‘கனவான்’ நிலையை இழப்பாரா? குமார் சங்ககார.


கனவான்களின் விளையாட்டு என்று அழைக்கப்படுகின்ற கிரிக்கட்டில், வீரர்கள் எல்லோரும் கனவான்களாக இருப்பதில்லை. போட்டி மனப்பான்மையும், நல்லெண்ணத்தையும் கொண்டு விளையாடப்பட வேண்டிய தருணங்கள் தற்போது குறைவடைந்து, வஞ்சக ரீதியில் எதிரணியை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது. இது அனைத்து விளையாட்டுக்களுக்கும் பொருந்தும்.

கிரிக்கட்டில் கனவான்களாக பலர் மதிக்கப்படுகின்றனர். சேர்.டொனால்ட் பிரட்மன், ஹாரி சோபர்ஸ், கிளைவ் லோயிட், சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன்……என்று இந்த வரிசை மிகப்பெரியது. இந்த ‘கனவான்’ பாத்திரத்தை இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்ககாரவும் சில வருடங்களாக ஏற்றிருந்தார். ஆனால், அவர் அண்மைக்காலமாக போட்டிகளின் போது எதிரணிகளுடன் தேவையற்ற ரீதியில் தர்க்கங்களிலும், மோதல்களிலும் ஈடுபடுகிறார். இதனால், அவர் ஏற்றிருந்த ‘கனவான்’ பாத்திரம் கலையும் நிலை உருவாகியுள்ளது.

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 2000ஆம் ஆண்டு யூலை மாதத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் குமார் சங்ககார இலங்கை அணிக்குள் துடுப்பாட்ட மற்றும் விக்கட் காப்பாளராக உள்வாங்கப்பட்டார். அதேமாதத்திலேயே, டெஸ்ட் போட்டிகளின் அறிமுகத்தையும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் மேற்கொண்டிருந்தார். இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்ட சில காலங்களுக்குள்ளேயே தன்னை நல்லதொரு வீரராகவும், விக்கட் காப்பாளராகவும் அடையாளப்படுத்திக்கொண்ட சங்ககார, இயல்பான முன்னேற்றத்துடன் சில வருடங்களுக்குள்ளேயே இலங்கை அணியின் நிரந்தர வீரரானார்.

இடது கை துடுப்பாட்ட வீரரான சங்ககார சிறந்த துடுப்பாட்ட பிரயோகங்களினால் கிரிக்கட் வல்லுனர்களாலும், இரசிகர்களினாலும் விரைவிலேயே கவரப்பட்டார். ஆசிய வீரர்கள் மேற்குலக நாடுகளில் வரவேற்பைப்பெறுவது இலகுவான காரியமல்ல. இதற்கு முரளிதரன், டெண்டுல்கர் போன்றவர்கள் நல்ல உதாரணங்கள். ஆனால், சங்ககார விரைவிலேயே மேற்குலக இரசிகர்களினாலும், ஊடகங்களினாலும் வரவேற்கப்பட்டார். இதற்கு அவரின் ஆங்கில மொழி புலமையும் ஒரு காரணமாகும்.

இலங்கை கிரிக்கட் அணியினுள் முக்கிய வீரராக மாறிய சங்ககார, 2007 ஆம் ஆண்டு இறுதியில் அணியின் உதவித் தலைவர் என்ற நிலைக்கு வந்தார். மஹெல ஜெயவர்த்தன தலைவராக கடமையாற்றிய தருணங்களில், அவருக்கு பக்கபலமாக செயற்பட்ட சங்ககார தேவைப்பட்ட தருணங்களில் அணித்தலைமையையும் ஏற்று நடத்தினார். இந்தக் காலப்பகுதிகளில் எதிரணி வீரர்களை அதிகம் மதித்தும், அவர்களுடன் நட்பு ரீதியிலான மனப்பாங்குடனேயே சங்ககார பழகிவந்தார். இதனால், மேற்குலக கிரிக்கட் வல்லுனர்களும், ஊடகங்களும், இரசிகர்களும் சங்ககாரவை வெகு சீக்கிரத்தில் ‘கனவான்’ நிலைக்கு கொண்டு சென்றனர். அதுவே, அவர் இலங்கை அணியின் தலைமையை ஏற்கும் வரை தொடர்ந்தது.

சர்வதேச ரீதியில் நல்ல ஒழுக்கத்துடன் போட்டிகளில் பங்குபற்றும் அணிகளில் இலங்கை கிரிக்கட் அணியும் முக்கியமானது. அதற்கு அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் அவசியமானது. ஆனால், இலங்கை அணியின் தலைவராக குமார் சங்ககார இந்த ஆண்டு நடுப்பகுதியில் பதவியேற்ற பின்னர் இந்த நிலை மாறத்தொடங்கியது.

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரின் இறுதி போட்டிகள் இரண்டில் பாகிஸ்தான் அணித்தலைவர் யூனுஸ்கானுடன் தேவையற்ற தர்க்கங்களில் சங்ககார ஈடுபட்டார். இதனை தொலைக்காட்சியில் போட்டியைக் காணும் யாராலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. போட்டியின் இறுக்கமான தருணங்களில் உணர்ச்சி வசப்படுவது எந்தவொரு வீரருக்கும் சாத்தியமே. ஆனால், அணித்தலைவரான சங்ககார அளவுக்கதிகமாக தர்க்கங்களில் ஈடுபட்டது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இதனாலேயே ஊடகங்களாலும், இரசினர்களினாலும் சங்ககார விமர்சிக்கப்பட்டார்.

இதன் உச்சகட்ட காட்சிகள் தென்னாபிரிக்காவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரில் அரங்கேறியது. இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் அண்று ஸ்ரோஸ் துடுப்பாடிக் கொண்டிருந்த போது, குமார் சங்ககார அளவுக்கதிகமான தடவைகள் ஆட்டமிழப்பு கோரிக்கை விடுத்தார். அவருக்கே அது ஆட்டமிழப்பு அல்ல என்று தெரிந்திருக்கும், ஆனாலும், தேவையற்ற கோரிக்கைகளை நடுவரிடம் விட்டார். இதனால், போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களும் எரிச்சலடைந்தனர். சங்ககாரவின் இந்த நடவடிக்கை குறித்து போட்டியின் வர்ணனையாளர் ஒருவர், ஆட்டமிழப்பு கோரும் அணியொன்றை அமைத்தால் அதற்கு சங்ககாரவை தலைவராக நியமிக்கலாம் என்று கிண்டலடித்திருந்தார்.

சர்வதேச ரீதியில் கனவான் வீரர்களின் பட்டியலில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த குமார் சங்ககார தன்னுடைய சில தேவையற்ற உணர்ச்சி வெளிக்காட்டல்களினாலும், நடவடிக்கைகளினாலும் அந்த பட்டியலில் இருந்து தானாகவே விலகிவிடுவார் போலவே தெரிகிறது. இந்த நிலை வரவேற்கக்கூடியது அல்ல. அணியின் வெற்றிக்காகவே அனைத்து வீரர்களும் ஆடுகின்றனர். அந்த பொறுப்பை விட அணித்தலைமை பொறுப்பும், அதிகாரமும் கூடியது. ஆனால், அது அணியின் வெற்றியை நோக்கியதாக நேர்மையான வழியில் அமைந்திருக்க வேண்டும். இது அனைத்து விளையாட்டுக்களுக்கும் பொருந்தும்.

பேராண்மை: பெண்மையின் வீரத்துடன், ஆண்மையின் அழகு.


‘காடுகளும், மலைகளும் யாராலும் பூரணமாக அறியப்படுவதில்லை. அதுபோலவே, காடுகளையும், மலைகளையும் நம்பி வாழும் மக்களையும் யாரும் புரிந்துகொள்வதில்லை’ என்ற ஒரு மையக்கருத்துடன் தீவிரவாதத்துக்கு எதிராக போரிட்டிருக்கிறது ‘பேராண்மை’. இயற்கை, ஈ என்ற மாற்று கதைக்களங்களின் பயணித்து வெற்றிபெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், காதல் கதைகளில் தொடர்ந்தும் பயணித்த வெற்றி கண்ட ஜெயம் ரவிக்கு ‘பேராண்மை’யில் புதுப்பாதை அமைத்திருக்கிறார்.

காடுகளை நம்பி வாழ்கை நடத்தும் மலைவாழ் மக்களிலிருந்து சகலதும் கற்றுத் தேர்ந்த துருவன் (ஜெயம் ரவி) வனத்துறை அதிகாரியாக, அதே காட்டுப்பகுதியில் கடமையாற்றுகிறார். அவரது உயரதிகாரி பொன்வண்ணன். சென்னையிலிருந்து காடுகளில் பயிற்சி பெறுவதற்காக ‘தேசிய பாதுகாப்பு மாணவப் படையணி’யைச் சேர்ந்த மாணவிகள் அடங்கிய குழு, துருவன் இருக்கும் காட்டுப்பகுதிக்கு வருகிறது. அதே காட்டுப்பகுதியிலேயே, இந்திய வானாய்வு மையத்தின் செயற்கைக்கோள் ஏவுதளமும் செயற்பட்டு வருகிறது.

பயிற்சிகளுக்காக வரும் வழியில் தேசிய பாதுகாப்பு மாணவப் படையணியின் மாணவிகள் கோவணத்துடன் தன்னின மக்களுடன் இருக்கும் துருவனை பார்த்து கேலி செய்கின்றனர். கோவணத்துடன் பார்த்த அதே இளைஞனே அவர்களின் பயிற்சியாளராக வந்திருப்பதை பார்த்த அந்த மாணவிகளினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், துருவனை பல வழிகளிலும் பொண்வண்ணனிடம் மாட்டி விடுகின்றனர். ஆனாலும், சளைக்காமல் தனது பணியில் மும்முரமாக இருக்கும் துருவன், காடுகளில் பயிற்சி பெறுவதற்காக ஐந்து மாணவிகளை (சரண்யா, தன்சிகா, லயசிறி, மகா, வசுந்துரா) தேர்வு செய்கிறார்.

துருவனும், ஐந்து மாணவிகளும் பயிற்சிகளுக்காக காட்டுப்பகுதிக்குள் செல்கின்றனர். அன்று ஒருநாளுக்குள் பயிற்சியகம் திரும்ப வேண்டிய அவர்கள் சில இடையூறுகளினால் திரும்பமுடியாமல் போகிறது. இராணுவ சீருடைகளுடன் ஆங்கிலத்தில் உரையாடிச் செல்லும் இருவரை, வசுந்துரா பார்த்து விடுகிறார். இதனை அடுத்து, துருவனும் ஐந்து மாணவிகளும் இணைந்து எடுக்கும் முடிவுகளும், இந்திய தேசிய நலனும், ஒடுக்கப்படும் மக்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வன்முறையுமே ‘பேராண்மை’யின் மீதிக் காட்சிகள்.

‘ஜெயம்’ படத்தில் ஆரம்பித்து ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்று பல மீள் தயாரிப்பு படங்களிலேயே நடித்து வந்த ரவியின் திரைப்பாதையை முழுமையாக மாற்றிக் காட்டியதில் பேராண்மை வெற்றி பெற்றிருக்கிறது. மலைவாழ் மகனான மிகவும் அற்புதமாக பொருந்திப்போகிறார். தீவிரவாதிகளுடனான சண்டைக்காட்சிகளிலும், திமிர் பிடித்த மாணவிகளுக்கு பயிற்சி வழங்கும் போதும், உயரதிகாரியின் கேலியின் முன்னும் மிடுக்குடனேயே வலம்வருகிறார் ஜெயம் ரவி. அவருடைய திரை வாழ்க்கையின் பேராண்மை ஒரு மைல்கல். திமிர், சாதிவெறி பிடித்த உயரதிகாரியாக பெண்வண்ணன் முகம் சுழிக்க வைக்காமல் நடித்திருக்கிறார்.

பயிற்சி மாணவிகளாக வரும் சரண்யா, தன்சிகா, லயசிறி, மகா, வசுந்துரா ஆகிய அனைத்து நாயகிகளும் காடுகளிலும், மலைகளிலும் அச்சமின்றி பயணப்பட்டிருக்கிறார்கள். இயக்குனரின் தேவையை பூர்த்தி செய்திருக்கிறார்கள். சில இடங்களில் பூர்த்தி செய்ய முயன்றிருக்கிறார்கள். தீவிரவாதிகளின் தலைவனாக வரும் ஆங்கில படவுலகின் ரோலன்ட் கிக்கிங்கர் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. இவருக்கு பதில், உள்ளூர் நடிகர் யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். படத்தில் வடிவேலுவும், ஊர்வசியும் கூட நடித்திருக்கின்றனர். ஆனால், மனதில் பெரிதாக ஒட்டிக்கொள்ளவில்லை.

பேராண்மையின் படத்தின் மற்றுமொரு நாயகன் ஒளிப்பதிவாளர் சதீஸ்குமார். காடுகளின் அழகையும், அபாயத்தையும் அற்புதமாக படம்பிடித்திருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகராம். பாட்டுக்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் பெரிதாக சொல்ல முடியவில்லை. அதுவும் இறுதி சண்டைக்காட்சிகளில் எரிச்சலூட்டுகிறார். படத்தொகுப்பு அனுபவசாலியான வி.ரி.விஜயன் தனது பணியை, இயக்குனரின் தேவைக்கேற்ப செய்திருக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். ‘காட்டு புலியடித்து…’ பாடலில் மலைவாழ் மக்களின் வாழ்வியலை சொல்லியிருக்கிறார்.

கடற்கரையோர மக்களின் வாழ்க்கையை ‘இயற்கை’யிலும், புறநகர மக்களின் வாழ்வியலை ‘ஈ’யிலும் அப்பழுக்கில்லாமல் காட்டிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மலைவாழ் மக்களின் வேதனைகளையும், துயரங்கையும் ‘பேராண்மை’யில் வடித்திருக்கிறார். பொதுவுடமை கருத்தியலில் நம்பிக்கை கொண்ட இயக்குனர் தன்னுடைய படங்களிலும் அதனை ஒரு கருத்தாக முன்வைத்திருக்கிறார். அதற்கு பேராண்மையும் விதிவிலக்கல்ல. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் இரசிக்கக் கூடியனவாக இருக்கின்ற போதிலும், ஐந்து மாணவிகளுக்குமிடையிலான உரையாடல்களில் இரட்டை அர்த்தங்கள் அதிகளவில் தெறிக்கின்றன.

பல கோடிகளைக் கொட்டி விஜய், அஜித் என்று தமிழ்த் திரையுலகின் வெற்றி நாயகர்களை வைத்து படமெடுத்து தோற்றுப்போன ‘ஐங்கரன் இண்டர்நஷனல்’ நிறுவனம் பேராண்மை படத்தினை தயாரித்ததன் மூலம் வெற்றியை பெற்றுள்ளதுடன், நல்ல படத்தை கொடுத்ததையிட்டு பெருமைப்பட்டுக்கொள்ளலாம். தமிழ் சினிமாவில் சில காலமாக நல்ல கதைகளும், படங்களும் வெற்றி பெறத்தொடங்கியதன் விளைவு பேராண்மையையும் கொடுத்திருக்கிறது. இந்த வெற்றிகள் தொடர வேண்டும். பேராண்மை, எஸ்.பி.ஜனநாதனும், ஜெயம் ரவியும் இணைந்து கொடுத்திருக்கும் ‘பெண்களின் வீரத்துடனான, ஆண்மையின் அழகு’.

யார் இந்த ‘மருதமூரான்’, மலர்மகனுக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு?


வீட்டு தொலைபேசிக்கும், என்னுடைய அலைபேசிக்கும் வரும் அழைப்புக்களில் மருதமூரான், மலர்மகன், பிரவீன், புருஜோத்தமன் இந்தப் பெயர்களிலேல்லாம் நான் அழைக்கப்படுகிறேன். அடையாளப்படுத்தப்படுகிறேன். ஒருவன் ஏன் இவ்வளவு பெயர்களில் அழைக்கப்படுகிறான். எனக்கே சில சமயங்களில் வியப்புக்கள் வருவதுண்டு. சரி காரணங்களை தேடிச் சென்றேன். பதிவே எழுதுமளவுக்கு விடயங்கள் வந்தன. அதுதான் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு சுய விளக்கப் பதிவு.

மருதமூரான்:

வலையுலகில் நான் அறிமுகமாகிய 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் என்னுடைய வலைத்தளத்துக்கு ‘மருதமூரான்’ என்று பெயரிட்டேன். அதுவே, பதிவுலகில் என்னை மருதமூரானாக அடையாளப்படுத்திவிட்டது. பதிவுகளினூடு நண்பர்களாகி, பதிவர் சந்திப்புக்கு பின்னர் பல நண்பர்கள் கிடைத்தார்கள். சிலர் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள்ளும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நான் மருதமூரானாகவே இருக்கிறேன். இந்த பெயர் ஏன் வந்தது என்றால்…. என்னுடைய பிறந்த மண்ணான ‘மருதங்கேணி’யை முன்னிறுத்த விளைந்ததன் விளைவே.

மலர்மகன் தங்கமயில்:

என்னுடைய ஊடக வாழ்க்கையில், தொழில் முறையில் நான் பயன்படுத்தி வரும் பெயர். 2006ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்து இந்தப் பெயரிலேயே தமிழ் ஊடகங்களில் நான் அறியப்படுகின்றேன். வெளிநாட்டு வானொலிகள் இரண்டிற்கு 2007 தொடக்கம் தொடர்ந்து 18 மாதங்கள் செய்தி ஆசிரியராக பணியாற்றினேன். அப்பொழுதும், அதன் பின்னர் ‘ஞாயிறு தினக்குரல்’ பத்திரிகையில் சில அரசியல் கட்டுரைகளையும், தற்பொழுது ‘இருக்கிறம்’, ‘சிகரம்’ சஞ்சிகளைகளிலும் கட்டுரைகள், விமர்சனங்கள் என்று இந்தப் பெயர்களிலேயே எழுதிவருகிறேன்.

இந்தப் பெயர் உருவான விதம்… ஒருநாள் என்னுடைய தாயாரின் பெயரின் இறுதி வடிவமான ‘மலர்’ என்பதுடன் ‘மகன்’ ஐ இணைத்து ‘மலர்மகன்’ என்று எழுதி விட்டு நண்பன் ஒருவனிடம் காட்டினேன். அவன் சொன்னான், நல்லாயிருக்கு மச்சான்… தமிழ் பெயர்… இந்தப்பெயர்களில் யாரையும் நான் அறிந்ததில்லை என்று. அதனாலேயே இந்தப்பெயரை நான் எடுத்துக்கொண்டேன். தற்பொழுது தமிழ் ஊடகத்துறை இவ்வாறே என்னை அறிகிறது.

பிரவீன் தங்கமயில்:

சிங்கள மொழி பேசுகின்ற நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும், அதைவிட தமிழ் மொழி பேசுகின்ற கொழும்பில் அறிமுகமாகிய நண்பர்களுக்கும் ‘பிரவீன் தங்கமயில்’ நான். (கவனத்தில் கொள்க: சிங்கள மொழி பேசுகின்ற நண்பிகள் எனக்கு உண்டு. ஆனால், தமிழ் மொழி பேசுகின்ற நண்பிகள் இல்லவே இல்லை. இது சத்தியம்)

யாழ்ப்பாணத்தில் என்னுடைய பாடசாலைக் கல்விக்காலங்கள் நிறைவடைந்து 3வது மாதத்திற்குள்ளேயே நான் என்னுடைய ஊடக கல்விக்காக கொழும்பை நோக்கி 2004ஆம் ஆண்டு 10 மாதம் 4ஆம் திகதி வந்துவிட்டேன். என்னுடைய ஊடக கற்கைகள் இடம்பெற்ற கல்லூரியில் அதிகம் சிங்களமொழி பேசுகின்றவர்கள். பாகிஸ்தான், மலேசியா, மாலைதீவு உள்ளிட்ட ஒரு சில வெளிநாட்டு நண்பர்களும் என்னுடம் படித்தார்கள். அந்த தருணத்தில் என்னுடைய உண்மையான பெயரான ‘புருஜோத்தமன் தங்கமயில்’ என்பதை அவர்கள் கூறு போட்டு விற்பார்கள். அதனாலேயே சிங்கள நண்பியொருத்தி, என்னை ‘பிரவீன்’ என்று அழைக்கவா? என்று கேட்டாள். நானும் யோசித்து விட்டு ‘ஆம்’ என்றேன். அதிலிருந்து தொற்றிக்கொண்டதே ‘பிரவீன் தங்கமயில்’. என்னுடைய ஊடகத்துறை நண்பர்கள் பலருக்கு இந்தப்பெயரிலேயே நான் அடையாளப்படுத்தப்பட்டேன். அதுவும் இன்றுவரை தொடர்கிறது. இந்தப்பெயரில் பல சவுகரியங்கள் உள்ளன. அது ரகசியம்.

புருஜோத்தமன் தங்கமயில்:

என்னுடைய தந்தையார் கந்தையா தங்கமயில் அவர்கள் எனக்கு இட்டபெயர். என்னுடைய உண்மையான, உத்தியோகபூர்வ பெயர். ‘புருசோத்தமன்’ என்று வரவேண்டிய பெயரை எண்கணிதத்தில் நம்பிக்கைகொண்ட என்னுடைய தந்தை ‘புருஜோத்தமன்’ என்று வைத்துவிட்டார். இந்தப்பெயரில் நான் பள்ளிக்காலங்களில் அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனாலும், என்னுடைய இந்தப்பெயரினை சில மாதங்களுக்கு முன்னர் வரையில் யாரும் முழுமையாக, சரியாக உச்சரித்ததாக ஞாபகம் இல்லை.

மேல்மாகாண சபை தேர்தலில் அண்மையில் வாக்களிக்கும் போது, தேர்தல் அதிகாரியாக கடமையாற்றிய சிங்கள பெண் ஒருவரே என்னுடைய பெயரினை சரியாக அழைத்திருந்தார். அந்த தருணம் எனக்கு புதிதாக தோன்றியது. சத்தியமாக என்னுடைய பெயரினை சரியாக உச்சரித்து கேட்ட தருணம் மறக்க முடியாதது. அப்பாடா என்னுடைய பெயர்கள் அடங்கிய விபரத்தை சொல்லியாகி விட்டது. இந்த பதிவின் மூலம் சிலருக்காவது மருதமூரானுக்கும், மலர்மகனுக்கும், பிரவீனுக்கும், புருஜோத்தமன் தங்கமயிலுக்கும் இடையில் உள்ள தொடர்பு விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன். மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

ஆதவன்: ரசனையுள்ள அலட்டல்காரன்.


‘நீதியை நிலைநாட்ட போராடும் நீதிபதியை அழிக்க தொழில்முறைக் கொலையாளிகள் முயற்சித்தல்’ என்ற ஒருவரிக் கதையை வர்த்தக சினிமாவுக்கே உரிய மசாலாத்தனங்களை சேர்த்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கும் படம் ‘ஆதவன்’. வாரணம் ஆயிரம், அயன் வெற்றிகளுக்கு பின்னர் சூர்யா நடித்திருக்கிறார். ‘குருவி’க்கு பின்னர் உதயநிதி ஸ்டாலினின் தயாரித்திருக்கும் ஆதவனுக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். வடிவேலு, நயன்தாரா, சரோஜாதேவி என்று நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.


குழந்தைகளின் உடலுறுப்புக்களை சட்டத்துக்கு புறம்பாக திருடி விற்கும் கும்பல் குறித்த விசாரணைகளை நடத்தும் நீதிபதி முரளி (மலையாள நடிகர்) தனது குடும்பத்துடன் கொல்கத்தாவில் வசிக்கிறார். அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வேலைக்காரன் வேடத்தில் நீதிபதியின் வீட்டுக்குள் நுழைகிறார் தொழில்முறை கொலையாளியான ஆதவன் (சூர்யா). அந்த வீட்டில் நீதிபதி முரளியின் தாய் சரோஜாதேவி, தங்கை மகள் தாரா (நயன்தார) உள்ளிட்ட பெரிய குடும்பமே வசிக்கிறது. ஆதவன், நீதிபதியைக் கொன்றாரா?, தாராவுக்கும் ஆதவனுக்கும் காதல் வந்ததா? இறுதியில் ஆதவன் யார்? என்ற வினாக்களுக்கு அதிரடி, நகைச்சுவை, கொஞ்சம் காதல், குடும்பம் என்று அனைத்தையும் சேர்த்து விடை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.


சூர்யாவின் முன்னைய படமான அயனின் தொடர்ச்சி ஆதவனிலும் தொடர்கிறது. படம் முழுவதிலும் மிடுக்காக வந்து சூர்யா அசத்துகிறார். அதேநேரம் வேலைக்காரன் வேடத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகளே படத்தின் மிகப்பெரிய பலம். பத்து வயது சூர்யா மனதினை கவரவில்லை. வரைகலைஞர்களும், படத்தொகுப்பாளரும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். நந்தா, காக்க காக்க என்று பலதளங்களில் பயணப்படும் சூர்யாவும் முழுமையான வர்த்தக சினிமாவுக்குள் சிக்கிவிட்டாரோ? என்கிற கேள்வியை ‘ஆதவன்’ எழுப்புகிறான். நயன்தாராவுக்கு வழமையாக வேடம். பாடல்களில் அதிகம் வருகிறார். ‘யாராடி நீ மோகினி’க்கு பின்னர் ஒளிப்பதிவாளின் முயற்சியினால் நயன்தாரா ஓரளவு அழகாக தெரிகிறார்.


பானார்ஜி என்ற பெயருடன் வரும் வடிவேலுவே படத்தின் இரண்டாவது நாயகன். சந்திரமுகி, போக்கிரிக்கு பின்னர் படம் முழுவதிலும் கலக்கியிருக்கிறார். அதுவும், சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவர் பேசும் காட்சிகளில் சிரிப்பொலியால் திரையரங்கு நிறைகிறது. நீதிபதியாக மறைந்த மலையாள நடிகர் முரளி நல்லபொருத்தம். அவரின் இறுதிப்படமாகவும் ஆதவன் அமைந்தது வருத்தமே. அவரின் இழப்பு தென் இந்திய சினிமாவுக்கு ஈடுசெய்ய முடியாதது. ஆதவனில் சரோஜாதேவி, ஆனந்த்பாபு ஆகியோர் நடித்திருந்தாலும் ஏனோ பெரிதான மனதைக் கவரவில்லை. அனுஹாசன், ஹியாகே ஹிண்டே, ரமேஸ்கண்ணா, மனோபாலா உள்ளிட்டோரும் ஆதவனில் நடித்திருக்கின்றனர்.


ஆதவனை அழகாக படமாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரா.கணேஸ். பாடல் காட்சிகளிலும், சூர்யாவுக்கும், பொலிஸ்ஸ_க்கும் இடையிலான துரத்தல் காட்சிகளிலும் ஒளிப்பதிவு அற்புதம். காட்சிகளை வேகமாக்கியதான் மூலம் தன்னை நிரூபித்திருக்கும் படத்தொகுப்பாளர் டொன்மாஸ், சண்டைக்காட்சிகளில் அளவுக்கதிகமான வேகத்தை காட்டி அலுப்புட்டுகிறார். அதுவும், சூர்யாவுக்கும், ஆனந்த்பாபுவுக்கும் இடையிலான சண்டைக்காட்சிகளை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு வேகம், அதைவிட அசைவும் அதிகம்.


படத்தின் சண்டைக்காட்சிகளை கனல்கண்ணனும், தென்னாபிரிக்காவின் பிரான்ஸ் ஹபில்கரும் வடிவடைத்திருக்கிறார்கள். துரத்தல் காட்சிகளில் பிரான்ஸ் ஹபில்கர் ‘அயனை’ ஞாபகமூட்டுகிறார். இறுதியில் வரும் சண்டைக்காட்சியை கனல் கண்ணன் ஏன் இவ்வளவு நேர்த்தியின்றி வடிவடைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. படத்தின் முக்கியமான குறைபாடுகளில் இதுவும் ஒன்று. படத்தின் பலங்களில் இசை முக்கியத்துவம் பெறுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களிலும், பின்னணி இசையிலும் தன்னுடைய பங்கை செய்திருக்கிறார். ஆனாலும், பாடல்களில் அயன், வாரணம் ஆயிரத்தின் வாடை அதிகம்.


‘ஆதவன்’ கதையின் சொந்தக்கரர் இயக்குனர் ரமேஸ்கண்ணா. அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். குடும்பங்கள், இளைஞர்கள் என்று அனைவரையும் கவரும் நோக்கில் திரைக்கதையினை வடிவமைத்திருக்கிறார். அதனாலேயோ என்னவோ யதார்த்த மீறல்கள் அதிகம். வசனங்களில் புதிய முயற்சியை கையாண்டிருக்கிறார். ஆங்காங்கே, தசாவதாரத்தின் பாதிப்பு தெரிகிறது. தன்னை முழுமையான வர்த்தக சினிமா இயக்குனர் என்று காட்டிக்கொள்வதில் கே.எஸ்.ரவிக்குமார் ஆதவனிலும் பின் நிற்கவில்லை.


கோடிகளை கொட்டி படமெடுத்து வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் தயாரிப்பாளராகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின் எதிர்காலத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்யவேண்டும். அவருக்கு ஏற்கனவே ‘குருவி’யில் பட்ட அடி அதிகமே. ஆனாலும், ஆதவன் அந்த அடியை வழங்கமாட்டன் என்று நம்பலாம். 168 நிமிடங்கள் ஓடும் ஆதவனை சிரிப்பதற்காகவும், ரசிப்பதற்காகவும் பார்க்கலாம். ஆதவன், ரொம்பவே அலட்டல்காரன்தான் ஆனாலும், ரசனையுள்ளவன்.

ஸீரோ டிகிரி: சாருவின் மறு அல்ல உண்மையான பக்கம்.


எது நல்ல இலக்கியம், எது நல்ல எழுத்து என்பதில் எனக்கு நீண்ட நாட்களாக (மூன்று, நான்கு வருடங்களாக) கேள்விகள் உண்டு. பலரால் நல்ல எழுத்து என்று சொல்லப்படுபவை சிலரினால் மிக மோசமாக விமர்சிக்கப்படுகின்றன. அதுபோல வெளிநாட்டு இலக்கியங்கள் சிலவற்றுடன் ஒப்பிட்டு கொண்டாடப்படுகின்ற சில இலக்கியங்கள் மொழிதிறனும், ஆபாசமும், வக்கிரமும், வியாக்கியானங்களும் நிறைந்தவை என்று புறந்தள்ளப்பட்டு விடுகின்றன. இவ்வாறான நிலையில் எது நல்ல இலக்கியம், எது சிறந்த எழுத்து என்பதில் என்னுடைய கேள்விகள் விடையின்றி தொடர்கின்றன.

என்ன இது? எடுத்தவுடனேயே இலக்கியம், நல்ல எழுத்துக்கள் என்று மிகவும் காத்திரமான விடயங்களை பேசுகிறானே என்று யோசிக்க வேண்டாம். இந்த பதிவில் அண்மையில் வாசித்த சாரு நிவேதிதாவின் ‘ஸீரோ டிகிரி’ குறித்தே என்னுடைய மன ஓட்டங்களை இங்கே பதிவு செய்கிறேன். இது விமர்சனமாகவோ, குற்றச்சாட்டுக்களாகவோ, ஆதரவாகவோ யாராவது எடுத்துக்கொண்டால் அது குறித்து மருதமூரானாகிய புருஜோத்தமன் தங்கமயில் அதாவது நான் அலட்டிக் கொள்ளமாட்டேன்.

தமிழக எழுத்துலகில் ‘நிர்வாண எழுத்தாளன்’ என்று பலரினால் அடையாளப்படுத்தப்பட்ட சாரு நிவேதிதாவை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கிடைத்தது. ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படம் குறித்த கட்டுரையை சாருவின் வலைமனையில் படித்திருக்கிறேன். அதிலிருந்து அடிக்கடி சாருவின் வலைமனையை வாசித்து வந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியான அவரது கட்டுரைத் தொகுப்பான ‘தப்புத்தாளங்கள்’ வாசித்திருக்கிறேன். அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நண்பர் வந்தியத்தேவன் என்கிற பே.மயூரன் அவர்கள் என்னிடம் தந்த ‘ஸீரோ டிகிரி’ படித்தேன்.

ஆசைகள், விருப்பங்கள், வெறுப்புக்கள், பாலியல் தேவைகள், காம வேட்கைகள், உணர்வுகள் என்று ஒவ்வொருவரின் ஆழ் மனதிலும் இருக்கின்ற அனைத்தையும் வெளிப்படுத்தினால் அல்லது தேடிக்கொள்ளும் போது எம்மை ‘மனிதன்’ என்ற வரையறுக்குள் இருந்து விலக்கி ‘மிருகம்’ அல்லது அதற்கு கீழான நிலைக்கு வைத்துவிடும். முனியாண்டி, சூர்யா, பக்ருனிஸா, திப்தி, இன்னும் இன்னும் பல பெயர்களில் சாரு என்கிற மனிதன் தன்னையும், சமூகத்தையும் ‘ஸீரோ டிகிரி’யில் வெளிப்படுத்தியிருக்கின்றான். அதில் ஆபாசங்களும், விரசங்களும் அதிகமாக தெரியலாம். ஆனால், அது எம்முடைய ஆழ்மனதில் அவ்வாறு தெரிவதில்லை.

சாருவின் எண்ணங்களும், அனுபவங்களும் கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள் என்று பல வடிவங்களில் ‘ஸீரோ டிகிரி’யில் பதியப்பட்டிருக்கிறது. அது நாவலா? அல்லது பல எழுத்துக்களின் தொகுப்பா என்று வாசித்த எனக்கு தெரியவில்லை. சிலவேளை அது சாருவுக்கும் தோன்றியிருக்கலாம். ஆனால், ‘ஸீரோ டிகிரி’யில் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பல விடயங்கள் உண்டு. யாரை நோக்கி ஸீரோ டிகிரி எழுதப்பட்டுள்ளதாக சாரு குறிப்பிட்டுள்ளாரோ அதில் அரைவாசிக்கும் அதிகமானோரால் அது புரிந்துகொள்ளப்படமாட்டாது. அதற்குள் நானும் அடங்கலாம்.

படைப்பு ஒன்று யாருக்காக அளிக்கப்படுகிறது என்று படைப்பாளியே தீர்மானிக்கிறான். ஆனால், அந்த படைப்பை வெற்றியாக்குவது என்னவோ வாசகனோ, வாசகியோதானே. அது புரிந்து கொள்ளப்பட்டு ‘ஸீரோ டிகிரி’ பல இடங்களில் எழுதப்படவில்லை என்பது என்னுடைய கருத்து. அதற்கு சாருவின் வெளிநாட்டு இலக்கியங்கள் மீதான அளவு கடந்த பாசமாகவும் இருக்கலாம். ஆனால், அந்த பாசத்தினை தமிழ் மொழிக்குள் கொண்டு வரும் பொழுது அதீத அக்கறை கொள்ளவேண்டும். அப்பொழுது அவரது படைப்புக்கள் இன்னும் இன்னும் வாசகர்களையும், வாசகிகளையும் பெற்றுக்கொள்ளும். சாருவின் தீவிர ரசிகனான என்னை நான் ஒருபோதும் வைத்துக்கொண்டதில்லை. ஆனாலும், அவரது சிறுகதைத் தொகுப்பான ‘மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்’ வாசிக்க திட்டமிட்டுள்ளேன். அது எப்போது என்று எனக்கு தெரியாது.

‘பசங்க’ சொன்ன என்னுடைய பள்ளி வாழ்க்கை.


பள்ளிப் பருவதில் கல்வி, நட்பு, குறும்பு, பொறாமை, விரோதம், ஆர்வம், எதிர்பாலரின் மீதான ஈர்ப்பு என்ற அனைத்து உணர்வுகளையும் நானும், நீங்களும் கடந்து வந்திருக்கலாம் அல்லது வரலாம். இந்த உணர்வுகளை யதார்த்த மீறல்கள் இன்றி சொல்லியிருக்கிறது ‘பசங்க’ திரைப்படம். இந்த வருடத்தின் நடுப்பகுதியில் வெளியான இந்தப் படத்தினை பாண்டிராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

தமிழ் திரைத்துறையில் அத்தி பூத்தாற்போல சிறுவர்களே முக்கிய பாத்திரங்களில் நடித்து வெளியான சிறுவர்களுக்கான படங்களும் உண்டு. அதற்கு 90களில் வெளியான மணிரத்தினம் இயக்கிய ‘அஞ்சலி’நல்ல உதாரணம் (அஞ்சலி படம், பெரியவர்களுக்கானது என்ற வாதமும் பரவலாக முன்வைப்பட்டன). அந்த வரிசையில் சில குறைபாடுகள் உள்ள போதிலும் ‘பசங்க’ படத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். (அண்மைக்காலத்தில் சிறுவர்களை கவரும் நோக்கில் உருவாக்கப்பட்ட படமாக விளம்பரப்படுத்தப்பட்ட ‘கந்தசாமி’ படத்தினை சிறுவர்கள் பார்ப்பதைத் தவிர்க்கலாம்).

தமிழகத்தின் கிராமமொன்றிலுள்ள பள்ளியில் நடக்கின்ற சம்பவங்களும், அதனை ஒட்டிய இயல்பான மாற்றங்களுமே கதையின் கரு. இடைநிலைப் பள்ளியொன்றில் 6ஆம் வகுப்பில் படிக்கும் ஜீவா. அவனுக்கு இரண்டு நண்பர்கள். அவனது அத்தை மகளும் அதே வகுப்பில் படிக்கின்றாள. ஜீவாவும், நண்பர்களும் குறித்த வகுப்பின் கட்டுப்பாட்டை தமக்குள் வைத்திருக்கின்றனர். ஜீவாவின் தந்தை குறித்த வகுப்பின் பொறுப்பாசிரியர். ஆங்கிலப் பள்ளியொன்றில் படித்த அன்பு(க்கரசு) தனது குடுப்பத்துடன் ஜீவாவின் எதிர்வீட்டுக்கு குடிவருகிறான். அவன், புதிதாக குறித்த வகுப்பில் சேருகின்றான். அதுவரை, ஜீவாவின் கட்டுப்பாட்டிலிருந்த வகுப்பு முழுவதும் சிறிது சிறிதாக அன்பு பக்கம் சாய்கிறது. இதனால், கோபமடையும் ஜீவா, அன்புவை கவிழ்த்துவிட வேண்டும் என்ற நினைக்கின்றான். இதனால், எழும் பிரச்சினைகளும் மாற்றங்களுமே படத்தின் உள்ளடக்கம்.

‘பசங்க’ படத்தில் அன்புவின் பாத்திரத்தினூடு புதிய மாணவன் ஒருவன் தனக்கு அறிமுகமில்லாத சூழலில் அல்லது பள்ளியில் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகிறான். அவனுக்கும் புதிய மாணவர்களுக்குமான தொடர்பாடல் எப்படியிருக்கும். அவன் ஏற்கனவே பெற்றிருந்த கற்பித்தல் முறைக்கும், புதிய கற்பித்தல் முறைக்கும் இடையிலான வித்தியாசங்களை எவ்வாறு புரிந்து கொள்ளப்போகின்றான். என்று பல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

என்னுடைய பள்ளி வாழ்க்கையில் 10ஆம் தரத்திற்காக புதிய பாடசாலையொன்றுக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த பாடசாலைக்கு சென்றதும் மற்ற மாணவர்களுக்கு நான் புதியவன். (அவர்கள் எனக்கு புதியவர்கள்) யாருடன் பேசுவது, என்ன பேசுவது, ஆசிரியர்கள் என்னை ஆதரிப்பார்களா என்றெல்லாம் மனதுக்குள் பயம் இருந்தது. அந்த பயத்தினை மூன்று நண்பர்கள் சில நாட்களுக்குள் நீக்கி, என்னை அவர்களின் நெருங்கிய நட்பு நிலைக்குள் உள்வாங்கிக்கொண்டார்கள் (நன்றி நண்பர்கள் அகில், அகிலன், மதுசூதனன்). இதுபோன்ற நிலைமைகள் உடனடியாக நடந்துவிடுவது அனைவருக்கும் சாத்தியமில்லை. இவ்வாறான நிலையில் புதிய மாணவர்கள் மனதளவில் மற்றவர்களிடமிருந்த விலகியும், சோர்ந்தும் இருப்பதை உணர்ந்துள்ளேன். கண்டுமுள்ளேன்.

அடுத்தது, வேறு ஒரு கற்பித்தல் முறைக்கு பழக்கப்பட்டிருந்த மாணவன் புதிய கற்பித்தல் முறைகளை உள்வாங்கிக்கொள்வதிலுள்ள சிக்கல்கள். இலங்கையில் ஒரு பாடத்திட்டம் இருப்பதால் பெரிய பிரச்சினைகள் வருவதில்லை. ஆனாலும், துணைப்பாடங்களான அழகியல், இலக்கியம், தொழிமுறைப் பாடங்கள் உள்ளிட்ட பாடங்களின் தேர்வு சிக்கல்களை உருவாக்குவதுண்டு. இந்த இரண்டு விடயங்களும் ஒரு மாணவனின் பள்ளி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. இவ்வாறான நிலைமைகள் சாதுர்யமாகவும், அவதானத்துடனும் கையாளப்பட வேண்டியவை. அப்போதே புதிய மாணவனின் உண்மையான திறமைகள் வெளிப்படும்.

‘பசங்க’ படத்தில் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதி சொல்லப்பட்டிருந்தாலும், அவை பூரணப்படுத்தப்படவில்லை என்ற நிலைமை அதிக இடங்களில் தெரிகின்றன. அதற்கு, சினிமா தனங்களின் உள்ளடக்கங்களுக்காக சேர்க்கப்பட்ட காட்சிகளும் காரணமாக இருக்கலாம். அதனை இயக்குனர் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், பசங்க பள்ளித் தோழர்களுக்கும், சிநேகிதிகளுக்கும் நல்ல விடயங்கள் பலவற்றைச் சொல்லிச் சென்றுள்ளது. நானும், நீங்களும் பள்ளியின் கற்றதை, கற்பதை திரையில் காட்டியுள்ளது.

பாலியல் தொழில்: மனிதனின் ஆதித்தொழில். அழிவற்றதும் கூட.


“எங்கள் நாட்டின் இளம் பெண்களே, பாலியல் தொழிலை கௌரவ குறைவாக நினைக்காதீர்கள். நீங்கள்தான் எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு” என்கிறது தாய்லாந்து அரசு. “விபச்சாரம் கலாச்சாரத்தை சீரழிக்கிறது. ஆகவே அது முற்றுமுழுதாக தடுக்கப்பட வேண்டும்” என்கிறார்கள் இலங்கை, இந்திய கலாச்சார ஆர்வலர்கள். “பாலியல் தொழில் சட்டபூர்வமானது” என்கின்றன மேற்குலகின் நாடுகள் பல. இவ்வாறு மனித இனத்தில் முதல் தொழிலான பாலியல் தொழிலுக்கு அங்கீகாரங்களும், அனுமதி மறுப்புக்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

பாலியல் தொழில் அல்லது விபச்சாரம் (இந்த வார்த்தை பிரயோகத்தில் எனக்கு உடன்பாடு இல்லை) என்று ஊடகங்களாலும், தகவல் பரிமாற்ற கருவிகளாலும் தொடர்ந்தும் முதன்மைப்படுத்தப்படும் இந்த விடயங்களைக் கொண்டு மக்களிடம் ‘பாலியல் தொழில்’ குறித்து அறிந்து கொள்வதிலுள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் பாலியல் தொழில் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் நடிகை புவனேஸ்வரி கைதுசெய்யப்பட்டார். குறித்த செய்திகளே தமிழகத்தின் முன்னணி ஊடகங்களினால் இரண்டு, மூன்று தினங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. அந்த செய்தியின் தொடர்ச்சி இன்னும் முடிந்துவிடவில்லை.

கடந்த வருடம் மகளிர் விழிப்புணர்வு சஞ்சிகையில் வெளியாகியிருந்த பாலியல் தொழில் சம்பந்தமான கட்டுரையை வாசித்திருந்தேன். அந்த கட்டுரையாசிரியர் இலங்கையின் பல இடங்களில் பாலியல் தொழில் புரியும் பெண்களிடம் ஆய்வுகளை செய்தே அதனை எழுதியிருந்தார். அதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டினால் பொருத்தமாக இருக்கும். “பாலியல் தொழிலில் ஈடுபடும் சாதாரண பெண்களே அதிகம் தண்டிக்கவும், வஞ்சிக்கவும் படுகிறார்கள். அவர்களுக்கு என்று இருக்கின்ற மனிதம் எந்த தருணத்திலும் மதிக்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்களின் திருப்திக்காக உழைக்கும் இவர்கள் விபச்சாரி, விலைமாது என்கின்ற பெயர்களில் அனேகரால் அழைக்கப்படுகின்றனர். அதே, பாலியல் தொழிலில் ஈடுபடும் மேல்தட்டு பெண்கள் (இதில், நடிகைகள் உள்ளிட்ட பிரபலமானவர்களும் அடக்கம்) அதிக பணத்துடன் அதிகார செல்வாக்கையும் பெற்றுக்கொண்டு மேதாவிகளாக வலம் வருகிறார்கள், இவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் குறைவு. இவர்கள் சில தருணங்களின் சமூகத்தில் மிகவும் அந்தஸ்துடனும் வைத்து பார்க்கப்படுகிறார்கள்”. பாலியல் தொழில் இரண்டு தளங்களில் பயணிக்கின்றது. அல்லது நடைபெறுகின்றது. அந்தந்த தளங்களில் அவர்களின் நிலை தீர்மானிக்கவும் படுகிறது. (முக்கிய குறிப்பு: பாலியல் தொழிலில் ஆண்களும் அனேக அளவில் ஈடுபடுகிறார்கள்)

இந்தியா, இலங்கை உள்ளிட்ட கலாச்சாரமும், குடும்ப நிலையும் அதிகமாக இறுக்கமாகவுள்ள நாடுகளிலேயே சிறுவர் துஸ்பிரயோகங்களும், பாலியஸ் துஸ்பிரயோகங்களும் அதிகரித்து செல்கின்றன. இவற்றுக்கு என்ன காரணம் என்று சொல்வது. மேற்குலகில் கற்பழிப்புக்களும், சிறுவர் துஸ்பிரயோகங்களும் அதிகரித்து செல்லமாமைக்கு பாலியல் தொழிலின் அங்கீகரமும் ஒரு காரணம். இந்தியாவில் மாநிலங்களுக்குள்ளேயே பாலியல் தொழிலுக்கு அங்கீகாரங்களும், அங்கீகார மறுப்புக்களும் கண்கூடு. கொல்கொத்தாவின் சோனாக்காச்சியும், மும்பையின் தாராவியும் பாலியல் தொழில் கொழிக்கும் இடங்கள். இந்த பகுதிகளில் பாலியல் தொழில் சட்டவிரோதமாக அனேக தருணங்களில் பார்க்கப்படுவதே இல்லை. இவ்வாறு ஒரு ஜனநாயக நாட்டுக்குள்ளேயே பாலியல் தொழில் குறித்து வாதப்பிரதி வாதங்கள் முடிவுறவில்லை.

ஐ.போன்களைத் தயாரிக்கும் அப்பிள் நிறுவனம் அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திவிட்டு செயற்கைப்பஞ்சத்துடனேயே ஐ.போன்களை விற்பனைக்கு விடுமாம். அதபோலவே, பாலியல் தொழிலும் சில தருணங்களில் செயற்கை பஞ்சம் உருவாக்கப்பட்டு அதிக விற்பனைக்கு தூண்டப்படுகிறது. இதற்கு அந்த தொழிலிலுள்ள வருமானமே முக்கிய காரணம். பாலியல் தேவைகளுக்காக ஆண்களும், பெண்களும் தற்போதைய காலகட்டத்தில் மிக இயல்பாகவே தொழில் புரிவோரை நாடிச் செல்கின்றனர். இந்த நிலைகள் அனைத்து மக்கள் சமூகத்திலும் அதிகரித்துள்ளது. இவற்றை கலாசார காவல்களும், குடும்ப வளையங்களும் அதிகளவில் கட்டுப்படுத்த முடிவதில்லை.

புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலியல் தொழில் புரிந்த பீலி (குறித்த பெயர் சரியென்றே நினைக்கிறேன்), இந்து மதத்தின் பெயரால் அதனை நடத்தியவர்கள் கொண்டுவந்த தாசி முறை, மனித இனத்தில் முதல் மனிதனே தன்னுடைய மகள்களை புணர்ந்தமை என்று பல இடங்களில் பல வடிவங்களில் பாலியல் தொழில் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு ஆண்களின் (பெண்களின்) தேவைகளும், புதிய புதிய ஈர்ப்புக்களுமே காரணம். இதனை பயன்படுத்தி பலர் பணம் பண்ணுகிறார்கள். பாலியல் தொழிலை கட்டுப்படுத்துவது என்பது எந்தக்காலத்திலும் சாத்தியமில்லாதது. ஏனென்றால் அது ஒவ்வொரு மனிதனின் சுய தேவை, உணர்வு, மனநிலை, கட்டுப்பாடு என்று பல விடயங்கள் சம்பந்தப்பட்டது.

மக்களின் முன்னால் ஏக பத்தினி விரதனாக காட்டப்படுபவர்கள் பலரின் மறுபக்கங்கள் பாரிய வக்கிரங்களையும், பாலியல் வன்மங்களையும் கொண்டதாக இருக்கும். அதனை பல தருணங்களில் நாம் அறிந்துமுள்ளோம். அதுபோலவே பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களில் பலர் மனிதநேயத்தை மதிப்பவர்களாக, மனித உணர்வுகளை புரிந்து கொள்பவராக இருப்பதையும் நாம் பார்த்துள்ளோம். பாலியல் தொழிலின் வருகை நல்லவற்றையும், கெட்டவற்றையும் சமஅளவில் கொண்டு செல்கிறது. அது குறித்து ஆராய்வது இந்தக்கட்டுரையில் நோக்கமல்ல. பாலியல் தொழிலின் தோற்றத்துக்கு பலரும் காலத்தை வேண்டுமானல் கண்டுபிடிக்கலாம்… ஆனால், அதற்கான முடிவு எந்தக்காலத்திலும் சாத்தியமற்றது.

ஈரம்: பாட்டி சொன்ன கதை, நவீன யுத்தியுடன்.


நம்முடைய பாட்டிகளும், தாத்தாக்களும் சொல்லிய பேய், ஆவி கதைகளை நாம் பயத்துடன் கேட்டுக்கொண்டாலும், அதில் வரும் திடீர் திருப்பங்களும், திகில்களும் எம்மை இரசிக்க வைத்திருக்கின்றன. அதே மாதிரி ‘ஆவி’ என்கிற விடயத்தை எடுத்துக்கொண்டு நவீன யுத்திகளுடன், நேர்த்தியான கதை நகர்த்தலுடம் புதுமுக இயக்குனர் அறிவழகன் இயக்கியிருக்கும் படம் ‘ஈரம்’. 2009ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள நல்ல படங்களில் இதனையும் சில விட்டுக்கொடுப்புக்களுடன் சேர்த்துக்கொள்ளலாம்.


தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் குளியலறையில் இளம் குடும்ப பெண்ணான ரம்யா (சிந்து மேனன்) இறந்து கிடக்கிறார். அதனை விசாரணை செய்யும் காவல்துறை தற்கொலை என்று முடிவு செய்கிறது. அந்த தருணத்தில் அந்த மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறி மேலதிக விசாரணைகளுக்காக புறப்படுகிறார் காவல்துறை அதிகாரி வாசுதேவன் (ஆதி). விசாரணையை மீண்டும் ஆரம்பித்த சமயத்தில் அதே தொடர்மாடி குடியிருப்பில் தொடர்ச்சியாக மூவார் கொலை செய்யப்படுகின்றனர்.


இந்த கொலைகளுக்கும், ரம்யாவின் மரணத்துக்கும் தொடர்புள்ளதா என்று தேடிச்செல்லும் வாசுதேவனுக்கு விடையாக கிடைப்பது என்னவோ யாரும் எதிர்பார்க்காத ‘தண்ணீர்’என்பதே. இந்த விடயத்தை நூலாக பிடித்துக்கொண்டு விசாரணையை நடத்தி செல்லும் வாசுதேவனுக்கு மேலும் கிடைப்பது அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களுமே. தண்ணீர் கொலை செய்யுமா? ரம்யாவின் மரணம் கொலையா, தற்கொலையா? ஆவிகள் இருக்கின்றவா? என்று பல வினாக்களை இரசிகர்களுக்கு வரவைத்து விடை சொல்லியிருக்கிறது ஈரம்.


‘மிருகம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிய ஆதி, காவல்துறை அதிகாரியாகவும், கல்லூரி மாணவராகவும் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். அவருக்கும், சிந்துமேனக்கும் இடையிலான கல்லூரிக்கால காதல் மெல்லிசை போல அவ்வளவு அழகு. ‘கடல்பூக்கள்’ படத்திற்கு பின்னர் காணாமல் போயிருந்த சிந்துமேனனுக்கு, ஈரம் பல புதிய படங்களை வாங்கித்தரும். ஆதியின் காதலியாகவும், நந்தாவின் மனைவியாகவும் இயல்பாக நடித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் அறிமுகமாகி சரியான வாய்ப்பு அல்லது வெற்றி கிடைக்காமல் காத்திருந்த நந்தாவுக்கு, ‘ஈரம்’ புதிய பாதையைக் காட்டிச் சென்றுள்ளது. சிந்துமேனனின் சந்தேகம் பிடித்த கணவனாக வந்து வில்லத்தனம் காட்டியிருக்கிறார். சிந்துமேனன் கர்ப்பமாக இருக்கின்றார் என்றதும் நந்தாவின் முகமும், விரல்களும் செய்யும் அசைவுகள் அவரின் நடிப்புக்கு சான்று. சரண்யா மோகன், சிந்துமேனனின் தங்கையாக வந்து செல்கிறார். சில இடங்களில் நடிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியும் இருக்கிறார். ஆனாலும், அவர் தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை எதிர்காலத்தில் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.


படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக பயணிக்கிறது ஒளிப்பதிவு. படம் முழுவதும் ஒருவகை பச்சை வர்ணத்தை கொண்டு படம் பிடிதிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. தண்ணீரை கொலையின் வடிவமாக காட்டியதில் இவரின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. தொடர்மாடிகளின் தொடரையும், கிராமத்து அழகையும் தன்னுடைய கலை இயக்கத்தில் இயல்பாக கொண்டு வந்திருக்கிறார் ராம்பொன். பாடல்களில் மெல்லிசை காட்டி, பின்னணியில் திகிலும், எதிர்பார்ப்பும் கூட்டியதில் அறிமுக இசையமைப்பாளர் சாய் தமன் வெற்றி பெற்றிருக்கிறார். திரைக்கதையின் திருப்பங்களுக்கு ஏற்ப காட்சிகளை வரிசைப்படுத்தியதியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கிசோர். ஆனாலும், இறுதிக்காட்சிகளில் நீட்டி அதிகம். கவனம் செலுத்தியிருக்கலாம்.


பிரமாண்டம், அதீத கற்பனை என்று தன்னுடைய திரை பயணத்தை வடிவமைத்துள்ள இயக்குனர் சங்கர், புதிய இயக்குர்களுக்கு யதார்த்தம், புதிது, மாற்று களம் என்று புதிய திரைப்பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். காதல், வெயில், கல்லூரி வரிசையில் மிகக்குறைந்த முதலீட்டில் தரமான படங்களை தரமுடியும் என்று மீண்டும் ஈரத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இயக்குனர் அறிவழகனின் கதையில் நம்பிக்கை வைத்து படத்தை தயாரித்திருக்கிறார் சங்கர். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.


‘ஆவி’ என்கிற விடயத்தை தமிழ் இயக்குனர்கள் பல தடவைகள் படங்களில் கையாண்டுள்ளனர். ஆனால், அதற்கு புதிய வடிவம் கொடுத்து இரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் அறிவழகன். விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதையின் காட்சிகளின் கோர்ப்பு அற்புதம். ஆனாலும், இறுதிக்காட்சிகளில் தேவையற்ற நீட்சி. அவற்றை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். குத்து பாடல்கள், தேவையற்ற சண்டைக்காட்சிகள், வளமற்ற நகைச்சுவைகாட்சிகள் இல்லாமலும் மக்களை கவரமுடியும் என்பதில் புதுமுக இயக்குனர் அறிவழகன் வெற்றி பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் புதுமுயற்சிகளுக்கு மற்றுமொரு சான்று ‘ஈரம்’. மக்கள் மனதை பெரிய மறுப்பின்றி ஈரம் கவரலாம்.