ஆனந்த தாண்டவம்: திரைப்பார்வை.
Posted On Thursday, April 30, 2009 at at 9:29 AM by மருதமூரான்.மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம்’ நாவலினை ‘செல்லமே’ திரைப்படம் புகழ் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா ‘ஆனந்த தாண்டவம்’ என்ற பெயரில் தற்கால நிகழ்வுகளுக்கேற்ற முறையில் உருவாக்கியிருக்கும் சினிமா. இந்திய, இலங்கை பெற்றோர்களிடம் காணப்படும் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தினையும், அதனால் ஏற்படுகின்ற விளைவுகளினையும் காதல், ஏக்கம், பிரிவு, வலி போன்ற உணர்வுகளுடன் தமிழ்நாடு, அமெரிக்கா என்ற இரண்டு தளங்களில் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா பயணித்து தந்திருக்கும் நாவல்தனமான படம்.
தமிழ் சினிமாவில் 80 வீதமான படங்கள் காதலையும், அதனால் ஏற்படுகின்ற விளைவுகளையும் வைத்தே வருகின்றன. அப்படி வருகின்ற படங்களில் திரைக்கதையில் வேறுபாடுகளையும், ஆளுமையையும் காட்டுகின்ற படங்கள் அனேகமாக வெற்றி பெறுகின்றன. ‘ஆனந்த தாண்டவம்’ பாரிய திரைக்கதை மாறுதல்களைக் கொண்டிருக்காவிட்டாலும் ரசிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அறிமுகநாயகன் சித்தார்த், தமன்னா, ‘பொம்மலாட்டம்’ புகழ் ருக்மணி, கிருஷ்ணா, கிட்டி, மதன்பாப், சார்லி, அம்மு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை வி.ரி.விஜயன் செய்ய, பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் இருக்கும் பொறியியலாளர் சித்தார் வேலைவாய்ப்பின்றி தந்தை கிட்டியுடன் இருக்கின்றார். அதே பகுதியில் தமன்னாவின் குடும்பமும் வசிக்கின்றது. இதன்போது தமன்னாவுக்கும், சித்தார்த்துக்கும் அறிமுகம் ஏற்பட்டு அது காதலாக மாறி, பெற்றோரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் வரை செல்கின்றது. இந்த தருணத்தில் வேலை கிடைத்து புனே செல்லும் சித்தார்த், திருமண திகதி முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது கிராமம் திரும்புகின்றார். பின்னர் காதலியை பார்க்கச் செல்லும் சித்தார்த்துக்கு, மிகப்பெரிய அதிர்ச்சியாக தமன்னாவுக்கு, அமெரிக்க மாப்பிள்ளை ஒருவருடம் திருமணம் என்று தெரிந்து மனவேதனையுடன் திரும்பி, தற்கொலைக்கு முயல்கின்றார். அதிலிருந்து மீண்டு அமெரிக்காவிற்கு மேல் படிப்புக்காகச் செல்கின்றார். அமெரிக்காவில் ருக்மணியை சந்திக்கும் சித்தார்த் பின்னர் அவரது முன்னாள் காதலி தமன்னாவை சந்திப்பதும், தமன்னா சந்திக்கும் பிரச்சினைகளும், தமன்னாவின் இறுதி முடிவுமே ‘ஆனந்த தாண்டவம்’.
அறிமுகநாயகன் சித்தார்த் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை மிகையில்லாமல் செய்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். தமன்னாவுக்கு ‘கல்லூரி’ படத்திற்கு பின்னர் தனது திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் படம் இது. துடுக்குத்தனமான அதேநேரம் அனைவரையும் நம்பும் ஏமாளிப்பெண்ணாக வாழ்ந்து இறுதியில் பாவம் உயிரை விடுகின்றார். ‘பொம்மலாட்டம்’ புகழ் ருக்மணி அமெரிக்காவில் வாழ்ந்தாலும் பாவாடை தாவணியுடன் கிராமத்து வாழ்வுக்காக ஏங்கும் பாத்திரத்தில் பந்தமாகப் பொருந்தியுள்ளார். ருக்மணியை தமிழ் சினிமாவில் தொடர்ந்தும் எதிர்பார்க்கலாம். அமெரிக்காவின் மாணவராக வரும் கிருஸ்ணா குறைந்த நேரங்களிலே வந்தாலும் அமெரிக்க குடியுரிமைக்காக ஏங்கி இந்திய குடியுரிமை கொண்ட வெள்ளைப் பெண்மணியை மணப்பது ரசிக்க வைக்கிறது.
ஆனந்த தாண்டவத்தின் இசையால் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆர்ப்பாட்டமில்லாமல் இரசிக்க வைக்கிறார். வைரமுத்து எழுதியுள்ள ‘கனா காண்கிறேன்’ ‘சுக்கு சுக்காய்’ பாடல்கள் அருமை. அமெரிக்காவையும், தமிழ்நாட்டையும் அதிக அழகேடு தந்திருக்கின்றார் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர். சில இடங்களில் திரைக்கதை ஓட்டத்தை தாண்டி பின்னணியிலுள்ள காட்சிகளை தேட வைத்திருக்கிறார். அதனை குறைத்திருக்கலாம். கலை இயக்குனர் தோட்ட தரணி அவரின் வண்ணம் தொடர்கிறது. படத்தொகுப்பை வி.ரி.விஜயன், இயக்குனரின் வேண்டுகோளுக்கு இணங்க கத்திரி வைத்திருக்கின்றார்.
ஆனந்த தாண்டவத்தின் கதை, வசனம் சுஜாதா. ‘மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியே, எனது வாழ்க்கையை தொலைத்து விட்டேன்’ போன்ற படத்தின் இறுதிக்கட்ட வசனங்கள் மிகவும் அருமை. 1980களில் வந்த நாவலொன்றை 2000களுக்கு ஏற்றவடிவில் திரைக்கதையாக வடிவமைப்பதில் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா சில இடங்களில் சிரமப்பட்டுள்ளமை தெரிகிறது. கதாபாத்திரங்களில் குண இயல்புகளை சில காட்சிகளிலேயே புரியவைப்பதில் சபாஸ் போட வைக்கிறார் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா. ஆனாலும் என்னவோ குறை இருப்பது போல தோன்ற செய்கிறது. ‘ஆனந்த தாண்டவம’, நாவல்தனமான நல்ல சினிமா, வர்த்தக ரீதியில் வெற்றியளிக்குமா என்பது கேள்விக்குறியே.
கருத்துக்களை சொல்லவும், கேட்கவும் மறுக்கும் சமூகம்.
Posted On Wednesday, April 29, 2009 at at 10:09 AM by மருதமூரான்.மனிதனின் பரிணாம வளர்ச்சியின் உச்சங்களில் முக்கியமானது கருத்தாக்கம். இந்த கருத்தாக்கங்களின் அடிப்படையிலேயே சம உரிமைகளுக்கான வழிகளும், ஜனநாயகத்தின் பாதையும் திறக்கப்பட்டன. ஓவ்வொரு சமூகங்களின் வளர்ச்சியும் குறித்த சமூகங்களிலிருந்து வரும் கருத்துக்களில் பிரதிபலிப்புக்களிலிருந்தே பிறக்கின்றது. ஆனால், தற்போதுள்ள சமூகம் கருத்துக்களை ஆக்கவும், அதனை கிரகிக்கவும் மறுக்கின்றது. கருத்து வெளிப்பாடு சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது என்ற கருத்தினையே இப்போது கருத்தில் கொள்வதில்லை. இது அந்தந்தச் சமூகங்களின் வளர்ச்சிப் போக்கை கட்டுப்படுத்தும் என்பதுடன், தடுக்கவும் செய்கிறது.
சமூகமொன்றில் அதிகளவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு அல்லது ஆராயப்படுகின்ற போதிலேயே உண்மையான வளர்ச்சியும், ஜனநாயகமும், மனித உரிமைகளும் மேம்படுகின்றன. அவை இல்லாது போகும் பட்சத்தில் மனித இனம் அபிவிருத்தி நிலைகளிலிருந்து நழுவி மீண்டும் காட்டு மிராண்டித்தனங்களின் உச்சத்திற்கு சென்றுவிடும். இதற்கு மியன்மார்க், சிம்பாவே, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் மிகச் சிறந்த உதாரணங்கள் (உலகத்தின் மிகப்பெரிய சனத்தொகையை கொண்டுள்ள ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகள் பலவற்றில் கருத்து சுதந்திரம் மறைமுகமாக பறிக்கப்பட்டுவிட்டன). இந்த நாடுகளில் கருத்து சுதந்திரம் இருந்த காலப்பகுதிகளில் ஏற்பட்ட அபிவிருத்தியும், கல்வியறிவும் இப்போது இல்லை. அவை திட்டமிட்டு தடுக்கப்படுகின்றன. ஓவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற கருத்து சுதந்திரம் தொடர்பில் மேற்குறி;ப்பிட்ட நாடுகளில் வாழ்கின்ற மக்கள் அறிந்திருக்கின்ற போதிலும் அதனை வெளிப்படுத்த ஆட்சியாளர்களின் அதிகாரம் அனுமதிப்பதில்லை.
மாறாக, சிறந்த கருத்துக்கள் வெளிப்படும் பொழுது அதனை செவிமடுக்காவும் தற்போதுள்ள இளைய சமூகம் தயாராக இருப்பதில்லை. அவர்களின் வேகமான வாழ்கை முறையில் சிறந்த கருத்துக்களுக்கு இடமில்லாமல் போய் ஆடம்பரங்களும், களியாட்டங்களும் ஆக்கிரமித்து விட்டன. இணையம், ஒளி-ஒலிபரப்பு ஊடகங்கள், திரைப்படத்துறை என்பன முற்றுமுழுதாக வர்த்தகமயமாக்கப்பட்டு விட்டதாலும் இந்த நிலை அதிகரித்திருக்கின்றது. ஒரு கருத்தை நிதானித்து கேட்பதற்கு தற்கால இளைஞன் தயாராகவில்லை. மாறாக பணத்தை விரைவாக சம்பாதிக்கும் வழிமுறைகளைத் தேடுகின்றான். இறுதியில் அதற்கே அடிமைப்பட்டு வாழ்வையும், அவனது சிந்தனை வளர்ச்சியையும் தொலைக்கின்றான். இதனால், எதிர்கால சமூகத்தின் அபிவிருத்தி தடைப்படும் சாத்தியம் அதிகரிக்கின்றது.
ஓவ்வொரு சமூகத்திலும் கருத்துக்களின் பகிர்வுகளுக்கு தற்போது அதிக களங்கள் கிடைப்பதில்லை என்பது உண்மை என்ற போதிலும், அதற்கான களம் கிடைக்கின்ற போது அதனை பயன்படுத்த தற்கால சமூகம் தயாராகவில்லை. கருத்துக்கள் பகிரப்படுதல், தெரிவிக்கப்படுதலே காடுகளிலும், கற்குகைகளிலும் வாழ்;ந்த மனிதனை நவீன உலகிற்கு கொண்டு வந்தது. அவன் கொண்டு வந்த நவீன உலகில் கருத்து பகிர்தலிற்கு இடமில்லாமல் போகும் பட்சத்தில் மனிதனை மீண்டும் அவன் கற்கால யுகத்திற்கு செல்ல நேரிடலாம். கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதும், பகிரப்படுவதுமே சமூக வளர்ச்சியின் அடிப்படை.
கலைஞரின் கஞ்சி மறுப்பும், ஜெயலலிதாவின் உதவித் தொகையும்.
Posted On Tuesday, April 28, 2009 at at 9:28 AM by மருதமூரான்.‘காற்றுவாங்கச் சென்ற கலைஞர், ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம்’, ‘தனி ஈழம் அமைக்க செல்வி ஜெயலலிதா ஜெயராம், 10000 கோடி நிதி’ இந்த இரண்டு செய்தித் தலைப்புக்களும் இந்திய மற்றும் இலங்கை ஊடகங்களில் கடந்த ஒரு வாரத்துக்குள் பலமுறை செய்தி வீச்சுக்களாகவும், நேரடி ஒளிபரப்புக்களாகவும் வந்த செய்திகள். ஈழத்தமிழர்களின் மேல்தான் தமிழக அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் காலங்களில் எவ்வளவு பாசம். நினைக்க நினைக்க மனம் பெருமை கொள்கிறது. பாவம் தமிழக மக்களும் என்னதான் செய்வார்கள், அவர்களுக்கு தொப்புள் கொடி உறவுகள் மீது பாசம் இருப்பது உண்மையே.
ஆனால், தொப்புள் கொடி உறவுகள் படும் அவலங்களைப் பயன்படுத்தி தேர்தல் காலங்களில் அரசியல் நடத்த கலைஞரும், ஜெயலலிதாவும் இவற்றை பல காலமாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள், எதிர்காலத்திலும் செய்வார்கள். தமிழக மக்களுக்குதான் ஞாபக மறதி உள்ளதே!. கலைஞர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தவுடன் 100 கோடி இந்திய ரூபாய்களை ஈழத்தமிழர்களின் புனர்வாழ்வுக்காக இந்திய மத்திய அரசு வழங்குகின்றது. இது, கலைஞரின் உண்ணாவிரதத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்திய ஊடகங்களில் இதுவும் முக்கிய செய்தி. இந்த நிலையில் இந்திய மத்திய அரசின் மீதும், கலைஞர் மீதும் பல கேள்விகள் எழுகின்றன. அவை தவிர்க்க முடியாதவையே….
ஈழத்தில் மோதல் தவிர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று கலைஞர் கோருகின்றார்… அதற்காக இந்திய மத்திய அரசு, ஓரிரு தினங்களுக்கு முன் பாதுகாப்பு செயலர் உள்ளிட்ட இருவரை இலங்கை அரசுடன் பேச அனுப்புகிறது. மறுநாள் இந்திய மத்திய அரசின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக கலைஞர் அறிவி;கின்றார். ஆனால், அதற்கு அடுத்த நாள் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கின்றார். இந்திய மத்திய அரசு 100 கோடி ரூபாய்கள் ஈழத்தமிழர்களுக்காக ஒதுக்குகின்து. அதன் பின்னர் கலைஞரின் போராட்டம் கைவிடப்படுகிறது. இதில் வெற்றி எங்கு இருக்கின்றது, 100 கோடியினால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் உரிமைகளும், உடைமைகளும் கிடைத்து விடவா போகின்றது. இல்லவே இல்லை மாறாக தமிழக மக்களை ஏமாற்றி வாக்கினை பெற்றுக் கொண்டு வயிறு வளர்ப்பார்கள்.
இலங்கையில் தனி ஈழம் என்பது தேவையற்றது என்று கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கூறி வந்த தமிழகத்தின் மற்றுமொரு புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதா ஜெயராம், தனி ஈழம் அமைப்பதற்காக 10000 கோடி ரூபாய் வழங்குவேன் என்கிறார். ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார். எவ்வளவு பெரிய மனது அவருக்கு. தமிழக தமிழர்கள் ஜெயலலிதாவை கைவிட்டால் ஈழத்தமிழர்களுக்கு ஈழமில்லை, தமிழக தமிழர்களுக்கு வாழ்வில்லை. எப்படியிருக்கின்றது இந்தக்கணக்கு. ஈழத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் அனைத்தையும் பயன்படுத்தி வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவின் முயற்சி படுவேகம். இதனை தமிழக மக்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியலாம்.
தமிழக தமிழர்களின் இதயங்களில் ஈழத்தமிழர்களுக்கான இடம் எப்போதும் இருக்கின்றது. என்பது உண்மை. ஆனால், அவர்களுக்கு ஞாபக மறதியும் அதிகமாகவே இருக்கின்றது என்பது தான் அதிக வருத்தத்தை தருகின்றது. கலைஞர் நேற்று சொன்னதை மறந்து விட்டு இன்று சொன்னதிற்கு தலை அசைக்கின்றார்கள். அதுபோல், ஜெயலலிதா நேற்று சொன்னவை இன்றைய வார்தைகளில் அடிபட்டு போகின்றன. தமிழக மக்களின் இந்த ஞாபக மறதி கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் தொடர்ந்து சாதகமாக அமைந்து விடுகின்றது என்பது மறுக்கவும், மன்னிக்கவும் முடியாத உண்மை. பொறுத்திருந்து பார்க்கலாம் அடுத்து வரும் நாட்களில் என்ன கூத்துக்களெல்லாம் நடக்க போகின்றவோ!.
வாக்கு உரிமையும், வாக்களிக்கா தர்மமும்?.
Posted On Sunday, April 26, 2009 at at 10:02 AM by மருதமூரான்.சுதந்திரமும், ஜனநாயக உரிமைகளும் முற்றுமுழுதாக வேண்டும் என்று போராடுகின்ற மனிதன், அதன் அடிப்படைகளில் முக்கியமான வாக்களிப்பு குறித்தே சிந்திக்காது போகும் நிலைமையே அதிகளவில் காணப்படுகின்றது. இது, ஜனநாயகத்தின் முற்றுமுழுதான அழிவுக்கே வகை செய்கின்றது. இதற்கான உதாரணங்கள் பாகிஸ்தான், தாய்லாந்து, மியன்மார்க், சிம்பாவே மட்டுமல்ல நமது தெற்காசியாவின் முக்கியமான நாடுகளான இந்தியா மற்றும் இலங்கையிலுமே காணப்படுகின்றன என்பது வருத்தமளிக்கும் உண்மை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்ற இந்தியாவில் வாக்களிப்பு 60 வீதத்தினை தாண்டுவதில்லை என்பது நிதர்சனம். அதுபோல, இலங்கையில் 58 வீதத்தினை தாண்டுவதில்லை. இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றில் முக்கியமான விடயம் என்னவென்றால் வாக்குரிமை குறித்து வாய்கிழியப் பேசுகின்ற கல்வியறிவு பெற்ற மக்களில் 50 வீதத்துக்கும் குறைவானவர்களே வாக்களிக்கின்றனர். இவர்கள் வாக்களிக்காது தமது வாக்குரிமையை வீணடிக்கின்ற போது, அவை கள்ள வாக்குகளாக குண்டர்களினால் போடப்பட்டுவிடுகின்றன. இதனால், நல்ல (ஓரளவு) அரசியல் தலைவர்கள் வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
வாக்களிப்பதில் அதிகளவில் பங்குகொள்ளும் மக்கள் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மற்றும் மத்தியதர வர்க்கமே. இவர்களின் வாக்குகளையே குறிவைத்து அரசியல் நடத்துகின்ற அரசியல் பெருச்சாளிகள் கையூட்டுக்களையும், மதுபானங்களையும் வழங்கி வாக்குகளை பெறுகின்றன (இது இந்தியாவிலும், இலங்கையிலும் தொடர்கின்ற செயற்பாடுகள்). இதனால், குண்டர்களையும், அடியாட்களையும் வைத்திருக்கின்ற அரசியல் நரிகள் தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தமது வங்கி வைப்புக்களையும், சொத்துக்களையும் பெருக்கிக்கொண்டே போகின்றார்களே தவிர நாட்டையோ, நாட்டு மக்கள் குறித்தோ சிந்திப்பதில்லை.
வாக்குரிமை என்பது ஜனநாயகத்துக்கு எவ்வளவு முக்கியமோ, அதேயளவு வாக்களிப்பும் முக்கியம். ஆனால், வாக்களிக்காத நிலைமை தொடர்ந்தும் அதிகரித்து செல்வதால் ஜனநாயகத்தின் அடிப்படையே ஆட்டம் காண்கிறது. இதனால், மக்களின் உரிமையும், சுதந்திரமும் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றன அல்லது பறிக்கப்படும் நிலைமை அதிகரிக்கின்றது. இந்த நிலை தொடர்வது நல்லதல்ல. ஒரு சாரார் சொல்லக்கூடும் களத்தில் நிற்கின்ற அனைத்து அரசியல் தலைவர்களுமே ஊழல்வாதிகள், பயனற்றவர்கள் என்று. அவர்களில் ஊழல் குறைவாகச் செய்தவர்களுக்கு வாக்களியுங்கள். அடுத்த முறையாவது அவர்கள் திருந்திக்கொள்ளுவார்கள். இல்லாவிட்டால் புதியவர்களை தேர்தெடுங்கள் நம்பிக்கை பிறக்கும். உங்களது கருத்துக்களை ஊடகங்களிலோ, கூட்டங்களிலோ கூறுவதை விட வாக்களித்து நிரூபிப்பதே புத்திசாலித்தனம். நல்ல தலைவர்களை தோற்றுவிப்பதற்கு அனைவரும் வாக்களிப்பதே சிறந்த முறை…. மாறாக வாக்களிப்பை புறக்கணிப்பதல்ல…
இதழ் ‘பூ’ என்றால் அதில் ‘தேன்’ எங்கே?..
Posted On Friday, April 24, 2009 at at 10:13 AM by மருதமூரான்.தமிழ் கலாச்சாரத்தில் கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அதேயளவு முக்கியத்துத்தை தமிழ் திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும், கவிதைகளுக்கும் வழங்கி வந்தன. ஆயினும், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிதிலமடைந்த பாடல்களுக்குள் (குத்து மற்றும் கருத்தாளமற்ற) சிக்கியிருந்த தமிழ் சினிமா மீண்டும் நல்ல பாடல்களை தர விளைகின்றது. இந்த நிலையில் அவை தொடர்பாக எனது கணிப்பீடு அல்ல கருத்து என்று வைத்துக்கொள்ளுங்கள்.
1950களில் திரைப்படமொன்றில் 40-50 பாடல்கள் இடம்பெற்றன. ஆயினும், திரைப்படத்தில் கதை சொல்லும் பாங்குகள் காலத்திற்கு காலம் மாறியதன் விளைவு தற்போது படமொன்றில் 5 அல்லது 6 பாடல்கள் என்ற நிலைக்கு வந்துள்ளது. இது தற்காலிக இந்தியச் சினிமாவின் நிலை… அதில் தமிழ் திரைப்படத்துறையும் அடக்கம். ஆயினும் கடந்த ஒரு தசாப்த காலத்தில் தமிழ் திரைப்படங்களில் கருத்தளமற்ற, கவிதைத்துவமற்ற ‘குத்து’ பாடல்களே அதிகளவில் ஆக்கிரமித்திருக்கின்றன. வியாபார நோக்கமுள்ள திரைப்படத்துறைக்கு இது தேவை என்றாலும், தமிழ் மொழியின் ஆளுமையையும், வளத்தையும் வெகுவாகக் குறைத்தது.
இந்த நிலையில், மீண்டும் நல்ல கவிதைத்துவமுள்ள திரைப்படப்பாடல்கள் அதிகளவில் வர ஆரம்பித்திருக்கின்றன. இவை தமிழ் திரைப்படத்துறையில் மீண்டும் நல்ல பாடல்களுக்கான காலமாக அமையலாம். அண்மையில் வெளியான அயன், வாரணம் ஆயிரம், ஆனந்த தாண்டவம், அபியும் நானும், மொழி, சுப்ரமணியபுரம், சிவா மனசுல சக்தி, தசாவதாரம், சிவாஜி, பீமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நல்ல பாடல்கள் வந்திருக்கின்றன. அந்த திரைப்படங்களில் எல்லா பாடல்களும் கவிதைத்துவம் நிறைந்தவை என்று குறிப்பிட வரவில்லை. ஆயினும், அவற்றில் குறிப்பிடக்கூடிய பாடல்கள் வந்திருக்கின்றன. பாடலாசிரியர்கள் வைரமுத்து, வாலி, நா.முத்துக்குமார், பா.விஜய், சினேகன், யுகபாரதி, தாமரை உள்ளிட்ட கவிஞர்கள் அனைத்து வகைப்படால்களை எழுதினாலும், களம் கிடைக்கும் போது மிகச்சிறந்த பாடல்களை எழுதுகின்றார்கள். அவற்றில் சில….
அயன் திரைப்படத்தில், விழி மூடி யோசித்தால் அங்கேயும் வருவாய், தூவும் பூ மழை நீ ஆகிய இருபாடல்களும் பா.விஜய் எழுதியவை. தூவும் பூ மழை பாடலிலேயே இதழ் ‘பூ’ என்றால் அதில் ‘தேன்’ எங்கே? என்ற இந்த கட்டுரையின் தலைப்பை பிடித்தேன். நெஞ்சே நெஞ்சே நீ எங்கே பாடல் வைரமுத்து அவர்களின் மற்றுமொரு முத்து. வாரணம் ஆயிரம் படத்தில், ‘ஏத்தி ஏத்தி’ என்ற நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள் தவிர்ந்த அனைத்து பாடல்களையும் கவிதாயினி தாமரை அவர்கள் மிகவும் அற்புதமாக எழுதியுள்ளார். முக்கியமாக வேற்றுமொழி வார்த்தைகள் தவித்து எழுதியுள்ளார். கவிதாயினி தாமரை அவர்கள் தமிழ் திரைப்படத்துறைக்கு நம்பிக்கை அளிக்கின்ற முக்கிய பாடலாசிரியர். அவரின் அனேக பாடல்கள் என்னைக் கவர்ந்தவை.
மொழி, அபியும் நானும், தசாவதாரம் படங்களில் வைரமுத்து அவர்களின் முக்கிய பங்களிப்பு அற்புதமானவை. அது போலவே, மார்கண்டேயக் கவிஞர் வாலி அவர்கள் தசாவதாரம் படத்தில் ‘கல்லை மட்டும்’ பாடலில் அவரின் வயதும் அனுபவமும் வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது. சிவா மனசுல சக்தி படத்தில் நா.முத்துக்குமாரின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்’ மிகவும் அருமை. சுண்டைக்கோழி படத்தில் யுகபாரதியின் ‘தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு’ மற்றும் பொறி படத்தில் ‘பேரூந்தில் நீ எனக்கு யன்னல் ஓரம்’ பாடல்கள் குறிப்பிட்டு சொல்லக் கூடியவை. நல்ல கவித்துவமுள்ள திரைப்பாடல்களை விரும்புகின்றவர்கள் மீண்டும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியுமென்பதை தற்போது வருகின்ற 20 வீதமான பாடல்கள் தருகின்றன என்பது உண்மை… இந்த 20 வீதமென்பது 50, 60 வீதமாக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மீண்டும் சந்திப்போம்.
கஜினி (ஹிந்தி): ஒரு பார்வை.
Posted On Thursday, April 23, 2009 at at 9:33 AM by மருதமூரான்.
தமிழில் மாறுபட்ட திரைக்கதை அமைப்பின் மூலம் “கஜினி” என்ற வெற்றித் திரைப்படத்தை தந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அமீர்கான், ஏ.ஆர்.ரஹ்மான், ரவி.கே.சந்திரன் என்ற முன்னணி கலைஞர்களின் பங்களிப்புடன் ஹிந்தியில் அதே பெயருடன் மீள இயக்கியிருக்கும் படம். மேம்போக்கான கதை சொல்லும் பாங்கிலேயே தொடர்ந்தும் திரைப்படங்களை தந்து கொண்டிருக்கும் ஹிந்தி திரையுலகத்திற்கு 2008ஆம் ஆண்டில் இறுதியில் கிடைத்த மிக முக்கிய திரைப்படம் “கஜினி”. இந்தியாவில் கடந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் படமும் இதுவே.
‘காதலியைக் கொன்றவர்களை பழிதீர்க்கும் காதலன்’ என்ற ஒருவரிக் கதையை யாரும் இலகுவில் ஊகிக்க முடியாத திரைக்கதை அமைப்பின் மூலம் 181 நிமிடங்களுக்குள் ஏ.ஆர்.முருகதாஸ் “கஜினி”யாக வடித்துள்ளார். கீதா ஆட்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், ஹிந்தித் திரையுலகின் முன்னணி நாயகர்களின் ஒருவரான அமீர்கான், அசின் தொட்டும்கல், ஜியாகான், பிரதீப் ராவத், ரியாஸ்கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி செய்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பிரமுகர் அமீர்கான். அவர், தனது தொழில் விடயமாக மும்மைக்கு வருகின்றார். மும்பை நகரில் வசிக்கின்ற மத்தியதர குடும்பத்து பெண்மணி அசின். இவர் விளம்பர படம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றார். மற்றவர்களிடம் தனக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அசின், அமீர்கானை காதலிப்பதாக பொய் சொல்ல, அதுவே சஞ்சிகையில் வெளிவருகின்றது. அதனைப் பார்த்து அதிச்சியடைந்த அமீர்கான், அசினைப் பார்க்க வருகின்றார். அதிலிருந்து இருவருக்குமிடையில் எவ்வாறு காதல் ஏற்படுகின்றது. அதன் பின்னர் அசின் மும்பையின் முக்கிய தாதாக்களில் ஒருவரான பிரதீப் ராவத்தால் கொல்லப்படுவதுடன், அமீர்கான் தலையில் தாக்கப்படுகின்றார். இதனால், அமீர்கானுக்கு 15 நிமிடங்களுக்குள் ஞாபகத்தை இழக்கும் நிலை ஏற்படுகின்றது (short-term memory that lasts 15 minutes). இவற்றையெல்லாம் சமாளித்து அமீர்கான் கொலையாளிகளை எவ்வாறு பழிவாங்குகின்றார் என்பதே “கஜினி”.
சஞ்சை சிங் ஹானியாவாக வரும் அமீர்கான் முற்றுமுழுதாக படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றார். காதல், சண்டை, கலக்கல், கோபம் என்ற காட்சி வேறுபாடின்றி இயக்குனரின் தேவையை நேர்த்தியாக பூர்த்தி செய்து இரசிகர்களின் மிகப்பெரிய கைதட்டலைப் பெற்றுள்ளார். கல்பனாவாக வரும் அசின், அமீர்கான் என்ற இந்தியாவின் மிகப்பெரிய நடிகருடன் வரும் காட்சிகளில் கூட மக்களை இலகுவில் தனது பக்கம் திருப்புகின்றார். இது அசின் திறமையை முற்றுமுழுதாக வெளிக்காட்டுகின்றது. ஹிந்தித் திரையுலகத்திற்கு அசின் இனிமையான வரவு. மும்பையின் முக்கிய தாதா கஜினியாக வரும் பிரதீப் ராவத், தமிழில் சொதப்பியதை ஹிந்தியில் திருத்திக் கொண்டுள்ளார். கல்லூரி மாணவியாக வரும் ஜியாகான் நல்லாகவே தனது பங்களிப்பைச் செய்துள்ளார். ரசிக்கும்படியுள்ளது. தமிழிலிருந்து ஹிந்தித் திரையுலகத்திற்கு சென்றிருக்கும் ரியாஸ்கான் பொலிஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். தொடர்ந்தும் வாய்;ப்புக்கள் வரலாம்.
‘இந்தியாவின் மொஷாட்’ ஏ.ஆர்.ரஹ்மான், தனக்கு படத்தில் என்ன பங்கென்பதை புரிந்துகொண்டு மிகவும் நேர்த்தியாகவும், அதிரடியாகவும் இசையைத் தந்துள்ளார். ‘குஷாரிஸ்’ ‘கேஸே முஜே‘, ‘பேகா’ பாடல்கள் இந்தியாவின் கடந்த வருட இளைஞர்களின் மிகவிருப்ப பாடல்களில் முதன்மையானவை. படத்தின் முக்கிய பலமே பின்னணி இசை, புதிய தளத்தில் பயணித்து சர்வதேச தரத்தில் தந்திருக்கின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இயக்குனரின் கண்களாக செயற்பட்டு படத்தினை செதுக்கியவர்களில் முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். இருவேறு தளங்களில் பயணிக்கின்ற திரைக்கதையை தனது சீரான ஒளியமைப்பு மூலம் ஒளிப்பதிவு செய்து மிகச்சிறப்பாக வேறுபடுத்திக் காட்டி பிரமிக்க வைக்கின்றார்.
திரைக்கதையை முற்றுமுழுதாக உள்வாங்கிக் கொண்டு படத்தினைத் தொகுக்கும் படத்தொகுப்பாளரே இயக்குனருக்கு தேவை, அதனை புரிந்து கொண்டு தனது படத்தொகுப்பில் புதிய உத்திகளுடன் கலக்கியிருக்கின்றார் ஆண்டனி. தொடர்ந்தும் பெரிய இயக்குனர்களுடன் பணிபுரிய வாய்ப்புள்ளது. சண்டைக்காட்சிகளை அமைத்துள்ள பீட்டர் ஹெய்னும், சிவாவும் மிரட்டியிருக்கிறார்கள். அதுவும் இறுதிக்காட்சியில் பீட்டர் ஹெயன் அசத்தியிருக்கின்றார். கலை இயக்குனர் சுனில் பாபுவிற்கு படம் முழுவதிலும் வேலை, அதுவும் சண்டைக் காட்சிகளுக்கான பகுதிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். பாடல்களில் அழகுணச்சி வெளிப்படுகின்றது. மற்றும் திரைப்படத்தில் பணிபுரிந்த தொழிநுட்ப பணியாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
தமிழில் “கஜினி” திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் சொதப்பிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அதனை சீரமைத்து விறுவிறுப்புடன் ஹிந்தி கஜினியில் தந்திருக்கின்றார். ஆனாலும், முருகதாஸின் திரைக்கதையில் உள்ள ஓட்டையான மிகப்பெரிய வர்த்தகப் புள்ளி சஞ்சையை, விளம்பரம் படம் எடுக்கும் இயக்குனருக்கும், முக்கிய சஞ்சிகைக்கும் தெரியாது என்பதே…. மிகப்பெரிய தொழிநுட்ப குழுவுடன் இணைந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஹிந்தியில் தந்திருக்கும் “கஜினி” அமீர்கானையும் தாண்டி, அவர் பக்கம் இரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது.
“கஜினி”: ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தி திரையுலகத்திற்கான தனது முதல் படையெடுப்பிலேயே சாதித்த படம்.
தமிழகத்தின் அன்பு உறவுகளுக்கும், அவர்களின் தலைவர்களுக்கும்…
Posted On Tuesday, April 21, 2009 at at 10:27 AM by மருதமூரான்.
ஈழத்தில் கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக தொடர்ந்தும் எமக்கான உரிமைகளையும், சமநீதியையும், இறைமையையும் பெறுவதற்காக போராடி வருகின்ற ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு தொடர்ந்தும் அன்பையும், ஆதரவையும் வழங்கி வருகின்ற தமிழகத்தின் அன்பு தமிழ் உறவுகளே உங்களுக்கு எமது சிரம் தாழ்த்திய வணக்கங்களும் நன்றிகளும்.
ஆனால், ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தொடர்ந்தும் இன்னல்களையும், இடர்களையும் சந்தித்து வருகின்ற பொழுது எமது நிலையை வைத்து தேர்தல் காலங்களில் அரசியல் லாபம் தேட முனையும் உங்களின் அரசியல் தலைவர்களை கண்டித்து வையுங்கள். ஈழத்தமிழர்கள் குறித்து எந்தவித அக்கறையுமின்றி இருக்கின்ற தமிழக தலைவர்களும், தலைவிகளும் தேர்தல் காலங்களில் மாத்திரம் உண்ணாவிரதம் இருப்பதும், உதவி நிதி திரட்டுவதும், மனிதச்சங்கிலி அமைப்பதும் வியப்பளிக்கவில்லை, மாறாக எங்களை வைத்து அரசியல் பண்ணுவதைப் பார்க்கும் போது நெஞ்சம் வலிக்கிறது. இந்திய மத்திய அரசிடம் பேசி மந்திரி பதவிகளைப் பெறுகின்ற தலைவர்களால், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து தந்தி தான் அடிக்க முடிகிறது. இது வியப்பளிக்கவில்லை மாறாக வேதனையளிக்கிறது.
ஈழத்தமிழர்களின் இருப்பில் தொடர்ந்தும் அக்கறை கொண்டுள்ள தமிழக உறவுகளே, எமது பரிதவிப்பையும், படுபாதக நிலையையும் சாதகமாக்கிக் கொண்டு தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுவிட்டு உங்களையும் ஏமாற்றி விடுகிறார்கள் நாக்கில் நரம்பற்ற உங்களின் தலைவர்கள். தமிழையும், தமிழர்களையும பாதுகாக்கின்றோம் என்று கூறிக்கொண்டே தமது அரசியலை வெற்றிகரமாகச் செய்துவரும் அந்த பொறுப்பற்ற தலைவர்களின் சாணக்கியத்தனம் பெரியதென்றால், அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி மோசம்போகின்ற நீங்கள் ஏமாளிகள் தானே? எதிர்காலத்திலாவது நீங்கள் ஏமாற்றங்களிலிருந்து மீளவேண்டும் என்று வேதனையில் இருக்கின்ற நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
நீ-மருதாணி, நான்-விரல் நுணி.
Posted On Friday, April 3, 2009 at at 6:29 PM by மருதமூரான்.நானும் நீயும்,முதல் தடவை பார்த்த போது எனக்குள் ஒன்றுமில்லை.
பேசிய போதும் சாதாரணமானத்தான் இருந்தது.
ஆனாலும், ஏனோ தெரியவில்லை
தொடர்ந்தும் நாமிருவரும் தேவையற்று முட்டிக் கொண்டோம்.
ஊடல் கொண்டோம், மீண்டும் பேசிக்கொண்டோம்.
சத்தியமாகச் சொல்கிறேன்,
நீ ஒவ்வொரு தடவையும் என்னுடம் முட்டிக்கொண்ட போது
உனக்கான இடத்தை என் இதயம் ஒதுக்கியிருந்தது.
அதன் பின்னரான தினங்களில்தான் புரிந்தது எனக்கு,
நாமிருவரும்,
பேசிய வார்தைகள்- அழகியல்.
பார்த்த பார்வைகள்- இயற்பியல்.
போட்டுக்கொண்ட சண்டைகள்- வேதியல்.
நீ- என் மருதாணி.
நான்- உன் விரல் நுணி.





