அமைதியான சாதனைக்காரன் நான்: மஹெல ஜெயவர்த்தன.


ஆரம்பத்திலேயே ஆர்ப்பரிப்புக்களை ஏற்படுத்துகிற ஷங்கரும் மணிரத்னமும், ஆர்ப்பாட்டமே இல்லாமல் சாதிக்கிற அமீர், சசிகுமார் வகையறாக்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அதுபோலவே, அதிரடியாக அறிமுகமாகி அதிகமாக இரசிகர்களினால் எதிர்பார்க்கப்படுகிற தோனி, அஜந்த மெண்டிஸ்களும், ஆர்ப்பாட்டமே இல்லாமல் சாதிக்கிற ராகுல் ட்ராவிட், மஹெல ஜெயவர்த்தனக்கள் கிரிக்கட்டிலும் உண்டு.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இலங்கை- இந்திய கிரிக்கட் அணிகளுக்கு இடையில் 1997ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பித்த டெஸ்ட் கிரிக்கட் போட்டியை கிரிக்கட் ஆர்வலர்கள் யாரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். பல சாதனைகளை நிகழ்த்திய போட்டியது. 952 ஓட்டங்களைக் கடந்து, ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை எடுத்த உலக சாதனையை இலங்கை நிலைநாட்டியது இந்தப் போட்டியிலேயே.

இதே போட்டியில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான சாதனையாளன் மஹெல ஜெயவர்த்தன தன்னுடைய சர்வதேச கிரிக்கட் அறிமுகத்தை 20 வயதில் மேற்கொண்டான். முதல் போட்டியிலேயே 66 ஓட்டங்களைப் பெறுகிறான். ஆனாலும், அதே போட்டியில் சனத் ஜெயசூரியாவின் 340 ஓட்டங்கள் மற்றும் ரொஷான் மகாநமவின் 225 ஓட்டங்களுக்கு முன்னால் அது பெரியளவில் கண்டுகொள்ளப்படவில்லை.

இலங்கை டெஸ்ட் அணிக்குள் உள்வாங்கப்பட்ட சிறிய காலத்துக்குள்ளேயே ஒரு நாள் அணிக்குள்ளும் மஹெல ஜெயவர்த்தன தேர்வானார். 1999ஆம் ஆண்டு இலங்கை அணியின் துணைத்தலைவர் என்ற நிலைக்கும் அவர் உயர்ந்தார்.

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு பின்னர் சிறிது காலம் இலங்கை அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்த மஹெல ஜெயவர்த்தன, தன்னுடைய திறமைகளை நிரூபித்து மீண்டும் அணிக்குள் வந்தார். இக்காலத்தில் தன்னுடைய திறமைகளை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தி வந்த அவர், ஒருநாள் அணியிலும் நிரந்தார வீரரானார்.

இயல்பிலேயே அமைதியான சுபாவம் கொண்ட மஹெல ஜெயவர்த்தன மற்றைய நாட்டு வீரர்களாலும் இலகுவில் கவரப்பட்டார். மைதானத்தில் அனைவருடனும் நல்லுறவுடன் பழகிய மஹெல, 2003களுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விஸ்வரூபமெடுத்தார். அதுவரை சராசரியான ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தி வந்த அவர். அனைத்து அணிகளுக்கு எதிராகவும் திறமையான ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 2006ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் குமார் சங்ககாரவுடன் இணைந்து மூன்றாவது விக்கட்டுக்கான அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையைப் படைத்தார். அதே போட்டியில் 374 ஓட்டங்களை அவர் பெற்றார். இதுவே, ஒரு இன்னிஸில் அவரின் அதிகபட்ச ஓட்டமாகும். ஆறாவது விக்கட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பிரசன்ன ஜெயவர்த்தனவுடன் இணைந்து மஹெல ஜெயவர்த்தன படைத்தார். இதற்கு முன்னர் 72 வருடங்களாக பிரட்மனும், பிங்கில்டனும் இந்த சாதனையை தம் வசம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 108 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ள மஹெல ஜெயவர்த்தன 53 என்ற சராசரியுடன் 9,022 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 27 சதங்களும் அடங்கும். இலங்கை வீரரொருவர் 9000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்தமை இதுவே முதல்முறை.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது இந்திய அணிக்கு எதிராக அவர் துடுப்பாடிக்கொண்டிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அமைதியாகச் சாதனைகளை நிலைநாட்டிச் செல்லும் மஹெலவால் ஒருநாள் ஆட்டங்களில் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்பது உண்மையே. இதுவரை 310 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 32 என்ற சாரசரியுடன் 8,441 ஓட்டங்களையே பெற்றுள்ளார்.

எவ்வாறாயினும், அவரது டெஸ்ட் சாதனைகளால் இலங்கை கிரிக்கட் வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு வீரராகவே மஹேல இருக்கப்போகிறார். அமைதியான சாதனையாளர்தானே?

(இந்த மாத சிகரம் இதழுக்காக எழுதியது)

ரணில் என்கிற (அ)சாணக்கியன்: கால ஓட்டத்தில் ஒரு மீள்பதிவு.


இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டு தடவைகள் பிரதமராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, சிறந்த அரசியல் தலைவரா அல்லது இராஜதந்திரியா? என்ற கேள்வியை ஊடகவியல் மற்றும் அரசியலாய்வு நண்பர்களிடம் கேட்டேன். அதற்கு பலவிதமான பதில்கள் கிடைத்தன, பலவித விளக்கங்களுடன்.

இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்கவினுடைய பங்களிப்பு எழுபதுகளின் முற்பகுதியில் ஆரம்பமான போதும் 1989ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின் பின்னரே, அவரை அவர் சார்ந்த ஐக்கிய தேசிக் கட்சிக்குள் அதிகாரம் மிக்கவராக மாற்றியமைத்தது. அதன் பின்னர் இரண்டு தடவைகள் பிரதமராக இருந்துள்ளதுடன், எதிர்க் கட்சித் தலைவராகவும் பதவிவகித்து வருகின்றார்.

(1980களில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தில் இளைஞர் விவகார (இன்னும் சில) அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்தார். அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மண்டைதீவு உள்ளிட்ட தீவகப் பகுதிகளில் இடம்பெற்ற சில படுகொலைகளுடன் இவருக்கு தொடர்ப்பு இருந்தாக ஊடகங்களினாலும், புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் சிலரினாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது)

2001ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை அமைத்த போதும், அது பலமான அரசாக இருக்க முடியாமல் போனதற்கும், அந்த ஆட்சி அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமரதுங்காவால் கலைக்கப்பட்டதற்கும் ரணிலினுடைய வலுவில்லாத அரசியல் ஞானமும், தலைமைத்துவமுமே காரணமென சிலர் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் ரணிலினுடைய தற்போதைய அரசியல் நடவடிக்கைகளை 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியிலிருந்து பார்போம். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பெற்று அரசாங்கத்தை தனது முழுமையாக கட்டுப்பாட்டிற்கும் கீழ் வைத்துக்கொண்டுள்ள நிலையில்(சகோதர கம்பனிகளின் உதவியுடன்), பிரதான எதிர்க் கட்சித்தலைவராக ரணில் விக்கிரமசிங்க செய்ததென்ன என்று கேட்டுக்கொண்டால் சில சலசலப்புக்களும் பெரியதொரு மௌனமுமே பதிலாக மிஞ்சுகின்றன.

இலங்கையில் தற்போதுள்ள அரசியல் மற்றும் யுத்த களமுனை சூழ்நிலைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதிக்கத்தை பாரியளவில் செலுத்துகின்றார். ஆனால் மஹிந்த விட்ட பாரிய தவறுகளை சுட்டிக்காட்டி அல்லது மக்களிடன் கொண்டு சென்று, மாற்று அரசாங்கத்தையோ அல்லது அரசியல் மாற்றத்தினையோ? ரணிலினால் ஏற்படுத்தி விடமுடியாமல் போயுள்ளது.

கடந்த சில மாதங்களாக இலங்கையின் அரசியல் அரங்கில் மிகவும் மிகுதியான அளவில் அலசப்பட்ட விடயங்களாக, மஹிந்தவின் முன்னாள் வலது கரங்கள் மங்கள மற்றும் சிறிபதி சூரியாராச்சி ஆகியோர் வெளியிட்ட விடுதலைப் புலிகளுடனான ஜனாதிபதி தேர்தல் கால ஒப்பந்தம், மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியன இடம்பெறுகின்றன.

இந்த விடங்களை வைத்துக்கொண்டு பிரதான எதிர்க் கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க என்ன மாதிரியான செயல்திட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்றால், பதில் பெரிதாக ஏதுமில்லை என்பதாகவே அமையும். தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தெரியாமல் பதினேழு உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்த பெருமையும், அரசியல் ஞானமற்ற ரணிலின் செய்கைக்கு மற்றுமொரு சரியான உதாரணம்.

முப்பது வருடங்கள் அரசியல் அறிவுள்ளவர் என்று கூறிக்கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய சூழ்நிலையில் என்ன மாதிரியான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டுமோ, அதையெல்லாம் தவிர்த்து விட்டு அரசாங்கத்தை கேலி செய்ய முயன்று தோற்றுப்போயுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் மஹிந்த ஜனாதிபதி தேர்தல் கால ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக மஹிந்தவின் முன்னாள் வலதுகரங்களே ஆதரங்களுடன் கூறும் போது, ரணிலினால் அவற்றை மக்களிடம் பூரணமாக கொண்டு செல்லமுடியாமல் போயுள்ளது. அதற்கு பதிலாக மஹிந்த குடும்பிமலையில் பெற்ற வெற்றியைக் கொண்டு தனது அரசியல் ஞானத்தை மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளதுடன், ரணிலை அந்த விடயத்தில் முழுமையாக தோற்கடித்துள்ளார்.

மற்றைய விடயம் இலங்கையில் தற்போது தொடர்ந்து மீறப்பட்டு வரும் மனித உரிமை விடயங்கள் குறித்த ரணிலின் எதிர்ப்பு அல்லது கருத்து வெளிப்பாடுகள். இதை எடுத்துக்கொண்டால் ரணில் விக்கிரமசிங்க தனது வெள்ளைத்தோல் நண்பர்களிடம் முறையிட்டு(மேற்கத்தைய) ஓரளவு வெற்றி பெற்றுள்ளார் என்று கூறிக்கொண்டாலும், அது எந்த விதத்திலும் அவரது அரசியல் முன்னேற்றத்திற்கும், அரச எதிர்ப்பு பிரசாரத்திற்கும் பயன்படவில்லை என்பது உண்மை.

இலங்கையில் தற்போதுள்ள இந்த இரு முக்கிய விடயங்களை வைத்துக் கொண்டு பாரக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவை சிறந்த அரசியல் தலைவராக சிறுபிள்ளைகள் கூட ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே!!

அடுத்து ரணில் விக்கிரமசிங்க சிறந்த இராஜதந்திரியா, என்ற கேள்விக்கு பதில் தேடினோமெனில் சில சிறப்பு பெறுபேறுகளை அவர் பெற்றுக்கொண்டாலும், அதன் முழுமையான பலனை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வெட்டவெளிச்சம்.

உலக அரசியலில் ஆக்கிரமிப்பை செலுத்தி வருகின்ற அமெரிக்காவினதும், ஆசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்ற இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவில் ரணில் மிகுந்த பற்றுடன் செயற்படுகின்றார். எதிர்காலத்திலும் செயற்பட முனைவார்;. அதனால் அவர் என்ன பயனை பெற்றுவிடப் போகிறார் என்பது அவருக்கே தெரியாத ஒன்று.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள மஹிந்த எதிர்ப்பு மனோபாவம், ரணிலுடனான நெருக்கத்திற்கு ஒருகாரணமான தொடர்ந்தும் இருந்து வருகின்றது என்பது உண்மை. அதனை வைத்துக்கொண்டு சர்வதேச ரீதியில் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார். அதில் சிறிது வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்த எதிர்ப்பு பிரசாரங்களினால் அவரது இராஜதந்திர நடைமுறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அதனால் அவருக்கு எந்தமாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதில் அவர் தெளிவற்று செயற்படுகின்றார் அல்லது செயற்பட வைக்கப்படுகின்றார்(அவரது சகாக்களால்).

இலங்கையின் விடயத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் ரணில் விக்கிரமசிங்கவுடன் நட்பு பாராட்டுவது, அவர்கள் தமது ஆக்கிரமிப்பை தொடர்ந்தும் இலங்கையில் செலுத்துவதற்கேயன்றி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்துவதற்கல்ல என்பதை ரணில் புரிந்து கொள்ளவில்லை என்பது வெளிப்படையான ஒன்று.

இலங்கையில் உள்ள ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளின் சர்வதேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளினால், சர்வதேசம் ரணில் விக்கிரமசிங்கவுடனான தொடர்பை தொடர்ந்தும் பேண விரும்புகின்றது என்பதே உண்மை, அவ்வாறான எதிர்ப்பு இலங்கையில் சர்வதேசத்திற்கு எதிராக தெரிவிக்கப்படாமல் விடும் பொழுது அவர்கள் ரணிலை கைவிட்டு விடுவார்கள் என்பதுவும், வெளிப்படையான உண்மை.

மறுபுறத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் சர்வதேச எதிர்ப்;பு தோற்றம் என்பது வெறும் மாயையே அன்றி வேறெதுவுமில்லை, இலங்கையின் அடித்தட்டு மக்களை நம்ப வைப்பதற்காக சர்வதேச எதிர்ப்பு கொள்கையை கொண்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ வெறும் வேஷமிட்டுள்ளார். இதனை மக்கள் மட்டுமின்றி ரணிலும் நம்பி தோற்றுப் போயுள்ளார். மாதத்திற்கு இரண்டு, மூன்று தடவைகள் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்துவிடுவதால் அந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ள முடியுமென்பது ரணிலின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டையே காட்டுகின்றது.

ஆக மொத்தத்தில் ரணில் விக்கிரமசிங்கவினுடைய இராஜதந்திர திறனும் பூரணமாகவில்லை என்பது வெளிப்படை!!!. இந்த நிலையில் அடுத்த அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமையப்போகின்றது என்று மனக்கோட்டை கட்டி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாங்கிக்கொண்ட மாபெரும் காயத்தை அவர் மீண்டும் ஒருமுறை வாங்கப் போகின்றார் என்பது நிதர்சனமே!

(2007 ஓகஸ்ட் மாதத்தில், ‘ஞாயிறு தினக்குரல்’ பத்திரிகையில் வெளியாகியது)

ஜாம்பவான்கள் நாங்கள்தான், மார்தட்டும் அவுஸ்ரேலியா


சினிமாவில் ரஜினி, கமல், விஜய், ஷாருக் என்று பெரிய பெரிய நட்சத்திரங்களின் படங்களே சில சமயங்களில் இலகுவில் தோல்விகளை சந்தித்து விடுகின்றன. அதுபோலவே கிரிக்கட்டிலும் பெரிய ஜாம்பவான்களும் சறுக்குவது வெகு இயல்பு. இதற்கு மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணிகள் நல்ல உதாரணங்கள். ஆனால், அந்த சறுக்கலில் இருந்து விரைவாக எழுபவனே மீண்டும் வெற்றிகளை சுவைக்கின்றான். இதற்கும் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியே எடுத்துக்காட்டு.

கிளான் மக்ராத், மத்தியூ ஹெய்டன், அடம் கில்கிறிஸ்ட், டேமியன் மாட்டீன் என்று நட்சத்திர வீரர்களில் பலர் சம காலத்துக்குள் ஓய்வு பெற்றுவிட, உலகின் முதல்தர அணியென்ற மமதையில் வலம் வந்த அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணிக்கு சறுக்கல்கள் ஆரம்பித்தன. அணியின தலைவர் ரிக்கி பொண்டிங்கிக்கும், தேர்வாளர்களுக்கும் திறமையான புதிய வீரர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பிரட் கடின், டேவிட் வோர்னர், டேவிட் ஹசி என்று புதிய வீரர்களை அணியில் சேர்த்துக்கொண்டபோதிலும் அவர்களின் முதல் முயற்சிகள் பெரியளவில் வெற்றிகளைப் பெற்றுத்தரவில்லை. இதனால் கடந்த சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக சடுதியான ஏற்ற இறக்கங்களை அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணி சந்தித்தது.

இவ்வருட நடுப்பகுதியில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டியில் படுதோல்விகளுடன் முதல் சுற்றிலேயே வெளியேறியது அவுஸ்திரேலியா. அதைத்தொடர்ந்து நடந்த ஆஸஷ் தொடரிலும் 2:1 என்ற கணக்கில் கிண்ணத்தை இங்கிலாந்திடம் பறிகொடுத்தது. இதன் தொடர்ச்சியாக டெஸ்ட் தரநிலையில் முதன்நிலையில் இருந்த அவுஸ்திரேலியா 4வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.

எனினும், ஆஸஷ் தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சுதாகரித்துக்கொண்டு விளையாடிய அவுஸ்திரேலியா 6:1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தனது மனவுறுதியை வெளிக்காட்டியது. இதன் பின்னர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ஐ.சி.சி. சம்பியன்ஸ் தொடரின் ஆரம்பமும் அவுஸ்ரேலியாவுக்குச் சோதனையாகவே அமைந்தது. இத்தொடரின் முதல் சுற்று ஆட்டங்களில் மேற்கிந்தியத்தீவுகளுடனான போட்டியில் சிரமப்பட்டு வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, தன்னுடைய இரண்டாவது போட்டியில் இந்தியாவுடனான மோதலில் பாரிய ஓட்ட இலக்கைப் பெற்றபோதிலும், மழையினால் ஆட்டம் முடிவின்றி நிறைவுற்றது.

அரையிறுதிக்கு தெரிவாக வேண்டுமாயின் பாகிஸ்தானுடனான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலியா, பரபரப்பான இறுதி ஓவர் இறுதி நிமிட ஆட்டத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதிக்குத் தெரிவான அவுஸ்திரேலியா இங்கிலாந்துடன் மோதியது. ஆஸஸ் தொடரில் 6:1 கணக்கில் தோல்வி பெற்றிருந்த இங்கிலாந்து அரையிறுதிப் போட்டியில் பழிதீர்க்கும் என்று கிர்க்கட் வல்லுநர்கள் எதிர்வுகூறியிருக்க, போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கி, இங்கிலாந்து நிர்ணயித்த 257 என்ற இலக்கை இலகுவாகப் பெற்றுவிட்டது அவுஸ்ரேலியா.

ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடர் முழுவதும் நம்பிக்கையுடன் ஆடிய ரிக்கி பொண்டிங்க் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் வரிசையில் முதலிடத்திலிருந்தார். இந்த நிலையில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதிய அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி சாத்தியமானது.

ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் வரலாற்றில் இரண்டாவது தடவையாகவும் கிண்ணம் வென்ற அணி என்ற பெருமையையும், ஒருநாள் தரநிலையில் மீண்டும் முதலிடத்தையும் அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்டது. இந்த வெற்றிக்கு, தொடர் முழுவதிலும் சிறப்பாக ஆடிய ரிக்கி பொண்டிங்கும் அவரின் இளைய படையும் காரணங்களாகும்.

தொடர்ந்தும் சறுக்கல்களைச் சந்தித்துவந்த அவுஸ்திரேலியா, ஆர்ப்பாட்டமில்லாமல் களம் புகுந்து கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது கிரிக்கட் நோக்கர்களால் ஆச்சர்யத்துடனும், ஆர்ப்பரிப்புடனும் பார்க்கப்பட்டது. மீண்டும் கிரிக்கட்டின் ஜம்பவான்கள் தாமே என்று மார் தட்டுகின்றது அவுஸ்ரேலியா.

(‘சிகரம்தொடு’ இதழுக்காக எழுதியது)

பிடித்த பிரபுதேவா: பிடிக்காத நயன்தாரா: விரும்பிய மார்டீன் : வெறுக்கிற கலைஞர்.(100வது பதிவு)


பதிவுலகில் தொடரும் தொடர் பதிவுகளால் சில தருணங்களில் எரிச்சலே அதிகம் மிஞ்சி நிற்கிறன. ஆனாலும், சில தொடர் பதிவுகளின் தலைப்புக்கள் என்னை அதன் பக்கம் மிக இயல்பாகவே சாய்த்து விடுகிறன. அந்த வகையில் சில நாட்களாக பதிவுலகில் அதிகம் பகிரப்பட்ட ‘பிடித்த பத்தும், பிடிக்காத பத்தும்’ தலைப்பில் பதிவிட வேண்டும் என்று விரும்பியிருந்தேன். தோழர்கள் வந்தியரும், கனககோபியும் அலைபேசியில் அழைத்திருந்தனர். அதனால், எனக்கு பிடித்தவைகளும், பிடிக்காதவைகளும் சில காரணங்களுடன்.


அரசியல் தலைவர்

பிடித்தவர் : மார்டீன் லூதர் கிங் : ஆபிரிக்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு சுதந்திர வேட்கையை ஊட்டிய மனிதன். சுயநலமற்று யதார்த்த உலகின் போக்குடன் தன்னுடைய சமூகத்துக்கு விடுதலை வேண்டி கொடுத்தவர். பராக் ஒபாமாவுக்கே ஆட்சியை பெற்றுக்கொடுக்க காரணமானவர்.

பிடிக்காதவர்(கள்) : ஜீ.ஜீ.பொன்னம்பவத்தில் தொடங்கி மு.கருணாநிதி உள்ளிட்ட பலர் : சில அரசியல் நலன்களுக்காக ஒரு சமூகத்தின் உரிமைகளையே பறிக்க துணை போனவர்கள். பலரால், இவர்கள் விரும்பப்பட்டாலும், என்னை அதிகம் ஆத்திரமூட்டியவர்கள்.

எழுத்தாளர்

பிடித்தவர் : ‘சுஜாதா’ என்கிற ரங்கராஜன் : நான் முதலில் வாசித்த ‘இரத்தம் ஒரே நிறம்’ என்கிற நாவலுக்கு சொந்தக்காரர். சிறுகதை, கேள்வி பதில்கள் என்று என்னை அதிகம் கவர்ந்தவர். ஆனாலும், சில வெறுப்புணர்வுகளும் அவர் மீது உண்டு.

பிடிக்காதவர்(கள்) : ஞானி, ஜெயமோகன் : என்னவோ தெரியவில்லை இவர்களின் எழுத்துக்கள் என்னை அதிகம் பாதிக்கவும் இல்லை. கவரவும் இல்லை. மாறாக, எரிச்சலூட்டுகின்றன. இவர்கள் இருவரும், தருணங்களுக்கு ஏற்ப தங்களுடைய கருத்துக்களுக்கே புது அர்த்தம் கற்பிக்கின்றவர்கள் என்கிறது என்னுடைய மனது.

கவிஞர் அல்லது பாடலாரிசியர்

பிடித்தவர் : வைரமுத்து : ‘காதலித்துப்பார்’ தொடங்கி ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ உள்ளிட்ட பலவற்றில் கவர்ந்தவர். ‘வானம் எனக்கொரு போதி மரம்’ என்று முதல் பாடலிலேயே அசத்தியவர். ஆனாலும், இவரிடம் பிடிக்காத குணமொன்று அதிகமாக மு.கருணாநிதிக்கு காக்கா பிடிப்பது.

பிடிக்காதவர்(கள்) : பலர்: கவிதை கவிதை வாசி வாசி என்று எரிச்சலூட்டுபவர்கள். ஆனால், அவர்களில் பலர் அதிக ரசிகர்களை கொண்டவர்கள்.

பாடகர்

பிடித்தவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் : ‘காதல் ரோஜாவே’, ‘சக்கரை இனிக்கி சக்கரை’ என்று எந்த வகை பாடலிலும் அசத்துபவர். வேற்றுமொழியை தாய்மொழியாக கொண்ட போதிலும், தமிழை ‘தமில்’ என்று உச்சரிக்காமல் ‘தமிழ்’ என்றே உச்சரிப்பவர். வேற்றுமொழிப் பாடல்களிலும் கவர்ந்தவர்.

பிடிக்காதவர் : சிறிகாந் தேவா : மற்ற இசையமைப்பாளர்கள் பாடுகிறார்கள் என்று தானும் பாடுவதால். அவரின் குரலைக் கேட்டாலே எனக்கு உடலில் உஷ்னம் பாயும். என்ன செய்ய அவரையும் பலருக்கு பிடித்திருக்கிறதே.

பாடகி

பிடித்தவர் : வாணி ஜெயராம் : ‘மல்லிகை என் மன்னம் மயங்கும்’ தொடங்கி, ‘மேகமே மேகமே’ உள்ளிட்ட பல பாடல்களில் கவர்ந்தவர். வடஇந்தியாக்கே உரித்தாக கசல் பாடல்களையும் அதிகம் பாடியுள்ளவர். அதனால், அவரின் குரலில் எனக்கு மயக்கம்.

பிடிக்காதவர்(கள்) : சிறிலேகா பார்த்த சாரதி, சுசித்திரா : காரணமே தெரிவில்லை (சொல்லியா தெரிய வேண்டும்).

இயக்குனர்

பிடித்தவர்(கள்) : ஷங்கர், மணிரத்னம், அமீர் : வௌ;வோறு வகைப் படங்களை அழகாகவும், அற்புதமாகவும் இவர்கள் இயக்குவதாக என் மனம் சொல்கிறது. ஆனாலும், இவர்கள் மீதும் கோபங்களும், விமர்சனங்களும் எனக்கு உண்டு.

பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லை : காரணமும் பெரிதாக இல்லை.

நடிகர்

பிடித்தவர் : பிரபுதேவா : ‘ஏப்ரல் மேயிலா பசுமையே இல்லை’ பாடலில் அவரின் நடனத்தை பார்த்திலிருந்தும், ‘காதலன்’ படத்துக்கு பின்னர் நடிகராகவும் பிடிக்கும். நகைச்சுவை, நடனம், உணர்ச்சிகள் என்று அசத்தக்கூடியவர். ஏனோ இப்பொழுதெல்லாம் அதிகம் நடிப்பதில்லை.

பிடிக்காதவர்(கள்) : பிரசாந்த், அப்பாஸ் : காரணம் தெரியவில்லை.

நடிகை

பிடித்தவர்: மனிஷா கொய்ராலா : பம்பாய், டில்சே(உயிரே), இந்தியன் என்று பலபடங்களில் என்னை கவர்ந்தவர். சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் வரை அதாவது, என்னுடைய பதின்ம வயதுக் காலங்களில் இவர் போன்ற பெண்களை அதிகம் தேடியவன். ஆனாலும், யாரும் கிடைக்கவில்லை.

பிடிக்காதவர்: வேறு யார் நயன்தாரா தான் : ‘ஐயா’ படத்திலிருந்தே இவரைப் பிடிப்பதில்லை. ‘யாரடி நீ மோகினி’யில் கொஞ்சம் கவர்ந்தார். ஆனாலும், அவர் குறித்த செய்திகளினாலும், தகவல்களினாலும் அதிகம் பிடிக்காமல் போனது. இதற்கு ‘குடும்ப பாதுகாப்பு’ மீதான நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.

விளையாட்டு

பிடித்தவை : கால்ப்பந்து, கிரிக்கட் : நான் அதிகமான என்னுடைய பள்ளிக்காலங்களில் விளையாடியவை.

பிடிக்காதவை: உள்ளக விளையாட்டுக்களில் உட்கார்ந்து விளையாடப்படுபவை: இந்த விளையாட்டுக்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதாகவே இன்றும் நினைக்கிறேன். இந்த கருத்தில் தவறு இருப்பதும் தெரியும்.

பேச்சாளருக்கு பதில், செய்தி வாசிப்பாளர்

பிடித்தவர் : சதீஷன் சத்தியமூர்த்தி : ஒளி, ஒலிபரப்பு துறையில் அண்மைக் காலத்தில் என்னை ஓரளவு கவர்ந்த செய்தி வாசிப்பாளர். தமிழை தமிழாக வாசிப்பவர். சில தினங்களுக்கு முன்னர் அவர் வாசித்த செய்தியறிக்கையின் போது மூன்று தடவைகள் சிறு தவறுகளை விட்டார். அது, அவரின் தவறா? அல்லது செய்தி ஆசிரியரின் தவறா? தெரியவில்லை.

பிடிக்காதவர்கள் : இந்த பட்டியலில் இலங்கை, இந்திய ஒளி, ஒலிபரப்பாளர்கள் பலர் அடக்கம் : தமிழை தமிழாக வாசிக்காதவர்கள். அதிக ஆங்கிலக் கலப்பு செய்பவர்கள். இடம், பொருள், ஏவால் தெரியாமல் தொகுப்புரை வழங்குபவர்கள். என்று பல குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது.

மேற்குறிப்பிட்ட ‘எனக்கு பிடித்தவை, பிடிக்காதவைகளுடன்’ பலர் உடன்படலாம் அல்லது மறுக்கலாம். இந்த பிடித்தவை, பிடிக்காதவைகள் தவிரவும் ஆயிரம் விரும்பங்களும், வெறுப்புக்களும் எனக்கு உண்டு. அவை, குறித்து வேறு எங்கேனும், வேறோர் தருணத்தில் பகிர்ந்து கொள்ளலாம் சகாக்களே.

கண்டேன் காதலை: அதிகம் நகைச்சுவை, கொஞ்சம் காதல்.


வாழ்க்கையின் முடிவைத் தேடிச் செல்லும் இளைஞனிதும், அவனது மனதை மாற்றி வாழ்க்கையில் வெற்றிபெற வைத்த துறுதுறு பெண்ணினதும் வாழ்க்கை மாற்றங்களையே ‘கண்டேன் காதல்’ பதிவு செய்திருக்கிறது. ஹிந்தியின் இம்தியாஸ் அலி எழுதி, இயக்கிய ‘ஜப் வி மெற்’ படத்தின் தமிழ் மொழி தயாரிப்பே ‘கண்டேன் காதலை’. பரத்-தமன்னா முக்கிய பாத்திரங்களில் நடிக்க கண்ணன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

தொழிலதிபர் சக்தி (பரத்) காதல் தோல்வியினாலும், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினாலும் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் தொடரூந்தொன்றில் ஏறுகிறார். அதே தொடரூந்தில் தனது பட்டப்படிப்பை முடித்து விட்டு வீடு செல்லும் துறுதுறு பெண்ணான அஞ்சலியும் (தமன்னா) பயணிக்கிறார். தொடரூந்திலிருந்து விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கும் சக்தியை, அஞ்சலி எதிர்பாரதவிதமாக காப்பாற்றுகிறார். இந்த பயண வழியில் தற்செயலான நிகழ்வினால், இருவரும் தொடரூந்தை தவறவிடுகின்றனர்.

பின்னரான நிகழ்வுகளில் இருவரும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டுகின்றனர். சக்தி, அஞ்சலியின் வீட்டில் சென்று தங்குகின்றான். அஞ்சலிக்கு முறைமாமனுடன் (சந்தானம்) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த தருணத்தில், திடீரென ஒருநாள் சக்தியும், அஞ்சலியும் வீட்டை விட்டு வெளியேறிவிடுகின்றனர். சக்தி வாழ்க்கையில் வெற்றி பெற்றானா? அஞ்சலிக்கும், சக்திக்கும் என்ன தொடர்பு? சந்தானத்தின் நிலை என்ன? என்று நகைச்சுவை அதிகம் கலந்து காதலை காட்டி முடிவெழுதியிருக்கிறது ‘கண்டேன் காதலை’.

காதல், வெயில் உள்ளிட்ட யதார்த்த சினிமாக்களின் வெற்றிகளுக்கு பின்னர் அதிகம் அடிதடி சினிமாக்களுக்குள் சிக்கியிருந்த பரத்துக்கு, கண்டேன் காதலை ஓரளவு மாறுபட்ட படமே. தொழிலதிபர் சக்தியாக அவரது தோற்றம் கச்சிதமாக பொருந்துகிறது. ஆனால், அவருக்கு நடிக்க கிடைத்த சந்தர்ப்பங்கள் குறைவு. கிடைத்த சந்தர்ப்பங்களிலும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை. துறுதுறு பெண் சக்தியாக அறிமுகக் காட்சியிலேயே தமன்னா மனதைக் கவர்கிறார். ஆனால், அவரின் தொடர்ச்சியான பேச்சுக்கள் சிலவேளை எரிச்சலையும் வரவழைக்கின்றன. படம் முழுவதிலும் பரத்தை விட அதிகம் ஆதிக்கம் செலுத்துவது தமன்னாவே.

படத்தினை மக்களிடம் அதிகம் கொண்டு சேர்க்க உதவியிருக்கிறார் சந்தானம். இரட்டை அர்த்த வசனங்களைக் குறைத்து கிராமத்து பெரிய மனிதனின் போர்வையில் தமன்னாவின் முறைமாமனான வந்து வயிறு குலங்க வைக்கிறார். தமன்னாவின் காதலனாக வரும் முன்னாவுக்கு நடிக்க சந்தர்ப்பங்களே பெரிதாக இல்லை. பாவம் அவர், ‘மோதி விளையாடு’விலும் அதிகம் நடிக்கவில்லை. ரவிச்சந்திரன், நிழல்கள் ரவி, இயக்குனர் அழகன்பெருமாள், மனோபாலா, ஜீவா என்று நட்சத்திர பட்டாளமே படம் முழவதிலும் வருகிறது.

படத்தினை அழகாக பதிவு செய்ததில் ஒளிப்பதிவாளர் ஜீ.பி.முத்தையா வெற்றி பெறுகிறார். தொடரூந்து- வாடகைக்கார் பயணம், நகர-கிராம வாழ்க்கை, பாடல் காட்சிகள் என்று தேவைக்கு ஏற்ப அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கலை இயக்குனரும் தன்னுடைய பங்கினை செய்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் வரம்பு மீறல்கள் (அதிகம் வடக்கு இந்தியாவின் தோற்றம காட்டியிருக்கிறார்). படத்தினை தொகுப்பதில் கோலா பாஸ்கர் வெற்றிபெற முனைந்திருக்கிறார். ஆனால், இறுதிக் காட்சிகள் அதிகம் இழுபடுகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் வித்தியாசாகரின் இசையில் பாடல்கள் ரசிக்க முடிகின்றன. பின்னணி இசையும் பொருந்திப்போகிறது.

படத்தின் வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியிருக்கிறார். படத்தின் முக்கிய பலங்களில் வசனங்களுக்கு இடமுண்டு. இம்தியாஸ் அலி எழுதி, இயக்கிய ‘ஜப் வி மெற்’ வட இந்திய மக்களின் வாழ்வியல் கோலங்களை சொன்னது. அதனையே, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ப திரைக்கதையாக மாற்றியதில் இயக்குனர் கண்ணன் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும், இறுதிக் காட்சிகள் மிகவும் நீளம். ஏரிச்சலை ஊட்டுகின்றன. ‘ஜெயம் கொண்டான்’ படத்திற்கு பின்னர் கண்ணனின் இயக்கத்தில் ‘கண்டேன் காதலை’ மக்களை ஓரளவு கவரலாம்.

‘பூ’, ‘இராமன் தேடிய சீதை’ படங்களுக்கு பின்னர் மெசபியர் நிறுவனத்தின் தயாரிப்பில் வந்திருக்கும் கண்டேன் காதலை, சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸின் விளம்பர யுத்தியினாலும், படத்திலுள்ள நகைச்சுவை கலந்த காதலினாலும் ‘கண்டேன் காதலை’ இரசிகர்களிடம் ஓரளவு சென்று சேரலாம். கண்டேன் காதலை குடுப்பத்துடன் பொழுது போக்கிற்காக இரசிக்கலாம். மற்றப்படி ஒன்றும் சொல்லும்படியில்லை.