கறுப்பு அடிமைகளின் கதை: பராக் ஒபாமாவின் ஆரம்பம்.


அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினை முதற் தடவையாக பராக் ஒபாமா என்ற கறுப்பு மனிதர் அலங்கரிக்கின்ற தருணம் இது. அதே நாட்டில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒபாமாவின் தந்தை வழி முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளும், இன்னல்களும் சொல்லிவிட முடியாதவை. இருண்ட ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டவர்கள், அமெரிக்காவில் வெள்ளையினத்தினரால் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டும், புதிய அடிமைகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதுமான கோரமான வரலாறு அது. அந்த வரலாற்றினை சீரியமான சொல்கிறது ‘Uncle Tom's Cabin: கறுப்பு அடிமைகளின் கதை’ என்கிற நாவல்.


அமெரிக்காவின் வர்க்க பேதங்களுக்குள் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பர்களின் உரிமைப்போராட்டங்களுக்கு வழிவகுத்த முக்கியமான விடயங்களுள் ‘Uncle Tom's Cabin’ தவிர்க்க முடியாதது. ஹேரியட் பீச்சர் ஸ்ரேவ் (Harriet Beecher Stowe) என்கிற அமெரிக்க பெண் எழுத்தாளரினால் எழுதப்பட்டு இந்த நாவல் 1852ல் வெளிவந்தது. ‘அமெரிக்காவின் கெண்டக்கி நகரத்தில் ஷெல்பி என்கிற வெள்ளையின முதலாளியின் அடிமையாக இருக்கும் டாம் மாமாவின் வாழ்கையும், அதனூடு அவரின் சுதந்திரத்துக்கான வேட்கையும், அதற்கான அவரின் முயற்சிகளும், அவரின் முடிவுமே’ குறித்த நாவலின் அடிநாதம்.


ஆடு, மாடுகள் ஏலத்தில் விற்கப்படுவது போல அமெரிக்க சந்தைகளில் சுமார் 300 வருடங்களுக்கும் அதிகமாக காலமாக ‘ஆபிரிக்க கறுப்பர்கள்’ ஏலத்தில் விற்கப்பட்டார்கள். ஏலச் சந்தையில் அடிமைகளை கிள்ளியும், அடித்தும், பெண் அடிமைகளின் பாலுறுப்புக்கள் பரிசோதிக்கப்பட்டும், ஆண்கள் துள்ளி குதிக்க வைத்தும் பதம்பார்த்து விற்கப்பட்டார்கள். தாயும் சேயும், கணவனும் மனைவியும் வேறுவேறு நுகர்வாளருக்கு விற்கப்படுவது மிகச்சாதரணமான நடந்துள்ளன. இவைகளையெல்லாம் அச்சொட்டாக சொல்லிச் செல்கிறது குறித்த நாவல்.


“வெள்ளை மனிதன் ஆளவும், அனுபவிக்கவும் பிறந்தவன், கறுப்பர்கள் அடிமைகளாக தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் வேலை செய்ய பிறந்தவர்கள்” என்ற வாதம் அமெரிக்காவில் 1700-1900 வரை வலுப்பெற்றிருந்த காலம். அமெரிக்காவின் வடக்கு தோழனான கனடாவில் சுதந்திரமாக நடமாடிய கறுப்பர்கள் அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த காலம். தொடர்ந்து அடக்கப்பட்டு வந்த இனமொன்று எவ்வாறு சிறிது சிறிதாக சுதந்திரத்துக்காக ஏங்குகிறது என்றும், அதற்கான முயற்சிகள் சீரான கல்வியிலேயே தங்கியுள்ளது என்பதையும் ஓரளவு வெற்றிகரமான சொல்லிச் செல்கிறது ‘Uncle Tom's Cabin’. குறித்த நாவலின் ஆரம்பம் சற்று தொய்வை ஏற்படுத்தியிருந்தாலும், மத்தியும், இறுதிப்பகுதியும் மிகவும் ஆர்வத்துடன் படிக்க வைக்கின்றன. ‘கிறிஸ்தவ மதக்கோட்பாடுகளினூடு’ கதை நகர்த்தி செல்லப்பட்டிருப்பதால் நாவலில் சில அத்துமீறல்களும் உண்டு. எழுத்தாயினி (எழுத்தாளரின் பெண்பால் சரியா?) ஹேரியட் பீச்சர் ஸ்ரேவ் ஆன்மீகச்சூழலில் வாழ்ந்துள்ளதால் அது தவிர்க்க முடியாமல் போயுள்ளது.


‘Uncle Tom's Cabin’ என்கிற இந்த நாவல் வெளியாகி, 155 வருடங்கள் கழித்து, வான்முகிலனால் 2003ஆம் ஆண்டு ‘கறுப்பு அடிமைகளின் கதை’ என்கிற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மிக இயல்பான மொழி நடையில் செல்லும் இந்த நாவலை அண்மையிலேயே நான் வாசித்திருந்தேன். அதன் தாக்கமே இந்த பதிவை எழுத தூண்டியது. இந்த பதிவினால், ஒரு சில வாசகர்களாவது ‘கறுப்பு அடிமைகளின் கதை’யினை வாசித்தால் அமெரிக்கர்கள் செய்த அடக்குமுறையையும், ஆபிரிக்கர்கள் பட்ட அவஸ்தைகளையும் நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தை பெறமுடியும்.


"So this is the little lady who made this big war (இந்த பெரிய யுத்தத்தை உருவாக்கிய புத்தகத்தை எழுதிய சிறுபெண்)” என்று அமெரிக்காவின் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால், ஹேரியட் பீச்சர் ஸ்ரேவ் புகழப்பட்டவர். அமெரிக்காவின் இன அடக்கு முறைகளுக்கு பெரியளவில் முடிவுகட்டிய ஆபிரகாம் லிங்கனே அலங்கரித்த வெள்ளை மாளிகையை இப்பொழுது பராக் ஒபாமா என்கிற கறுப்பு மனிதன் அலங்கரிப்பது சுதந்திர வேட்கையின் வெற்றியா? அடக்கு முறைகளின் அழிவா? மனிதத்தின் வெற்றியா? என்பது என்னை வியக்க வைக்கின்ற வினாக்கள்.

Posted in | 8 comments

ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடர் 2009: எதிர்பார்ப்புக்களும், ஏமாற்றங்களும்.


“இருபதுக்கு-20 கிரிக்கட் தொடர்களில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறமைகளை கருத்தில் கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளுக்கு வீரர்களை தெரிவு செய்ய கூடாது, அவ்வாறு செய்தது தவறாகிவிட்டது” என்கிறார் இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி. தங்கள் அணிகள் சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்தாதையிட்டு இலங்கை அணித்தலைவர் குமார் சங்ககாரவும், தென்னாபிரிக்க அணித்தலைவர் கிரகம் ஸ்மித்தும் கவலையுடன் ஆத்திரப்படுகிறார்கள். ‘ஒற்றுமையின் பலமே தமது அணியின் வெற்றி’ என்கின்றனர் பாகிஸ்தான் அணித்தலைவர் யூனுஸ்கானும், இங்கிலாந்து அணித்தலைவர் அன்ரூ ஸ்ரோசும்.

தென்னாபிரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் சர்வதேசக் கிரிக்கட் சபையின் (ஐ.சி.சி.) சம்பியன்ஸ் தொடரின் வெற்றிகளும், தோல்விகளும் முன்னணி கிரிக்கட் அணிகளின் தலைவர்களை மேற்கூறியவாறு கருத்து தெரிவிக்க வைத்துள்ளன. இவ்வாறான கருத்துக்கள் தொடர்ந்தும் இறுதிப்போட்டி வரை வெளிவரும். பங்களாதேஷில் 1998ஆம் ஆண்டு முதன்முதலாக ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடர் நடைபெற்றது. இவ்வருடம் தென்னாபிரிக்காவின் வடகிழக்கு நகரங்களான ஜோகனஸ்பேர்க்கிலும், சென்சூரியனிலும் நடைபெற்று வருகின்ற ஐ.சி.சி. சம்பியன்ஸ் தொடர் 6வது தொடராகும். (இந்தத் தொடர் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவேண்டியது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி முன்னணி அணிகள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததையடுத்து ஐ.சி.சி தென்னாபிரிக்காவுக்கு தொடரினை மாற்றியது.)

ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் இவ்வருட வெற்றியாளராக தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய முன்னணி அணிகளில் ஒன்றே என அளவுக்கு அதிகமான எதிர்வு கூறல்களை கேட்டும், வாசித்தும் விட்டோம். ஆனால், தொடரின் லீக் ஆட்டங்களிலேயே இலங்கை, இங்கிலாந்து அணிகளிடம் தோல்வியுற்று போட்டிகளை நடத்துகிற தென்னாபிரிக்கா வெளியேறிவிட்டது. பங்களாதேஷில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் வெற்றியாளர் தென்னாபிரிக்காவே, இந்த தொடர் ஆரம்பிக்கும் தருணத்தில் ஒருநாள் கிரிக்கட்டின் தரவரிசையில் முதலாவது இடத்திலிருந்தது.

இந்திய அணி, தனது பரம வைரியான பாகிஸ்தானிடம் பாரிய தோல்வியையும், அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் மழையின் உதவியினால் முடிவும் பெற்றுக்கொள்ளாமல் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு எதிரணியின் மிகப்பெரிய வெற்றியினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இலங்கையில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற 3வது ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் இணை வெற்றியாளர் இந்தியா, இந்தத் தொடர் ஆரம்பிக்கும் தருணத்தில் ஒருநாள் கிரிக்கட்டின் தரநிலையில் 2வது இடத்திலிருந்தது.

இலங்கை அணி முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தாலும், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளிடம் தோல்வியுற்று அரையிறுதிக்கு முன்னேறுவதுற்கு எதிரணியின் வெற்றியை அல்லது மற்ற எதிரணியின் பாரிய தோல்வியை காத்து நிற்கிறது. 3வது ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் இணை வெற்றியாளர்களில் மற்றவரான இலங்கை, இந்தத் தொடர் ஆரம்பிக்கும் தருணத்தில் ஒருநாள் கிரிக்கட்டின் தரநிலையில் 4வது இடத்திலிருந்தது.

அவுஸ்திரேலிய அணி, மேற்கிந்தியத்தீவுகளின் இரண்டாம் தர அணியுடன் திணறி வெற்றி பெற்று, இந்தியாவுடனான போட்டியில் முடிவின்றியும், பாகிஸ்தானை கட்டாயம் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலே அரையிறுதி என்ற நிலையிலும் இருக்கின்றது. இந்தியாவில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற 5வது ஐ.சி.சி. சம்பியன்ஸ் தொடரில் அவுஸ்திரேலியாவே கிண்ணம் வென்றது. இந்த தொடர் ஆரம்பிக்கும் தருணத்தில் ஒருநாள் தரநிலையில் 3வது இடத்திலிருந்தது.

அதிகம் எதிர்பார்க்கப்படாத பாகிஸ்தானும், இங்கிலாந்தும் எந்தவித இடர்பாடுகளுமின்றி அரையிறுதிக்கும் நுழைந்து விட்டன. கிரிக்கட்டின் எதிர்வு கூறல்கள் எந்தக்காலங்களிலும், பாரிய வெற்றியைத் தருவதில்லை. இந்த இரண்டு அணிகளும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களில் இதுவரை கிண்ணம் வெல்லவில்லை. இங்கிலாந்தில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற 4வது ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரில் இங்கிலாந்து இரண்டாம் இடம் பிடித்திருந்தது. இந்த தொடர் ஆரம்பிக்கும் தருணத்தில் அவுஸ்திரேலியா அணியிடம் 6:1 என்ற கணக்கில் படுதோல்வியின் வடுக்களுடனேயே இங்கிலாந்து களம் புகுந்தது.

பாகிஸ்தான் அணி, இருபதுக்கு-20 உலகக்கிண்ணத்தில் வெற்றி என்ற ஆரோக்கிய மனநிலையில் இந்த சம்பியன்ஸ் தொடருக்கும் நுழைந்திருந்தாலும், பாகிஸ்தான் அணிக்குள் குழப்பங்கள் தொடர்வதாக கருத்து நிலையுண்டு. ஆனாலும், பாகிஸ்தான் அணியை கிரிக்கட்டின் சில வல்லுனர்கள் கிண்ணம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகவே கருத்து தெரிவித்திருந்தனர். அதனை ஓரளவு நியமாக்கி அரையிறுதிக்கு எந்தவித இடர்பாடுகளுமின்றி சென்று விட்டது.

நியூசிலாந்து அணி, வெற்றி தோல்வி என்று தொடர்ந்தும் சரிசம நிலையில் பயணிக்கின்ற அணி. புதியவர்களை அதிகம் கொண்டிருக்கிறார்கள். கென்யாவில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற 2வது ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரில் இந்தியாவை சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ் கெயின்ஸின் அதிரடியின் உதவியுடன் நியூசிலாந்து வெற்றிகொண்ட வரலாறு உண்டு. 4வது ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் வெற்றியாளர்களான மேற்கிந்தியத்தீவுகள் இம்முறை தனது இரண்டாம் தர அணியுடனேயே களமிறங்கியுள்ளது. ஆக, அவர்களும், முதல் சுற்றிலேயே வெளியேறி விட்டார்கள்.

ஒருநாள் கிரிக்கட் தரநிலையில் முன்னணியிலிருக்கும் 8 அணிகள், 15 போட்டிகள், ஒரு வெற்றிக்கிண்ணம். என்ற இணைப்புக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் 6வது ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரில் யார் வெற்றியாளர்கள் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். ஆனாலும், அந்த வெற்றியாளர்கள் பாகிஸ்தானா? இங்கிலாந்தா? அவுஸ்திரேலியாவா? இலங்கையா? என்ற எதிர்வு கூறலையே கூறி இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய நேரிடுகிறது. இந்த எதிர்வு கூறல்களில் ஏமாற்றங்களும் சாத்தியமே. கிரிக்கட்டை காண கோடிக்கணக்காக இரசிகர்கள் காத்திருப்பதனால் வெற்றி பெறுவதென்னவோ பணமும், கிரிக்கட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Posted in | 5 comments

இலங்கை பதிவர்களுக்கு ஆதங்கத்துடன் ஒரு மடல்.


வணக்கம் பதிவர்களே,

இலங்கையிலிருந்து கடந்த 3 வருடங்களாக பதிவிடுகின்றவன் என்ற நிலையிலிருந்து இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த சில மாதங்களாக தொடர்ந்தும் அவதானித்து வந்த ஒரு விடயம் என்னையும், இன்னும் சில பதிவர்களையும் கவலைகொள்ள வைத்ததையடுத்தே இந்த கடிதத்தை எழுதவேண்டி ஏற்பட்டது. இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பது பதிவுலகத்துக்கு நன்மை பயக்குமென்று கருதுகிறேன். இனி விடயத்துக்கு செல்லுகிறேன்.

தமிழ் பதிவுலகில் 400க்கும் அதிகமான இலங்கைப் பதிவர்கள் (இதில் புலம் பெயர்ந்தவர்களும் அடக்கம்) இருப்பதாக அண்மையில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இது தமிழ் பதிவர்களின் மொத்தத்தில் 6 அல்லது 7 வீதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த நிலையிருக்கின்ற இலங்கை பதிவர்களில் அநேகர் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுற்றி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகின்றது. இதனால், இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பதிவிடுகின்றவர்களுக்கும் இலங்கை பதிவர்களுக்குமிடையில் பாரிய இடைவெளி விழுந்து விட்டதாக நினைக்கிறேன் (பலர் குறிப்பிட்ட விடயம்).

அதாவது, இலங்கையிலிருந்து பதிவிடுகின்றவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் மற்றைய (இந்திய உள்ளிட்ட வெளிநாட்டு) பதிவுகளை வாசிப்பதை குறைத்துக்கொண்டுவிட்டதான தோற்றப்பாடு ஒன்று உருவாகியுள்ளது. இதற்கு இலங்கை பதிவர்கள் தங்களுக்குள் மட்டுமே கருத்துக்களை அதிகமான பகிர்ந்துகொள்கின்றமையும் காரணமாக இருக்கலாம். இதனால், இந்திய மற்றும் வெளிநாட்டு பதிவர்களும் அநேக இலங்கை பதிவர்களை கண்டுகொள்வதில்லை. இதற்கு இலங்கை பதிவர்கள் மாத்திரம் காரணமல்ல என்றபோதிலும், அதில் முக்கிய பக்கங்கை நாங்கள் (இலங்கைப் பதிவர்கள்) பெறுகிறோம். இந்த நிலைமை நீடித்தால் தமிழ் பதிவுலகிலிருந்து இலங்கை பதிவர்கள் விலகி புதிய ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படும் சூழ்நிலைகள் உள்ளன.

2006, 2007 காலப்பகுதியில் வலையுலகில் நான் அறிமுகமான பொழுது இந்திய, இலங்கை, ஐக்கிய அமீரக பதிவர்கள் என்ற வேறுபாடுகள் பெரியளவில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இலங்கையிலிருந்து வருகின்ற புதிய பதிவர்கள் பலமான வரவேற்பு பெற்றார்கள். ஆனால், அந்த நிலைமை தற்போது இல்லை. அதற்கு இலங்கை பதிவர்கள் தங்களுக்குள் பதிவுகளை மட்டுப்படுத்திக்கொண்டது மட்டும் காரணமாக இருக்கலாம். அல்லது மற்றைய நாட்டு பதிவர்களிடமிருந்து மனதளவில் பிரிவதற்கு தயாராகிவிட்டமை காரணமாக இருக்கலாம். இவை உடனடியாக திருத்திக்கொள்ளப்பட வேண்டும். அப்பொழுதுதானே இலங்கை பதிவர்களின் படைப்புக்கள் அநேக தூரம் பயணிக்க வாய்ப்புக்கள் உண்டு.

இந்தக் கடித்ததை வாசிப்பவர்களில் அநேனர் என்னது இலங்கை பதிவர்கள் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு காரணமென்று மருதமூரான் குறிப்பிட்டுள்ளார் என்று கருத வாய்ப்புள்ளது. ஆனால், நாங்கள் எம்மை செப்பனிட்டுக்கொண்டு மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை வீச தயாராக வேண்டும். எனவே, இலங்கை பதிவர்கள் அனைத்து நாட்டு பதிவர்களின் பதிவுகளையும் வரவேற்று உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள். அப்பொழுதுதானே நல்ல கருத்து மோதல்கள் ஏற்பட்டு வளமான பதிவுலகம் சாத்தியப்படும். நன்றி.

தங்களின் நண்பன்,
மருதமூரான்.

Posted in | 28 comments

காலத்தின் நாயகனா? மஹிந்த ராஜபக்ஷ.


சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் அரசியல், ஆட்சியதிகார வரலாற்றில் என்றும் தோற்கடிக்க முடியாத தலைவர் என்ற பிம்பத்துக்கு சொந்தக்காரராக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளங்குகின்றார். அவருக்கு முன்னால் இருந்த பல சிக்கல்களுக்கு, பல அழுத்தங்களுக்கு மத்தியில் முடிவு கண்டுள்ளார். இதனை நாட்டு மக்களும், சர்வதேசமும் கூட வியப்புடன் நோக்கின. இந்த நிலையில் அவருக்கு முன்னால் இரண்டு முக்கிய விடயங்களுக்கு தீர்வுகாணும் பொறுப்புக்கள் உள்ளன. முதலாவது ‘நாட்டின் இனமுறுகல்களுக்கான அரசியல் தீர்வு’ மற்றையது ‘நீண்டகால போரின் வடுக்களைத் தாங்கி நிற்கும் நாட்டின் அபிவிருத்தி’. இந்த இரண்டு விடயங்களுக்கும் தீர்வு காண்பது என்பது இலகுவான காரியமல்ல. மேற்குறித்த விடயங்கள் தொடர்பாகவே இந்த கட்டுரையில் உங்களுடன் பேசப் போகின்றேன்.


நாட்டின் இனமுறுகல்களுக்கு அரசியல் தீர்வு காண்பதில் ஜனாதிபதி பலத்த சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். அவற்றில் முக்கியமானதாக தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வெல்லுதல். பிரிந்து வேறுவேறு திசைகளில் பயணம் செய்யும் தமிழ்-முஸ்லிம் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தல். அரசாங்கத்தில் கூட்டணி வகிக்கும் சில பெரும்பான்மையின கட்சிகளின் வற்புறுத்தல்களை சமாளித்தல். எதிர்க்கட்சியின் சவால்களுக்கு முகம்கொடுத்தல், மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மதத்தலைவர்களின் கருத்துக்களை உள்வாங்கிச் செயற்படுதல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி-பாராளுமன்ற தேர்தல்களை முறைப்படி நடத்தி முடித்தல், அடுத்து முக்கியமாக நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்தல். இவற்றைச் சமாளித்து அரசியல் தீர்வு காண்பதென்பது மிகவும் சிரமமான காரியம். ஆயினும், இனமுறுகல்களுக்கு ஜனாதிபதி தீர்வுகாண வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். முன்னைய அரசாங்கங்கள் கூறிவந்த பயங்கரவாத்தை முற்றாக அழித்து மோதல்களுக்கு முதலில் தீர்வு என்ற வாதம் எதிர்காலத்தில் அவருக்கு உதவாது.

“இலங்கையில் தமிழர்கள் உட்பட எந்தவொரு சிறுபான்மை இனத்தினரும் இல்லை. தமிழர்களோ, முஸ்லிம்களோ, பறங்கியரோ இந்த நாட்டின் சிறுபான்மையினர் அல்ல. தற்போது இந்த நாட்டில் இரண்டு இனங்களே உண்டு. ஒன்று இந்த நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்கள். மற்றையவர்கள் நாட்டின் மீது பற்றற்ற சிறு தொகையினர்.” இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரைகளில் அடிக்கடி குறிப்பிட்டு வருகின்றார். சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் அரச தலைவர் ஒருவர் இவ்வாறு கூறிவருவது இதுவே முதல் தடவை. இந்தக் கூற்றுக்கு அவர் நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்போகின்றார் என்பது மிகவும் முக்கியமானது. ஜனாதிபதி தனது உரைகளில் அண்மைக்காலமாக தமிழ்மொழியிலும் கருத்துக்களைக் கூறி வருகின்றார். இந்த விடயம் சிறுபான்மையின மக்களிடம் ஓரளவு நம்பிக்கையை தன் மீது வளர்க்கும் என்று அவர் நம்புகின்றார். இந்த விடயங்கள் மாத்திரம் அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விடாது. இதற்கான செயல் வடிவங்களே நம்பிக்கையை வளர்க்கும்.

மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு தொடர்ந்தும் உள்ளாகின்றனர். இது அவர்களின் மனங்களில் தொடர்ந்தும் சந்தேக உணர்வையே ஏற்படுத்துகின்றது. மோதல்களின் வலிகளை வாங்கிக்கொண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்கள் விரைவாக அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். அத்துடன், அங்கு தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எந்தவித சிக்கல்களுமின்றி முன்னெடுக்க வழியேற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் காணப்படும் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள அல்லது அண்மித்துள்ள பாதுகாப்பு மற்றும் இராணுவ அரண்கள் அகற்றப்பட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சங்கடங்களின்றி வழியேற்பட வேண்டும். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், அவர்களின் மத வழிபாட்டு நடைமுறைகளிலுள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். சிங்கள மொழிக்கு உண்டான அங்கிகாரம் தமிழ் மொழிக்கும் அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் அது பூரணப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன. இவற்றுக்கு அவர் உடனடியாகத் தீர்வு காணவேண்டும். இவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலில் நடைமுறைப்படுத்தினால் மற்றைய பெரும்பான்மைத் தலைவர்கள் பெறத் தவறிய தமிழ் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி பெறமுடியும்.

தமிழ்-முஸ்லிம் அரசியல் கட்சிகள் இனமுரண்பாடுகளுக்கு முன்வைக்கும் தீர்வு யோசனைகளை ஜனாதிபதி உள்வாங்கிச் செயற்படுவதும், எதிர்க் கட்சியின் அறிவுரைகளை எடுத்துக்கொண்டு செயற்படுவதும் தவிர்க்க முடியாதது. இந்த விடயங்களுக்கு ஜனாதிபதி மதிப்பளித்து செயற்படும் பொழுது ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளுவார். அதுபோலவே, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில பெரும்பான்மைக் கட்சிகளின் அழுத்தங்களை சரியாக உள்வாங்கி அவர்களின் அழுத்தங்களிலிருந்து மீண்டு மனப்பூர்வமான அரசியல் தீர்வை முன்வைப்பதும் அவருக்கு முன்னாலுள்ள பாரிய பொறுப்பு. அத்துடன், மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மதத்தலைவர்களின் கருத்துக்களை இலங்கையின் தலைவர்கள் எந்தக்காலத்திலும் மறுதலித்து வந்தது இல்லை. எனவே இந்த விடயத்தையும் அவர் சமயோசிதமாக கையாளவேண்டும்.

தேர்தல் கால நடைமுறைகளைப் பொறுத்தவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதி வடக்கு, கிழக்கு மாகாணங்களே. தென் புலத்தை பொறுத்தவரை ஜனாதிபதி தமக்கு வாக்களிக்க வேண்டாம் என்றாலும் வாக்கு அவருக்கே என்ற நிலைப்பாடு காணப்படுவதால், அவர் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தான். அடிப்படையில் ஆரம்பமாகும் வாக்காளர் மிள்பதிவு நடவடிக்கைகளின் போது அவர்களின் அடையாள அட்டை போன்ற விபரங்களை கணனி மயப்படுத்தி தரவுகளையும், விபரங்களையும் கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் இருந்தே பட்டியல் வலையமைப்பை ஏற்படுத்தலாம். அவற்றை ஒன்றிணைத்து மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த முடியும். கணனி மயப்படுத்தப்பட்ட அடையாள அட்டை கணனி மூல வாக்களிப்பு என்பவற்றைக் கூட விரிவாக்க முடியும். இதன்போது அந்தப்பகுதிகளில் இருக்கும் கற்ற இளைஞர்களை இனம்கண்டு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும்.

தமிழ்-முஸ்லிம் மக்கள் வயிற்று பசியை விட சுய கௌரவத்தை மேலாக கருதுபவர்கள். எனவே அத்தகைய விடயங்களிலும் கூடுதல் அக்கறை காட்டுவது அவசிமாகிறது. குறிப்பாக தமது பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் என்பன மேம்படுத்தப்படும்போது அது குறித்து அவர்கள் மஹிந்தவின் மீது நல்லபிப்பிராயம் கொள்ளக்கூடும். ஆனாலும் கடந்த காலங்களில் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரிடம் இருந்து கூடுதலான பாடங்களை கற்றுள்ளனர். அவர் தமது உரிமைகளையும், அதிகாரங்களையும் அள்ளி வழங்குவார் என மக்கள் எதிர்பார்த்து ஏமாந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தலைவர்களில் பலரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யாதார்த்தம் புரிந்த தலைவர் என குறிப்பிட்டுள்ளனர். அவர் அத்தகைய யாதார்த்த மனிதர் தான் என்பதை கடந்த காலங்களில் சிங்கள மக்களுக்கு உணர்த்தியிருந்தார். ஆகவே அந்த உணர்வை தமிழ் மக்கள் மத்திலும் ஊட்ட வேண்டும்.

"இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பது உண்மை, அவர்களுக்கு என்ன தீர்வை வழங்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அது ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்வைக்கப்படும். அந்த தீர்வு சமஷ்டி முறையை ஒத்ததாக இருக்காது.” இவ்வாறு இந்திய செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தையும், பாராளுமன்ற பலத்தையும் அதிகரிக்கவேண்டிய கட்டாயமும் தற்போது உள்ளது. எனவே விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி பாராளுமன்ற பலத்தை நிரூபிக்கும் அதேவேளை, அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலை நடத்தி தனது பதவியையும் நீடித்துக்கொள்ள விரும்புகின்றார். இந்த நிலையில், இரண்டு தேர்தல்களுக்குமான திட்டமிடல்களே எதிர்வரும் காலங்களில் அதிகமாக இருக்கப்போகின்றன. இதனால், ‘இனமுறுகல்களுக்கான அரசியல் தீர்வு’ என்ற விடயம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டு விடும் என்ற அச்ச உணர்வும் மக்கள் மத்தியில் உள்ளன. சுமார் 30வருடங்களுக்கும் மேலாக தலைதூக்கியிருந்த மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்து இலங்கையை ஒருங்கிணைத்த தலைவர் என்ற பெயரை பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டு மக்களின் மனங்களையும் ஒருங்கிணைத்து ‘இனமுறுகல்களுக்கான அரசியல் தீர்வை’ விரைவில் முன்வைக்கவேண்டும்.

பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து 61வருடங்களுக்கு முன் சுதந்திரம் பெற்ற இலங்கை, ‘நாட்டின் அபிவிருத்தி’ என்ற விடயத்தினை ஏட்டளவிலும், உதட்டளவிலுமே பயன்படுத்தி வந்துள்ளது. அதற்காக கூறப்பட்டு வந்த காரணங்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது 70களின் பின்னர் தலைதூக்கிய மோதல்கள். சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்த மோதல்களினால் வடக்கு-கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளுமே பலத்த சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. அபிவிருத்திக்கு செலவிட வேண்டிய அரசாங்கத்தின் பெருமளவு நிதி போர்த் தளபாடங்கள் வாங்குவதற்கும், பாதுகாப்பு படையணிகளை பராமரிப்பதற்குமே செலவாகிப்போயின. இதனால், நாட்டில் அபிவிருத்தி என்ற விடயம் பெரியளவிலேனும் கருத்தில் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், தொடர்ந்து வந்த மோதல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசினால் முடிவுகட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியின் முன்னாலுள்ள இரண்டாவது இலக்கு ‘நாட்டின் அபிவிருத்தி’.

“இலங்கையின் அபிவிருத்தி என்ற விடயத்தில் பிரதேச பகுப்புக்களுக்கு இடமில்லை, அனைத்து பகுதிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். இங்கு அரசியலுக்கும் இடமில்லை” என்று அலரி மாளிகையில் கடந்த 21ஆம் திகதி (2009,யூலை 21) நடந்த மக்கள் சந்திப்பொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இந்தக் கூற்றினை மக்கள் நல்ல முன்னேற்றகரமான செயற்பாடாகப் பார்க்கின்றனர். நாட்டின் அபிவிருத்தி என்ற விடயத்தில் அரசு தனித்து செயற்படாமல், தனியார்துறை, வர்த்தத்துறை, பொதுத்துறை என்று அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செயற்படவேண்டியுள்ளது. ஆயினும், அபிவிருத்தி என்ற கருப்பொருள் மக்கள் மத்தியில் கலைந்துவிடாமல் பார்ப்பதும் ஜனாதிபதியின் கடமை.

நாட்டின் வடக்குப் பிராந்தியம் அபிவிருத்தி என்ற விடயத்தை மூன்று தசாப்த காலத்துக்கும் அதிகமான காலம் அனுபவிக்காமல் இருந்துள்ளது. அந்தப் பிராந்தியத்திலுள்ள காணிகளும், சொத்துக்களும் போரின் வடுக்களையே தாங்கி நிற்கின்றன. பெருமளவு வயல் நிலங்களும், காணிகளும் தொடர்ந்தும் ‘உயர் பாதுகாப்பு வலயங்கள்’ என்ற பெயரில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டுள்ளன. அத்துடன், இலங்கையின் கடற்தொழில் துறையில் 40 வீதத்தினை ப+ர்த்தி செய்கின்ற கடற்பகுதிகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே முழுமையான விடிவு கிடைத்து மக்கள் கடற்தொழிலில் ஈடுபடுகின்றனர். வடக்கில் பொது மக்களின் நடமாட்டத்துக்கு ப+ரண அனுமதி வழங்கப்பட்டு தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பொழுது அபிவிருத்தி என்ற விடயம் ஓரளவு சாத்தியமாகலாம். ஆயினும், அரசாங்கத்தின் அக்கறையுடனான கவனிப்பிலேயே விரைவான அபிவிருத்தி சாத்தியமாகும். அப்பொழுதே ‘வடக்கின் வசந்தம்’ வெளிப்படும்.

இலங்கையின் நீண்ட கடற்கரையையும், நீர்நிலைகளையும் கொண்ட மற்றுமொரு பிராந்தியம் கிழக்கு. இங்கும், விவசாயமும், கடற்தொழிலுமே பிரதான தொழில்களாக பார்க்கப்படுகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மோதல் முன்னெடுப்புக்களிலிருந்து முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணம். அரசாங்கத்தின் ‘கிழக்கின் உதயம்’ மூலம் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஆயினும், அந்தப் பிரதேசத்தில் அபிவிருத்திக்கான வேகம் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுக்கும் ஜனாதிபதி உரியமுறையில் நடவடிக்கைகளை முன்வைக்க வேண்டும். அதுபோலவே, நாட்டின் அனைத்து பிராந்தியங்களும் எந்தவித பாகுபாடுகளுமின்றி சுகாதாரம், கல்வி, வர்த்தகம், தொழிநுட்பம் என்று அனைத்து துறைகளிலும் முன்னோக்கி செல்வதின் மூலம் நாட்டின் அபிவிருத்தியை மக்கள் சுகிக்க முடியும். இதற்கு முறையான திட்டமிடல்களுடன், நடைமுறைப்படுத்தல்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதே நாட்டின் அபிவிருத்தி சாத்தியமாகும். தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கையின் வளர்ச்சி அக்கறையுடன் நோக்கப்படும்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் வாழும் அனைவரும் தாம் விரும்பும் மதத்தையோ, மொழியையோ பின்பற்றும் அதேவேளை, நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் வாழும், தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையை அனைத்து மக்களும் கொண்டுள்ளனர் என்ற அடிப்படை உரிமைகள் நடைமுறையில் சாத்தியமாக்கப்பட வேண்டும். இவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டால் சுதந்திர இலங்கையின் தலைவர்களில் முதன்மையானவராக எதிர்காலம் அவரைக் கொண்டாடும். அதுவும் அவர் கைகளிலேயே தங்கியுள்ளது.

Posted in | 9 comments

உன்னைப்போல் ஒருவன்: சாமானியனின் சமூக அக்கறை.


‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதத்தினாலேயே தீர்வுகாணப்பட வேண்டும்’ என்ற ஒருவரிக்கதையை எடுத்துக்கொண்டு 5 மணித்தியாலங்களுக்குள் ஒரு சாதாரண மனிதனின் சமூகத்தின் மீதுள்ள அக்கறையை சொல்லியிருக்கிறது ‘உன்னைப்போல் ஒருவன்’. ‘ஏ வெட்னஸ்டே’ என்ற ஹிந்தி படத்தின் மீள் தயாரிப்பாக வந்திருக்கும் உன்னைப்போல் ஒருவன், அதிரடி, வேகம் என்ற திரைக்கதையின் வெற்றியுடன் இந்தியச் சினிமாவுக்கு உண்டான அலட்டல்கள் இன்றி வந்திருக்கும் இந்த வருடத்தின் நல்ல படங்களில் ஒன்று.


ஹிந்தியில் நஸ்ருதீன் ஷாவும், அனுபம் கேரும் முக்கிய பாத்திரங்களில் நடத்திருக்க ‘ஏ வெட்னஸ்டே’யினை திரைக்கதை எழுதி, இயக்கியிருந்தார் நிராஜ் பாண்டே. அதே திரைக்கதையை பெரிய மாற்றங்கள் செய்யாமல் தமிழ்நாட்டு சூழலுக்கு எற்ப சிறு மாறுதல்களுடன் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். படத்தினை சக்ரி டோலாட்டி என்ற புதிய இயக்குனர் எந்தவித ஆர்ப்பரிப்புக்களுமின்றி இயக்கியிருக்கிறார். வசனகர்த்தா இரா.முருகன், இசையமைப்பாளர் ஸ்ருதி ஹாசன் என்ற தமிழ்சினிமாவுக்கு புதிய குழுவை அறிமுகப்படுத்தியிருக்கிறது ‘உன்னைப்போல் ஒருவன்’.


சென்னையின் பொதுமகனான கமல் தன்னுடைய அறிவுக்கு எட்டிய யுத்திகளை பயன்படுத்தி வெடிகுண்டை தயாரிக்கிறார். அந்த வெடிகுண்டுகளை சென்னையின் முக்கிய சனநடமாட்ட பகுதிகளான தொடரூந்து, கடைத்தொகுதி, பொலிஸ் நிலையம் என்று பல இடங்களில் வைக்கிறார். பின்னர், சந்தைக்கு சென்று மனைவி சொல்லியனுப்பிய காய்கறிகளை பைகள் நிறைய வாங்கிக்கொண்டு சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தொடர் மாடியொன்றின் மேல்தளத்துக்கு செல்கிறார். அங்கு சென்று தன்னுடன் கொண்டு சென்ற பை ஒன்றிலிருந்து மடிக்கணனி, தொலைக்காட்சி, அலைபேசிகள் என்று நவீன தொடர்பாடல் கருவிகளை தயார் செய்கிறார்.

அதன் பின்னர், சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளராக இருக்கும் மோகன்லாலுக்கு அலைபேசியில் அழைக்கும் கமல் நகரத்தில் முக்கிய பகுதிகளில் குண்டை வைத்திருப்பதாக கூறுகிறார். அவற்றை செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அரை மணித்தியாலத்துக்குள் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதியை நியமிக்குமாறு கேட்டுவிட்டு அழைப்பை துண்டிக்கிறார். சிறிய நேரத்துக்குள் மீண்டும் தொடர்பில் வரும் கமல், தன்னுடன்பேச்சுக்களில் ஈடுபடப்போவது யார் என்று கேட்கிறார். அதன்பின்னர் மோகன்லாலுக்கும், கமலுக்கும் இடையில் நடக்கும் அலைபேசி பேச்சுக்களும், அப்போது கமல் வைக்கும் கோரிக்கைளும், அதன் விளைவுகளும், இவற்றின் முடிவுமே 102 நிமிடங்கள் நீளும் உன்னைப்போல் ஒருவனின் இறுதிக்காட்சிகள். (படத்தின் கதையோட்டத்தை சொல்லிவிட்டால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக குறைந்துவிடும், அதனால் இவ்வளவுடன் போதுமென்று நினைக்கிறேன்.)

திருவாளர் பொதுமகனான வரும் கமல் படம் முழுவதிலும் மொட்டை மாடியில் இருந்துகொண்டே ஆர்ச்சர்யப்படுத்துகிறார். அதுவும், இறுதிக்காட்சிகளில் அவர் தொடர்மாடியிலிருந்து இறங்கி வந்து மோகன்லாலுடன் பேசுவது வெகு இயல்பு. அவரிடமிருந்து இவ்வாறான பாத்திரம் வெளிப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. யதார்த்த மீறல்கள் இன்றி அசத்துகிறார். பொலிஸ் ஆணையாளராக வரும் மோகன்லால் படம் முழுவதிலும் தனது அழுத்தக்குரலினாலும், பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளில் வரும் அரசியல் தலையீடுகள் குறித்தும் வருத்தப்பட்டும் நடித்திருக்கிறார். அதுவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக வரும் லட்சுமியுடன் பேசும் போது மிகவும் அழகு.

படத்தில் பொலிஸ் அதிகாரிகளாக வந்து கலக்கியிருக்கும் இரண்டு நடிகர்கள் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள். ஒருவர் ‘அபியும் நானும்’ திரைப்படத்தில் சர்தார்ஜியாக வந்து திரிஷாவை கைப்பிடிக்கும் கணேஷ் வெங்கட்ராம். தன்னுடைய அதிரடி விசாரணை மூலமே குற்றவாளிகளை கதிகலங்க வைக்கிறார். அதிலும், இறுதிக்காட்சியில் அசத்துகிறார். மற்றவர் பரத் ரெட்டி. நல்ல நெடுநெடு தோற்றம் மனைவியுடன் பேசும் பொது செல்லம் கொஞ்சுவதும், தன்னுடைய தொழில் முறை பேச்சுக்களில் ஆர்ப்பரிப்பதும் அழகு. தமிழ் சினிமாவுக்கு இந்த இருவரும் நல்வரவுகள். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வந்து அசால்டாக சிகரட்டை புகைத்துக்கொண்டு படம் முழுவதிலும் திரும்பிப்பார்க்கை வைக்கும் மற்றுமொருவர் அனுஜா. லட்சுமி, சிறிமன், சிவாஜி சந்தானம், சந்தான பாரதி என்று படத்தின் சிறிய காட்சிகளில் வருபவர்களும் தங்களது பாத்திரங்களை நிறைத்து செல்கிறார்கள்.


ஒளிப்பதிவு மனோஜ் சோனி, தொடர் மாடி காட்சியையும், பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தையும் வெலு இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் காட்சிகள் ஒரே தளத்துக்குள் மீண்டும் மீண்டும் சுத்தி வந்துள்ள போதிலும் இரசிகர்களுக்கு அலுப்பை உண்டாக்காமல் கட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தொகுப்பு ரமேஸ்வர் பகவத், வேகமான திரைக்கதைக்கு ஈடுகொடுத்து காட்சிகளை கத்தரித்திருக்கிறார். இது, இவரின் வெற்றியாக திரைக்கதையின் வெற்றியா என்பது வினா. கலை இயக்குனர் தோட்டா தரணி பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தை அழகாக செதுக்கியிருக்கிறார். ஆனால், அந்த பொலிஸ் நிலைய கழிப்பறையை இவ்வளவு அழகாக காட்டவேண்டிய அவசியமென்ன என்பதில் கேள்வி கேட்க வைக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் ஸ்ருதி ஹாசன் தனக்கு வழங்கப்பட்ட வேலையை அளவோடு செய்து முடித்திருக்கிறார். பின்னணி இசையில் சில இடங்களில் இலத்திரணியல் வாத்தியக்கருவிகள் இரைச்சலைத் தருகின்றன. ஆனாலும், அவரின் முயற்சிக்கு நன்று சொல்லலாம்.


வசனம் புதிய எழுத்தாளர் இரா.முருகன். ஆங்கில நெடி தொடர்ந்தாலும் சாமானிய இரசிகனையும் தன்னுடைய வசனங்களுக்குள் உள்வாங்கிச் செல்கிறார். அதுவும், முதலைமைச்சர் பேசும் வசனங்கள் இயல்பான நகைச்சுவையுடன் மிகவும் இழகு. இயக்குனர் சக்ரி டோலாட்டி, தனது முதல் படத்திலேயே இரண்டு நட்சத்திர நடிகர்களுடன் வேலைசெய்யும் வாய்ப்பு. அதனை மிகவும் சாதுரியமாக கையாண்டுள்ளார். எதிர்காலத்திலும் நல்ல திரைக்கதைகளுடன் பயணப்பட்டால் நல்ல இயக்குனர்கள் பட்டியலில் முன்செல்ல முடியும்.

நாளாந்த வாழ்க்கையில் பொதுமக்களை ‘தீவிரவாதம்’ என்ற விடயம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும், அந்த வார்த்தைக்கு உண்டான வீரியம் ஊடகங்களிடமும், மக்களிடமும், அதிகாரிகளிடமும் எவ்வாறு வேறுபட்ட கோணத்தினை கொண்டுள்ளது என்பதையும் உன்னைப்போல் ஒருவன் சொல்லிச் சென்றுள்ளது. சில யதார்த்த மீறல்கள் திரைக்கதையில் இருந்தாலும், ‘உன்னைப்போல் ஒருவன்’ நமக்குள் ஒருவனான நிலைத்து நிற்பான்.

Posted in | 3 comments

‘கமல்ஹாசன்’ என்கிற திரைத்துறை ஆளுமை.


இந்திய சினிமா வரலாற்றில் அதிகம் புகழப்பட்டதும், அதற்கு அதிகமாக விமர்சிக்கப்பட்டதுமான நடிகர், படைப்பாளி என்றால் உடனடியாக அனைவரினதும் நினைவில் வருபவர் கமல்ஹாசன். அவர், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி 50 வருடங்களை கடந்துவிட்டார். ஆனாலும், கமல்ஹாசன் என்ற பெயருக்கு உண்டான வரவேற்று சினிமா இரசிகர்களிடம் குறையவில்லை. அதுபோலவே அவரின் மீதான விமர்சனங்களும் குறையவில்லை. இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது நடிகர், நடன இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், தயாரிப்பாளர் என்று சினிமாவின் பல தளங்களின் பயனிக்கின்ற ஒரு படைப்பாளி குறித்து பேசவேண்டிய பயமும், அவசியமும் ஏற்படுகிறது.


“அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே…” என்ற பாடலுக்கு 1960, ஒகஸ்ட் 12ஆம் திகதி வெளியாகிய ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தில் 5 வயது நிரம்பிய சிறுவன் அழகாக நடித்து, இந்திய மத்திய அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெற்றுக்கொள்கிறது. அந்தக் குழந்தை எதிர்கால இந்தியச் சினிமாவில் பல தனிமுயற்சிகளை மேற்கொள்ளக் போகின்றது என்று யாரும் நினைத்திருக்கவில்லை. தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் ஆறு மொழிப்படங்களில் நடித்துள்ள கமல் இதுவரை 240க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அதேவேளை அவர் நடித்த பல படங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டுமுள்ளன. கடந்த வருடம் வெளியாகிய ‘தசாவதாரம்’ என்ற பெரிய தொழிநுட்ப முயற்சிகள் கொண்ட படத்திற்கு பின்னர் ‘உன்னைப்போல் ஒருவன்’ கமல் நடித்து இறுதியாகி வெளியாகியுள்ளது.


நாயகன், தேவர்மகன், இந்தியன், அவ்வை சண்முகி, அன்பே சிவம் ஆகிய திரைப்படங்களை பார்த்த பின்னரே கமல்ஹாசன் என்ற நடிகரின் ஆளுமையை அறிந்து கொள்ளும் நிலை எனக்கு ஏற்பட்டது. அதற்கு என்னுடைய வயதும் காரணமாக இருந்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட படங்களில் இயக்குனர்களின் திறனும் அதிகளவில் வெளிப்பட்டது என்பது உண்மையே. ஆனால், அதையும் தாண்டி கமல்ஹாசன் என்ற கலைஞனை காணமுடிந்தது. இந்த படங்களின் வரிசையில், தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். தசாவதாரம் திரைப்படத்திலும் அதன் தொடர்ச்சி தெரிந்தது.


கமலின் ஆளுமை எல்லை மீறிய படங்களாக குணா, விருமாண்டி, ஆளவந்தான், குருதிப்புனல், ஹேராம், தெனாலி ஆகியவற்றை குறிப்பிடலாம். (இந்தக் கூற்றுடன் பலர் முரண்பட்டுக்கொள்ளலாம்) தொடர்ந்தும் புதிய பாத்திரங்களையும், கதைக்களங்களையும் தேடிக்கொண்டிருக்கின்ற கலைஞன் சில தருணங்களில் அதிகளவில் அக்கறை கொள்வதால் ஏற்படும் விளைவுகளாக இவற்றை கருதாலம். அல்லது இரசிகர்களின் மனநிலையின் மீது அதீத நம்பிக்கை வைப்பதும் காரணமாகலாம். தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ள சந்தர்ப்பங்கள் இன்னும் கிடைக்க வேண்டும் என்பதுடன், இரசிகர்களின் இரசிப்புத் தன்மையில் வளர்ச்சி வேண்டும் என்று செயற்படுகின்ற கலைஞன் கமல்ஹாசன். அந்த நோக்கங்களுடனேயே, ஹேராமும், அன்பே சிவமும், விருமாண்டியும் கொடுக்கப்பட்டது.


நம்மவர், விருமாண்டி உள்ளிட்ட சில படங்கள் வெளிநாட்டு மொழி படங்களின் தழுவல்கள் என்ற குற்றச்சாட்டும் கமல் மீது உண்டு. (மை ரீச்சர் என்ற படத்தின் தழுவலே நம்மவர்). அல்லது வெளிநாட்டு படங்களில் காணப்படும் கதை சொல்லும் உத்திகளை தன்னுடைய படங்களில் அதிகளவில் கமல் உள்வாங்கிக்கொள்வதாலும் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு காரணமாயிருக்கலாம். ஆனால், கமலின் படங்களில் புதிய முயற்சிகளை காணலாம்.


திரைக்கதையாசிரியர் என்ற மிகப்பெரிய வேலையை கமல் திறமையாக வெளிப்படுத்திய படங்கள் தசாவதாரம், அன்பே சிவம் உள்ளிட்டவை. அதேபோல, திரைக்கதை அமைப்பில் சொதப்பிய படங்களாக ஹேராமையும், விருமாண்டியையும் குறிப்பிடலாம். இந்தப் படங்களில் பல பாத்திரங்களினூடு கதையை நகர்த்தி செல்லுதல் என்ற யுத்தியினை கமல் பயன்படுத்தியிருந்தார். இந்த யுத்திக்கு சொந்தக்காரர் திரைத்துறை மேதை அகிரா குரோசோவா. “கடவுள் இல்லையெண்ணு எங்கங்க சொன்னேன்… கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என்னு தானோ சொன்னேன்..” என்ற வசனங்களில் வசனகர்த்தா கமல் ஜொலிப்பதை காணலாம்.


இயக்குராக கமல்ஹாசன் தன்னை நிரூபித்த படங்கள் இல்லை என்றே சொல்லலாம். அவர் இதுவரை சாச்சி 420, ஹேராம், விருமாண்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ‘சாச்சி 420’ அவ்வை சண்முகியின் ஹிந்தி மொழித் தயாரிப்பு. அவர், இதுவரை 15க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளார். இவற்றில், தேவன் மகன், மகளீர் மட்டும், அபூர்வ சகோதரர்கள் ஆகியன குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள். தான் நடிக்கும் படங்களில் பாடல்களைப் பாடும் கமல், தான் பங்குபற்றாத படங்களான உல்லாசம், புதுப்பேட்டை ஆகிய படங்களிலும் பாடியுள்ளார்.


4 தேசிய விருதுகள் (நாயகன், இந்தியன், மூன்றாம்பிறை, களத்தூர் கண்ணம்மா), 18 பிலிம்பேர் விருதுகள் என்று இந்திய அளவில் அதிக விருதுகளை வென்றுள்ள கமல்ஹாசன், ஆங்கில திரைப்படத்துறையிரால் வழங்கப்படும் அக்கடமி விருதுகள் (ஒஸ்கார்) பரிந்துரைக்கும் சென்றுள்ளார். உலக நாயகன், சகலகலா வல்லவன், சூப்பர் அக்டர் என்று பல பட்டங்கள் கொண்டும் கமலஹாசன் இரிகர்களினாலும், திரைத்துறையிராலும் அழைக்கப்படுகின்றார். அதிகளவில் விமர்சனங்களை சந்தித்து வரும் கமல்ஹாசன், அந்த விமர்சனங்களை புறந்தள்ளி விடாமல் உண்மையான மனதுடன் தன்னுள் வாங்கிக்கொள்வதே அவரின் வெற்றிக்கு முழுக்காரணம் என்று சொல்லலாம். கமல்ஹாசன் என்ற படைப்பாளி, நடிகர், கலைஞர் இந்திய திரைத்துறையில் என்றும் மறக்கப்படாத முடியாத ஆளுமை.

Posted in | 5 comments

காதல்: அழகு: கடவுள்: பணம்= நான் (தொடர் விளையாட்டு)


காதல், அழகு, கடவுள், பணம் வாழ்க்கையின் அனைவரும் தாண்டி, தங்கி வருகின்றவை மேற்கூறிய நான்கும். நாம் வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தும் சொற்களில் இவைக்கும் இடமுண்டு. பதிவுலக நண்பர் யோ.வாய்ஸ் யோகாவிடம் இருந்து நேற்று ஒரு அழைப்பு “காதல்-அழகு-கடவுள்-பணம்” என்ற தலைப்பில் தொடர் விளையாட்டில் கலந்து கொள்ளுமாறு. பதிவர் கார்க்கி (இவரின் முதலிரவில் அன்னாசிப்பழம் என் வைக்கிறார்கள் என்ற கேள்வி ரொம்ப பிரபலம்), யோ.வாய்ஸை அழைக்க அவர் என்னையும், மேலும் 4 நண்பர்களையும் விளையாட்டுக்குள் இழுத்துவிட்டுள்ளார். அதனாலேயே இந்தப் பதிவு. (பள்ளி பயின்ற காலம் தொடர் விளையாட்டுக்குள் யோ.வாய்ஸை நான் இழுத்து விட்டதற்கு பழிவாங்கும் நோக்குடன் என்னை இந்த தலைப்புக்குள் அவர் தள்ளிவிட்டார்.)

காதல்

என்னுடைய அம்மாவும், அப்பாவும் ஒருவர் மீது மற்றவர் செய்வது காதல். ஏனென்றால் என் வாழ்நாளில் காதலுக்கு வேறு சிறந்த உதாரணத்தை கண்டதில்லை நான். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் என்பது சுஜாதாவும், வைரமுத்துவும் ‘ஆய்த எழுத்து’ படத்திற்காக எழுதியது மாதிரி “உண்மை சொன்னால் நேசிப்பாயா, மஞ்சந்தின் மேல் மன்னிப்பாயா…. காதல் கொஞ்சம் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல்” என்பதில் நம்பிக்கையுள்ளவன். ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் இருக்கும் இனம்புரியாத ஈர்ப்புக்கும், தேவைக்கும் நாகரீகமும், கலாசாரமும் இணைந்து உருவாக்கிய அழகான சொல் ‘காதல்’.

அழகு

பிறந்த குழந்தையின் பாதமும், சுருக்கம் விழுந்த கிழவியின் முகமும், திமிரி நிற்கும் விடலைப் பெண்ணும், பாலூட்டும் அன்னையும், பள்ளிக்கு அழைத்து செல்லும் தந்தையும், எதிர்பார்ப்பற்ற நட்பும் அழகு. வேறு என்ன சொல்ல அழகைப்பற்றி…. எனக்கு 5 வயதில் அழகாய் தெரிந்தவை 15 வயதில் அழகாய் தெரியவில்லை. அழகும் வயதின் தேவைகளுக்கு ஏற்ப சில தருணங்களில் மாற்றமடைகின்றதோ என்னவோ!. ஆனாலும், நல்ல புத்தகங்களை எந்தக்காலத்திலும் அழகுள்ளவைகளாகவே கருதுகிறேன். சில தருணங்களில் அழிவிற்கும், ஆக்கத்திற்கும் வழிசெய்பவை ‘அழகு’.

கடவுள்

என்னுடைய உருவாக்கத்தில் அன்னைக்கும், தந்தைக்கும் உள்ள பங்கைப் போல் இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் யார் பங்கெடுத்தாரோ அவரே கடவுள் என்ற மனநிலையிலேயே கடவுளை நான் காண்கிறேன். மதங்களும், மார்க்கங்களும் கடவுள் என்பதை சிறுமைப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் தம்முள் வாங்கிக்கொண்டுள்ளன. ஆனாலும், நம்முடைய, தோற்றத்தையும் மறைவையும் எழுதியவனே கடவுள் என்பதில் நம்பிக்கையுள்ளவன். காலத்தினதும், தேவையின் பொருட்டும் சிலரால் தூக்கியும், தள்ளியும் வைக்கப்படுகிறார் கடவுள். இது எந்தளவிற்கு சரியென்று ‘கடவுள்’ தான் சொல்லவேண்டும்.

பணம்

நானும், நீங்களும் தேடி ஓடிக்கொண்டிருப்பது. கல்வியும், பகுத்தறிவும், அதிகாரமும் தனக்குள் வைத்துக்கொள்ள விரும்புவது. நட்புக்குள்ளும், உறவுக்குள்ளும் இலகுவில் புகைச்சலையும், அரசியலையும் தோற்றுவிப்பது என்னவோ பணமே. என்னுடைய (அனைவருடைய) தேவைகளை பணத்தின் மூலம் தீர்க்க முடியும் என்று 90 வீதம் நம்புகிறவன் நான். காதலும், காமமும், அன்பும், அரவணைப்பும் கூட தற்காலத்தில் பணத்துக்கு அடிமைப்பட்டுவிட்டதாக கருதுகிறேன். ஆக இந்த உலகம் தற்காலத்தில் இயங்குவது என்னவோ ‘பணம்’ என்பதை சுற்றித்தான்.


அடடா…… நேற்றும் ஒரு பதிவு இன்றும் ஒரு பதிவு. மருதமூரானும் தொடர்ந்து பதிவிட தொடங்கிவிட்டனே!... நண்பர்களின் அன்புத் தொல்லைகளினால் என்னுடைய (எழுதுவதில் இருந்த) சோம்போறித்தனம் குறைந்துவிட்டதாக கருதுகிறேன். இதே, விதிகளுக்கு அமைய “காதல்-அழகு-கடவுள்-பணம்” என்ற தலைப்பில் தொடர் விளையாட்டில் கலந்து கொள்ளுமாறு நானும் 5 பதிவுல நண்பர்களை அழைக்கிறேன்.

1.முதலாமவர், தங்க முகுந்தன்: இவரின் வாழ்க்கை அனுபவங்கள் இந்த தலைப்பில் அழகாக தெறிக்கும் என்று நினைக்கிறேன்.
2.இரண்டாமவர், நம்மட ‘அனானி’ சதீஷ்: இவரும், என்னைப் போல பதின்ம வயதுகளை தாண்டி சில வருடங்களே ஆவதால் இவரிடமும் சரக்கிருக்கும், வந்து வரணி அனுபவங்களையும் எழுதிவிட்டு சொல்லுங்கள்.
3.மூன்றாமவர், சந்ரூ: காதலின் அனைத்து பக்கத்தையும் அழகாக தன்னுடைய பதிவுகளில் சொல்லும் நண்பன். மட்டக்களப்பின் அனுபவத்தையும், கொழும்பு வாழ்க்கையையும் கலந்து சொல்லுங்கள்.
4.நான்காமவர், தோழி பாவி: என்னங்க தங்களது பெயர் சரிதானே. சாதுவான, ஜாலியான, அமைதியான பதிவர் என்று தன்னை அறிமுகப்படுத்தியவர். வந்து தங்களின் கருத்துக்களையும் பதிவாக இடுங்கள்.(அப்பாடா! ஒரு பெண் பதிவரை தேடுவது எவ்வளவு பெரிய வேலை)
5.ஐந்தாமவர், என்.கே.அஷோக்பரன்: தமிழின் ஆளுமையோடு காதலையும், கருத்துக்களையும் சொல்லும் தோழர். வந்து தங்களின் எண்ணக்கருக்களையும் பதிவிடுங்கள். எல்லோரும் தங்களின் பதிவுகளை இடவேண்டும். அதுவே என்னுடைய விரும்பம். மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

Posted in | 14 comments

என்னை புடம்போட்ட பள்ளிகள்: பள்ளி பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு)

எனக்கு, என்னுடைய பதின்ம வயதுக்குள் மீண்டும் செல்லவேண்டும் என்பது தொடரும் ஆசைகளில் ஒன்று. அதற்கு கவலையற்ற மனது, இலக்கற்ற பயணங்கள், பெரிதாக அலட்டிக்கொள்ளாத நண்பர்கள், எதிர்பாலர் மீதான அபரிமிதமான ஈர்ப்பு என்று பல காரணங்கள் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் விட பள்ளிக் காலங்களுக்கு அவை எங்களை அழைத்துச் செல்லும் என்பதே முக்கியமானது. என்னுடைய பள்ளி வாழ்க்கையில் பல பள்ளிகளில் கல்வி கற்றிருக்கிறேன். அதற்கு நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளினால் ஏற்பட்ட இடப்பெயர்வுளே முக்கியமான காரணம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் என்னுடைய ஜீ-மெயில் கணக்கினை திறந்தபொழுது.... பதிவுலக நண்பர் வந்தியிடமிருந்து இரண்டு மடல்கள். முதலாவது பள்ளி பயின்றதொரு காலம்-தொடர் விளையாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைத்திருந்தார். மற்றையது ஒரு பதிவின் தொடுகையும், அதுகுறித்த சில ஐயப்பாடுகளும். வலையுலகில் நுழைந்து சுமார் மூன்று வருடங்கள் ஆகின்ற நிலையிலும் இன்னும் நான் 100 பதிவுகளைக்கூட இடவில்லை. பதிவு எழுதுவனெ;பது சிலருக்கு சக்கரை மாதிரி எனக்கு அது பள்ளிக்கால ஆங்கிலப்பாடம் மாதிரி.... மிகவும் சோம்போறித்தனமான பதிவுலகத்தவன் நான். என்னிடம் ஒரு சஞ்சிகை ஒன்று 2 வாரங்களுக்கு ஒருமுறை ஆக்கமொன்றை பெற்றுக்கொள்வது வழக்கம். அதற்கு அதன் துணை ஆசிரியர் படும்பாடு சொல்லிமாழாது. அவர் அந்த ஆக்கத்தினை என்னிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கிடையில் 5, 6 தடவைகள் அலைபேசியில் அழைத்திருப்பார். அவ்வளவு சோம்பல்தனமானவன் (எழுதுவதில் மட்டும்)நான். சரி இனி விடயத்துக்கு சொல்வோம்.
மருதங்கேணி வள்ளுவர் முன்பள்ளி.

எல்லோருடைய பள்ளி வாழ்க்கையும் ஆரம்பிப்பது என்னவோ முன்பள்ளியில்தான். மருதங்கேணி வள்ளுவர் முன்பள்ளியில் 2 வருடங்கள் கல்வி கற்றிருக்கிறேன். (யாழ் மாவட்டத்தின் மருதங்கேணியே என்னுடைய சொந்தக் கிராமம்.) என்னுடைய தொல்லைகள் தாங்காமல் தந்தை என்னை 4 வயதிலேயே முன்பள்ளியில் சேர்ந்து விட்டிருந்தார். அங்கு செல்வமலர் என்ற ஆசிரியையே எங்களுக்கு கல்வி கற்பித்தார். மிகவும் அன்பான உள்ளங்கொண்டவர். ‘பசங்க’ படத்தில் வரும் வேதா மாதிரி. பள்ளி நேரங்களில் அவர் சில நாட்கள் தூங்கிவிடுவார். நாங்களே எழுப்பிவிட வேண்டியிருந்தது. அவர் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாரடைப்பினால் இறந்து விட்டார். நான் அதிகம் கவலையடைந்த தருணங்களில் அதுவும் ஒன்று.

மருதங்கேணி இந்து தமிழ் வித்தியாலயம்.

இரண்டு வருடங்கள் முன்பள்ளியில் கற்றிருந்தாலும் முதல் தரத்தில் சேரும் போது எனக்கு ‘அ, ஆ......... ஐ’ தாண்டி சொல்ல வராது. அதற்கு பாடசாலை என்ற நிறுவனத்துக்குள் புகும் பயம் காரணமாக இருந்திருக்கலாம். என்னுடைய முதல் வகுப்பு ஆசிரியை ‘கொழுந்து ரீச்சர்’. என்னுடைய தந்தையின் முதலாமாண்டு ஆரிசியையும் அவரே. அவரின் அன்பும், கண்டிப்பும் கலந்த அரவணைப்பினால் முதல் தரத்தில் நன்றாக கல்வி கற்றேன்.

1995ஆம் ஆண்டு கால கட்டத்தில் நான் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் எங்களுடைய பாடசாலையின் அதிபராக அ.சா.அரியகுமார் அவர்கள் நியமனம் பெற்று வந்திருந்தார். இவர் பிரபல பதிவர் ஒருவரின் தந்தை. அவர் நல்லுள்ளமும் கண்டிப்பும் மிக்கவர். புலமைப்பரிசில் பரீட்சைக்கான முன்னோடி பரீட்சையொன்றுக்கு சொல்லாத காரணத்துக்காக ஒருதடவை என்னை தனது அறைக்கு அழைத்து விசாரித்து விட்டு தண்டணைகள் வழங்காமல் அனுப்பிவிட்டார். ஆனால், அடுத்த முன்னோடி பரீட்சையில் வழமையாக நான் வாங்கு புள்ளிகளை விட 5 புள்ளிகள் குறைந்ததற்காக எனக்கும், என்னுடைய மச்சானுக்கும் (அவனும், நானும் ஒரே வகுப்பிலேயே பயின்றோம்) காற்சட்டையில் புழுதி பறக்கும் மட்டும் அடித்தார். அதுபோல என்னுடைய பள்ளிக்காலங்களில் அடிவாங்கியது கிடையாது. ஆனாலும், எங்களின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். என்னுடைய தந்தையிடம் நான் 9ஆம் தரத்தில் விஞ்ஞானம், மற்றும் கணித பாடங்களில் அதிக புள்ளிகளைப் பெற்றதை பெருமையாக சொல்லியிருந்தார். முக்கிய விடயம் நான் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவே இல்லை. அதற்கு இடப்பெயர்வே முக்கிய காரணம். அந்த காலப்பகுதியில் நாங்கள் புதுக்குடியிருப்பில் இருந்தோம். அந்த அடிகள் எல்லாம் விணாகிவிட்டன.

எனக்கு கணக்கு பாடத்தில் அதிக அக்கறையை வரவைத்த ஆசிரியர் திரு. லோகநாதன் அவர்கள். என்னுடைய 7ஆம் தரத்திலிருந்து 9ஆம் தரம் வரை கற்பித்திருந்தார். கணக்கு பாடத்தினை இயல்பாகவும், அற்புதமாகவும் கற்பித்தவர். இப்பொழுது எந்தப்பள்ளியில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

புற்றளை மகா வித்தியாலயம்.

என்னுடைய 10ஆம், 11ஆம் தரங்களை நான் புற்றளை மகா வித்தியாலயத்திலேயே கற்றிருந்தேன். புதிய வகுப்பில் சேர்ந்தவுடனேயே என்னை அரவணைத்துக்கொண்ட பள்ளி அது. அதுவும் பதின்ம வயதின் ஆரம்பங்களில். அங்கு ‘10பீ’ என்னுடைய வகுப்பு அங்கேயே அகிலன், அகில், மதுசூதனன் என்று நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தேன். அங்கு என்னால் மறக்க முடியாத விஞ்ஞான ஆசிரியர் குலம். அவரே எங்களின் வகுப்பு ஆசிரியராகவும் இருந்தார். கரவெட்டியைச் சேர்ந்த நல்ல மனிதர். கணித பாடத்தின் மீதான விருப்பைத் தொடர வைத்தவர்களில் ஒருவர் கிருபா ஆசிரியை அவர்கள். நாங்கள் எவ்வளவு குழப்படி செய்தாலும் தாங்குவார். சில வேளைகளில் தண்டனையும கிடைக்கும். கிருபா ஆசிரியை அவர்கள் வெள்ளவத்தையிலேயே தற்போது இருக்கிறார். அவர் குறித்த மேலதிக தகவல்களை பால்குடி தரவும். இந்தக் காலப்பகுதியில் எங்களுக்கு வர்த்தகமும், கணக்கியலும் என்ற பாடத்தினை கற்பித்த ஜெகமலர் ஆசிரியை. மறக்க முடியாது. எங்களின் தொல்லைகள் அனைத்தையும் தாங்கியவர். இன்றும் அக்கறையுடன் விசாரிப்பவர். அதே, பள்ளியிலேயே தற்போதும் ஆசிரியையாக தொடர்கிறார்.

ஹாட்லிக் கல்லூரி.

என்னுடைய சாதாரண தர பரீட்சையில் வெற்றி பெற்று உயர் தரத்தில் கல்வி கற்க சென்ற இடம் ஹாட்லிக் கல்லூரி. பல விஞ்ஞானிகளையும், தலைவர்களையும், கல்விமான்களையும் தோற்றுவித்த கல்லூரி. உயிரியல் பிரிவில் கல்வி கற்ற எங்களின் வகுப்பு ஆசிரியராக பௌதீகவியல் பாடத்தினை போதித்த சிவகுமார் அவர்கள் இருந்தார். இவரின் கண்டிப்பு குறித்து பல மாணவர்கள் அறிவார்கள். ஆனால், நியாயமான காரணங்களுக்கு மட்டுமே கோபப்படுவார். நல்ல ஆசிரியர். நாங்கள் சில ஆசிரியர்களின் தேவையற்ற தொல்லைகளுக்கு உள்ளாகியபோது எங்களுக்காக போராடியவர். எங்களுடைய கல்லூரி காலத்தில் இரசாயனவியலும், பௌதிகவியலும் ‘சி’ வகுப்புக்கும், ‘டி’ வகுப்புக்கும் இணைந்தே நடைபெற்றது. நாங்கள் ‘டி’ வகுப்பை சேர்ந்தவர்கள்.

இந்தக் காலப்பகுதியில் எங்களுடைய பள்ளியின் அதிபராக பத்மநாதன் அவர்கள் இருந்தார். நல்ல மனிதர். சற்று உயரம் குறைவானவர். விதிகளில் வரிசையாக செல்லுமாறும், அவதானமாக செல்லுமாறும் ஒரு தடவை உயிரியல் பிரிவு மாணவர்களாகிய எங்களுக்கு தன்னுடைய அலுவலகத்தில் வைத்து தனி வகுப்பெடுத்திருந்தார். சத்தியமாக ஹாட்லிக் கல்லூரி வரலாற்றில் 2004ஆம் ஆண்டு உயிரியல் பிரிவு மாணவர்கள் பல விடயங்களை மாற்றியிருந்தார்கள். பால்குடி, பனையூரான், ஆதிரை உள்ளிட்டவர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். (என்னுடைய வயதினை கண்டு பிடிச்சிருப்பீங்கள் என்று நினைக்கிறேன்.)

மறக்க முடியாத சர்வானந்தா ஆசிரியர் மற்றும் காதல் கதைகள்.

ஹாட்லிக் கல்லூரியின் ஆசிரியரான இவரிடம் நான் பாடசாலையில் கற்காவிடினும், தனியார் கல்வி நிறுவனமொன்றில் கணிதம் கற்றிருக்கிறேன். மிகவும் நல்ல ஆசிரியர். என்னால் மறக்க முடியாதவர். என்னுடைய பள்ளிக்காலங்களில் நடைபெற்ற காதல் கதைகளை இங்கே கூற விளைந்தால் 7, 8 பதிவுகள் போட வேண்டி வரலாம். அதனால், அது குறித்து இங்கு எழுதவில்லை. ஆக என்னுடைய பதிவினை நிறுத்தி விட்டு...... தொடர் விளையாட்டுக்கு 3 நண்பர்களை அழைக்கிறேன்...... முதலாமவர் என்னுடைய கல்லூரி கால நண்பர் பால்குடி என்கிற ச.தனஞ்சயன், மற்றவர்கள் பதிவுலக நண்பர்கள். கனககோபி மற்றும் யோ.வாய்ஸ் அவர்கள். வாங்கோ வந்து எழுதுங்கோ உங்களின் கதைகளை......... வந்தி தங்களின் வேண்டுகோள் நிறைவேறியதா? மீண்டும் சந்திக்கலாம்.

Posted in | 15 comments

முட்டைத்தோசையும், 125 ரூபாய் இழப்பும்: புல்லட்டிற்கு பதிலும்.


புல்லட்……. “முட்டைத்தோசையும், 125 ரூபாய் இழப்பும்” என்ற தலைப்பில் பதிவொன்று எழுதவேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை இரவே நினைத்திருந்தேன்… ஆனாலும், எனக்கு பதிவு எழுதுவதென்பது மருந்து சாப்பிடுவது போல பயங்கரமான வேலை (சோம்போறி என்று சொல்லலாம்). அதுதான் அந்த தலைப்புடன் பதிவுவை சற்று தாமதமாகவே எழுதுகிறேன். ஏனெண்டால் தங்களின் பதிவே என்னை எழுத அதாவது பதிலளிக்க தூண்டியுள்ளது. அதற்காக தங்களுக்கு நன்றி. இதோ……..


கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நண்பர் ஒருவரிடமிருந்து அலைபேசி அழைப்பு….. ‘மச்சான் தோசை சாப்பிடப் போவமோ?’ என்றான். ‘என்ன மச்சான் போயும் போயும் தோசை சாப்பிற்றதுக்கு கல்கிசையில நிக்கிற என்னை வெள்ளவத்தைக்கு கூப்பிடுறா…உனக்கு தெரியும் மச்சான் தோசை, இட்லி என்டால் எனக்கு எவ்வளவு எரிச்சல் வருமெண்டு..’ என்றேன் நான். அதன் பின்னர் தான் நண்பர் (பதிவர்களுக்கு யாரென்று விளங்கியிருக்கும்) சொன்னார் ‘மச்சான் தோசை திருவிழாவாம் வா சும்மா 125 ரூபாய்தானோ போவம்… எங்கட சங்கத்தை (நாங்கள் 5 நண்பர்கள் கூடுவதை சங்கம் கூட்டுவதென்டு தான் சொல்லுறது) அங்க ஒருக்கால் கூட்டுவம் என்டான்…’ அதற்கு சம்மதித்தே அந்த தோசை திருவிழாக்கு சென்று பெரிய கொடுமையை அனுபவித்தேன்.


மாலை 7.30க்கு தோசை திருவிழாவுக்கு செல்வோம் என்று திட்டமிட்ட எங்க பொடியள் நேரந்தவறாமையை கடைப்பிடிப்பதில் அவ்வளவு கெட்டிக்காரங்கள் அதுவும்…… சேரன்கிருஷ் சொல்லவே தேவையில்லை எப்படியும் 45 நிமிடத்துக்கு பிந்தியாவது வந்து சேர்ந்திடுவான். அப்பிடி நல்ல நேரத்தை கடைப்பிடிக்கிற நண்பர்கள் அனைவரும் வெள்ளவத்தை 37வது ஒழுங்ககையிலுள்ள தோசை திருவிழா நடக்கிற இடத்துக்கு சென்று சேர்ந்தோம். எங்கட தமிழ் சனம் என்னத்துக்கும் வரிசையில நிண்டு பழகியதுகள் தானே அங்கேயும் பெரிய்ய்ய்ய வரிசை. அட என்னடா எண்டு நினைத்துக்கொண்டு உள்ளே போனோம்.


உள்ளுக்குள்ள போனதும் ஒரு அக்கா….. விடம் 5 ரிக்கட்டுக்கள் எடுத்தாங்கள்.. எனக்கும் சேர்ந்து யாரோ ஒரு புண்ணியவான் ரிக்கட் எடுத்தான் என்பதை தெரியப்படுத்துகிறேன். அந்த நண்பர் கண்டிக்கப்படுகிறார்…. என்னை அவஸ்தைக்குள் தள்ளியதற்காக. ரிக்கட் எழுத்துக்கொண்டு வரிசையில நிண்டு சும்மா கதைச்சுக்கொண்டு நிக்க கண்ணாடி கூண்டுக்குள்ள நிண்டு… ஒருவர் கை அசைப்பதாக சேரன்கிருஷ் எனக்கு சொன்னான். யாரடா அது எண்டு பார்த்தால்… ‘சகபதிவர்’ லோஷன் குடும்ப சகிதமாய். நானும் கையசைத்து விட்டு நின்றேன். சுற்று நேரத்தில் எங்களை நோக்கி வந்த லோஷன்… பதிவுலகம், ‘பின்னூட்டம் புகழ்’ வந்தி, ‘அனனி புகழ்’ சதீஸ், வெற்றி தொலைக்காட்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், என்னுடைய ‘இலத்திரணியில் ஊடக வளர்ச்சி’ என்ற பதிவு என்று பல விடயங்களும் பேசிவிட்டு அவருடைய குழந்தை அழுததால் சென்றுவிட்டார் (சரிதானே லோஷன்). பின்னர் எங்கட சில ஹாட்லிக் கல்லூரி நண்பர்களுடன் பேசி முடிக்கவும் நாங்கள் தோசை போடுபவரை நோக்கி நகர்ந்து விட்டிருந்தோம்.


அப்பாட எண்டு முட்டைத்தோசை, களான்(மஸ்ரூம்) தோசை, கோழி கறியிட்ட தோசை என்று மூன்று தோசைகளை எடுத்துக்கொண்டு போயிருந்தால்…. அப்போது பிரசாத்தும், தீபனும் தோசைகளை பெற்றுவிட்டார்கள். சேரனும், அனந்தனும் இன்னும் தோசைத் தட்டுக்கு முன்னால் நிண்டாங்கள். அவர்களுக்கு தோசை தயாராகிக்கொண்டிருந்தது. சரியென்டு அவர்களும் வரட்டுமெண்டு பார்த்தால்… பசியால் வயித்திலை புகை வார நிலைமை ஆகியிட்டுது… சரியெண்டு நான் சாப்பிட தொடங்கினன். எங்கட சங்கத்து பொடியளும் சாப்பிட்டு தொடங்கியிருந்தாங்கள்… எங்கட பக்கத்து மேசையில ஒரு அக்கா…. நாங்கள் போன நேரம் தொடக்கம் தோசையும் கையுமாகவே இருந்தார்…. (உபரித்தகவல்: அவரின் எடை 90 கிலோவுக்கும் அதிகம்) நான் நினைக்கிறேன் அந்த அக்கா 6, 7 தோசையாவது சாப்பிட்டிருப்பார் என்று. நாங்கள் முடித்து எழும்பிய பிறகும் அவரும், அவரின் உறவுகளும் அங்கிருந்ததாக நினைக்கிறேன்.


அந்த தோசை திருவிழாவுக்கு சென்றதனால் வாழ் நாளின் தோசை சாப்பிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஏற்கனவே வீட்டில் தோசை செய்தாலும் நான் சாப்பிடுவதில்லை எனக்கு தோசை பிடிப்பதில்லை. கொழும்பு 7ல் உள்ள கடையென்றில் மசாலா தோசை மட்டுமே நான் விரும்பி சாப்பிட்டிருக்கிறேன். அது கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம். 2 வருடங்களுக்கு முன்னர். அடுத்து இவ்வாறான உணவுத் திருவிழாவுக்கு செல்வதென்றால் மாறு வேடத்திலேயே செல்வதென்று. ஏனென்டா என்னுடன் பேசிவிட்டு சென்ற லோஷன் சில நிமிடங்களிலேயே ஆதிரை, புல்லட், வந்தி என்று பதிவுலக நண்பர்கள் பலரிடம் விடயத்தை சொல்லிவிட்டார். பாவம் அவர்கள் தோசையின் அருமை தெரியாமல் நேற்று (சனிக்கிழமை) சென்று அவஷ்தையில் மாட்டியதாக வந்தி இன்று(ஞாயிற்றுக்கிழமை) அலைபேசியில் அழுதார். அவரே புல்லட் இட்ட பதிவு தொடர்பாகவும் சொன்னார். ஆக தோசைத் திருவிழாவிற்கு போனதில் ஒரேயொரு சந்தோசம் என்னவென்றால் என்னுடைய கல்லூரி கால நண்பர்கள் சிலரையும், ஊர் தோழர்கள் சிலரையும் காணக்கிடைத்தது மட்டுமே…… நான் லோஷனே தோசைத்திருவிழா தொடர்பாக பதிவிடுவார் என்று நினைத்திருந்தேன் ஆனாலும், புல்லட் முதலில் முந்திவிட்டார். அதனாலேயே இந்தப்பதிவும் தரவேற்றப்படுகிறது. மீண்டும் சந்திப்போம் மற்றுமொரு பதிவில்.

Posted in | 12 comments

இலங்கை இலத்திரனியல் ஊடக வளர்ச்சி: 2006 ஜனவரி வரை (பகுதி 2)


உலக வெகுஜன தொடர்பாடலின் மிக உன்னதமான கண்டுபிடிப்பாக தொலைக்காட்சியை நாம் கூறலாம். உலகின் ஒவ்வொருபகுதியிலும் இடம் பொறுகிற நிகழ்வுகள் சம்பந்தமாகவும், தகவல் வழங்கல் மிக துல்லியமாக படம் பிடித்து காட்டுதல் ஒவ்வொருவரினதும் வரவேற்றை பெற்று அத்தியவசிய பொருட்களில் ஒன்றாக ஆக்கிரமித்து காணப்படுகின்றது. என்றால் அது மிகையில்லை. கடந்த 25 வருடங்களில் தொலைக்காட்சியின் வளர்ச்சி மிகவும் வியப்பாக பார்க்கப்படுகின்றது. இத்துறையில் நாம் (இலங்கையர்) எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கின்றோம். அதன் வளர்ச்சிப் போக்கு எவ்வளவு தூரம் ஒரு சமநிலை தன்மையுடன் காணப்படுகின்றது என்பது பற்றி சற்று பார்ப்போமானால்.......

இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி நிறுவனமான “சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் (Indepent Television Network-ITN)”, 1979ம் வருடம் ஏப்ரல் 14ம் திகதி ஒரு புதுவருட தினத்தில் ஆரம்பித்தது. “இக்கால கட்டங்களில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி ஒளிபரப்பே காணப்பட்டது. இதற்கு ஜேர்மன் அரசாங்கம் ஒப்பந்த ரீதியில் உதவி வழங்கியதாக” பியதாச ரட்ணசிங்க கூறிப்பிடுகின்றார். முதலாவது ஒளிபரப்பு அலைவிரியலாக்கி (Antenna) பன்னிப்பிட்டியாவில் நிறுவப்பட்டு பத்து கிலோமிற்றர் தூர ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் பயனாக 100 சதுர கிலோமீற்றர் ஒளிபரப்பு விஷ்தீரனத்தை பெற்றுக் கொண்டது.

இக்கால பகுதியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பிற்கான பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக 1981ம், ஆண்டு ஒக்ரோபர் 22ல், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் ஒளிபரப்பு நிலையத்துக்கான முழுமையான உதவிகளையும் ஜப்பானிய அரசாங்கம் செய்திருந்தது. ஜப்பானிய தொழிநுட்பவியலாளர்களும் அத்துறை சார் நிபுணர்களும் இலங்கை கலைஞர்களுக்கான பயிற்சிகளையும் தொழில்நுட்ப அறிவையும் பெற்றுக் கொடுத்து ஊக்குவித்திருந்தனர்.

1981ம், வருடம் நவம்பர் 10ம், நாள் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன (SLRC) நிறைவேற்று அதிகாரியாக திரு.எம்.பெரேராவை இலங்கை அரசாங்கம் நியமித்திருந்தது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன ஒளிபரப்பு நிலையம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிறுவனத்திற்கு இயங்க தொடங்கியிருந்தது. நாடு பூராவுமான ஒளிபரப்பு சேவை 1982க்கு பின் முழுமையான சாத்தியமாக தொடங்கியது அதற்கான ஒலி சீராக்கிகள் நாட்டின் அனைத்து பாகங்களிலும் நிறுவப்பட்டது. வடக்கிலே ஆனையிறவு, கொக்குவில், வவுனியா போன்ற பிரதேசங்களில் நிறுவப்பட்டது. மத்திய பிரதேசத்தில் பீதுருதாலகால, கண்டி போன்ற பிரதேசங்களிலும் நிறுவப்பட்டது. இதன் பயனாக நாடு பூராவுமான ஒளிபரப்பு சாத்தியமானது.

இக்காலகட்டத்தில் ரூபவாகினி கூட்டுத்தாபனத்தில் இரண்டு கலையகங்கள் இருந்தன முதலாவது கலையகம் கருத்தாடல், பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கும் மற்றைய கலையம் செய்தி, அறிவித்தல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. பிரதான ஒளிபரப்புக்களாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. திரையிசைப்பாடல்களும், நாடகங்கள், நகைச்சுவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்குமே இடம் பெற்றன. ஆனபோதும் கலாச்சாரரீதியான ஒளிபரப்புக்களுக்கும் முதலிடம் வழங்கப்பட்டது. 1987க்களின் பிற்பகுதியின் தொடர்நாடகங்கள், வேற்று மொழிபெயர்பு நாடகங்கள் மடக்களிடையே கூங் பூ (KungFu) போன்ற தொடர்கள் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவையாகும். இக்காலப்பகுதியில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் டப்பிங் கலையகம் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் பயனாக அனேக மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

1990களில் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் காரணமாக ஆனையிறவு, கொக்குவில் பிரதேச ஒளிபரப்பு விரியலாக்கிகள் சேதமடைந்தன, இதனால் இதன் ஒளிபரப்பு வடக்கில் தடைப்பட்டது. 1995ல் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தமிழ் மொழிக்கான ஒரு தனியான தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது. வடக்கில் தடைப்பட்டு போயிருந்த ஒளிபரப்பு சேவை மீண்டும் பலாவியில் ஒளிபரப்பு விரியலாக்கி அமைக்கப்பட்டு 2005ல் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் வருகை 1990க்கு பின் எம்ரீவி, சிரச ரீவி, சக்திரீவி, சுவர்ணவாகினி மற்றும் தெரண போன்றன தமது ஒளிபரப்பை தொடங்கியிருந்தன. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது சேவைகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் வியாபார ரீதியான நிகழ்ச்சிகளுக்குமே முக்கியம் கொடுத்தது. இலங்கையின் தொலைக்காட்சி வரலாறு மிகவும் உன்னதமான ஒரு வளர்ச்சியை கொண்டு இருக்கின்றது. ஆனால் அதன் நியாய தன்மைகள் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

மொத்தத்திலே இலங்கையின் இலத்திரணியல் ஊடகத்துறை கடந்த 25 வருடங்கள் மிகவும் தொழில்நுட்பரீதியில் மிகவும் உயர்வான போக்கை கொண்டுள்ளது. இது இவ்வாறிருக்க இவ் ஊடகங்கள் மக்களுக்கு எவ்வளவு தூரம் சரியான தகவல்களையும் மக்களுக்கு எவ்வளவு தூரம் சரியான தகவல்களையும் சேவையையும் செய்திருக்கின்றன என்றால் அது சாத்தியமாகாமல் போனது என்பது உண்மை. கிட்டத்தட்ட இரண்டு கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இலங்கை திருநாட்டின் 35க்கும் மேற்பட்ட இலத்திரணியல் ஊடகங்கள் செயற்படுகின்றன. இவ்ஊடகங்கள் தனது வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்களின் நலனிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே இலங்கையின் இலத்திரணியல் ஊடகம் ஒரு உன்னதமான நிலையையும் சரியான சமநிலை போக்கையும் கொண்டு செல்ல முடியும்.

மிகவும் பாரிய தொரு ஊடக பாரம்பரியத்தை கொண்டிருக்கின்ற இலங்கை திருநாட்டில் முழுமையான ஊடகச் சுதந்திரம் இல்லாமல் போன தென்பது நாம் மிகவும் கவலைக்குரிய நிலையிலேயே உள்ளது. இவற்றை நாம் மீள கட்டியெழுப்ப வேண்டுமென்றால் ஊடகங்களின் போக்கும் மக்களின் இரசனை பொழுதுபோக்கில் மட்டும் தங்கியிராமல் நடப்பு விவகாரத்தின் உண்மை நிலையை அறிவதிலும் மேலோங்கி காணப்படுமிடத்தும் பொய்யான ஊடகங்களை நிராகரிப்பதன் மூலமும் தரமான ஊடகங்களை வரவேற்பதன் மூலமுமே சாத்தியமாகும்.(முற்றும்)

Posted in | 12 comments

இலங்கை இலத்திரனியல் ஊடக வளர்ச்சி: 2006 ஜனவரி வரை (பகுதி 1)


ஒரு சனநாயக நாட்டின் சுதந்திரக்கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஊடகங்கள் அதிக பங்கு வகிக்கின்றது. நாம் ஊடகங்களை அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் என இருவகைப்படுத்தலாம். மேற்கூறப்பட்ட இரு வள ஊடகங்களைப் பொறுத்தவரை இரண்டுமே தகவல் பரிமாற்றத்தையும், செய்தி பரிமாற்றத்தையும் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. இவ் ஊடகங்களிலேயே கடைசி 25 வருடங்களை உற்று நோக்கியால் அவை இலத்திரனியல் ஊடகம் மக்களிடையே மிகவும் அன்னியோன்னியமான முறையில் சென்றடைந்துள்ளது. இதற்கு மிகமுக்கியமான காரணமாக செய்தி பரிமாற்றத்தில் அதில் வேகமும் பொழுது போக்கு அம்சங்களின் நிறைவும் மக்களிடையே அவ்வாறான அபிமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்நிலையில் ஆசியாவிலே முதன்முதலான வானொலி துறையை அறிமுகப்படுத்திய பெருமையை எமது இலங்கைத் திருநாடு பெறுகிறது. இப் பெருடையுடன் நாம் செயல்படத்தொடங்கி கிட்டத்தட்ட 80 ஆண்டுகளை கடந்திருக்கின்றோம். ஆனால், சாதகமான செயல்பாட்டை வழங்கியிருக்கின்றோம் அல்லது முழுமையான தகவல்களை வழங்கி இருக்கின்றோமா என்றால் இது முற்றுப் பெறாமலேயே இருக்கிறது எனலாம். இதற்கு, ஆரம்ப காலகட்டங்களில் வானொலி நிலையங்கள் முழுவதும் அரச நிறுவனங்களாகவே இருந்து வந்ததும், இதன் காரணமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற (கட்சியின்) அரசாங்கங்கள் தமது கொள்கையை பரப்புவதற்கும் தம்கட்சி சம்பந்தப்பட்ட செய்தி (தகவல்) களுக்குமே முன்னிலை வழங்கியது. இதனால் அரசாங்கங்கள் மாறும் பொழுது வானொலி சேவையின் நிலைப்பாடுகளும் மாறத் தொடங்கியது. இவ்வாறான தொகுநிலை அரச ஊடகங்களால் தற்காலத்திலும் தொடர்ந்த வண்ணமுள்ளது.


ஆனால், 90களின் பிற்பகுதியில் தனியார் வானொலி சேவைகளின் வரவின் காரணமாக இந்நிலை ஓரளவு மாறத் தொடங்கியது எனலாம். ஆனால், முழுமையான ஒரு செய்திப்பரிமாற்றத்தில் சமநிலை தன்மை காணமுடியாது உள்ளது என்பதே உண்மை. ஆனால், வானொலிகளின்; அதிகரிப்பினால் அவற்றுக்கிடையேயான போட்டிகளினால் ஓரளவு தரமாக பொழுதுபோக்கு நிகழ்சிகளையும் வேகமான செய்தி பரிமாற்றத்தையும் பெற்றுக் கொண்டோம் என்பதும் உண்மையே. இது இவ்வாறிருக்க இலங்கையின் வானொலித் துறையின் வளர்ச்சி பற்றி ஒரு சிறு மீள்பார்வை.


இலங்கைக்கு முதன் முதலாக ஒரு வானொலி 1896ம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியாளர்களினால் கொண்டுவரப்பட்டது. இவ் வானொலியில் பிபிசி நிகழ்ச்சிகள் மற்றும் பிரித்தானிய மகாரணியின் செயற்பாடுகள் சம்பந்தமான நிகழ்ச்சிகளும் பிரித்தானியாவில் இருந்து ஒலிபரப்பப்பட்டது. இக்கால கட்டங்களில் தமது செயற்பாடுகளை அறிவிக்கும் பொருட்டு பிரித்தானிய ஆட்சியாளர்களால் 1925ம் ஆண்டளவில் முதல் வானொலி நிலையம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


கொழும்பு வானொலி (Colombo Radio) என்ற பெயருடன் ஆசியாவிலேயே முதன் முதலான வானொலி நிலையம் 16ம் நாள் டிசெம்பர் 1925ல் உருவாக்கப்பட்டது. மத்திய அலைவரிசை (MN) ஒலிபரப்பு செயல் முறை மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதன் ஒலிபரப்பு பரவல் எல்லைகளாக வெலிக்கட, கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து வந்தன.


இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் தமது தேவைகளையும் சேவைகளையும் மேற்கொள்ளும் பொருட்டு 1949ம் வருடம் “வானொலி சேவை” (Radio Service) என்ற பெயருடன் இலங்கை அரச வானொலியாக செயற்படத் தொடங்கியது. இக்காலப்பகுதியில் வானொலி முதன்நிலை சேவைகளாக அரச அறிவித்தல்களும், வர்த்தகமானிகளும் செய்தி அறிக்கைகளுமே ஒலிபரப்பப்பட்டது.


1967ல் இலங்கை ஒலிபரப்பு சம்பந்தமான பாராளுமன்ற வரைபான இல 37ன் படி இவ் வானொலி சேவை “சிலோன் வானொலி”யாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதன் ஒலிபரப்பு விரிவாக்கப்பட்டது. இக்கால கட்டங்களில் மும் மொழி சேவைகள் உருவாகியிருந்தது. இச் சேவையின் வளர்ச்சியின் போக்காக “இலங்கை சனநாயக குடியரசு” மே மாதம் 22ம் திகதி 1972ம் ஆண்டு “இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்” (sri lanka broadcasting cooperation) என்ற அமைப்பாக உருமாற்றம் பெற்று இலங்கை தகவல் மற்றும் ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. இக்காலகட்டங்களில் இவ் வானொலி சேவைகள் வியாபார ரீதியாகவும் பொழுதுபோக்கு சம்பந்தமான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டது.


இதன் பயனாக இலங்கை வானொலி இலங்கையின் எல்லை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பயனாக 80களின் பிற்பகுதியில் சர்வதேச வானொலி சேவைகள் உருவாக்கப்பட்டு அயல் நாடுகளுக்கான ஒலிபரப்பு முறைகள் உருவாக்கப்பட்டது. தெலுங்கு, இந்தி, மலையாளம் என்ற இலங்கையில் உபயோகமற்ற மொழியிலான ஒலிபரப்புக்களும் செயற்பட்டு நிகழ்சி தரத்தின் மூலம் வியாபார ரீதியாகவும் பெருவெற்றி பெற்றுக் கொண்டு சென்றது. ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை வானொலியின் சேவை “பண்பலை-FM” யிலும் இலங்கை பூராவுமான விஷ்தரிப்பு செய்யப்பட்டது.


இக்காலத்தில் இலங்கையின் 95 வீதத்துக்குமான பிரதேசங்களில் ஒலிபரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு 90வீதமான மக்களை சென்றடைந்திருந்தது. இலங்கை பூராவும் ஆறு வானொலி சேவைகள் மும் மொழியில் இயங்கிக் கொண்டிருந்தது. இக்கால கட்டங்களில் இவ் ஒலிபரப்புத்துறை ஆனது இலங்கையின் கலாச்சாரரீதியான வளர்சியாகவும் பண்பாட்டு ரீதியான ஒலிபரப்பு துறையில் புகுத்தி ஒரு புதுப்பரிமானத்தை ஏற்படுத்திக் கொண்டு செயற்படத் தொடங்கியிருந்தது. ஆசியாவிலேயே மிகவும் தரமான நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வழங்குனர்களும் நிகழ்ச்சிகளை திறம்பட அன்னியோன்யமான உறவை வானொலிக்கும் மக்களுக்கும் இடையே ஏற்படுத்திக்கொண்டனர்.


1990களில் இலங்கை அரசின் கொள்கை மாற்றத்தினால் இலங்கையில் தனியார் வானொலி சேவை அறிமுகமாவதற்கு வழிவகுத்திருந்தது. இவ்வளவு காலமும் தனிக்காட்டு ராஜாவாக செயற்பட்டு வந்த இலங்கை வானொலிக்கு இதன் வரவு காரணமாக ஓரளவு தாக்கம் ஏற்படத் தொடங்கியது.


இலங்கையின் முதலாவது தனியார் வானொலி நிறுவனம் 1990ல் “கொழும்பு கொமினிக்கேசன் சென்ரர்” நிறுவனம் “கப்பிரல் றேடியோ (Capital ரேடியோ)” என்ற பெயருடன் ஆரம்பித்து அவர்கள் மும்மொழி மூலமான சேவைகளுக்குமான வானொலிகளை உருவாக்கி செயற்படத் தொடங்கினார்கள். 1994ல் “சிரச பரிட்சார்த்த ஒலிபரப்பு” என்ற பெயரடன் “மகாராஜா ஒலிபரப்பு நிறுவனம்” ஒரு ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்திருந்தது. இதன் உத்தியோக பூர்வமான சேவையாக சிரச எல்.எம் சேவையை சிங்கள மொழியில் 1994, மார்ச் மாதம் 2ல் ஆரம்பித்து வைத்துள்ளார்கள். இதன் மூலம் மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பின் காரணமாக இவர்கள் 1997களில் சக்தி எப்.எம் என்ற பெயருடன் தமிழ் ஒலிபரப்பு சேவையையும் ஆரம்பித்து வைத்தார்கள். இவர்கள் பண்பலைகள் ஒலிபரப்பு செய்ததன் பொருட்டும் இளைஞர்களை குறிவைத்தம் நிகழ்ச்சிகளை வழங்கியதன் பொருட்டாலும் MBCஎன்ற நிறுவனம் மேலும் இரண்டு ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்து தற்பொழுது நான்கு ஒலிபரப்பு சேவைகளை இலங்கையில் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது.


இக்கால கட்டங்களில் ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன (ABC) போன்ற நிறுவனங்களும் தமது சேவைகளை ஆரம்பித்திருந்தது. இத்தனியார் வானொலிகளின் வரவில் கடைசியாக நெத் (நெட் FM) எப்.எம் என்ற சேவை 2005, டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இறுதியாக 2005 வரை இலங்கையில் இருபதுக்கும் மேற்பட்ட வானொலி சேவைகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் “இவர்கள் எவ்வளவு தூரம் ஊடக தர்மத்தையும், ஊடக ஒழுக்க விதிகளையும் சரியாக கடைப்பிடிக்கிறார்கள் என்றால் கேள்விக்குறியாகவே உள்ளதாக” மூத்த ஒலிபரப்பாளர் விசாலாட்சி ஹமீட் கூறியிருந்தார். இலங்கையின் வானொலி துறை செய்தி பரிமாற்றம் தகவல் வழங்கல் என்ற நிலையில் இருந்து முழுமையான வியாபார போக்கையும் கவர்ச்சி ஊட்டுவனவாகவும் செயற்படத்தொடங்கியுள்ளது என்பது உண்மையே.! (தொலைக்காட்சிகளின் வளர்ச்சி மற்றும் இந்த கட்டுரையின் மிகுதி அடுத்த
பதிவில்….. )

Posted in | 5 comments

மரணம்: புல்லட், வந்தி, சேரன் மற்றும் பலர்.


‘மரணம், இறப்பு, சாவு’ என்ற இந்த சொற்களுக்கான அர்த்தம் எமது சமூகத்துக்கிடையில் அதிகம் நிகழ்ந்து விட்டதால்;, அதன் அர்த்தம் அதிகம் உணரப்படுவதில்லை. இதனால், மரணம் குறித்த பயமும் அதிகம் உணரப்படுவதில்லை. இந்த விடயங்கள் குறித்து எனக்கு இருக்கின்ற எண்ண ஓட்டத்தை இங்கு எழுதுகிறேன். (ஏற்கனவே என்னை பல பதிவர்கள் ‘சீரியஸ் பதிவர்’ என்று அழைக்கிறார்கள். அது எனக்கு சில தருணங்களில் மகிழ்ச்சியையும், பல தருணங்களில் ஏமாற்றத்தையும் தருகின்றன.)


‘காலையில் கல்யாணம் செய்துகொண்ட தம்பதிகள் மதியம் வீழ்ந்து வெடித்த செல்லுக்கு பலி...’, ‘பள்ளிக்கு சென்ற குழந்தைகள் இனிப்பு வாங்கி சென்ற தருணத்தில் விமான குண்டு வீச்சுக்கு சாவு.....’ , ‘காலை உணவருந்திக்கொண்டிருந்த கிராம மக்கள் சுனாமியினால் இறப்பு...’ இவ்வாறான செய்திகளை நாங்கள் அதிகம் கேட்டுவிட்டோம். அதனாலோ என்னவோ இறப்பு என்ற விடயத்தை நாங்கள் ‘கிரிக்கட் ஸ்கோர்’ கேட்பது போலவே வெறும் புள்ளி விபரங்களுக்குள் விட்டுவிடுகிறோம். இது ஒரு சாபக்கேடு என்று நினைப்பதுண்டு. ஆனாலும், அது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.


இந்த பதிவினை எழுதுவதற்கு மூன்று விடயங்கள் துண்டுகோலாய் இருந்தன. முதலாவது, நண்பர் அனந்தனுடைய பிறந்தநாள் வைபவத்துக்காக நானும், சேரன் கிரிசும் நேற்று முன்தினம் நடந்து சென்றோம். அப்பொழுது இருவருக்குமிடையில் நிகழ்ந்த உரையாடல்கள். இரண்டாவது, நண்பர் வந்தியத்தேவனுடன் நேற்று இரவு நிகழ்ந்த அலைபேசி உரையாடல்;. மூன்றாவது, புல்லட்டின் ‘வாழ்க்கையும் வெறுமையும்- கொஞ்சம் சீரியசாய்’ என்ற பதிவு. ஆகவே அவர்களுக்கு நன்றி.


‘ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கும். இருக்க வேண்டும்’ இது வரைமுறை. சில தருணங்களில் விதிவிலக்குகளும் உண்டு. ஆனால், உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் இருப்பது போல முடிவும் இருக்கிறது. அதுவே பிறப்பும், இறப்பும். இந்த ஆரம்பமும் முடிவும் என்னை பல திசைகளில் திருப்பச் செய்கின்றன. விஞ்ஞானத்தின் விந்தைகளில் உலகத்தை வெற்றி கொண்டு விடலாம் என்று புறப்படுகின்ற மனிதனால் மரணத்தை வெற்றி கொள்ள முடியவில்லையே ஏன்?. ஆயுட்காலத்தை அதிகரிக்கத் தெரிந்த விஞ்ஞானத்தால் மரணத்தை நிறுத்த முடியவில்லையே ஏன்?.


மதங்கள், இறைவன், கடவுள் என்ற தங்களுக்குள் யார் பெரியவர் என்று அடிபட்டு கொள்கின்ற மனிதனால் மரணத்தை மட்டும் வெற்றி கொள்ள முடியவில்லை. பூமியின் அதிக பரப்பை ஆளுகைக்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்று நினைத்து நாடுகளுக்கிடையில் யுத்தங்களை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வெற்றி கொண்டவர்களும் மரணத்திற்கு மண்டியிட்டே ஆகவேண்டும். அதுபோல, இறைவனின் தூதர்கள், பிள்ளைகள் என்று கூறிக்கொள்கின்றவர்களும் மரணத்துக்கு ஆட்பட்டே ஆக வேண்டும். இதுவே நியதி.


ஆனால், சில சமூகங்களிடையில் மரணம் என்ற விடயம் ஏற்படுத்துகின்ற தாக்கத்தினை எமது சமூகம் அதிகம் உணரவில்லை என்பது உண்மை. அதற்கு எங்களுடைய சமூகம் அதிக இழப்புக்களை சந்தித்து விட்டதும் காரணமாக இருக்கலாம். இந்த பதிவு......... ஏதோ ஒரு விடயத்தில் தொடங்கி.... சரியான முடிவின்றி முடிகிறது.. அந்த முடிவு.... மரணத்தின் முடிவை சொல்லுவதில் அர்த்தமில்லாதது என்ற எனது மனத்தின் முடிவாகவும் இருக்கலாம். மீண்டும் சந்திக்கிறேன். ஏதாவது பதிவுடன்.

Posted in | 6 comments