'அங்க்' விஜயகாந்த்; நெளிந்த கத்திக்குள்ளும் துரு!
Posted On Thursday, February 2, 2012 at at 9:22 AM by மருதமூரான்.அங்க்....! என்றால் விஜயகாந்த். ‘கலக்கப்போவது யாரு’ வகையறா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வருகைக்குப் பின்னார் நடிகர்களை அடையாளப்படுத்த சில சத்தங்களே போதுமாக இருக்கிறது. 'அக்கா ஆஆஆஆ' என்ற நடிகர் சண்முகசுந்தரத்திற்கான அடையாளத்துக்குப் பிறகு 'அங்க்' நான் அதிகம் ரசித்தது நகைச்சுவைக்காக.
சிவந்த கண்களும், கைகள் அசைக்கப்படும் போது அவற்றுக்குள் இருக்கிற கொடுக்கல் வாங்கலும் (கிட்டத்தட்ட பிரேக் அடித்து நிற்பது மாதிரியான) அவரின் மிகப்பிரபலமான(?) உடல்மொழி. சின்னக்கவுண்டர் என்கிற வெற்றிபெற்ற படத்தினை தொலைக்காட்சியில் பார்த்த காலத்திலேயே விஜயகாந்த் அறிமுகமாகிறார். அதற்கு முன்னார் தீபாவளி காலத்து வாழ்த்து அட்டைகளிலேயே நதியா, ராதிகா, விஜயகாந்த் உள்ளிட்டவர்களை பார்த்திருக்கிறேன். இது 1990களில்.
2000க்கு பின்னரே பாகிஸ்தான் தீவிரவாதிகளை தமிழில் வேட்டையாடிய விஜயகாந்தை காண நேர்ந்தது. அவரின் ‘எங்கள் அண்ணா’ எனக்கு நிறையப் பிடிக்கும். இயக்குனர் சித்திக்கின் தொடர்ச்சியான நகைச்சுவைக் காட்சிகளுக்காக. நமீதா என்கிற மறுக்க முடியாத தமிழ் சினிமா வரலாறும்(?) அந்தப் படத்தில்தான் எழுதப்பட்டது.
இவற்றையெல்லாம் தாண்டி விஜயகாந்த் என்னுடைய கவனத்தை பெற ஆரம்பித்தது அவரின் அரசியல் பிரவேச காலத்தில். சரி- பிழைகளைத் தாண்டி அரசியலில் தனித்து இறங்கிய துணிச்சல் எனக்கு எப்பவும் பிடிக்கும். ரஜினி என்கிற தோற்றுப்போன அரசியல் கனவு இப்போதும் அதை விட்டு வெளியில் வராமலும், துணிச்சலாக முடிவெடுக்க முடியாமலும் இருக்கிற போது விஜயகாந்த், என்னை ஆச்சர்யமூட்டினார். கறுப்பு எம்.ஜீ.ஆர். என்கிற எரிச்சலூட்டலைத் தாண்டி!
2006 காலப்பகுதியில் விஜயகாந்தின் கட்சி முதல் சட்டமன்ற தேர்தலில் ஒரு வெற்றியை மட்டும் பெற்றுக்கொண்டதையும் என்னால் குறைவாகப் பாக்க முடியவில்லை. ஜெயலலிதாவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் இலட்சக்கணக்கான கடைநிலை ஊழியர்கள் பதவியிலிருந்து துரத்தப்பட்டது. அடாவடியான அரசியல் முடிவுகளின் மூலம் மக்களை அல்லல் படுத்தியது என்று அ.தி.மு.க.விற்கான அதிர்வு அதிகரித்தே இருந்தது. குறித்த அரசியல் அதிர்வு தி.மு.க- காங்கிரஸ் என்கிற கூட்டணிக்கு சாதகமாகவே இருந்தது.
அப்படியிருக்க விஜயகாந்த் என்கிற தனி மனிதருக்கான வெற்றியாகவே விருதகிரி இருந்தது. அந்த வெற்றியின் ஆரம்பம் மிகச்சரியான முடிவொன்றுடன் எதிர்க்கட்சி தலைவர் என்கிற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. 'ஜனநாயகம்' என்கிற பெயரில் தெற்காசிய நாடுகளில் நடைபெறுகின்ற ஆட்சிகளில் அநேகமானவை மன்னாராட்சிக்கு நிகரானவைதான். என்ன, மன்னர் காலத்தில் சண்டைகளில் வெற்றிகொண்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டியிருந்தது. இப்போது மக்களை துரத்திப்பிடித்து காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்த பின்னர், சகல வல்லமையுமுள்ள ஆட்சியாளர்களாக வலம்வர முடிகிறது. இவற்றை கொஞ்சம் அசைத்துப்பார்க்க நீதித்துறை இருந்தாலும், அவற்றுக்கும் பணமும்- பலமும் அதிகம் மரியாதை செலுத்துவதில்லை.
தமிழக சட்ட மன்றத்தில் நேற்று (01 பெப்ரவரி 2012) நடைபெற்ற தமிழக முதல்வருக்கும்- எதிர்க்கட்சித் தலைவருக்குமான விவாதம் மிகப்பெரியளவில் ஊடகங்களினாலும், சமூகத்தளங்களினாலும் பார்க்கப்படுகிறது. எனக்கு தெரிந்தளவில் குறித்த விவாதத்தில் அவ்வளவு முக்கியமான விடயங்கள் பேசப்படவில்லை. அதுபோக, அவ்வளவு சுவாரஸ்யமாகவும் இல்லை. ஜெயலலிதா தன்னுடைய திமிரான நக்கலையும்- அதற்கு பதிலாக விஜயகாந்த் நாக்கு கடித்து தெளிவற்ற குழறிய பதிலையுமே தெரிவித்தார்.
நம்மூரில் “போனால் வருவீரோ. வந்தால் இருப்பீரோ“ என்று பாடல் பாடி நக்கல் பண்ணும் அளவுக்கும், “செங்கோலை“ கொண்டு மறைத்து வைத்து கண்ணாமூச்சி விளையாடுமளவுக்கும் ஜனநாயகம்(?) இருக்கிறது. அதுபோக, கை நீட்டிப் பேசுவெதெல்லாம் சர்வ சாதாரணம். அப்படியிருக்க கை நீட்டிப் பேசினார் என்பதற்காக விஜயகாந்தை சபாநாயகர் அவையை விட்டு நீக்கியது மிகப்பெரிய விடயமே?. அதுபோக, ஜெயலலிதாவும் கை நீட்டியே பேசினார். அதனை, கௌரவ சபாநாயகர் கண்டுகொள்ளவேயில்லையே? தமிழக சட்டமன்ற 'ஒழுக்க கோவை' முதல்வர் கை நீட்டிப் பேச அனுமதிக்கிறதா?
விஜயகாந்த் என்பவர் நெளிந்த கத்திதான். கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள் போட்டு ஆட்சிய நடத்திய தமிழக அரசாங்கங்கள் தமிழக மக்களை ஒன்றும் மிகப்பெரியளவில் வளர்ச்சியடைய வைத்துவிட வில்லை. வேண்டுமானால் கொடாநாடுகளும்- ஜெயண்டுகளும்- நிதிகளும் வளர்ந்து கோலொச்சியிருக்கலாம். கடைநிலையில் இருக்கிற குப்புசாமியோ- முனியம்மாவோ அல்ல. அப்படியிருக்க கேப்டனுக்கும் தன்னை வளர்த்து அவரின் தலைமுறைகளுக்கு உழைக்க உரிமை இல்லையா?
மக்களைப் பற்றிப் பேசாதா திமிர் தனங்களை காட்டும் அரசியலுக்கு இவ்வளவு ஆதரவா? உங்களின் ஜனநாயகமும்- ஊடக தொழில் தர்மமும் வியக்க வைக்கிறது! இறுதியில் ஜெயலலிதாவின் திமிரும்- கேப்டனின் 'அங்க்'ம் தான் மிஞ்சும்!!
நண்பனுக்கு பின் ரொக்ஸ்டார்; தேவையற்ற ரீமேக்!
Posted On Monday, January 30, 2012 at at 10:17 AM by மருதமூரான்.ரஜினி திரையில் சிரிக்கிறார்; இவனும் சிரிக்கிறான். ரஜினி கோபப்படுகிறார்; இவனுக்கும் நெஞ்சு வெடவெடக்கிறது. ரஜினி சிறிதேவியை கட்டியணைக்கிறார்; இவனுக்கும் யாரையோ அணைத்த நினைப்பு. இறுதியில் ரஜினி வில்லனை அடித்து துவைத்து வெற்றிகொள்கிறார்; இவனும் யாரையோ வெற்றிகொண்ட (பழிவாங்கிய) உணர்வு. இப்படியான உணர்வை தரவல்லது சினிமா!
எங்களுக்கு கிடைக்காத வாழ்க்கையையும வாழ்ந்து பார்த்துவிட்ட சின்ன திருப்தியையும் சினிமா தருகிறது. பலரின் காதல்களும்- கல்யாணங்களும் சினிமாவுக்குள்ளேயே கரைந்து போய்விடுகின்றன. யதார்த்த உலகில் வேறு மாதிரியான வாழ்க்கை. போட்டிபோட்டு ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.
இப்படித்தான் எங்களின் சமூகமும் தனக்கென ஒரு வரையறையை கட்டமைத்து வைத்திருக்கிறது. சுய விருப்பு- வெறுப்பு- இலக்கு எல்லாம் இங்கு அவ்வளவு கணக்கெடுக்கப்படுவதில்லை. பலநேரங்களில் பலருக்கு சூன்யமாக வாழ்க்கையே மிஞ்சிப்போகிறது.
சில படங்கள்தான் எங்களையும் ஹீரோவாக உணர வைத்து தன்னுள் சேர்த்துக்கொளளும். அண்மைக்காலத்தில் நான் அப்படியுணர்ந்த படங்கள் அமீர்கானின் ‘தாரே ஷமின் பார்’ மற்றும் இம்தியாஸ் அலியின் ‘ரொக்ஸ்டார்’ ‘த்ரிஇடியட்ஸ்’சும் அதன் தமிழ்பதிப்பு ‘நண்பனும்’ கூட அப்படியொரு உணர்வை குறிப்பிட்டளவு தந்தது.
ஒரு இசைக்கலைஞனின் தேடலும், காதலும், பலமும், பலவீனமும் தான் ரொக்ஸ்டார். அதித கற்பனைகளுடன் அலையும் விட்டுக்கொடுப்புக்கள் செய்யாத கலைஞனின் கதை. நல்ல இசைக்கு தன்னுள் மெல்ல மெல்ல இழுத்து உச்ச ரசனையை வழங்கி எங்களை விடுவிக்கும் புள்ளியில் ஒரு உச்ச இன்பத்தை கொடுக்கும் வல்லமை உண்டு. கிட்டத்தட்ட காதலியுடனான காமம் தரும் நிறைவு போன்றது. அந்த உணர்வை எனக்குத் தந்தது ரொக்ஸ்டார்.
காதலித்தாலும், கோபப்பட்டாலும், இசைத்தாலும், அழுதாலும் அதன் எல்லையை தொட்டுவிட வேண்டிய கலைஞனாக படம் நெடுகிலும் நடித்திருக்கிறார் ரண்பீர் கபூர். சஞ்சய் லீலா பன்சாலியின் ‘சாவரியா’வில் அறிமுகமாகியதிலிருந்து, அவ்வப்போது வியக்க வைத்தவர். ரொக்ஸ்டாரில் ரண்பீர் கபூரைத் தவிர வேறுயாரையும் அந்த பாத்திரத்துக்கு நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு தன்னை அர்ப்பணித்திருக்கிறார். நிச்சயமாகச் சொல்ல முடியும் இந்தியாவின் நல்ல நடிகர்களில் ரண்பீரும் ஒருவர்.
இசை பற்றிய படத்தில் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான். படம் நெடுகிலும் ‘இசையும் காதலும், காதலும் இசையும்’ என்று மாறிமாறி வருகிறது, உருக வைக்கும் அழவுக்கு. எனக்கு பரிச்சயமில்லாத கலாசாரம். இதற்கு முன் அவ்வளவு கேட்டிராத இசை. ஆனாலும், என்னை படத்துக்குள்ளேயே கட்டிப்போட்டு வெளிவர விடாமல் செய்திருக்கிறார் ஏஆர்ஆர்.
‘ஜப் வி மெற்’ என்றொரு இம்தியாஸ் அலி எடுத்த நல்ல படம் வந்தது. அந்தப் படத்தினை ‘கண்டேன் காதல்’ என்கிற பெயரில் தமிழிலும் எடுத்திருந்தார்கள். அதுவும், தமன்னாவை அரைக்கிறுக்கு பெண் வேடத்தில் நடிக்க வைத்திருப்பார்கள். படம் பார்த்ததும் அவ்வளவு எரிச்சல் ஏற்பட்டது. நல்ல படங்கள் ரீமேக் பண்ணப்பட வேண்டியதுதான். ஆனாலும், மூலத்தின் குறிப்பிட்டளவு ஜீவனையாவது ரீமேக்க வேண்டும்.
ஜப் வீ மெற்றின் மட்டரகமான ரீமேக்கிய வடிவம் தான் ‘கண்டேண் காதல்’. ‘ஜப் வீ மெற்றில்’ கரீனா கபூரின் பாத்திரத்தில் துள்ளல் இருக்கும். நகைச்சுவை இருக்கும். அதுபோல, புத்திசாலித்தனமும் இருக்கும். அரைக்கிறுக்கு தனத்தை அது வெளிப்படுத்தியிருக்காது. கத்திமுனையில் நடப்பது போன்ற பாத்திரம் அது. ஆனால், தமன்னாவை அரைக்கிறுக்காகவே காட்டியிருப்பார் இயக்குனர் கண்ணன். அண்மைக்காலத்தில் புளுதி படர்ந்த ரீமேக்கிற்கு நல்ல உதாரணம் ஒஸ்தி. என்ன காட்டுக்கத்தல்?!
ஜப் வீ மெற் போன்ற உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைச் சொல்லும் படங்களையே இம்தியாஸ் அலி எடுத்திருக்கிறார். அதனையும் அச்சொட்டான நேர்த்தியுடன். அந்த வரிசையின் அவரின் மிகச்சிறந்த படைப்பு ரொக்ஸ்டார். படத்தின் வெற்றி தோல்விககு அப்பால் மிகச்சிறந்த படத்தைக் கொடுக்க முனைந்திருக்கிறார். அதில், குறிப்பிட்டளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
‘ரொக் ஸ்டார்’ சிறந்த விமர்சனங்களை மட்டுமல்ல; விருதுகளையும் மேடைகளில் குவித்து வருகிறது. சில வேற்று மொழிப் படத்தைப் பார்த்தால் தமிழில் ரீமேக்கப்பட வேண்டும் என்ற ஆசை வரும். ரொக்ஸ்டார் எனக்கு அந்த ஆசையையத் தரவில்லை. ஏனெனில், ‘கண்டேன் காதல்’ தந்த அபத்தமான ரீமேக்கின் வலி இன்னும் இருக்கிறது.
‘ரொக்ஸ்டார்’ அதிரடியும் ஆர்ப்பாட்டமும் இல்லாத அழகிய சினிமா. ஆழ்ந்து ஆச்சர்யங்களுடன் சங்கமிக்கலாம். கைக்கெட்டிய திமிர். காணாமல் போன காதல். கரைந்து போன இசை, நல்ல சினிமா!!



