‘மருதங்கேணி’ என்னுடைய தாய் மண்.


(திருத்திய பதிப்பு)
‘மருதங்கேணி’ இது என் சொந்த கிராமம். ஒருபுறம் நெய்தலின் வடிவமான வங்கக் கடல், மறுபுறம் மருதத்தை ஞாபகப்படுத்தும் வயல் நிலங்கள். இதனாலேயே எனது ஊரிற்கு மருதங்கேணி என பெயர் வந்துவிட்டதாக முன்னோர்கள் சொன்னார்கள், அதில் நியமிருப்பது உண்மைதான்….


ஈழத்தின் வடபிராந்தியத்திலுள்ள யாழ் மாவட்டத்தின் வடமராட்சியில்(கிழக்கு) அமைந்துள்ள எனது கிராமம் ‘மருதங்கேணி’… ஆகக்கூடியதாக 3000 பேர் தான் அந்தக்கிராமத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார்கள் 1990கள் வரை. அதன்பின்னர் ஏற்பட்ட இடம்பெயர்வுகளும், அகதி வாழ்க்கையும் (எங்களின் வீட்டில் அந்நியன் நுளைந்ததால்) அங்கிருந்த அநேக மக்களை வெளியிடங்களுக்கு அனுப்பி விட்டதென்பது உண்மை… 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 1500க்கும் குறைவானவர்களே அங்கு வாழ்க்கை நடத்துகின்றனர். இப்பொழுது(2009இல்), இலங்கையின் சீருடைக்காரர்களைத் தவிர ஒருவரும் இல்லை.


ஆரம்ப பாடசாலை நாட்களில், இந்து தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்றதும், சொந்த மண்ணில் வெற்றி வீரர்களாக வலம் வந்ததும் எனக்கு என்னுடைய பதினொரு (1996ஆம் ஆண்டு வரை) வயதுவரையே கிடைத்தது என்பது நான் தற்பொழுதும் வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கின்ற கொடுமையான உண்மை… ஆனால், எனது தம்பிக்கும், தங்கைக்கும் அந்த சுகங்கள் மிகக்குறைந்தளவிலேயே கிடைத்தது. பல எனதூர் குழந்தைகைளுக்கு அதுவும் கிடைக்கவில்லை என்பது வலிக்கின்றது. துற்பொழுது மக்களின் வாசத்தினைக் கூட காணமுடியவில்லை. எப்படி குழந்தைகளில் மழலையைக் கேட்க முடியும்.


எங்களுரில் இருக்கின்றவர்கள் அநேகர் உறவுக்காரர்களாகவே இருந்தனர். அது குடும்பங்களிடையே பிளவுகள் ஏற்பட்டாலும் சில நாட்களிலேயே ஒற்றுமையாகிவிட முடிந்த காலங்கள்…. எங்களூரில் உள்ள பல கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை பதிலாக பொங்கல்களே நடைபெறும், விதிவிலக்காக கந்தசுவாமி கோவிலிலும், கடற்கரை பிள்ளையார் ஆலயத்திலும் அலங்கார உற்சவங்கள் நடைபெறுவது வழமை. அந்த கோவில்களில் உள்ள பெரிய பெரிய மருத மரம், வேப்பமரம் மற்றும் ஆலமரங்களில் சிறுவர்களாக இருந்த காலப்பகுதிகளில் விளையாடியதும், தென்னந்தோப்புக்களில் களவாக இளநீர் பறித்து அருந்தியதும், தற்போது நினைக்கையில் நெஞ்சை அடைக்கின்ற சந்தோஷங்கள்.


நான் தற்பொழுது, இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஓரளவு சுகபோகியாக இருக்கின்றபோதிலும், மருதங்கேணியில் சிறுவனாக இருந்த சந்தோஷத்திற்கும், ஆர்ப்பரிப்புக்களிற்கும் இவை ஈடாகவில்லை… எந்தவொரு தனி மனிதனும் என்ன பெரிய சுகபோகங்களுடன் வாழ்ந்து விட்டாலும், சிறுவர்களாக இருந்த காலங்கள் தான் அவர்களின் மனதில் பசுமையாக இருக்கின்றது.. என்பது பல பெரியவர்கள் சொல்லி வைத்த உண்மை, அதுதான் நியமும் கூட…


எங்களூரில் இருந்தவர்கள் அனைவரும் இந்துக்களாவே இருந்தனர், பிரித்தானியர்களின் ஆட்சிகாலத்தில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட போதிலும் அந்த தாக்கம் எங்களூரில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. எனது தந்தையும், மருதமூரானாகிய நானும் மதங்களையும், சாதியத்தையும் கடந்தவர்கள்…(எனது ஞாபகங்கள் தொடரும்……)

Posted in | 4 comments

கடைசி வரை யாரோ?


“வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?” கவியரசு கண்ணதாசன்.


‘பாதகாணிக்கை’ திரைப்படத்துக்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது.


என்னவோ தெரியவில்லை இன்றைக்கும் இந்தப் பாடல் மிகவும் பொருத்தமாக உள்ளது. அதன் முழுமையான பாடல்வரிகள் கிழே…


ஆடிய ஆட்டமென்ன?

பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன?

திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால்

கூடவே வருவதென்ன...?


வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?


ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா?


வீடுவரை......


தொட்டிலுக்கு அன்னை

கட்டிலுக்குக் கன்னி

பட்டினிக்குத் தீனி

கெட்ட பின்பு ஞானி!


வீடுவரை......


சென்றவனைக் கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்று விடு என்பான்!


வீடுவரை......


விட்டுவிடும் ஆவி

பட்டுவிடும் மேனி

சுட்டுவிடும் நெருப்பு

சூனியத்தில் நிலைப்பு!


வீடுவரை......

Posted in | 2 comments

‘Singh is king’ மன்மோகன் சிங் மீண்டும் கிங்.


தேர்தல் என்ற பரமபதத்தில் பெரிய தலைகள் உருள்வதும், புதிய தலைகள் முழைப்பதும் ஜனநாயகத்தில் ஒன்றும் புதிதல்ல. இந்திய பாராளுமன்ற (மக்களவை) தேர்தலிலும் இம்முறையும் பல ஆச்சரியங்களுடனும், ஆர்ப்பரிப்புக்களுடனும், வெற்றிகளும், தோல்விகளும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சியதிகாரத்தை யார் பொறுவது என்ற போட்டியில் மீண்டும், காங்கிரஸ் கூட்டணி வென்றதன் மூலம் பிரதமராக கலாநிதி மன்மோகன் சிங் மீண்டும் தெரிவாகிறார். இதனால், ‘Singh is king’.


இந்தியாவின் தேர்தல் ஜனநாயகங்களில் மதவாதமும், இனவாதமும் எப்பொழுதும் முதலிடத்தை பிடிப்பவை. அவையே தேர்தல் வெற்றிகளை அதிகளவில் தீர்மானிப்பதாக அமைகின்றன. ஆயினும், இந்த முறை நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் மதவாதமும், இனவாதமும் அதிகளவில் வெற்றிபெறவில்லை என்பது கண்கூடு. சில தருணங்களில் பெரும்பான்மை சமூகங்களின் முடிவுகளை மாற்றியமைக்கும் வல்லமை சிறுபான்மை சமூகங்களுக்கும் உண்டு. அது, ஜனநாயக தேர்தல் முறைகளில் காணப்படுகின்றன. இம்முறை அவ்வகையான முடிவுகளையே இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் தந்துள்ளன.


இந்தியாவின் 543 தொகுதிகளில் இடம்பெற்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி 257 இடங்களையும், பாரதிய ஜனதாக் கூட்டணி 166 இடங்களையும், இடதுசாரிகள் அடங்கிய 3வது அணி 78 இடங்களையும், மற்ற கட்சிகள் 42 இடங்களையும் பெற்றுள்ளன. ஆட்சியமைக்க 272 ஆசனங்கள் தேவைப்படுகின்றன. ஆக 257 ஆசனங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி, சில சிறிய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கும். (இந்த கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது அதற்கான வேலைகளில் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.)


‘King maker’ ராகுல், தப்பித்த காங்கிரஸ்.


தன்னை சரியாக தயார்படுத்திக் கொண்டு இந்திய அரசியலுக்குள் புகுந்த நேரு குடும்பத்தின் வாரிசு ராகுல் காந்தியே, இம்முறை கிங் மேக்கராக திகழ்கின்றார். காங்கிரஸ் கட்சியின் தலைவியான தனது தாயார் மேனகா காந்தியிலும் பார்க்க காங்கிரஸ் கட்சிக்குள் ஆதிக்கம் மிக்கவராக ராகுல் இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் வருகின்றார். கூட்டணிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் இருந்த போதிலும், இந்த கட்சிக்கு கிடைத்த வாக்குகளில் அதிகளவானவை ராகுலின் பிரச்சார உத்திகளுக்கு கிடைத்தவை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மாயாவதியின் கோட்டையான உத்தர பிரதேசத்தில் கடந்த 20 வருடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதேயில்லை. ஆனால், இம்முறை அதிகளவில் வென்று சாதனை படைத்ததிற்கு ராகுல் காந்தியே காரணமென்று, அந்த கட்சியின் முக்கிய தலைவர்களும், மன்மோகன் சிங்கும் குறிப்பிட்டுள்ளனர்.


கலைக்கப்பட்ட அத்வானியின் பிரதமர் கனவு.


அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு, இந்திய மக்களவையில் மீண்டும் எதிர்க் கட்சித் தலைவராகும் வாய்பையே மக்கள் வழங்கியுள்ளனர். இதன் மூலம் அவரது பிரதமர் கனவு கலைக்கப்படுகின்றது. எதிர்காலத்திலும் அது சாத்தியமற்றது. அவருக்கு தற்பொழுது 84 வயது. காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பதற்கு பல விடயங்கள் இருந்தும் அவற்றில் அக்கறையின்றி செயற்பட்டதன் மூலமே பாரதிய ஜனதாக் கட்சி தோல்வியடைந்துள்ளது. இந்தக் கட்சியின் வாக்கு வங்கி பெரிதாகச் குறையாத போதிலும், சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்ததினால் 20 அதிகமான இடங்களை பாரதிய ஜனதாக் கட்சி இழந்துள்ளது.


மாற்றியமைக்கப்பட்ட மாயாவதியின் வரலாறு. வலுவிழந்த இடதுசாரிகள்.


இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இம்முறை எதிர்வு கூறல்களை மக்கள் நிராகரித்து புதிய முடிவு எடுத்துள்ளனர். மாயாவதி தலைமையிலாக பகுஜன் சமாஜ்வாத கட்சியின் பெரும்பான்மை வெற்றியிலக்கை தவிடுபொடியாக்கி காங்கிரஸ் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. இதனால், மாயாவதியின் பிரதமர் கனவும் கலைக்கட்டுள்ளது. 3வது அணி அமைத்து போட்டியிட்ட இடதுசாரிகள் தமது கோட்டைகளுக்குள்ளேயே காங்கிரசை வெற்றிகொள்ள வைத்துவிட்டன. மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் இடதுசாரிகள் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளன. நடைமுறை வாழ்க்கை முறைக்கு இடதுசாரிகள் வரமறுப்பதை மக்கள் புறக்கணித்துள்ளதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.


‘ஈழ அலை’ வீசிய தமிழ்நாடு: உருண்ட காங்கிரஸ் தலைகள்.


தமிழ்நாட்டின் ஜனநாயக வெற்றியை தேர்தல் காலங்களுக்கு முன்னர் நிகழும் நிகழ்வுகளே முடிவு செய்கின்றன என்பது வரலாறு. அவையே இந்த தேர்தல் முடிவுகளும் பிரதிபலித்துள்ளன. 39 தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது இடங்களை மிகவும் சாதுரியமாகத் தக்கவைத்துக் கொண்டது. ஆனால், தி.மு.க கூட்டணியிலிருந்த காங்கிரஸ் பல இடங்களை இழந்துள்ளதுடன், இந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் பா.சிதம்பரம், மணிசங்கர் ஐயர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டவர்கள் இவர்களில் அடக்கம். இவர்களின் தோல்விக்கும், அண்ணா திராவிட முன்னேற்றன் கழகத்தின் வெற்றிக்கும் ஈழத்தில் மக்கள் படும் அவலம் காரணமாக அமைந்தன. கடந்த தேர்தலில் ஒரு இடங்களையேனும் பெறத்தவறிய அ.தி.மு.க இம்முறை ‘தனி ஈழம்’ அமைக்க உதவுவோம் என்ற கோரிக்கையின் மூலம் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது.


பரபரப்பற்ற பேரம் பேசல்களும், காங்கிரசின் ஆட்சியமைப்பும்.


இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தை அமைக்க 272 ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி சுமார் 260 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதற்கு இன்னும், சில சிறிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகின்றன. அந்த ஆட்சியில் இணைந்து கொள்ள சிறிய கட்சிகள் ஆர்வம் காட்டியுள்ளன. இதனால், பெரிதாக பேரம் பேசல்களற்று ஆட்சியமைப்பு சாத்தியமாகியுள்ளது. எதிர்வரும் யூன் 2ஆம் திகதி இந்தியாவின் புதிய பிரதமராக கலாநிதி மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பட்டீல் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். ஆக, எதிர்பார்ப்புக்களும், ஏமாற்றங்களும் நிறைந்த அரசாங்கத்தை சந்திக்க இந்திய பெருங்குடி மக்கள் மீண்டும் தயாராகின்றனர். வாழ்க ஜனநாயகம், வளர்க இந்திய மக்கள்.

Posted in | 0 comments

ஈழத்தமிழர்களின் இந்த நிலைக்கு நீயும், நானும் தான் பொறுப்பு.


ஈழத்தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு பட்டிணிச்சாவுக்குள் தள்ளப்பட்டதற்கு யார் காரணம்? என்ற வினா அண்மைக்காலமாக பத்திரிகைகள், சஞ்சிகளைகள், வலைப்பூக்களில் அலசப்படுகின்ற தலைப்புக்கள். இந்த வினா (தலைப்பு) அனைவருக்கும் இயல்பாகவே எழும். இதற்கு 90வீதத்துக்கும் அதிகமான தமிழர்கள், இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தை நோக்கி விரல் நீட்டுகின்றனர். இந்த பதிலில் 50 வீதம் உண்மைதான். மற்றைய 50 வீதத் தவறு யாருடையது. அது குறித்து நாம் சிந்திப்பதற்கு தயாரில்லை. ஏன் என்றால் அந்த தவறில் எனக்கும், உனக்கும், என் தாத்தாவுக்கும், உன் தந்தைக்கும் பங்கிருக்கிறது.


தமிழர்களின் இந்த நிலைக்கு, ஈழ விடுதலைப் போராட்டங்கள் அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்ட காலம் முதல் ஆயுத வழிமுறைக்கு மாறியது வரை பல்வேறு தளங்களில் நாமே பொறுப்பாளிகளாக காணப்படுகின்றோம். ஈழ விடுதலைப் போராட்டங்களில் (ஆயுத, அறவளி இரண்டிலும்) பிழைகளும், பொறுப்பற்ற தன்மையும், காட்டிக்கொடுப்புக்களும், சகோதரப் படுகொலைகளும், மாற்றுக் கருத்துக்களுக்கு இடங்கொடுக்கா தன்மையும், சோரம் போதலும், பகடைக்காய்களாக மாறியமை உள்ளிட்டது வரை பல்வேறு பிழைகளை ஈழத்தமிழர்களே செய்துள்ளோம். இந்த தவறுகளையேல்லாம் நாங்கள் இலகுவாகச் செய்துவிட்டு எதிரியின் பக்கம் (சம உரிமைகளை வழங்க மறுப்பவர்கள்) விரல்களை நீட்டுவது எந்தவிதத்தில் நியாயம்?.


போர் களத்தில் எதிரிகளைக் கொல்வது போர் தர்மம். அதுவே சக வீரனைக் கொல்வது எந்த தர்மம்?. அவற்றை ஈழத்தமிழர்களாகிய நாம் செய்துள்ளோம். செய்து கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திலும் செய்வோம். இலங்கை பெரும்பான்மை அரசு, 1970களில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு எடுத்த முயற்சிகளுக்கு ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் சிலர் உதவினர். இது வரலாற்றில் மிகப்பெரிய தவறாக மாறியது. இதுவே, இந்திய வம்சாவளி-ஈழ தமிழர்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்தியது. இந்த தவறை சரி செய்ய ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எந்தக் காலத்தில் முயன்றோம்?. இல்லை அது பற்றி சிந்திக்கவேயில்லை. எங்களின் அரசியல் தலைமைகள் 1960களில் இருந்து அறவளிப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள் உண்மைதான். ஆனால், அந்த போராட்டங்கள் எந்த பாதையைச் சென்றடைந்தது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.


‘தனி ஈழம்’ என்ற வாதம் 1970களின் இறுதியில் முன்வைக்கப்பட்டு அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, அது குறுகிய காலத்துக்குள்ளேயே ஆயுத போராட்டமாக மாறியது. அந்த ஆயுதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்காக இளைஞர்கள் இணைந்து கொண்டார்கள். அவர்கள் தங்களது உயிரையுத் துச்சமாக மதித்து எதிரியை வெல்லப் போராடினார்கள். அது மறுக்க முடியாத உண்மை. அதுவே, பிராந்திய வல்லரசின் கைப்பாவையாக மாறிய போது போராட்ட இயக்கங்கள் எதிரிகளை விடுத்து, தனது சகோதரனை கொல்ல ஆரம்பித்தன. விளைவு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் 60 வீதத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும், புலம் பெயர்ந்தும் போயினர். இறுதியில் பல இயக்கத் தலைவர்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு எதிரியிடமே சரணடைந்து காட்டிக்கொடுக்க ஆரம்பித்தனர். இதிலும், ஈழத் தமிழர்களின் எங்களின் தவறே விஞ்சி நிற்கிறது.


உரிமைகளும், சுதந்திரமும் வேண்டுமென்று போராடுகின்ற சிறுபான்மைச் சமூகம், தன்னை விடச் சிறுபான்மையாக வாழும் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடும் ஆதிக்கம், எதிரி எங்களுக்கு செய்வது போன்றது. அதையும் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் செய்தோம். வடக்கில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் (இலங்கையில் முஸ்லிம்கள் என்று சித்தரிக்கப்பட்டுவிட்டது) 1990களில் சில மணி அவகாசத்தில் விரட்டப்பட்டதும், அவர்கள் கடந்த இரண்டு தசாப்த காலமாக அகதிகளாக வாழ்ந்து வருகின்றமையும் மறுக்கமுடியாத உண்மை. நியாயங்கள். உரிமைகளை வேண்டி போராடுகின்ற நாம், மற்றுமொரு சமூகத்தின் சொந்த இடத்தில் வாழும் உரிமையை பறிப்பது எந்தவிதத்தில் நியாயம். அதையும் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் செய்து பழி தேடிக்கொண்டோம்.


ஆயுத வழிமுறைகளிலிருந்து 1990களில் விலகிய சில ஈழ விடுதலை இயக்கங்கள், ஜனநாய வழிகளில் போராடுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு இலங்கை அரசுடன் இணைந்துவிட்டு வடக்கிலும், கிழக்கிலும் கடத்தல், கொள்ளை, கொலை போன்றவற்றில் ஈடுபட்டமையும் உண்மை. இதனால், சொந்த சமூகத்தில் பலரது வாழ்க்கை பறிபோனதும் வரலாறு. மாற்றுக் கருத்துக்களை ஏற்க மறுத்த இந்த ஜனநாயக இயக்கங்கள் வல்லரசுகளினதும், இலங்கை அரசினதும் கைப்பாவையாக மாறி ஒருவரை ஒருவர் கொண்று குவித்ததும் வரலாறு. இதையும் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் செய்துள்ளோம். தற்போது, ஈழத் தமிழர்களுக்காக போராடுகின்றவர்கள் வன்னிக்குள் மக்களை வெளியேற விடாமல் தடுப்பதும், அதனால், எதிரியின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதும் உண்மை. ஏதிரியின் குறிக்கோள் தமிழனை அழிப்பது. அதையே ஈழத் தமிழர்களாகிய நாங்களும் செய்தால்???. முடிவு என்னவாக இருக்கும். ஈழத் தமிழர்கள் இல்லாமலேயே போய்விடுவார்கள். அதையும் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் செய்கின்றோம்.


ஒவ்வொரு காலகட்டத்திலும், மிகப்பெரிய தவறுகளை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் செய்துள்ளோம். இவற்றையெல்லாம் செய்துவிட்டு குழம்பிய குட்டையில மீன்பிடிக்கும் இந்தியாவும், அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பது எந்தவிதத்தில் நியாயம். அவர்கள் மீன்பிடிப்பவர்கள் அவர்களுக்கு குழம்பிய குட்டைகள் தான் பிடிக்கும், மாறாக தெளிந்த ஓடைகள் அல்ல. வல்லாதிக்க சக்திகள் உலகம் பூராகவும் சிறிதாக குழம்பிய குளங்களை முழுமையாக குழப்புவதற்கு மட்டுமே தயாராக இருக்கின்றன. அவர்களிடம் உதவியை எந்தவிதத்தில் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எதிர்பார்க்க முடியும். இந்த தவறையும் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். ஏதிர்காலத்திலும் செய்வோம். ஆக, எங்களின் இந்த நிலைக்கு நாங்களே முற்றுமுழுதாக காரணம்.

Posted in | 3 comments

சத்தியம் பொய்த்தது உன்னால்.


கோவில் மணியோசை

கேட்கும் போதெல்லாம்

நினைவில் வருகிறாய்-நீ.

மணியோசை சில நொடிகளில்

நின்று விடுகிறது.

உன் நினைவு மட்டும்

மனதில் நிரந்தரமாய் தங்கிவிடுகிறது.


பேரூந்துக்கு காத்திருக்கையில்

கால்கள் கடுப்பது உண்மைதான்.

ஆனாலும், நெடுநேரம்

காத்திருக்கிறேன்-ஏக்கத்துடன்.

அதில், வரும் என் கண்மணியை பார்த்துவிட.


கவிதை எழுத வேண்டும் என்பது

என் நீண்ட நாள் விருப்பம்.

நீ- நினைவில் வரும்போதெல்லாம்

அது மறந்து விடுகிறது.

அதனால், இதுவரை

கவிதை எழுதவில்லை- நான்.


பெண்களை தாயாக மதிப்பதென்று

சத்தியம் செய்திருந்தேன்- நான்.

உன்னை பார்த்த கணத்தில்

சத்தியம் அசத்தியம் ஆனதடி.

எனவே, மீண்டுமொரு சத்தியம் செய்திறேன்.

நீ- என் மகளுக்கு தாயாவாய் என்று.

Posted in | 1 comments

அவளும் ஒரு தேவதை.


மேகங்கள் பொழிந்த இரவில்
என் அருகிருந்தாள்- அவள்.
நான் அவளிடமோ,
அவள் என்னிடமோ
இதற்கு முன்,
காதல்மொழி பேசியதில்லை,
கைபிடித்து நடக்கவுமில்லை.
ஆனாலும், அவள் என் காதலியானாள்
அந்த ஒரு இரவுக்காக மட்டும்.

அந்த குளிர் இரவும் கூட
சுட்டுக்கொண்டிருந்தது- எனக்கு.
அவள் கைபிடித்து
ஏதேதோ பேசினேன்.
ஏங்கள் பல கூறினேன்.
ஆனாலும், என் வெப்பம் தாழவில்லை.
பொறுப்பானவள்- அவள்
என் தேவைகள் தெரிந்து கொண்டாள்.
தாபங்கள் தீர்த்து வைத்தாள்.
அந்த ஒரு இரவுக்கான- மனைவியாக.

என் தேடல்கள் முடிந்தது- அவளிடம்.
பணத்தாள்களை நீட்டினேன்- நான்
என் தலைகோதி வாங்கினாள்.
மீதியைத் தந்தாள்.
சேவைக்கு அதிகமான கூலி
எங்கும் கூடாது என்று.
சிரித்துக் கொண்டேன்- நான்.
மீண்டும் சந்திக்கலாம் என்றேன்.
புன்னகைத்தாள். என்-நெற்றியில்
முத்தமிட்டு சென்றாள்- அவள்.
என் மனம் சொல்லிக் கொண்டது,
தேவதைகள் இரவினில் வருவது
உண்மைதான் என்று.

Posted in | 4 comments

‘மருதாணி’ பூசிய Nail polish.


மெல்ல எழும் கொலுசின் ஓசை,

காற்றில் மிதந்து வந்த மஞ்சள் வாசம்,

பாவாடை தாவணியின் சரசரப்பு,

திரும்பிப் பார்க்க வைத்தது.


நேர் வகிடெடுத்த கூந்தல்,

அதில் மல்லிகைச் சரம்.

மெல்லிய கருமையான அழகிய முகம்,

அதில் சின்னதாக பொட்டு.

மருதாணியிட்ட விரல்கள்,

ஐந்தரை அடி மெல்லிய உருவம்.


அழகு, நான் பார்த்த முதல் அழகு.

தமிழ் அழகினை தொடர்ந்தும் பார்தேன்.

நீ! வெட்கத்துடன் சஞ்சலப்பட்டாய்…

ஆனாலும், நான் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

(இடம்: தமிழ்நாட்டின் கிராமம் ஒன்று, காலம்:2005.)


டக் டக் high hills shoes சத்தம்,

வியர்வையுடனான பெபுயூம் மணம்,

சரக் சரக் தடித்த துணியின் உரசும் சத்தம்,

திரும்பிப் பார்த்தேன், அதிர்ந்தேன்.


நேர் வகிடெடுத்த கூந்தல் மாறி,

Bleaching hair, அதில் பல நிறங்கள்.

முகத்தில் பல அடுக்கு வெண்ணிறப் பூச்சுக்கள்.

நெற்றிப் பொட்டை தேடினேன்,

T shirt இன் வெளியே தெரிந்த

மார்பகத்தில் tattoos ஆக கிடைத்தது.

மருதாணியிட்ட விரல்கள்,

Nail polishக்கு மாறியிருந்தது.


நான் பார்த்த முதல் அழகு,

அன்று பார்த்த தமிழ் அழகு

அர்த்தமற்ற அடையாளங்களுடன்

நேற்று மாலை கண்டேன்.

சென்னை மாநகர வீதியென்றில்,

இளைஞன் ஒருவனின்

கைகோர்த்து நடத்து சென்றதை.

(இடம்: சென்னை நகரவீதி, காலம்: நேற்று மாலை)

Posted in | 2 comments

தலைநகரத்து வீதியில், மாலை 5.30 மணி….


இரைதேடும் எறும்புக்கூட்டங்கள் போல,

ஏதையெல்லாமோ தேடி

விரைந்து கொண்டிருக்கின்றன கால்கள்.

அதில் என்னதும் அடக்கம்.

என்ன தேவையென்று எனக்கு தெரியாது.

ஆனாலும், முட்டி மோதி நடக்கின்றேன்.


என் முன்னே பதின்ம வயது பையன்களும், பெண்களும்

அவர்களுக்கே உரிய கவர்ச்சியுடன்.

அதனையும் தாண்டினேன்.

இறுக அணைத்தபடி நடந்தது ஒரு ஜோடி.

காதலர்களாக இருக்கலாம்?.

உள்ளே வா என அழைத்தபடி

ஆடையகங்கள், உணவகங்கள், அங்கடிகள் என பல...

என்னவோ என்னை அவை பெரிதாக ஈர்க்கவில்லை.

ஆனாலும், நான் நடக்கின்றேன்.


குறுக்கு வீதியொன்றை தாண்ட முயன்றேன்.

நிறுத்தியது என்னை சீருடைகாரர் கை.

அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு சொன்னது இன்னொரு சீருடை...

எப்படிச் சொல்ல முடியும்,

நாட்டின் ஆதிக்குடியின் வழித்தோன்றல் நான் என்று...

காற்சட்டைக்குள் கைவைத்து தேடினேன்,

எனது பணப்பையை காணவில்லை.

அப்போது தான் தோன்றியது பின்னால் வந்த சக மானிடமொன்று

என்னை மோதிச் சென்றதை.

பாதிலின்றி நின்றேன்.

வாகனம் வந்தது... சில காலமாக எண்ணுகின்றேன்,

கம்பிகளை காரணமின்றி....

Posted in | 2 comments