கந்தசாமி: பழக்கப்பட்ட கற்பனையும், அதித ஆடம்பரமும்.
Posted On Sunday, August 30, 2009 at at 10:14 AM by மருதமூரான்.“சட்டத்துக்கு முரணான முறையில் சம்பாதிக்கும் பணக்காரர்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழைகளுக்கு வழங்குதல்” என்ற ஏற்கனவே பழக்கப்பட்ட ஒரு வரிக்கதையை எடுத்துக்கொண்டு நவீன உத்திகளுடனும், அதீத ஆடம்பரங்களுடனும் இயக்குனர் சுசிகணேசன் உருவாக்கியிருக்கும் படம் ‘கந்தசாமி’. பைவ்ஸ்டார், திருட்டுப்பயலே என்ற சிறிய முதலீட்டு படங்களில் வெற்றிக்கொடி கட்டிய இயக்குனர் சுசிகணேனைக் கொண்டு, விக்ரம் என்ற தேசிய விருது பெற்ற நடிகரை வைத்து கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் பெரிய முதலீட்டைக் கொண்ட படம்.
தமிழ்நாட்டின் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தங்களின் (பணக்)குறைகளை பக்தர்கள் எழுதி வைத்தால் கந்தன் தீர்த்து வைக்கிறார். அந்த ஒரு நம்பிக்கையை வைத்துக்கொண்டு வருமான வரித்துறை அதிகாரியான கந்தசாமியும் (விக்ரம்) அவரது பள்ளிக்கால தோழர்களும் (அவர்களும் அரசாங்க சேவையிலுள்ளவர்கள்) அரசாங்கத்தையும், மக்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பணக்காரர்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழை மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கிறார்கள். இது பக்கத்திலுள்ள கிராமங்களுக்கும் பரவ தமிழ்நாடே ஆச்சர்யப்படுகிறது.
அரச வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய்களை கடனானப் பெற்றுவிட்டு ஏமாற்றுகின்ற வர்த்தகப்புள்ளியான பி.பி.பி (ஆஷிஸ் வித்தியார்த்தி) வீட்டில் வருமான வரித்துறை அதிகாரியான கந்தசாமி சோதனை நடவடிக்கைகளுக்கு செல்கிறார். அங்கு பி.பி.பி. பதுக்கி வைத்திருக்கும் பணத்தையும், பத்திரங்களையும் எடுத்துச் செல்கிறார். இதனால் ஆத்திரமடையும் பி.பி.பி. பக்கவாதம் வந்தவர் போல் நடித்து தனது மகளான சுப்புலக்ஷ்மியை (ஸ்ரேயா) கொண்டு கந்தசாமியை பழிவாங்க முனைகிறார். இந்த தருணத்தில் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் எழுதி வைக்கப்படும் விடயங்கள் எவ்வாறு தீர்த்து வைக்கப்படுகின்றன என்று விசாரணை நடத்த வருகிறார் உளவுத்துறை அதிகாரியான பிரவு. பி.பி.பி. உள்ளிட்ட சட்டத்துக்கு முரணாக சொத்து சேர்த்த பணக்காரர்களை எவ்வாறு ஏமாற்றி மொத்தப்பணத்தையும் கந்தசாமி அரசிடம் சேர்ப்பித்தார்? உளவுத்துறை அதிகாரியான பிரவு, கந்தசாமியை கண்டுபிடித்தாரா? கந்தசாமிக்கும், சும்புலக்ஷ்மிக்கும் இடையிலான காதல் நிறைவேறியதா? என்ற கேள்விகளுக்கு இந்தியா, மெக்ஸிக்கோ என்று பயணப்பட்டு ‘இயக்குனர் ஷங்கர்’ பாணியில் இறுதி முடிவெழுதியிருக்கிறார் கந்தசாமியின் இயக்குனர் சுசிகணேசன்.
வருமான வரித்துறை அதிகாரி கந்தசாமியாக வரும் விக்ரம் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்துகிறார். சில இடங்களில் ஆத்திரமூட்டுகிறார். ஸ்ரேயாவுடனான காதல் காட்சிகளில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. ‘அந்தியன்’ என்ற படத்தில் நடித்த விக்ரம் குறுகிய கால இடைவெளியில் ஏன் அதே காட்சியமைப்புக்களில் பல இடங்களில் ஒத்துப்போகின்ற ‘கந்தசாமி’யில் நடிக்க முனைந்தார் என்பது தெரியவில்லை. இலத்தின் அமெரிக்க பாடகி ஷகிரா கந்தசாமி படத்தில் நடிக்க சம்மதித்திருந்தால் ஸ்ரேயா தேவைப்பட்டிருக்கமாட்டார். ஷகிரா இல்லை என்ற குறையை பாடல் காட்சிகளில் இடுப்பை அசைத்து ஸ்ரேயா தீர்த்து வைக்கிறார். பாவம் அவரால் ஆண்மை கலந்த பாத்திரப்படைப்பில் பெருந்திப்போக முடியவில்லை. ஆனால், ஸ்ரேயாவிற்கு பின்னணி பேசியிருக்கும் சுசித்திரா அதனை ஓரளவு நிவர்த்தி செய்கிறார். உளவுத்துறை அதிகாரியாக பிரவு அலட்டிக்கொள்ளாமல் அசத்துகிறார். நல்ல பொருத்தம். நகைச்சுவைக்காட்சிகளை ஆக்கிரமிக்கும் வடிவேலு சிரிக்க வைக்கும் அதேவேளை, சில இடங்களில் பழைய காட்சிகளை நினைவுபடுத்தி எரிச்சலூட்டுகிறார். ஆஷிஸ் வித்தியார்த்தி, திவாரி, கிருஸ்ணா, சுசிகணேசன், அலெக்ஸ் ஆகியோரும் தங்களின் பாத்திரத்துக்காக உழைத்திருக்கிறார்கள்.
இயக்குனர் ஷங்கரின் ஜென்டில்மென், அந்தியன், சிவாஜி மற்றும் பிரபுதேவா நடித்த அலாவுதீன் ஆகிய படங்களின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புக்களில் ‘கந்தசாமி’ பல இடங்களில் ஒத்துக்போகின்றது. சிறிய முதலீட்டு படங்களை இயக்கி வெற்றி பெற்ற சுசிகணேசன் அளவுக்கு அதிகமான சுதந்திரத்துடன் பெரிய முதலீடு கிடைத்ததும் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அதிகமாகவே தேவையற்ற காட்சிகளை சேர்த்துள்ளார். அதனாலேயே திரைக்கதையை 3.15 மணித்தியாலங்களுக்கு நீட்டிச்சென்று அலுப்பூட்டுகிறார். இதற்கு சுசிகணேகன் மட்டும் காரணமல்ல வரைமுறையற்ற ரீதியில் முதலீட்டை செய்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும் பொறுப்பானவர். ஆங்கில திரைப்படங்கள் தயாரிப்பில் நடைமுறைப்டுத்தப்படும் ‘திரைக்கதையை பூட்டுதல்’ என்ற விடயத்தை இந்திய சினிமா விரைவிலேயே கற்றுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் தேவையற்ற செலவுகளைக்குறைப்பதுடன், திட்டமிட்ட திகதிக்குள் படத்தினை திரைக்கு கொண்டுவர முடியும்.
ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவாவிடம் பயின்றவர். தான் ஒளிப்பதிவில் என்னென்ன விடயங்களை செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டரே அதையெல்லாம் ‘கந்தசாமி’ படத்தில் செய்திருக்கிறார். இந்தியா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ஒரு விதமான ‘நிற அலை’களையும், மெக்ஸிக்கோவில் நடக்கும் காட்சிகளுக்கு சிவப்பு பின்னணி கொண்ட ‘நிற அலை’யையும் பயன்படுத்தியிருக்கிறார். அது சில இடங்களில் அதிகமாகவே தெரிகிறது. பாடல்காட்சிகளில் அசத்தியிருக்கிறார். ஆனாலும், சில இடங்களில் ஒளிச்செறிவு இல்லாத காட்சிகளும் வருகின்றன. அதிகளவு முதலீட்டை கொண்ட படங்களுக்கு தேவைப்படும் ஆடம்பரமான விடயங்களை கலை இயக்குனர் தோட்டா தரணி குறைவின்றி செய்திருக்கிறார். அதற்கு ஸ்ரேயாவின் அறையும், விக்ரமின் அலுவலகமும் சாட்சிகள். ஆனாலும், பல இடங்களில் யதார்த்த மீறல்கள்.
கந்தசாமி பாடல்கள் அனைவரிடமும் விரைவிலேயே சென்று சேர்ந்ததில் இசையமைப்பாளர் தேவி சிறி பிரசாத்தும், பாடலாசிரியர் விவேகாவும் வெற்றிபெறுகிறார்கள். ‘எஸ்க் கியுஸ் மி மிஸ்டர் கந்தசாமி...’, ‘என்பேரு மீனாக்குமாரி...’ பாடல்கள் அசத்தல். இயல்பான வார்த்தைகளைக் கொண்டு பாடல் எழுதியிருக்கும் பாடலாசிரியர் விவேகாவுக்கு திரைத்துறையில் இந்தப்படம் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இசையமைப்பாளர் தேவி சிறி பிரசாத் பாடல்களில் வெற்றி பெற்ற அளவுக்கு பின்னணி இசையில் தேறவில்லை. பின்னணி இசையமைப்புக்கு அவர் இன்னும் முயற்சிக்க வேண்டும். மற்றப்படி விக்ரமையே பாட வைத்திருப்பதிலும் அவர் வெற்றி பெறுகிறார். படத்தொகுப்பினை பிரவீன் சிறிகாந்த், எம்.வி.ராஜேஸ் ஆகிய இருவரும் செய்துள்ளனர். பாடல்காட்சிகளில் விரைவாக தொகுப்பின் மூலம் வெற்றிபெறுகிற இவர்களால், காட்சிகளின் வேகத்தை அதிகரிக்க முடியவில்லை. இதற்கு இயக்குனரின் வேண்டுகோளும் காரணமாக இருக்கலாம். ஆனாலும், 195 நிமிடங்கள் நீழ்கின்ற படத்தில் அனேக காட்சிகளைக் குறைத்திருக்க முடியும்.
நல்ல வித்தியாசமான கதைக்களங்களில் பயணப்படுகிற இயக்குனர்களை அனேக தருணங்களில் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் வேறுமாதிரியான கதைக்களங்களுக்குள் சிக்கவைத்து விடுகின்றனர். இதனால் அவதிப்படும் இயக்குனர்கள் என்ன செய்வதென்று அறியாமல் அதி நவீன தொழிநுட்பங்களை கொண்டு ஆடம்பரமான காட்சிகளை அமைத்து விடுகின்றனர். ஆனால் அவை இயல்பாக இருப்பதில்லை. இதனால் அவை மக்களிடம் பெரிதாக சென்று சேர்வதுமில்லை. ‘புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டதாம்’ இவ்வாறு ஒரு பழமொழியுண்டு. கந்தசாமி விடயத்திலும் அது பல இடங்களில் நடத்திருக்கிறது. கந்தசாமி பழக்கப்பட்ட கற்பனைகளுடன் வந்திருக்கும், அதீத ஆடம்பரங்களைக் கொண்ட படம். மக்களிடம் சென்று சேரலாம். ஆனால் நிலைத்து நிற்பதென்பது கேள்விக்குறியே?.
முத்தையா முரளிதரனும், மோதிக்கொண்ட சிங்கங்களும்.
Posted On Friday, August 28, 2009 at at 10:53 AM by மருதமூரான்.இதே போன்றதொரு நாள் 17 வருடங்களுக்கு முன்னர் (கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கு, 1992ஆம் ஆண்டு ஒகஸ்ட் 28ஆம் திகதி காலை பத்து மணி) இலங்கை அணி சார்பில் சர்வதேசக் கிரிக்கட் போட்டிகளில் ஒரு புதிய பந்துவீச்சாளராக சிறிய மெல்லிய உருவமுள்ள வீரரொருவர் அறிமுகமாகிறார். அந்த தருணத்தில், அந்த வீரர் பெரிய பெரிய சாதனைகளையெல்லாம் படைப்பார் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். அவர் தான் முரளி என்று அழைக்கப்படுகின்ற முத்தையா முரளிதரன். சர்வதேச் கிரிக்கட் போட்டிகளில் 1000க்கும் அதிகமான விக்கட்டுக்களை வீழ்த்திய ஒரே வீரர்.
மார்க் டெய்லர், வோ சகோதரர்கள், டொம் மூடி, இயன் ஹீலி என்று ஜாம்பவன் வீரர்களைக் கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அறிமுகத்தை முரளி மேற்கொண்டார். அப்போதைய இலங்கை அணியின் தலைவர் அர்ஜூண ரணதுங்காவின் கண்டுபிடிப்பு. முரளி தனது சர்வதேச கிரிக்கட் வாழ்க்கையில் வீழ்த்திய முதலாவது விக்கட் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் கிரேக் மக்டேமிற்றினது. 17 ஓவர்கள் பந்து வீசி 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அந்த விக்கட்டை கைப்பற்றினர். அதேபோட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மார்வோ, டொம் மூடி ஆகியோரின் விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
முரளியின் வளர்ச்சி குறித்து அன்று அலட்டிக்கொள்ளாத அவுஸ்திரேலிய சிங்கங்கள் 1996ஆம் ஆண்டு தங்களின் தாய்நாட்டில் வைத்தன முதல் சோதனையை. முறையற்ற முறையில் பந்தை வீசி எறிகின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டார் முரளி. அதிலிருந்து இலங்கை கிரிக்கட் மற்றும் ரணதுங்க உள்ளிட்ட சகவீரர்களின் ஒத்துழைப்புடன் சோதனைகளிலும் வெற்றி பெற்று தேறினார். அதே ஆண்டு அதே, அவுஸ்திரேலிய சிங்கங்களுக்கு ஆப்படித்து உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் வென்று சாதனை சூடினார்கள். அந்த அணியின் முரளி முக்கிய வீரராக மாறியிருந்தார். முரளியின் பந்து வீச்சு முறை குறித்து பல சர்சைகள் இன்று தொடர்கின்றன. ஆனால் அவர் அதிலிருந்து இலகுவாக வெளிவந்து சாதனைகளை குவிக்கிறார்.
ஒருநாள் கிரிக்கட் (511 விக்கட்டுக்கள்), டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் (779 விக்கட்டுக்கள்) இரண்டிலும் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ள முரளி, இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் பந்து வீசிக்கொண்டிருக்கிறார். எத்தனை ஓவர்கள் பந்து வீசினாலும் சளைக்காமல் புதிய உத்திகளுடன் பந்து வீசுகிறார். எதிர்காலத்திலும் வீசுவார். (முரளி விளையாடிய இருபதுக்கு 20 போட்டிகளின் விபரத்தை இதில் சேர்க்கவில்லை).
தற்போது முரளியின் பந்து வீச்சை ரசிகர்கள் ரசிப்பதை விட அவரின் துடுப்பாட்டத்தை பார்க்க விரும்புகின்றனர். களத்தில் அவர் துடுப்பு மட்டையை சுழற்றுவதே ஒரு கலக்கலான விடயம். அவர் சர்வதேசப் போட்டியான்றில் ஒரு அரைச்சதத்தை கடந்துள்ளார். (அது இந்திய அணிக்கெதிராக கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியென்றில் பெற்றது.). “துடுப்பாட அதிக ஆர்வத்துடன் முரளி கிளம்புவர். அவர் ஆறு ஓட்டங்களை அடிக்கவேண்டும் என்று ஆசையுள்ளவர். ஆறு ஓட்டங்களை பெற்றுவிட்டால் மிகவும் பெருமையுடன் வலம்வருவார். எங்களிடம் தான் எப்படி அந்த ஆறு ஓட்டத்தை அடித்தேன் என்று விளக்குவார்.” இது ஒரு ஆங்கில நாளிதழுக்கான செவ்வியொன்றில் இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மர்வன் அத்தப்பத்து கூறியது.
இலங்கை கிரிக்கட் அணியின் புதிய பாய்ச்சலுக்கு வழிகோலியவர்களில் முரளிக்கு முதலிடமுண்டு. அதில் ரணதுங்க, அரவிந்த் டீ சில்வா, சனத் ஜெயசூர்யா ஆகியோரும் முக்கிய இடத்திலுள்ளவர்கள். முரளி என்கிற பந்து வீச்சாளர்களை எப்படி சமாளிப்பது என்று அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் என்று ஐhம்பவான் அணிகளெல்லாம் நாட்கணக்கில் விவாதம் நடத்திய செய்திகளுண்டு. எதிர்காலத்திலும் நடத்தும். என்ன அது இன்னும் இரண்டு வருடங்களுக்குள் முடிவுக்கு வந்து விடும். சர்வதேச போட்டிகளிலிருந்து 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளுடன் ஓய்வுபெறவுள்ளதாக முரளி அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கட் உலகில் முரளியை மிக இலகுவாக கையாண்ட துடுப்பாட்ட வீரராக மேற்கிந்தியத்தீவுகளின் முன்னாள் தலைவர் பிரையன் லாராவையும், நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் ஸ்ரீபன் பிளமிங்கையும் குறிப்பிட முடியும். ஆனாலும், முரளி என்கிற பந்துவீச்சாளர் மிகவும் ஆபத்துக்குரியவர், அவர் வீசுகின்ற பந்துகள் ஒவ்வொன்றும் மஜாயாலங்களை நிகழ்த்துவன என்று அவர்கள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர். கிரிக்கட் உலகிலிருந்து முரளி என்கிற சகாப்தம் இன்னும் சில காலத்தில் ஓய்வுபெற்றுவிடும். ஆனால், பிரட்மன் விட்டுச் சென்றது போல் முரளியின் சாதனைகளும் புதிய வீரர்களுக்கான உத்வேகத்தை வளங்கும். அந்த சாதனைகளை முறியடிப்பது மிகவும் சிரமம். ஆனால், அவை முறியடிக்கப்பட வேண்டியதே..... அப்போதுதானே கிரிக்கட்டில் வளர்ச்சி சாத்தியம்.
அன்புள்ள காதலுக்கு, இல்லைங்க இலங்கைப் பதிவர்களுக்கு....
Posted On Monday, August 24, 2009 at at 10:50 AM by மருதமூரான்.வணக்கம் பதிவுலக சகாக்களே,
நலந்தானே, இலங்கை வலைப் பதிவர்கள் சந்திப்பு நடைபெற்று முடிந்து சுமார் பத்து மணித்தியாலங்களின் பின்னர் இந்த கடிதத்தை எழுதுகிறேன். குறித்த சந்திப்பில் கலந்துகொண்டவன் என்ற மகிழ்ச்சியுடன். ஊர்கூடி தேரிழுப்பது போல, இளைஞர்கள் கூடி பதிவர்கள் சந்திப்பை வெற்றிகரமாகவும், குளறுபடிகள் இல்லாமலும் நடத்தி முடித்திருக்கிறார்கள். முதலில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இனி விடயத்துக்கு வருவோம், யோசிக்க வேண்டாம் இந்த கடிதத்தில் சிரியசாக எழுதப்போறது கிடையாது. நண்பர் வந்தியத்தேவன் இட்ட கட்டளையின் பிரகாரம் பதிவர் சந்திப்பு குறித்தும், அதில் கிடைத்த அனுபவங்கள் குறித்துமே கடிதத்தின் உள்ளடக்கம் இருக்கும் தயங்காமல் வாசிக்கலாம்.
நண்பர்கள் சேரன் கிரிஸ், மகேஸ் பிரசாத் சகிதம் நேற்று காலை 8.50 மணியளவில் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் நோக்கில் கொழும்பு தமிழ்ச் சங்க வளவினுள் நுழைந்ததும் தடுத்தது ஒரு குரல்.... ‘மருதமூரான்... மருதமூரான்’ என்று. நல்ல அழகிய தோற்றமுள்ள (சந்தோஷமா) ஒருபுதிய முகம் வணக்கம் நான்தான் வந்தியத்தேவன் என்று தன்னை அறிமுகம் செய்துவைத்தது. அலைபேசியில் பேசியபோது ஊகித்த உருவமே நேரிலும் வந்தது என்னவோ உண்மைதான். வந்தியத்தேவனுடனான அறிமுகத்தின் பின்னர் பதிவர்கள் லோஷன் மற்றும் புல்லட் ஆகியோரை வந்தி அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகங்களுக்கு பின்னர் விநோதன் மண்டபத்தை அடைந்தோம்.
நான் நினைக்கிறேன் காலை 9.10 மணியளவில் மண்டபம் நிறைந்த பதிவுலக நண்பர்களின் கரகோசத்துடன் இலங்கையின் முதலாவது பதிவர் சந்திப்பு ஆரம்பித்தது. வரவேற்றுபுரையை ஏற்பாட்டுக்குழுவின் ‘முதல் சிங்கம்’ புல்லட் தனக்கேயுரிய கலக்கலுடன் ஆற்றினார். அதன் தொடர்ச்சியாக ‘ப்ளொக்கர்சின்’ பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி நண்பர் ஆதிரையின் (இவரும் ஏற்பாட்டுக்குழவில் ஒரு சிங்கம்) திட்டமிடலுக்கு அமைய சிரேஷ்ட எழுத்தாளர்களால் கேக் ஒன்று வெட்டப்பட்டது. (அதில் அடியேன் உட்பட பத்து பேர் மெழுகுதிரி ஏற்றி வைத்தோம்).
அதன் பின்னர் ‘வலைப்பதிவும் சட்டமும்’ என்ற தலைப்பில் நண்பர் சுபானு கருத்து பகிர்ந்தார். பின்னர் பதிவர்களின் அறிமுகம் நடைபெற்றது. சுமார் 80 பதிவர்கள் கலந்துகொண்டிருப்பார்கள். அதில் 10முதல் 15 பேர் மகளீர். (33 சதவிகிதம் பிரச்சினையை கிழப்ப வேண்டும். அதற்கு பெண்களும் வரவேண்டும்.) இந்த நிகழ்வையடுத்து ‘திரட்டிகள்’ என்ற தலைப்பில் அடியேன் அதுதாங்க மருதமூரான் கருத்துப்பகிர்ந்தார். யாழ்தேவி, மாயாலங்கா, யாழ்தேவி சஞ்சிகை அறிமுகத்தையும் வழங்கியிருந்தார். இது நல்ல விவாதங்களுக்கு வழிஅமைத்தது. ஆனாலும், யாழ்தேவி குறித்த விவாதம் அதிகளவில் இடம்பெற்று நேரத்தை திண்றுவிட்டதாகவும் உணர்கிறேன்.
சந்திப்பின் சிறப்பு அதிதி சிரேஷ்ட ஒளி, ஒலிபரப்பாளர் எஸ்.எழில்வேந்தன் சிறப்புரை ஆற்றியதைத் தொடர்ந்து, ‘பதிவுலகும் அனுபவமும்’ என்ற தலைப்பில் ஏற்பாட்டுக்குழுவின் மற்றுமொரு சிங்கம் நண்பர் லோஷன் கருத்துப் பகிர்ந்தார். இதனையடுத்து ‘வலைப்பதிவும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் பல விளக்கங்களை அளித்தார் சேரன் கிரிஸ். எதிர்காலத்தில் வலைப்பதிவுகளில் ஏற்படும் தொழிநுட்ப விடயங்கள் குறித்த சந்தேகங்களை சேரன் கிரிஸிடம் கேட்டுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
சேரனின் விளக்கங்களை அடுத்து, சந்திப்பின் முக்கிய நிகழ்வான பதிவர்களிடையேயான கருத்து பகிர்தல்கள் இடம்பெற்றது. இதில் மயூரன், மயூரேசன், சேது, மயுவர்மன், ஊரொடி உள்ளிட்ட நண்பர்கள் விசைப்பலகை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவாதித்தார்கள். இதில் எனக்கு பெரிதாக ஒன்றும் வியங்கவில்லை. ஆனால், பயனுள்ள தகவல்கள் பரிமாறப்பட்டன. இதனையடுத்து, மயூரன், மயுவர்மன், ஊரொடி, குணா உள்ளிட்ட நண்பர்களினால் ‘யாழ்தேவி திரட்டி’யின் பெயர் மற்றும் இலட்சினை தொடர்பில் கருத்துரைக்கப்பட்டது. அதற்கு நானும், சேரன்கிரிசும் விளக்கங்கள் அளித்துள்ளோம். நண்பர்கள் பலரின் குறித்த கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த விடயங்கள் தொடர்பில் திறந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.
வந்திருந்த பெண் பதிவாளர்கள் கருத்து பகிரமுன்வராததால் புல்லட் உள்ளிட்ட நண்பர்களின் வேண்டுகொளையடுத்து தோழி கீர்த்தி சம்யுக்தா தனது கருத்துக்களை முன்வைத்தார். இதனையடுத்து அமுதன், மேமன்கவி, வந்தியத்தேவன், மயூரன் உள்ளிட்ட நண்பர்கள் பலரால் பதிவுலகம் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக இலங்கை மொழியின் தரத்தை வளர்க்க வேண்டும் மற்றும் வலைப்பதிவர் சஞ்சிகை குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இலங்கையின் முதல் பதிவர் சந்திப்பை இணையத்தினூடாக நண்பர் ‘கொவ்போய்’ மது மற்றும் ஊரொடி ஆகியோர் நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தனர். இதன்போது 40க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் புலம்பெயர்ந்த நண்பர்கள் தமது கருத்துக்களையும உடனுக்கு உடன் தெரிவித்து கொண்டது சிறப்பு. இறுதியாக ‘பின்னூட்டம் புகழ்’ வந்தியத்தேவன் நன்றியுரை வாசித்தார். நிகழ்வுகளை பதிவுலக நண்பர் சதிஸ் தொகுத்து வழங்கினார். இவர் குறித்து ‘அனனி’ விடயமொன்று ஆராயப்படவிருந்தபோதிலும் இறுதியில் அது கைகூடவில்லை.
நிகழ்வுக்கு வந்தவர்களுக்கான சிற்றுண்டிகளை நண்பர் ‘பால்குடி’ எஸ். தனஞ்சயன் விநியோகித்திருந்தார். இவர் குறித்து ஒரு உபரித்தகவல், யாழ் புற்றளை பிள்ளையார் கோவில் பூங்காவன விழாக்காலங்களிலும் இவர் மோதகம், கடலை, வடை, பொங்கல் என்று பகிர்ந்தளித்ததை நானும் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால், நேற்று நான் கருத்து பகிர்ந்துகொண்டிருந்த சமயம் வடையை விநியோகித்தமையால் எனக்கு வடை கிடைக்கவில்லை. ‘பால்குடி’ நல்ல பேச்சாளர் ஏனோ தெரியவில்லை நேற்று எந்தக் கருத்து பகிர்தலிலும் ஈடுபடவில்லை.
இதுதான் இலங்கை பதிவர் சந்திப்பில் நடந்தவற்றின் சுருக்கமென்று நினைக்கிறேன். நான் விட்டவற்றை பதிவுலக நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் அல்லது புதிய பதிவிடுங்கள். புகைப்படங்கள் ஆதிரை, வந்தி உள்ளிட்டவர்களின் தளங்களில் உள்ளது. குளறுபடிகள், சண்டைகள் இல்லாமல் சந்திப்பு நிறைவு பெற்றதையிட்டு நான் பெருமகிழ்வடைகிறேன்.(சண்டையில்லாமல் ஒரு பதிவர் சந்திப்பா என்று கேட்பவர்களுக்கு பதில்சொல்ல முடியவில்லை.)
நன்றி,
இன்னுமொரு சந்திப்புக்கு ஏங்கும்,
பதிவுலக சகா மருதமூரான்.
பொக்கிஷம்: இலக்கியச் சினிமா, இயல்பாக இல்லை.
Posted On Wednesday, August 19, 2009 at at 11:18 AM by மருதமூரான்.‘பாரதி கண்ணம்மா’, ‘ஆட்டோகிராப்’ என்று தோற்றுப்போன காதல் நினைவுகளை இயல்பாகவும், யதார்த்தமாகவும் வெற்றிகரமாக வெள்ளித்திரையில் காட்டிய இயக்குனர் சேரன் உருவாக்கியிருக்கும் மற்றுமொரு தோற்றுப்போன காதல் நினைவே ‘பொக்கிஷம்’. இணையமும், மின்னஞ்சலும், அலைபேசியும் இல்லாத 70களில் இஸ்லாமியத் தமிழ் பெண்ணுக்கும், இந்து தமிழ் இளைனுக்கும் இடையில் நடக்கும் கடிதமூலமான அழகிய காதலே ‘பொக்கிஷம்’.
இந்தியாவின் மேற்கு நகரமான கொல்கத்தாவில் துறைமுகத்தில் பொறியாளராக வேலை செய்கிறார் லெனின் (சேரன்). தமிழ்நாட்டின் நாகூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி நதிரா (பத்மப்பிரியா). தந்தை (விஜயகுமார்) உடல்நிலை சரியில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரைக் காண லெனின் விடுப்பில் சென்னை வருகிறார். இஸ்லாமிய தமிழ் பெண்ணொருவர் சிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த பெண்ணுடைய மகளே நதிரா. பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் லெனினும், நதிராவும் ஒருவருக்கு ஒருவர் இயல்பாக அறிமுகமாகிறார்கள். இந்த அறிமுகம் இருவருக்குமிடையில் இலக்கியத்தையும், நடைமுறை வாழ்க்கையை பேசிக்கொள்ளச் செய்கிறது.
தனது விடுப்பு நாட்கள் முடிந்து கொல்கத்தா செல்லும் முன் நதிராவைச் சந்தித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் வைத்தியசாலை செல்கிறார் லெனின். ஆனால், அங்கு அவர் இல்லை என்ற ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் செல்கிறார். கொல்கத்தாவில் பணியின் முழ்கியிருக்கும் தருணத்தில் தந்தையிடம் இருந்து வரும் கடிதத்தில் நதிராவின் விலாசம் கண்டு உற்சாகமடையும் லெனின் அவளுக்கு கடிதம் எழுதுகிறனான். அதற்கு நதிராவும் பதில் கடிதம் எழுத ஆரம்பிக்கிறது அவர்களுக்கிடையிலான கடிதங்களுக்கிடையிலான காதல்.
அந்தக் காதலை லெனின் தந்தையிடம் சொல்ல.. அவர், நதிராவின் தந்தையிடம் விடயத்தை சொல்லி சம்மதம் பெறுகிறார். நதிராவின் தந்தை திருமணத்துக்கு மூன்று மாதங்கள் அவகாசம் கேட்கிறார். ஒரு வேண்டுகோளுடன் மாதத்துக்கு ஒரு கடிதம் மட்டுமே லெனின் நதிராவுக்கு எழுதவேண்டும் என்று. இதனை ஏற்றுக்கொண்;டு கொல்கத்தா செல்கிறார் லெனின். சிறிது காலத்துக்குள்ளேயே லெனின் எழுதும் கடிதங்களுக்கு நதிராவிடமிருந்து பதில் கடிதங்கள் வராததையடுத்து, நதிராவை; தேடி நாகூர் செல்கிறார் லெனின். அங்கு நதிராவின் குடும்பமே இல்லாத நிலையில் அவர்களை; தேடி அலைகிறார்.
ஒரு தருணத்தில் தந்தையின் வேண்டுகொளையடுத்து இன்னொரு பெண்ணை மணந்து பிள்ளையொன்றுக்கு தந்தையாகிறார் லெனின். ஆனாலும், நதிராவை தேடிக்கொண்டேயிருந்து தேடலில் வெற்றிகாணாமலேயே லெனின் இயற்கையெய்துகிறார். லெனின் தன்னுடைய தேடல்களை கடிதமாக எழுதி வைக்கிறார். அவரின் தேடல்களை லெனினுடைய மகன் பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதே பொக்கிஷத்தின் இறுதிக்காட்சிகள்.
நதிராவாக வந்து நடிப்பில் ஆச்சர்யம் காட்டியிருக்கிறார் பத்மப்பிரியா. ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் சேரனால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பத்மப்பிரியாவுக்கு சரியான களங்கள் போதியளவில் அமையவில்லை. தமிழ் சினிமா உலகின் திறமையான இயக்குனர்கள் கண்டுகொள்ளவேண்டும். சேரனுக்கும், பத்மப்பிரியாவுக்கும் இடையிலான காட்சிகளில் பத்மப்பிரியாவே அதிகம் மனதில் நிற்கிறார். சேரனின் நடிப்பு திறனில் மாற்றத்தைக் காண முடியவில்லை ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து படங்களில் வந்த அதே சேரன். அவர் இயக்குனராக மட்டும் இருந்துவிட்டால் சிறப்பாக இருக்கும் என்று தோன்னுகிறது. சேரன் மாற்றிக்கொள்ள வேண்டிய மற்றுமொரு விடயம் தனது படங்களின் நாயகர்கள் மீது கழிவிரக்கத்தை ஏற்படுத்துவது. இதுவும் சில தருணங்களில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. விஜயகுமார், இளவரசு ஆகியோரும் தமக்கான பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளனர்.
நல்ல படைப்பாளி தொடர்ந்தும் ஒரே விதமான படைப்புக்களுக்குள் தன்னை முடங்கிக்கொள்ளும் போது அந்தப் படைப்பாளியின் மீதான ஈர்ப்புக்கள் ரசிகர்களிடம் குறைந்து போகும். அதனை எந்தவொரு படைப்பாளியும் விரைவில் புரிந்துகொள்வதில்லை. அந்த புரிந்துகொள்ள மறுத்தலின் விளைவே பொக்கிஷத்தை அதிகளவில் பாதித்துவிட்டதாக் தெரிகிறது. சேரன் நல்ல திரைக்கதையாசிரியர், இயக்குனர். ஆனால், அவர் தொடர்ந்தும் ஒரே போக்கான களங்களில் பயணிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. பொக்கிஷத்தில் அழகிய காதலை கவிதையாக தந்துள்ள சேரன் அதனை அதிகநேரம் காட்சிப்படுத்தியிருப்பது மிகுந்த அலுப்பையே வரவழக்கிறது.
70களில் சென்னையும், நாகூரும், கொல்கத்தாவும் எப்படியிருக்கும் என்று காட்டியதில் கலை இயக்குனர் வைரபாலன் அடடா போட வைக்கிறார். ஒளிப்பதிவில் ராஜேஸ் யாதவ் அழகியலையும், உணர்ச்சிகளையும் சம அளவில் பதிவு செய்திருக்கிறார். பின்னணி இசைகளில் ஆச்சரியப்படுத்தும் இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளி பாடல்களில் ஏமாற்றுகிறார்கள். சேரனின் திரைக்கதையே நீண்டு செல்கிறபோது படத்தொகுப்பாளரும் காட்சிகளின் நீளத்தை அதிகரித்து சில இடங்களில் எரிச்சல்பட வைக்கிறார். காட்சிகளின் நீளத்தினை குறைத்திருக்கலாம்.
சேரனின் படைப்புக்களில் ‘பாரதி கண்ணம்மா’வுக்கு பின்னர் அதிகம் மக்களை ஆக்கிரமித்தது ஆட்டோகிராபும், தவமாய் தவமிருந்தும். ஆனால், அவர் தொடர்ந்தும் ஒரே தளத்துக்குள் பயணப்படுகிறார் என்ற உணர்வு மக்களிடம் வருவதை பொக்கிஷம் அதிகரிக்கும். பொக்கிஷத்தின் மூலம் இலக்கியச் சினிமாவை ரசிகர்களுக்கு தரமுயன்றுள்ளார் சேரன், ஆனால் அதில் அவரினால் வெற்றி பெறமுடியுமா என்பது கேள்விக்குறியே. நல்ல படைப்புக்கள் இலக்கியங்களாகின்றன. ஆனால், ஒரே மாதிரியான எல்லா படைப்புக்களும் இலக்கியங்கள் ஆவதில்லையே. பொக்கிஷம் இலக்கியத்தனமான சினிமாதான். ஆனால், இயல்பாக இல்லை என்பது அதன் பெரிய குறை.
‘நீங்கள்....நீ’யான தருணம்: வந்தியத்தேவன் சொன்ன தகவல்.
Posted On Saturday, August 15, 2009 at at 9:49 AM by மருதமூரான்.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 'யாழ்தேவி' தொடரூந்து விரைந்து கொண்டிருக்கிறது. 2ஆம் வகுப்பு பெட்டியில் வேட்டி, சட்டையுடன் கந்தசாமி... சில பொதிகளுடனும், கைப்பையுடனும். அதே பெட்டியில் அவருக்கு எதிர் இருக்கையில் கொழும்பு பல்கலையில் கற்கும் அருண்குமார்... சில பொதிகளுடனும், புத்தகங்களுடனும். கொடிகாமம், பளை தாண்டி யாழ்தேவி விரைந்துகொண்டிருக்கிறது.
கந்தசாமி: தம்பி..... நீங்கள் எங்க வவுனியாவுக்கோ..... கொழும்புக்கோ?
அருண்குமார்: கொழும்புக்கு... ஐயா.
கந்தசாமி: கொழும்புக்கு என்ன அலுவலா போறியள்? இல்லாட்டி உத்தியோகமோ?
அருண்குமார்: இல்லை ஐயா... கொழும்பு பல்கலையில் படிக்கிறன்... லீவு முடிஞ்சு போறன்.
கந்தசாமி: அப்பிடியே..... சரி தம்பி யாழ்ப்பாணத்தில நீங்கள் எங்க இருக்கிறியள்...
அருண்குமார்: கரவெட்டிக்குள்ள...
கந்தசாமி: கரவெட்டிக்குள்ள எங்க............
அருண்குமார்: கரவெட்டிக்குள்ள அங்க.........தான்.
கந்தசாமி: அப்ப நீ.............அந்த இடத்து பெடியனோ?
அருண்குமார்: ஓம்.......நான் அந்த இடத்து பெடியன்தான்....என்னப்பற்றி என்ன தெரியோணும் உங்களுக்கு.
கந்தசாமி: நீ எல்லாம் படிக்க வெளிக்கிட்டிட்டாய்... அப்ப உங்கட தொழில செய்யிறது ஆர்?.
இவ்வாறு தொடர்கிறது அந்த உரையாடல். இவ்வாறான நிகழ்வுகள் 1960, 1970களில் யதார்த்தமாக ‘யாழ்தேவி’ தொடரூந்து பயணங்களில் இடம்பெற்று வந்துள்ளன. இந்த விடயத்தினை ‘சிரித்திரின்’ பத்திரிகையில் தான் வசித்ததாக நண்பர் வந்தியத்தேவன் குறிப்பிட்டிருந்தார். (அதங்க... இலங்கை பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடக்குதல்லே... அதுசம்பந்தமாக அண்மையில் நண்பர் வந்தி அலைபேசியில் அழைத்தார். அதன்போது எங்களின் உரையாடல் பதிவுலகம், சினிமா, ஊடகம், அரசியல் என்று பல விடயங்களைத் தொட்டது. அதன்போது தான் மேற்சொன்ன விடயத்தையும் வந்தி குறிப்பிட்டார்.)
இலங்கையில் தமிழர்களிடையில் சாதி வேற்றுமைகள் குறைந்து விட்டதாக அண்மைக்காலமாக பலரினால் சொல்லப்படுகின்றது. எழுத்துக்களிலும் சில தருணங்களில் காணமுடிகிறது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டங்கள் ஆரம்பித்ததன் பின்னர் சாதி வேற்றுமைகள், மத வேறுபாடுகள் குறைவடைந்து விட்டதான ஒரு பொய்யான பிம்பம் தானாகவே உருவாகியிருந்தது. அதற்கு மக்கள் வேறு திசையில் தமது கவனத்தை கொண்டிருந்தமை காரணமாக இருக்கலாம்... ஆனாலும், அந்த காரணங்கள் முறியடிக்கப்பட்ட (இந்த இடத்தில் என்னை திட்டுபவர்களுக்கும் நன்றி) பின்னர் நீறு ப+த்த நெருப்பாகவிருந்த சாதியத்தின் வடுக்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன.
ஒவ்வொரு மனிதனும் தனது அதிகாரத்தையும், இருப்பையும் தக்கவைத்துக்கொள்ளவே சாதி, மதம் (இதற்குள் இன அடையாங்களும் உட்படும்) உள்ளிட்டவற்றை அதிகமாக ஆதரிக்கின்றான். தமது இருப்புக்களுக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் சாதியத்தையும், மதவாதத்தையும் மிகவும் இலகுவாக தூண்டிவிட்டு தனக்கு வேண்டியதை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றான். இதற்கு இந்தியா மிகச்சிறந்த உதாரணம். இல்லை இல்லை, இலங்கையும் மிகச்சிறந்த உதாரணமே... யாழிலும், மட்டக்களப்பிலும், வவுனியாவிலும் கூட இன்றும் சாதி வேறுபாடுகள் காட்டி கோயில் அனுமதி தடுக்கப்படுகின்ற தருணங்கள் உண்டு. அது குறித்து பேச (நான் உட்பட) யாரும் தயாரில்லை.
‘யாழ்தேவி’ தொடரூந்தின் முன்னைய பயணங்களில் ‘நீங்கள்...... நீ’யான தருணங்கள் ஆயிரமிருக்கலாம். அந்த தருணங்கள் யாழ்தேவியின் எதிர்காலப்பயணங்களில் இடம்பெறுவது தவிர்க்கப்படவேண்டும். அது எவ்வாறு தவிர்க்கப்படுகிறதோ.... அப்போதுதான் சமத்துவம் சாத்தியப்படும். நான் இங்கு சொல்லவந்தது ‘கலைஞர் கருணாநிதி’ சொல்லும் சமத்துவமல்ல. உண்மையான, மனப்பூர்வமான சமத்துவம். எனக்கு தொடர்ந்தும் சில கேள்விகள் எழுவதுண்டு....
மேல் சாதி கீழ் சாதி என்று பேசுபவர்கள்.... தமக்கிடையில் உடலியல் ரீதியில் காணும் வேறுபாடு என்ன? அனைவருக்கும் இரண்டு கைகள், ஒரு மூக்கு, ஒரு வாய்தானே..... யாருக்காவது குறைச்சல் உள்ளதா??? இவர்கள் என்ன விதத்தில் வேறுபடுகிறார்கள். கல்வித்தரம், பொருளாதாரம் ஆகியவற்றில் தானே. இந்த இரண்டையும் யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இரண்டு விடயங்களையும் வைத்துக்கொண்டு தாம் உயர்ந்தவர்கள் என்று கூறுபவர்களைப் பார்த்து எனக்கு எந்தக்காலத்திலும் வியப்பு ஏற்படுவதில்லை. மாறாக அனுதாபம் தான் ஏற்படுவதுண்டு.
ஆறு நாளிலிருந்து அரை நாள் வரை: கிரிக்கட்டின் மாற்றம்.
Posted On Friday, August 14, 2009 at at 9:05 AM by மருதமூரான்.“பதினொரு முட்டாள்கள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்”. இது கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் ஆங்கில அறிஞர் பேர்ணாட்ஷா ஒருமுறை கூறிய கருத்து. பேர்ணாட்ஷா அப்போது கூறியதன் அர்த்தம் கிரிக்கட் உலகிலும் விரைவில் உணரப்பட்டது. கிரிக்கட் ஒழுங்கு விதிகளும், ஆட்ட நுணுக்கங்களும் காலத்துக்கேற்ப மாற்றமடைந்து வந்தன. எதிர்காலத்திலும் அது இன்னுமின்னும் மாற்றம் காணவே செய்யும்.
இங்கிலாந்தின் பிராந்தியங்களில் விளையாடப்பட்ட கிரிக்கட், பல ஒழுங்கு விதிகளுடன் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகம் முழுவதுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தின் காலனித்துவத்தின் கீழிருந்த தென்னாசிய, ஆபிரிக்க, கரீபியன் தீவுகள், அவுஸ்திரேலிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அந்தப் பிராந்தியங்களில் கிரிக்கட் வெகு விரைவிலேயே பிரபலப்படுத்தப்பட்டது.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கிரிக்கட்டை கற்றுத்தந்த இங்கிலாந்துக்கே அவுஸ்திரேலியாவும், மேற்கிந்தியத் தீவுகளும் துடுப்பு மட்டையாலும், பந்துவீச்சு நுணுக்கங்களினாலும் கிரிக்கட் பாடம் புகட்ட ஆரம்பித்தன. தென்னாசிய நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும், இலங்கையும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே கிரிக்கட்டுக்கு தங்களை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டன. சமீபத்தில் பங்களாதேசும் இதில் சேர்ந்து கொண்டது.
கிரிக்கட் ஆரம்பித்த காலங்களில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு இன்னிங்சுகள் விளையாட வேண்டும் என்பதே விதியாக இருந்தது. இதனால், சில போட்டிகள் வாரக்கணக்கில் தொடர்ந்தன. ரசிகர்கள் இதனால் சுவராஸ்யம் இழக்க ஆரம்பித்தனர். இதனைப் புரிந்துகொண்ட கிரிக்கட் உலகம் 6 நாட்கள் விளையாடப்படும் டெஸ்ட் கிரிக்கட் போட்டியை 19ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்தது. சர்வதேச கிரிக்கட் சபையின் வருகையுடன் 5 நாட்களாக இது குறைக்கப்பட்டது. இந்த வழக்கமே டெஸ்ட் கிரிக்கட்டில் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ‘கனவான்களின் விளையாட்டு’ என வர்ணிக்கப்படும் கிரிக்கட்டில் டெஸ்ட் போட்டிகளே இன்றளவும் பாரம்பரியமாகத் தொடர்கின்றன.
உலகின் நவீன வளர்ச்சிகளுடன் தங்களை மாற்றிக்கொண்டிருந்த மற்றைய விளையாட்டுக்கள் போல பெரிதாக மாற்றங்களை செய்யாத கிரிக்கட்டின் மீது ரசிகர்களின் மோகம் குறைவதை அவதானித்த அவுஸ்திரேலிய கிரிக்கட் விற்பன்னர்கள், 1970களில் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளை அறிமுகப்படுத்தினர். ஒவ்வொரு அணியும் தலா 60 ஓவர்கள் துடுப்பாடும். நேரம் போதமையினால், 1980களில் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு அணியும் தலா 50 ஓவர்கள் துடுப்பாடும் வகையில் கிரிக்கட் விதிகள் மாற்றியமைக்கப்பட்டன.
ஒரு நாள் போட்டிகளின் வருகையினால், அவுஸ்திரேலியாவும், இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் கிரிக்கட்டில் செலுத்திவந்த ஆதிக்கத்தை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கைப்பற்றத் தொடங்கின. ஒருநாள் கிரிக்கட் போட்டிகளை, உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டிகளாகவும் 4 வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கட்சபை நடத்தி வருகின்றது. இதுவரை, மேற்கிந்தியத்தீவுகள், அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளன.
இன்றைய மக்களிடம் அதிகளவில் பிரமலமாகியிருக்கும் இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டிகளின் ஆரம்பமும் என்னவோ இங்கிலாந்தில்தான் நடந்தேறியது. இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களுக்கிடையில் 1990களில் இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒருநாள் கிரிக்கட் போட்டிகளின் முடிவை அறிவதற்கு முழுநாளும் காத்திருந்த ரசிகர்களுக்கு மூன்றரை மணித்தியாலங்களுக்குள் போட்டி முடிவு தெரியவந்தது ஆர்வரத்தைக் கூட்டியது. இதனால், இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகளின் பக்கம் ரசிகர்கள் விரைவாகத் திருப்பினர். இதனை அவதானித்த மற்ற நாடுகளும் 1990களின் இறுதியில் இருபதுக்கு-20 போட்டிகளை பின்பற்ற ஆரம்பித்தன.
சர்வதேசக் கிரிக்கட் சபை பின்னர் இருபதுக்கு-20 கிரிக்கட்டையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்டது. சர்வதேசக் கிரிக்கட் விளையாடும் நாடுகளுக்கிடையில் 2007ஆம் ஆண்டு முதலாவது இருபதுக்கு-20 கிரிக்கட் உலகக்கிண்ணத்தை சர்வதேசக் கிரிக்கட் சபை நடத்தியது. இதில், மஹேந்திரசிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. இதன் பின்னர் இருபதுக்கு-20 போட்டிகளின் போக்குகள் அபரிமிதமானது.
இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டி மீது மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தைத் தமக்குச் சாதகமாக்கி கிரிக்கட் மூலம் பணம் புரட்ட இந்தியக் கிரிக்கட் சபை தீர்மானித்து, ‘இந்தியன் ப்ரீமியர் லீக்’ என்ற அமைப்பை ஆரம்பித்தது. சர்வதேச வீரர்களையும் உள்வாங்கிக்கொண்டு பிராந்திய கழகங்களை உருவாக்கி ஐ.பி.எல். இருபதுக்கு-20 போட்டிகளை 2008ல் நடத்தியது இந்தியா. இது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து, 2009ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஐ.பி.எல். போட்டிகளை தென்னாபிரிக்காவில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது இந்தியக் கிரிக்கட் சபை.
ஆனால் என்ன? இருபதுக்கு-20 கிரிக்கட்டில் துடுப்பாட்டாளர்கள் அதிரடியாட்டத்தை வெளிக்காட்ட, பந்துவீச்சாளர்களின் பாடு திண்டாட்டமானது. எனினும், இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டிகளின் வரவு புதிய ரசிகர்களையும், நாடுகளையும் கிரிக்கட்டின் பின்னால் வரவைத்துள்ளது.
இருபதுக்கு-20 போட்டிகளால் கிரிக்கட் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இருபதுக்கு-20 போட்டிகள் கிரிக்கட் வீரர்களின் திறமையை மெருகூட்டும் வகையில் அமையாது என முன்னாள் கிரிக்கட் வீரர்களும், கிரிக்கட் நிபுணர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இருபதுக்கு-20 போட்டிகளில் ஓட்டங்களைக் குவிப்பதில் மாத்திரமே வீரர்கள் கவனம் செலுத்துவதால் வீரர்களின் தனிப்பட்ட திறமை வெளிக்கொணரப்படாது என்பது அவர்களின் வாதம்.
என்னதான் விமர்சனங்கள் எழுந்தாலும் இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டிகள் இரசிகர்களின் மனங்களை வெற்றிகொண்டுவிட்டது என்பது மட்டும் உண்மையே. இனி கிரிக்கட் வீரர்கள் இரசிகர்களின் தாளத்துக்கு ஆடித்தானே ஆகவேண்டும்?
(யாழில் இருந்து வெளிவர இருக்கும் ‘சிகரம்’ வார இதழுக்காக எழுதியது. எதிர்காலத்தில் கிரிக்கட் தொடர்பிலான விரிவான பத்திகள் குறித்த வார இதழில் வரும். அதற்கான முன்னோட்ட இணைப்பே இது.)
இங்கிலாந்தின் பிராந்தியங்களில் விளையாடப்பட்ட கிரிக்கட், பல ஒழுங்கு விதிகளுடன் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகம் முழுவதுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தின் காலனித்துவத்தின் கீழிருந்த தென்னாசிய, ஆபிரிக்க, கரீபியன் தீவுகள், அவுஸ்திரேலிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அந்தப் பிராந்தியங்களில் கிரிக்கட் வெகு விரைவிலேயே பிரபலப்படுத்தப்பட்டது.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கிரிக்கட்டை கற்றுத்தந்த இங்கிலாந்துக்கே அவுஸ்திரேலியாவும், மேற்கிந்தியத் தீவுகளும் துடுப்பு மட்டையாலும், பந்துவீச்சு நுணுக்கங்களினாலும் கிரிக்கட் பாடம் புகட்ட ஆரம்பித்தன. தென்னாசிய நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும், இலங்கையும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே கிரிக்கட்டுக்கு தங்களை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டன. சமீபத்தில் பங்களாதேசும் இதில் சேர்ந்து கொண்டது.
கிரிக்கட் ஆரம்பித்த காலங்களில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு இன்னிங்சுகள் விளையாட வேண்டும் என்பதே விதியாக இருந்தது. இதனால், சில போட்டிகள் வாரக்கணக்கில் தொடர்ந்தன. ரசிகர்கள் இதனால் சுவராஸ்யம் இழக்க ஆரம்பித்தனர். இதனைப் புரிந்துகொண்ட கிரிக்கட் உலகம் 6 நாட்கள் விளையாடப்படும் டெஸ்ட் கிரிக்கட் போட்டியை 19ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்தது. சர்வதேச கிரிக்கட் சபையின் வருகையுடன் 5 நாட்களாக இது குறைக்கப்பட்டது. இந்த வழக்கமே டெஸ்ட் கிரிக்கட்டில் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ‘கனவான்களின் விளையாட்டு’ என வர்ணிக்கப்படும் கிரிக்கட்டில் டெஸ்ட் போட்டிகளே இன்றளவும் பாரம்பரியமாகத் தொடர்கின்றன.
உலகின் நவீன வளர்ச்சிகளுடன் தங்களை மாற்றிக்கொண்டிருந்த மற்றைய விளையாட்டுக்கள் போல பெரிதாக மாற்றங்களை செய்யாத கிரிக்கட்டின் மீது ரசிகர்களின் மோகம் குறைவதை அவதானித்த அவுஸ்திரேலிய கிரிக்கட் விற்பன்னர்கள், 1970களில் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளை அறிமுகப்படுத்தினர். ஒவ்வொரு அணியும் தலா 60 ஓவர்கள் துடுப்பாடும். நேரம் போதமையினால், 1980களில் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு அணியும் தலா 50 ஓவர்கள் துடுப்பாடும் வகையில் கிரிக்கட் விதிகள் மாற்றியமைக்கப்பட்டன.
ஒரு நாள் போட்டிகளின் வருகையினால், அவுஸ்திரேலியாவும், இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் கிரிக்கட்டில் செலுத்திவந்த ஆதிக்கத்தை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கைப்பற்றத் தொடங்கின. ஒருநாள் கிரிக்கட் போட்டிகளை, உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டிகளாகவும் 4 வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கட்சபை நடத்தி வருகின்றது. இதுவரை, மேற்கிந்தியத்தீவுகள், அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளன.
இன்றைய மக்களிடம் அதிகளவில் பிரமலமாகியிருக்கும் இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டிகளின் ஆரம்பமும் என்னவோ இங்கிலாந்தில்தான் நடந்தேறியது. இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களுக்கிடையில் 1990களில் இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒருநாள் கிரிக்கட் போட்டிகளின் முடிவை அறிவதற்கு முழுநாளும் காத்திருந்த ரசிகர்களுக்கு மூன்றரை மணித்தியாலங்களுக்குள் போட்டி முடிவு தெரியவந்தது ஆர்வரத்தைக் கூட்டியது. இதனால், இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகளின் பக்கம் ரசிகர்கள் விரைவாகத் திருப்பினர். இதனை அவதானித்த மற்ற நாடுகளும் 1990களின் இறுதியில் இருபதுக்கு-20 போட்டிகளை பின்பற்ற ஆரம்பித்தன.
சர்வதேசக் கிரிக்கட் சபை பின்னர் இருபதுக்கு-20 கிரிக்கட்டையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்டது. சர்வதேசக் கிரிக்கட் விளையாடும் நாடுகளுக்கிடையில் 2007ஆம் ஆண்டு முதலாவது இருபதுக்கு-20 கிரிக்கட் உலகக்கிண்ணத்தை சர்வதேசக் கிரிக்கட் சபை நடத்தியது. இதில், மஹேந்திரசிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. இதன் பின்னர் இருபதுக்கு-20 போட்டிகளின் போக்குகள் அபரிமிதமானது.
இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டி மீது மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தைத் தமக்குச் சாதகமாக்கி கிரிக்கட் மூலம் பணம் புரட்ட இந்தியக் கிரிக்கட் சபை தீர்மானித்து, ‘இந்தியன் ப்ரீமியர் லீக்’ என்ற அமைப்பை ஆரம்பித்தது. சர்வதேச வீரர்களையும் உள்வாங்கிக்கொண்டு பிராந்திய கழகங்களை உருவாக்கி ஐ.பி.எல். இருபதுக்கு-20 போட்டிகளை 2008ல் நடத்தியது இந்தியா. இது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து, 2009ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஐ.பி.எல். போட்டிகளை தென்னாபிரிக்காவில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது இந்தியக் கிரிக்கட் சபை.
ஆனால் என்ன? இருபதுக்கு-20 கிரிக்கட்டில் துடுப்பாட்டாளர்கள் அதிரடியாட்டத்தை வெளிக்காட்ட, பந்துவீச்சாளர்களின் பாடு திண்டாட்டமானது. எனினும், இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டிகளின் வரவு புதிய ரசிகர்களையும், நாடுகளையும் கிரிக்கட்டின் பின்னால் வரவைத்துள்ளது.
இருபதுக்கு-20 போட்டிகளால் கிரிக்கட் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இருபதுக்கு-20 போட்டிகள் கிரிக்கட் வீரர்களின் திறமையை மெருகூட்டும் வகையில் அமையாது என முன்னாள் கிரிக்கட் வீரர்களும், கிரிக்கட் நிபுணர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இருபதுக்கு-20 போட்டிகளில் ஓட்டங்களைக் குவிப்பதில் மாத்திரமே வீரர்கள் கவனம் செலுத்துவதால் வீரர்களின் தனிப்பட்ட திறமை வெளிக்கொணரப்படாது என்பது அவர்களின் வாதம்.
என்னதான் விமர்சனங்கள் எழுந்தாலும் இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டிகள் இரசிகர்களின் மனங்களை வெற்றிகொண்டுவிட்டது என்பது மட்டும் உண்மையே. இனி கிரிக்கட் வீரர்கள் இரசிகர்களின் தாளத்துக்கு ஆடித்தானே ஆகவேண்டும்?
(யாழில் இருந்து வெளிவர இருக்கும் ‘சிகரம்’ வார இதழுக்காக எழுதியது. எதிர்காலத்தில் கிரிக்கட் தொடர்பிலான விரிவான பத்திகள் குறித்த வார இதழில் வரும். அதற்கான முன்னோட்ட இணைப்பே இது.)
சேரனின் ‘IN THE CITY OF SYLVIA’
Posted On Tuesday, August 11, 2009 at at 10:24 AM by மருதமூரான்.என்னுடைய மனதில் கடந்த சில நாட்களுக்கு முன்னரே இந்த கட்டுரையை எழுதவேண்டும் என்று தோன்றிவிட்டது. ஆனாலும், கட்டுரையை எவ்வாறு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. எழுதும் போது கூட பல குழப்பங்கள் தொடர்கின்றன. இந்த குழப்பங்களுடனேயே விடயத்துக்கு செல்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் தேடல்கள் உண்டு. அதுபோல ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதுக்கும் தேடல்கள் உண்டு. ஆழ்மன தேடல்கள் குறித்து 95 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. அவற்றை தேடி செல்கின்றவர்களை துறவிகள், சாமிகள், சித்தர்கள், நாடோடிகள், கிறுக்கர்கள், பைத்தியக்காரர்கள் என்றெல்லாம் அழைக்க கேட்டிருக்கிறோம். சொல்லுகின்றோம், எதிர்காலத்திலும் சொல்லுவோம். அவ்வாறான ஆழ்மன தேடல்கள் கொண்ட இளைஞன் ஒருவரின் தேடலே ‘IN THE CITY OF SYLVIA’.
நண்பர் சேரன் கிரிஷ் இரண்டு மாதங்களுக்கு முன்னர் என்னிடம் The Girlfriend Experience, Frost/Nixon, In The City Of Sylvia என்ற வெளிநாட்டுப் படங்களின் டிவீடிக்களைத் தந்தார். அதற்கு பின்னர் ஒவ்வொரு முறையும் சந்திக்கின்ற பொழுதிலும், அலைபேசியில் உரையாடுகின்ற பொழுதிலும், “மச்சான் பாத்திட்டியாட மூண்டு படத்தையும், என்னடா இன்னும் பாக்கல்லையா...... பார் மச்சான். சுப்பரடா” என்று ஒரே கேட்டுக்கொண்டேயிருந்தார். “சரி சேரன் இவ்வளவு சொல்லுறானே.... என்னதான் ஒருக்குது இந்தப் படங்கள்ள” என்று நினைத்துக்கொண்டு முதலில் பார்த்த படமே, ‘IN THE CITY OF SYLVIA’.
ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்த அழகிய பெண்ணை தேடி ஓர் ஓவியத் திறைமை கொண்ட இளைஞன் இத்தாலியின் சில்வியா நகருக்கு செல்கின்றான். அவனுடைய மூன்று நாள் வாழ்க்கையே ‘IN THE CITY OF SYLVIA’. என்ற ஸ்பானிய மொழி திரைப்படம். 2007ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தினை திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான Jose Luis Guerin இயக்கியிருக்கிறார். சில்வியா நகரிலுள்ள உணவு விடுதியொன்றின் வாடிக்கையாளர்களும், பராமரிப்பு பெண்ணும், வீதிகளும், தொடரூந்தும், ஓவியனும், அழகிய சில பெண்களுமே படத்தின் கதாபாத்திரங்கள். 84 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்தப்படத்தினை பார்ப்பதுக்கொண்டிருந்த எனக்கு தியானத்தில் இருந்த உணர்வு ஏற்பட்டது.
பெயர், முகவரி தெரியாத, அதுவும் 6 வருடங்களுக்கு முன்னர் ஓர் கண்காட்சியில் சந்தித்து உரையாடிய பெண்ணைத் தேடி அந்தப் பெண்ணைப்பற்றி எந்தவொரு தகவலும் இல்லாமல் ஒரு பெரிய நகரத்துக்கு செல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அந்த விடயத்தில் ஆர்த்மார்த்தமான செயற்படுகின்றான் அந்த ஓவிய இளைஞன். அவனின் தேடல் முடிந்ததா, இல்லையே என்ற கேள்விகளுக்கு வார்த்தைகளின், வசனங்களின், பேரிரைச்சல்களின் அலட்டல் இன்றி விடை சொல்லியிருக்கிறார் இயக்குனர். இந்தியாவின் மசாலத்தனங்களைக் கொண்ட படங்களை தொடர்ந்தும் உள்வாங்கிக்கொள்கின்ற எமக்கு இந்தப்படம் ஒரு திரைப்படமாகவே தோன்றாது. ஆனால், படத்தினை தனியையில் எந்தவொரு இடையூறுகளுமின்றி பார்க்கிறபோது வானத்தில் மிதக்கின்ற மாதிரியான, மனது இலேசானதான உணரமுடிந்தது.
தொடரூந்திலோ, பேரூந்திலோ பயணம் செய்கின்ற போது எத்தனை நபர்களை (குறிப்பாக இங்கு இளம் பெண்கள் என்று பொருத்தி பார்க்கவும்) பார்க்கின்றோம். அவர்களில் சிலரை ஏற்கனவே பார்த்தது போல உணர்வோம். அவர்களிடம் சென்று பேசலாமா வேண்டாமா என்று எல்லாம் மனதில் கேள்விகள் எழும். ஆனாலும், அதிகமானோர் அவர்களிடம் பேசுவதில்லை. பயணத்தை முடித்து நடக்கையில் யார் அவர்? பேசியிருக்கலாமோ? என்ற கேள்விகள் தொக்கி நீக்கும். மீண்டும் எமது வேலைகளில் மூழ்கும் போது அவை மறந்து போகும். இவ்வாறோ சாதாரண மக்களின் வாழ்க்கை செல்கிறது. அந்த அச்சவுணர்வை நீக்கி தைரியமாக பேசியிருக்கும் சந்தர்ப்பந்தில் சில வேளைகளில் எமது வாழ்க்கை பயணத்தில் மாற்றங்கள் கூட ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கும். இதுவொரு உதாரணம் மட்டுமே..... வாழ்க்கையின் மாற்றங்களை ஆழ்மன தேடல்கள்தானே தீர்மானிக்கின்றன. நிகழ்வுகளின் சடுதியான மாற்றங்கள் தானோ வாழ்க்கை. அது சரி இந்தக் கட்டுரைக்கு என்னது ‘சேரனின் IN THE CITY OF என்ற ஒரு தலைப்பு என்று சிந்திப்பவர்கள் உங்களுக்கு ஏதாவது தோன்றினால் எனக்கும் சொல்லுங்கள்.
(2009 ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு பொருட்பெண்ணின்(விலைமாது) நடைமுறைகளுடன் சொல்லிய படம் The Girlfriend Experience. வோட்டர்கேஜ் ஊழல் வழக்கில் சிக்கி பதவியிழந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி நிக்ஷனுக்கும், அந்த ஊழலை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர் பொரஸ்ற்க்கும் இடையில் நடைபெற்ற நிகழ்வுகளையும், நேர்காணல்களையும், உள்ளடக்கிய படம் Frost/Nixon. இது 2008 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படங்கள் இரண்டும் அரைவாசியளவில் பார்த்துவிட்டேன். ஒரு உபரித்தகவல்: நண்பர் சேரன் கிரிஷ் தமிழ் படங்களை பார்ப்பதில்லையாம், பிரென்ஞ், இத்தாலி, ஸ்பானிய, ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிப்படங்களையே அதிகம் பார்ப்பதாக செய்திகள் வருகின்றது.)
மோதி விளையாடு: ஆர்ப்பரிப்புக்கள் மட்டுமே....
Posted On Monday, August 3, 2009 at at 8:23 AM by மருதமூரான்.'வர்த்தக சாம்ராஜ்ஜங்களில் பினாமிகள் (நிழல் முதலாளிகள், பங்குதாரர்கள்)’ என்ற கருப்பொருளை எடுத்துக்கொண்டு இன்றைய நவீன உலகின் நடைமுறைகளுடன், வர்த்தக சினிமாவுக்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்கி சரண் இயக்கியிருக்கும் சினிமா ‘மோதி விளையாடு’. வர்த்தக சினிமாவின் தேவைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு புதிய கதைக் களங்களையும் அறிமுகம் செய்யும் இயக்குனர்களில் சரணுக்கும் இடமுண்டு. ஆனாலும், சில தோல்விகள் அவர்களை முற்றுமுழுதாக வர்த்தக சினிமாக்களுக்குள் பயணப்பட வைக்கிறது. அதிலும், ஏதாவது புதிதாக செய்யவேண்டும் என்று முனைப்புடன் சரண் மோதி விளையாடியிருக்கும் படம் ‘மோதி விளையாடு’.
அதியுச்ச குழிபறிப்புக்களையும், ஏமாற்று வேலைகளையும் செய்து தனது வர்த்தக சாம்ராஜ்ஜத்தை பெருக்கும் தொழிலதிபர் கலாபவன்மணி. அவரின் மகனாக வினய். இதனாலேயே தனக்கும், மகனுக்கும் உயிராபத்து வரும் என்று தெரிந்துகொண்டு பலத்த பாதுகாப்புடன் வலம் வருகிறார்கள். வினய், நண்பர் யுவாவுடன் கோடிஸ்வரர்களின் வாழ்க்கையிலுள்ள அனைத்து கேளிக்கைகளுடனும், கஜல் அகர்வாலுடனான காதலுடனும் வசித்து வருகின்றார். ஒருகட்டத்தில் வினய் தந்தையின் எதிரிகளால் குறிவைக்கப்படுகின்றார். ஆயினும், அதிலிருந்து வினய் தப்பித்துக்கொள்ள நண்பர் யுவா பலியாகின்றார். அடுத்த நாள் காலையில் நித்திரை விட்டு எழும் வினய் சந்திக்கும் அனைத்தும் புதிதான அனுபவமாகவே இருக்கின்றது. கோடிஸ்வர வாழ்க்கை அப்படியே மாற்றமடைந்து தெருவுக்கு வருகிறார். இதற்கான விடையைத் தேடி தந்தை கலாபவன்மணியிடம் செல்கிறார் வினய். அங்கு “நீ என் மகனே இல்லை, யுவா தான் என் மகன்... நீ யுவாவுக்கு பினாமி” என்று கலாபவன்மணி சொல்ல கலங்கிப்போகின்றார். அதற்கு பின்னரான கலாபவன்மணிக்கும், வினய்க்குமான பரமபத்தில் யார் வென்றார்கள் என்பதே மோதி விளையாடு படத்தின் இறுதிமுடிவு.
பணம் கொழிக்கும் வாழ்க்கையுரிய அதிக ஆடம்பரங்களுடன் வாழ்ந்து வரும் வினய். எதிர்பாராத மோதலில் சந்தித்துக்கொள்ளும் கஜல் அகர்வாலையே தனது வீட்டுக்கு வேலைக்காரியாக்கி கொள்வதும், அவர் மீதே காதல் கொள்வதும் தமிழ் சினிமாவின் காதல் காட்சிகளுக்கு புதிது. ஆனாலும், ஒருவருக்கு ஒருவர் வெறுப்பேற்றிக்கொண்டு போட்டியிடுவது வழக்கமான தமிழ் சினிமா. ஆனாலும், தமிழ் சினிமாவில் அழகான உயரமான நாயகர்களும், நாயகிகளும் குறைவு. அதனை வினய், கஜல் அகர்வாலை கொண்டு சரண் பூர்த்தி செய்திருக்கிறார். காதல் மன்னன், அமர்க்களம் என்று அழகிய காதல் கதைகளுக்கு சொந்தக்காரர் சரண் என்பதுவும் படம்பார்க்கும் போது வந்துபோகிறது.
மறைந்த இயக்குனர் ஜீவாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வினய். தனது மூன்றாவது படத்தில் நடிக்கிறேன் என்று உணர்ந்துள்ளார். நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. ஆனாலும், சொந்தக்குரலில் பேசியிருக்கிறார். அதில் தான் அதிக சிக்கல்கள் ல,ள,ழ ரொம்பவே அறுபடுகிறது. தமிழ் சினிமாவில் தற்போது ஏற்பட்டுள்ள அழகிய நாயகி பஞ்சத்தை போக்கிக்கொள்ள கஜல் அகர்வால் பயன்படுவார். எதிர்காலத்தில் முன்னணி நாயகர்களுடன் ஆடிப்பாடுவதைப் பார்க்க முடியும். பாரதிராஜாவின் அறிமுகம், நடிப்பிலும் அசத்துகிறார். தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வரும் நண்பராக அறிமுக நாயகன் யுவா நன்றாகவே தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். படத்தில் அவர் பேசிய வசனங்கள் இருபதைத் தாண்டுவதே அதிகம். கோடீஸ்வரர் கலாபவன்மணியின் மகன்தான் தான் என்று தெரியாமலே வந்து, கோடீஸ்வர வாழ்க்கைக்காக ஏங்கி செத்துக்போவது யுவாவின் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
வர்த்தக உலகின் பெரும்புள்ளியாக கலாபவன்மணியின் அறிமுகக்காட்சிகள் அற்புதம். அதுவும் தன் மீது வீசப்படும் சப்பாத்தினை பிடித்துக்கொண்டு அவர் பேசும் நக்கல் வசனங்கள் இரசிக்குப்படியுள்ளது. அதிலேயே அவரின் குண இயல்புகளை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனாலும், கலாபவன்மணி என்றாலே ஏதாவது மிமிக்கிரியும், நக்கல் பேச்சுக்களும் இருக்கவேண்டும் என்பதற்காகவே சேர்க்கப்பட்ட காட்சிகள் மிகையே. நான் கடவுள் அகோரி, சுப்ரமணியபுரம் நாயகன் வேடங்களில் வினயின் நண்பனாக வந்து தனது பங்குக்கு அசத்தி விட்டு செல்கிறார் சந்தானம். கொச்சின் ஹனீபா, மயில்சாமி உள்ளிட்டவர்களின் பாத்திரங்களும் சிரிப்புக்களை வரவழைக்கிறது.
அஜித் நடித்த ‘பில்லா’ திரைப்படத்தின் வரவுக்கு பின்னர் தமிழ் சினிமா இயக்குனர்கள் பலருக்கு ‘ஸ்ரைலிஸ் மேக்கிங்’ என்ற பேய் பிடித்துவிட்டது போல் தோன்றுகின்றது. அதற்கு தன்னையும் பொருத்திக்கொள்ள சரண் முயன்றிருக்கிறார். அதனாலேயே அளவுக்கதிகமான ஆடம்பரக்காட்சிகளை சேர்திருக்கிறார். ஆனாலும், மோதி விளையாடு... என்ற பாடலில் அந்தப்பாடலைப்பாடிய இசையமைப்பாளர் தேவா, ஹிரிகரன், லெஸ்லி ஆகியோரை நடிக்க வைத்தது புதுமையாகவும், அருமையாகவுமுள்ளது. படத்தில் ஒளிப்பதிவும் சற்று அதிக ஆடம்பரங்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு, உணர்ச்சிகளை விட்டுக்கொடுத்து விட்டதாகக் தெரிகிறது. படத்தொகுப்பாளர் அதிக நேரங்களை விட்டுக்கொடுக்காமல் காட்சிகளை சரியான கோர்வையாக்கியிருக்கிறார்.
மோதி விளையாடு... என்று ஆரம்பிக்கும் பாடலில் ‘புலிப் பாலில் தேநீர் போடடா’ என்ற ஊக்கமூட்டும் வரிகளில் பாடலாசிரியர் வைரமுத்து அசர வைக்கிறார். ஆனாலும், மெல்லிசைப்பாடல்களில் அவரின் வரிகளை விட இரைச்சல்கள் அதிகம். அறிமுக இசையமைப்பாளர்கள் ஹிரிகரன்-லெஸ்லி கவனித்திருக்க வேண்டும். “மொத்தத்தில் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நானொரு பொய்” போன்ற வசனங்களில் படத்தின் வசனங்களை எழுதிய ஆர்.ராமகிருஸ்ணன் ஜொலிக்கின்றார்.
ஒரு திரைப்படத்தில் வெற்றியும் தோல்வியும் இரசிகர்களின் கைகயிலேயே தங்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ள அநேக தருணங்களில் படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் மறந்து விடுகிறார்கள். அதனாலேயே, பெரும் முதலீடுகளில் எடுக்கப்படுகின்ற பல படங்கள் தோல்விகளைத் தழுவுகின்றன. அதனை ‘இதயத்திருடன்’, ‘வட்டாரம்’ என்ற தனது சொந்த பட அனுபவத்திலேயே இயக்குனர் சரண் பெற்றிருக்கின்றார். ஆயினும், அதிலிருந்து வெளிவந்துள்ளதாக தெரியவில்லை. ‘மோதி விளையாடு’ அதியுச்ச ஆடம்பரங்களை கொண்ட படம். இளைஞர்கள் மனதை வேண்டுமானால் வெற்றி கொள்ளும், ஆனால், சாதாரண சினிமா இரசிகர்களின் மனதை கவருமா என்பது கேள்விக்குறியே?....








