'நாடோடிகள்': நட்புக்கும், காதலுக்குமான பயணம்.


‘யதார்த்த சினிமா’ என்றால் என்ன?. என்ற வினாவுக்கான பதிலை தமிழ் சினிமா உலகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக புரிந்து கொண்டுவிட்டதோ என்ற சந்தேகம் கடந்த சில மாதங்களுக்கு முன் தோன்றியது. இந்த கட்டுரையை எழுதும் பொழுதும் அதே எண்ணம் எழுகிறது. பருத்திவீரன், சென்னை28, சுப்பிரமணியபுரம், காஞ்சிவரம், வெண்ணிலா கடி குழு, பசங்க என்று கிராமத்து வாழ்க்கையின் உண்மைகளை வெகு இயல்பாகவும், நிறம் மாறாமலும் தமிழ் சினிமா அண்மையில் வெளிக்கொணர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இயக்குனர் சமுத்திரக்கனி படைத்திருக்கும் (மற்றுமொரு) கிராமத்து சினிமா ‘நாடோடிகள்’.


நண்பனின் காதலை சேர்த்து வைக்க புறப்படும் மூன்று நண்பர்கள். அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், இழப்புக்கள். தாம் சேர்த்து வைத்த காதலே காரணமின்றி பிரிந்த பொழுது நண்பர்கள் மூவரும் எடுக்கும் ரௌத்திரமான இறுதி முடிவு…….. இதுவே ‘நாடோடிகள்’ சினிமாவின் கதைச் சுருக்கம்.


அரசாங்க வேலை என்ற கனவில் சசிகுமார், தனியாக கணினி பயிற்சி மையம் அமைக்கும் முயற்சியில் விஜய்(குமார்), எப்பிடியாவது வெளிநாடு சென்றுவிடவேண்டும் என்ற ஏக்கத்தில் அலையும் பரணி. இவர்கள் மூவரும் நண்பர்கள். பொற்றோரின் திட்டும், விதிப் பேச்சுக்களும், குடியும் கும்மாளமும் அத்துடன் மனது மயக்கும் காதலுமாக வலம் வருகிறார்கள். (இவர்களை தமிழகத்தின் கிராமங்களில் மட்டுமல்ல மட்டக்களப்பிலும், கரவெட்டியிலும், மருதங்கேணியிலும் கூட காணமுடியும்.) இவ்வாறு பொழுதைக் கழிக்கும் மூவரின் வாழ்க்கையும் சசிகுமாரின் நண்பர் ரங்காவின் வருகையுடன் திசை மாறுகிறது. சசிகுமாரைப் பார்க்க வந்த ரங்கா தற்கொலைக்கு முயல்வதும்….அதன் தொடர்ச்சியாக அவனது காதல் கைகூடுவதில் உள்ள சிக்கல் தெரியவர, அதனை தீர்த்து வைக்க சசிகுமாரும், நண்பர்களும் புறப்படுகின்றனர்.


அதிகார வர்க்க காதலர்களின் தாய், தந்தையரை ஏமாற்றி, ரங்காவின் காதலியை எவ்வாறு ரங்காவிடமே சேர்ப்பித்தார்கள். அதற்கான முயற்சியில் சசிகுமாரும், நண்பர்கள் இருவரும் என்னென்ன இழந்து என்ன நிலைக்கு ஆளானார்கள். என்பதுவும்…. நண்பனின் காதலை இணைத்து வைத்த மகிழ்ச்சியில் திருப்தியடையும் அவர்களுக்கு, தாம் சேர்த்து வைத்த காதல் பிரிந்த செய்தி கிடைத்ததும் கொதித்து போகிறார்கள். அதற்கான காரணத்தை கேட்கச் செல்லும் போது அவர்கள் நட்பால் அலைக்களித்து நோகடிக்கப்படும் பொழுது அவர்கள் எடுக்கும் எதிர்பாராத முடிவு…. என்று கிராமத்து வாழ்கையில் காதலையும், நட்பையும், துரோகத்தையும் மிக அச்சொட்டாக எடுத்துக்கொண்டு இயல்பாக சமுத்திரக்கனி படத்தை இயக்கியுள்ளார்.


தமிழ் சினிமாக்கள் பலதில் கண்டுவிட்ட மொட்டைமாடி இளைஞர்களின் குடியும், கும்மாளத்துடனுமான இரவுகள்… நண்பனின் தங்கையையே காதலிக்கும் கதாநாயகன்… என்று பல காட்சிகள் ஏற்கனவே பலமுறை பல படங்களில் பார்த்துவிட்ட போதிலும்.. மகனின் காதலுக்காக தூதுபோகும் தகப்பன், தங்கையின் காதலை தெரிந்து கொண்டும் கண்டுகொள்ளாமல் அதனை வளர விடும் அண்ணன்…. அந்த காதலுக்கே விட்டில் எதிர்ப்பு வரும் பொழுது காதலை ஆதரிப்பது… என்றும் புதிய காட்சிகளுடனும் ‘நாடோடிகள்’ பயணிக்கிறது.


‘சுப்பிரமணியபுரம்’ சசிகுமார் நடிப்பில் எந்தவித ஆர்ப்பரிப்புக்களும் இல்லை… தன் பாத்திரத்தின் கனத்தை புரிந்து கொண்டு நடித்துள்ளார். ‘சென்னை28’ விஜய்(குமார்) கிராமத்து வாழ்கைக்கு பொருந்திப்போயுள்ளார். ‘கல்லூரி’ பரணி எதிர்காலத்தில் நல்ல கதை நாயகனாக வலம்வர வாய்ப்புள்ளது. சசிகுமாரின் முறைப்பெணாக வந்து எந்தநேரமும் ஏதாவது சிறுதீனி தின்றுகொண்டு காதல் கொஞ்சும் அனன்யா நல்ல புதுவரவு…. இவர்கள் எல்லோரையும் விட என்மனதில் ஆணியடித்து நிற்பதென்னவோ சசிகுமாரின் தங்கையாக வந்து விஜயை(குமார்) காதலிக்கும் அபிநயாதான். இயற்கையிலேயே காது கேட்காமலும், வாய்பேச முடியாமலுமுள்ள அவரின் வசன உச்சரிப்புக்களில் எந்தவித பிழையும் இல்லை. காதல் காட்சிகளிலும், அண்ணனுடனான இயல்பான சண்டைகளிலும் அத்தனை பொருத்தம்.


திரைப்படத்தில் கதையின் சூழலுக்குள் கொண்டு செல்வதில் ஒளிப்பதிவாளர் கதிர் வெற்றி பெற்றுள்ளார். இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு சித்திரம் பேசுதடியையும், அஞ்சாதேயையும் மீண்டும் நினைவூட்ட முயன்றுள்ளார். ஆனால், பின்னணி இசையில் அசத்தியுள்ளார். திரைக்கதையில் எவ்வளவு சுவாரஸ்யங்கள் இருந்தாலும் 180 நிமிடங்கள் நீழ்வதென்னவே… எரிச்சலை ஏற்படுத்துகின்றது. படத்தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். மற்றப்படி… காதலர்களுக்கான டூயட் என்று மரத்தை சுற்றிவரும் நடனங்கள் இல்லாதது படத்துக்கு மிகப்பெரும் பலம். அதுபோல், அறிமுக பாடலும், குத்து பாடலும் தேவையற்று சேர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது.


மனித வாழ்க்கையை எந்தவித விட்டுக்கொடுப்புக்களும் இன்றி திரைப்படமாக எடுக்கும் பொழுது ஆவணப்படம் போல அமைந்து விடும் என்ற பயத்தில் சில காட்சிகள் சேர்க்கப்பட வேண்டியுள்ளதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.. அந்த விட்டுக்கொடுப்புடன் நோக்கும் போது ‘நாடோடிகள்’ நல்ல சினிமாவே… நண்பர்களின் காதலுக்கு உதவச் சென்று தங்களின் வாழ்க்கையை சிக்கலுக்குள் உள்ளாக்கிக் கொண்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இருப்பார்கள். இது, நட்பு என்ற உறவுக்கு கொடுக்கப்படும் மரியாதை. அதற்கான அங்கீகாரத்தை ‘நாடோடிகள்’ கொடுத்துள்ளது.

Posted in | 4 comments

இந்த மண்ணில் (சரணம் கச்சாமி)


அந்தோ வீதியில் அவர்தம் ஊர்வலம்
‘பந்த்’தோ உயிர்ப்பந்தோ எனத்தேடும் அவலம்
இந்த மண்ணில்….

“காணாமல் போன மகன் காக்கிச்சட்டை பிடியில்”
பத்திரிகை பார்த்து தெரியும் தெய்வானை
இந்த மண்ணில்….

விளையாடப்போன விடலையை தேடி
ஊரெங்கும் சுடுகாடுகளில் தன் சுற்றம்
இந்த மண்ணில்….

பிறந்த மண்ணில் இறப்பதற்கும் அழுவதற்கும்
அடுத்தவன் தயவை நாடி நிற்கும் அப்புவும், ஆச்சியும்
இந்த மண்ணில்….

மூலைக்குள் இருந்த வீட்டின் மூளைசாலி தங்கை
நூலைப்பற்றி காலைச்சுற்றி குண்டுடன் வருவாள்
இந்த மண்ணில்….

திறந்தவெளி முகாமுக்குள் பேத்தியும் கண்டுவிட்ட
பூட்டிய படலைக்குள் பல்துலக்கும் பருவத்தின் மோள்
இந்த மண்ணில்….

வெளிநாட்டு பல்லுக்குண்டு தங்கமாடம் வோட்டுக்கேனும்
வேண்டப்படும் எமக்கில்லை ஒரு மடம்
இந்த மண்ணில்….

இப்போதம் தலை மயிருக்குண்டு மாலையும் மரியாதையும்
தமிழ் உயிருக்குண்டா?.
இந்த மண்ணில்….


-கிறுக்கன்-

என்னுடைய நண்பர் 'கிறுக்கன்' அவர்கள் நெதர்லாந்திலிருந்து எழுதியது…….

Posted in | 0 comments