ஐயே மச் பலுவத: நீங்க எப்ப யாழ்ப்பாணம் போறீங்க?.


‘ஐயே மச் பலுவத (அண்ணா match பாத்தீங்களா)’ கல்கிசையில் என் வீட்டுக்கு அருகிலுள்ள சலூன் கடையில் என் தலைக்கு வேலை பார்த்துக் கொண்டு இரோஸ் கேட்டான். நான், ‘ஒவ் பலுவா(ஓம் பார்த்தேன்)’ என்றேன். சகோதர இனத்தைச் சேர்ந்த அவன் இரத்தினபுரியில் வசிப்பதால் அழகாக தமிழும் பேசுவான். இரத்தினபுரியில் வசிக்கும் தமிழர்களுடன் அவனுக்கு அதிக பழக்கமுள்ளதாக கூறுவான். ஆனாலும், முதலில் தனது தாய்மொழியிலேயே ஆரம்பிப்பான். நானும் சிங்களம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவனுடன் தெரிஞ்ச சிங்களத்திலேயே அதிகம் பேச முயல்வேன்.


அவனுக்கு (தமிழ்) சினிமாவிலும், அரசியலிலும், கிரிக்கட்டிலும் ஆர்வம் அதிகம். என்னுடன் அதிகளவில் அவை தொடர்பிலேயே பேசுவான். விஜயையும், சிம்புவையும் அவனுக்கு அதிகம் பிடிக்கும். நான் புதிய தமிழ் படங்கள் பார்ப்பதற்கு முதல் அவனிடம் சிலவேளை விமர்சனம் கேட்பதும் உண்டு. என்னவோ தெரியாது நான் சந்திக்கின்ற சலூன்களில் இந்த மூன்று விடயங்களுமே அதிகளவில் பேசப்படுகின்றன. தென்னாசிய நாடுகளில் அதிகளவில் இவைதான் பேசப்படும் என்றும் நினைக்கிறேன். ஐ.சி.சி.இருபதுக்கு20 கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தானிடம் தோற்றது குறித்து அதிகம் அலட்டிக்கொண்டான். நானும் தான்.


ஐயே, நீங்க எப்ப யாழ்ப்பாணம் போறீங்க? என்றான். இல்ல.. இப்போதைக்கு போறதா ஐடியாவெல்லாம் இல்ல… இன்னும் சில மாதங்களுக்கு பிறகு போறேன் என்றேன். அவன் சொன்னான், ஏன் அங்க பிரச்சினையெல்லாம் முடிச்சுதுதானே போகலாம் தானோ.. இல்ல இல்ல பிரச்சினைக்காக போகாமல் நிக்கல்ல… எனக்கு கொழும்பில கொஞ்சம் வேலை இருக்குது. அதுதான் இப்போதைக்கு போகவில்லை.. என்றேன். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல சிங்களவர்கள் என்னிடம் கேட்ட கேள்வியே, நீங்க எப்ப யாழ்ப்பாணம் போறீங்க? இதே கேள்விகள் கொழும்பிலும், அதன் சுற்றுப்புற நகரங்களிலுமுள்ள வடக்கு, கிழக்கு தமிழர்களிடம் அதிகளவில் கேட்கப்பட்டன, கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எதிர்காலத்திலும் கேட்கப்படும். பெரும்பான்னையாக வாழும் சிங்கள மக்களுக்கு கொழும்பிலும், அதன் சுற்றுப்புற நகரங்களிலும் தமிழர்களின் அதிகரிப்பும், அதனால் தமிழர்களுக்கு ஏற்படும் சிறியளவிலான அரசியல் ஆதிக்கமும் பிடிக்கவேயில்லை.


என்னவோ தெரியவில்லை, என்ன அன்னியோன்னியமாகப் பழகினாலும் சிங்களவர்கள் தமிழர்களை விரோதிகளாகவே பார்க்கின்றனர். அதுபோலவே தமிழர்களும் சிங்களவர்களை விரோதிகளாகவே நோக்குகின்றனர். இதற்கான அடிப்படைக்காரணங்கள் யாவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும், நட்பு ரீதியாக மிகவும் பிணைந்திருக்கின்றவர்களுக்கு இடையிலேயே இந்த அடிமன விரோதங்கள் வெளிப்பட்டுக் கொள்கின்றன. நிறைய சிங்கள நண்பர்களுடன் பழக்கமுள்ள எனக்கும் இந்த அனுபவம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அதுபோல, நானும் சில தருணங்களின் ஆழ்மனதிலுள்ள விரோத மனநிலையை அவர்களிடம் மிகவும் ஆக்ரோசமாக வெளிப்படுத்தி விடுகின்றேன். இது, எமது மரபணுக்களுக்குள் எமது முன்னோர்களால் விதைக்கப்பட்டு விட்டவை. என்ன செய்ய முடியும். இந்த விரோத மனப்பான்மையை போக்க நீண்ட காலம் தேவைப்படும்… என்று சில நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனாலும், எனக்கு அதில் பெரிய நம்பிக்கையில்லை. நாளைகூட என்னைப்பார்த்து, நீங்க எப்ப யாழ்ப்பாணம் போறீங்க? என்ற கேள்வி கேட்கப்படலாம்.

Posted in | 2 comments

Mom at sixteen: பதின்ம வயதில் தாய்மை.


‘Mom at sixteen’ என்ற தொலைக்காட்சி ஆங்கிலப் படமொன்றை அண்மையில் பார்க்க முடிந்தது. பள்ளியில் படிக்கும் பதின்மவயது பெண், தனது ஆண் நண்பருடனான உடலுறவினால் கருத்தரிக்கிறாள். இதனால் அவள் சந்திக்கும், பிரச்சினைகளும், மன உளைச்சல்களும், அவஸ்தைகளுமே படத்தில் எந்தவித மிகைப்படுத்தல்களுமில்லாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவளுக்கு உண்டான வலிகளும், பிள்ளையின் மீதான பாசமும், பிள்ளையையே தம்பியாக வெளி உலகுக்கு சொல்ல வேண்டிய அபத்தங்களுமே ‘Mom at sixteen’. நான்சி சில்வெர்ஸ்(Nancey Silvers) கதை, திரைக்கதை எழுதிய இந்த படத்தினை, பீட்டர் வோர்னர்(Peter Warner) இயக்கியுள்ளார். 2005ஆம் ஆண்டு இந்தப்படம் வெளிவந்தது.


இந்த படத்தினை இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றில் சில மாதங்களுக்கு முன்னர் பார்த்தேன். முதலில் பெரிதான ஆர்ப்பட்டமில்லாமல் ஆரம்பிக்கும் படம், சிறிய நேரத்துக்குள்ளேயே எம்மை முழுமையாக ஐக்கியப்பட வைக்கிறது. இந்தப் படத்தினை பார்த்து முடித்ததும், எம்மிடையே காணப்படும் பதின்ம வயதுத் திருமணங்களால் அல்லலுறும் பெண்களின் நிலைமை குறித்து மிகவும் சிந்திக்கவும், ஆதங்கப்படவுமே முடிந்தது. மனரீதியாக திருமண வாழ்கைக்கு தயாராகாத பெண்ணை வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம், மற்றும் குடும்ப உறவுகளின் தொடர்ச்சிக்காக மணம் முடிந்து வைப்பது எவ்வளவு தவறானது. அவர்களின் எதிர்காலம் குறித்த கனவுகளின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டு, குழந்தை மனமே மாறாத பல பெண்கள், இன்னொரு குழந்தைக்கு தாயாகின்ற நிலைமை மீண்டும் அதிகரித்துள்ளது.


நாகரீகத்தின் உச்சத்திலும், குடும்ப உறவுகள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத அமெரிக்காவின் பதின்ம வயதுப் பெண்களே, தாயாகின்ற போது மன உளைச்சல்களையும், எதிர்காலம் குறித்த பயத்தினையும் உணரும் பொழுது. அநேகமாக ஆண்களிடமே (இந்த நிலைமை தற்பொழுது ஓரளவு குறைந்து வருகின்றது) தங்கியிருக்கும் ஆசிய, ஆபிரிக்க பெண்களின் நிலைமை மிகவும் மோசமாகிப் போகின்றது. என்னுடம் கல்வி கற்ற பெண்ணொருவர் அவர்களது பெற்றோரால் 15 வயதில் திருமணம் முடித்து வைக்கப்பட்டாள். 2004ஆம் ஆண்டு அவளது 19 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருந்தாள். அவளது கணவன் சுனாமியில் சிக்கி உயிரிழந்து விட்டான். இப்பொழுது அவளின் நிலை படுபயங்கரமாக உள்ளது. அவளின் கல்வியை தடுத்து திருமணத்துக்குள் தள்ளிய பெற்றோர் பிள்ளையை நினைத்து அழுகின்றனர். அதுபோல ஆயிரம் உதாரணங்களைச் எம்மிடையே தொடர்ந்து சொல்கின்றன.


அதுவும், வன்னிக்குள் கடந்த 3 வருடங்களாக அநேக பதின்ம வயதுப் பிள்ளைகள் திருமண பந்தத்துக்குள் பலவந்தமாக தள்ளப்பட்டனர். அதற்கு, விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பும் காரணமாக இருக்கலாம். பதின்ம வயதுத் திருமணங்கள் கிழக்கு பிராந்தியத்திலும் தொடர்கின்றன. இதற்கான விளிப்புணர்ச்சிகள் பிரதேச மக்களிடம் இல்லாமல் இருக்கலாம். மலையகத்தின் நிலைமை வேறு மாதிரியானது கல்வி கற்கும் நிலைகள் அவர்களுக்கு மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. சாதாரணதரம், உயர்தரம், பல்கலை. கல்விப் பொதுத் சாதாரண தரம் இதனைக் கடக்காதவர்கள் அடுத்ததாக திருமணம் என்ற பந்தத்துக்குள்ளேயே செல்கின்றனர். சாதாரண தரத்தில் சித்தியெய்தியவர்கள், உயர்தரத்தை தொடர்கின்றனர். இதில் சித்தியடையாதவர்களும் அநேகமாக அடுத்து திருமணபந்தத்துக்குள்ளேயே காலடி வைக்கின்றனர். இந்த நிலமைகள் மாற்றப்பட வேண்டும்.


50, 60களில் எல்லாம் அநேக பெண்கள் 13, 14 வயதுக்குள்ளேயே தாயாகியிருந்தனர். அது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்தக் காலப்பகுதியில் கலாசார, கல்வி, விழுமிய வளர்ச்சிகள் குன்றியிருந்தது அதற்கு காரணமாக இருக்கலாம். இந்த நிலைமை 80, 90களில் குறைந்து விட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் அநேக பெண்கள் 19, 20 வயதுகளிலேயே திருமணத்துக்கு தயாராகினர். ஆனாலும், மீண்டும் 2000க்கு பின்னராக இந்தக் காலப்பகுதியில் நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கின்றன. இதற்கு இடப்பெயர்வுகளும், அகதி முகாம் வாழ்கையும் காரணமாக இருக்கலாம். இவை தவிர்க்கப்பட்டு பதின்ம வயதுள்ள பெண்களின் எதிர்காலம் காக்கப்பட வேண்டும். பெண்கள் தாய்மை அடைவதற்குரிய உடல், உள வளர்ச்சியின் பின்னர் தாய்மை அடைவதே அவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் நல்லது.

Posted in | 0 comments

என்னுடைய தவறும், சாத்தன்களின் வேதமும். ஈழவனுக்கு சமர்ப்பணம்.


‘ஊடக தர்மம்’ குறித்து எனது முந்தைய பதிவில் (ஊடக தர்மமும், தேசத்துரோகமும், ஈழவனுக்கான பதிலும்) எழுதிய நான், அதிலேயே பெரிய தவறொன்றை விட்டு விட்டேன்…….. அது குறித்து பதிவர் ஈழவனிடம் மன்னிப்புக் கோருகின்றேன்… மன்னிப்பு கோருவதில் எந்த தயக்கமோ, மனத்தளர்வோ எனக்கு கிடையாது. என்னுடைய தவறுக்கு நான் தானே பொறுப்பு கூற வேண்டும். ‘தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம்’ என்ற தலைப்பில் நண்பர் ஈழவன் இட்ட பதிவிற்கு, நண்பர் கொழுவி தெரிவித்த மறுமொழியை மேற்கொள்ள காட்ட வேண்டிய நான் அதை ஈழவன் குறிப்பிட்ட கருத்தாக கூறியதால் வந்தது என்னுடைய தவறு.


அடுத்து, நண்பர் ஈழவன் ‘சாத்தான் வேதமோதுகிறது’ என்ற தலைப்பில் என்னுடைய தவறினை முழுமையாக சுட்டிக்காட்டி தனது மனவருத்தத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்திருந்தார். அவருடைய ஆதங்கமும், மனவருத்தமும் என்னால் ஏற்பட்டதென்பது சரியானதே… அத்துடன், அதற்கான மறுபதிப்பை நான் இடவில்லை என்பதிலும் அவருக்கு கவலை இருந்தது. எனக்கு யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்கி பதிவிட வேண்டிய தேவையில்லை…. அது எதிர்பாரத விதமாகவே நிகழ்ந்துவிட்டது. என்னுடைய பதிவில் நான் ஊடக தர்மத்தின் தேவைகள் குறித்து மட்டும் பேசியிருக்க வேண்டும். தேவையற்ற அல்லது தவறான உதாரணங்களை குறித்த பதிவில் சுட்டிக்காட்ட விளைந்து இந்த மறுபதிவை இடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.


சாத்தான்கள் வேதமோதுவது குறித்து எனக்கு போதிய விளக்கமில்லை…. அது தொடர்பில் நண்பர் ஈழவன் தொடர்ந்தும் கருத்து வெளியிட வேண்டும். அப்பொழுது நான் அதுதொடர்பில் விளக்கம்பெற முடியும். என்னுடைய கருத்துக்கள் குறைப்பிரசவமாகவோ அல்லது வறட்டு சிந்தனைகளாகவே இருந்தால் தங்களது கருத்துக்களை பின்னூட்டங்களாகவோ, மறுப்பு பதிவுகளாகவோ இடலாம். அப்பொழுது நான் அவற்றைத் திருத்திக்கொள்ளுவேன். எனக்கு யார் சொல்கின்ற கருத்துக்களிலாவது நியாயம் இருக்கும் பட்சத்தில் அதை ஏற்கும் மனத்திடம் உண்டு…. யாருடைய அழுத்தங்களுக்காகவோ, பயமுறுத்தல்களுக்காகவோ அதை நான் வி;ட்டுக்கொடுப்பதில்லை. பிழைகள் சுட்டிக்காட்டப்படும் பொழுது அவை திருத்தப்படவேண்டியது உண்மையே.. அதில், எனக்கு எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

Posted in | 0 comments

ஊடக தர்மமும், தேசத் துரோகமும், ஈழவனுக்கான பதிலும்.


இணையம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, சஞ்சிகை, அலைபேசி என்று ஊடகத்தின் தாக்கம் அனைத்து வகைகளிவும் ஒவ்வொரு நொடியிலும் நாம் விரும்பாமல் போனாலும் நம்மை ஆக்கிரமித்துள்ளன. இந்த நிலையில் ஊடகத்தின் செயற்பாடுகளில் தங்களை அறியாமல் பலர் ஈடுபடுகின்றனர். அல்லது தூண்டப்படுகின்றனர். இதனால், ‘ஊடகம்’ என்பதற்கான விதிமுறைகள், எண்ணக்கருக்கள், ஓழுக்கங்கள் என்ற வரையறைகள் தெரிவதில்லை. இவற்றினால், ஊடகத்தின் கருத்துரைப்பு சுதந்திரம் சில தருணங்களில் அர்த்தமற்று போய்விடுகின்றன.


ஒரு சமூகம் சார்த்திருக்கின்ற நபரோ, குழுமமோ அல்லது ஆளும் தரப்போ தமது கருத்துக்களின் அடிப்படையில் ஒத்திசைவற்றவரைப் பார்த்து ஒருவரை தேசத்துரோகியாகவோ அல்லது இனத்துரோகியாகவே சித்தரிக்கும் பழக்கம் சர்வதேச ரீதியில் அதிகரித்து விட்டது. இதற்கு தமிழ் சமூகமும் விதிவிலக்கற்றது. ‘தமிழ் தேசியம்’ சார்ந்த கருத்துக்களை முன்வைக்கும் ஊடகமோ, ஊடகவியலாளனோ தொடர்ந்தும் பெரும்பான்மை தமிழ் சமூகத்தால் எந்தவித யோசனைகளுமின்றி, மூலங்களுமின்றி வரவேற்கப்படுகின்றான் அல்லது வரவேற்கப்படுகின்றது. அதுவே, தமிழ் தேசியத்திலுள்ள தவறுகளையோ அல்லது திருத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தோ கருத்துக்களை முன்வைக்கும் போது தேசத்துரோகியாக அல்லது இனத்துரோகியாக சித்தரிக்கப்பட்டு விடும் நிலை அதிகரித்துள்ளது.


ஈழத்திலுள்ள தமிழர்களும் சரி, புலம்பெயர்ந்து சென்றவர்களும் சரி அவர்களுக்குள் எழுகின்ற சுயமான கருத்துக்களை நியாயமாக எந்தக்காலத்திலும் முன்வைப்பதில்லை. இதனைச் சொன்னால் மற்றவன் என்ன சொல்வான், தமிழ் விரோதியென முத்திரை குத்திவிடுவான் என்று எது அதிகாரமிக்க தரப்போ அது சார்ந்த கருத்துக்களையே முன்வைத்து வந்திருக்கின்றான். உதாரணமாக, விடுதலைப் புலிகளின் ‘தனி ஈழம்’ கொள்கையிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து ஆராயமல் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததும், அந்த இயக்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமானது. முதலிலேயே நடைமுறை யார்த்தங்களை புரிந்து கொண்டு ஊடகத்தின் ஒழுக்க விதிகளுக்கமைய கருத்துக்களை வெளியிட வேண்டும். அப்போது தான் அது சிறந்த கருத்தாகவும் இருக்க முடியும். அதனை தமிழ் சமூகம் எந்தக்காலத்திலும் செய்வதில்லை. செய்தாலும் அங்கீகரிப்பதில்லை.


‘ஈழவன்’ என்ற பதிவர் ‘தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவினை இட்டிருந்தார். அதில், அவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் தீபம் தொலைக்காட்சியின் ஒலிவாங்கிகள் இலங்கை அரசாங்கத்தின் செய்தியாளர் மாநாடுகளில் இருப்பதாக. இதனால், குறித்த தொலைக்காட்சி இலங்கை அரசாங்கத்தின் கைப்பிள்ளையாகிவிட்டது என்ற ரீதியிலேயே அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு ‘தீபம்’ தொலைக்காட்சியை பார்க்கும் வாய்ப்பில்லை. ஆனால், தமிழ் சமூகத்துக்கான ஊடகமொன்று அரசாங்கத்தின் கருத்துக்களை வெளியிடுவதை எவ்வாறு நடுநிலை தவறியமை என்று குறிப்பிட முடியும். அப்படியானால் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேசினால் தான் அது நடுநிலை ஊடகமா? அப்பொழுது எதிர்தரப்பினரின் கருத்துக்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை. இது, ஊடக தர்மத்திற்கு தகுதியற்ற கருத்தாகவே அமையும். இதற்கு ‘ஈழவன்’ என்ன சொல்லப் போகின்றார் என்று தெரியவில்லை.


ஒரு விடயம் குறித்து எழுதும் பொழுதோ, கருத்து வெளியிடும் பொழுதோ தனது சமூகத்தின் நலனில் மாத்திரம் அக்கறை கொள்வது நல்ல எதிர்காலத்தை பெற்றுத்தராது. நாம் வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து சமூக்களினதும் நலனிலும் அக்கறை கொண்டு கருத்துக்களை வெளியிடுவதன் மூலமே நல்ல எதிர்காலத்தினை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு தமிழ் சமூகமும் தயாராக வேண்டும். அத்துடன் அன்பு தமிழ் சமூகம் ஊடகத்தின் விதிமுறைகள், ஒழுக்கம், தர்மம் குறித்து அறிந்து கொள்ளவேண்டியது இன்னும் அதிகமிருக்கின்றது என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. அதற்கு தமிழ் சமூகத் தயாராக வேண்டும். அப்பொழுதுதான் நல்ல ஊடகங்கள் வரும்.

Posted in | 7 comments

‘பசங்க’ தமிழ் சினிமாவின் மற்றுமொரு நல்வரவு.


எல்லா வயதினரும் கடந்து வருகின்ற பள்ளிப் பருவத்திலுள்ள நட்பு, குறும்பு, காதல், பொறாமை, விரோதம், போட்டி, ஆர்வம் என்ற அனைத்து உணர்வுகளையும் அழகாகவும், ஆழமாகவும் அத்துடன் இயல்பு மாறாமலும் சொல்லியிருக்கின்ற நல்ல தமிழ் சினிமா ‘பசங்க’. ‘சுப்பிரமணியபுரம்’ என்ற படத்தின் மூலம் கிராமத்து வாழ்கையிலுள்ள நட்மையும், காதலையும், குரோதத்தையும் வெளிப்படையாகச் சொன்ன இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் அழகான சினிமா.

தமிழகத்தின் கிராமமொன்றிலுள்ள பள்ளியில் நடக்கின்ற சம்பவங்களும், அதனை ஒட்டிய இயல்பான மாற்றங்களுமே கதையின் கரு. இடைநிலைப் பள்ளியொன்றில் 6ஆம் வகுப்பில் படிக்கும் ஜீவா. அவனுக்கு இரண்டு நண்பர்கள். (அவனது அத்தை மகளும் அதே வகுப்பில் படிக்கின்றாள்) ஜீவாவும், நண்பர்களும் குறித்த வகுப்பின் கட்டுப்பாட்டை தமக்குள் வைத்திருக்கின்றனர். ஜீவாவின் தந்தை குறித்த வகுப்பின் பொறுப்பாசிரியர். ஆங்கிலப் பள்ளியொன்றில் படித்த அன்புக்கரசு (அன்பு), தனது குடுப்பத்துடன் ஜீவாவின் எதிர்வீட்டுக்கு குடிவருகிறான். அவன், புதிதாக குறித்த வகுப்பில் சேருகின்றான். அதுவரை, ஜீவாவின் கட்டுப்பாட்டிலிருந்த வகுப்பு முழுவதும் சிறிது சிறிதாக அன்பு பக்கம் சாய்கிறது. இதனால், கோபமடையும் ஜீவா, அன்புவை கவிழ்த்துவிட வேண்டும் என்ற நினைக்கின்றான். இதனால், எழும் பிரச்சினைகளும், மாற்றங்களுமே படத்தின் உள்ளடக்கம்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஜீவாவும், அன்புவும் தமது குடும்பங்களை அறிமுகப்படுத்தும் போதே அவர்களின் குண இயல்புகளையும் சொல்லிவிடுவது மிகவும் சிறப்பு. அதுவும், ஜீவா தனது சகோதரியான சோபிக்கண்ணு(வேதா) பாலர் பள்ளியில் ஆசிரியையாக இருப்பதை கூறும்போது வெளிப்படும் காட்சி அத்தனை அழகு. (பாலர் பள்ளியில் ஆசிரியை சோபிக்கண்ணு தூங்கி விழ குழந்தைகள் எழுப்பி விடுவது மிகவும் யதார்த்தம்- என்னுடைய பாலர்பள்ளி ஆசிரியை தவமலரும் இப்படியே, அவர் இப்போது உயிருடன் இல்லை). அன்புவின் சித்தாப்பா மீனாட்சி சுந்தரம் (விமல்) காப்புறுதி முகவராக (Insurance agent) வேலை செய்கிறார். அவருக்கும், சோபிக்கண்ணுவுக்கும் இடையிலான காதல் கலாட்டக்கள் அருமை. அதுவும் அலைபேசியை (Mobile phone) வைத்துக்கொண்டு அடிக்கும் அளிசாட்டியங்கள் இரசிக்கும்படியுள்ளது.

எந்தக் காலத்திலும் எதிர் வீட்டுக்காரனுடன் இராசியில்லை (ஒற்றுமையில்லை) என்பது எங்கும் உள்ள விடயம். அதையும், குடும்பங்களில் எழும் சண்டைகள் எப்படி குழந்தைகளை பாதிக்கின்றது என்பது, மாணவர்களுக்குள் ஏற்படுகின்ற போட்டியில் ஏற்படுகின்ற நன்மைகள் வரை அத்தனையும் யதார்தமாக சொல்லியிருக்கின்றது ‘பசங்க’. சிறுவர்களின் இலட்சியங்களை வளர்க்கவே கனவுகள் ன்பதையும் அற்புதமாக கோடிட்டு காட்டியிருக்கின்றது ‘பசங்க’. ஆனால், சில தமிழ் சினிமாவுக்கேயுரிய அம்சங்களும் (தேவையற்ற பாடல்கள் உள்ளிட்ட வகையறாக்கள்) தவிர்க்க முடியாமல் சேர்க்கப்பட்டுள்ளது என்பதுவும் உண்மை. அதுவே, இறுதிக் காட்சிகளாக அமைந்து விடுவதும் மறுக்க முடியாதது.

திரையில் இதற்கு முன்னர் நடித்து அனுபமற்ற சிறுவர்களை வைத்துக்கொண்டு, பள்ளிப்பருவத்தில் நடக்கும் விடயங்களை அழகான திரைக்கதை ஆக்கத்தின் மூலம் இயக்குனர் பாண்டிராஜ் ஆரம்பத்திலேயே கைதட்டல் பெறுகின்றார். நட்சத்திர நாயகர்கள் இல்லை, பெரிய தொழிநுட்ப கலைஞர்கள் இல்லை. ஆனாலும், நல்ல திரைப்படத்தை தன்னால் தரமுடியமென்பதை பாண்டிராஜ் முதல் படத்திலேயே காட்டியுள்ளார். தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குனரின் மீது முழு நம்பிக்கை வைத்து படத்தினை எடுத்துள்ளார். யாதார்த்த சினிமாக்களின் வரவுக்கு அவரின் பங்கும் எதிர்காலத்திலும் தொடரும் என்று நம்பலாம்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‘சுப்பிரமணியபுரம்’ சினிமாவுக்கு அடுத்து இசையமைத்துள்ள படம். பின்னணி இசையில் சிறுவர்களுக்கே உரிய நடையில் அசத்தியிருக்கின்றார். ‘மழை வருதே’ மற்றும் பாலமுரளி கிருஸ்னாவின் குரலில் ஒலிக்கும் ‘அன்பான குடும்பம்’ பாடல்கள் அருமை. ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் சிறுவர்களி;ன் இயல்புகளை மாறாமலும், மறக்காமலும் படம்பிடித்துள்ளார். வரவேற்கத்தக்கது. படத்தொகுப்பு யோகா பாஸ்கர் இயக்குனரின் தேவையை பூர்த்தி செய்துள்ளார். ஆனாலும், சில இடங்களில் நீண்ட காட்சிகள் வருகிறதோ எண்ணம் எமக்கு எழுகிறது. படத்தில் வரும் அனைத்து (குழந்தைகள் உள்பட) நடிகர்களிடமும் யாதர்தமான நடிப்பு. அது, இயக்குனரின் வெற்றி.

பலகோடிகளில் பணத்தைக் கொட்டி பெரிய நடிகர்களை வைத்து படங்களை எடுத்து தோற்றுப்போவதை விட இயல்பான யாதார்த்தமான சினிமாக்களை சிறிய முதலீடுகளுடன் எடுத்து வெற்றி பெறாலம் என்பதற்கு மற்றுமொரு சாட்சி ‘பசங்க’. இது சிறுவர்களுக்கு மாத்திரமான படமல்ல அனைவருக்குமான படம். சில படங்களைப் பார்த்தால் தான் ஏதாவது எழுதத்தோன்றும் அதில் இந்த வருடத்தில் என்னை அதிகமான பாதித்த படங்களில் ‘பசங்க’வுக்கும் முன்னிடமுண்டு. 2009 தமிழ் சினிமாவிற்று ‘பசங்க’ நல்வரவு.

Posted in | 1 comments

சுயம் இழக்கிறானா தமிழன்?

ஈழத்திலிருக்கின்ற தமிழன் தனது கலாசாரம், பழக்க வழக்கம், தொடர்பாடல், மரபுகள், வரம்புகள் போன்றவற்றை இழக்கிறானா? என்ற கேள்வி எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு. அதுவும் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தொழில் நிதித்தமோ, கல்விக்காகவோ கொழும்பு வரும் அநேக தமிழர்கள் (நான் உட்பட) இதற்கு ஆட்பட்டுக்கொள்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத விடயமாகிவிட்டது. இந்த விடயம் தொடர்பாகவே இந்தப் பதிவில் பேசவிருக்கின்றேன். வாருங்கள் கலந்து பேசிப்பார்போம்.

ஈழத்திலிருந்து புதிய தமிழ் சஞ்சிகை ஒன்றை வெளிக்கொணர்வது தொடர்பாக நானும், நண்பர்கள் மகேஸ் பிரசாத்தும், சேரன் கிரிஷ{ம் கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள சேரன் கிரிஷின் வீட்டில் நேற்று மாலை 5 மணியளவில் தேநீர் கோப்பைகள், வாழைப்பழங்கள் சகிதம் கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். குறித்த கலந்துரையாடலில் சஞ்சிகையின் வடிவம், உள்ளடக்கம் தொடர்பாக முதலில் ஆராய்ந்தோம். பின்னர் திசைமாறிய எமது கலந்துரையாடல் களம் சமகால அரசியல், வெளிநாட்டு தலையீடுகள், புத்தகங்கள், இணையம் எனச் சென்றது. அந்தத் தருணத்தில் நான் வெளியிட்ட ஒரு கருத்து இந்த பதிவை இட வைத்தது.

நான்: வெள்ளவத்தையிலுள்ள தமிழ் சனம் எப்படி இருக்கிதோ, அதே நிலைமை கல்கிசையிலும் கடந்த ஒன்றரை வருசமா பரவுது. என்ன இவர்கள் றோட்டில நிண்டு சத்தம் போட்டு கதைப்பதால் ஐந்து வருசத்துக்கு மேலாகவும் கல்சிசையில இருக்கும் எங்களுக்கு தேவையில்லாத பிரச்சினை.

சேரன்: என்ன பிரச்சினை மச்சான் உனக்கு(உங்களுக்கு)?

நான்: இல்லை மச்சான், இதுகள் யாழ்ப்பாணத்தில றோட்டுகளிலையும், கேற்றுகளிலும் நிண்டு கதைக்கிற நினைப்பில கல்சிகையிலயும் கதைக்குதுகள்… அதனால மற்றவங்கள் (சிங்களவர்கள்) எங்களையும் ஒருமாதிரி பாக்கிறாங்கள்.

மகேஸ்: ஹிகிகி ஹிகிகி (சிரிக்கிறார்).

சேரன்: என்ன மச்சான் சொல்லிறாய் நீ!. தமிழர்களின் கலாச்சாரம், மரபில அதெல்லாம் இருக்குதானே? விருந்தோம்பல், சிநேகிதம் எல்லாம் எங்களிட்டை அதிகம் தானே. அதத்தானே அதுகள் செய்யுதுகள். அதில என்ன தப்பு மச்சான்?.

எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்த ‘ஈழத் தமிழன் சுயத்தை இழக்கிறான்’ என்ற வாதத்தில் நியாயமிருப்பது தெரிந்தது. ஏனென்றால் நானும் எனது சுயத்தை ஓரளவு இழந்தே கொழும்பில் வாழ்ந்து வருவது புலனாகியது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் போதிருந்த நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்களிலிருந்து நான் வெகுதூரத்துக்கு விலகியிருந்தேன். அதுபோலவே அநேக தமிழர்கள் இந்த நிலைமைக்கு அவர்களுக்கு தெரியாமலே உட்பட்டு போயினர். இந்த நிலைக்கு இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல், பாதுகாப்பு பிரச்சினைகள் முதன்மை வகிக்கின்ற காரணங்கள். அடுத்த நிலையில் நாகரீகம் என்ற மோகம். இதற்கு நானும் விதிவிலக்கல்ல.

கொழும்பில் அநேக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளான வெள்ளவத்தை, கொட்டாச்சேனை உள்ளிட்ட பகுதிகளில் இதற்காக சான்றுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. தமது சொந்த பிரதேசங்களில் பாவடை, சட்டையுடன் திரிந்த யுவதிகள் பலர் கொழும்புக்கு வந்ததும் ஜீன்சும், ரீ-சேட்டும் அணிகிறார்கள். என்ன பழைய ஞாபகத்தில் பொட்டையும் வைத்துவிடுகிறார்கள். அது அவர்களை புதிய கோணமொன்றுக்கு இட்டுச் சென்று விடுகிறது. அதேபோல், சொந்தப் பிரதேசங்களில் கால்மூடிய கவுண்களை அணிந்த தாய்மார்கள் பலர் கொழும்பில் சுடிதாருக்கு மாறியிருக்கிறார்கள். இதனால், தாயும், மகளும் சென்றால் பார்ப்பவர்களுக்கு மிகச் சிக்கலாகிவிடுகிறது. (வெள்ளவத்தையில் நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார், மச்சான் அங்க பார் இரண்டு பிகர் வருதெண்டு.. நானும் ஆர்வத்துடன் பார்தேன் கிட்ட வந்ததும் தெரிந்தது. அது நண்பரின் மாமியாரும், மச்சாளும் என்று).

இதுபோல், உணவு விசயத்திலும் அதீத மாற்றங்கள். பிட்டு, இட்டலி, இடியப்பம், தோசை என்ற தமிழர்களின் உணவு மரபு கொழும்பில் பண், பிறட், பிட்ஸா, பேகர், பிறைட் ரைஸ், சிக்கன் என்று அதீத மாற்றங்கள். இவை, நேரம் மிகுதிப்படுத்தல், இலகு என்ற காரணங்களுக்குள் அடக்கப்பட்டு விடுகிறதென்பது உண்மை. ஆனால், விடுமுறை நாட்களிலும் இந்த நிலைமை நீடிப்பது வருத்தமே.

மற்றையது சடங்குகள், சம்பிரதாயங்கள் இவற்றிலும் பல மாற்றங்கள். திருமணச்சடங்குகளில் பாரிய மாற்றம், தமிழர் திருநாள்கள் கொண்டாடப்படும் விதத்தில் மாற்றம், நட்பு ரீதியிலான பழக்கங்களில் மாற்றம். அத்துடன் மொழிப் பரம்பலில் பாரிய சிக்கல். ஆங்கிலமும், சிங்களமும் கலக்காத தமிழ் பேசுபவர்கள் கொழும்பில் மிகவும் அரிது. அதற்கு நானும் உட்படுகிறேன். அது போலத்தான் உரக்கப் பேசும் பழக்கம் குறைந்து அனைவரும் இரகசியம் பேசக் கற்றுக்கொண்டு விட்டோம். இதுவெல்லாம் தமிழன் தனது சுயத்தை இழப்பதற்கான சில உதாரணங்கள். இவை பல் சமூகம் வாழும் சூழலில் தவிர்க்க முடியாமலும் ஏற்பட்டு விடுகிறது என்பதுவும் உண்மையே.

Posted in | 7 comments