ‘பா’வில் பயன்படுத்தியிருக்கிறார்) அசாத்திய திறமை காட்டியிருக்கிறார் இளையராஜா. ‘பிதாமகன்’ படத்திற்கு பின்னர் இளையராஜாவின் இசை ஆளுமை தமிழ் திரைப்படங்களில் வெளிவரவில்லை என்பது என்னுடைய வருத்தம்.
‘பா’வை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.பால்கி, தன்னுடைய திறமையை எந்தவித பிசிறுமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார். ‘சினிகம்’மில் முதியவருக்கும், யுவதிக்குமிடையிலான காதலை எந்தவித முரண்பாடுகளுமின்றி படமாக்கிய அவரின் ஆளுமை ‘பா’விலும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் பிறந்த இயக்குனர் பால்கி ஏன் தமிழ் படங்கள் எடுப்பதில்லை என்பதற்கு ‘பா’வும் ஒரு உதாரணம்.
திரைக்கதை அமைப்பாக இருந்தாலும் சரி, இந்திய அரசியல் குறித்து வசனங்களில் தெறிக்கிற நக்கல் நையாண்டியிலும் சரி இயக்குனர் பால்கி அசத்துகிறார். ‘ஆரோ’ என்கிற சிறுவன் மீது எவருக்கும் கழிவிரக்கம் ஏற்பட்டுவிடாமல் பாத்திரத்தினை வடிவமைத்ததிலும் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.
‘பா’ பார்த்து முடித்ததும் என்னுடைய மனதில் எழுந்த கேள்வி, ஏன் நல்ல சினிமாக்கள் அதிகம் வருவதில்லை? என்பதே.
வேட்டைக்காரன்: விஜயின் தோல்விகளின் நீட்சி?
Posted On Friday, December 18, 2009 at at 12:00 PM by மருதமூரான்.“நேர்மையான பொலிஸ் அதிகாரியாக வர விரும்பும் மாணவன், கால ஓட்டத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் அழிக்கும் வேட்டைக்காரன் ஆவதே” அறிமுக இயக்குனர் பாபு சிவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியிருக்கும் ‘வேட்டைக்காரன்’ படத்தின் கதைச் சுருக்கம்.
ஏ.வி.எம் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப்படத்தில் அனுஷ்கா, சலீம் கோஸ், ஷியாகி ஷின்டே, சிறிநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கோபிநாத் கையாண்டுள்ளார். கலை இயக்கத்தை மிலனும், படத்தொகுப்பை வி.ரி.விஜயனும் செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் நண்பர்களுடன் சுற்றிக்கொண்டும், சமூகத்தில் நடக்கிற தவறுகளை தட்டிக்கேட்டும் வருகிற ரவிக்கு (விஜய்) நேர்மையான பொலிஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசை. அந்த ஆசைக்கு தூண்டுகோலாய் இருந்தவர் பொலிஸ் அதிகாரி தேவராஜ்.
தூத்துக்குடியிலிருந்து கல்லூரி கல்விக்காக சென்னை வரும் ரவி, வரும் வழியில் சுசிலாவைச் (அனுஷ்கா) சந்திக்கிறார். அதன் பின்னர் ரவிக்கும், சுசிலாவுக்கும் காதல் வரவேண்டும் என்பது இந்தியச் சினிமாவின் எழுதப்படாத விதி. அதுவே வேட்டைக்காரனிலும் தொடர்கிறது.
கல்லூரியில் சேர்ந்து படித்துக்கொண்டு, தன்னுடைய வருமானத்திற்காக ஆட்டோவும் ஓட்டுகிறார் ரவி. இவ்வாறாக கதையின் நீட்சி வில்லன் குழுவின் செல்லாவை சந்திக்க வைக்கிறது. பின்னரான கதை ஓட்டத்தில் ரவி பொலிஸ் ஆனாரா? வில்லன்கள் எவ்வாறு பழிவாங்கப்பட்டார்கள்? ரவி, சுசிலாவை கைப்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
எத்தனை படத்தில் இதே கதை சொல்லியாகிவிட்டது என்ற உங்களின் ஏக்கம் புரிகிறது. என்ன செய்ய நாங்கள் பார்ப்பது இந்தியச் சினிமா. பருத்திவீரன், பா, சக்தே இந்தியா, மொழி போன்ற வித்தியாச கதைக்களங்களைக் கொண்ட படங்கள் எப்போதாவது ஒருமுறைதான் வரும். நாங்களும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கல்லூரி மாணவராக வரும் விஜய் படம் முழுவதிலும் வில்லன்களைப் பந்தாடுகிறார். அனுஷ்காவுடன் நடனமாடுகிறார். ஆங்காங்கே தன்னுடைய அரசியல் ஆசையை வசனங்களின் மூலம் வெளிக்காட்டுகிறார். என்ன வயது ஆனாலும், பதின்ம வயதை தாண்டிய தோற்றத்திலேயே இருக்கிறார். மற்றப்படி விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
‘இரண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அனுஷ்கா சிறிய இடைவெளிக்கு பின்னர் வேட்டைக்காரனில் மீள் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் வழமைக்கு மாறாக சற்று உயரமான கதாநாயகி.
‘தேவநாயகம்’ என்கிற பெயரில் தொழில் அதிபர், தாதா இன்னும் பிற.....வாக வரும் சலீம் கோஸ் நல்ல பொருத்தம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் திரையுலகில் அவரை காண முடிகிறது. ஷியாகி ஷின்டே, சிறிநாத், சத்யன், டெல்லி கணேஸ் என்று படத்தில் அனேக நடிகர்கள். இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
வேட்டைக்காரனின் பலங்களில் ஒளிப்பதிவையும், கலை இயக்கத்தையும் குறிப்பிட்டு சொல்லலாம். பாடல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் ஒளிப்பதிவின் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார் கோபிநாத். ‘பில்லா’ படத்தில் கலை இயக்கத்தில் ஆடம்பரம் காட்டிய மிலன் இந்தப் படத்திலும் தன்னை நிரூபிக்க முயன்றுள்ளார்.
சண்டைக்காட்சிகள் குருவி, ஆதவன் என்று ஏற்கனவே எம்மை எரிச்சலூட்சிய யதார்த்த மீறல்கள் கொண்ட காட்சிகளின் தொடர்ச்சியே வேட்டைக்காரனிலும். படத்தின் பலமுமு;, பலவீனமும் விஜய் ஆண்டனி. பாடல்களில் சில ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதால் இரசிகர்களை திரையரங்குக்கு அழைத்துவர உதவும். ஆனால், பின்னணி இசை சொல்லும்படியில்லை.
இயக்குனர் தரணி படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய பாபு சிவனை இரசிகர்கள் வெற்றி இயக்குனராக்குவது கேள்விக்குறியே. வேட்டைக்காரனின் கதை, திரைக்கதை ஏற்கனவே பழக்கப்பட்டது. வசனங்களில் வசனகர்த்தா பாபு சிவனை காண முடிகிறது.
குருவி, வில்லு என்று தொடர்ச்சியான சரிவுகளில் இருக்கும் விஜய்க்கு ‘வேட்டைக்காரன்’ அதே வலியை தரமாட்டான் என்று நம்பலாம். அதற்கு சன் பிக்ஸர்சின் விளம்பர உத்தி உதவக்கூடும். ஆனாலும், தமிழ் சினிமாவின் வசூல் ராஜாவாக வலம் வந்த விஜய்க்கு வேட்டைக்காரனும் பெரிதாக கைகொடுக்கவில்லை.
‘மன்னர்’ கனவை விட்டு ‘மந்திரி’ கனவுக்குள் எஸ்.பி.திஸ்ஸநாயக்க.
Posted On Wednesday, December 9, 2009 at at 10:31 AM by மருதமூரான்.இலங்கையின் ஜனாதிபதியாக வந்திருக்க வேண்டியவர். அதிகாரங்கள் அற்ற நிலையிலும் மக்கள் ஆதரவைக் கொண்டவர். குடியுரிமையை பறிகொடுத்து, மீளப் பெற்றவர். ஊழல் வழக்குகளில் சிக்கியவர். 1979இல் கம்யுனிஸ்ட் கட்சியினூடு தன்னுடைய அரசியல் வாழ்வை ஆரம்பித்தவர். இலங்கையின் இரு பெரும் கட்சிகளில் அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர். இவ்வாறு பல அறிமுகங்களை கொண்டவர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க.
இலங்கையின் நிகழ்கால அரசியல் சதுரங்கத்தில் இரண்டாவதாக இடம் மாறியிருக்கும் முக்கிய நபர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க. முதலாமவர் ஆளுங்கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்ட விஜயதாஸ ராஜபக்ஷ. இந்த கட்டுரையில் எஸ்.பி.திஸ்ஸநாயக்கவின் நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியலை ஆராய்வதே. எனவே, அவருடைய ஆரம்ப கால அரசியல் குறித்து அதிகளவில் இங்கு ஆராயப்படமாட்டது.
இலங்கை அரசியல் போக்கினை நான் கவனிக்க ஆரம்பித்து பத்து, பன்னிரண்டு வருடங்கள்தான் ஆகின்றன. இந்தக் காலப்பகுதியில் எஸ்.பி.திஸ்ஸநாயக்க அதிகாரமும், ஆளுமையும் மிக்க தலைவராகவே கருதப்பட்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உயரக்கூடிய நிலையில் இருந்த அவர், 1999-2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி சந்திரிக்கா குமரணதுங்கவுடனான முறுகல் நிலையை அடுத்து அந்த நிலையை பறிகொடுத்துவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.
1999ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்க குமரணதுங்காவை வெற்றிபெற வைத்தில் எஸ்.பி.திஸ்ஸநாயக்காவின் பங்கு அதிகம். ஆனாலும், அதன் பின்னராக காலப்பகுதி அவரை வேறு பாதைகைளுக்கு இட்டுச் சென்று ஊழல் வழங்குகளை சந்திக்க வைத்தது. பின்னராக காலப்பகுதியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்து சிறை சென்றதுடன், குடியுரிமையையும் இழக்க நேரிட்டது. இதன் போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஓரளவு ஆதரவுத் தளத்தினை அவர் கொண்டிருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்பையடுத்து 2006இன் முற்பகுதியில் சிறையிலிருந்து வெளிவந்த எஸ்.பி.திஸ்ஸநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நிலைக்கு வந்தார். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எஸ்பி.திஸ்ஸநாயக்காவும் ஓரளவு அதிகாரத்தையும், ஆதரவையும் கொண்டிருந்தார். இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்கவில்லை. இதனை ரணில் விக்கிரமசிங்க அனுமதிக்கவும் இல்லை. இதற்கு பல காரணங்களை பட்டியலிடலாம்.
ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட எஸ்.பி.திஸ்ஸநாயக்க தொடர்ந்து ஆர்வம் காட்டியமை. ரணில் இருக்கும் பொது மேடைகளிலேயே அவர் இதனை வெளிப்படையாக கூறி வந்தார். இதனை ரணிலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் நீட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட அல்லது தந்திரமாக நிக்கப்பட்ட எஸ்பி.திஸ்ஸநாயக்க மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்காக போட்டிட்டார். இது எஸ்.பி.திஸ்ஸநாயக்கவினால் விரும்பி பெறப்பட்டதாக காட்டப்பட்டாலும், அதற்கும் அவர் போராட வேண்டியிருந்தது.
முப்பது வருடங்கள் நீடித்த விடுதலைப் புலிகளுடனான மோதலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு முடிவுக்கு கொண்டுவந்ததனை அடுத்து. மக்கள் அலை மஹிந்த பக்கம் அதிகமானவே வீச ஆரம்பித்தது. இந்த தருணத்தை சரியாக பாவித்து ஜனாதிபதி தேர்தலை நடத்தி தனது பதவிக்காலத்தை நீட்டிக்கொள்ள விரும்பினார் மஹிந்த ராஜபக்ஷ.
இந்த தருணத்தை எதிர்பார்த்திருந்த எஸ்.பி.திஸ்ஸநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு தனக்கே அதிக வாய்ப்புள்ளதாக கருதினார். ரணில் போட்டியிட விரும்பினாலும், அவரால் வெற்றி பெற முடியாது என்பது அவருக்கே தெரிந்த உண்மை. மற்றுமொரு முக்கிய நபரான சஜித் பிரேமதாஸவும் இந்த தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், தேர்தலில் போட்டியிட தனக்கே அதிக வாய்ப்புள்ளதாக எஸ்.பி.திஸ்ஸநாயக்க கருதினார்.
ஆனால், மஹிந்த சகோதரர்கள்- முன்னாள் முப்படைகளின் கட்டளை அதிகாரி ஜெனரல் சரத் பொன்பேசகாவிற்கிடையிலான மனதாங்கல்களை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஜே.வி.பி.யும், ஐக்கிய தேசியக் கட்சியும் அவரையே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதான பொது வேட்பாளராக அறிவித்தது. இதனால், மஹிந்தவின் வெற்றி வாய்ப்பை பரிசோதிக்கவும் ஜே.வி.பிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தருணம் அமைந்தது. இதனால், அதிகம் பாதிக்கப்பட்டவர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க.
தன்னுடைய ‘ஜனாதிபதிக் கனவு’ கலைந்து செல்வதை கண்ட எஸ்.பி.திஸ்ஸநாயக்காவுக்கு ‘பிரதம மந்திரி’ கனவு கண் முன்னே வந்தது. தன்னுடைய நெருங்கிய நண்பரும், ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த பதவிகளை கைவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்.
ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்றால் தொடரும் அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு ரட்ணசிறி விக்கிரமரட்ண நியமிக்கப்படமாட்டார். எனவே அந்தப் பதவியை கருத்தில் கொண்டு நேரம் பார்த்து அரசுடன் இணைந்துள்ளார். ஆனாலும், அவர் முன்னால் டி.எம்.ஜயரட்ண, மைத்திரிபால சிறிசேன என்ற பாரிய பாறைகள் இருப்பதை அவரால் உணரமுடியாமல் இல்லை. ஆனாலும், கனவுக்கு எல்லையில்லையே.
1999 காலப்பகுதியில் இருந்த மக்கள் ஆதரவும், ஆளுமையும் எஸ்.பி.திஸ்ஸநாயக்கவிடம் தற்போது இல்லை. அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியில் பத்து வருடங்களாக இருந்து விட்டு திடீரென ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இணைந்து கொண்டவருக்கு பிரதமர் பதவி வழங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் உடன்பட மாட்டார்கள். இந்த நிலையில் எஸ்பி.திஸ்ஸநாயக்காவிற்கு ‘மந்திரி’ கனவே நினைவாக வாய்ப்புள்ளது.
‘ஐனாதிபதி கனவு’ கலைந்து விட்டதாக அண்மையில் அறிவித்த எஸ்.பி.திஸ்ஸநாயக்காவிற்கு, ‘பிரதம மந்திரி கனவு’ம் கனவாகவே இருக்கும். ஆக, ‘மந்திரிக் கனவு’ மெய்ப்படும். வேறு என்னத்தைச் சொல்ல…. “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே……….” கவிஞர் கண்ணதாசன் சொன்னது.
நான் அவன் இல்லை 2: பெரிதாக சாதிக்கவில்லை அவன்.
Posted On Wednesday, December 2, 2009 at at 6:38 PM by மருதமூரான்.“பிரிக்கப்பட்ட தாயையும், மகளையும் ஒன்றிணைப்பதற்காக வெளிநாட்டில் அதீத ஆசை மற்றும் ஆடம்பரங்களுடன் வாழும் நான்கு பெண்களை ஏமாற்றுகிறான், அண்ணாமலை” இதுவே ‘நான் அவன் இல்லை 2’ கதைச் சுருக்கம். கே.பாலசந்தரின் ‘நான் அவன் இல்லை’யை நடிகர் ஜீவனை வைத்து மீள்தயாரிப்பு செய்திருந்த, இயக்குனர் செல்வா அதன் நீட்சியாக கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் இது.
இந்தியாவின் 5 பெண்களை ஏமாற்றிவிட்டு ‘நான் அவன் இல்லை’ என்று கூறி தமிழ்நாட்டு காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் அலைச்சல் காட்டிவிட்டு தப்பிக்கும் அண்ணாமலை (ஜீவன்) ஐரோப்பிய நாடொண்றில் தஞ்சமடைகிறார். அவருடன் நண்பர் நெப்போலியனும் (மயில்சாமி). பணத்தாசை பிடித்த நடிகை தீபா (லட்சுமிராய்), ஆண்களின் சபலத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் ஷகி (ஷ்ருதி பிரகாஸ்), அடிமைபோல கணவனை தேடும் நிஷா (ஸ்வேதா மேனன்) மற்றும் திருட்டுத்தனம் புரியும் மரியா (ரஷானா மயூரா) ஆகியோரை விதம் விதமாக ஏமாற்றி பணம் சேர்க்கிறார்.
ஏமாற்றி சேர்க்கும் பணத்தை இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மஹாலக்மியின் (சங்கீதா) வைத்திய செலவுக்கும், அவரது மகளை பிரித்து பணம் கேட்பவர்களுக்கும் கொடுத்து தாயையும், மகளையும் ஒன்றுசேர்த்து விட்டு மீண்டும் ‘நான் அவன் இல்லை’ என்று கூறி பாதிரியார் வேடத்தில் தப்பித்து செல்கிறான் அண்ணாமலை. மீண்டும் இந்தியாவில் முருகன் என்கிற பெயரில் அண்ணாமலை தன்னுடைய ஏமாற்று படலத்தை ஆரம்பிப்பதுடன், ‘நான் அவன் இல்லை 2’ முடிகிறது. இதன் தொடர்ச்சிகள் எதிர்காலத்திலும் சாத்தியமே.
‘நான் அவன் இல்லை’ முதல் பாகத்தில் திரைக்கதையின் ஓட்டத்துக்கு பொருந்தியிருந்த நடிகர் ஜீவன், அதன் தொடர்ச்சியை இந்தப் படத்திலும் காட்டியிருக்கிறார். பெண்களை ஏமாற்றும் வாலிபனான அவரது தோற்றமும், உடல்மொழியும் வெகு இயல்பு. ஆனால், எதிர்காலத்திலும் இவ்வாறான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக்கொண்டால் மக்களுக்கு அலுத்துவிடும். இலங்கை பெண் மஹாலக்மியாக வரும் சங்கீதாவுக்கு பெரிய வேலையில்லை. இலங்கை தமிழை (அப்படித்தானே சொல்கிறார்கள் படத்தில்) கொச்சையாக பேசுகிறார். கிடைத்த சந்தப்பங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
லட்சுமிராய், ஷ்ருதி பிரகாஸ், ஸ்வேதா மேனன், மற்றும் ரஷானா மயூரா ஏமாற்றப்படும் பெண்களாக அதிக கவர்ச்சியை காட்டிச் சென்றிருக்கிறார்கள் படம் முழுவதிலும். இவர்களுக்கு நடிக்க சந்தர்ப்பங்கள் பெரிதாக இல்லை. அரைகுறை ஆடைகளுடன் இயக்குனர் கேட்டதை படத்தில் கொடுத்திருக்கிறார்கள். வேறு ஒன்றும் இவர்களை பற்றி கூறுவதற்கில்லை. அதே நெப்போலியன் பாத்திரத்தில் மயில்சாமி சிரிக்க வைக்கிறார். அண்மைக்காலத்தில் அவரை அனேக படங்களில் காணக்கிடைக்கிறது. இவர்கள் தவிர ராஜ்கபூர், பைவ்ஸ்டார் கிருஷ்னா உள்ளிட்ட சிலரும் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் ஓரளவு பலம் ஒளிப்பதிவு. வெளிநாடுகளின் (நடிகைகளினதும்) வனப்பு மிக்க பகுதிகளில் அழகாக படம்பிடித்திருக்கிறார். படத்தில் மிகப்பெரிய ஏரிச்சலை ஏற்படுத்துகிறது டி.இமானின் பாடல்களும், பின்னணி இசையும். இவர், எதிர்காலத்திலாவது பாடல்கள் என்ற போர்வையில் இரைச்சல்களை தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். படத்தின் வசனங்களில் பெரிய ஆச்சரியமில்லை. படத்தொகுப்பு இயக்குனரை திருப்திப்படுத்தியிருக்கிறது.
கே.பாலசந்தரின் ‘நான் அவன் இல்லை’யை அடிநாதமான வைத்து கதையையும், திரைக்கதையும் எழுதியிருக்கும் இயக்குனர் செல்வா, சில இடங்களில் சுவாரஸ்யங்களை வரவழைத்திருந்தாலும், பல இடங்களில் ஏமாற்றங்களையே தந்திருக்கிறார். ஆனாலும், அண்ணாமலை ஏமாற்றுவதற்கு ஒரு காரணத்தைச் சொல்லி நாயகனை நியாயப்படுத்த முனைந்திருக்கிறார்.
நேமிசந்த ஜபக், ஹிதேஸ் ஜபக் இணைந்து தயாரித்திருக்கும் 'நான் அவன் இல்லை 2’ 125 நிமிடங்கள் திரையில் ஓடுகிறது. ஆனால், பெரிதாக ஒன்றையும் சொல்லவில்லை. ரசிகனை திரையரங்குக்கு எதிர்பார்ப்புக்களுடன் அழைத்து ஏமாற்றியிருக்கிறான் அந்த அண்ணாமலை.





